இஸ்லாத்தில் அறிஞர்களுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது.இதற்கு பின்வரும் குர் அன் ஹதீஸ் வசனங்கள் சிறந்த ஆதாரங்களாகும்:-
- “அறிஞர்கள் மட்டுமே அல்லாஹ்வை பயப்படுவார்கள்” (அல்குர்ஆன்)
2.”யாருக்கு அறிவுஞானம் வழங்கப்படுகிறதோ அவர் மிகுந்த பாக்கியம் வழங்கப்பட்டுள்ளவராவார்.” (அல்குர்ஆன்)
- “அல்லாஹ் யாருக்கு நன்மை செய்ய விரும்புகிறானோ அவருக்கு தீனில் ஆழமான அறிவை வழங்குவான்” (அல்குர்ஆன்)
- “அல்லாஹ்வும்,அவனது மலக்குகளும் வானத்திலும் பூமியிலும் வாழ்பவர்களும், தன் பொந்துகளில் உள்ள எறும்பும், கடலில் உள்ள மீனும் கூட மக்களுக்கு நல்லனவற்றை கற்றுக் கொடுப்பவருக்கு பிரார்த்தனை செய்கின்றன”. (ஹதீஸ்)
- “அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தமக்குப் பின்னர் தங்கத்தையோ வெள்ளியையோ அனந்தரச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் அனந்தரமாக விட்டுச் சென்றது அறிவைத் தான். எவர் அதனை எடுத்தாரோ அவர் மிகுந்த பாக்கியத்தைப் பெற்றார்.” (ஹதீஸ்)
6.“எமது சமூகத்தில் உள்ள மூத்தவர்களை மதிக்காதவர், சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாதவர், அறிஞர்களின் உரிமையை ஒப்புக்கொள்ளாதவர் என் உம்மத்தில் உள்ளவர் அல்லர்” (ஹதீஸ்)
- ‘முதுமை அடைந்த முஸ்லிமை கௌரவிப்பதும், குர்ஆனைத் தாங்கி அதில் அளவுக்கு மீறாமலும் அலட்சியம் செய்யாமலும் இருப்பவரை கௌரவிப்பதும், நீதி மிக்க ஆட்சியாளரை மதிப்பதும் அல்லாஹ்வை மதிப்பததில் அடங்கும்”.(ஹதீஸ்)
- நபி(ஸல்) அவர்கள் இந்த அறிஞர்கள் எத்தகைய பணிகளை மேற்கொள்வார்கள் என்பது பற்றி கூறும் போது “ஒவ்வொரு தலைமுறையிலும் நம்பகத்தன்மை கொண்டவர்கள் இவ்வறிவைத் தாங்கிக் கொள்வார்கள். அதில் அளவுக்கு மீறியவர்களின் மாற்றங்களையும் பொய்மையானவர்களின் பிழைகளையும் அறியாமையினரின் தவறான விளக்கங்களையும் அவர்கள் நீக்குவார்கள்.” (அல்-பைய்ஹகீ) என்றார்கள்.
அறிஞர்களது மகிமை பற்றிய கூற்றுக்கள்:-
இப்னு அல்-கைய்யிம்(ரஹ்) அவர்கள்:- ‘இஃலாமுல் முவக்கிஈன்’ என்னும் நூலில்“அறிஞர்கள் பூமியில் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போன்றவர்கள்; இருளில் தட்டுத்தடுமாறுபவர்களுக்கு அவர்கள் வழிகாட்டிகளாக இருக்கின்றனர். மக்களுக்கு அவர்களது தேவையானது உணவையும் பானத்தையும் விட அதிகமாகும்.”என்றார்கள்.
இக்ரிமா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அறிஞரைத் துன்புறுத்த வேண்டாம். யார் அறிஞரைத் துன்புறுத்துகிறாரோ அவர் நபியையே துன்புறுத்துகிறார்.”
அறிஞர்கள் இரண்டு வகைப்படுகிறார்கள்:
- அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் சுன்னத்தையும் பின்பற்றி, பித்அத் மற்றும் மூடநம்பிக்கைகளை அகற்றுபவர்கள். இவர்கள் ‘ரப்பானிய்யூன்கள்’ உண்மையான அறிஞர்கள்.
- தங்கள் அறிவை உலக ஆசைக்காக விற்று, ஆட்சியாளனின் ஆசையைப் பின்பற்றிச் செல்லுபவர்கள் – இவர்கள் ‘உலமாஉஸ் ஸூஇ'(தீய அறிஞர்கள்).
