கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் 15.03.2024 அன்று நிகழ்த்தப்பட்ட குத்பாவின் தொகுப்பு)
அல்லாஹ்வுடைய நல்லடியார்களே!
ரமழான் மாதத்தின் நோக்கங்களிலே ஒன்று சமுதாயத்தில் உள்ள தேவையுடையவர்கள்,ஏழைகள், பட்டினியோடு பசியோடு இருப்பவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகும். ஏனென்றால் , ரமழானுடைய காலத்தில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் வீசுகின்ற காற்றைப் போன்று(தான் சந்திக்கும் அனைவருக்கும்) நபிகளார் (ஸல்)அவர்கள் தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள் என ரசூல் (ஸல்) அவர்களைப் பற்றி சஹாபாக்கள் கூறினார்கள்.
எனவே, இந்த ரமழானுடைய காலத்திலே நோன்பிருக்கின்ற ஒருவருடைய உள்ளத்தில் இரக்கம், அருள், பாசம், கருணை என்பன ஊற்றெடுக்கும்.
அவர் சமூகத்திலே இருக்கின்ற ஏழைகள், கஷ்டப்படுபவர்கள், பிரச்சனைகளை எதிர்நோக்கின்றவர்களை அரவணைப்பதற்கு, அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வருவார். எனவே தான் நோன்பிருக்கின்ற சந்தர்ப்பத்திலே எமது வயிற்றிலே ஏற்படுகின்ற பசி, தாகம் என்பன உலகத்தில் உணவின்றி
பசியுடன் வாடும் கோடிக்கணக்கான மக்களுடைய பசியை எங்களுக்கு உணர்த்துகின்றது. அவர்களுடைய பசியை, பட்டினியை தீர்க்க வேண்டும் என்ற அந்த ஆர்வத்தை எமது அந்த நோன்பு எம்மிலே உருவாக்கியிருக்க வேண்டும்.
ஏனென்றால்,யூசுப் (அலை) உமர் (ரலி) ஆகியோர் அதிகமாக நோன்பு வைப்பவர்களாக இருந்தார்களாம். அதற்கான காரணம் வினவப்பட்ட பொழுது நாங்கள் நோன்பிருக்கின்ற சந்தர்ப்பத்தில் தான் பசியோடு, பட்டினியோடு இருப்பவர்களுடைய
பசியை, பட்டினியை உணரக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று காரணம் சொன்னார்கள்.
அதேவேளை, நோன்பின் நோக்கம் ‘தக்வா’ வை (இறை அச்சத்தை) உருவாக்குவது. அவ்வாறு உருவாக்கப்படும் அந்த தக்வாவின் தெளிவான வெளிப்பாடு ஈகை, தர்மம், ஸகாத், மற்ற மக்களுடைய பிரச்சினைகளில் பங்கெடுப்பது என்பதாக அமையும்.
அல்லாஹ்வுடைய நல்லடியார்களே!
பொதுவாகவே ரசூல் (ஸல்)அவர்கள்
ரமழான் காலத்தில் அதிகமாக தர்மம் செய்பவர்களாக ஏழை எளியவர்களுக்கு கொடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பது ஒரு பக்கம்.
*ஏனைய வழிகள்*
இரண்டாவது, ரமழான் காலத்தில் மிக முக்கியமான ஒரு அமலாக கருதப்படுகின்ற ‘ஸதகதுல் ஃபித்ர்’ இன் நோக்கமும் வறுமையை கட்டுப்படுத்துவது தான். ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தனக்கும் தனது பொறுப்பில் இருக்கின்றவர்களுக்குமாக ஆகக் குறைந்தது நமது நாட்டின் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது தலைக்கு இரண்டே கால் கிலோ சம்பா அரிசியை வெளிப்படுத்துவது ‘சுன்னா முஅக்கதா’ (வலியுறுத்தப்பட்ட சுன்னத்) ஆகும். நபி(ஸல்)
அவர்கள் :- ஸகாத்துல் பித்ரை வெளிப்படுத்துவதன் மூலமாக அந்த நோன்பிலே இடம் பெற்ற தப்புத் தவறுகளில் இருந்து நோன்பாளி பரிசுத்தப்படுத்தப்படுவார். இது முதலாவது நோக்கம். இரண்டாவது நோக்கம்,
ஏழைகளது உணவாக அது அமையும்’ என்று சொன்னார்கள்.
