peaceful coexistence

சமாதான சகவாழ்வின் அடிப்படை மனித சகோதரத்துவம்

ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமை தனது சகோதரனாகவே கணிக்க வேண்டும். காரணம் அவ்விருவரும் கொள்கை ரீதியில் உடன்பட்டிருக்கிறார்கள். அல்லாஹ் அல் குர்ஆனில் நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே எனக்கூறுகிறான். ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரனாவான்.என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சகோதரன் என்ற சொல் இங்கு ஆழமான கருத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.குடும்ப ரீதியில் உடன்பிறப்புக்களான இரத்தபந்தக்காரர்களது தரத்தில் வைத்து நோக்கத்தக்கதாக இந்த கொள்கைவழி சகோதரத்துவம் அமைகிறது என்பதை இது காட்டுகிறது. எனவே இத்தகைய உறவு மிகவும் பலமாக அமைதல் அவசியமாகும்.

அதேவேளை மற்றுமொரு வகையான சகோதரத்துவம் பற்றியும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.மனிதர்கள் அனைவரும் – அவர்களது மொழிகள், குடும்பங்கள், பிரதேசங்கள் வித்தியாசப்பட்ட போதிலும் – ஒரே தகப்பனினதும் தாயினதும் பிள்ளைகளாகவே குர்ஆன் அவர்களைக் கணிக்கிறது. “மனிதர்களே! உங்களது இரட்சகனை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். அவன் எப்படியானவன் என்றால், அவன் உங்களை ஒரேயொரு ஆத்மாவிலிருந்து படைத்து, அதிலிருந்து அதன் சோடியையும் படைத்து, அவர்கள் இருவரிலிருந்தும் பல ஆண்களையும் பெண்களையும்(பூமியில்)பரவலாக உண்டுபண்ணினான்.”

முதல் மனிதர் ஆதம் (அலை) என்ற தகப்பனுடன் தொடர்புபடுத்தி மனிதர்களுடன் பேசும்; வசனங்களை குர்ஆனில் ஐந்துஇடங்களில் காணமுடியும். உதாரணமாக, “ஆதமுடைய பிள்ளைகளே! உங்களுக்கு நாம் ஆடைகளைத் தந்தோம்.ஆதமுடைய பிள்ளைகளே! உங்களை ​ைஷத்தான் திசைதிருப்பி விடாதிருக்கட்டும்.”

அந்தவகையில்,இங்கு குர்ஆன் மனித இனத்தின் அடிப்படையொன்றைப் பற்றி வலியுறுத்திக் கூறியுள்ளது. அதுதான் மனித இனம் முழுவதும் பொதுவான சகோதரத்துவத்தைக் கொண்டது என்பதும் ஒரே தகப்பன் தாய் என்ற அடிப்படையில் அவர்கள் சகோதரத்துவப் பிணைப்பால் கட்டுண்டவர்கள் என்பதுமாகும்.   அதேவேளை, அவர்களுக்கு மத்தியில் நிலவும் குல, கோத்திர நிற வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியில் பிளவுகளும், மோதல்களும் நிலவட்டும் என்பதற்காக அன்றி தஆருப் எனப்படும் பரஸ்பர புரிந்துணர்வுக்காகவே உண்டுபண்ணப்பட்டது என்பதை குர்ஆன் வலியுறுத்துகிறது. “மனிதர்களே! உங்களை நாம் ஓர் ஆணிலிருந்தும் ஓர் பெண்ணிலிருந்தும் படைத்திருக்கிறோம். உங்களை நாம் இனங்களாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது நீங்கள் பரஸ்பரம் புரிந்து கொள்வதற்காகவுமாகும். உங்களில் மிகவும் கண்ணியமானவர்கள் உங்களில் அதிக பயபக்தியுடையவராவார்.”

 எனவே, இங்கு தஆருப் என்பது நலன்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்கும், அறிவு ஞானங்களையும் விளக்கங்களையும் பரஸ்பரம் பெற்றுக் கொள்வதற்குமாகும். எனவே, இங்குள்ள பேதங்கள் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்வதற்காக அன்றி பரிபுரணத்துவத்தைக் காண்பதற்காகவே உண்டு பண்ணப்பட்டிருக்கிறது.

