நபி(ஸல்) அவர்களது காலத்தில் குறைஷியர்கள் ஆயுத ரீதியாக தோல்விகளை கண்ட போது முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்த சிலரை முஸ்லிம்களுக்கெதிராகத் தூண்டிவிட்டார்கள். அவர்கள் “முனாபிக்குகள்” என குர்ஆனில் அழைக்கப்பட்டார்கள்.
ஆனால், ஸஹாபாக்களில் உண்மையாகவே விசுவாசம் கொண்டிருந்த எவரும் இந்த வேலையைச் செய்யவில்லை. மிகவும் இக்கட்டான நிலையிலும் தமது சமூகத்தை அவர்கள் பிரியவுமில்லை, காட்டிக் கொடுக்கவுமில்லை.
தபூக் யுத்தத்திற்குப் போகாமல் பின்வாங்கிய சிலரை நபி(ஸல்) அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தார்கள். இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டார்கள். அவர்கள் தத்தமது மனைவிமாரைக் கூட விட்டு விலகி இருக்க வேண்டும் என்பது நபிகளாரின் கட்டளையாக இருந்தது. எவரும் அவர்களுடன் கதைக்கவுமில்லை, சிரிக்கவுமில்லை.
அப்படியான ஒரு நாளில் கஸ்ஸானிய நாட்டு அரசனின் கடிதமொன்றை எடுத்துக் கொண்டு ஷாம் தேசத்து விவசாயி ஒருவர் ஒதுக்கி வைக்கப்பட்ட கஃப் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் இரகசியமாக வந்தார். அக்கடிதத்தில் அரசர் “உனது தோழர் உன்னை ஒதுக்கி வைத்திருப்பதாக எனக்கு தகவல் கிட்டியுள்ளது. பூமியில் எவரையும் கடவுள் அவமானத்தோடு வாழுவதற்காகப் படைக்கவில்லை. கைவிட்டு விடவுமில்லை. எனவே, எம்மோடு இணைந்து கொள்வீராக. உமக்குரிய உதவிகளை நாம் செய்வோம்” என எழுதப்படிருந்தது.
அதனைப் பார்த்த கஃப்(ரலி) அவர்கள் இது ஈமானுக்கான சோதனை எனக் கூறி விட்டு அந்த கடிதத்தை சுருட்டி அடுப்பில் போட்டு சுட்டெரித்துவிட்டார்கள்.(ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)
இதுதான் எமது முன்னோரது கொள்கைப் பிடிப்பு. அங்கு சுயநலம், தனிப்பட்ட குரோதம் என்பன வேலை செய்யவில்லை.
அலி(ரலி) அவர்களுக்கும் முஆவியா(ரலி) அவர்களுக்கும் முரண்பாடுகள் நிலவின. அவ்விருவரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரு வேறுபகுதிகளை ஆட்சி செய்து வந்தார்கள். அப்போது இவ்விருவருக்குமிடையிலான முரண்பாட்டை சந்தர்ப்பமா கப் பயன்படுத்திய ரோம நாட்டு அரசன் முஆவியா(ரலி) அவர்களது எல்லையில் வந்து படைகளைக் குவித்த நிலையில் முஆவியா(ரலி) அவர்களுக்கு தூது அனுப்பி அலி(ரலி) அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க உதவுவதாகக் கூறினான். அப்போதுகடும் சினம்கொண்ட முஆவியா(ரலி) அவர்கள் “நீ உனது படைகள் எடுத்துக் கொண்டு உனது நாட்டுக்குத் திரும்பிப் போகாவிட்டால்
நான் எனது சகோதரர் அலியுடன் உனக்கு எதிராக சமாதானம் செய்து கொண்டு உன்னை உனது சகல பிரதேசங்களில் இருந்தும் வெளியேற்றுவேன். அப்போது உனக்கு முன்னால் விரிந்துள்ள இப்பூமியை உனக்கு நான் சுருக்கிப் போடுவேன்.” என்றார்கள்.