எனவே ஒருவகையில் பார்த்தால் நபி(ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் அதிகமாக தர்மம் செய்திருக்கிறார்கள். இரண்டாவதாக
ஸகாத்துல் பித்ர் என்பதன் நோக்கமும் இந்த மாதத்திலே வறுமையை கட்டுப்படுத்துவதாகும்.
*பித்யா,கப்பாரா*
அது மாத்திரமல்ல ரமழானுடைய காலத்திலே நோன்பு பிடிப்பதற்கு முடியாத நிலையில் உள்ள நிரந்தரமான நோயாளிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் நோன்பிருப்பது நல்லதல்ல என்று நம்பகரமான வைத்தியர் சொன்னால் அவர் நோன்பிருக்க முடியாது. அதேபோல் வேறு சிலர் வயோதிபர்களாக இருப்பார்கள். அவர்கள் நோன்பிருந்தால் உடல் மேலும் பலவீனமடையும் என்று வைத்தியர் கூறியிருப்பார். இத்தகையவர்கள் நோன்பை விட்டுவிட்டு ‘பித்யா’ கொடுக்க வேண்டும். பித்யா என்றால் ஒரு நாளைக்காக ஒரு ஏழைக்கு உணவளிப்பதாகும்.இவ்வாறு 30 நோன்புகளை ஒருவர் விட்டால் 30 ஏழைகளுக்கு அவர் உணவளிக்க வேண்டும். உணவளிப்பது ஒரு நேரத்தினுடைய உணவாக இருக்க வேண்டும்.
அருமை சகோதரர்களே!
இவை ரமழானுடைய காலத்திலே எமது சொத்துக்களில் இருந்து நாம் வெளியேற்ற வேண்டிய பகுதிகளாகும். ரமழானின் பணத்தோடு தொடர்பான அடுத்த விடயம் ‘கஃப்பாரா’ வாகும். கஃப்பாரா என்றால் நோன்பு நோற்ற ஒருவர் மன முரண்டாக நோன்பை முறித்தால் அவர் கட்டாயமாக பின்வரும் மூன்றில் ஒன்றைச் செய்தல் வேண்டும்.
முதலாவது, ஓர் அடிமையை விடுதலை செய்தல் வேண்டும்.
அல்லது, இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் 60 மிஸ்கீன்களுக்கு அவர் உணவளிக்க வேண்டும்.
அருமை சகோதரர்களே!
முதலாவது, நபி(ஸல்) அவர்கள் கட்டுப்பாடில்லாமல் வீசக்கூடிய காற்றைப் போன்று தர்மம் செய்திருக்கிறார்கள்.
இரண்டாவதாக, ஸதகதுல் ஃபித்ர், மூன்றாவதாக பித்யா, அடுத்து கப்பாரா என்று வருகின்ற பொழுது இவை அனைத்தும் ஏழைகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளாகும்.
*நாட்டில் வறுமை*
அல்லாஹ்வுடைய நல்லடியார்களே!
நாம் ஏன் இந்த ரமழானுடைய மாதத்தில் இதனை பற்றி பேச வேண்டும்?
நாம் இருக்கின்ற இந்த நாட்டின் சூழ்நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த நாட்டிலே அண்மைக் காலங்களில் மிகப் பயங்கரமான வறுமை நிலவிக் கொண்டிருக்கின்றது. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இரண்டு வேளை சாப்பிடுகிறார்கள்.இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் ஒருவேளை சாப்பிடுகிறார்கள். அண்மைக் காலத்திலே
செய்யப்பட்ட ஓர் ஆய்வின்படி இந்த நாட்டில் சுமாராக நூற்றுக்கு 27 குடும்பங்கள் தம்முடைய உணவு வேளைகளை குறைத்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே!