மோசமான அறிவாளிகள் யார்?
ஆனால் ஒருவர் அறிவை சுமந்திருக்கிறார் என்பதற்காக மட்டும் அவருக்கு மகிமை வந்துவிடாது.அவரது மகிமை அவர் அறிவின் அடிப்படையில் செயல்படுவதை பொறுத்தது. ஒருவரிடம் அறிவு வந்தால் அதனோடு சேர்ந்து அடக்கம், பணிவும், சமூக் கவலை, தியாகம் என்பன வர வேண்டும்.
உலகத்தில் மிகப்பெரிய அறிவாளியாக சைத்தான் இருந்தும் அவனை அல்லாஹ் சபித்து தனது அருளில் இருந்து துரத்தி விட்டான். அவனது அகம்பாவமே அதற்கு காரணமாகும். காரூனுக்கு அல்லாஹ் மிகப்பெரிய அறிவுஞானங்களையும் சொத்துக்களையும் வழங்கியிருந்தான். ஆனால் அவன் தனது அறிவையும் சொத்துக்களையும் வைத்து பெருமையடித்ததனால் பூமிக்குள் அவனை அல்லாஹ் இழுத்து விட்டான்.
இமாம் அல்-கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “உம்மத்தின் மிகப் பெரிய பேராபத்து தீய அறிஞர்களே; அவர்கள் மார்க்க அறிவை உலக ஆசைக்காக பயன்படுத்துகிறார்கள், தங்கள் விருப்பங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான கருவியாக்குகிறார்கள். இவர்களே உம்மத்தின் அழிவின் காரணம்.”
இப்னு அல்-கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “தீய அறிஞர்கள் சொர்க்கத்தின் வாயில்களில் உட்கார்ந்திருப்பார்கள். தங்கள் சொற்களால் மக்களை அழைப்பார்கள், ஆனால் தங்கள் செயலால் நரகத்திற்கே அழைத்துச் செல்வார்கள். அவர்களுக்கு செவிமடுக்காதீர்கள். அவர்கள் எதன் பால் அழக்கிறார்களோ அது உண்மையாக இருந்தால் அவர்கள் முதலில் அதைப் பின்பற்றியிருப்பார்கள். அவர்கள் வெளித் தொற்றத்தில் வழிகாடிகள்.ஆனால், அவர்கள் வழிப்பறிக் கொள்ளைக்
காரர்கள்” (அல்-ஃபவாயித், பக்கம் 61)
தீய அறிஞர்கள் குறித்து அல்லாஹ் இரண்டு பயங்கரமான உதாரணங்களை கொடுத்துள்ளான்:
- நாய் போன்று மூச்சுவிடுபவர்.
2.புத்தகங்களை சுமக்கும் கழுதை போன்றவர்.
அல்லாஹ் கூறுகிறான்: “தௌராத்தைச் சுமந்தும் அதை நடைமுறைப்படுத்தாதவர்கள், புத்தகங்களைச் சுமக்கும் கழுதையைப் போன்றவர்கள்.” (ஜுமுஆ:5)
“நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் – அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான். நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது”. (அல்அராஃப்:176)
தஃப்ஸீர் அல்-மனாரில் இந்த வசனத்திற்கு பின்வருமாறு விளக்கம் தரப்பட்டுள்ளது: இது அல்லாஹ்வின் வசனங்களை அறிந்தும் அதைப் பின்பற்றாத அறிஞர்களுக்குக் கூறப்பட்ட உவமையாகும். அறிவு இருந்தும் செயலால் எதிராக நடந்ததால், அவர்கள் அந்த அறிவை இழந்தனர். பாம்பு தனது தோலை உரித்துவிட்டு விலகுவது போல அவர்கள் அறிவிலிருந்து விலகிவிட்டார்கள்.
இவை அனைத்தும் அறிவின் பொறுப்பு எவ்வளவு பெரியது என்பதை எடுத்துக்காட்டுகிறன.உண்மையான அறிஞர்கள் – அறிவைப் பெற்றும் அதன்படி வாழ்ந்தும், சமுதாயத்தில் நன்மையைப் பரப்பி, பொய்யை மறுத்தும் நிற்பவர்களே.
ஆனால் தீய அறிஞர்கள் – உலக ஆசைக்காக அறிவை விற்று, உண்மையை மறைத்து, பொதுமக்களை வழிபிறளச் செய்பவர்களே.
