முஸ்லிம் சமூகமும் ஒரு மேல்சபை (சூரா) வின் உடனடித் தேவையும்

இலங்கை வாழ் முஸ்லிம்களது சன்மார்க்க விவகாரங்களில் இறுதித் தீர்மானமெடுக்கும் உயர் சபையாக அ.இ.ஜ.உ இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் மார்க்க விடயங்களில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மனித வாழ்வுடன் நாட்டு விவகாரங்களுடன் சம்பந்நப்பட்ட விவகாரங்கள் அனைத்திலும் அவர்களுக்குத் தெளிவும் அனுபவமும் இருக்கும் என எதிர்பார்ப்பது முறையல்ல.

எனவே, சமூகத்தில் தோன்றும் சகல துறைப் பிரச்சினைகளிலும் உலமா சபையே முடிவெடுக்க வேண்டும் எனக் கூறமுடியாது. ஜெனிவாவுக்கு உலமாக்கள் போவது நல்லதா அல்லது பொருத்தமில்லையா. ஹலால் சான்றிதழ் விநியோகத்தில் கையாளப்பட்ட அணுகுமுறைகள் சரியா பிழையா, இலங்கை முஸ்லிம்களது நடைமுறை அரசியல் ஒழுங்கு எப்படி அமைய வேண்டும் வட்டியில்லா வங்கிகளை ஸ்தாபிப்பதில் எதிர்நோக்கப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் யாவை? இவற்றை அமுலாக்கும் விதம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளில் அவர்களுக்கு தனியாக முடிவுகளை எடுக்க முடியாது. துறைசார் வல்லுனர்கள் தமது உதவிகளையும் ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். வேறு வார்த்தையில் கூறுவதாயின் அவர்கள் மாத்திரம் முடிவுகளை எடுக்காமல் ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும்.

அந்தவகையில் கல்வி, அரசியல், சட்டம், உளவியல். பொருளாதார முயற்சிகள், மீடியா, தொழில்நுட்பம், கலை இலக்கியம் போன்ற துறைகளில் இருப்பவர்களை உள்ளடக்கிய ஒரு மேல்சபை இலங்கை முஸ்லிம் சமூக விவகாரங்களை கையாள்வதற்கும் திட்டங்கள் வகுப்பதற்கும் அவ்வப்போது எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகளுக்கு பின் தீர்வுகளாகும். இது ஒரு அபிப்பிராயம் மாத்திரமே. இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்கு அப்பால் தனித்தனியான துறைகளில் நிபுணத்துவம் கொண்ட அமைப்புக்கள் உள்ளன.

சில உதாரணங்களாவன:

  1. தஃவா மற்றும் ஆன்மீக இயக்கங்கள்: தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத்கள், ஜமாஅதுஸ்ஸலமா, தரீக்காக்கள்
  2. அரசசார்பற்ற சமூக சேவை அமைப்புக்கள்: வாமீ, ஷபாப், YMMA, IIRO, IRO, CIS, NIDA, FRCS, HIRA
  3. முஸ்லிம் மீடியா போரம் போன்ற மீடியாத்துறைசார் அமைப்புக்கள்
  4. சட்டத்துறையில் அனுபவமும் ஆற்றலுமுள்ள முஸ்லிம் நீதிபதிகள், சட்டத்தரணிகளைக் கொண்ட முஸ்லிம் சட் டத்தரணிகள் சங்கங்கள்.
  5. முஸ்லிம் வைத்தியர்கள்.
  6. பல்கலைக்கழங்களிலும் அரசசார் தனியார் பாடசாலைகளிலும் பணிபுரியும் விரிவுரையாளர்களும் ஆசிரியர்களும்.
  7. விஞ்ஞான தொழிநுட்பத் துறைகள் நிபுணர்கள்
  8. அரசியல் துறைசார்ந்தவர்கள்.

இவை உதாரணங்கள் மாத்திரமே. அதேவேளை அமைப்பு ரீதியாகவும் சிலர் செயல்படுவதுபோல் தனித்தனியாகவும் பலர் செயற்படுகின்றார்கள். இவர்களுக்கு மத்தியில் மார்க்க உணர்வும் சமூகப் பற்றும் பொண்ட பல்லாயிரக் கணக்கானோர் உள்ளனர். இவர்கள் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும் போது உரையாடுகையிலும் மின்னஞ்சல்களிலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் போன்றவற்றிலும் வெளியிடும் கருத்துக்களைப் பார்க்கையில் அவை பயன்மிக்கவையாக அனுபவங்களின் அடியாக வெளிவருபனவையாக இருக்கின்றது. எனவே, இவர்களது அறிவு, அனுபவம் என்பனவற்றை கேட்டறிவதும் அலசி ஆராய்வதும் காலத்தின் தேவையாகும்.

அந்தவகையில், இலங்கை முஸ்லிம்களது எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுக்கவும் அவ்வப்போது எழும் சிக்கல்களை தீர்க்கவும் ஒரு மேலாண்மை மிக்க ஒரு சூரா சபை அமைக்கப்பட வேண்டும். அதற்கான பிரதிநிதிகள் நாம் மேலே கூறிய சகல அமைப்புக்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டும். அந்த சபை உதாரணமாக மாதத்திற்கு ஒரு தடவை கூட்டத்தை நடத்துவதோடு சகல கண்ணோட்டங்களையும் உள்வாங்கும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் இருத்தல் அவசியமாகும். அந்தக் குழுவுக்கு 5 பேர் கொண்ட ஒரு கூட்டுத் தலைமை இருந்து முடிவுகளைப் பெறவேண்டும். இதற்கான சட்டக்கோவை தயாரிக்கப்பட்டு அதற்கமைய உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்.

இத்தகைய ஒரு ஒழுங்கமைப்புக்கு அவசரமாக நம் சமூகம் வராத போது அதிகமான பிழைகள் இடம்பெறலாம். தனி நபர்களதும் இயக்கங்களும் சுயமுடிவுகளை எடுத்து அதன்மூலம் முழு சமூகமும் பாதிப்படையலாம்.

பல அபிப்பிராயங்களின் சங்கமாக அமையும் சூரா முறைபற்றி அல்லாஹ் கூறும்போது “அவர்களது பண்பு ஆலோசனை சொல்வதாகும்’ என்று ஓர் இடத்திலும் “அவர்களிடம் (நபியே) நீர் ஆலோசனை செய்வீராக என்று வேறு ஓர் இடத்திலும் கூறுகிறான். வஹி இறங்கிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் கூட தன்னை விட அறிவில் குறைந்த சகாபாக்களிடம் ஆலோசனை கேட்டார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்?

சூராவில் அல்லாஹ்வின் அருள் உண்டு. அதில் சமூகத்தின் ஏகோபித்த கருத்து பிரதிபலிக்கும். தவறுகள் குறைவாக இடம்பெறும். Collective Responsibility பொதுவான வகைகளில் இருக்கும் இதுபற்றி கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top