Professor Rezvi Sheriff

பேராசிரியர் டாக்டர் ரிஸ்வி ஷெரீஃப் அவர்கள் மறைவு.

1948 நவம்பர் 4 ஆம் தேதி பிறந்த பிறந்த ரிஸ்வி ஷரீஃப் தனது 78 ஆம் வயதில் 30.03.2026 ஆம் திகதி வபாத்தானார். அவர் (MBBS, MD, FRCP, FRACP, FRCPE, FCCP, FNASSL, FSLCGP) ஆகிய மருத்துவத் துறையின் உயர் பட்டங்களை பெற்றவராவார்.

அவர் இலங்கையின் சிறந்த கல்வியாளர் மற்றும் மருத்துவ நிபுணர்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவப் பிந்தையக் கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும், மூத்த மருத்துவப் பேராசிரியராகவும், மருத்துவத் துறைத் தலைவராகவும் அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

அத்துடன், General Sir John Kotelawala Defence University மற்றும் இலங்கை தேசிய வைத்தியசாலையிலும் மூத்த பேராசிரியராக சேவையாற்றினார்.

அவரை இலங்கையின் மருத்துவ சமூகம் “நெஃப்ராலஜியின் தந்தை” எனக் குறிப்பிடுகிறது. நெஃப்ராலஜி என்பது சிறுநீரக நோய்களை ஆய்வு செய்து சிகிச்சையளிக்கும் மருத்துவத் துறையாகும். Western Hospital 1984 ஆம் ஆண்டு அவர்களால் நிறுவப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டமை அவரது சேவைகளில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.

தொழில்முறை சாதனைகளைத் தாண்டி, அவர் சிறந்த மார்க்கப்பற்றுக் கொண்டவராக காணப்பட்டார். குறிப்பாக தப்லீக் ஜமாஅத்துடன் அவரது உறவு பலமாக காணப்பட்டதுடன் அவ்வப்போது ஜமாஅத்திலும் அவர் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். நற்குணம் கொண்ட, ஆழ்ந்த சிந்தனையுடைய, தூரநோக்குக் கொண்ட எளிமையான மனிதராக அவர் இருந்ததுடன் புகழை நாடாது, தாழ்மையுடன் சமூகத்திற்குச் சேவை செய்த அமைதியான உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தார்.

தென் மாகாணத்தின் அகுரஸ்ஸை பிரதேச போர்வை என்ற பாரம்பரிய கிராமத்தில் பிறந்த அவர் சிறுவயதில் கல்விக்காக கொழும்பு பகுதியை வந்தடைந்தாலும் தனது கிராமத்தை அவர் என்றும் மறக்கவில்லை. அங்குள்ள ஏழை எளியவர்களுக்கு தொடர்ந்து உதவிகளைச் செய்து வந்தார். 2003 ஆண்டு போர்வைப் பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து பல வைத்தியர்களை அழைத்து வந்து அங்கு இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தி இருக்கிறார்.

அவர் தனது பிறந்த ஊரில் 2003ல் ஓர் ஹிப்ளு மதரஸாவை நிர்மாணித்து 2009 ஆம் ஆண்டு அதனை ஆரம்பித்து இன்றுவரை தனது செலவில் நடத்திக் கொண்டிருக்கிறார். அங்கு ஹிப்ள் மதரஸாவுடன் குர்ஆன் மதரஸா ஒன்றும் இயங்கி வருகிறது. அதன் அங்குரார்ப்பண நிகழ்வுக்காக என்னையும் அழைத்திருந்தமையை நான் நினைவு கூறுகின்றேன்.

அவரது ஊரில் கல்வித்துறையில் பின்னடைந்திருந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களையும் அவ்வப்போது வழங்கி வந்தார். சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக ஊரைச் சேர்ந்தவர்கள் அவரை நாடுகின்ற சந்தர்ப்பத்தில் விசேட கழிவுகளுடன் கூடிய கட்டணங்களையே அவர் அறவிட்டதாக அறிய கிடைக்கிறது.

சமூகத்தின் மீதும் எதிர்காலத் தலைமுறைகளது உருவாக்கத்திலும் அவர் கொண்டிருந்த அக்கறை, கல்வியின் முக்கியத்துவத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தியதிலேயே வெளிப்பட்டது. தனக்காக மட்டும் அல்லாமல், தனது குடும்பத்திற்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டார்.

மருத்துவத் துறைக்கான அவரது சேவை அளவிட முடியாதது. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அவர் வழங்கிய வழங்கிய சிகிச்சையும், பேராசிரியராக அவர் பகிர்ந்த அறிவும், அவரது கருணையும் தாராள மனப்பான்மையும் என்றென்றும் சான்றுகளாக நிலைத்திருக்கும். இத்தகைய நற்செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவரது நற்செயல்களின் தராசில் மிகுந்த பங்கு வகிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

சிக்கலான காலங்களில் நீதி நிலைநாட்டத் துணிந்து குரல் கொடுத்தார். அவரது தைரியத்தையும், முஸ்லிம் சமூகத்தைப் பாதித்த விடயங்களில் அவர் வெளிப்படுத்திய அக்கறையையும் குறிப்பாக பலவந்தமாக முஸ்லிம்களது ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்ட பொழுது தனது கடுமையான எதிர்ப்பை ஆதாரங்களோடு அவர் முன்வைத்ததனையும் நாம் துஆக்களோடு நினைவுகூருகிறோம்.

தேசிய சூரா சபையின் பொதுச் சபை அங்கத்தவராக இருந்த அவர் அதனை வளர்ப்பதற்கு பணரீதியாக உதவி செய்தார்.முஸ்லிம் சமூகத்தில் ஒரு சாரார் தடுப்பூசி ஏற்றக்கூடாது என்ற கருத்தை முன்வைத்த பொழுது சூரா சபை கூட்டிய ஆலோசனை மன்றத்துக்கு அவர் உட்பட வைத்திய நிபுணர்களான மூத்த வைத்தியர் டாக்டர் அன்வர் ரஸீன், மகப்பேற்று மருத்துவர்களான பேராசிரியர் அக்பர், பேராசிரியர் ரிஷாட், டாக்டர் ஸைபுல் இஸ்லாம் போன்றோர் சமூகம் தந்ததுடன் கலந்துரையாடலின் பின்னர் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய ஆவணத்திற்கும் அவரும் ஏனைய வைத்தியர்களும் தமது ஒப்புதலை வழங்கினார்கள்.

அல்லாஹ் அவர்களின் குறைகளை மன்னித்து, அவருக்கு பிர்தெளஸின் உயர்ந்த நிலையை அருளி, அவர் செய்த சேவைகளை நிலையான நற்செயல்களாக ஏற்றருளுவானாக.

அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையையும் வலிமையையும் வழங்குவானாக.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top