கதார் நாட்டின் முன்னைநாள் அமீர் ஹமத் இப்னு கலீபா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை 12.07.2026 அன்று காலமானார்.
அவரது ஜனாஸாவுக்கான இறுதிக் கடமைகள் மிகவும் எளிமையாக, எவ்வித ஆரவாரங்களும் இன்றி நடைபெற்றதை சர்வதேச ஊடகங்கள் வாயிலாக காண முடிந்தது. இது தான் இஸ்லாத்தின் அழகும் கூட. இவ்வளவு பெரிய ஒரு பணக்கார ஆட்சியாளருக்கு இவ்வளவு எளிமையான ஒரு நிகழ்வா என்று முஸ்லிம் அல்லாதவர்களும் பிரமித்துப் போகின்ற அளவுக்கு அந்த நிகழ்வு அமைந்திருந்தது.
மிகவும் சாதாரண துணியினால் அந்த ஜனாஸா சுற்றப்பட்டு பள்ளிவாயலின் தரையில் ஒரு சாதாரண பலகை போன்ற ஒன்றின் மீது வைக்கப்பட்டிருந்தது. அவரது மகனான கதாரின் தற்போதைய அமீர் தமீம் அவர்கள் அருமைத் தந்தையின் ஜனாஸாவை தனது தோளிலே சுமந்து கொண்டு போகின்ற காட்சியும் எமது மனதை நெருடியது.
மர்ஹும் ஹமத் அவர்களது ஆட்சிக்காலம் பதினெட்டு ஆண்டுகள் நீடித்தது. அந்த காலப்பகுதியில் கத்தார் கல்வி பொருளாதாரம் விளையாட்டு துறை போன்ற பல்வேறு துறைகளில் அபார வளர்ச்சியை கண்டது. தான் உயிர் வாழ்கின்ற பொழுதே தனது மகன் அமீர் தமீமுக்கு தனது ஆட்சியை பொறுப்பு கொடுத்த ஒரு தலைவராக அவர் போற்றப்படுகிறார்.
கதாரை மிக உயர்ந்த நிலைக்கு அவர் கொண்டு போனார். அவரது ஆட்சியின் போது அந்நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. ஆண்டுதோறும் 77 மில்லியன் டன் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டதன் மூலம், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் கத்தார் உலகின் மிகச் செல்வந்த நாடாக உயர்ந்தது. அந்நாட்டின் ஒருவருக்கான சராசரி ஆண்டு வருமானம் சுமார் 86,440 அமெரிக்க டொலர்களை எட்டியது.
ஷெய்க் ஹமத் அவர்களுக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டிய தனிப்பட்ட சொத்துக்கள் இருந்தன. அமெரிக்காவின் Forbes (போர்ப்ஸ்) இதழ், 2010 ஆம் ஆண்டில் உலகின் செல்வந்த அரசர்கள் பற்றிய தனது அறிக்கையில், அவரை உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராகப் பட்டியலிட்டது. அப்போது அந்த இதழ், அவரது சொத்து மதிப்பை 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிட்டது என விக்கிபீடியா கூறுகிறது.
இவ்வளவு பெரிய செல்வந்த நாட்டின் ஆட்சியாளர், மிகப் பெரும் கோடீஸ்வரரது ஜனாஸா இவ்வாறு தான் உலகத்தை விட்டு எளிமையாக விடை பெற்றுச் செல்கிறது.
மனித வாழ்வு என்பது இவ்வளவுதான். மனிதன் உலகத்தில் இருக்கின்ற பொழுது எதனை ஆட்சியாக பணமாக சம்பாதித்தாலும் அவை அனைத்தையும் விட்டுவிட்டு அல்லாஹ்வின் அழைப்பு வருகின்ற பொழுது எவ்வித மறுப்பும் இன்று போயாக வேண்டும். சாதாரண மண்ணில் தான் ஜனாஸா அடக்கப்பட வேண்டும். உலகம் என்ற மறுமைக்கான இந்த விளை நிலத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியவர்கள் மட்டுமே மறுமையில் வெற்றியடைய முடியும்.
அல்லாஹ்வே உள்ரங்கங்களை அறிந்தவன். ஆனாலும் ‘அல்அமீருல் வாலித்’ எனப்பட்ட ஹமத் அவர்கள் தனது நாட்டை சிறப்பாக கட்டியெழுப்பியது போலவே இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் வளர்ச்சிக்கு நாம் அறிந்த வகையில் பெரும் தொண்டாற்றியிருக்கிறார்கள்.
குறிப்பாக பாலஸ்தீன விவகாரத்தில் அவர் மிகவும் அக்கறையெடுத்திருக்கிறார். அவர் ஆட்சியில் இருந்த பொழுது காஸா பொருளாதார தடைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்த வேளை அங்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டதுடன் நிவாரணத்திற்காக பல மில்லியன் கணக்கான டாலர்களைச் செலவு செய்தார்.
