இஸ்லாமிய சமூகம் பலவீனப்பட்டிருப்பதற்கும் பின்தங்கியிருப்பதற்கும் இரண்டு காரணிகளை அடையாளப்படுத்த முடியும்:-
- அரசியல் எதேச்சதிகாரம் الاستبداد السياسي
Political Despotism , Political Tyranny , Authoritarianism, Autocracy, Dictatorship என இதற்கு ஆங்கில அர்த்தங்கள் இருக்கின்றன.
இப்பண்பைக் கொண்டவர்கள் சர்வாதிகாரிகள். பிறருக்கு எவ்வித சுதந்திரமும் வழங்காத, ஆலோசனையில் எவ்வித விருப்பமோ நம்பிக்கையோ இல்லாத, தன்னிச்சையாக சுயமாக முடிவு செய்கின்ற ஆட்சியாளர்கள்.
இவர்கள் தமக்கு எதிரானவர்களை மிக மோசமாக அடக்கியொடுக்குவார்கள். சிலபோது அவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்து எதிராளிகளை சிறைகளில் தள்ளி கடுமையாக சித்திரவதைகளைச் செய்வர்.தமது நாடுகளில் உள்ள கல்விக் கொள்கையை தமது போக்குக்கு ஏற்ப வடிவமைப்பதுடன் ஊடகத் துறையையும் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். மேலும், தமது ஆட்சியை நிலைக்கச் செய்வதற்கு உதவும், தமக்கு விசுவாசமான கையாட்களை தம்மோடு எப்போதும் வைத்திருப்பதோடு அவர்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்வர்.
- கருத்துப் பிடிவாதம் الاستبداد بالرأي
Dogmatism, Authoritarianism, Stubbornness, Arbitrariness என இதனை ஆங்கிலத்தில் கூற முடியும்.
இவர்கள் ஆட்சியாளர்கள் அல்லர். இவர்கள் தமக்கிருக்கும் சில பல திறமைகளால் சமூகத்தைக் கவர்ந்திருப்பார்கள். இவர்களது வெளிக் கவர்ச்சிகளால் இவர்களை சமூகம் முக்கியமான பொறுப்புக்களில் அமர்த்தும். எனவே, இவர்கள் மிக முக்கியமான தீர்மானங்களை எடுப்பர்.இவர்கள் Key Opinion Leaders(KOL) எனப்படுவர்.
இவர்களில் ஒரு சிறு தொகையினர் மிகவுமே நல்லவர்களாகவும் அந்த இடங்களில் இருப்பதற்குத் தகுதியானவர்களாகவும் இருப்பர்என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
ஆனால், பெரும்பாலானவர்கள் உலக நோக்கங்களை பின்னணியாகக் கொண்டு இயங்குவார்கள்.அவர்களைப் பற்றியே இங்கு நாம் குறிப்பிட வேண்டும்.
இவர்கள் எவரது ஆலோசனைகளுக்கும் செவிமடுக்கமாட்டார்கள்; அதனை விரும்பாவும்மாட்டார்கள்.
தமது கருத்து மாத்திரமே சரியானது என நினைப்பார்கள்.
தமக்குத் தெரிந்த அளவுக்கு பிறருக்குத் தெரியாது என நம்புகிற மனப்பாங்கு அவர்களிடம் இருக்கும்.
பிறர் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் போது அதனை எரிச்சலாகப் பார்ப்பர். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களுக்கு ‘குழப்பக்காரர்கள்’, ‘அடங்காதவர்கள்’ எனப் பெயர் சூட்டுவர்.
இவர்கள் மமதை தலைக்கேறிய நிலையில் தமது சிம்மாசனங்களில் அமர்ந்த வண்ணம் கர்ஜிப்பார்கள். எதனைப் பேச வேண்டும்,பேசக் கூடாது என்று பிரித்தறியும் பக்குவத்தைக் கூட இழந்திருப்பார்கள். அவர்கள் பிறர் பேசுவதைத் தடுப்பார்கள்.
