அதற்காக எமது நாட்டுத் தலைவர் உட்பட பலரும் சர்வதேச தேசிய மட்டங்களிலும் கண்டணங்களையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளனர்.
அவரது மறைவுச் செய்தி கிடைத்தவுடன் மனது கனத்தது. தாங்கிக் கொள்ள முடியாத கவலை ஆட்கொண்டது. அன்றாட பணிகளைக் கூட உரிய முறையில் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
எது எப்படிப் போனாலும் பலவாறான நியாயங்களைக் கூறி உள்ளத்தை தேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
- அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது என்ற நியாயம்.(மனது ஏற்றாலும் ஏற்பதற்கு சங்கடப்பட்டாலும் அது தான் யதார்த்தம்)
- வெற்றிகள் எட்டப்பட வேண்டுமாயின் அதற்கு முன்னர் தியாகங்கள் செய்யப்படுவது அவசியம் என்பது அல்லாஹ் ஏற்படுத்திய விதியாகும். எதிரிகள் எமது உயிர், உடமை, சுயகெளரவம் போன்றவற்றின் மீது பயங்கரமாக அத்துமீறுவார்கள். உலகின் மிகப்பெரிய சீர்திருத்தவாதிகளான நபியவர்கள் கூட மிகக்கடுமையான சோதனைகளை சந்தித்தார்கள். நிம்மதியாக வாழ்ந்த எந்த நபியையும் காணமுடியாது. எனவே தான் அவர்களுக்கு ‘உலுல் அஸ்ம்'(திடவுறுதி பூண்டவர்கள்) என்று குர்ஆன் கூறுகிறது.
- ஒரு சமூகம் மிகப் பெரிய இழப்புக்கள், சவால்களை சந்திப்பதால் அவர்கள் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார்களோ அவை அழிவதாக நாம் கூறக் கூடாது. மாறாக அவர்களது இழப்பு, கொலை பல நல்ல விளைவுகளை உலகில் உருவாக்கும். தற்போது பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களது தொகை கோடிக்கணக்கில் உலகில் அதிகரித்துள்ளது. சுமார் 40,000 பேரது உயிரிழப்பின் மூலம் முழு உலகமும் விழித்துக் கொண்டது. அந்த மக்களது போராட்டம் நியாயமமானது என விளங்கும் நிலை வந்துள்ளது. அவர்களது இழப்புக்களால் ஐக்கிய நாடுகள் தாபனமும் சர்வதேச நீதிமன்றமும் குலுங்குகின்றன. அல்லாஹ்வின் மார்க்கத்தை பாதுகாக்கவும் மனித சமூகத்தின் உயர்ச்சிக்காகவும் உழைப்பவர்கள் பலர் அழிவது வேறு பல பலமான எழுச்சிகளுக்கு வழிவகுக்கும். தியாகிகளது குருதி, வியர்வை,கண்ணீர் ஆகிய மூன்று திரவங்களும் இஸ்லாம் என்ற பாரிய பிரமாண்டமான விருட்சத்துக்கான பசளையாக நீராகவே அமையும்.
- உலகில் இவற்றை விட மிகப் பெரிய இழப்புக்கள், சவால்களை முஸ்லிம் சமூகம் வரலாறு நெடுகிலும் சந்தித்தது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அது ஆட்டம் கண்டது;மக்களது மனங்களில் விரக்தி ஆட்கொண்டது. ஆனால் அந்த நிலை நீடிக்கவில்லை. புதிய சீர்திருத்தவாதிகள் தைரியமூட்டினார்கள். இஸ்லாத்தின் ஜீவ சக்தி மீண்டும் சமூகத்துக்குள் பாய்ந்து சமூகம் தனது பலவீன நிலையில் இருந்து விடுபட்டு முன்னரை விட எழுச்சி கண்டது.
அபூபக்கர் (ரலி) ஆட்சியை எடுத்த போது சந்திக்காத சவால்களா? அல்லாஹ்வின் அருளால், அவர்களது சாணாக்கியத்தால் பழைய கீர்த்தியை மீட்டெடுத்து அதனை விட உயர் நிலைக்கு அதனைக் கொண்டுவந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த மூன்று ‘குலபாஉர் ராஷிதூன்’ களது காலத்திலும் முனாபிக்களும் சுயநலமிகளும் பிறரது கையாட்களும் செய்த சதிகளும் சூழ்ச்சிகளும் எம்மாத்திரம்!
ஆனால் திடவுறுதி பூண்ட சமூக சீர்திருத்தவாதிகள் இந்த நிலையை அல்லாஹ்வின் அருளால் மாற்றியமைத்தனர். இராப்பகலாக தியாகம் செய்தனர். தளபதிகள், ஆத்மஞானிகள், இஸ்லாமிய கற்கை ஞானங்களைச் சுமந்தவர்கள்,செயல் வீரர்கள், சாணாக்கியமிக்க ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக சமூக உயர்ச்சிக்காக உழழைத்தனர்.
