அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமீ)
(அல்குர்ஆனில் வந்துள்ள காபிர்களைக் கொல்லும் படி கூறும் வசனங்கள் தொடர்பாக பொது பல சேனா உள்ளிட்ட அமைப்புக்களால் எழுப்பப்படும் ஐயங்களுக்கான ஒரு விளக்கம்)
மேற்படி தலைப்பு சற்று ஆச்சரியத்தைத் தரமுடியும். சமாதானம் என்றாலே யுத்தமின்மையைத் தானே குறிக்கும். அப்படியிருக்கையில் சமாதானத்தை அடைவதற்கு யுத்தத்தை ஓர் ஊடகமாகப் பாவிப்பது எப்படி என்ற வினா எழுவது நியாயமே. சமாதான சகவாழ்வுக்கு எதிரானவர்கள், அல்லது பன்மைத்துவத்தை சகிக்காமல் விஷமத்தனம் செய்பவர்கள் ஒருசமூக அமைப்பில் இருக்கும் வரை அங்குள்ளவர்களால் நிம்மதியை அனுபவிக்க முடியாது. எனவே, அவர்கள் துல்லியமாக இனம்காணப்பட்டு ஓரங்கட்டப்பட வேண்டும் அல்லது ஆயுதபலத்தால் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற அனைத்து யுத்தங்களும் தற்காப்பு நோக்கங்களுக்காக – அதாவது சுதந்திரமான சூழலொன்றைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இடம்பெற்றுள்ளன எனக் கூறமுடியும்.
அந்தவகையில், அண்மைக் காலமாக இஸ்லாம் தொடர்பாக முன்வைக்கப்படும் ஐயமொன்றுக்கு பதிலை முன்வைக்கும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
இஸ்லாத்தில் யுத்தம் அல்லது சமாதானம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர் குர்ஆனிலும் அல்ஹதீஸிலும் வரும் சில வசனங்கள் சகவாழ்வுக்கு முற்றிலும் முரணாக இருப்பதாகக் கருத இடமுண்டு. ஆனால், அந்த வசனங்கள் ஏன், யார் பற்றி, எந்த எந்த சூழ்நிலைகளில் கூறப்பட்டன என்பதை ஆழமாக ஆராய்ச்சி செய்தால் அவற்றைப் பற்றிய தெளிவான முடிவுகளைப் பெற முடியும்.
உதாரணமாக அல்குர்ஆனில் :
“(யுத்தம் செய்யத் தடுக்கப்பட்ட) புனித மாதங்கள் கடந்து விட்டால் இணைவைப்பவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் கொலை செய்யுங்கள். அவர்களை கைது செய்யுங்கள். (அவர்கள் அரண்கள் அமைத்துள்ள இடங்களில்) அவர்களை தடுத்து வையுங்கள். அவதானிப்பு நிலையங்கள் ஒவ்வொன்றிலும் அவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருங்கள் ” 1
”இணைவைத்து வணங்குவோர் அனைவரும் சேர்ந்து உங்களுக்கெதிராக யுத்தம் செய்வது போலவே நீங்கள் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கெதிராக யுத்தம் புரியுங்கள்.” 2
”விசுவாசிகளே! உங்களை அண்டியிருக்கும் நிராகரிப்பாளர்களுடன் யுத்தம் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையான போக்கையே காணட்டும்” .3
மேலும் ஒருதடவை நபிகளார்(ஸல்) அவர்கள் ”மக்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இரட்சகன் இல்லை என்றும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் சான்றுபகரும் வரை அவர்களுக்கெதிராக போராடும்படி நான் பணிக்கப்பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்கள்.4
மேற்படி குர்ஆன், ஹதீஸ் வசனங்களின் வெளிப்படையான கருத்துக்களைப் பார்த்த சிலர், பிற சமூகங்களுடனான முஸ்லிம் சமூகத்தின் உறவு எப்படி அமைய வேண்டும் என்பதனை இந்த வசனங்கள் கூறுகின்றன எனக் கூறினர். எனவே, இந்த வசனங்கள் பற்றிய உண்மையான தெளிவு அவசியப்படுகிறது.
முதலில் ஆய்வாளர் பஹ்மி ஹுவைதியின் பார்வையில் இவற்றை இப்படி நோக்கலாம் :
’இந்த வசனங்களை அவற்றின் போக்கிலிருந்து பிரித்து தனியாக எடுத்து விளக்க எவரும் முற்பட்டால் அது தவறாகும். இந்த வசனங்கள் ஒவ்வொன்றினதும் பின்னால் மற்றும் முன்னால் வந்துள்ள வசனங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும். அவை வரலாற்றில் எந்த காலகட்டத்தில் கூறப்பட்டது என்றும் பார்க்க வேண்டும். முஸ்லிம் – முஸ்லிம் அல்லாதாரின் உறவு இப்படித்தான் அமைய வேண்டும் என்று எவரும் முடிவு எடுத்துவிட்டால், அத்தகையவரது அறிவின் ஆழத்தைப் பற்றியும் அவரது நோக்கம் பற்றியும் சந்தேகிக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற வசனங்கள், போராட்ட வேளைகளில் முஸ்லிம் – முஸ்லிம் அல்லாதோர் தொடர்பு பற்றியவையா, வர்த்தக சந்தையில் இரு சாராரும் சந்திக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய உறவு பற்றியவையா, அல்லது சாமானியமான வாழ்வுப் போக்கில் அனுசரிக்க வேண்டியவையா என்ற கேள்விகள் சாதாரண ஓர் ஆய்வாளருக்குக் கூட எழவே வேண்டும் போர்ச் சூழலின் போதல்லாமல் சாதாரண சூழல்களின் போது இந்த குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் கூறப்பட்டிருந்தால் இந்தக் குற்றச்சாட்டு நியாயமாக இருந்திருக்கலாம் ’ 5
ஹுவைதியின் மேற்படி கூற்றிலிருந்து இந்த வசனங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் பின்ணணியில் இருந்துதான் நோக்கப்பட வேண்டும் என்பது புலனாகிறது.
கலாநிதி அபூசுலைமான் இது பற்றிக் கூறுகையில், ’குர்ஆனில் காட்டப்படும் குறிப்பிட்ட சில நிகழ்வுகள், அவற்றின் கால, இட, பரிமாணச் சூழலின் கீழ் பரிசீலிக்கப்பட்டால் தான் இஸ்லாமிய பரிமாணங்களது அமைப்புத் திட்டத்தின் வரம்புகளுக்குள் அவை பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம். யுத்தம் பற்றிய மேற்கண்ட வசனங்கள் குறைஷியருக்கும் அவர்களைச் சார்ந்திருந்த கோத்திரத்தினருக்கும் எதிராக முஸ்லிம்கள் மேற்கொண்டிருந்த பயங்கரமான போராட்டச் சூழலின் பின்னணியில் எழுந்தன என்பது புலனாகும். அந்தப் பகைவர்களுக்கெதிரான யுத்தத்தை நிகழ்த்தும் முறைபற்றி இந்த வசனங்கள் கூறுகின்றன.’ 6 என்றும் ‘இவை குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. குர்ஆனின் சில வசனங்களை வேறு வசனங்களில் நின்றும் வேறுபட்டனவாக, அவற்றுடன் தொடர்பற்றனவாகக் கொண்டு கருத்துகள் தெரிவிக்கப்படலாகாது. மேலோட்டமாக எதனையும் பார்க்கலாகாது. குறிப்பிட்ட குர்ஆன் அத்தியாயமொன்றில் ஒரு வாசகம் பெற்றுள்ள இடத்தையோ அந்த அத்தியாயத்தின் ஏனைய வாசகங்களுடன் அது கொண்டுள்ள தொடர்பையோ கருத்திற் கொள்ளாமல் பொருள் தொடர்பற்ற முறையில் ஒரு வாசகம் அல்லது வாசகத்தொகுதி விளக்கப்படலாகாது.’ 7 என்றும் ‘இந்த அறிவுறுத்தல்களைப் பொறுத்த வரை அவற்றின் கால, தேச, எல்லைப் பரப்புகளின் எல்லைக்கப்பால் அவற்றை நீட்டிச் செல்லலாகாது’ 8 என்றும் தெரிவிக்கிறார்.
அப்படியானால், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டவையாக இந்தக் குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் ஏன் அமைந்தன என்ற கோள்வி தற்போது எழக்கூடும்.
இறங்கிய கால சூழல்
இஸ்லாமியத் தூதை நபி(ஸல்) அவர்கள் மக்காவில் பிரசாரம் செய்த போது கருத்து மற்றும் மத சுதந்திரத்திற்கு அணுவளவேனும் அனுமதி வழங்க மறுத்த குறைஷியர் முஸ்லிம்களை முழுமையாக தீர்த்துக்கட்டவே முழு மூச்சாகச் செயல்பட்டனர். மக்காவில் முஸ்லிம்கள் மீதான அவர்களது பொருளாதாரத் தடை, சமூகப் பிரஷ்டம், அவமரியாதை, வதைகள், கொலைகள் என்பன தொடர்ந்து நிகழ்ந்து வந்தன. தாங்கிக்கொள்ள இயலாத இத்துயரங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளவே முஸ்லிம்கள் கடல் கடந்து அபீசீனியா நோக்கிச் செல்லத் தீர்மானித்தார்கள். நபியவர்களும் தனிப்பட்ட முறையில் தனது தூதை சுதந்திரமாக முன்வைக்கும் சூழலைத் தேடி தாயிப் சென்றார்கள். யாவும் தோல்வி காணவே, கொள்கையையும் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கிலும் பலமான அரசை நிறுவுவதற்காகவும் மதீனாவுக்கு கள்ளக்களவாக இடம்பெயர்ந்தனர்.