எனவே,
- எதேச்சாதிகார ஆட்சியாளர்கள்,
- கருத்துப் பிடிவாதம் கொண்ட சமூகத் தலைவர்கள்
ஆகிய இந்த இரண்டு சாரும் தான் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டைகளாக இருந்து வருகிறார்கள்.
இவர்கள் சிலபோது நல்ல தீர்மானங்களை எடுப்பதுண்டு.ஆனால், பலபோது பிழையான தீர்மானங்களையே எடுப்பார்கள்.
இதனால் இரு இரண்டு பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன:-
- அவர்களின் கீழால் இருக்கும் சமூகம் இழிவையும் தோல்வியையும் சந்திக்கிறது.
- அவர்கள் சமூகத்தின் கடுமையான விமர்சனங்களுக்கும் சாபத்திற்கும் உள்ளாகிறார்கள்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் தம்மை நியாயப்படுத்துவதிலும் தமக்கெதிராக இருப்பவர்களை அடக்குவதிலும் அவர்கள் அதிகமான காலநேரங்களையும் வளங்களையும் செலவு செய்வார்கள்.
அவர்கள் தம்மை மக்கள் விரும்புவதாக நினைத்துக்கொண்டிருப்பர்.ஆனால், நிலை படிப்படியாக மோசமடைந்து தமக்கு நெருக்கமாக இருந்து கூஜா தூக்கியவர்களும், முதுகு சொறிந்தவர்களும் முதுகில் குத்தும் வரை விழிக்கமாட்டார்கள்.
இறுதியில் இவர்கள் மக்களால் ஓரங்கட்டுப்படுவதுடன் தமது பொறுப்புக்களான அமானிதங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக அல்லாஹ்வின் கோபப் பார்வைக்கும் உள்ளாகுவார்கள்.
இந்த மோசமானவர்களை நியமித்தமைக்காக அவர்களது முறைகேடுகளுக்காக பொதுமக்களும் அல்லாஹ்விடம் வகைகூற வேண்டும். ஒருவருக்கு பொறுப்புக்களை ஒப்படைக்க முன்னர் அவரது தகுதிகள், திறமைககள், உளப்பாங்குகள் என்பனவற்றை சமூகம் கவனிக்க வேண்டும்.
தகுதியற்ற ஒருவரை பொறுப்பொன்றிற்காக நியமிக்கும் சமூகம் பாவம் செய்கிறது. இறுதியில் அவரது பிழைகளால் பாதிக்கப்படுகிறது. நியமிக்கப்பட்டதற்கு பின்னால் அவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார் என்றால் அவரை தைரியத்தோடு பதவி நீக்கம் செய்வது சமூகத்தின் கடமையாகும்.
பொறுப்பொன்றை எடுப்பவர் தான் அதற்குப் பொருத்தமானவரா என்பதை முதலில் தெரிந்திருந்திருக்க வேண்டும். பொருத்தமில்லை என்றால் அவர் அதனை நெருங்கவும் கூடாது.ஏனெனில் அது ஓர் அமானிதமாகும்.
ஆனால் ஒருவர் தனக்கு தகுதி இருப்பதாக நினைத்தால் யூஸுப் (அலை) அவர்களைப் போல் அதனை கேட்டுப் பெற்றுக் கொள்வதில் கூட தவறு கிடையாது. ஆனால், பொறுப்பை எடுத்ததற்கு பின்னர் தன்னை அதற்காக எல்லா வகையிலும் தகுதிப்படுத்திக் கொள்ளவதோடு அல்லாஹ்வின் அச்சத்தோடு, தூய எண்ணத்தோடு செயல்பட வேண்டும்.
அத்தோடு இந்த பொறுப்புதாரிகள் முக்கியமான விவரங்களில் பொருத்தமானவர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களது ஆலோசனைகளை தேவையான போதெல்லாம் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும்.
