ஏன் அவர்கள் நிராகரித்தார்கள்?

நவீன கால அறிஞர் அஷ்ஷைக் முஹம்மது அல்-கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் அகீததுல் முஸ்லிம் «முஸ்லிமின் நம்பிக்கை» என்ற நூலின் 5 ஆம் அத்தியாயம்

ஒரு மனிதன் உண்மையை அறிந்து கொண்ட பிறகும்… அதற்கு முன் தலை வணங்க மறுக்கும் போது….

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் வானங்களிலும் பூமியிலும் நிறைந்திருக்கும் போது, மனிதனின் உள்ளேயே படைப்பின் சான்றுகள் அவனது இதயத்தை விழிக்க வைக்க போதுமானதாக இருக்கும் போது…

அப்படியிருந்தும் ஏன் அவர்கள் நிராகரித்தார்கள்?

– ஒருவேளை நாம் நினைக்கலாம்: ஒவ்வொரு புறக்கணிப்பவரின் பிரச்சனையும் சான்று இல்லாமைதான், அல்லது தீர்க்கப்படாத சந்தேகம்தான், அல்லது வந்து சேராத ஆதாரம்தான் என்று.

– ஆனால் குர்ஆன் நமக்கு இன்னும் ஆபத்தான ஒன்றை வெளிப்படுத்துகிறது:

– ஒரு மனிதன் உண்மையை அறிந்திருக்கலாம்… பிறகு அதை நிராகரிக்கலாம்.

– பாதையை பார்திருக்கலாம்… பிறகு அதில் நடக்காமல் இருக்க தேர்வு செய்யலாம்.

– உண்மை அவனிடமிருந்து மறைக்கப்படவில்லை… மாறாக உண்மை அவனிடம் அவன் கொடுக்க விரும்பாத ஒன்றை கேட்கிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

﴿وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا﴾  [அந்-நம்ல்: 14]

“அவர்கள் அதை அநியாயமாகவும், பெருமையாகவும் மறுத்துவிட்டனர். ஆனால் அவர்களது உள்ளங்கள் அதை உறுதியாக நம்பியிருந்தன.”

இந்த அற்புதமான இணைப்பை சிந்தியுங்கள்:

﴿جَحَدُوا﴾… ﴿وَاسْتَيْقَنَتْهَا أَنفُسُهُمْ﴾

– அறிந்தார்கள்… பிறகு மறுத்தார்கள்.

– பார்தார்கள்… பிறகு புறக்கணித்தார்கள்.

ஆகவே மனிதன் எப்போதும் உண்மையை பார்காததால் நிராகரிப்பதில்லை… அவன் அதை பார்து, அதை ஏற்றுக்கொள்வது அவனது வாழ்கையில் ஏதோ ஒன்றை மாற்றும் என்று தெரிந்து கொண்டதால் நிராகரிக்கிறான்.

இங்குதான் உண்மையான பிரச்சனை தொடங்குகிறது.

– “அல்லாஹ் இருக்கிறான்” என்று சொல்வது எளிது.

– ஆனால் ஈமான் உங்களிடம் அல்லாஹ்வின் இருப்பை ஒப்புக்கொள்ள மட்டும் கேட்பதில்லை… உங்கள் மீது அல்லாஹ்வுக்கு இருக்கும் உரிமையும் ஒப்புக்கொள்ள கேட்கிறது.

– அவனே படைப்பவன் என்றால்… நீங்கள் அடிமை.

– அவனே கட்டளையிடுபவன் என்றால்… நீங்கள் ஆசைப்படும் அனைத்தும் அனுமதிக்கப்பட்டது அல்ல.

– அவனே வாழ்வாதாரம் தருபவன் என்றால்… உங்கள் வாழ்வாதாரத்தை பற்றிய பயத்தில் அவனுக்கு மாறு செய்யாதீர்கள்.

– அவனே தீர்பளிப்பவன் என்றால்… உண்மையை உங்கள் மனோ இச்சைக்கு கட்டுப்படுத்தாதீர்கள்.