மக்காவிலிருந்து முஸ்லிம்கள் மதீனா சென்ற பின்னரும் குறைஷியரின் தாக்குதல்களும் ஆக்கிரமிப்புக்களும் தொடர்ந்தன. முஹம்மத்(ஸல்)அவர்களது தூதுக்கு முற்றுப்புள்ளியிட்டுவிடும் தமது முனைவில் மதீனாவின் யூதக் கோத்திரங்களையும், ஏனைய அறபு கோத்திரங்களையும் குறைஷியர் தம்முடன் இணைத்துக் கொண்டனர்.9
எனவே, முஸ்லிம்கள் தொடர்ந்தும் பதட்டத்துடனும் யுத்தத்துக்கான தயார் நிலையிலுமே இருந்தனர். உயிர்களுக்கும், உடமைகளுக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. பத்ர், உஹத், அகழி போன்ற யுத்தங்களில் முஸ்லிம்களை ஒழித்துக்கட்டவே குறைஷியர் முயன்றனர். பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுடன் செய்த உடன்படிக்கைகளை அவர்கள் ஒரு தலைப்பட்சமாக மீறி துரோகம்செய்தனர். ஆயுதம் தரிக்காமல் பிரசாரம் செய்யச் சென்றவர்களையும் அந்த இணைவைப்பாளர்கள் கொலை செய்தனர். ‘யவ்ம் அல்ரஜீஇ’, ‘பிஃர் மஊனா’ ஆகிய சம்பவங்கள் இதற்கு தக்க சான்றுகளாகும். அதாவது, விசுவாசிகள் அல்லாத அறபுக் கோத்திரத்தவர்களைச் சேர்ந்தவர்கள் தமக்கு இஸ்லாத்தைக் கற்பிப்பதற்கு முஸ்லிம் போதகர்களை அனுப்பி வைக்குமாறு நபி(ஸல்)அவர்களை வேண்டிக்கொண்டார்கள். அந்தப் போதகர்கள் குழு பயணமாகிக் கொண்டிருந்த வேளையில் ‘ரஜீஇ’ ல் வைத்து 10 பேரும் ‘மஊனா’வில் வைத்து 70 பேரும் எதிரிகளால் மோசமாகக் கொலை செய்யப்பட்டனர்.10
இதுபோன்ற துரோகச் செயல்கள் அடிக்கடி நடந்து கொண்டிருந்த பொழுது அந்த முஸ்லிமல்லாதவர்களுடன் சுமூகமான உறவைப் பேண முடியவில்லை என்பதனால் அவர்களது அச்சுறுத்தல்களுக்கு முடிவுகட்டி, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த நேரிட்டது. பொறுமையும், சகிப்புத்தன்மையும் எவ்வகையிலும் பயனளிக்காத சூழல் உருவாகியது. பொறுமை காப்பது தற்கொலைக்கு சமனான நடவடிக்கையாக அமைந்து விட்டது.
முஸ்லிம்களது மனோநிலையை விளக்கும் அல்லாஹ்: ‘நீங்கள் பூமியில் பலவீனப்படுத்தப்பட்ட மிகச் சிறுபான்மையினராக இருந்து, உங்களை மக்கள் (எந்த நேரத்திலும் பலவந்தமாக) இராய்ஞ்சிக் கொண்டு சென்று விடுவார்களோ என்று அஞ்சிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை ஞாபகப்படுத்திப் பாருங்கள்’ எனக் கூறினான்.11
மதீனத்து முஸ்லிம்களுக்கெதிரான கூட்டுப்படைகளின் ஒருமைப்பாட்டின் விளைவாகவே ஹிஜ்ரி 5ம் ஆண்டு அகழி யுத்தம் இடம்பெற்றது. பனூஅந்நழீர், குறைஷ், கத்பான், கைஸ் அய்லான் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து மதீனாவின் முஸ்லிம் சமூகத்தை; தீர்த்துக் கட்டிவிடுவது என முடிவெடுத்தனர். முன்னேறிவரும் பலமிக்க எதிரிப் படைகள் மதீனாவில் புகுந்துவிடாதிருக்க மதீனாவின் பெரும் பகுதியைச் சூழ முஸ்லிம்கள் ஓர் அகழியைத் தோண்டினர். நிலைமையை மிகமோசமாக்கிய ஒரு சம்பவமும் உடனடியாக நிகழ்ந்தது. நபி(ஸல்)அவர்களது நேசக்கோத்திரத்தாராக இருந்த யூதர்களான பனூகுறைழாக்கள் எதிரிகளது கூட்டுப்படைகளுடன் சேர்ந்து முஸ்லிம்களை பின்புறத்திலிருந்து தாக்க சதித்திட்டம் தீட்டினர்.12
அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களது பதட்டமான மனோநிலையை அல்லாஹ் பின்வருமாறு விளக்கினான்:-
‘உங்களுக்குப் பின்புறத்திலிருந்தும், கீழ்ப்புறத்திலிருந்தும் உங்களைச் சூழ்ந்து கொண்டு அவர்கள் வந்த சமயத்தில் (உங்களது) திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து (உங்களுடைய) இருதயங்கள் உங்கள் தொண்டை(க்குழி)களை அடைந்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாக) பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப்பாருங்கள்.அந்த இடத்தில் விசுவாசிகள்(பெரும்) சோதனைக்குள்ளாக்கப்பட்டதுடன் எவர்களுடைய இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும் நயவஞ்சகர்களும் ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு(ச்சதிசெய்து) ஏமாற்றுவதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள் என்று கூறத்தலைப்பட்டதை நினைத்துப்பாருங்கள். இவர்கள் (யுத்தகளத்திலிருந்து தப்பி) ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை.’ 13
இந்த வசனங்களின் முதல் பகுதி விசுவாசிகளது பதட்டத்தையும் விரக்தி நிலையையும் காட்டும் அதேவேளை, பின்பகுதி முஸ்லிம் படையில் இருந்த நயவஞ்சகர்களது நிலை பற்றியும் விளக்குகிறது.
எனவே, இத்தகையதொரு நெருக்கடியான காலகட்டத்தில் கொடூரமான எதிரிகளை ஆயுதமுனையில் சந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. குறைஷிக் காபிர்கள் உடன்படிக்கைகளை முறித்து, முஸ்லிம்களுடனான யுத்தத்தில் வெல்வதற்காக சகல உத்திகளையும் கையாண்டு வந்தார்கள்.
அந்தவகையில், யுத்தம் செய்வதற்கு தொன்றுதொட்டே தடைசெய்யப்பட்டிருந்த நான்கு மாதங்களில் யுத்தம் புரிவது பற்றி அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். முஸ்லிம்கள் அந்த மாதங்களின் புனிதத்தைக் கெடுப்பதாக குற்றம் சுமத்தினர். அதற்குப் பதிலடியாக அல்லாஹ் பின்வருமாறு விளக்கம் கூறினான் :-
‘(நபியே) சிறப்புற்ற மாதங்களில் யுத்தம் செய்வது பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். அவற்றில் யுத்தம்புரிவது பெரும்பாவம் (தான்). ஆனால், (மனிதர்கள்) அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் சேருவதைத் தடுப்பதும் அவனை நிராகரிப்பதும், (ஹஜ்ஜுக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும் அதில் வசிப்போரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதனைவிட) பெரிய பாவங்களாக இருக்கின்றன. தவிர, (விவாசிகளுக்கு நீங்கள் இழைக்கும்) கொடுமைகள் கொலை செய்வதை விட கொடியவையாகும். மேலும், (காபிர்களாகிய) அவர்களுக்கு சாத்தியப்படுமாயின் (முஸ்லிம்களாகிய) உங்களை உங்களது மார்க்கத்திலிருந்து திருப்பிவிடும் வரையில் உங்களுக்கெதிராக ஓயாது யுத்தம் செய்து கொண்டேயிருப்பார்கள்.’14
புனிதமான நான்கு மாதங்களில் யுத்தம் செய்யலாகாது என்ற தடையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, முஸ்லிம் சேனையின் மனோநிலையில் பாதிப்பை உண்டுபண்ண காபிர்கள் முயற்சித்து வந்தனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது அத்துடன் அவர்கள் செய்யும் அட்டூழியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அந்த மாதங்களின் புனிதத்துவத்தை பேணுவதற்கு முயற்சிப்பதை விட அவர்களது கொட்டத்தை அடக்குவதே மேல் என்றும் இவ்வசனங்கள் கூறுவதுடன் இறுதியில் எந்த சூழ்நிலையிலும் அவர்களை திருப்திப்படுத்தவோ சமாதான சூழலுக்கு கொண்டுவரவோ முடியாது என்றும் அவர்கள் இஸ்லாத்தை அழிக்க சதாவும் முயற்சிப்பர் என்றும் தெரிவிக்கின்றன. மேலும், உடன்படிக்கைகளை இவர்கள் எவ்வகையிலும் மதிக்கவில்லை என்று ஏற்கனவே விபரிக்கப்பட்டது. எனவே, இத்தகைய நிலையில் அவர்களுடன் சகவாழ்வைப் பேணுவதோ சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பதோ எவ்வகையிலும் பொருத்தமாக இருக்கமாட்டாது. யுத்தமே ஏக தீர்வாக அமையலாம்.