தமது லைட் பில்லை, தண்ணி பில்லை கட்டிக் கொள்ள முடியாத, பிள்ளைகளுடைய
கல்விக்காக ஒதுக்க வேண்டிய பணத்தை ஒதுக்கிக் கொள்ள முடியாத, பாமஸிகளிலே சென்று தமது மருந்துகளை எடுத்துக் கொள்ள முடியாத பல குடும்பங்கள் உள்ளன. பிள்ளைகள் பசியின் காரணமாக அழுது கொண்டு தமது பெற்றோரிடம் மண்றாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பிள்ளைகளது அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்வதற்கு அந்த பெற்றோரிடத்திலே வசதிகள் இல்லை என்ற நிலையிலே எத்தனை ஆயிரம் குடும்பங்கள் இந்த நாட்டிலே அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த ரமழானுடைய காலத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
*வறுமை என்ற கொடுமை*
அல்லாஹ்வின் நல்லடியார்களே!
வறுமை என்பது ஒரு மிகப்பெரிய
டிஸாஸ்டர். முக்கியமான பிரச்சினை. ரசூல் (ஸல்) அவர்கள் வறுமை வேண்டாம் என்று அடிக்கடி துஆச் செய்தார்கள். ‘யா அல்லாஹ் இறை நிராகரிப்பை விட்டும், வறுமையை விட்டும் உன்னிடத்திலே பாதுகாவல் தேடுகின்றேன். நான் சீமான் தனத்தை உன்னிடம் கேட்கின்றேன். மற்றவர்களிடத்தில் கையேந்தாமல், சுயமரியாதையோடு வாழுகின்ற நிலையை உன்னிடத்தில் கேட்கின்றேன் என்று நபி (ஸல்)அவர்கள் அடிக்கடி துஆ கேட்பார்கள் .
ஏனென்றால், ஒரு மனிதனிடத்தில் வறுமை வந்துவிட்டால் அவனுடைய ஈமான் பாதிக்கப்படும். ரசூல் (ஸல்)அவர்கள் ‘ஏழ்மையானது இறை நிராகரிப்பாக மாறும் சாத்தியம் உண்டு’ என்று சொன்னார்கள்.
ஒருவருக்கு ஏழ்மை வந்து விடுகின்ற பொழுது அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் சாத்தியம் இருக்கின்றது என்ற கருத்தையே இங்கு நாயகம் (ஸல்)அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் .
ஜாஹிலிய்யா கால மக்கள் தமது பெண் பிள்ளைகளை கொலை செய்தார்கள். அதற்கான காரணத்தை அல்லாஹ் குர்ஆனிலே கூறும் போது. ‘வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளை நீங்கள் கொலை செய்ய வேண்டாம்’ என்று சொல்கிறான். எனவே,ஒரு மனிதன் கருவிலே வளர்கின்ற குழந்தையை கருச்சிதைவு செய்வதற்கும், பெற்ற குழந்தையை கொலை செய்வதற்கும் இந்த வறுமை ஒரு காரணமாக அமைகின்றது. அது ஜாஹிலிய்யா காலத்தில் மாத்திரமல்ல நமது காலத்திலும் நடைபெறுகிறது. இது எவ்வளவு ஒரு பெரிய அநியாயம் என்பதை நாங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே,
நபி (ஸல்)அவர்கள், ‘ஒரு மனிதன் கடனாளியாகி விட்டால் பேசினால் பொய் பேசுவான்.வாக்குறுதியளித்தால் வாக்குறுதியை மீறுவான்’ என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புஹாரியிலே பதிவு செய்யப்பட்டுள்ளது.’கடன் பட்டவன் நெஞ்சு’ என்று தமிழில் சொல்வார்கள். கடன் பட்டவனுக்குத் தான் அதன் ஆபத்து பற்றி தெரியும்.
கௌரவமானவர்களே!
