அல்லாமா ரைஸூனிக்கு மலேசியாவில் உயர்தர கெளரவிப்பு

உலக முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி அஹ்மத் அர்-ரைஸூனி அவர்களை மலேசியா நாடு  1448 ஹி ஹிஜ்ரி புத்தாண்டு விருது வழங்கி கௌரவித்துள்ளது. அவரது கல்வி மற்றும் அறிவுசார் முயற்சிகள், இஸ்லாமிய சிந்தனைக்கு, மகாஸிதுஷ் ஷரீஆ ஃபிக்ஹிற்கு, மற்றும் உம்மத்தின் பிரச்சினைகளை முறையாக அணுகுவதற்கு அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகளைப் பாராட்டியும் நன்றியுடனும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அல்லாமா ரைஸூனி அவர்கள் ஷரீஆ அடிப்படைகளை நிறுவுதல், இஸ்லாமிய சிந்தனையைப் புதுப்பித்தல், மகாஸிது அணுகுமுறையை வலுப்படுத்துதல், மற்றும் உம்மத்தின் பிரச்சினைகளுக்காக வாதாடுதல் ஆகிய துறைகளில் தனது நூல்கள், ஆய்வுகள், சொற்பொழிவுகள் மற்றும் இஸ்லாமிய-சர்வதேச அரங்குகளில் பல அறிவியல் முயற்சிகளை மேற்கொண்டதன் மூலம் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். இந்தக் கௌரவம் அவரது வளமான அறிவுப் பயணத்திற்குக் கிடைத்த முடிசூட்டு விழாவாக அமைந்துள்ளது.

மலேசியாவின் ஹிஜ்ரி புத்தாண்டு விருது மிக உயர்ந்த கௌரவமுள்ள விருதுகளில் ஒன்றாகும். இஸ்லாமிய ஆளுமைகளைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சேவை செய்து, நபிகள் நாயகம் ﷺ அவர்களின் புனித ஹிஜ்ராவின் அடையாளமாக விளங்கும் நாகரிக மற்றும் மனிதாபிமான மதிப்பீடுகளை வலுப்படுத்திய அறிவு, சிந்தனை, தஃவா அல்லது சமூகத் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள் மலேசியாவால் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அஷ்ஷைக் கலாநிதி அஹ்மத் அர்-ரைஸூனி அவர்களுக்குக் கிடைத்த இந்தத் தகுதியான கௌரவத்தில் பெருமிதம் கொள்வதாக உலக முஸ்லிம் அறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பாராட்டு அறிஞர்களின் தகுதியையும், உம்மத்தை வழிநடத்துவதிலும் அதன் முக்கிய பிரச்சினைகளுக்குச் சேவை செய்வதிலும் அவர்களின் பங்கையும் பிரதிபலிப்பதாகவும், அறிவுக்கும் அறிஞர்களுக்கும் சமகால இஸ்லாமிய சிந்தனைத் தலைவர்களுக்கும் மலேசியா நாடு வழங்கும் மரியாதையை எடுத்துக்காட்டுவதாகவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், கலாநிதி ரைஸூனி அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அன்பான வரவேற்புக்கும் கௌரவத்துக்கும் மலேசியா நாட்டின் மன்னர், தலைவர் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சங்கம் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது. அல்லாஹ் அவரது முயற்சிகளிலும் அறிவிலும் பரக்கத் செய்யவும், அவர் வழங்கியவற்றை அவரது நன்மைகளின் தராசில் ஆக்கவும் பிரார்தித்துள்ளது.

உலக முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஷெய்க் அலி முஹ்யித்தீன் அல்-கரதாகி அவர்கள் அஷ்ஷெய்க் அஹ்மத் அர்-ரைஸூனி அவர்களுக்கு வாழ்துக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்தத் தகுதியான கௌரவத்திற்கான உண்மையான வாழ்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து, ஷரீஆ அறிவுக்கும் மகாஸிது சிந்தனைக்கும் இஸ்லாமிய உம்மத்தின் பிரச்சினைகளுக்கும் அவர் வழங்கிய பங்களிப்புகளையும் அவரது அறிவுசார் மற்றும் அறிவுப்பூர்வமான பயணத்தையும் பாராட்டியுள்ளார்.

பிறப்பு – கல்விப் பயணம் – பணிகள்

மொரோக்கோவின் வடபகுதியில் உள்ள அராஇஷ் மாகாணத்தில் அவ்லாது சுல்தான் என்ற கிராமத்தில் 1953 ஆம் ஆண்டு பிறந்த அஹ்மத் அர்-ரைஸூனி தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கஸ்ருல் கபீர் எனும் பகுதியில் கற்றார்.