பேராசிரியர் ஜமால் பதவி இதுபற்றி எழுதும் போது, இந்த வசனங்கள் கூறப்பட்ட வரலாற்றுக் காலகட்டத்தையும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் வளர்ச்சிக் காலத்தில் அதனைச் சூழ பல ஆபத்துக்களும், பயங்கரமான சவால்களும் இருந்தன. அது தன் வேர்களை ஆழப்பதித்து பலம்பெற முன்னர் அவை அதனை அழித்துவிடப் போதியவையாக இருந்தன. இந்த விதிவிலக்கான சூழ்நிலைகளில் தான் இந்த வசனங்கள் இறக்கப்பட்டன எனக் கொள்ளாமல் அவற்றை எல்லா சூழ்நிலைகளுக்கும் பொதுமைப்படுத்துவது பிறசமயத்தவர் தொடர்பாக கடைபிடிக்கும்படி குர்ஆனில் கூறப்பட்ட உறுதியான அடிப்படைகளுக்கு முரணான முடிவுகளையே பெற வழிவகுக்கும்.15 என்கிறார்.
சகவாழ்வை வலியுறுத்தும் வசனங்களும் நபிகளாரின் நடைமுறைகளும்
அதேவேளை, இந்த கால, சூழல்கள் நீங்கும் போது அல்லது எதிரிகளது நடவடிக்கைகளிலும் மனோநிலைகளிலும் மாற்றங்கள் உருவாகும் போது அவர்களுடன் சகவாழ்வையும், சகிப்புத்தன்மையையும் கையாழும்படி அல்குர்ஆன் பணிக்கிறது:
‘உங்களது மார்க்க விவகாரத்தில் உங்களுக்கெதிராக யார் யுத்தம் புரியாமலும், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றாமலும் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் உபகாரம் செய்வதனையோ அவர்களுடன் நீதி நியாயமாக நடப்பதனையோ அல்லாஹ் தடுக்கமாட்டான். ஆனால், யார் மார்க்க விவகாரத்துக்காக உங்களுக்கெதிராக போர் தொடுத்து, உங்களை உங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்பட ஒத்துழைப்பும் வழங்கியவர்களை நீங்கள் விசுவாசத்துக்குரியவர்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தான் அல்லாஹ் உங்களைத் தடுக்கிறான். அவர்கள் தான் அநியாயக்காரர்களாவர்.’ 16
எனவே, சகவாழ்வு, பரஸ்பர ஒத்துழைப்பு, நீதி நியாயம் என்பன தான் முஸ்லிம் – முஸ்லிம் அல்லாதோர் உறவின் அடிப்படை என்பது இதன் பொருளாகும்.17 அந்தவகையில், முஸ்லிம் படையைச் சேர்ந்தவர்களும் எதிரிகளின் படையினரும் போர்க்களத்தில் மோதிக் கொண்டிருக்கையில் இவ்விரு குழுக்களையும் சேர்ந்த பொதுமக்கள் (போரில் சம்பந்தப்படாதவர்கள்) இந்த போர்ச் சூழலால் பாதிக்கப்படாமல் தமக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் பரிமாரிக் கொண்டிருப்பார்கள். என அபூஸஹ்ரா தெரிவிக்கிறார்.18 எனவே, போரானது இரு படைகளுக்கிடையில் நடக்குமே போர் தவிர இரு சமூகங்களுக்கிடையிலல்ல என்பது இதிலிருந்து புலனாகிறது.
முஸ்லிம் அல்லாத, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத அனைவருக்கெதிராகவும் யுத்தம் தொடுக்கும்படி சர்ச்சைக்குரிய இந்த வசனங்கள் கட்டளை பிறப்பிப்பதாகக் கொள்வதால் பின்வரும் அம்சங்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கும்.
- ‘மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை’ என்ற குர்ஆன் வசனத்தை நிராகரித்தாக அது அமையும்.
- நபி(ஸல்)அவர்களும் பின்னர் வந்த கலீபாக்களும் தத்தமது அரசுகளின் கீழ் பல’திம்மத்’ உடன்படிக்கைகளைச் செய்தார்கள். இஸ்லாமிய அரசின் குடிமக்களாக முஸ்லிம் அல்லாதோர் வாழுவதற்கு அனுமதி வழங்கி அவர்களுக்கான உயிர், உடமை, மானம், மரியாதை போன்றவற்றுக்கான உத்தரவாதங்களை வழங்கியிருக்கமாட்டார்கள்.
- முஸ்லிமல்லாதோருடன் சகித்து, அவர்களுடன் சகவாழ்வை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உள்ளன என்ற கருத்தைத் தரும் பல வசனங்கள் குர்ஆனில் உள்ளன. அவை மக்கா காலப்பரிவில் மட்டுமன்றி, மதீனா காலப்பரிவிலும் இறக்கப்பட்டன. எக்காலத்திலும் எவரையும் பலாத்கார மதமாற்றத்திற்கு உள்ளாக்கலாகாது என அவை தெளிவுபடுத்துகின்றன. மதீனா காலப்பிரிவுக்குரிய வசனங்கள் சில:
(அ) ‘மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது.’19
(ஆ) ‘அவர்களை மன்னிப்பீராக, சகித்துக் கொள்வீராக, நிச்சயமாக அல்லாஹ் உபகாரம் செய்வோரை நேசிக்கிறான்.’20
(இ) ‘அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள், தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்று (நபியே) அவர்களிடம் கூறிவீராக? அவர்கள் ஏற்காது விடுவார்களாயின், (நபியாகிய) அவர் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளுக்கே அவர் பொறுப்பாகுவார். (மனிதர்களே)உங்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு……… தெளிவாக எத்திவைக்கும் பொறுப்பை மட்டுமே தூதுவர் சுமந்திருக்கிறார்.’ 21
(ஈ) ‘இணைவைப்பவர்களில் எவராவது உம்மிடம் வந்து அபயம் கேட்டால் அவர் அல்லாஹ்வின் வேதத்தை செவிமடுப்பதற்காக அவருக்கு அபயமளிப்பீராக!, பின்னர் அவரது பாதுகாப்பான இடத்துக்கு அவரைக்கொண்டு போய் சேர்ப்பீராக!’ 22
‘மேற்சொல்லப்பட்ட வசனங்கள் யாவும் முஸ்லிம்கள் மதீனாவில் அதிகாரத்தை அடைந்த பின்னர் இறக்கப்பட்டவையாகும். எனவே, இடம், காலம் மாறியதற்கேற்ப வசனங்களது போக்கிலும் கொடூரம் இருக்கிறது என்ற அதிகமான கீழைத்தேயவாதிகளது வாதம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. சகல வசனங்களும் மக்காவில் ஆரம்பித்த பயணத்தின் பின்னர் சீரான பாதையில் தான் வருகின்றன. பரந்த களத்திலிருந்து பிறக்கின்றன. அங்கு அதிகார பலத்தின் வாசனை வீசவில்லை. அங்கு ஆயுதக் கலசாரத்தைக் காணமுடிவதில்லை. சிலர் நினைப்பது போல் அங்கு இரத்தம் சிந்தும் நிலையைக் காண முடிவதில்லை. மக்கீ சூராக்களில் இடப்பட்ட அடிப்படைகளிலேயே மதீனா சூராக்களும் பயணி;க்கின்றன. இஸ்லாம் சமாதானத்துக்குப் பொருத்தமான சில கால சூழ்நிலைகளில் சமாதானத்தை வலியுறுத்தியது. யுத்தத்தை வேண்டி நின்ற அசாதாரண சூழ்நிலைகளில் அதனைச் செய்யும் படி கூறியது.23 என ஹுவைதீ கூறுகிறார்.
எனவே, இந்த குறைஷpயர்களது அல்லது யூதர்களது போக்கைக் கடைப்பிடிக்கும் எவர் தொடர்பாகவும் இஸ்லாம் இந்த நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கும். அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்ற காரணத்துக்காக அன்றி, அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக யுத்தம் தொடுத்து, அவர்களுக்கெதிராக முதன் முதலில் அத்துமீறினார்கள் என்ற காரணத்தினால் தான் இப்படியான வசனங்கள் இறங்கின. அவர்கள் அறபு இணைவைப்பாளர்களாகவோ பாரசீகர்களாகவோ, மதீனாவிலிருந்த யூத கோத்திரத்தவர்களாகவோ கஸ்ஸானிய, பைஸாந்திய கிறிஸ்தவர்காகவோ இருப்பினும் இதுதான் நிலைப்பாடாகும்.24 என ஜமால் பதவீ கூறுகிறார்.