– அவன் இரகசியத்தையும் அதை விட மறைவானதையும் அறிந்தவன்… ஆகவே அவனது அறிவிலிருந்து மறையும் தனிமை எதுவும் இல்லை.

– திரும்பிச் செல்வது அவனிடமே… ஆகவே நீங்கள் தனியாக அவனது முன் நிற்பீர்கள்.

இங்குதான் நாம் புரிந்துகொள்கிறோம், பிரச்சனை எப்போதும் இதுவல்ல:

– அறிவு அல்லாஹ்வின் இருப்பை ஏற்றுக்கொண்டதா?

மாறாக:

– அறிவு ஏற்றுக்கொண்ட பிறகு மனம் என்ன செய்யும்?

– ஏனெனில் படைப்பாளனை ஒப்புக்கொள்வதை விட… அவனுக்கு அடிபணிவதை ஏற்றுக்கொள்வது மனதுக்கு கடினமாக இருக்கலாம்.

இங்குதான் உண்மையான சோதனை தொடங்குகிறது:

– என் வாழ்கையை வழிநடத்துவது யார்?

அல்லாஹ்வின் கட்டளையா… அல்லது நான் விரும்புவதா?

இங்குதான் மிகவும் ஆபத்தான வார்த்தை வெளிப்படுகிறது: “நான்”

– இப்லீஸ் அல்லாஹ்வை அறியாமல் இல்லை.

– அவனது கட்டளையை மறுக்கவும் இல்லை.

– ஆனால் அல்லாஹ்வின் கட்டளை அவனது மனம் விரும்பியதற்கு எதிராக வந்தபோது, அவன் கூறினான்: ﴿أَنَا خَيْرٌ مِّنْهُ﴾

[அல்-அஃராஃப்: 12]

“நான் அவனை விட சிறந்தவன்”

நான்.

நான் சிறந்தவன்.

நான் பார்கிறேன்.

நான் அறிவேன்.

நான் தகுதியானவன்.

– ஒரே வார்த்தை இதயத்தில் இருந்ததை வெளிப்படுத்தியது.

– ஆணவம் என்பது எப்போதும் மக்கள் மீது பெருமை கொள்வது அல்ல.

– ஆணவம் இதை விட மிகவும் மறைவானதாக இருக்கலாம்:

– உண்மை உங்களுக்கு தெளிவாகும்… ஆனால் அதை ஏற்றுக்கொள்வது நீங்கள் தவறாக இருந்தீர்கள் என்று பொருள்படுவதால் அதை ஏற்க கடினமாக இருக்கும்.

– நீங்கள் விரும்பாத ஒருவரிடமிருந்து அறிவுரை வரும்… அதனால் சொன்னவரை பிடிக்காததால் உண்மையை தள்ளிவிடுவீர்கள்.

– நீங்கள் அநியாயம் செய்தீர்கள் என்று தெரியும்… ஆனால் “நான் தவறு செய்தேன்” என்ற ஒரு வார்தைக்கு பதிலாக நூறு நியாயங்களை தேடுவீர்கள்.

“நான் தவறு செய்தேன்”

– அல்லாஹ்வின் தீர்பு உங்களுக்கு தெரியும்… ஆனாலும் உங்கள் ஆசைக்கு ஏற்ற கருத்தை கண்டுபிடிக்கும் வரை தேடிக்கொண்டே இருப்பீர்கள்.

இங்குதான் ஒரு ஆபத்தான மாற்றம் நிகழ்கிறது:

– மனிதன் இனி கேட்பதில்லை:

உண்மை எங்கே, அதை பின்பற்றுவதற்கு?

மாறாக:

எனக்கு ஒத்து வருவது எது, அதை பின்பற்றுவதற்கு?

சிலை எப்போதும் கல்லாக இருக்க வேண்டியதில்லை:

அல்லாஹ் கூறுகிறான்:

﴿أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ﴾ [அல்-ஜாஸியா: 23]

“தனது மனோ இச்சையே தனது தெய்வமாக ஆக்கிக்கொண்டவனை நீர் பார்தீரா?”