எமது பக்கத்து வீட்டிலே, எமது பக்கத்துத் தெருவிலே நாங்கள் நடந்து செல்கின்ற பொழுது எத்தனை பேர் கைக் குழந்தைகளோடு, தங்களுடைய மானத்தை மரியாதையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு மற்றவர்களிடத்திலே கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
*மூன்றாம் கடமை ஸகாத்*
அல்லாஹ்வுடைய நல்லடியார்களே!
நாம் எல்லோரும் நோன்பிருக்கிறோம். நோன்பு இஸ்லாத்தின் நான்காவது கடமை.ஆனால், ஸகாத் அதற்கு முன்னர் உள்ள மூன்றாவது கடமையாகும்.
நோன்பு பற்றி நாங்கள் அதிகமாக அக்கறை எடுக்கிறோம். நோன்பினுடைய முக்கியத்துவம், நோன்பினை முறிக்கும் காரியங்கள், நோன்பில் செய்யப்பட வேண்டிய அமல்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள எவ்வளவோ அக்கறை எடுக்கிறோம். தராவீஹிற்காக எவ்வளவோ போட்டி போடுகின்றோம். நிச்சயமாக அது வரவேற்க்கத்தக்கது. நிச்சயமாக அது ரமழானுடைய காலத்தில் செய்யப்பட வேண்டும்.
ஒரு சொட்டு தண்ணீர் நமது தொண்டைக்குள் இறங்கி விட்டால் நாம் எவ்வளவு இஸ்திஃபார் செய்வோம். யா அல்லாஹ், நான் தெரியாமல் குடித்து விட்டேனா அல்லது தெரிந்து குடித்து விட்டேனா என்று அலட்டிக்கொண்டு இந்த ரமழானுடைய நோன்பை நாம் பாதுகாப்பதற்கு எவ்வளவோ முயற்சிக்கின்றோம்.
ஆனால், ஸகாத் என்பது இந்த நோன்பிற்கு முன்னால் உள்ள மூன்றாவது அடிப்படையான ஒரு கடமை. இது ஐந்து தூண்களிலே ஒன்று. ரமழானுக்காக நாம் திட்டமிடுகிறோமே. ரமழானுக்காக நாம் எத்தனையோ பயான்கள் செய்கின்றோம்.ஆனால், இந்த ஸகாத் என்றால் என்ன? இதனுடைய முக்கியத்துவம் என்ன? அதனை கொடுக்காது விட்டால் ஏற்படுகின்ற பயங்கரங்கள் யாவை? என்று நாம் எந்த அளவுக்கு சிந்தித்திருக்கின்றோம்?
எமது ஆத்மாவை பரிசுத்தப்படுத்துவதற்கும் அல்லாஹுத்தஆலாவை நெருங்குவதற்கும் நாம் கட்டாயமாக முயற்சி செய்ய வேண்டும். ஆனால் எமது சொத்து செல்வங்களை பரிசுத்தப்படுத்துவதற்கு என்ன முயற்சிகளைச் செய்திருக்கிறோம்? இந்தக் கேள்வியை நாங்கள் கேட்டுப் பார்ப்போம்.
இமாம் ஷாபிஈ போன்ற பெரும் பெரும் இமாம்கள் நபிகளார்(ஸல்) கூறியதாக பதிவு செய்திருக்கிறார்கள்:- ஒரு மனிதனுக்கு ஸகாத் வாஜிபாகி அந்த ஸகாத்தினுடைய பணத்தை வெளிப்படுத்தாமல் தன்னுடைய ஏனைய சொத்துக்களோடு அவன் கலந்தால் ஏனைய சொத்துக்களை அந்த ஸகாத் பணம் அல்லது பொருள் சீர்குலைத்துவிடும் என்று நபிகள் (ஸல்) கூறியிருக்கிறார்கள்.
எனவே, அவசரமாக, ஸகாத்தை மிகச்சரியாக, துல்லியமாக கணித்து வெளிப்படுத்துகின்ற பொறுப்பு எமக்கிருக்கிறது. நாம் அது தொடர்பாக எத்தனை ‘செமினார்கள்’ நடாத்தியிருக்கிறோம்.