ஆனால், இணைவைப்பாளர்களுக் கெதிராக முழுமையான ஓர் யுத்தத்தைக் தொடுக்கும்படி கூறும் குர்ஆன் வசனங்கள் அறபுக்களுக்கு மத்தியில் வாழ்ந்த இணைவைப்பாளர்களான ஒரு சாராரை மட்டுமே குறிக்கும். இந்த வசனங்களை அனைத்து நிராகரிப்பாளர்களுக்கெதிராகவும் அல்லது சகல இணைவைப்பாளர்களுக்கு எதிராகவும் பிரயோகிப்பது ‘மார்க்கத்தில் பலாத்காரமில்லை’ என்ற விதிக்கு எதிரானதாகும். ஏனெனில், அரபு நாட்டில் இருந்த இணைவைப்பாளர்களில் ஒரு சாரார் தான் முஸ்லிம்களுக்கெதிராக அத்துமீறல் செய்து, ஹுதைபியா உடன்படிக்கையை முறித்து, மக்கா வெற்றியின் பின்னர் அரபுக் கோத்திரங்களை முஸ்லிம்கெளுக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். எனவே, அப்பாவிகளைக் கொன்று குவித்து, விஷமம் செய்து, அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் இணைவதைத் தடுத்தும் வந்ததனால் அவர்களுக்கெதிராக இந்தவகை நடவடிக்கை எடுக்கப்பட்டது. சூரா அல்பகராவில் 190 – 194 வரை வந்துள்ள யுத்தம் தொடுப்பது பற்றிய ஆரம்ப வசனங்களின் வட்டத்தினுள் நின்று இந்த வசனங்கள் யுத்தத்துக்கான நியாயங்களைக் கூறுகின்றனவே தவிர பகராவின் வசனங்களை ரத்துச் செய்துவிடவில்லை. 25
தொந்தரவுகளை நிறுத்தி உடன்படிக்கையைப் பேணுவோருக்கு விதிவிலக்கு
அதேவேளை, எதிரிகள் அத்துமீறலை நிறுத்தி, முஸ்லிம்களுடன் இணக்கப்பாட்டுடன் வாழ விரும்பும் போதெல்லாம் அதனை ஏற்க முஸ்லிம் சமூகம் எப்போதும் தயாராக இருக்கிறது. பகைமை நிரந்தரமானதல்ல. நேற்று எதிரியாக இருந்தவர் இன்று நண்பனாக மாறலாம். இது போன்ற கருத்துக்களை யுத்தம் தொடர்பாக வந்த கடுமையான சொற்களைக் கொண்ட குர்ஆன் வசனங்களுக்கு அருகருகே தாராளமாகக் காணமுடியும். பின்வரும் வசனங்கள் இதற்கு தக்க சான்றுகளாகும்:-
(அ) “உங்களுக்கெதிராக யுத்தம் தொடுப்பவருக்கெதிராக யுத்தம் செய்யுங்கள். அத்துமீறாதீர்கள். அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிக்கமட்டான். அவர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள். உங்களை அவர்கள் எங்கிருந்து வெளியேற்றினார்களோ அங்கிருந்து நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். ‘பித்னா’ 26 வைத் தோற்றுவிப்பது கொலையைக் காட்டிலும் மிகக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகே அவர்கள் உங்களுடன் போர் தொடுக்காதவரை நீங்களும் அதன் அருகே அவர்களுடன் போர் புரிய வேண்டாம். ஆயினும் (அங்கே) அவர்கள் உங்களோடு போர் செய்தால் நீங்களும் (தயக்கமின்றி) அவர்களோடு போர்புரியுங்கள். ஆயினும் அவர்கள் (போர் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கிறான்.” 27
இது நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த பின்னர் போர் தொடர்பாக முதன்முதலில் இறக்கப்பட்ட வசனமாகும்.28 இந்த வசனங்களின் இடைநடுவே எதிரிகளைக் கண்ட இடத்தில் கொல்லும்படியான வாசகம் இடம்பெற்றாலும் யுத்த தர்மங்களையும் பண்பாடுகளையும் அந்த யுத்தத்தின் போது கடைபிடிக்கும் படி அந்த வசனக் கூட்டங்களில் அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான். அவற்றில் ஆயுதம் ஏந்தி யுத்தத்திற்கு வருவோருக்கு எதிராக மட்டுமே யுத்தம் தொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அத்துமீறும் அளவுக்கே முஸ்லிம் படை அத்துமீற அனுமதியுண்டு. அவர்கள் முஸ்லிம்களை வெளியேற்றிய இடத்திலிருந்து தான் அவர்களை வெளியேற்ற வேண்டும். அவர்கள் மக்காவிலுள்ள புனித ஆலயம் இருக்கும் பகுதிக்குள் இருந்து முஸ்லிம்களைத் தாக்கினாலன்றி அப்பகுதியில் முஸ்லிம்கள் தாக்குதலை ஆரம்பிக்கலாகாது. அவர்கள் எதிர்ப்புக் காட்டுவதையும் யுத்தத்தையும் தவிர்த்துக் கொள்ள விரும்பினால் அவர்களுடன் யுத்தம் தொடுக்கலாகாது போன்ற மிகவுமே சிறந்த ஒழுக்கங்களை இவ்வசனம் தாங்கி நிற்கிறது.
(ஆ) சூரா அத்தௌபாவில் இடம்பெறும் ‘சிறப்புற்ற மாதங்கள் கழிந்து சென்றுவிட்டால் இணைவைப்போரைக் கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள், அவர்களை சிறைபிடியுங்கள்…… அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனுமாய் இருக்கிறான்’ 29 எனப்படும் ’ஆயதுஸ் ஸய்ப் ’ (வாளேந்தக் கோரும் வசனம்) கணிசமான அளவு பேசப்பட்டும் கருத்து பேதங்களுக்கு உட்பட்டும் வந்துள்ளது. இதற்கு முன்னர் இறக்கப்பட்ட பிறசமயத்தார் விடயத்தில் பொறுமைகாப்பது, அழகிய முறையில் நடந்துகொள்வது, மதசுதந்திரம் வழங்குவது என்பன குறித்து அருளப்பட்ட எல்லா வசனங்களையும் இந்த வாசகமானது ரத்துச் செய்துவிட்டதாக ஸர்கானீ, முஸ்தபா அபூஸைத் ஆகியோர் கூறினர்.30 இப்னுல் அரபீ,இப்னு ஸலாமா ஆகியோர் இது 124 வசனங்களை ரத்துச் செய்ததாகக் கூறினர்.31
இந்த வசனத்தின் மூலம் ‘மார்க்கத்தில் பலாத்காரமில்லை’ என்ற குர்ஆன் வசனம் ரத்துச் செய்யப்பட்டதாகவும் அனைத்து சமூகங்களையும் இஸ்லாத்தில் நுழையும்படி அழைப்பு விடுத்து அவர்கள் மறுத்தால் அவர்கள் ‘ஜிஸ்யா’ செலுத்த முன்வந்தாலே தவிர அவர்களுக்கெதிராக அவர்கள் கொலை செய்யப்படும் வரை போராட வேண்டும் என்ற கருத்தையும் இமாம் இப்னு கதீர் தெரிவித்திருக்கிறார்;.32
இந்த அறிஞர்களது கருத்துக்களை எவ்வகையிலும் ஏற்க முடியாதென்றும் இந்த வசனம் அறபு நாட்டிலிருந்து நபியவர்களுக்கு தொந்தரவுகளைக் கொடுத்து வந்தவர்களை மட்டுமே குறிக்குமென்றும் நவீனகால அறிஞர்களான அல்கஸ்ஸாலி,33 அபூசுலைமான்,34 அப்துல் வஹ்ஹாப் கல்லாப்,35 ஜமால் பதவி 36 போன்றோர் கூறுகின்றனர்.
இங்கு ‘இணைவைப்போர்’ , ‘நிராகரிப்போர்’ என்ற சொற்களே பிரயோகிக்கப்பட்டுள்ளன. இது அறபு இணைவைப்பாளர்களை மட்டுமே குறிக்கும். இவர்களைத் தவிரவுள்ள வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், அறபிகள் அல்லாத இணைவைப்பவர்களையும் இது குறிக்காது. இவர்களுக்கெதிராக யுத்தம் மேற்கொள்ளப்பட்டு அவர்களே ‘ஜிஸ்யா’ செலுத்த முன்வந்தால் அவர்களுக்கெதிராக எந்த போர் நடவடிக்கையும் எடுக்கப்படலாகாது. ஆனால், அறபு இணைவைப்பாளர்கள் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்படவேண்டும் என்பது தான் அல்லாஹ்வின் கருத்தாக இருந்தது. அவர்களுக்கு பிரசாரம் செய்து அவர்கள் இஸ்லாமாகுவதால் ஏதும் நலவுகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தால் அவர்களும் திம்மீக்களாக அங்கீகரிக்கப்பட்டு ‘ஜிஸ்யா’ அறவிடப்பட்டிருக்கும். ஆனால், அவர்களது அட்டூழியங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களது அத்துமீறல் கடுமையாக இருந்ததனாலும், அவர்களது அட்டூழியங்களை தவிர்க்க வேறு வழியேதும் காணப்படாததனாலும் இந்த சட்டம் பிறப்பிடிக்கப்பட்டது என கல்லாப் (கி.பி.1956) கூறுகிறார்.37
அதேவேளை, வாள் பற்றிய வசனத்தை உள்ளடக்கியுள்ள அதே சூரா அத்தௌபாவில், இத்தகைய கொடூரமான விரோதிகள் பற்றிக் கூறப்படும் நல்லிணக்கமான அணுகுமுறைகளையும் இங்கு மறந்துவிடலாகாது. அவற்றை பின்வருமாறு பட்டியல்படுத்தலாம்:-
- நான்கு மாதங்கள் அவர்கள் பாதுகாப்பாக வாழலாம். அவர்கள் விரும்பினால் அதற்கிடையில் இஸ்லாமிய எல்லையை விட்டே வெளியே போய்த் தப்பிக்கலாம்.’நீங்கள் நான்கு மாதங்கள் பூமியில் சுதந்திரமாகச் சுற்றித் திரியுங்கள்’ (2ம் வசனம்)
- அல்லது அவர்கள் பாவச் செயல்களை விட்டு விலகி இஸ்லாத்தைத் தழுவலாம்.’நீங்கள் (அல்லாஹ்வின் விசுவாசத்தின் பால் மீண்டு) பாவமன்னப்புக் கேட்டால் அது உங்களுக்கு நல்லதாகும்’ (3ம் வசனம்) ‘அவர்கள் மன்னிப்புக் கோரி மீண்டு வந்து தொழுகையை நிலை நிறுத்தி ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் உங்களது மார்க்க அடிப்படையிலான சகோதரர்களாவர்’ (11ம் வசனம்)
- முஸ்லிம்களுடன் எதிரிகள் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையின் நிபந்தனைகளை அந்த எதிரிகள் பூரணமாகப் பேணிவந்து முஸ்லிம்களுக்கு எதிராக வேறு எவருக்கும் உதவி செய்யாமல் இருக்கும் வரை அவர்களுக்கெதிராக யுத்தம் தொடுக்க முடியாது. அவ்வுடன்படிக்கையின் காலக்கெடு முடிவடையும் வரை அதனைப் பேண வேண்டும். அதுதான் இறையச்சம் மிக்கவர்களது பண்பாகும்.’அவர்களுடனான உங்களது உடன்படிக்கைகளைப் பூரணப்படுத்துங்கள்’ (4ம் வசனம்)
- எதிரிகளில் எவராவது யுத்த வேளையின் போது கூட அபயம் தேடி வந்தால் அபயமளிப்பது முஸ்லிம் சேனையின் கடமையாகும். அவர் தனது குழுவினரிடம் திரும்பிச் செல்ல விரும்பினால் அவரை பாதுகாப்பான இடத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் அழைத்துச் செல்வதும் முஸ்லிம் சேனையின் கடமையாகும்.’இணைவைப்பவர்களில் எவராவது உம்மிடம் அபயம் கேட்டால் அவர் அல்லாஹ்வின் வசனங்களைச் செவியுறலாம் என்பதற்காக அவருக்கு அபயம் அளிப்பீராக. பின்னர் அவரை அவரது பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு போய்ச் சேர்த்துவிடுவீராக'(6ஆம் வசனம்)
இந்தவகையில் தான் பல சலுகைகள், நல்லிணக்க முறைகள், விட்டுக்கொடுப்புக்களையும் இந்த சூரா அத்தௌபா கொண்டுள்ளது எனலாம்.
