அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்
2002 ஆம் ஆண்டு (சுமார் 17 வருடங்களுக்கு முன்னர்) மீள்பார்வைப் பத்திரிகையின் பெப்ரவரி மாத இதழில் (பக்:08) “சிங்கள இனவாத அலைகள்” என்ற தலைப்பில் வெளிவந்த ஆக்கம் இது. இதன் தற்கால முக்கியத்துவம் கருதி எவ்வித மாற்றங்களுமின்றி இங்கு அது அவ்வாறே மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.தற்போது முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சிந்தனா ரீதியான படையெப்பு இன்று நேற்று ஆரம்பித்ததல்ல என்பதை இந்த ஆக்கத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும்.)
அண்மைக்காலத்தில் சிங்களவர் மத்தியில் சிறுபான்மையினர் மீதான காழ்ப்புணர்வு அதிகரித்து வருகிறது. பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இனவாத உணர்வைத் தூண்டும் கட்டுரைகள் பகிரங்கமாகவே எழுதப்படுகின்றன. தேர்தலில் குதிப்பது என்ற போர்வையில் தனியான இனவாதக் கட்சிகளான சிஹல உருமய, பூமிபுத்ர போன்ற கட்சிகள் தேர்தல் பிரசார சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தமது நச்சுக் கருத்துக்களை மிக சாமர்த்தியமாகவே சிங்களவர் மத்தியில் திணித்து வருகின்றன. தேர்தலில் வெற்றி பெறுவது என்பதைவிட தேர்தல் பிரசார மேடைகளைப் பயன்படுத்தி இனவாத உணர்வுகளை பல இலட்சம் பேர்களிடத்தில் தூண்டிவிடுவதில் அவை குறியாக இருந்தன என்பதனையும் அதில் அவை வெற்றி பெற்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
‘நாட்டினுள் பலமற்ற அரசை எதிர்பார்க்கும் சக்திகள்’
ஒரு தேர்தல் தினத்தில் (5.12.2001) ‘லக்பிம’ என்ற சிங்களப் பத்திரிகைக்கு சிஹல உறுமய கட்சியின் செயளாலர் சம்பிக்க ரணவக்க ‘நாட்டினுள் பலமற்ற அரசை எதிர்பார்க்கும் சக்திகள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் கூறியுள்ள சில கருத்துக்களாவன :-
‘இந்நாட்டில் ஸ்திரமற்ற அரசு உதயமாக வேண்டும் என்பது பல சக்திகளது எதிர்பார்ப்பாகும். அவர்களில் முதலாமவர் பிரபாகரனாவார். இரண்டாமவர் ஹக்கீம். மூன்றாமவர் சோமவன்ச. நான்காவது சக்தி மேற்குலக தூதராலயங்களாகும்.’
தொடர்ந்து கூறும் அவர் ‘பொ.ஐ.மு.யினரும் ஐ.தே.க.யினரும் தாம் சிறுபான்மையினருடன் இணைந்து போவதற்கு தமக்குப் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்காமையே காரணம் எனத் தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.
ஜே.ஆர். 1977இல் 5/6 பலத்தையும், பிரேமதாஸ சுலபமான ஒரு பெரும்பான்மையையும் பாராளுமன்றத்தில் பெற்றிருந்தார்கள். ஆனால், அவர்கள் தமிழ்-முஸ்லிம் தீவிரவாதம் தொடர்ந்தும் வளரும் விதத்திலேயே செயல்பட்டார்கள். சந்திரிக்காவுக்கு 1994 இல் பெருன்பான்மை இருந்தது. எனவே, பாராளுமன்ற ஆசனங்கள் பற்றிய பிரச்சினையை விட இக்கட்சிகளின் தலைவர்களுக்குக் கொள்கைப் பிரச்சினையும் உள்ளது. இதனை மாற்ற வேண்டுமாயின் வெளிச் சக்தியொன்று அவர்களுக்கு ஆட்சியதிகாரம் பற்றிய ஒரு பாடத்தைக் கற்பிப்பதன் மூலமே சாத்தியப்படும். அதாவது, சிங்கள எழுச்சியொன்றை தனியாக கட்டியெழுப்ப வேண்டும். பொ.