எத்தனை ஆலீம்களிடத்தில் அணுகி எம்மிடம் இவ்வளவு சொத்துக்கள் காணப்படுகின்றன. நான் எத்தனை வீதத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.அந்த விஷயத்தை எந்தளவுக்கு நாங்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றோம்?
*ஸகாத் கமிட்டிகள்*
இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸகாத் கமிட்டிகள் இயங்கி வருகின்றன. ஆனால் சுமாராக பத்து சதவீதமான ஸகாத் கமிட்டிகள் தான் ‘சிஸ்டமைஸ்’ பண்ணப்பட்ட (ஒழுங்குபடுத்தப்பட்ட) நிலையில் மிகவும் ஒழுங்காக இயங்குகின்றன.
இலங்கையில் முஸ்லிம் சமுதாயத்திலே இருந்து பெறப்பட வேண்டிய ஸகாத் தொகையிலே சுமாராக 15% அளவு தான் ஸகாத்தாக வெளிப்படுத்தப்படுவதாக அண்மைக் காலத்து ஆய்வுகள் கூறுகின்றன.
அப்படியாக இருந்தால் நானும் நீங்களும் சிந்திக்க வேண்டும். ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய இந்த சரியான பங்கை எமது தனவந்தர்களில் மிகச் சரியாக எத்தனை பேர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்?
அல்லாஹ்வுடைய நல்லடியார்களே!
ஒருவரிடத்தில் ஒரு வருடமாக 100 கோடி ரூபா பணமாக அல்லது சொத்தாக இருந்தால் அவர் இரண்டரை கோடி ரூபாவை ஸகாதாக கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டும். மாதாமாதம் சம்பளம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு வருடத்துக்குரிய தங்களுடைய சம்பளத்தை கூட்டி, வருடத்துக்கு போன செலவைக் கழித்து எஞ்சும் தொகை பத்தரை பவுன் நகைக்கு நிகரான பெறுமதியைக் கொண்டதாக இருந்தால் அவர் இரண்டரை வீதத்தை ஸகாதாக வெளிப்படுத்தியாக வேண்டும். லட்சக்கணக்கான சம்பளம் எடுப்பவர்கள், கட்டடங்களுக்கு வாடகை எடுப்பவர்கள், எஸ்டேட்கள் வைத்திருப்பவர்கள், மிகப்பெரிய கோழிப் பண்ணைகளை வைத்திருப்பவர்கள், இரால் பண்ணைகளை வைத்திருப்பவர்கள் இவர்கள் எல்லோரும் ஸக்காத்தை மிக சரியாக கணித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இவர்களுடைய ஸகாத்தின் தற்போதைய நிலை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
*ஸகாத் கொடுக்காவிட்டால்*
அல்லாஹ்வுடைய நல்லடியார்களே!
இந்த விஷயத்தில் நாம் பொடுபோக்காக இருப்போமேயானால் நாளை மறுமையில் ஏற்படக்கூடிய தண்டனையை பற்றி குர்ஆன் சொல்கிறது. யாரெல்லாம் ஸகாத்தை கொடுக்க வேண்டிய பொருட்களிலிருந்து ஸகாத்தை கொடுக்காமல் பதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களுக்கு நாளை மறுமையிலே அந்த ஸகாத்தினுடைய அந்த பொருட்களை எல்லாம் நெருப்பில் காய்ச்சப்பட்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப் புறங்களிலும் ஒத்தடம் இடப்படும் என்று அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
ஒரு மனிதனிடத்திலே ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள்,
இருக்கின்றன. ஆனால் அந்த ஆடுகளிலே மாடுகளிலே ஒட்டகங்களிலே வெளிப்படுத்த வேண்டிய ஸகாத்தை அவர் மிகச் சரியாக வெளிப்படுத்தவில்லையாயின் மறுமையிலே அவரை அந்த மிருகங்கள் கால்களால் மிதிக்கும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனில் அல்லாஹ் 30 இடங்களில் ஸகாத்தை பற்றி சொல்கின்றான். அதில் 27 இடங்களிலே தொழுகையோடு சேர்த்துத் தான் சொல்கிறான். ‘தொழுகையை நிலை நிறுத்துங்கள் ஸகாத்தை கொடுங்கள்’ என்று சொல்கின்றான்.
