தகவல் பரிமாற்றங்களின் போது நியாயமாக நடந்து கொள்வோம்

அஷ்ஷைக் பளீல் (நளீமி)

குறிப்பிட்ட ஒரு தகவல் எமக்கு சார்பாக இருக்கிறது என்பதற்காக அது உண்மையா இல்லையா என்பதனை பார்க்காமல் பகிர்வது இஸ்லாமிய வழிமுறை அல்ல.

இலக்கு சரியானதாக, புனிதமானதாக இருக்கிறது என்பதற்காக அதனை எப்படியான வழிமுறைகள் மூலமும் அடையலாம் என்பது அல்ல. இலக்கு தூய்மையாக இருக்க வேண்டும் என்பது போலவை அதனை அடையும் வழிமுறையும் தூய்மையாக இருக்க என்பதே இஸ்லாத்தின் கோட்பாடாகும்.

தற்காலத்தில் வெளிவருகின்ற பல புகைப்படங்களும் வீடியோக்களும் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பதனால் அடிப்படையில் சில தகவல்களின் நம்பகத் தன்மையில் சந்தேகம் இருந்து வருகிறது.

சிலர் (எல்லோருமல்ல) YouTube காரர்கள் அதிக வாசகர்களது பார்வையை தமது பக்கம் எடுக்க வேண்டும் என்பதற்காக கண்ணால் பார்க்கின்ற, காதால் கேட்கின்ற எல்லாவற்றையும் சல்லடை போடாமல், அப்படியே பரப்பி விடுவது ஊடக தர்மமோ இஸ்லாமிய ஒழுக்கமோ அல்ல.

இஸ்லாத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக பொய்களை இட்டுக் கட்டுவதும் சோடிப்பதும் அனுமதிக்கப்பட்டதல்ல.

“யார் என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறாரோ அவர் நரகத்தில் ஓர் இடத்தை எடுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

மக்களது மனங்களில் நபியவர்களைப் பற்றிய நல்லபிராயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் கூறியதாக நாம் இட்டு கட்டுவது கூட அனுமதிக்கப்பட்டதல்ல.
இஸ்லாமிய ஊடக தர்மத்தின் அடிப்படை பின்வரும் குர்ஆன் வசனமாகும்:-
“உங்களிடம் ஒரு பாவி ஒரு செய்தியை உங்களிடம் கொண்டு வந்து விட்டால் அதனை தீர விசாரித்துக் கொள்ளுங்கள். இல்லாத போது ஒரு சமூகத்தை நீங்கள் பாதிப்படையச் செய்யலாம்.’

ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள்:-

“ஒரு நபர் தான் செவிமடுக்கும் அனைத்தையும் பிறருக்குச் சொல்லுவது அவர் பொய்யராக இருப்பதற்கு அதுவே போதுமானதாகும்.”
எனவே தகவல்களை:-
1. பொருத்தமான, நம்பகரமான இடங்களில் இருந்து மாத்திரம் சேகரிப்பது.
2. சேகரிக்கப்பட்ட தகவல்களை அலசி ஆராய்வது
3. அவற்றை சமூகமப்படுத்துவது பொருத்தமா என்று தீர்மானிப்பது
4. பொருத்தமான வழிமுறைகளைப் பயன்படுத்தி சமூகத்துக்கு சேர்ப்பிப்பது.
இவை தான் ஒரு முஸ்லிம் ஊடகவியலாளரின் அடிப்படையான பண்புகளாகும்.

அல்லாஹ்வை, மறுமையை விசுவாசம் கொள்ளாத, உலக இலாபங்களையும் புகழையும் விரும்புகின்ற, இஸ்லாமிய ஊடக தர்மத்தை தமது வாழ்வின் இலக்காகக் கொள்ளாதவர்களுக்கும் உண்மையான விசுவாசிகளான ஊடகவியலாளர்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.

எமது ஊடக நடவடிக்கைகள் எமது வாழ்வின் பிரதான கூறிக்கோளோடு இசைந்து போகக் கூடியவையாக இருக்க வேண்டும். மறுமையில் கேள்வி, பார்வை, சிந்தனை, எழுத்து அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டியிருக்கிறது என்ற நம்பிக்கையோடு முஸ்லிம் ஊடகவியலாளர் செயல்படுவது அவசியமாகும்.

“நிச்சயமாக செவிப் புலன், பார்வைப் பலன், உள்ளம் இவை ஒவ்வொன்றும் (மறுமையில்) விசாரிக்கப்படும்” என்பது அல்லாஹ்வின் வாக்குறுதியாக இருப்பதனால் இது விடயமாக நாம் ஜாக்கிரதையாக நடந்து கொள்வோம்.

ஊடகவியலின் மற்றுமொரு பக்கமும் இருக்கிறது:-

அதாவது, மனித சமுதாயத்தின், சத்தியத்தின் எதிரிகள், சுயநலமிகள் தமது கைகளில் ஊடகம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் ஆகியவற்றை வைத்துக் கொண்டிருப்பதனால் சத்தியத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது. அசத்தியம் தாண்டவமாடுகிறது.

எனவே, சத்தியத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கும் மனிதாபிமானத்தை வாழ வைப்பதற்கும் அல்லாஹ்வைப் பயந்த, திறமையான தைரியமான, ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் உருவாக்கப்படுவது ‘பர்ளு கிஃபாயா’ என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக மனிதர்களை, ஊடகங்களை உருவாக்குவதோடு பணத்தை மற்றும் வளங்களை செலவு செய்வது ‘அல்இன்பாக் பீ ஸபீலில்லாஹ்’ எனப்படும் ‘அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல்’ என்ற பகுதியில் அடங்கும் என்பதையும் ஆழமாக புரிந்து செயல்பட வேண்டும்.

தற்காலத்தில் ஆயுதங்களால் செய்யப்படும் யுத்தங்களை விடவும் ஊடகங்களால், சிந்தனையால் செய்யப்படும் யுத்தம் முதல் தரத்தில் இருந்து பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

“اللهم أرنا الحق حقاً وارزقنا اتباعه، وأرنا الباطل باطلاً وارزقنا اجتنابه”

“யா அல்லாஹ்!
சத்தியத்தை சத்தியமாக எமக்குக் காட்டுவாயாக! அதனைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பையும் எமக்குத் தருவாயாக!!

அசத்தியத்தை அசத்தியமாக எமக்குக் காட்டுவாயாக! அதனைத் தவிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் எமக்குத் தருவாயாக!!”
என்று உமர் (ரழி) அவர்கள் பிரார்த்தித்து வந்தார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top