உமையாக்களதும் அப்பாசியர்களதும் காலத்தில் உலகின் அறிவியல், அரசியல், ஆன்மீக நாகரீக தலைமைத்துவம் முஸ்லிம்களுக்கு வந்தது.மேற்கே ஸ்பெயின் வரை கிழக்கே சீனாவின் எல்லை வரை உலகின் ‘சுபர் பவர்’ அவர்களே.
சாம்ராஜ்யத்தின் ஒரு தூரப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் மாதுவுக்கு எதிரிகளால் சிறிய ஓர் இடையூறு ஏற்படப் போகிறது என்று கேள்விப்பட்ட கலீபா முஃதஸிமின் கர்ஜனையை கேட்ட எதிரி வாலை மடித்துக் கொண்டு தப்பினேன் பிழைத்தேன் என்று ஒதுங்கிய வரலாற்றுக்கு உரியவர்கள் நாம்.
சிலுவை யுத்தங்கள், தாத்தாரிய படையெடுப்பு,காலனித்துவ ஆக்கிரமிப்பு என்பன ஏற்படுத்திய பேரழிகளைக் கண்ட எவரும் முஸ்லிம் சமூகமே வேரோடு பிடுங்கி எறியப்பட்டுவிட்டதாக நினைத்திருக்கலாம்.
ஆனால் இந்த நிலைகளில் இருந்து முஸ்லிம் சமூகம் முழுமையாக மீண்டது. அடித்து காயப்படுத்தப்பட்ட அந்த சிங்கம் சிலர்த்துக் கொண்டு மீண்டும் கம்பீரமாக எழுந்து நின்றது. இஸ்லாம் எழுச்சி கண்டது
ஆனால் ஓர் உண்மையை ஒரு போதும் மறக்கலாகாது. இஸ்லாம் அதன் தூய வடிவில் மீண்டும் பரிணமிக்க வேண்டுமாயின் எமது தியாகங்கள் மிக முக்கியமானவை. மாறாக வெறுமனே பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பதால் மட்டும் வெற்றியை அடைய முடியாது.
பல தியாகங்கள் அவசியம். பலரை இழக்க நேரிடும். அடிப்படைகளே இல்லாத விமர்சனங்களை சந்திக்க வேண்டி வரும்.சிலபோது முழு உலகமும் எமக்கெதிராகத் திரண்டு வரும். இனி இல்லை என்ற அளவுக்கு நிலை மோசமாகலாம்.
ஆனால் எம்மிடம் தெளிவான கொள்கைத் தெளிவு, அசைக்க முடியாத ஈமான், நற்ண்பாடுகள்,மிக முக்கியமாக கொள்கையை வாழவைக்க உழைப்பது என்பன அவசியமாகும்.
எனவே உலகில் முஸ்லிம் சமூக சீர்திருத்தவாதிகள் ஒழிக்கப்படும் போது எமக்கு விரக்தி வரத் தேவையில்லை. அவற்றை ஈமானிய ஒளியில் பார்த்து எமது முயற்சிகளை பனமுகப்படுத்துவதற்கான உந்து சக்தியாக அவற்றை அமைத்துக் கொள்வோம்.
கடைசியாக ஒரு சிந்தனை
எம்மை எதிப்பவர் எம்மை அழிப்பதற்கு கையாளும் அதி நவீன உத்திகள் பற்றிய தெளிவு எம்மிடம் இல்லாமல் இருப்பதும் மிகப் பெரிய துரதிஷ்டமாகும்.
எனவே ஈமான் ஆழமாக இருப்பது மட்டும் போதாது நாம் நவீன தொழில்நுட்பத்தை நன்கு படித்து அவற்றை எமது முயற்சிகளுடன் பிணைத்துக் கொள்வதும் அவசியமாகும்.
நம்மை வேரோடு பிடுங்கி எறிவதற்கு எமது பகிரங்கமான எதிரிகள் இராப் பகலாக கங்கணம் கட்டி தமக்கிடையே உள்ள முரண்பாடுகளை மறந்து செயற்படும் போது நாம் சில்லறை விவகாரங்களில் எமது காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தீனின் உயர்ச்சிக்காகவும் மனித சமூகத்தின் மீட்சிக்காகவும் உழைப்பது ஓர் அமானிதம் என்று நினைத்து செயல்படுவோம்.
யா அல்லாஹ் உனக்காக வாழ்ந்து, உனக்காகவே உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் பொருந்திக் கொள்வாயாக!