கல்வித் தகுதிகள்:

  1. அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் – ஷரீஆ துறையில் இளங்கலைப் பட்டம் (1978)
  2. பதினைந்தாம் முஹம்மத் பல்கலைக்கழகம் – இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கங்கள் (மகாஸித் அஷ்-ஷரீஆ) துறையில் முதுகலைப் பட்டம் (1989)
  3. பதினைந்தாம் முஹம்மத் பல்கலைக்கழகம் – உசூலுல் ஃபிக்ஹ் துறையில் கலாநிதிப் பட்டம் (1992)

பதவிகளும் பொறுப்புக்களும்:-

1992–1996 காலகட்டத்தில் உயர்கல்வி இஸ்லாமிய ஆய்வு பட்டதாரிகள் மொரோக்கோ சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர்

மொரோக்கோவில் “ராபிததுல் முஸ்தக்பல் அல்-இஸ்லாமி ” (1994–1996) அமைப்பின் தலைவர்

“ஹரகத்துத் தவ்ஹீத் வல் இஸ்லாஹ்” (1996–2003) இயக்கத்தின் தலைவர்

“அத்தஜ்தீத்” தினசரியின் பொறுப்பாசிரியர் (2000–2004)

அவர் உலக முஸ்லிம் லீக்குடன் இணைந்தும் செயல்பட்டிருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு வரை உலக முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் (الاتحاد العالمي لعلماء المسلمين) ஸ்தாபக உறுப்பினராகவும் அதன் துணைத் தலைவராகவும், அதன் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

2018 நவம்பர் 7ஆம் திகதி நடைபெற்ற உலக முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில், அல்லாமா யூசுப் அல்-கர்ளாவியின் வாரிசாக அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாடு இஸ்தான்புலில் நடைபெற்றது. இதில் 1030 அறிஞர்களும் 50 இஸ்லாமிய அமைப்புகளும் கலந்து கொண்டன. ரைஸூனி 93% க்கும் அதிகமான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அல்லாமா ரைஸூனி அவர்கள் சமகால இஸ்லாமிய மகாஸித் (ஷரீஆவின் நோக்கங்கள்) மற்றும் ஃபிக்ஹ் துறையின் முன்னணி அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது நூல்கள் ஆழமான உசூல் அடிப்படையையும், சமகாலப் பிரச்சினைகளில் ஷரீஆவின் நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் அணுகுமுறையையும் கொண்டவை.

அஷ்ஷைக் ரைஸூனியின் முக்கிய சில நூல்கள்:

  1. الكتب الأصولية والمقاصدية (وهي الميدان الأبرز له)

உசூல் மற்றும் மகாஸித் சார்ந்த நூல்கள் (அவரது பிரதான துறை)

نظرية المقاصد عند الإمام الشاطبي: يُعَد هذا الكتاب أطروحته للدكتوراه ولَبنة أساسية في الفكر المقاصدي الحديث.

இமாம் ஷாதிபியின் மகாஸித் கோட்பாடு (அவரது கலாநிதிப் பட்ட ஆய்வு) நவீன மகாஸித் சிந்தனையின் அடித்தள நூல்களில் ஒன்று.

محاضرات في مقاصد الشريعة: أصلها دروس علمية ألقيت للأئمة والخطباء لتبسيط فقه المقاصد وتدبر أحكامه.

மகாஸித் அஷ்-ஷரீஆ பற்றிய சொற்பொழிவுகள் (மகாஸித் கருத்தியலை இலகுபடுத்தும் நோக்குடனும் அதன் சட்டங்களைப் பற்றி சிந்திக்கத் தூண்டும் வகையிலும் இமாம்கள் மற்றும் கதீப்களுக்கு வழங்கிய பாடங்களின் தொகுப்பு)

مدخل إلى مقاصد الشريعة: دليل ميسر للمبتدئين والمتخصصين في فهم غايات التشريع.

மகாஸிதுஸ் ஷரீஆவிற்கான அறிமுகம் (ஷரீஆவின் இலக்குகளை தொடக்க நிலையிலும் நிபுணத்துவ நிலையிலும் உள்ளவர்களுக்கான இலகு வழிகாட்டி)

قواعد المقاصد: كتاب يستعرض الضوابط والقواعد الحاكمة لعلم المقاصد مستخرجة من التراث الأصولي.

மகாஸிதின் அடிப்படைகள் (பழமையான அறிஞர்களது புராதன முறைமைகளில் இருந்து பெறப்பட்ட மகாஸிதிற்கான நெறிமுறைகள் மற்றும் அடிப்படை விதிகளை விளக்கும் நூல்)

مقاصد المقاصد (الغايات العلمية والعملية لمقاصد الشريعة): يركز على الثمرة التطبيقية للعمل بالمقاصد.

மகாஸிதின் மகாஸித்கள் (ஷரீஆவின் மகாஸித்களது அறிவுபூர்வமான, நடைமுறை ரீதியான இலக்குகள்) ஷரீஆவின் நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் ஏற்படும் பயன்களை விளக்குகிறது)

الكليات الأساسية للشريعة الإسلامية: دراسة أصولية حول المقاصد الكلية الضرورية للحياة البشرية.

இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படையான மூலங்கள் (மனித வாழ்விற்கு இன்றியமையாத அடிப்படை நோக்கங்கள் பற்றிய மூலாதார ஆய்வாக இது அமைகிறது)

الذريعة إلى مقاصد الشريعة: بحث يعنى بالوسائل وسد الذرائع وعلاقتها بالمقاصد

ஷரீஆவின் நோக்கங்களுக்கு வழிகாட்டும் கருவிகள்  (வழிமுறைகள் மற்றும் “சத்துத் தராயிஃ” தொடர்பான ஆய்வு)

. الكتب الفكرية والسياسية

  1. சிந்தனை மற்றும் அரசியல் நூல்கள்

الأمة هي الأصل: كتاب يبحث في المرجعية السياسية والاجتماعية وسلطة الأمة في الإسلام.

உம்மத் தான் அடிப்படை (இஸ்லாத்தின் அரசியல் சமூகவியல் மற்றும் சமூக அதிகாரம் பற்றிய ஆய்வு)

الشورى في معركة البناء: يتناول دور الشورى كآلية لإصلاح المجتمعات وبناء الدول.

கட்டமைப்புப் போராட்டத்தில் ஷூரா (சமூகங்களது சீர்திருத்தப் பணிகளிலும் அரசுகளை கட்டியெழுப்புவதிலும் ஆலோசனையின் பங்கு பற்றி இது விளக்குகிறது)

قضية الأغلبية من الوجهة الشرعية: دراسة فقهية تؤصل لمفهوم الأغلبية في القرارات والسياسة الشرعية.

ஷரீஆ பார்வையில் பெரும்பான்மை என்ற கருத்தியல் (தீர்மானங்களை எடுப்பதிலும் ஷரீஆ முறை அரசியலிலும் பெரும்பான்மையினர்  தீர்மானங்களை எடுப்பது பற்றி ஃபிக்ஹ் கண்ணோக்கில் இது ஆய்வு செய்கிறது)

الصلاح السياسي بين الاستعادة والتحصين: يناقش قضايا الإصلاح السياسي والحكم الراشد.

மறுசீரமைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்கும் இடையிலான அரசியல் சீர்திருத்தம்: (இது அரசியல் சீர்திருத்தம் மற்றும் நல்லாட்சி தொடர்பான விடயங்களை விவாதிக்கிறது.)

أحكام الدين وأحكام الدنيا في الفكر الإسلامي: يبحث في تداخل وتمايز الأحكام التعبدية والدنيوية.

இஸ்லாமிய சிந்தனையில் மார்க்க மற்றும் உலக விவகாரங்கள் பற்றிய சட்டங்கள்.(இந்தப் புத்தகம் இபாதத்கள் மற்றும் உலக விவகாரங்கள் சட்டங்களுக்குஸஇடையிலான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் ஆராய்கிறது)

كتب السير والمراجعات الشخصية

  1. சுயசரிதை மற்றும் தனிப்பட்ட சிந்தனைகள்

رحلتي مع المقاصد: كتاب سيرة ذاتية علمية يستعرض فيه مسيرته الطويلة في خدمة هذا العلم وتدريسه

மகாஸிதுடன் எனது பயணம் (இந்த அறிவுத் துறைக்கும் அதனைக் கற்பிப்பதற்கும் ஆற்றிய பங்களிப்புக்களையும் அவர் மேற்கொண்ட  நீண்டகால கல்விப் பயணத்தையும் விவரிக்கும் சுயசரிதை நூல்)

இறுதியாக, தற்காலத்தில்

இஸ்லாமிய சிந்தனை எழுச்சிக்கும் இஸ்லாத்தின் புனர்நிர்மாணப் பணிக்கும் பங்களிப்புச் செய்த தஜ்தீத் பணியில் ஈடுபட்ட  மகான்களது வரிசையில் அல்லாமா ரைஸூனிக்கும் ஒரு தனியான இடம் உள்ளது.மகாஸித் கோட்பாட்டை வலுப்படுத்துவதில் இமாம் ஷாதிபீக்கு முன்னோடிப் பெருமை இருப்பது போலவே  தற்காலத்தில் மகாஸிதை நவீனகால உருக்கொடுத்து வளர்த்ததில் ரைஸூனீக்கு முன்னோடிப் பங்குண்டு எனக் கூறமுடியும்.

கலாநிதி ரைஸூனியின் நூல்களை உலகம் பூராவுமுள்ள இஸ்லாமியத் துறை ஆய்வாளர்கள் தமது உசாத்துணைகளாகக் கொள்வது அவரது தரத்துக்கான சான்றாகும்.

வல்லவன் அல்லாஹ் அன்னாரது அறிவு, சமூக, தஃவாப் பணிகளை ‘இல்முன் யுன்தபஉ பிஹீ’ எனப்படும் மிகப்பெரிய அறிவு தர்மமாக ஏற்று,அவர் மென்மேலும் அதிக பங்களிப்புக்களைச் செய்ய நீண்ட நெடிய ஆயுளையும் வழங்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.

அஷ்ஷைக் பளீல் நளீமி

அல்லாமா ரைஸூனியின் உத்தியோகபூர்வ முகநூல்:-

https://www.facebook.com/share/1G7dWd9PBh/

இணைய தளம்:-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top