அது கேட்ட ரோம நாட்டு அரசன் போராட்டத்தை கைவிட்டதுடன் சமாதான ஒப்பந்தத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தான். (இமாம் இப்னு கதீர், அல்பிதாயா வந்நிஹாயா,8/119, முஹிப்புத்தீன் அல்கதீப், அல்அவாசிம் மினல் கவாஸிம்)
எனவே, எமக்குள் நாம் எவ்வளவும் முரண்படலாம். ஆனால், முரண்பாடுகளில் ஒழுக்கம் வேண்டும். அது அறிவையும் இக்லாஸையும், ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். உள்ளார்ந்த அன்பு, சகோதரத்துவம், பக்குவம் என்பது தான் முஸ்லிம் சமூகத்தின் கட்டுக்கோப்பின் ரகசியமாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பரஸ்பர நேசம், கிருபை செய்தல்,பரிவு காட்டல் ஆகியவற்றில் இறை நம்பிக்கையாளர்களின் உவமை, ஓருடலைப் போன்றதாகும். அதில் ஓர் உறுப்பு நோவுற்றால் அதற்காக எல்லா உறுப்புகளும் சஞ்சலம் அடைகின்றன”. (நூல்: புகாரி, முஸ்லிம்)
மேலும் அவர்கள், நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் போட்டியாக விலைகளை உயர்த்திக் கேட்க வேண்டாம். ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ஒருவரையொருவர் புறக்கணித்து நடக்க வேண்டாம். உங்களில் சிலர் இன்னும் சிலரது வியாபாரத்திற்கெதிராக வியாபாரம் செய்ய வேண்டாம். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள். ஒரு முஸ்லிம் இன்னோரு முஸ்லிமின் சகோதரனாவான். எனவே, ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு அநீதியிழைக்கமாட்டான். அவனைக் கைவிடமாட்டான். அவனிடம் பொய்யுரைக்க மாட்டான். அவனை இழிவாகக் கருத
மாட்டான். ‘இறையச்சம் இங்கே உள்ளது’ என்று நபியவர்கள் மூன்று தடவைகள் தனது நெஞ்சைத் தொட்டுக்காட்டினார்கள்.
தொடர்ந்தும் அவர்கள்:- ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை இழிவுபடுத்துவதே அவன் தண்டனை பெறுவதற்கு போதுமான தீய செயலாகும். ஒவ்வொரு முஸ்லிமின் இரத்தமும் உடமையும் மானமும் அடுத்த முஸ்லிமின் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் அவர்கள் “ஓர் இறை நம்பிக்கையாளன் மற்றோர் நம்பிக்கையாளனுக்கு ஒரு பகுதி மற்றொரு பகுதியோடு இணைந்து இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தைப் போன்றாவான்” (புகாரி, முஸ்லிம்) என்றார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் “(நிராகரிப்பவர்களில் சிலர் சிலருக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். நீங்கள் அப்படி செய்யாத போது (அதாவது உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளுக்கு மத்தியில் நட்புப் பாராட்டி ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்காத போது) உலகில் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.”(8:73) எனக் கூறுகிறான்.
ஆகவே, தனிப்பட்ட குரோதங்களுக்காக இல்லாத பொல்லாத தகவல்களை சோடித்து ஒரு தனிநபரைப் பற்றி முறைப்பாடுகளைத் தெரிவிப்பது உண்மை முஸ்லிம்களது பண்பல்ல.
உண்மையான குற்றவாளி காட்டிக் கொடுக்கப்படுவதற்கும் தனிப்பட்ட கொள்கை முரண்பாட்டுக்காக ஒருவர் மாட்டி வைக்கப்படுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடுண்டு.
முதலாவது தேசபக்தி அல்லது தீமையைத் தடுப்பதற்கான முயற்சி என்றும் இரண்டாவது கோழைத்தனம் அல்லது முனாபிக் தனம் என்றும் கூறப்படும்.
சர்வதேசங்களிலும் உள்நாட்டிலும் முஸ்லிம் சமூகம் வீழ்ச்சி கண்டிருப்பதற்கு இரண்டாவது விடயம் காரணமாகும். அல்லாஹ்வின் அருள் கிட்ட வேண்டுமாயின் முரண்பாடுகள் வந்தாலும் மிகுந்த நிதானத்துடனும் அல்லாஹ்வைப் பயந்தும் நடந்து கொள்ள வேண்டும்.