ஐ.மு., ஐ.தே.க. என்ற வகையில் வாக்குக் கொடுக்காமல் சிங்களவர்களுக்காக அதனைக் கொடுக்க வேண்டும்.’ஸ்திரமற்ற ஓர் அரசை உருவாக்கி அதிலிருந்து உயர்ந்தபட்ச பயனை அடைய இருக்கும் அடுத்த குழு இஸ்லாமியப் பயங்கரவாதமாகும். பொ.ஐ.மு.யை ஸ்திரமற்றதாக்கியது ரவூப் ஹகீமின் முஸ்லிம் காங்கிரஸ் என்பதனை நாம் மறக்கலாகாது. அதுமட்டுமல்ல. கிழக்கில் வாழும் இஸ்லாமிய பூமிபுத்திரர்களும் முன்னைநாள் இஸ்லாமிய அடிப்படைவாதியான ரஹ்மான் அலீ சௌத்ரீயும் பிரகடனம் செய்துள்ள கிழக்கு மாகாணத்துக்கான நஸரிஸ்தான் எனும் பெயரிலான தனியான முஸ்லிம் ராஜ்யம் என்ற சிந்தனையை முஸ்லிம் காங்கிரஸ் அங்கீகரித்துள்ளது. எனவே, அடுத்த பாராளுமன்றத்தையும் தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம் தீவிரவாதிகளுக்குப் போகுமானால் நாடு மிகக் குறுகிய காலத்தில் மற்றுமொரு ஆப்கானிஸ்தானாக மாறிவிடும். அமிர்தலிங்கம் தமிழ் இளைஞர்களை தூண்டிவிட்ட போது அதன் இறுதி விளைவு என்னவாகும் என்பதை அறியாதிருந்தார் என்பது போலவே ரவுப் ஹகீமும் தான் தூண்டிவிடும் முஸ்லிம் போர்க்குணத்தின் முடிவு என்னவாகும் என்பதை அறியாதிருப்பதாகத் தெரிகிறது.
எனவே, (ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசைப் போல்) தொலைக்காட்சிப் பெட்டிகள் அற்ற, சினிமா இல்லாத, பெண்கள் கைதிகளாகி கருத்துச் சுதந்திரத்தை இழந்த ஒரு தீவிரவாத ஆட்சியை உருவாக்கவே ரவுப் ஹக்கீம் பாதை வெட்டிக் கொண்டிருக்கிறார். முஸ்லிம் காங்கிரஸ் உருவாகிய நாளிலிருந்து இலங்கையின் சுதந்திர முஸ்லிம் சமுதாயமும் முழு தேசமும் கல்லறையை நோக்கிச் செல்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், எதிர்காலத்தில் சிங்களவருக்கு சனத்தொகைப் பிரச்சினையும் இருக்கிறது. பிரபாகரன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இப்படியே நிலைமை தொடருமானால் இன்னும் 90 வருடங்களில் சிங்களவர் இந்நாட்டின் பெரும்பான்மையினராக இருக்கமாட்டார்கள். இந்தத் தேர்தலில் சிங்கள இருப்பைப் பற்றி நாம் தூர நோக்கோடு சிந்திக்காவிட்டால் எமது பிள்ளைகள் சிங்களமல்லாத இலங்கையிலேயே இருப்பார்கள். முப்பதாயிரம் வருடங்களாக சிங்களவர்களைப் பாதுகாத்த புண்ணிய பூமியான இது உலகிலேயே சிங்களவருக்கென்றிருக்கும் ஒரே பூமியாகும். இதனை நாம் இழப்பதா என சிங்களவர் இப்போதாவது சிந்திக்க வேண்டும்.
புலிப்பயங்கரவாதத்தையும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் போல் சிவப்புத் தீவிரவாதமும் (ஜே.வீ.பி) நாட்டை ஸ்திரமற்றதாக்கி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனையும் உள்நாட்டு சக்தியாகும்.’ இவ்வாறு சம்பிக்க கூறுகிறார்.
