இதுவரை அன்னளவாக 40,000 பாலஸ்தீனர்களைக் கொன்று, 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பேரவலத்தை அரங்கேற்றியுள்ள இஸ்ரேல் மீது இப்போது மட்டும் ஏன் ஈரான் தாக்குதலை தொடுக்க வேண்டும்? பாலஸ்தீனர்கள் மீது ஈரானுக்கு உண்மையான அக்கறை இருந்தால் இப்படி ஏன் இவ்வளவு கால மெளனம்?சிரியாவிலுள்ள தனது தூதுவராலயத்தின் மீதான தாக்குதலுக்கு பழிவாங்குவது தான் நோக்கமாயின் பாலஸ்தீன மக்கள் மீது அக்கறையில்லையா?அது சுயநலமில்லையா?இஸ்லாமிய சகோதரத்துவம் எங்கே? இவ்வளவு அழிவுகள் நடக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தது ஏன்?
ஏனைய அரபு நாட்டு ஆட்சியாளர்கள் பயந்தாங் கொள்ளிகள், கோழைகள், அமெரிக்க செல்லப் பிள்ளைகள் என்பது ஈரானின் கருத்தாக இருப்பதாயின் இவ்வளவு காலமும் வாய்மூடி, வீராப்புப் பேசிக்கொண்டிருந்தது எதற்காக?
ஈரானுக்கு அகன்ற, பாரசீக, ஷீஆ சாம்ராஜ்ய கனவு உள்ளது. அதனை அடைவதற்காகவே ஷீயாக்களான ஹூதீகள் மற்றும் ஹிஸ்புல்லாக்களை ஈரான் கையாட்களாக வைத்திருக்கிறது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. அப்படியாயின் ஷீஆ அல்லாத முகாமைச் சேர்ந்தவர்கள் – அவர்கள் சவூதி எகிப்து ஜோர்தான் போன்ற நாடுகளது ஆட்சியாளர்களாகவோ புத்திஜீவிகளாகவோ இருக்கலாம் – இந்த அகன்ற ஷீஆ சாம்ராஜ்ஜியம் உருவாகிவிடாதிருக்க என்ன செய்தார்கள்?
சிரியாவின் ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமான நுஸைரீ ஷீயாக்கள் என்பதனால் அங்குள்ள சுன்னத்து வல்ஜமாஅத் மக்களை காஸா மக்களை அழிப்பதை விட மோசமாக அழித்து ஒழித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு ஒரு பேரவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதனை உலகம் கண்டு கொள்வதாகவும் இல்லை.
ஈரானில் உள்ள அஹ்லுஸ் சுன்னாக்களுக்கு பிற சமயத்தவர்களை விடவும் கட்டுப்பாடுகள் அதிகம். பாலஸ்தீன மக்கள் அஹ்லுஸ் சுன்னாக்களாக இருப்பதனால் அவர்களுக்கு பிராந்தியத்தில் தலைமைத்துவம் கிடைத்து சுதந்திரமான மக்களாக மாறுவதை ஷீஆ முகாம் ஒரு பொழுதும் விரும்பமாட்டாது.
கலாநிதி மஹ்மூத் லம்லூம் என்பார்,
“சிலர் சடரீதியான நலன்களுடன் பாலஸ்தீனப் போராட்டத்தை இணைத்து விளக்கம் கூறுவர். ஈரானைப் பொருத்தவரையில் ஈராக், சிரியா, லெபனான், எமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பாரசீக திட்டத்தை அடைந்து கொள்வதற்காக முயற்சிக்கிறது. அண்மைக் கால சம்பவங்களின் பொழுது ஈரான் அமெரிக்காவை பகைத்துக் கொள்ளாமல் இஸ்ரேலின் மீதான தாக்குதலை வரையறுத்த நிலைகளோடு கட்டுப்படுத்திக் கொண்டு பயணிக்க பார்க்கிறது.
“மற்றொரு முகாமை சேர்ந்தவர்கள் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறும் அதேவேளை ஷீஆக்களது அதாவது ராபிழீக்களது நம்பிக்கை கோட்பாடுகள் குற்றச்செயல்கள் என்பன பற்றியே பேசுகிறார்கள். தமது ஆட்சியாளர்களது கையாலாக தனத்தை மறைப்பதற்கும் மக்கள் அவற்றை கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறு பேசுகிறார்கள். ‘எமது நாய் நஜீஸ் அல்ல; ராபிழீக்களது நாய் மட்டுமே நஜீஸாகும்.’ என்பது போன்ற கருத்தை இவர்கள் கொண்டிருகிறார்கள்.
” ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போராட்டம் அரபு பிராந்தியத்தினதின் வளங்களை அடைந்து கொள்வதற்கு இடம் பெறும் போட்டியாகும் என சிலர் அரசியல் ரீதியான கண்ணோட்டத்தில் பார்த்து விளக்கம் கூறுவர் பார்க்கிறார்கள்.
“பாலஸ்தீனிய போராட்டக் குழுக்களது ஆதரவாளர்களுக்கு ஈரானின் நடவடிக்கை மிகப்பெரிய அதிருப்தியை ஏற்பட்டிருக்கிறது. ‘உனது தோலை உனது நகத்தைப் போன்று வேறு யாரும் சொறிய முடியாது’ என்ற கூற்றுக்கு இணங்க பாலஸ்தீன விடுதலையானது தமது தலைகளின் மீது மட்டுமே சுமத்தப்பட்டு விட்டது என்ற அவர்களது கருத்தை மேலும் பலப்படுத்தி விட்டது”
“யதார்த்தவாதிகளிற் சிலர் ஈரான் பலவீனமான நாடாக இருந்தாலும் அதிகமான அரபு ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டை விடவும் அதன் நிலைப்பாடு சிறந்ததாகும் என்றும் இரண்டு தீமைகளில் அது நல்ல தீமை என்றும் கருதுகிறார்கள்.”
