உலகத் தந்தையர் தினம்…

இஸ்லாத்தில் தந்தையின் சிறப்பும் “நீயும் உனது செல்வமும் உன் தந்தைக்குரியது” என்ற ஹதீஸின் பொருளும்

ஒருவர் நபி ﷺ அவர்களிடம் வந்து கூறினார்:“என்னுடைய தந்தை என் சொத்துகளை முழுமையாக எடுத்துக் கொண்டுவிட்டார்.”

அப்போது நபி ﷺ கூறினார்கள்:

“நீயும் உன் செல்வமும் உன் தந்தைக்குரியது.”

மேலும் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

“உங்களுடைய பிள்ளைகள், நீங்கள் சம்பாதித்தவற்றில் மிகவும் தூய்மையான (சிறந்த) வருமானமாகும். ஆகவே, அவர்களுடைய செல்வத்திலிருந்து நீங்கள் உண்ணுங்கள்.”

ஆதாரம்:அபூ தாவூத் (3530), இப்னு மாஜா (2292) அஹ்மத் (7001).

உலகத் தந்தையர் தினத்தை முன்னிட்டு, இஸ்லாத்தில் தந்தையின் சிறப்பும் அவருக்குரிய உரிமைகளும் பற்றி பலர் கவனிக்காமல் இருப்பதை காணலாம். பெற்றோரின் உரிமைகள் குறித்து இஸ்லாமிய ஆதாரங்கள் பலமாக வலியுறுத்தினாலும், சிலர் தந்தைக்கு பிள்ளைகளின் வாழ்க்கையிலும் மார்க்கத்திலும் வழங்கப்பட்டுள்ள உயர்ந்த அந்தஸ்தை அறியாமல் இருக்கிறார்கள்.

அல்லாஹ் தனது வணக்கத்திற்குப் பிறகு உடனடியாக பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு கட்டளையிடுகிறான்:

“அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணைவைக்காதீர்கள்; பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்.”(அல்-குர்ஆன்)

மேலும், பெற்றோரின் அருளை நினைத்து அவர்களுக்கு நன்றி செலுத்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்:

“மனிதனுக்கு அவன் பெற்றோரைக் குறித்து நாம் அறிவுறுத்தினோம். அவனது தாய் பலவீனத்தின் மேல் பலவீனத்துடன் அவனைச் சுமந்தாள்; அவனது பாலூட்டல் இரண்டு ஆண்டுகளில் நிறைவடைகிறது. எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து; என்னிடமே திரும்பி வருதல் உள்ளது.”

தந்தையின் சிறப்பும் அவருடைய உரிமையும் குறித்து பல நபிமொழிகள் வந்துள்ளன. அவற்றில் ஒன்று:

“ஒரு மகன் தனது தந்தைக்கு முழுமையாக நன்றி செலுத்த முடியாது; ஆனால் அவர் அடிமையாக இருப்பதை கண்டால் அவரை வாங்கி விடுதலை செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.”

இந்த ஹதீஸை விளக்கிய இமாம் நவவி (ரஹ்) கூறுகின்றார்:

“அதாவது தந்தை செய்த நன்மைக்கும் உரிமைக்கும் முழுமையான பிரதிபலன் அளிப்பது இயலாத ஒன்று; அவரை விடுதலை செய்வது போன்ற உயர்ந்த செயல் மட்டுமே அதற்கு ஒப்பாகும்.”

#தந்தை மறைந்த பின்னரும் அவருக்கு நன்மை செய்வது

தந்தை ஹஜ் கடமையை நிறைவேற்றாமல் இறந்திருந்தால் அவருக்குப் பதிலாக ஹஜ் செய்வது பற்றிய ஹதீஸ் வந்துள்ளது.

பழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்: ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டாள்:“அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதுமை அடைந்தவர். அவருக்கு ஹஜ் கடமை வந்துள்ளது. ஆனால் அவர் ஒட்டகத்தில் ஏறிச் செல்ல முடியாது.”

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உன் தந்தைக்காக நீ ஹஜ் செய்.”

