அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்(நளீமி)
(சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 2004.12.31 அன்று முதல் தினகரன் பத்திரிகையில் தொடராக பிரதி வெள்ளிக் கிழமைகளில் வெளிவந்த தொடர் கட்டுரை)
சுனாமி எனப்படும் கடற் பேரலைகள் உயிர், உடல், உள, பொருள் பாதிப்புகளை உண்டு பண்ணியிருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களும் மற்றோரும் கூட அல்லாஹ் ஏன் இப்படியான பேராபத்தைத் தந்தான் என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். சிலரது இறை விசுவாசம் மென்மேலும்
அதிகரிக்க மற்றும் சிலரோ விரக்தியுடன் பாரிய மனத் தாக்கங்களுடன் காலம் கடத்துகிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் இந்தவகை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்வது உசிதமாகும். இறை விசுவாசிகளாக தொடர்ந்திருப்பதற்கும் வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் இவ்விளக்கம் ஓரளவு துணைபுரியலாம்.
உலக நியதி
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தொற்று நோய்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் என்பன இவ்வுலக வாழ்க்கையில் அல்லாஹ் உண்டு பண்ணிய இயற்கை நியதிகள் என்பதை முஃமின்கள் ஏற்க வேண்டும். உலக வாழ்வு என்பது ஒரு சோதனைக் கூடமே. இங்கு இன்பம், துன்பம், உயர்வு, நோய், தேகாரோக்கியம், வறுமை, செழுமை, உறவு, பிரிவு போன்றன மாறி மாறி வரும். வாழ்வு என்பது மலர்கள் தூவப்பட்ட பஞ்சனை மெத்தையல்ல. அது அல்லாஹ்வால் பல்வேறு சவால்களோடு கூடியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சவால்கள் அனைத்துக்கும் மத்தியில் இவ்வுலக வாழ்வு தற்காலிகமான ஒரு சரித்தரம் என்றும் மறுமை வாழ்வே நிரந்தரமானது என்றும் முஃமின் நம்ப வேண்டும்.
உலக வாழ்வு சவால்கள், பிரச்சினைகள் கொண்டதாக அமைக்கப்பட்டிருப்பதற்கு மனிதன் மறுமையை எண்ணி வாழ வாழ வேண்டும் என்பதே காரணமாகும். உலக வாழ்வு மட்டுமே வாழ்வு என்று நினைக்கும் ஒருவர் இந்தப் பிரச்சினைகளின் முன் புழுவாகத் துடிக்க நேரிடுகின்றான். வாழ்க்கையை அல்லாஹ் சிக்கல்களுடன் பின்னிப்
பிணைத்துத் தான் வைத்திருக்கின்றான். மறுமையில்தான் முழுமையான மன நிறைவு கிட்டும் என நினைப்பவர் பொறுமையைக் கடைபிடித்து அதன் நன்மையை அல்லாஹ்விடம் எதிர்பார்த்து வாழ்க்கையை நிதானத்துடன் நடத்துவார். அத்தகையவர்களது வாழ்வு ஒளிமயமானதாக இருக்கும்.
எனவே, நபி (ஸல்) அவர்கள் ‘பொறுமை என்பது ஜோதியாகும்.’ (புகாரி) என்றார்கள். அச்சம் பட்டிணியை ஏற்படுத்துவதாகவும் பொருள், உயிர் என்பவற்றில் சோதனைகளை கட்டாயமாக உண்டு பண்ணுவதாகவும் அல்லாஹ் குர்ஆனில் கூறிவிட்டு பொறுமையாக இருப்பவர்களுக்க நன்மாராயம் கூறும்படியும் கட்டளையிடுகிறான்.
(பார்க்க அல்குர்ஆன், அல்பகரா 155) மேலும் வாழ்வையும் மரணத்தையும் சோதனைக்காகப் படைத்திருப்பதாகவும்
நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு என்றும் குர்ஆனில் வேறு ஓர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான். (முல்க் – 2) எனவே மனதில் ஆழ்ந்த கவலையைத் தோற்றுவிக்கும் நிகழ்வுகள் உலக வாழ்வின் பிரிக்க முடியாத அங்கங்கள் என்பதை ஏற்று வாழ்வது முஸ்லிமின் கடமையாகும்.
அருளாகிய சுனாமி
விபத்துக்கள், நோய்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதனால் எவ்விதத்திலும் தவிர்க்க முடியாத நிகழ்வுகள் இறைவனின் அருளாகவும் பாவங்களுக்கான பரிகாரமாகவும், மறுமை ஈடேற்றத்துக்கு வழிவகுப்பவையாக இருப்பதாகவும் இஸ்லாம் கூறுகிறது. இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய சில நபி மொழிகள் இந்த உண்மையை புலப்படுத்துகின்றன.
