அஷ்ஷைக் எஸ்.எச்.எம.பளீல் (நளீமி)
ஸகாத், ஹஜ், உழ்ஹிய்யா போன்ற வழிபாடுகளை சமூகத்தில் உள்ள எல்லோராலும் நிறைவேற்ற முடியாது. அது பண வசதி உள்ளவர்கள் மீதான கடமையாகும்.
எனவே குத்பா ஓதுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஒன்று இருக்கிறது:
பள்ளிவாயலுக்கு குத்பாவுக்கு வருவோரில் சுமார் 90% மானவர்கள் ஏழைகள்; அல்லது நடுத்தர வருமானம் கொண்டவர்கள். (இது மிக வசதியான ஓரிரு ஊர்களுக்கு பொருந்தாமல் இருக்கலாம்) ஆனால்,பெரும்பாலான ஊர்களது நிலை வித்தியாசமானதாகும்.
தற்போதைய சூழ்நிலையில் மிகப் பயங்கரமான பொருளாதார நெருக்கடி நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் 40 நிமிஷத்துக்கு குத்பாவில் உழ்ஹிய்யாவின் சிறப்புக்கள், அதனை கொடுக்கும் முறைகள், ஹஜ்ஜின் சிறப்புகள், அதனை நிறைவேற்றும் விதங்கள், ஸகாதின் சிறப்புகள் அதனை கொடுக்காதவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றி மாத்திரம் பேசுவது முறையல்ல.
காரணம் அவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பவர்கள் அதிகமாக இருப்பர்.குத்பாவில் இவற்றின் சிறப்புக்கள், மகிமைகள் பற்றி கட்டாயம் பேசத்தான் வேண்டும். ஆனால் இருக்கின்ற 90% மாணவர்கள் இவற்றோடு சம்பந்தப்படாதவர்கள் என்ற வகையில் அவர்களுக்கும் ஏதாவது செய்தியை கதீப் அந்த குத்பாவில் கூற வேண்டும்.
இன்றைய (நான் சென்ற) குத்பாவில் கதீப் உழ்ஹிய்யா கொடுப்பதன் சிறப்பு, அதன் மகிமைகள் பற்றி மாத்திரமே பேசினார். ஆனால் அடுத்து வர இருக்கின்ற அரபாவுடைய தினம், அதன் சிறப்பு, ஹஜ் பெருநாளின் பொழுது நடந்து கொள்ள வேண்டிய முறைகள், அதன் அமல்கள், தற்போதைய சூழ்நிலையில் அந்த நன்நாளில் வீண்விரயம், அநாவசியமான பயணங்கள் என்பவற்றைத் தவிர்ப்பது பற்றியும் பேசியிருக்க வேண்டும். பாலஸ்தீன விவகாரத்திற்காக துஆச் செய்வது, ஏழைகளது விவகாரங்களிலே கவனம் செலுத்துவது அல்லாஹ்வினுடைய நெருக்கத்தை அதிகமாக இந்த நாட்களில் அதிகரித்துக் கொள்வது என்பவற்றோடு தொடர்பான பகுதிகளையும் குத்பாவில் அரைவாசியாவது சேர்த்துக் கொண்டிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.
ஜும்ஆவிற்கு சமூகம் தரும் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு குத்துபாக்களை அமைத்துக் கொள்வது கஷ்டம் என்பது எல்லோருக்கும் தெரியும்
இருந்தாலும் ஓரளவு இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அந்த வகையில் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் குத்பாவில் பின்வரும் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும்:-
1. இஸ்லாத்தில் இரு பெருநாட்களதும் முக்கியத்துவம்
2. ஹஜ்ஜுக்கும் இப்ராஹீம் (அலை)அவர்களது வாழ்வுக்கும் இடையிலான உறவும் அவர்களது வாழ்வில் இருந்து பெறப்படும் படிப்பினைகளும்(கொள்கைப்பற்று, தியாகம்,ஏகத்துவ வாழ்வு, இஸ்லாமிய குடும்ப வாழ்வு)
3. பெருநாள் தினத்தில் சிறுபான்மை நாட்டில் உழ்ஹிய்யா கொடுக்கும் ஒழுங்குகள்(அறுப்பில், மிருக காருண்யத்தில் இஸ்லாமிய ஒழுங்குகள், நாட்டு சட்டங்கள்)
4. பெருநாள் தினத்தில் தாய், தகப்பன், உற்றார் உறவினர்கள்,நண்பர்களோடு உள்ள உறவை அதிகரிக்கும் முயற்சிகள், கோபதாபங்களை ஒழித்து சமூக ஐக்கியத்தை வலுப்படுத்துவது.
5.வீண் விரயம், அனாவசியமான பயணங்கள் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதும் ஏழை எளியவர்களது துயர் துடைப்பதன் முக்கியத்துவமும்.
6. பெருநாள் தினத்திலாவது குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிப்பதற்கு (குறிப்பாக தொழில்கள் சம்பந்தப்பட்டவர்கள்) நேரத்தை ஒதுக்குவது.உறவினர்களை சந்திக்கச் செல்வது.
7. குறிப்பாக இளைஞர்களும் பொதுவாக எல்லோரும் பாவச் செயல்களிலோ முஸ்லிம் சமூகத்துக்கு இழுக்குத் தரும் நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் தவித்துக் கொள்வது.
8. பெருநாள் தினத்தில் அனுமதிக்கத்தக்க விளையாட்டுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டு சந்தோசமாக அந்தத் தினத்தை கழிப்பது.
9. இந்த மாதம் 13 நாட்கள் முடியும் வரை முடிந்தவரை தக்பீர் அதிகம் கூறுவது, அல்லாஹ்வை மகத்துவப்படுத்துவது, ஏனைய நற்கருமங்களில் அதிகம் ஈடுபடுவது.
அல்லாஹ் எமது அமல்களை அங்கீகரிப்பானாக!