ஜாபிர் பின் அப்துல்லாஹ் மற்றும் அவரது தந்தை ஜாபிர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் தந்தைக்கு நன்மை செய்வதற்கான சிறந்த உதாரணம் உள்ளது.

உஹுத் போருக்கு முன் அவரது தந்தை கூறினார்: “நான் முதலிலேயே ஷஹீதாவேன் என்று நினைக்கிறேன். எனக்கு கடன் இருக்கிறது; அதை செலுத்திவிடு. உன் சகோதரிகளை நன்றாக கவனித்துக்கொள்.”போர் முடிந்து அவர் ஷஹீதானார்.

தந்தையின் நண்பர்களுடனான உறவைத் தொடருதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மிக உயர்ந்த நன்மைகளில் ஒன்று, ஒருவன் தனது தந்தையின் நண்பர்களுடன் உறவைத் தொடர்வதாகும்.”

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஒரு கிராமவாசியை மரியாதையுடன் நடத்தினார். அதற்குக் காரணம் கேட்டபோது:

“இவரது தந்தை என் தந்தை உமர் (ரலி) அவர்களின் நண்பர். நான் நபி (ஸல்) அவர்கள் கூறியதை கேட்டிருக்கிறேன்:

‘மிகச் சிறந்த நன்மை என்பது தந்தையின் நண்பர்களுடன் உறவைத் தொடர்வதாகும்’” என்றார்.

இமாம் நவவி (ரஹ்) இதனை விளக்கும்போது:

“இதில் தந்தையின் நண்பர்களுக்கும் நன்மை செய்வதன் சிறப்பு உள்ளது; அது தந்தைக்கு மரியாதை செலுத்துவதன் ஒரு பகுதியாகும். இதேபோல் தாயின் நண்பர்கள், தாத்தா பாட்டியின் உறவுகளும் இதில் அடங்குவர்” என்றார்.

“நீயும் உன் செல்வமும் உன் தந்தைக்குரியது” என்ற ஹதீஸின் பொருள்:-

ஷெய்க் சையித் சாபிக் தனது *ஃபிக்ஹுஸ் ஸுன்னா* நூலில் விளக்குகிறார்: பெற்றோர் தமது மகனின் செல்வத்திலிருந்து தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

அதற்கான ஆதாரமாக: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்: “எனக்கு செல்வமும் பிள்ளையும் உள்ளனர். என் தந்தை என் செல்வத்தை முழுமையாக எடுத்துக்கொள்ள விரும்புகிறார்.”

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீயும் உன் செல்வமும் உன் தந்தைக்குரியது.”

ஆனால் இங்கு “உன் தந்தைக்குரியது” என்பது முழு சொத்து உரிமை என்ற அர்த்தமல்ல.

அப்படியானால் தந்தைக்கு முழு அதிகாரமா?

எகிப்து தாருல் இஃப்தாவின் பத்வா செயலாளர் டாக்டர் அஹ்மத் மம்தூஹ் கூறுகிறார்:

சிலர் இந்த ஹதீஸை தவறாகப் புரிந்து கொண்டு, தந்தைக்கு மகனின் செல்வத்தை விரும்பியபடி பயன்படுத்தலாம் என நினைக்கிறார்கள்.

ஆனால் இங்கு உள்ள “லாமு” (உன் தந்தைக்குரியது) என்பது உரிமை (Ownership) அல்ல;அனுமதி மற்றும் பெற்றோருக்கு நன்மை செய்வதை வலியுறுத்துதல் ஆகும்.

அதாவது:

  • மகன் தந்தைக்கு நன்மை செய்ய வேண்டும்
  • அவரை கௌரவிக்க வேண்டும்
  • அவரிடம் கஞ்சத்தனம் காட்டக்கூடாது
  • ஆனால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சொத்து உரிமையும் தொடர்கிறது

அவர் மேலும் கூறுகிறார்:

“தந்தை மகனின் செல்வத்தை அநியாயமாக முழுமையாக எடுத்துக் கொண்டால் அது அறிஞர்களின் ஒருமித்த கருத்துப்படி ஹராமாகும்.”

https://www.masrawy.com/islameyat/others-islamic_ppl_news/details/2021/6/20/2043325/-%D9%

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top