தொழுகைகளை நாங்கள் எவ்வளவு தூரம் எமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு, அல்லாஹுத்தஆவுடனான நெருக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ப்ரிச்சுவல் பகுதியை கவர் பண்ணக் கூடியதாக அமைத்துக் கொள்கிறோமோ அதேபோன்று எமது பொருளாதார சுபீட்சத்திற்கு ஸகாத் என்பது அவசியம். அதனை புறக்கணிக்க முடியாது என்பதனால் தான் அல்லாஹ் தொழுகையை பற்றி பேசுகின்ற அதே வேகத்தில், அதே அளவுக்கு குர்ஆனிலே ஸகாத்தை பற்றி பேசுகின்றான். ‘நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தையும் கொடுங்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்வதை நாம் பார்க்கலாம்.
*வீண்விரயம் ஹராம்*
அல்லாஹ்வின் நல்லடியார்களே!
ஸகாத்தை கொடுக்காமல் இருப்பது ஒரு புறம். இன்னொரு புறத்திலே எதற்கு செலவழிக்க வேண்டுமோ அதற்கு செலவழிக்காமல் இந்த ரமழானில்
பணத்தை வீண் விரையம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
அல்லாஹ் குர்ஆனிலே ‘யாரெல்லாம் வீண் விரயம் செய்கின்றாரோ அவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்கள்’ என்று சொல்கிறான். ‘மைக்கார் மை பெற்றோல்’ (எனது கார் எனது பெட்ரோல்) என்று யாரும் யோசிக்க முடியாது. நான் நிலத்தில் வெற்றி வியர்வை சிந்தி, இராப்பகலாக கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறேன். எனவே இந்த பணத்தை நான் நினைத்தது போல் செலவு செய்வேன் என்று யாரும் யோசிக்க முடியாது. காரணம் இந்த உலகுக்கு வருகின்ற போது வெறும் கைகளோடு வந்தோம். இந்த உலகத்தை விட்டு போகின்ற பொழுது வெறும் கையோடு தான் நாம் போவோம்.
நிச்சயமாக எங்களுக்கு அல்லாஹ் தந்திருக்கின்ற இந்த சொத்து சுகங்கள் எல்லாம் எமது ‘டெலன்ட்’ திறமையால் வந்தவை அல்ல. அல்லாஹ் எமக்கு தந்த திறமைகளினால் தான் அவற்றை சம்பாதித்துக் கொண்டோம். அவன் விரும்பிய விதத்தில் தான் அவற்றை சேகரிக்க வேண்டும்.
அவன் விரும்பிய விதத்தில் தான் அவற்றை செலவழிக்கவும் வேண்டும். இந்த உலகத்தில் இருந்து நாம் போகின்ற பொழுது நாம் வழங்கிய தான தர்மங்கள் மாத்திரம் தான் நாளை மறுமையிலே எங்களுக்காக காத்திருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
*உம்ராவும் வறுமையும்*
அல்லாஹ்வின் நல்லடியார்களே!