– ஒரு மனிதன் சிலைக்கு சஜ்தா செய்யாமல் இருக்கலாம்… ஆனால் அவனுக்குள் கட்டளையிட்டு தடுக்கும் ஒன்று இருக்கலாம்:

மனோ இச்சை

– மனோ இச்சையின் மிகவும் ஆபத்தான செயல் என்னவென்றால், அது எப்போதும் சொல்வதில்லை: உண்மையை நிராகரி.

– மாறாக அது மெதுவாக கிசுகிசுக்கும்:

அதன் புரிதலை கொஞ்சம் மாற்று… அப்போது நீ உன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

அப்போது பேரம் தொடங்கும்.

பிறகு நியாயப்படுத்துதல்.

பிறகு வழிகளை தேடுதல்.

கேள்வி இப்படி மாறும் வரை:

அல்லாஹ் என்னிடம் என்ன விரும்புகிறான்?

இப்படி ஆகிவிடும்:

நான் விரும்புவதற்கு எனக்கு அனுமதி தருவதை எப்படி கண்டுபிடிப்பது?

இங்குதான் தராசு தலைகீழாகிறது.

– மனிதன் தன்னை உண்மையை கொண்டு எடைபோடுவதற்கு பதிலாக… உண்மையை தனக்கு முன் வைத்து, அதை தனது மனோ இச்சைக்கு ஏற்றபடி வடிவமைக்க முயல்கிறான்.

ஆனால் “ஏன் அவர்கள் நிராகரித்தார்கள்?” என்பது மற்றவர்களை பற்றிய கேள்வி மட்டுமல்ல

தலைப்பை படித்தவுடன் நாம் நினைப்பது எளிது:

ஒரு நாத்திகன்…

அல்லது பொய்யாக்குபவன்…

அல்லது ஃபிர்அவ்ன்…

அல்லது இப்லீஸ்…

பிறகு நிம்மதியாக அத்தியாயத்தை மூடிவிடுகிறோம்:

அல்ஹம்துலில்லாஹ்… நாம் நம்பிக்கை கொண்டவர்கள்.

ஆனால் குர்ஆன் மற்றவர்களின் இதய நோய்களை பற்றி சிந்திக்க மட்டும் நமக்கு அருளப்படவில்லை.

மாறாக நமது இதயங்களை பற்றி கேட்கவும் அருளப்பட்டது.

ஆகவே மிகவும் நெருக்கமான கேள்வி இதுவாக இருக்கலாம்:

– உண்மையை அறிந்த பிறகு, அது எனக்கு பிடிக்காத போது நான் என்ன செய்கிறேன்?

– நான் விரும்பாத ஒருவரின் வாயிலிருந்து உண்மை வரும்போது…

அது உண்மை என்பதால் ஏற்றுக்கொள்கிறேனா?

அல்லது எனது ஈகோவை வெல்வதற்காக நிராகரிக்கிறேனா?

எனக்கு சொந்தமில்லாத பணம் என் முன் இருக்கும் போது, யாரும் என்னை பார்காத போது…

எது என்னை தடுக்கிறது?

மனிதர்களை பற்றிய பயமா… அல்லது அல்லாஹ்வை பற்றிய பயமா?

என்னை விட பலவீனமான ஒருவருக்கு அநியாயம் செய்ய என்னால் முடியும் போது…

எது என்னை தடுக்கிறது?

நான் கோபப்படும் போது…

என் இதயத்தில் வலிமையானது எது: என் கோபமா அல்லது அல்லாஹ்வின் கட்டளையா?

இங்குதான் அடிமைத்தனத்தின் உண்மை வெளிப்படுகிறது.

– ஈமானின் மிகவும் கடினமான சோதனை பள்ளிவாசலில் சொல்வது அல்ல:

“அல்லாஹ்வை நம்பினேன்”

மாறாக இதயத்தால் சொல்வதுதான்:

“செவிமடுத்தோம், கீழ்படிந்தோம்”

அல்லாஹ் ஒன்றை விரும்பும் போது…

என் மனம் வேறொன்றை விரும்பும் போது.

ஆபத்து என்னவென்றால், திரை பெரிதாக தொடங்குவதில்லை… அது ஒரு சிறிய பாவத்திலிருந்து தொடங்கலாம்… அது தவறு என்று நமக்கு தெரியும்…

பிறகு அதை செய்கிறோம்.