என்று கலாநிதி மஹ்மூத் எழுதுகிறார்.
இன்னொரு வகையில் பார்த்தால் குறைந்தது ஈரான் வருடாந்தம் குத்ஸ் தினத்தைக் கொண்டாடுகிறது. இஸ்ரேல் சார்பு நாடுகளுடன் வெளிப்படையிலாவது பகை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அஹ்லுஸ் சுன்னா நாடுகள் என்ன செய்தன? இந்த நாடுகளில் உள்ள சில உலமாக்கள் ஷீஆ மிகைத்தால் சுன்னத்து அழியும்; ஸியோனிஸத்தை விட ஷீஆ இஸ்ம் ஆபத்தானது என்று அபாய அறிவிப்பு மட்டும் செய்கிறார்கள்.
பாலஸ்தீனர்களுக்கு சார்பாக ஓரிரு இஸ்லாமிய நாடுகளது ஆட்சியாளர்கள் மட்டுமே குரல் கொடுக்கிறார்கள். ஆனால் இஸ்ரவேலின் தூதுவராலயங்கள் பல அரபு நாடுகளில் உள்ளன. அவை இராஜதந்திர உறவுகளைப் பேணுகின்றன. பல நாடுகள் இஸ்ரேலுக்கு தமது உற்பத்திப் பொருட்களை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி ஏற்றுமதி செய்கின்றன. இதனால் தான் இஸ்ரேல் உயிர் வாழுகிறது என்று கூட கூற முடியும். ஏன் இந்த நிலை?
பாலஸ்தீனில் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக கொல்லப்பட்டு, பல மில்லியன் கணக்கானவர்கள் அகதி முகாம்களிலும் திறந்த சிறைகளிலும் வாழும் போது அதனை பகிரங்கமாகவே செய்து வரும் இஸ்ரேலுடன் சுமூகமான உறவைப் பேண வேண்டும் (Normalization) என்று கூறும் சில அரபு நாடுகளது பின்புலம் என்ன? அந்த ‘சுமூகமான உறவு வேண்டாம்’ என்று பல இஸ்லாமிய அறிஞர்கள், கல்வியாளர்கள் அழுத்தமாகக் கூறிவந்தும் கூட அதற்கு அவை செவிசாய்காமல் இருப்பது ஏன்?
அதேவேளை பாலஸ்தீனில் இஸ்ரேல் முழுமையான இன அழிப்பை செய்யும் போது அவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் கண்டணங்களும் முழு உலகத்திலும் இடம்பெறும் போது அரபு நாட்டொன்றில் மாத்திரம் இசைக் கச்சேரிகளும் புதுவருடக் கொண்டாட்டங்களும் அழகுராணிப் போட்டிகளும் நடப்பது ஏன்? உள்ளம் மரித்துவிட்டதா அல்லது அந்த அளவுக்கு பாலஸ்தீன மக்கள் மீதும் அவர்களுக்காக போராடுபவர்கள் மீதும் வெறுப்பா? அந்த வெறுப்பை இப்படித் தான் காட்டுவதா? அதிசயமான ஆட்சியாளர்கள்! சில அரபு நாடுகளில் இஸ்லாத்தை பேசுபவர்கள் ஆயிரக்கணக்கில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை.
இஸ்ரேலின் மீதான ஈரானின் தாக்குதலால் காஸாவில் குவிந்திருந்த உலக மக்களது கவனம் திசை திருப்பப் பட்டிருக்கிறது. சிலர் ஈரானை வில்லனாகப் பார்க்கிறார்கள். பாலஸ்தீனியர்கள் மீது இருந்த அனுதாபம் தற்போது இஸ்ரேல் மீது திரும்பி இருக்கிறது. ஆனால் பாலஸ்தீனர்கள் படும் துன்பம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
மேற்குலகம் அறிவியல் துறையிலும் தொழில்நுட்பத்திலும் கொடி கட்டி பறந்தும் மனசாட்சியே இல்லாமல் மனிதாபிமானத்தை பூரணமாக இழந்துள்ளது. அரபு நாடுகளது எண்ணெய் வளத்தை சுரண்டவும் முஸ்லிம்களது எழுச்சியை முழுமையாக அடக்கவும் கங்கணம் கட்டி செயல்படுகிறது. அதற்கு பகடைக் காய்களாக பாலஸ்தீன மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த புதிரான சூழ்நிலையில் இருந்து விடுதலை அடைய வேண்டுமாயின் இஸ்லாத்தை அதன் உரிய வடிவில் மக்கள் புரிவதோடு அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். இஸ்லாத்தின் எதிரிகள் எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதனை மிகத் தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு சாராரும் தமக்கென அரசியல் ரீதியான நலன்களை முன்னிறுத்தி ஆயுதச் சந்தையில் ஆயுதங்களை விற்று உலக மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பலஸ்தீனில் மட்டுமல்ல முழு உலகத்திலும் சமாதானம் நிலவ வேண்டும். ஆயுத கலாச்சாரம் முற்று முழுதாக ஒழிக்கப்பட வேண்டும் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட வேண்டும்.