‘அடசந்த களுவரய’
மற்றொரு இனவாத எழுத்தாளரான ‘சுஜித் அக்கரவத்த’ என்பவரால் ‘அடசந்த களுவரய’ என்று தலைப்பிடப்பட்ட நூல் பற்றி முஸ்லிம்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். தலைப்பிற்கு கீழ் அடைப்புக்குறிக்குள் ‘முஸ்லிம் இனவாத அரசியலின் பாதை’ என்ற விளக்கமும் எழுத்தாளராலேயே இடப்பட்டுள்ளது. இந்நூல் கட்டுரை வடிவில் ‘திவைன’ எனும் சிங்கள நாளிதழில் திங்கள் தோறும் வெளிவந்ததாகவும் பின்னர் முஸ்லிம் தீவிரவாதிகளால் அரசுக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தாலும் ‘சுதந்திர ஊடக அமைப்பும்’ அரச சார்பற்ற 40 நிறுவனங்களும் இதே எதிர்ப்பைத் தெரிவித்ததாலும் கட்டுரைத் தொடர் இடை நிறுத்தப்பட்டதாகவும் ‘சுஜித்’ முகவுரையில் தெரிவிக்கிறார். அத்துடன் இதனை நூல் வடிவில் வெளியிட திவைன ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த மஞ்சுள படுகெதர என்பவர் அதிகமான உற்சாகத்தைத் தந்ததாகவும் தேசிய வரலாற்றின் மிகச் சரியான பகுதியைக் காட்ட வேண்டுமென்பதற்காக இதனை நூலுருப்படுத்துவதாகவும் சுஜித் தெரிவிக்கிறார்.
1915ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கள-முஸ்லிம் கலவரத்துக்கு முழுக்கவும் முஸ்லிம்களே காரணமாக அமைந்தனர் என்பதை நிறுவ எடுக்கப்பட்ட ஒரு பக்கச்சார்பானதும் நீசத்தனமானதுமான முயற்சி தான் இந்நூல் என்பதை முஸ்லிம் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நூலில் தரப்படும் கருத்துக்கள் ஒருபுறமிருக்க நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள சம்பிக்க ரணவக்க கக்கும் துவேசம் எம்மாத்திரம் என்பதை வாசகர்கள் அந்நூலை வாசிக்கும் போது புரிந்துகொள்வர்.
யுத்த மற்றும் அரசியல் பலத்தால் பரவிய அந்த ‘சத்தியம்’
சம்பிக்கவின் கருத்துக்களிற் சில இதோ:- ‘கடந்த ஆயிரம் வருடங்களாக உலகில் அதிக வேகமாகப் பரவிய மதமாக இஸ்லாம் இருப்பதற்கு அதன் சத்தியத்தன்மையும் அல்லாஹ்வின் பலமும் தான் காரணம் என முஸ்லிம் புத்திஜீவிகளும் பிரசாரகர்களும் ஒரு கருத்தைப் பரப்புகிறார்கள். ஆனால், யுத்த மற்றும் அரசியல் பலத்தால் அந்த ‘சத்தியம்’ பரவியது என்பதுதான் உண்மையே தவிர அறிவுபூர்வமாக அது பரவவில்லை என்பதே யதார்தமாகும். கிறிஸ்தவ மதத்துக்கும் இந்த உண்மை பொருந்தும் என்பதுடன் ஆசியாவில் உருவான பௌத்த, ஹிந்து, ஜைனம் ஆகிய மதங்களுக்கு அவ்வளவு பொருந்தாது என்பதாகும். நிதானமாகப் பார்த்தால் இன்று இஸ்லாமிய மயமாகியுள்ள ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், வட இந்தியா, இந்தோனேசியா, மலேசியா என்பன ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் அகிம்சை வழியைப் பின்பற்றும் பௌத்த பிரதேசங்களாகவே இருந்தன. மத்திய கிழக்கில் இஸ்லாத்தின் பலம் வாள் முனையில் தான் ஸ்தாபிக்கப்பட்டது.