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு செய்தியை அழுத்தமாக சொல்ல விரும்புகின்றோம். இந்த மாதத்தில் உம்ராவுக்கு செல்வதற்கு பலர் நிய்யத்து வைத்திருக்கலாம். உம்ரா என்பது சிரேஷ்டமான அமல். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அல்லாஹுத்தஆலாவை நெருங்கக் கூடிய நல்லதொரு வழி. ஆனாலும் அது ஒரு சுன்னத். அதை செய்யா விட்டால் எந்த ஒரு பாவமும் இல்லை. ஆனால் சமூகத்திலே வறுமையால், அன்றாடம் சாப்பிடுவதற்கு கூட வசதி இல்லாமல் மூன்று நேரம் அல்ல ஒரு நேரம் கூட சாப்பிடுவதற்கு வசதி இல்லாமல் பலர் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்காக வேண்டி எமது பணம் செலவளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் ஒரு உம்ராவுக்காக வேண்டி ஒரு மில்லியன் ரூபாவை ஒருவர் செலவழித்துக் கொண்டு முழு குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு செல்வது என்பது எந்தளவு தூரம் நல்லது என்பதை உங்களுடைய சிந்தனைக்கு நான் விட்டு விடுகின்றேன்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்) முக்கியமான தாபிஈ. அவர் ஹஜ்ஜூக்காக தன்னுடைய தோழர்களோடு சென்று கொண்டிருக்கிறார். செல்கின்ற வழியில் குப்பைத் தொட்டியில் இருக்கின்ற ஒரு இறந்த ஒரு கோழியை எடுத்துக் கொண்டு ஒரு பெண் போகும் காட்சியைக் கண்டார்கள். அந்த பெண்ணுக்குப் பின்னால் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் போய்க் பார்க்கிறார்கள். அங்கு வீட்டில் அவளுடைய சகோதரனும் அந்த பெண்ணும் இருக்கிறார்கள். ஏன் நீங்கள் இறந்த கோழியை கொண்டு வந்து சாப்பிட வேண்டும் என்று கேட்டதற்கு எங்களுடைய தகப்பன் இறந்து விட்டார். எங்களுக்கு செலவழிப்பதற்கு வசதி இல்லை. எனவே இந்த ஹராத்தை வழக்கமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இங்கு குப்பைத் தொட்டியில் இருக்கின்ற இந்த உணவு தான் எமது அன்றாட உணவாக இருக்கின்றது என்று சொன்ன சந்தர்ப்பத்திலே அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் தன்னிடத்தில் இருந்த ஆயிரம் தங்கக் காசுகளில் 20 தங்கக் காசுகளை (தனது ஊருக்கு திரும்பிப் போக) வைத்துக் கொண்டு மிகுதி 980 தங்க காசுகளை அப்பெண்ணுக்குக் கொடுத்து விட்டு இப்படிப்பட்ட நிலையிலே எமக்கு இந்த ஹஜ்ஜை விடவும் இவர்களது தேவையை நிறைவு செய்வது தான் முக்கியம் என்ற கருத்தை சொல்லி விட்டு பின்னர் தனது நாட்டை நோக்கி திரும்பி சென்றதாக அறிகிறோம்.
*வறுமையைக் கட்டுப்படுத்த*
அல்லாஹ்வுடைய நல்லடியார்களே!
எமது சமுதாயத்தினை பொறுத்தவரையில் வறுமையை ஒழிப்பதற்கு எந்த விதமான திட்டமிடலையும் கண்டு கொள்ள முடியாமல் இருப்பது மிக கவலையான விடயமாகும்.
முதலாவது, தொழில் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும். இரண்டாவது, மக்களுடைய
கல்வித்தரத்தை அதிகரிக்க வேண்டும். மூன்றாவது, ‘நபக்கா’ (ஒருவர் தனது பராமரிப்பில் இருப்பவர்களுக்கு கட்டாயமாக செய்ய வேண்டிய செலவுகள்) பற்றிய சட்டங்களை இந்த சமூகத்தில் பேச வேண்டும். அதனைப் பற்றி விரிவாக பேசுவதற்கான நேரம் இதுவல்ல.
நான்காவது தான் ஸகாத்தை பற்றி நாம் யோசிக்க வேண்டும்.
இப்படியான இந்த ஏற்பாடுகள் எல்லாவற்றையும் நாம் திட்டமிட்டு அல்லாஹ்வுடைய கிறுபையின் காரணமாக இந்த நாட்டிலே நடைமுறைப்படுத்துவோமாக இருந்தால் நாம் நிச்சயமாக கண்ணியம் மிக்க, தலைநிமிர்ந்த, எல்லா வகையிலும் போசனையுள்ள ஒரு சமுகமாக இருப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
*யாரும் தர்மம் செய்யலாம்*
அல்லாஹ்வின் நல்லடியார்களே!