இஸ்லாம் கூறும் யுத்த தர்மங்கள்
மேற்கூறப்பட்ட பொதுவான அம்சங்கள் தவிர குறிப்பான யுத்த தர்மங்களை இஸ்லாமிய யுத்த முறையில் அனுசரிக்கும் படி அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டனர். நேர்வழி நடந்த கலீபாக்கள் படைகளை அனுப்பும் போதும் இந்த அறிவுரைகளைச் செய்தனர். இஸ்லாத்தின் மனிதாபிமானப் போக்கிற்கும், கொள்கை மற்றும் நம்பிக்கைச் சுதந்தித்திற்கும் மத சகிப்புத்தன்மைக்கும் அவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
பொதுவாக யுத்தங்கள் நடைபெறும் போது எதிரிகளைத் தாறுமாறாக கொல்வதும் எதிரியின் நாட்டிலுள்ள யுத்தத்தில் சம்பந்தப்படாதவர்களைக் கூட கொன்றொழிப்பதும் அவர்களது நிலபுலன்களைக் கூட அழித்தொழிப்பதுமே உலக வழமையாக உள்ளது. இது இஸ்லாமிய யுத்த தர்மத்திற்கு முரணானதாகும்.
அல்குர்ஆன் இப்படியான தனிமனிதர்களையும் படைகளையும் பின்வருமாறு கண்டிக்கிறது:-
அ. “மனிதர்களிற் சிலருக்கு பூமியில் அதிகாரம் கிடைத்துவிட்டால் அவர்களது முயற்சியெல்லாம் பூமியில் குழப்பத்தை பரப்புவதாகவும் பயிர்களையும் சந்ததிகளையும் அழிப்பதாகவும் இருக்கும். அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை.” 38
ஆ. ஆட்சியாளர்கள் பற்றி பல்கீஸ் என்ற அரசி குறிப்பிட்ட ஒரு கருத்தை அல்லாஹ் குர்ஆனில்: ‘அரசர்கள் எந்த ஓர் ஊரிலாவது நுழைந்தால் அதனை சீரழித்துவிடுவார்கள். அதன் கண்ணியமிக்க பிரஜைகளை இழிவுபடுத்துபவர்களாக மாறிவிடுவர் என்று அவள் கூறினாள்.’ என்று கூறிவிட்டு ‘அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்’ 39 என்று அல்லாஹ் தொடர்ந்து பிரஸ்தாபிக்கிறான்.
எனவே, அல்குர்ஆன் இந்த விஷமத்தனங்களை வன்மையாகக் கண்டிக்கிறது. அதேபோல், யுத்தமானது யுத்த எல்லைகளைத் தாண்டி சிவில் எல்லைகளுக்குள் நகர்த்தப்படுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்திருக்கிறார்கள்.
‘அல்லாஹ்வின் பாதையில், உங்களுக்கெதிராக போராடுவோருக்கு எதிராகப் போராடுங்கள் ; அத்துமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிக்கமாட்டான்.’ 40 என்பது அல்லாஹ்வின் கூற்றாகும். இந்த வசனத்தை விளக்க வந்த இமாம் இப்னு கதீர் 41 பின்வரும் நபி மொழிகளை ஆதாரமாகக் காட்டுகிறார் :-
- ‘அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள். அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்கெதிராக யுத்தம் செய்யுங்கள்; போர்புரியுங்கள்; வரம்பு மீறிவிடாதீர்கள்; ஏமாற்றாதீர்கள்; உடம்புகளை சீர்குலைக்காதீர்கள்; சிறுவர்களையும், மடாலயங்களில் இருப்போரையும் கொலை செய்யாதீர்கள்.42நபி(ஸல்) அவர்கள் படைகளை அனுப்ப முன்னர் இவ்வாறு உபதேசிப்பார்களென இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- ‘நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட யுத்தமொன்றின் போது ஒரு பெண் கொலை செய்யப்பட்டிருந்ததை அன்னார் கண்டார்கள். அதனைப் பார்த்த அவர்கள் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்படுவதை கண்டித்தார்கள்.’ 43
- கைபர் யுத்தத்தின் போது (கி.பி627) யூதர்களது வேதமான தௌராத்தின் பல பிரதிகளை முஸ்லிம்கள் கண்டெடுத்தார்கள். பின்னர் அவற்றைத் தேடி யூதர்கள் வந்தவேளை அவற்றை அவர்களிடம் ஒப்படைக்கும்படி நபி(ஸல்)அவர்கள் பணித்தார்கள். உஹத் யுத்தத்தின் பின்னர் நபி(ஸல்) அவர்கள் பனுன் நளீர் கோத்திர யூதர்களை மதீனாவை விட்டு வெளியேற்றிய போது அவர்கள் தமது வேதத்தின் பிரதிகளை தம்முடன் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கினார்கள்.44
மேலும், நேர்வழி நடந்த கலீபாக்கள் தாம் படைகளை அனுப்பும் போது இவ்வாறான உபதேங்களைச் செய்திருக்கிறார்கள்.
அபூபக்ர் (றழி) அவர்கள், உஸாமாவின் தலைமையில் சென்ற படைக்கு செய்த உபதேசம் வருமாறு : மக்களே, நில்லுங்கள்! உங்களுக்கு நான் பத்து அம்சங்கள் தொடர்பாக உபதேசம் செய்கிறேன். அவற்றை என்னிடமிருந்து மனனமிட்டுக் கொண்டு பேணிக்கொள்ளுங்கள்.
o துரோகம் செய்யவோ கபடமாக நடந்திடவோ வேண்டாம்.
o ஏமாற்றவோ (எதிரிகளது) சடலங்களை சின்னாபின்னப்படுத்தவோ வேண்டாம்.
o சிறிய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்.
o முதியோரையோ பெண்களையோ கொலை செய்யாதீர்கள்.
o ஈத்த மரங்களை வெட்டவோ, நெருப்பிட்டுக் கொழுத்தவோ வேண்டாம்.
o பழம் தரும் மரங்களை வேட்டாதீர்கள்.
o உணவாகக் கொள்வதற்கன்றி ஆடுகளையோ, ஒட்டகைகளையோ வீணே கொல்லாதீர்கள்.
o உங்களது பயணத்தின் போது, மடாலயங்களில் தொடர்ந்தும் தங்கியிருந்து வணக்கங்களில் ஈடுபடுவோரை (கிறிஸ்தவ, யூத துறவிகளை) நீங்கள் காணலாம். அவர்களை விட்டு விடுங்கள். அவர்களது கிரியைகளுக்கும் இடையூறு செய்யாதீர்கள்.
o பல்வேறுபட்ட உணவு வகைகளை எடுத்துக் கொண்டு உங்களிடம் வரும் ஒரு சாராரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அவற்றிலிருந்து நீங்கள் உண்பதாயின் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உண்ணுங்கள்.45
இவ்வாறுதான் இஸ்லாமிய யுத்த தர்மத்துக்கான அடிப்படைகளை குர்ஆன், சுன்னா மற்றும் நேர்வழி நடந்த கலீபாக்களது நடைமுறைகள் வாயிலாக அறியமுடியும். பின்னர் வந்த சிறந்த முன்மாதிரிமிக்க தளபதிகளும் இவற்றை நடைமுறைப்படுத்தினர். ‘கிறிஸ்தவ சிலுவை வீரர்கள் குத்ஸில் நுழைந்த போது அங்கு படுமோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். முஸ்லிம்களில் பலவீனர்களையும், பெண்களையும், சிறுவர்களையும் கொண்ட பெரும் எண்ணிக்கையினர் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாயலுக்குள் – அதன் புனிதத்தன்மை தம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் – நுழைந்தனர். ஆனால், இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் துவேஷ வெறி கொண்டிருந்த சிலுவை வீரர்கள் நிராயுதபாணிகளான இந்த அப்பாவிகளை தமது ஆயுதங்களால் கொன்று குவித்தனர்.