அந்தவகையில், நபி (ஸல்) அவர்கள் படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பத்தினர். எனவே, அவனுக்கு மிகவும் விருப்புக்குரியவர் அவனது குடும்பத்தினருக்கு மிகவும் பயனுடையவராக இருப்பவர் தான்.

“மனிதர்களே! உங்கள் இரட்சகன் ஒருவன். உங்கள் தகப்பனும் ஒருவர். நீங்கள் ஆதமின் பிள்ளைகள். ஆதம் மண்ணினால் படைக்கப்பட்டவர். நிச்சயமாக உங்களில் மிகுந்த கண்ணியத்திற்குரியவர் உங்களில்; மிகவும் பயபக்தி மிக்கவராவார். எந்தவொரு அரபிக்கும் அரபி அல்லாதவரை விட,எந்தவொரு அரபியல்லாதவருக்கும் அரபியை விட,சிவப்பு நிறமுடையவருக்கு வெள்ளை நிறத்தவரை விட வெள்ளை நிறத்தவருக்கு சிவத்த நிறத்தவரை விட பயபக்தியினடிப்படையிலன்றி சிறப்பு (மகிமை) கிடையாது.எனக் கூறுகிறார்கள்.   இந்த வசனங்கள் யாவும் மனிதர்கள் ஏக அடிப்படையைச் சார்ந்தவர்கள் என்பதனையும் தோற்றத்திலும் யதார்த்தத்திலும் படைப்பினங்கள் வித்தியாசமாக அமைந்திருப்பதில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றன. அதேவேளை,அனைத்து மனிதர்களும் ஒரே ஆத்மாவிலிருந்து வந்திருப்பதாலும் அவர்களது தகப்பனாக ஆதமும் தாயாக ஹவ்வாவும் இருப்பதனால் எந்த மனிதனும் அடுத்த மனிதனை விட சிறப்புப் பெறமாட்டான் என்றும் அல்லாஹ்வின் முன் சிறப்புப் பெறுவதற்கு பயபக்தி நற்செயல்கள் என்பன மட்டுமே அளவீடாக அமையும் என்றும் கூறுகின்றன.

எனவே, ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அன்பாக நோக்குவார் சகல விதமான ஒத்தாசைகளையும் செய்வார், அவருக்கு எவ்வித இடுக்கன்களும் வராமல் பாதுகாப்பார். அது போலவே ஒரு முஸ்லிம் சகல மனிதர்களையும் இந்த குடும்ப உறவு| என்ற நோக்கில் அணுகுவான்.

மனிதன் என்பவன் எந்த மதத்தை அல்லது இனத்தை அல்லது நிறத்தை உடையவனாக இருந்தாலும் அவன் மதிப்புக்குரியவன் என முஸ்லிம் நம்புகிறான். ஏனெனில், குர்ஆனில் அல்லாஹ் ஷஷநாம் ஆதமின் பிள்ளைகளைக் கண்ணியப்படுத்தினோம்.||161எனக் கூறுகிறான். எனவே, இங்கு வலியுறுத்தப்படும் கண்ணியம் என்பது ஒவ்வொரு மனிதனும் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்பதைக் காட்டுகின்றது.

ஒரு தடவை கைஸ் இப்னு ஸஅத், சஹ்ல் இப்னு ஹுனைப் ஆகிய இருவரும் காதிஸியாவில் இருந்த போது அவர்கள் இருவரையும் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் (மரியாதைக்காக) எழுந்து நின்றார்கள். அது அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரது -அதாவது திம்மீக்களில் ஒருவரது- பிரேதமல்லவா? எனக்கூறப்பட்டது. அதற்கு அவர்கள் இருவரும் பின்வருமாறு கூறினார்கள் :நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேத ஊர்வலம் சென்றது. அப்போது அவர்கள் அதற்காக ​எழுந்து நின்றார்கள். அது ஒரு யூதனின் பிரேதமல்லவா என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள் அதுவும் ஆத்மா அல்லவா என்றார்கள்.