இப்படிச் சொல்கின்ற பொழுது தனவந்தர்கள், கோடிஸ்வர்கள் மாத்திரம் தான் தர்மம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஒருவர் ஒரு திர்ஹத்தை ஸதகா செய்கின்றார். இன்னொருவர் ஒரு லட்சம் திர்ஹத்தை ஸதகா செய்கின்றார்.ஒரு திர்ஹத்தை ஸதகா செய்தவர் தான் சொர்க்கத்திற்கு முந்திக் கொண்டார். காரணம் அவரிடம் இருப்பதே ஒரு திர்ஹம் தான்.
ஆனால் ஒரு லட்சம் திர்ஹத்தை வைத்திருப்பவரிடம் சொத்து செல்வங்கள் தாராளமாக இருக்கின்றன. இருந்தாலும் கூட மிகக் குறைவான வசதிகளை கொண்டவர் தன்னுடைய தர்மத்தை செய்கின்ற பொழுது அந்த தர்மம் ஏற்றதாக இருக்கும் என்ற கருத்தை (ஸல்)அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
எனவே, அன்பான சகோதரர்களே!
இந்த ரமழானுடைய காலத்திலே தக்வாவுடைய அந்தஸ்தை நாம் அடைய வேண்டுமானால் கட்டாயமாக நாம் தொழுவதிலே கவனம் செலுத்துகின்ற அளவுக்கு, குர்ஆன் ஓதுவதில் கவனம் செலுத்துகின்ற அளவுக்கு, எமது உள்ளத்திலே இரக்கம், ஈகை, பாசம், மற்றவர்கள் மீதான அக்கறை இவை எல்லாம் தேவைப்படுகின்றன.
ஹிங்கன மாஸய (பிச்சைக்காரர்களுடைய மாதம்) என்று சொல்லப்படக்கூடிய அளவுக்கு சிறு குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு, வயோதிபர்களோடு நடமாடிக் கொண்டு தெருவோரங்களிலே யாசகம் செய்யப்படுகிறது. முஸ்லிமல்லாதவர்கள் கூட இப்படிப்பட்ட வசதிகளுடைய சமுதாயத்தில் இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வா என்று சொல்லக்கூடிய அளவுக்கு எமது நிலை மாறியுள்ளது என்றால் அது நிச்சயமாக துரதிஷ்டமாகத் தான் இருக்க முடியும்.
அல்லாஹுத்தஆலா இந்த புனிதமான ரமலானிலே எல்லா வகையிலும் அவனை நெருங்கக்கூடிய அமல்களையும் தான தர்மங்களையும் செய்து,அவனது நெருக்கத்தை அடைந்த கூட்டத்தில் எங்கள் அனைவரையும் ஆக்கியருள்வானாக.
யா அல்லாஹ்! எங்களுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக, எங்களுடைய சொத்து செல்வங்களை ஹலாலாக திரட்டுகின்ற அதேநேரத்தில் ஹலாலான முறையிலே அவற்றிற்கேயுரிய ஹக்குகள் எல்லாவற்றையும் கொடுத்து உன்னை நெருங்கிய கூட்டத்தில் எங்கள் அனைவரையும் மாற்றி அருள்வாயாக. இந்த ரமழானுடைய முழுப் பயனை பெற்றுக் கொண்ட கூட்டத்தில் நம் அனைவரையும் ஆக்குவாயாக!
தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக.
காஸா பிரதேசத்தில் பாலஸ்தீனிலே அல்லல்படக்கூடிய மக்களுக்கு நீ உதவியாக இருப்பாயாக. அவர்களை அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படக் கூடியவர்களை முற்றும் முழுதாக அழித்து விடுவாயாக!
ஆமீன் யாரப்பல் ஆலமீன்!