‘1099ம் ஆண்டு ஜுலை 15ம் திகதி கிறிஸ்தவ சிலுவை வீரர்களால் ஜெருஜலம் கைப்பற்றப்பட்ட போது யூதர்கள் மற்றும், முஸ்லிம்கள் உள்ளிட்ட 60,000 க்கும் மேற்பட்ட குடிமக்கள் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஒருவர் கண்ட காட்சியை பின்வருமாறு விபரிக்கிறார் :-
‘அங்கு (சொலமன் ஆலயத்துக்கு முன்னால்) எம்மவர்கள் எதிரிகளின் இரத்தத்தில் முட்டுக்கால் அளவுக்கு நீந்திக் கொண்டு மகிழ்ச்சி ஆரவாரமிட்டுக் கொண்டிருந்தனர். எம்மவர்கள் எமது ரட்சகனுடைய சமாதியை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள். அதனை கௌரவிப்பதற்கும் தமது நன்றிக் கடனைச் செலுத்துவதற்காகவும் இப்படிச் செய்தார்கள்.’46
இக்கருத்தையே முதலாவது சிலுவை யுத்தம் பற்றிய Daimbert என்பவரின் கூற்றும் வலியுறுத்துகிறது. அவர் ‘நாம் அங்கு சந்தித்த எதிரிக்கு என்ன நடந்தது என்று அறிய நீங்கள் ஆவலாயிருப்பீர்கள். சொலமனின் தலைவாயிலிலும் அவரது ஆலயத்திலும் எம்மவர்கள், சரசன்களின் இரத்தத்தில் குதிரைகளின் முட்டம்கால் அளவு நனையும் வரை தமது குதிரைகளை ஓட்டிச் சென்றார்கள் எனக் கூறுகிறார்.’ 47
ஆனால், ‘ஸலாஹுத்தீன் அய்யூபி இந்த சிலுவை வீரர்களை வெற்றி கொண்ட போது இந்த அளவு இழிவான நிலைக்குச் செல்வதிலிருந்து அவரது இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு அவரைப் பாதுகாத்தது’ என ஆய்வாளர் கலாநிதி தசூகி தெரிவிக்கிறார். பொஸ்னியா ஹெர்ஸகோவினா பகுதிக்கு 1996ம் ஆண்டுதான் நேரில் சென்று பார்த்தவற்றையும் கேள்விப்பட்டவற்றையும் மிகுந்த மனவேதனையோடு அவர் விபரிக்கிறார். சேர்பியர்களும் குரோஷியர்களும் அப்பகுதிகளில் முஸ்லிம் பெண்களது கற்பை சூறையாடி நிரபராதிகளான பொது மக்களை குழுக்களாகக் கொலை செய்திருந்தனர். 70 முஸ்லிம்கள் தமது சாதாரண ஆடைகளுடன் சேற்றுக் குழியில் உயிரோடு தள்ளப்பட்டு கொல்லப்பட்டிருந்ததாகவும் அவர்களது சடலங்கள் வெளியில் எடுக்கப்படும் காட்சி மனதுக்கு அதிக வேதனை தந்தது என்றும் அவர் கூறுகிறார். ஆனால், பொஸ்னிய முஸ்லிம்கள் தமது இந்தக் கொடூரமான எதிரிகளை வெற்றி கொண்ட போது இந்த வித குற்றச் செயல்கள் எதிலும் ஈடுபடவில்லை. இஸ்லாமிய சட்டங்கள் பற்றி பெரிய அளவில் அவர்களுக்குத் தெளிவு இல்லாத போதும் இப்படி நடந்து கொண்டார்கள். இதற்கு முன்னர் சேர்பியர்களும் குரோஷியர்களும் ஆக்கிரமித்திருந்த பகுதிகளுக்கு முஸ்லிம் படை நுழைந்த போது அவ்வெதிரிகள் தமது இனத்தவர்களான வயோதிபர்களையும் அவ்வப் பகுதிகளிலேயே விட்டு விட்டு ஓடினர். முஸ்லிம் வீரர்கள் அந்தப் பலவீனர்களுக்கு எத்தீங்கும் இழைக்கமாட்டர்கள் என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறு செய்தனர். ஆனால், எதிரிப் படையினர் முஸ்லிம் வீரர்கள் பற்றிய செய்திகளை அறிந்து உளவு பார்ப்பதற்காக தமது இனத்தைச் சேர்ந்த வயோதிபர்களிடம் தொலைத்தொடர்பு சாதனங்களைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள். முஸ்லிம் படையினர் இது பற்றி அறிந்த போதிலும் அவ்வயோதிபர்களுக்கு எவ்விதத் தீங்குகளையும் செய்யாது அந்த சாதனங்களை பறிமுதல் செய்தனர்.’ இவ்வாறு தசூகி கூறுகிறார்.48
கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் வசமிருந்த ஸ்பெய்னை கைப்பற்றிய போது செய்த அட்டூழியங்களை பேராசிரியர் நிகல்ஸன் பின்வருமாறு எழுதுகிறார். ‘கி.பி 1492ல் ஐரோப்பிய அறபிகளது கடைசிக் கோட்டையும் பொடினன்ட் மற்றும் இஸபெல்லாவின் முன் வீழ்ச்சி கண்டது. வெற்றியாளர்கள் காட்டுமிராண்டித் தனமான மதவெறியைக் காட்டி, மிகவும் கேவலமாக நடந்துகொண்டனர். முஸ்லிம்களது மதம், அவர்களது சொத்துக்கள் என்பவற்றை மதிக்க வேண்டுமென்ற தமது புனிதமான கடப்பாட்டை அவர்கள் மீறினார்கள். முஹம்மதிய ஆட்சியில் ஸ்பானிய கிறிஸ்தவர்கள் அனுபவித்த சகிப்புத்தன்மை மற்றும் தாராளத்தன்மை மிக்க போக்கிற்கு முற்றிலும் வித்தியாசமான நடைமுறையாக இது அமைந்தது. கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுவது அல்லது நாட்டைத் துறந்து செல்வது என்ற இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால், பலர் நாட்டைத் துறந்து செல்லத் தீர்மானித்தனர். தொடர்ந்தும் நாட்டில் இருந்தவர்கள் மிக மோசமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். கிறிஸ்துவிற்குப் பின் 1609ல் மூன்றாம் பிலிப்பின் கட்டளையின் பிரகாரம் முஸ்லிம்கள் ஸ்பானிய மண்ணிலிருந்து துரத்தப்படும் வரை நிலை இவ்வாறு தான் இருந்தது.49
ஆனால், சிலுவை யுத்தங்கiளில் ஈடுபட்ட சலாஹுத்தீன் ஐயூபி, தமது பரம வைரிகளான சிலுவை வீரர்களது மிகப் பெரிய தளபதிகளில் ஒருவராக இருந்த ரிச்சட் சுகயீனமுற்ற வேளையில், தனது தனிப்பட்ட வைத்தியரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததோடு ஒரு தொகை பழங்களையும் சேர்த்து அனுப்பியதாக வரலாறு கூறுகிறது. 50
தற்காலத்திலும் கூட சாதாரண பொதுமக்களாகிய முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட படுகொலைகளும் அடக்கு முறைகளும் நடந்தேறியே வருகின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான், பலஸ்தீன், ஈராக், செச்னியா போன்ற பகுதிகளில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் இதற்கு தக்க சான்றாகும்.
ஆனால், எத்தகைய இக்கட்டான கட்டத்திலும் இஸ்லாமிய யுத்த தர்மம் என்ற வரம்புக்குள் மட்டுமிருந்தே போராட்டத்தை தொடுக்கும் படி இஸ்லாம் கண்டிப்பாக ஆணை பிறப்பிக்கிறது. இது பற்றி தொடர்ந்து எழுதும் தசூகி அவர்கள், ‘இஸ்லாம் பெண்கள், சிறுவர்கள், தொழிலாளர்கள், பைத்தியக்காரர்கள், நோயாளர்கள், மிகவுமே வயதுசென்றவர்கள், மக்களோடு மக்களாக கலக்காமல் ஆசிரமங்களிலும் ஆலயங்களிலும் துறவு பூண்டு வாழ்பவர்கள் போன்றோர் கொலை செய்யப்படுவதை தடை செய்துள்ளது. ஏனெனில், ‘உங்களோடு போராடுபவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள் ‘ 51 என்றுதான் குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஆனால், இவர்களில் எவராவது யுத்தம் நிகழும் போது கருத்துக்களால் அல்லது செயல்கள் மூலம் எதிரிகளுடன் பங்கு கொண்டால் அவர்களும் போராளிகளாகக் கணிக்கப்பட்டு அவர்களுக்கெதிராகப் போராடி அவர்களைக் கொலை செய்யலாம்.