இஸ்லாம் மதம் இவ்வாறு இரத்தத்தால், இரும்பால் மற்றும் நெருப்பால் பரவியபோது அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) இலங்கை நாடு ‘மறந்து போனமை’ வரலாற்று அதிசயமாகும். அவர்களது வேகத்தைப் பல அம்சங்கள் குறைத்து விட்டமையே இதற்கு காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு தொடர்ந்தும் எழுதும் சம்பிக்க, முஸ்லிம்கள் ஐரோப்பியர்களிடமிருந்து சந்தித்த எதிர்ப்புக்கள், கிறிஸ்தவ முஸ்லிம் மோதல்கள், ஐரோப்பாவிலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டமை பற்றியெல்லாம் குறிப்பிடுகிறார். இப்படியான இக்கட்டான நிலைகளில் முஸ்லிம்களுக்கு உதவியவர் செனரத் எனப்படும் இலங்கையின் சிங்கள ராஜா என்றும் அவர் கிழக்கில் முஸ்லிம்களை குடியேற்றினார் என்றும் ஆனால், மூன்று தலைமுறைகளுக்குள் அவர்கள் சிங்களவர்களாக மாற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே இவ்வுதவியை ராஜா செய்தார் என்றும் எழுதுகிறார். ஆனால், அதன் பின்னர் இந்த முஸ்லிம்கள் பலசாலிகளாக மாறியதனால் தமது மார்க்கத்தை விட்டுவிடாதது மட்டுமன்றி திட்டமிட்டும் செயல்பட ஆரம்பித்ததாகவும் ஒல்லாந்தர்கள், மற்றும் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு சிங்கள அரசுகளுக்கு விசுவாசமற்றவர்களாக மாறியதாகவும் கவலைப்படுகிறார். 1817-18 கால ஊவ, வெல்லஸ்ஸ சிங்கள விடுதலைப் போராட்டத்தை தோல்வியடையச் செய்ய ஹஜ்ஜி முகாந்திரம் தலைமையில் முஸ்லிம்கள் ஒன்றுதிரண்டு ஆங்கிலேயருக்கு உதவியதாகவும் இந்த நன்றிக்கடனுக்காக ஆங்கிலேயர் கண்டியிலும், கரையோரப் பிரதேசங்களிலும் முஸ்லிம்களது வியாபார முயற்சிகள் ஸ்திரமடைய உதவியதாகவும் எழுதுகிறார்.
மேலும் வஹாபிப் போக்கு, மலேயர், மூர்கள், காந்தி ஜின்னா பகைமை, மொகலாய வீழ்ச்சி,அலிகார், ஆர்.எஸ்.எஸ், ஷீயாக்கள் போன்ற சொற்பிரயோகங்களை அவர் கையாள்வதிலிருந்து அவர் தனக்கு இவைபற்றி பரீட்சயமிருப்பதை மறைமுகமாக உணர்த்த விரும்புகிறார்.
மொகலாய சாம்ராஜ்ய வீழ்ச்சியின் பின்னர் ‘ரஹ்மான் அலி சௌத்ரி’ என்பார் முஸ்லிம்கள் இழந்த அரசை மீண்டும் அடைய வேகமாகச் செயற்பட்டதாகவும் இஸ்லாமிய கொடியின் கீழ் 10 ராஜ்யங்கள் உருவாக வேண்டுமென்றும் அவற்றில் எட்டு இந்தியத் துணைக்கண்டத்திலும் நஸரிஸ்தான், சபிஸ்தான் என்பன இலங்கையிலும் உருவாக வேண்டும் என கனவு கண்டதாகவும் சம்பிக்க எழுதுகிறார். இந்த 10 ராஜ்ய கனவு நனவாகும் வரை பின்லாடின் போன்றவர்கள் பங்கெடுக்கும் புனித யுத்தம் தொடரும் என்றும் சம்பிக்க கூறுகிறார்.
இலங்கையில் 60 – 70களில் முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்கப் பார்த்ததாகவும் 1986இல் அஷ்ரபினால் அது அரங்கேறியுள்ளதாகவும் குறிப்பிடும் சம்பிக்க, 1990 இன் பின் அரச அனுசரணையுடன் (பெட்ரோல் டொலரின்) வெளிநாட்டு உதவியுடன் இன்னும் வேகமடைந்திருப்பதாகவும் அபாய அறிவிப்புச் செய்கிறார். அரசை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ள அடிப்படைவாதிகள் 2012 இல் முழு நாட்டையும் பிடிக்கும் நோக்குடன் செயற்படுவதாக பயப்படுகிறார். ஜே.வீ.பீ. யினருக்குக் கூட அரபு நாட்டுப்பணம் வருவதால் தான், ஐவேளைத் தொழுவதாகக் காணும் முஸ்லிம் பெண்ணைக் கூட ஜே.வீ.பீ யினர் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்துள்ளதாகக் கூறுகிறார்.
அரசிடமிருந்து அதிக வரப்பிரசாதங்களைப் பெறும் முஸ்லிம்கள் தொழில்வாய்ப்பு, வீட்டு வசதி, புனர்நிர்மான உதவி, கல்வி வசதிகள், கட்டமைப்பு வசதிகள் என்பவற்றையும் பெற்றுவருவதாக சம்பிக்க மனம்வெதும்புகிறார்.
இறுதியாக அவரது சொற்களை அப்படியே பின்வருமாறு தருகிறோம். ‘இந்தக் கூட்டத்தினரை சிங்கள மயப்படுத்துவதும் அவர்களை அடிப்படைவாதத்திலிருந்து பிரித்துவிடுவதும் அதேபோல் தாலிபான் பாணியிலான தீவிரவாதத்தை எவ்வித இரக்கமும் காட்டாமல் தோற்கடிப்பதும் தான் எமக்கு முன்னாலுள்ள பெரும் பணியாகும்”.