தீய அறிஞர்கள் குறித்து எச்சரிக்கை:-
அல்லாஹ் கூறுகிறான்: “ஈமான் கொண்டவர்களே! பல யூத அறிஞர்களும் கிறிஸ்தவ முனிவர்களும் மக்களின் செல்வத்தை அநியாயமாக உண்ணுகிறார்கள், மேலும் அல்லாஹ்வின் வழியிலிருந்து தடைக்கிறார்கள்.” (அத்-தௌபா:34)
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறுனார்கள்:-
“மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, ‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?’ என்று கேட்பார்கள்.
அதற்கு அவர், ‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்’ என்று கூறுவார்.” (புஹாரி: 3267)
சில அறிஞர்கள், அல்லாஹ் அவர்களுக்கு அறிவை அளித்தும், அதை உலக ஆசைக்காக ஆட்சியாளர்களின் முன் விற்றுவிடுகிறார்கள். அவர்கள் ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கேற்ப குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் திரித்து, சில நேரங்களில் புகழ்ந்து, சில நேரங்களில் தவறான விளக்கங்களை வழங்குகிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் பொதுமக்களால் முன்மாதிரிகளாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் இரட்டை முகம் – சொல்லில் உண்மை பேசினாலும் செயலால் மறுப்பது – அறிவின் மரியாதையைச் சமுதாயத்தில் கீழ்த்தரமாக்கியது.
அறிவை மறைப்பவர்களுக்கு சாபம்:-
அல்லாஹ் கூறுகிறான்:“நாங்கள் வெளிப்படையாகக் காட்டிய விளக்கங்களையும் வழிகாட்டுதலையும், அதைப் வேதத்தில் மக்களுக்காக விளக்கிக் காட்டிய பின்பும் மறைத்தவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்.” (பகரா:159)
உண்மையான அறிஞர்கள் – அறிவை ஏந்தி, அதன்படி செயல்பட்டு, அதை வெளிப்படையாகச் சொல்லுபவர்களே என்பது இதிலிருந்து தெரிகிறது.
தீய அறிஞர்களின் அடையாளங்கள்:
1.அறிவின் நெறிமுறையை பின்பற்றாமல், உலக ஆசைக்காகச் செயல்படுவது.
2.பொய்யை மறுப்பதற்குப் பதிலாக அதனை நியாயப்படுத்துவது.
3.பதவி, செல்வம், புகழ் போன்றவற்றுக்காக அறிவை விற்பது.
இப்படிப்பட்டவர்கள் இஸ்லாத்திற்கும் அறிஞர்களின் மரியாதைக்கும் தீங்கு விளைவிக்கிறார்கள். இறுதியில் அவர்கள் முகமூடி கிழிக்கப்படுகிறது, மக்களிடம் இருந்த நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள் என கலாநிதி முகம்மது ஃபாரூக் நப்ஹான் கூறுகிறார்.
எனவே அறிவைச் சுமந்திருப்பது பெரும் பாக்கியமாக இருப்பது பொலவே அறிவுகுரிய கடமைகளைச் செய்யாமலிருப்பது பெரும் பாவமும் சமூகத் துரோகமுமாகும்.
கலங்கரை விளக்குகளான உலமாக்கள் தமது பணியின் முக்கியத்துவம் கருதி அல்லாஹ்வுக்குப் பயந்து நடப்பது அவசியமாகும்.
அறிஞர்கள் தமக்கு இருக்க வேண்டிய பண்புகளை அணிகலன்களாகக் கொண்டு, தமது பணியை அல்லாஹ்வுக்குப் பயந்து,மிகச் சிறப்பாக நிறைவேற்றுகின்ற பொழுது உலகில் எவருக்குமே கிடைக்காத மரியாதையும் கண்ணியமும் கிடைப்பதுடன் மறுமையில் வேறு எவருக்கும் கிடைக்காத அந்தஸ்தும் கௌரவமும் கிடைக்கும். அதேபோன்று அவர்கள் தமது பணியில் பொடுபோக்காக இருந்து அறிவுக்கு மாற்றமான பண்புகளைக் கொண்டிருந்தால் அவர்களுக்கு ஏனையவர்களை விடவும் அதிகமான தண்டனை கிடைக்கும்.
அல்லாஹ் எம் அனைவரையும் அவனது அருள் கண் கொண்டு நோக்கி, எமது அறிஞர்கள் அவனது மார்க்கத்தை பாதுகாக்க கூடிய உத்தமர்களாக வாழ்வதற்கு பாக்கியம் செய்வானாக!