பிறகு அதை திரும்ப திரும்ப செய்கிறோம்.

பிறகு அதற்கு பழகிவிடுகிறோம்.

பிறகு அதை விடுவது கடினமாகிறது.

பிறகு அதை நியாயப்படுத்த தொடங்குகிறோம்.

பிறகு அதை பற்றி நமக்கு நிம்மதி தருபவர்களை தேடுகிறோம்.

பிறகு அறிவுரை நமக்கு வேதனை அளிக்கிறது.

பிறகு அறிவுரை சொல்பவரே நமக்கு வேதனை அளிக்கிறார்.

இறுதியில் உண்மையே இதயத்திற்கு பாரமாகிவிடும்…

ஏனெனில் அது நாம் அதிகமாக நேசித்த ஒன்றை அச்சுறுத்துகிறது.

நாம் பாவமன்னிப்பு கேட்காத பாவம் எப்போதும் ஒரு செயலாக மட்டும் இருப்பதில்லை…

காலப்போக்கில் அது உண்மையை நாம் பார்க்கும் விதத்தையே மாற்றிவிடலாம்.

அதனால்தான் இந்த வசனம் பயமுறுத்துகிறது:

﴿فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ﴾ [அஸ்-ஸஃப்: 5]

“அவர்கள் வழிதவறிய போது, அல்லாஹ்வும் அவர்களின் இதயங்களை வழிதவறச் செய்தான்.”

தொடக்கத்தை சிந்தியுங்கள்:

﴿فَلَمَّا زَاغُوا﴾

– வளைவு உள்ளே இருந்து தொடங்கியது.

ஒரு அடி…

பிறகு ஒரு அடி…

பாவத்திற்காக வேதனைப்பட்ட இதயம்…

அதற்கு நியாயம் தேடும் இதயமாக மாறும் வரை.

அதனால்தான் விசுவாசி சொல்வதில்லை: நான் நேர்வழி பெற்றுவிட்டேன், முடிந்தது.

மாறாக தொடர்ந்து பிரார்த்திக்கிறான்:

﴿رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا﴾[ஆல இம்ரான்: 8]

“எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பிறகு எங்கள் இதயங்களை வழிதவறச் செய்துவிடாதே”

– நேர்வழி பெற்ற பிறகும்… அல்லாஹ் பாதுகாக்க வேண்டிய இதயம் இருக்கிறது.

– நீங்கள் அறிந்ததை வைத்து ஏமாந்து விடாதீர்கள்

– நீங்கள் நிறைய வசனங்களை அறிந்திருக்கலாம்… பிறகு நீங்கள் நன்கு அறிந்த ஒரு வசனத்திற்கு மாறாக நடக்கலாம்.

– தீர்பை அறிந்திருக்கலாம்… பிறகு அதிலிருந்து வெளியேறும் வழியை தேடலாம்.

– மக்களுக்கு ஒரு விஷயத்தை போதிக்கலாம்… பிறகு அதில் உங்கள் மனதை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.

அறிவு மிகப்பெரிய அருள்… ஆனால் உண்மைக்கு கீழ்படிய விரும்பாத இதயத்திற்கு அது பயனளிக்காது.

ஆகவே மிக முக்கியமான கேள்வி:

நான் எவ்வளவு அறிவேன்? என்பதல்ல

மாறாக:

நான் அறிந்த பிறகு என்ன செய்கிறேன்?

நான் உண்மையை பின்பற்றுகிறேனா?

அல்லது அதனுடன் பேரம் பேசுகிறேனா?

அதற்காக நான் என்னை மாற்றிக்கொள்கிறேனா?

அல்லது அது எனக்கு ஏற்றதாக இருக்க அதன் பொருளை மாற்ற முயல்கிறேனா?

இன்னும் பயமான கேள்வி:

நான் உண்மையிலேயே உண்மையை நேசிக்கிறேனா… அல்லது எனக்கு ஒத்து வரும் உண்மையின் பகுதியை மட்டும் நேசிக்கிறேனா?