போராட்டத்திற்கு வரவோரை மட்டுமே எதிர்த்துப் போராட முடியும் என்று இருப்பதால் தற்காலத்தில் ‘குருட்டு ஆயுதங்கள்’ என்று போராட்டக் குழுக்குளால் பெயரிடப்பட்டுள்ள ஆயுதங்களை பிரயோகிக்க (இஸ்லாத்தில்) அனுமதி இல்லை. ஏனெனில், அவை ஆயுத பாணிகளையும் சிவிலியன்களையும் பிரித்து நோக்குவதில்லை. முழு அழிவு தரும் ஆயுதங்களையோ ஜீவ அணு ஆயுதங்களையோ, உயிர்கொல்லிகளான வாயுக்களையோ பிரயோகிக்க முடியாது. இவை போராட்டத் தேவைகளுக்கு அப்பாற்பட்டவையாகும் என தசூகி தெரிவிக்கிறார்.52
இமாம் ஸவ்கானீ (ஹி. 1255) அவர்கள் பெண்கள், சிறுவர்கள், துறவிகள், முதியோர் ஆகியோரை கொலை செய்யலாகாது என்று கூறும் ஹதீஸ்களை விளக்கும் போது ‘இந்த ஹதீஸ்கள் பெண்கள், சிறுவர்கள் கொல்லப்படலாகாது என்று தெரிவிக்கின்றன. இது மாலிக், அவ்ஸானீ ஆகியோரின் கருத்துமாகும். அவ்விருவரின் கூற்றுப்படி எந்த சந்தர்ப்பத்திலும் இதனைச் செய்யலாகாது. எதிரிகள் பெண்களையும், சிறார்களையும் கேடயமாகப் பயன்படுத்தினாலும் அல்லது அவர்கள் ஒரு கோட்டைக்குள் அல்லது கப்பலுக்குள் இருந்து கொண்டு தமக்கு அரணாக பெண்களையும் சிறுவர்களையும் பயன்படுத்தினாலும் அவர்களை தாக்கவோ, தீயிட்டுக் கொழுத்தவோ முடியாது. என அவர்கள் கூறியுள்ளார்கள். என்கிறார்.’ 53
எனவே, போர் நடைபெறும் வேளையில் இஸ்லாம் மனிதாபிமான சகிப்புத்தன்மைமிக்க விதிமுறைகளை அமுல் செய்கிறது. உடலின் பாதிக்கப்பட்ட பகுதியை மாத்திரமே சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்க வேண்டும் என்பது போல போராட வருபவர்களை மட்டுமே இஸ்லாமிய யுத்தமுறை குறிவைக்கிறது.
இஸ்லாமிய யுத்த தர்மத்தின் மிக முக்கிய அம்சமாக இருப்பது கைதிகள் பற்றிய அதன் கொள்கையும் நடைமுறையுமாகும். யுத்த காலத்தில் ஆவேசத்துடன் ஒரு படைவீரன் போராடுகிறான் அவனைக் கொல்லவும் அவனது சொத்துக்களை சூரையாடவும் வரும் எதிரிப்படை வீரன் கைதியாகப் பிடிக்கப்பட்டால் அவன் விடயமாக நிதானமாகவும் அன்பாகவுமே நடந்து கொள்ளும்படி இஸ்லாம் பணித்தது. முஸ்லிம் சேனைக்கெதிராக யுத்தம் புரியும் ஒரு குழுவிலிருந்து ஒருவரோ அல்லது பலரோ வந்து தமக்கு புகலிடமும் பாதுகாப்பும் வேண்டினால் அவர்களுக்கு தக்க பாதுகாப்பை வழங்கும்படி அல்குர்ஆன் பிரஸ்தபிக்கிறது.54
இமாம் அபூ ஸஹ்ரா பின்வருமாறு எழுதுகிறார்,
‘இஸ்லாம் மனித கண்ணியத்தை சமாதான சூழலில் மட்டும்ன்றி யுத்த வேளையிலும் பாதுகாக்கிறது. எனவே, கைதிகள் மீது இரக்கம் காட்டியது. அவர்களது மனிதத்தை அது சிதைக்கவில்லை. முஸ்லிம்களைத் தவிர கைதிகள் மீது இரக்கம் காட்டிய வேறு எவரையும் உலக வரலாறு காணவில்லை. ஒரு விசுவாசி அல்லாஹ்வை நெருங்குவதற்காகச் செய்யக்கூடிய மிக உயர்ந்த கைங்காரியங்களில் ஒன்றாகவும் விசுவாசிகளின் தனிப்பட்ட பண்புகளில் ஒன்றாகவும் அவர்கள் ஏழைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிப்பதை அல்குர்ஆன் குறிப்பிட்டது.
‘அவர்கள் (தம்மிடமுள்ள உணவை) நேசித்த போதிலும் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிக்கிறார்கள்.’ என்பது இந்த வசனமாகும்.55 இங்கு இடம்பெறும் ‘கைதி’ எனும் சொல் பற்றி கருத்துக்கூறும் இமாம் இப்னு அப்பாஸ் அவர்கள், முஸ்லிம்களது கைதிகளாக அன்று இணைவைப்போர் தான் இருந்தனர் என்றார். கைதிகளை கண்ணியமாக நடாத்தும்படி பத்ர் யுத்த வேளையில் நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்களைப் பணித்தார்கள். எனவே, உணவு வேளைகளின் போது தோழர்கள் தம்மைவிட தமது கைதிகளுக்கு முன்னுரிமை வழங்கினர். இது இக்கூற்று சரியானது என்பதற்கு ஆதாரமாகும்.56 நபிகளார் (ஸல்) அவர்கள் ‘கைதிகளுடன் நன்றாக நடந்து கொள்ளுங்கள்’ 57 என்று தெரிவித்தார்கள்.
யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கையில் முஸ்லிம்களின் தரப்பில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம். எனவே, கைதிகளாகப் பிடிபடும் எதிரிகளை பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிற்கும். இந்த கொடூரமான பழிவாங்கும் உணர்ச்சியைத் தவிர்ப்பதற்காகவே கைதிகளை கண்ணியமாக நடத்தும்படி இஸ்லாம் பணித்தது. பத்ர் கைதிகளை நன்றாக நடத்தும் படி நபி (ஸல்) அவர்கள் பணித்ததனால் அந்தக் கைதிகள் விருந்தினர் போல் இருந்தனர். இந்த கைதிகள் தங்கியிருந்த சில வீடுகளில் அந்த வீட்டுச் சொந்தக்காரர்கள் தமது பிள்ளைகளை விட சிறப்பாக இந்தக் கைதிகளைக் கவனித்தனர்.
அந்தவகையில், முஸ்லிம்கள் இரண்டு வகையான ஜிஹாதில் ஈடுபட நேரிட்டது. ஒன்று ஆயுதமுனையில் இடம்பெற்ற ஜிஹாத். அது முடிவடைந்ததும் அடுத்த ஜிஹாத் ஆரம்பமானது. அது என்னவெனில், வெற்றிகொள்ளப்பட்டவர்கள் மீது தமது ஆத்திரத்தைத் தீர்த்துவிடாமலிருக்க தமது உள்ளத்திற்கு எதிராகச் செய்யப்படும் ஜிஹாதாகும்.
எதிரிப்படையிலுள்ளவர்கள் கைதிகளாகப் பிடிபட்டால் இரண்டில் ஒரு தீர்மானத்திற்கு தலைவர் வரமுடியும் என குர்ஆன் குறிப்பிடுகிறது. ஒரு தொகையைக் கிரயமாகப் பெற்று அவர்களை விடுவிக்கலாம் அல்லது அவர்களிடமிருந்து எதனையுமே பெறாமல் பெருமனதோடு விடுதலை செய்யலாம்.58
கிரயம் பெறுவது என்பது இரண்டு வகையில் அமையலாம். முஸ்லிம் கைதிகளின் விடுதலைக்குப் பகரமாக காபிரான கைதிகள் விடுதலையாவது. அல்லது பணத்தைப் பெற்று விடுதலை செய்வது. கைதி ஏழையாக இருந்தால் அல்லது அவர் விடுதலையாவதில் முஸ்லிம் சமூக நலனொன்று இருக்கும் எனக் கருதப்பட்டால் அவரிடமிருந்து பகரம் பெறப்படாமல் அவர் விடுவிக்கப்படுவார். அப்போது அது ‘அழகிய பொறுமை’ என்ற வகையாக அமையும்.
நபி(ஸல்) அவர்கள் அடிமைத் தளைக்கு அங்கீகாரம் வழங்கவுமில்லை; தடுக்கவுமில்லை. பழிக்குப்பழி (Tit For Tat) என்ற வகையில் தான் அந்த முறைமை தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தது. எதிரிகள் முஸ்லிம்களை யுத்தங்களின் போது கைதிகளாகப் பிடிக்கும் போது முஸ்லிம்களுக்கும் அவ்வுரிமை வழங்கப்பட்டது. முஸ்லிம்களை கைதிகளாக சிறைபிடிக்கும் வழமையைக் எதிரிகள் எதிரிகள் கைவிட்டால் முஸ்லிம்களுக்கு சிறைபிடிக்க அனுமதி இல்லை. அவ்வாறு ஒரு தலைப்பட்சமாக முஸ்லிம்கள் கைது செய்தால் அது அத்துமீறலாக அமையும். அது தடுக்ப்பட்டதாகும்.59
இமாம் இப்னு கையிம்(ஹி. 691 – 751) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் :- நபி (ஸல்) அவர்கள் சில கைதிகளை மன்னித்து விடுதலை செய்தார்கள். வேறு சிலரை கொலை செய்தார்கள், மற்றும் சிலரிடம் கிரயம் பெற்று விடுதலை செய்தார்கள். சமூக நலனைக் கருத்திற் கொண்டு பொருத்தமான தீர்மானத்திற்கு வந்தார்கள். பத்ர் யுத்தக் கைதிகளை கிரயம் பெற்றுக் கொண்டு விடுதலை செய்தார்கள். ஹுதைபியா உடன்படிக்கை கைச்சாத்தாகிக் கொண்டிருந்த போது நபியவர்களை வஞ்சகத்தனமாக கொலை செய்ய வந்த 80 ஆயுத பாணிகளை கைதுசெய்து பின்னர் விடுதலை செய்தார்கள்.60 பனூஹனீபா கோத்திரத் தலைவர் துமாமாவைக் கைது செய்து பள்ளிவாயலில் கட்டிவைத்து பின்னர் விடுதலை செய்தனர்.61 பணவசதியற்றவர்களிற் சிலர் மதீனத்து அன்ஸாரிகளின் பிள்ளைகளுக்கு எழுதக் கற்றுக்கொடுத்துவிட்டு தம்மை விடுவித்துக்கொண்டனர்.62 பனூமுஸ்தலக் போரில் கைதியாக்கப்பட்ட ஜுவைரியாவை நபி(ஸல்)அவர்கள் அடிமை உரிமைச் சீட்டு எழுதிக் கொடுத்து திருமணம் செய்து கொண்டதுமட்டுமன்றி அத்திருமணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் ஜுவைரியாவின் கோத்திரமான பனூல் முஸ்தலக்கிலிருந்து கைதுசெய்யப்பட்ட ஆறு கைதிகளை விடுதலை செய்தார்கள்.63 64
எனவே, சுருங்க்க் கூறின் :-
- அல்குர்ஆனில்வந்துள்ள காபிகளுக்கெதிராக ஆயுதம் தூக்கிப் போராட வேண்டும் என்று கூறும் வசனங்கள் முஸ்லிம் அல்லாத அனைவருக்கும் பொதுவாவை அல்ல.