2012 ஆம் ஆண்டில் காஸாவிற்கு அமீர் அல்-வாலித் அவர்கள் மேற்கொண்ட வருகை அவரது முதல் வருகை அல்ல. அதற்கு முன்னரே 1999 ஆம் ஆண்டில் அவர் காஸாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையை மேற்கொண்டிருந்தார். அப்போது மறைந்த பாலஸ்தீன அதிபர் யாசர் அரஃபாத் அவர்கள் அவரை வரவேற்றார். அந்த வருகை மிக முக்கியமான அரசியல் மற்றும் இராஜதந்திர பரிமாணங்களைக் கொண்டிருந்தது.
அந்த வரலாற்று வருகை, காஸாவை மீண்டும் கட்டியெழுப்பும் பாதையில் ஒரு மூலோபாய திருப்புமுனையாக மாறியது. அப்போது அமீர் அவர்கள் காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கதாரின் மானியத்தை 254 மில்லியன் டாலர்களில் இருந்து 407 மில்லியன் டாலர்களாக உயர்த்துவதாக அறிவித்தார். அந்த நிதி, வீடமைப்பு, அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டது. அவை காஸாவின் பெரும் பகுதிகளின் தோற்றத்தையே மாற்றியமைத்தன.
கான் யூனிஸில் உள்ள ஷெய்க் ஹமத் குடியிருப்பு நகரம் கதாரின் மிகப்பெரிய வீடமைப்பு திட்டங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. பாதிக்கப்பட்ட மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆயிரக்கணக்கான வீடுகளை அது வழங்கியது. அதேபோல் “ஜுஹர் அத்-தீக்” பகுதியில் உள்ள கத்தார் குடியிருப்புப் பகுதியும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், சலாஹுத்தீன் மற்றும் அர்-ரஷீத் வீதிகளை புனரமைத்து விரிவாக்கும் திட்டங்கள், போக்குவரத்து மற்றும் நடமாட்டத்திற்கான அடிப்படைத் தூண்களாக அமைந்தன. ஏனெனில் இவை இரண்டும் காஸாவின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் முக்கிய நரம்புகளாகவும், வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் சேவையாற்றுபவையாகவும் உள்ளன.
அவரது பெயர் “உயர்மட்ட ஷெய்க் ஹமத் பின் கலீஃபா அல்-தானி மறுவாழ்வு மற்றும் செயற்கை உறுப்புகள் மருத்துவமனை” உடனும் தொடர்புடையதாகும். இந்த மருத்துவமனை ஆயிரக்கணக்கான காயமடைந்தவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் நம்பிக்கையின் ஒளியாக அமைந்தது. இன்று இது அப்பிராந்தியத்தின் முன்னணி சிறப்பு மருத்துவ மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.
மேலும் மர்ஹூம் ஹமத் அவர்கள் கத்தார் நாட்டில் இஸ்லாமிய அறிஞர்களுக்கான உயர் கௌரவங்களை வழங்கினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இன்று உலகத்தில் மீடியா துறையில் ஜாம்பவானாக கருதப்படும் அல்ஜஸீரா ஊடக வலையமைப்பை ஸ்தாபிப்பதில் அவருக்கு பெரும் பங்கு இருந்தது. உலகத்தின் முன்னணி ஊடகங்களை விடவும் எவ்வகையிலும் சளைத்தது அல்ல என்ற நிலையில் இருந்து கொண்டு உலக முஸ்லிம் சமுதாயத்தினதும் இஸ்லாமிய உலகத்தினதும் செய்திகளை மிகவும் தெளிவாகவும் தைரியமாகவும் உயர் தொழில்நுட்பத்தின் வாயிலாகவும் அவ்வமைப்பு முன் வைக்கிறது என்பதை யாம் அறிவோம்.
அவரது வாரிசாக தற்போது சிறப்பாக ஆட்சி செய்துகொண்டிருக்கும் மகன் தமீம் உட்பட ஏனைய குடும்பத்தாருக்கும் பொறுமையையும் மன நிறைவையும் அல்லாஹ் வழங்குவானாக!
அல்லாஹ்விடத்தில் செல்லும் அமீர் ஹமத் அவர்கள் மனிதர் என்ற வகையில் தப்புத் தவறுகளை செய்திருந்தால் அவற்றை அல்லாஹ் முழுமையாக மன்னித்து, இஸ்லாத்திற்கும் நீதி நியாயத்திற்குமான அவரது பங்களிப்புகளை ஏற்று, தனது உயர்ந்த பாக்கியங்களை வழங்கி, அன்னாரை ஜன்னத்துல் பிர்தவ்ஸில் குடியமர்த்துவானாக!
அஷ்ஷைக் பளீல் நளீமி