உண்மையும் என் மனதும் மோதும்போது… நான் யாரை மாறச் சொல்வேன்?

இங்குதான் *”ஏன் அவர்கள் நிராகரித்தார்கள்?”* என்பது பயமுறுத்தும் கேள்வியாகிறது

ஏனெனில் நாம் அறிந்திருக்கிறோம் என்பதற்காக நிம்மதியாக இருக்க அது அனுமதிப்பதில்லை.

நாம் பாதையில் தொடங்கிவிட்டோம் என்பதற்காக பெருமை கொள்ளவும் விடுவதில்லை.

மனிதனுக்கு பாதையின் தொடக்கத்தில் மட்டும் நேர்வழி தேவையில்லை…

கடைசி மூச்சு வரை ஒவ்வொரு அடியிலும் அது தேவை.

ஆகவே இன்று கேட்காதீர்கள்: ஏன் அவர்கள் நிராகரித்தார்கள்?

உங்களையே கேளுங்கள்:

அல்லாஹ்வின் கட்டளை எனது ஆசைக்கு எதிராக வந்தால்… எதை விடுவது எனக்கு கடினமாக இருக்கும்?

செல்வமா?

அந்தஸ்தா?

உறவா?

ஆசையா?

நான் பிடித்துக்கொண்ட கருத்தா?

நான் விட்டுக்கொடுக்க மறுக்கும் பகையா?

என் ஈகோவை வெல்ல வேண்டும் என்ற ஆசையா?

அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாறான ஆடையா?

அவசரமாக பதில் சொல்லாதீர்கள்.

ஒருவேளை அல்லாஹ்வுக்காக உங்களால் விட முடியாத விஷயம்…

உங்கள் இதயத்தில் அதன் இடத்தை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய விஷயமாக இருக்கலாம்.

உங்கள் வாழ்க்கையில் ஒரு நேரம் வரலாம்… அப்போது

உங்களுக்கு அறிவுரை சொல்பவர் இருக்க மாட்டார்.

நீங்கள் படிக்கும் புத்தகம் இருக்காது.

உங்களை பார்க்கும் மனிதர் இருக்க மாட்டார்.

நீங்கள் தனியாக இருப்பீர்கள்.

உங்கள் முன் உங்கள் மனம் விரும்புவது…

உங்கள் இதயத்தில் அல்லாஹ் உங்களிடம் விரும்புவது.

அங்குதான் உங்கள் இதயத்தில் நம்பிக்கை எவ்வளவு செய்தது என்று தெரியும்.

மக்கள் முன் அல்லாஹ்வை பற்றி பேசும் போது அல்ல…

மாறாக நீங்கள் தனியாக இருக்கும் போது.

– நீங்கள் பாவம் செய்ய முடியும்…

பிறகு அல்லாஹ் உங்களை பார்க்கிறான் என்பதற்காக அந்த பாவத்தை விட்டுவிடுவீர்கள்.

– உங்களுக்கு சொந்தமில்லாததை எடுக்க முடியும்… பிறகு அல்லாஹ் அறிவான் என்பதற்காக அதை விட்டுவிடுவீர்கள்.

– யாராவது உண்மையை கொண்டு உங்கள் ஈகோவை காயப்படுத்தும் போது… “நான்” என்பதை விழுங்கி விட்டு: அவர் சரிதான் என்று சொல்வீர்கள்.

– அல்லாஹ்வின் கட்டளை நீங்கள் ஆசைப்படுவதற்கு எதிராக வரும்… மனம் வேதனைப்படும், போராடும், பிறகு சொல்லும்:

*செவிமடுத்தோம், கீழ்படிந்தோம்*

அங்குதான் நம்பிக்கை வெளிப்படுகிறது.

அல்லாஹ்வை தவிர யாரும் உங்களை பார்காத போது, அல்லாஹ்வுக்காக நீங்கள் விடும் விஷயத்தில்.

அது உங்கள் ஆணவத்தை தோற்கடித்தாலும் நீங்கள் ஏற்கும் உண்மையில்.