1915 கலவரத்துக்கு காரணமான முஸ்லிம்களின் மூர்க்கத்தனம்
அடசந்த களுவரய நூலில் சுஜித் அக்கரவத்த என்பார் 1915 கலவரத்துக்கு முஸ்லிம்களின் மூர்க்கத்தனமே காரணம் என்பதை போலி ஆதாரங்களால் நிறுவுகிறார்.
அவற்றிற் சில : 1906இல் அளுத்கமையில் முஸ்லிம்கள் ஒரு பௌத்த பிக்குவை கடுமையாகத் தாக்கினர்; அவரை நிர்வாணமாக்கினர். தலையில் கடுமையாக அடித்து அருகில் உள்ள காணுக்குள் தள்ளினர். 1907ல் கம்பளையில் அம்பகமுவ வீதியில் பள்ளியின் முன்னால் பௌத்த பெரஹர போகும் போது மேளம் சப்தமிடக்கூடாது என ஆங்கிலேயருடன் சேர்ந்து முஸ்லிம்கள் தீர்மானித்தனர்.
1915ல் குருணாகல் தெல்லிய கொன்னவில் வைத்து பெரஹர போகும் போது முஸ்லிம்கள் தாக்கினர். பிக்கு ஒருவர் தாக்கப்பட்டதால் அவர் மயங்கி விழுந்தார். பௌத்த கொடி கிழிக்கப்பட்டு பொசுக்கப்பட்டது. பௌத்தர்கள் ஓட ஓட தாக்கப்பட்டனர். புத்தர் சிலை கூட மிலேச்ச முஸ்லிம்களால் உடைக்கப்பட்டது.
இவ்வாறு பலப்பல தகவல்களை அடுக்கிக் கொண்டு செல்லும் சுஜித் என்பார் முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழ எவ்வித அருகதையும் அற்றவர்கள் என்பதைக் கூற முயலுவதுடன் பௌத்தர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் உணர்த்த விரும்புகிறார்.
புத்தகத்தின் அட்டைப் படம்கூட பௌத்தர்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் உள்ளது. ஒரு வெசக்கூடு நெருப்பால் சுடப்படுவது போன்றும் சற்று தொலைவில் ஒரு பள்ளிவாசல் கம்பீரமாகக் காட்சிதருவது போன்றும் அட்டைப் படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இதுபோன்ற புத்தகங்களும், கட்டுரைகளும் படித்தவர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணுவதால் முஸ்லிம்கள் தரப்பிலிருந்தும் நல்ல தரமான நூல்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டு பதிலடி கொடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
சிந்தனையானது சிந்தனை மூலமே முறியடிக்கப்பட முடியும்
பௌத்த புத்திஜீவிகளுடன் சுமுகமான கலந்துரையாடல்களைச் செய்வதன் மூலமும் அவர்களுக்கு மத்தியில் நடுநிலையாகச் சிந்திக்கக் கூடியவர்களை இந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதன் மூலமும் இந்நிலைமையிலிருந்து ஓரளவு மீட்சி பெற முடியும்.
முஸ்லிம்களது வரலாறு பற்றி நச்சுக் கருத்துக்கள் பரப்பப்படுவதனை உடன் நிறுத்துவதற்கு உடனடியாக திட்டமிடப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படாத போது நிலைமை இன்னும் மோசமடையும் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லிம்கள் பற்றி முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களில் உண்மைகள் ஏதும் உள்ளனவா என்பதையும் காய்தல் உவத்தலின்றி ஆராய வேண்டும். எமது தனித்துவங்களை விட்டுக் கொடுக்காத நிலையில் இணங்கிப் போகமுடியுமான இடங்களில் விட்டுக் கொடுத்து நடப்பது பற்றியும் எமது புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும்.
நாம் சிறுபான்மையினராக வாழுவதால் ஈமானிய மற்றும் அறிவுப் பலத்துடன் கூடிய சாத்வீகப் போராட்டங்களும் ஜனநாயக அணுகுமுறைகளும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வாழ்வு ஒழுங்கும் அறிவுபூர்வமான முனைப்புக்களுமே பயனளிக்கும் என்பதையும் நாம் புரிய வேண்டும்.