மஷூரா பற்றிய இஸ்லாமியப் பார்வை
மஷூரா இல்லாத சமூகம் வீழ்ச்சி காணும் என்பதனால் அல்லாஹ்வின் மார்க்கம் முக்கியமான விவகாரங்களின் பொழுது மஷூரா செய்யும்படி நமக்கு வழிகாட்டியுள்ளது.
அல்லாஹ் குர்ஆனில் “அவர்களது (அதாவது முஸ்லிம்களது) பண்பு கலந்தாலோசித்துக் கொள்வதாகும்” என்று குறிப்பிடுகிறான்.அதாவது, முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான பண்புகளில் ஒன்று கலந்தாலோசனையும் கூட்டு முயற்சியுமாகும் என்பது இதிலிருந்து புலனாகிறது.
அல்லாஹ் தனது நபியைப் பார்த்து “நீர் அவர்களை(அதாவது சகாபாக்களை உமது) விவகாரங்களில் கலந்தாலோசனை செய்வீராக” என்று குறிப்பிடுகின்றான்.
நபி(ஸல்) அவர்கள் பிறரது ஆலோசனைகள் தேவைப்படாத அளவுக்கு மிகப்பெரிய திறமைசாலியாக இருந்தார்கள்.மேலும் வஹி இறங்கிக் கொண்டிருந்த நிலையில் கூட அன்னார் தனது தோழர்களது ஆலோசனைகளைப் பெற்றார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்?
இறை கட்டளைகள் விடயத்தில் அன்றி அவற்றை நடைமுறைப்படுத்தும் முறைகள் பற்றியதாகவே நபியவர்கள் தோழர்களது ஆலோசனைகளைப் பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிற சமூகங்களோடு உள்ள தொடர்புகளின் போது இந்த ஆலோசனையை அவர்கள் பெற்றதுண்டு.
ஹுதைபியா உடன்படிக்கையின் போது மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலை உருவான போது நபி(ஸல்) அவர்கள் தனது மனைவி உம்மு ஸலமா(ரலி) அவர்களது ஆலோசனையைப் பெற்று அதன் அடிப்படையிலேயே பிரதானமான தீர்மானத்தை எடுத்ததாக ஸஹீஹுல் புகாரியில் (2731) வரும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வாழ்வின் மிகச்சிறிய அம்சங்களில் கூட மஷூரா அவசியப்படுகிறது. குழந்தைக்கு பால் மறக்கடிக்கச் செய்வதில் கூட தம்பதிகளுக்கிடையிலான ஆலோசனையும் பரஸ்பர விருப்பமும் தேவை என அல்லாஹ் கூறுகிறான்:-
“இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால்,அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது”(2:233)
பால் குடிக்கும் தமது குழந்தைக்கு கணவனும் மனைவியும் பால் மறக்கடிக்கச் செய்வதாயினும் கூட இருவரும் பரஸ்பரம் கலந்தாலோசிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இருவரும் பரஸ்பரம் அதனை விரும்ப வேண்டும். அதன் பின்னரே இறுதி முடிவை எடுக்க வேண்டும். ‘பிள்ளைக்குப் பால் மறக்கடித்தல்’ என்ற மிகச் சாதாரண விடயத்தில் கூட கணவன் மனைவிக்கிடையே ஆலோசனையும் பரஸ்பர புரிந்துணர்வும் அவசியம் என்றால் ஒரு சமுதாயத்தின் இருப்பையே தீர்மானிக்கும் மிகப் பெரிய விடயங்களில் எவ்வளவு அதிகமாகவும் ஆழமாகவும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
குடும்பம் என்ற சிறிய அலகுக்குள், சிறிய விஷயங்களில் கூட கலந்தாலோசனை அவசியமாயின் ஒரு சமூகத்தின் அஸ்திவாரங்களான அரசியல், பொருளாதாரம்,பாதுகாப்பு, சமூக உறவுகள் போன்ற விவகாரங்களில் எவ்வளவு அதிகமான ஆலோசனைகளும் ஆய்வுகளும் இடம்பெற்று முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்பட வேண்டும்.