அது உங்கள் மனோ இச்சைக்கு எதிராக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கீழ்படிதலில்.

மனிதன் அடையக்கூடிய மிகவும் கடினமான வெற்றி…

மற்றவரை வெல்வது அல்ல, மாறாக தன்னை வென்று உண்மைக்காக நிற்பதுதான்.

இந்த அத்தியாயத்தை மூடுவதற்கு முன்… கடைசி கேள்வி இதுவாக இருக்க வேண்டாம்: ஏன் அவர்கள் நிராகரித்தார்கள்?

மாறாக இதுவாக இருக்கட்டும்:

*இறைவா… என்னை உன்னிடமிருந்து தடுக்கக்கூடியது என் இதயத்தில் என்ன இருக்கிறது?*

பிறகு அவனிடம் கேளுங்கள்: மற்றவர்களின் குறைகளில் மூழ்குவதற்கு முன் உன்னை எனக்கு காட்டித்தருமாறு.

உண்மையை உண்மையாக காட்டித்தருமாறு, அதை நான் அறிந்தால் அதற்கு கீழ்படிவதற்கு.

வெற்றி என்பது வெறும் பாதையை அறிவதில் இல்லை…

மாறாக அல்லாஹ்வை சந்திக்கும் வரை அந்த பாதையில் செல்ல உங்கள் இதயம் தயாராக இருப்பதில்தான்.

*அடுத்த அத்தியாயத்தில் இன்ஷா அல்லாஹ் «முஸ்லிமின் நம்பிக்கை»*

மனிதனின் காலம் மற்றும் இருப்பு பற்றிய புரிதலை உலுக்கும் ஒரு உண்மைக்கு செல்கிறோம்:

*அவனே முதலானவன்*

நம்மை சுற்றி இருக்கும் அனைத்தும் ஒரு நாள் தொடங்கின.

– நாம் தொடங்கினோம்.

– பூமி தொடங்கியது.

– நட்சத்திரங்கள் தொடங்கின.

– நமது வயதை நாம் அளக்கும் காலம் கூட படைக்கப்பட்டது.

அப்படியானால் அல்லாஹ்:

﴿هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ﴾

*”அவனே முதலானவன் மற்றும் கடைசியானவன்”* என்பதன் பொருள் என்ன?

ஒவ்வொரு தொடக்கத்திற்கு பின்னும் தொடக்கமில்லாத இறைவன் இருக்கிறான் என்பதை இதயம் உணரும் போது என்ன நடக்கும்?

இறைவா! எங்கள் இதயங்களுக்கும் உண்மைக்கும் இடையில் திரையை ஏற்படுத்திவிடாதே.

இறைவா! நாம் உண்மையை கண்டால் அதை பின்பற்றும் தைரியத்தை தா, அது நம் மனோ இச்சைக்கு எதிராக இருந்தால் நம்மை நாமே வெல்ல உதவி செய், நாம் தவறினால் உன்னிடம் திரும்பும் பணிவை தா.

இறைவா! எங்கள் அறிவை எங்களுக்கு எதிரான சாட்சியாக ஆக்கிவிடாதே, எங்கள் பாவங்களை உனக்கும் எங்களுக்கும் இடையில் திரையாக ஆக்கிவிடாதே, உனது திருப்தியை விட எங்கள் இதயங்களில் வேறு எதையும் முன்னிறுத்திவிடாதே.

﴿رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ﴾  [ஆல இம்ரான்: 8]

*”எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பிறகு எங்கள் இதயங்களை வழிதவறச் செய்துவிடாதே. மேலும் உன்னிடமிருந்து எங்களுக்கு அருளை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே மிகவும் வழங்குபவன்.”*

இறைவா! உண்மையை அறிந்தால் அதற்கு கீழ்படியும் இதயத்தை எங்களுக்கு வழங்குவாயாக, வழிதவறினால் உன்னிடம் திரும்பும் இதயத்தை தா, எங்கள் மனோ இச்சைக்கும் உனது திருப்திக்கும் இடையில் தேர்வு வரும்போது… உன்னையே தேர்ந்தெடுக்கும் இதயத்தை தா.

ஆமீன்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top