அறிஞர் கர்ளாவி, எனவே, ஒவ்வோர் ஆத்மாவுக்கும் இஸ்லாத்தில் புனிதத் தன்மையும் மகத்துவமும் உண்டு. என்ன வியத்தகு சந்தர்ப்பம்! என்ன வியத்தகு விளக்கமும் நியாயம் கூறலும் இது! என எழுதுகிறார்.

குர்ஆனில் அல்லாஹ் மனிதனை மிகவும் சிறந்த தோற்றத்தில் படைத்திருப்பதாகக் கூறுகிறான். அவனைத் தனது பிரதிநிதியாக ஆக்கி, வானவர்களை அவனுக்கு சிரம்பணிக்குமாறும் கட்டளையிட்டான். இவை அனைத்தும் அவனுக்குள் அடங்கியுள்ள, அல்லாஹ்விடமிருந்து விஷேடமாக ஊதப்பட்ட ஆத்மாவின் காரணமாகக் கிடைத்த கண்ணியமாகும்.

இது பற்றி மேலும் விளக்கும் பஹ்மி ஹுவைதீ எனும் நவீன கால மார்க்க அறிஞர்,  இவ்வாறு மனிதனது அந்தஸ்த்து ஏனைய சகல படைப்பினங்களது அந்தஸ்த்தை விட உயர்ந்தது எனக் கூறும் வசனங்கள் அவனது நம்பிக்கையின் மூலமாகக் கிடைத்த கண்ணியமாக அதனை சுட்டிக் காட்டாமல் அவன் ‘மனிதன்’ என்ற வகையில் பெற்றுக் கொண்டதாகவே கூறுகின்றன. அது, அவன் முஸ்லிமாக அல்லது கிறிஸ்தவனாக அல்லது யூதனாக அல்லது பௌத்தனாக மாற முன்னர்,வெள்ளையனாக,கருப்பனாக, மஞ்சளானவனாக மாற முன்னரே வழங்கப்பட்ட கண்ணியமாகும். சிலர் நினைப்பது போல் இந்த குர்ஆனிய கண்ணியம் ஏனையவர்களை விடுத்து முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல. காரணம், குர்ஆனின் வசனங்கள் இந்த விவகாரத்தில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கின்றன. சிலபோது அவை மனிதன் பற்றிப் பேசும். வேறு சிலபோது ‘ஆதமின் மக்கள்’ பற்றியும் பேசும். வேறுசிலபோது ‘மனிதர்கள்’ என்று அழைக்கும். எனவே, பொதுமைப்படுத்தி இவ்வாறு அழைப்பதன் பொருள் யாது என்பது குர்ஆனின் போக்கைப்புரிந்த, சீரிய சிந்தனை படைத்த எவருக்கும் தெரியாததல்ல. முஸ்லிம்கள்-விசுவாசிகளை மட்டும் அழைப்பதற்கு வேறு சொற்கள் பிரயோகிக்கப்படுகின்றன என்பதை யாவரும் புரிவர் என்கிறார்.

கண்ணியம் என்பது இஸ்லாமிய சட்டத்தின் மூலம் மனிதன் பெறும் பாதுகாப்பாகும்.சகல மனிதர்களையும் அது தழுவியதாகும். ஆண், பெண், வெள்ளையன், கறுப்பன், பலவீனன், பலசாலி யாராக இருந்தாலும் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருப்பினும் அவனது இரத்தம் ஓட்டப்படாமல், நினைத்த மாத்திரத்தில் நுழைந்து விடாமல் அவனது பரம்பரை மாற்றப்படாமல், அவனது சொந்த மண்ணிலிருந்து துரத்தப்படாமல் அல்லது அதன்மீது அத்துமீறப்படாமல்,   அவனது சிந்தனா சுதந்திரம் எவராலும் பலாத்காரமாக மீறப்படாமல், அவனது சுயாதீனம் எவராலும் வஞ்சகமாக, சூழ்ச்சியாக முடக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதாகும்.

அஷ் ஷெய்க்
எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)
சிரேஷ்ட விரிவுரையாளர்
ஜாமிஆ நளீமிய்யா  கலாபீடம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top