பாரிய விவகாரங்களில் முடிவுகள் எடுக்கப்பட முன்னர் துறைசார்ந்தவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். ஒருவருக்குத் தெரிந்தது மற்றவருக்குத் தெரியாமல் இருக்கலாம். அனுபவசாலிகளது அனுபவங்கள் ஆலோசனைக்கு அதிகமாக உதவும். பலரது அபிப்பிராயங்களும் ஓரிடத்தில் குவிந்து ஒரு விவகாரம் பல்வேறு கோணங்களில் நின்று ஆராயப்பட்டால் அதிசிறந்த முடிவுகளைப் பெறலாம்.
ஆய்வுகள், தரவுகள், புள்ளிவிபரங்கள் தேவையாயின் அவை மேற்கொள்ளப்பட ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியமாகும். அவற்றினடியாக, தூர நோக்கோடு முடிவுகள் பெறப்பட்டால் அதில் ‘பரகத்’ இருக்கும். அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைக்கும்.அது கூட்டுப் பொறுப்பாக அமைவதால் . ஒருவர் மாத்திரம் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தேவையில்லை.
ஆனால், இன்று சமூகத்தை எடுத்து நோக்கினால் ஆலோசனை செய்தல் என்ற இந்தப் பண்பு அல்லது பழக்கம் அருகிப் போயிருக்கிறது.அதனால் தான் இவ்வளவு பெரிய சீரழிவுகளை நாம் எதிர் கொள்கிறோம்.
இமாம் குர்துபி(ரஹ்) அவர்கள் தனது தஃப்ஸீரில் இப்னு அதிய்யாவிடமிருந்து பின்வருமாறு அறிவிக்கிறார்:
“ஷூரா (ஆலோசனை) என்பது ஷரீஅத்தின் அடிப்படை விதிகளிலும் உறுதியான சட்டக் கொள்கைகளிலும் ஒன்றாகும்.அறிவும் மார்க்கப்பற்றும் கொண்டவர்களிடம் ஆலோசனை பெறாத ஒருவரை(ஆட்சிப் பொறுப்பிலிருந்து) நீக்குவது கட்டாயமாகும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.”
மேலும் இப்னு குவைஸ் மின்தாத்(ரஹ்) கூறுகிறார்:
“ஆட்சியாளர்கள் தாங்கள் அறியாத விடயங்களிலும், மார்க்க விவகாரங்களில் தமக்கு சிக்கலாக இருக்கும் அம்சங்களிலும் அறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவது கடமையாகும்.
போர் தொடர்பான விடயங்களில் இராணுவ அனுபவமிக்கவர்களுடன், பொதுநலன் தொடர்பான விடயங்களில் மக்களின் பிரதிநிதிகளுடன்,நாட்டின் நலன் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் எழுத்தாளர்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவது அவசியமாகும்.”
மேலும்“ஆலோசனை பெற்று செயல்பட்டவர் ஒருபோதும் வருந்தமாட்டார்,” “தனது கருத்தையே பெரிதாகக் கருதி அதில் மயங்குபவர் வழிதவறிவிடுவார்.” போன்ற கருத்துக்களை எமது முன்னோர்கள் கூறி ஆலோசனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.
எனவே மஷூரா- கலந்தாலோசனை என்பது இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் அதன் சிறப்புப் பண்புகளில் ஒன்றாகவும் மார்க்கக் கடமைகளில் ஒன்றாகவும் உள்ளது.
சமூக எழுச்சியிலும் அபிவிருத்தியிலும் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் இந்த கலந்தாலோசனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவோமாக!
அஷ்ஷைக் எஸ்.எச்.எம். பளீல்