- முஸ்லிம்களைக்கருவறுக்க நாடி உடன்படிக்கைகளை மதிக்காமல் அவர்களுக்கெதுராக ஆயுதமேந்திப் போராடுவோரை மட்டுமே அவை குறிக்கின்றன.
- யுத்தம்செய்யும் போதும் அது முடிவடைந்த பின்னரும் உயர்ந்த பட்ச யுத்த தர்மத்தையும் மனிதாபிமான ஒழுங்குகளையும் கடைப்பிடிக்கும் படி இஸ்லாம் முஸ்லிம்களைப் பணிக்கிறது. இதனை தக்வா உள்ளவர்களது பண்புகளில் ஒன்றாக்க் கூட குர்ஆன் சித்தரிக்கிறது
- முஸ்லிம்அல்லாத எந்தவொருவரும் முஸ்லிம்களுடன் நல்லுறவைப் பேண விரும்பி அதன் படி நடந்துகொண்டால் அத்தகையவர்களுடன் சமாதான சகவாழ்வப் பேணுவதும் அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளைச் செய்வதும் முஸ்லிம்களது கட்டாயக் கடமையாகும்.
உசாத்துணைகள்
- அல்குர்ஆன், சூரா அத்தவ்பா-05
- அத்தவ்பா-36
- அத்தவ்பா-123
- ஸஹீஹுல் புகாரீ, கிதாபுல் ஈமான் -25, முஸ்லிம்,கிதாபுல் ஈமான்-124
- ஹுவைதி ,முவாதினூன் லா திம்மிய்யூன், பக்;: 252
- அபூசுலைமான்,சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் பக்: 172
- மேலது
- மேலது- பக்:109
- மேலது- பக்:51
- இப்னு ஹிஷாம்,ஸீரா, பாகம்-2, பக் -169-185,
- அர்ரஹீகுல் மக்தூம் , முபாரக்பூரி, பக்;-345-349
- அல்குர்ஆன்,சூராஅல்அன்பால் – 26
- இப்னு ஹிஷhம், ஸீரா, பாகம் 02, பக்கம் 214-233
- அல்குர்ஆன், சூரா அல்அஹ்ஸாப்-10-13
- சூராஅல்பகரா-217
- ஜமால் பதவி, அலாகதுல் முஸ்லிம் பிகைரில் முஸ்லிம்,
- அலமஜல்லதுல் இல்மிய்யா 06-73
- அல்குர்ஆன், சூராஅல்மும்தஹனா – 8-9
- முஸ்லிம் அல்லாதோருடனான முஸ்லிம்களது உறவின் அடிப்படைகள் பற்றி ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடாகிய ‘இஸ்லாமிய சிந்தனை’ சஞ்சிகையில் வாசிக்கலாம்.
- அபூஸஹ்ரா, அல் அலாகாதுத் தவ்லிய்யா பில் இஸலாம் – பக்: 43
- அல்குர்ஆன், சூராஅல்பகரா-256
- சூராஅல்மாஇதா-13
- சூராஅந்நூர்-54
- சூராஅத்தவ்பா-06
- ஹுவைதி – 253-254
- ஜமால் பதவி – 90
- மேலதிக விளக்கத்துக்கு, ஜமால் பதவி – 94
- ‘பித்னா’என்பது மார்க்கத்தை விட்டும் மக்களைத் திசைதிருப்ப எடுக்கப்படும் விஷமத்தனமான முயற்சிகளைக் குறிக்கும் சொல்லாகும்.
- அல்குர்ஆன், சூராஅல்பகரா – 190-192
- தப்ஸீர் இப்னுகதீர், பாகம் – 01, பக்கம் – 318
- அல்குர்ஆன்,சூராஅத்தவ்பா -05
- அஸ்ஸர்கானீ, மனாஹிலுல் இர்பான், பாகம் – 02, பக்கம் – 156,முஸ்தபா அபூஸைத், அந்நாசிக் வல்மன்சூக், பாகம் – 01, பக்கம் – 289,
- ஸரக்ஸீ, அல்புர்ஹான் பீ உலூமில் குர்ஆன், பாகம் 2, பக்கம் – 40, முஸ்தபா அபூஸைத், பாகம் – 2, பக்கம் – 508
- தப்ஸீர் இப்னு கதீர், பாகம் – 01, பக்கம் – 432
- அல்கஸ்ஸாலி, ஜிஹாதுத் தஃவா – 25-74, 89-92
- அபூசுலைமான், சர்வதேச உறவுகள், 58-60, 166-172
- கல்லாப், அஸ்ஸியாஸதுஸ் ஷரஇய்யா – 85
- ஜமால் பதவீ, பக்கம் – 75
- கல்லாப், அஸ்ஸியாஸதுஸ் ஷரஇய்யா, பக்கம் – 86
- அல்குர்ஆன், சூராஅல்பகரா-205
- அல்குர்ஆன்,சூராஅந்நம்ல்-34
- அல்குர்ஆன், சூராஅல்பகரா – 190
- தப்ஸீர் இப்னு கதீர், பாகம் – 01, பக்கம் 319
- அபூதாவூத், கிதாபுல் ஜிஹாத், -2613, அஹ்மத், பாகம் – 01, பக்கம் – 300
- ஸஹீஹ் முஸ்லிம், கிதாபுல் ஜிஹாத் – 4547
- அபூ கலீல், ஷவ்கி, அத்தஸாமுஹு பில் இஸ்லாம் – 13
- அல்காமில் பித்தாரீக், பாகம் – 02, பக்கம் – 227,
- தாரீக் தபரீ, பாகம் – 3., பக்கம் – 226
- Mohd, Elfie Nieshaem Juferi, Christian Persecution Against Muslims, WWW. bismiKaallahuma. org.12/11/2004 P – 02, Qut : F.Turner, Beyond Geography (New York, 1980)
- lbid, P-5, Qtn, August C.Krey, The First Crusade : The Accounts of Eye Witnesses & Participants (Gloucester, Massachu setts : Peter Smith , 1958)
- தஸுகி – பக் :23
- A literary History of the Arabs, Renold A. Nicholson, P-441, Also see for the details: A Short History of Saracens, P-560-561 – முஸ்லிம்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு பார்க்க, Arnold, P – 146, Mahboobul Islam, P – 339-340
- முஸ்தபா ஸிபாயி,மின்ரவாஇஇ ஹளாரதினா – 151
- அல்குர்ஆன், சூராஅல்பகரா – 190
- தஸுகி – 21,22, மேலதிக விபரங்களுக்கு: அபூ ஸஹ்ரா – 97-106
- அஸ்ஸவ்கானீ, நைலுல் அவ்தார், பாகம் – 07, பக்கம் – 260-261
- அல்குர்ஆன், சூரா அத்தவ்பா-06
- சூராஅல்இன்ஸான்-09
- தப்ஸீர் இப்னு கதீர், பாகம் – 04, பக்கம் – 2963
- தபரானீ, மஜ்மஉஸ் ஸவாஇத் – 10007
- அல்குர்ஆன் இதனைப் பின்வருமாறு கூறுகிறது : ‘நீங்கள் (யுத்தத்தில் சிலரை) கொன்றுவிட்டால் ஏனையவர்களை கைதுசெய்து பின்னர் அவர்களை ஒன்றில் தயாள மனதுடன் விடுதலை செய்யுங்கள். அல்லது கிரயம் பெற்று விடுதலை செய்யுங்கள்’ (அல்குர்ஆன், சூரா முஹம்மத் – 05)
- அபூஸஹ்ரா – 114-116
- அஹ்மத், பாகம் – 03, பக்கம் – 122, 124, அபூதாவூத் – 2688
- ஸஹீஹுல் புகாரீ, பாகம் – 01, பக்கம் – 462, ஸஹீஹ் முஸ்லிம் – 1764
- முஸ்னத் அஹ்மத், பாகம் – 01, பக்கம் – 247
- முஸ்னத் அஹ்மத், பாகம் – 06, பக்கம் – 277, அபூதாவூத் – 3931
- இப்னு கையிம், ஸாதுல் மஆத், பாகம் – 02., பக்கம் – 105,106