உதாரணமாக ‘உயிர்த்தியாகிகள் (ஷஹீதுகள்) ஐந்துவகைப்பவடுவர். கொள்ளை என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர், வயிற்றில் ஏற்படும் நோயினால் இறப்பவர்கள், நீரில் மூழ்கி இறப்பவர்கள், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவர்கள், இஸ்லாமிய யுத்த களத்தில் போராடி இறப்பவர்கள்.’ (புகாரி, முஸ்லிம்) என்று ஓர் இடத்திலும், தீக்காயங்களுக்கு உள்ளாகி இறப்பவர்கள், பிள்ளைப் பேறின் போது (சிசுவோடு) இறக்கும் கர்ப்பிணிப் பெண் ஆகியோரும் ஷஹீதுகள் என்று வேறு ஓர் இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதாவது இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகள் பெறும்பாலும் பேரதிர்ச்சியைத் தருபவையாக அமையும். மேலும் உயிர் பிரியும் போது உடலுக்கு அதிக வலியையும் வருத்தத்தையும் கொடுக்கும். அவை அல்லாஹ்வின் நாட்டப்படி மனிதன் மீது ஏற்படுத்தப்படுவதனால் அதற்குப் பகரமாக அல்லாஹ் ‘ஷஹீது’ என்ற உயர் பதவியை அவனே வழங்குகிறான். இது அவனது பேரருளுக்கான சிறந்த அத்தாட்சியாகும். இப்படியான அனர்த்தங்களில் சிக்குபவர்கள் தமக்கு இறை அருளும் நற்பேறும் கியாமத் நாளில் நிச்சயமாகக் கிட்டும் என நம்பி மன நிறைவடையலாம்.
மேலும் ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் பிளேக் நோய் பற்றிக் கூறுகையில், ‘அல்லாஹ் தன்னை நாடியவர்கள் மீது அனுப்பி வைக்கும் ஒரு தண்டனையாக அது அமையும். இறை விசுவாசிகளுக்கு அல்லாஹ் அதனை அருள் (ரஹ்மா) ஆக அமைந்திருக்கிறான். எந்தவொரு அடியானாவது பிளேக் நோய் பரவியுள்ள ஒரு பிதேசத்தில் அகப்பட்டு அவ்வூரிலிருந்து வெளியேராமல் பொறுமையாக இருந்து பொறுமைக்கான கூலியை அல்லாஹ்விடமிருந்து எதிர்பார்த்தால் தனக்கு அல்லாஹ்வின் விதி அன்றி வேறு எதுவும் தன்னை அணுகாது என்றும் அறிந்த நிலையில்
அவ்வாறு செய்தால் அவருக்கு அல்லாஹ் ஷஹீதுக்கான கூலியை வழங்குவான்.’ (புகாரி) எனத் தெரிவித்தார்கள்.
எனவே, இங்கு அடியார்கள் தாமாகத் தேடிக் கொள்ளாத, ஆனால் அல்லாஹ் நாடி அனர்த்தங்களை, ஆபத்துக்களை அவர்கள் மீது உண்டு பண்ணும்போது இத்தகைய வெகுமதியை அவன் வழங்குகிறான். ஆனால் அந்த அனர்த்தங்களுக்கு உள்ளாகுபவர்கள் நல்லடியார்களான விசுவாசிகளாகவும் பொறுமை சாலிகளாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகக் கொள்ளப்படும்.
பாரிய அனர்த்தங்கள் அல்லது அழிவுகள் ஒரு புறமிருக்க ஒரு முஃமினுக்கு வரும் சின்னஞ் சிறிய இடுக்கன்கள் கூட அவனுக்கு அனுகூலமானதாகவே அமையும் என்பது பின்வரும் நபிமொழி தரும் பொருளாகும்.
‘ஒரு முஸ்லிமைப் பாதிக்கும் உடற் களைப்பு, சஞ்சலம், துயரம், பிறர் விளைவிக்கும் துன்பங்களால் ஏற்படும் உடல், உள பாதிப்புக்கள் மன அழுத்தம் போன்றனவற்றிற்குப் பகரமாக அவனது குற்றங்களை அல்லாஹ் மன்னிப்பான்.’ (புகாரி முஸ்லிம்)
எனவே, யாவும் நலவுக்கே என்ற மனோபாவத்தில் ஒரு முஃமின் இருப்பதோடு அவற்றின்போது பொறுமை காப்பது அவனது சிறு பாவங்களுக்கான குற்றப்பரிகாரமாகவும் அமைந்திவிடும்.
இக்கருத்தை நபியவர்கள் ‘ஒரு முஃமினான ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உயிர்கள், சந்ததிகள், சொத்து செல்வங்கள் போன்றவற்றில் சோதனைகள் தொடர்ந்தும் உண்டு பண்ணப்பட்டால் அவர்கள் அல்லாஹ்வை சந்திக்கும் போது அவர்கள் மீது எவ்வித குற்றங்களும் (மாசுமறுக்களும்) இல்லாத நிலையில் தான் அவர்கள் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார்கள்’ (திர்மிதி) என்ற நபிமொழியிலும் தெரிவித்துள்ளார்கள்.
இவற்றின் பொருள், நோய்க்கு மருந்து செய்யாமல், அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் அல்லாஹ்வின் விதியில் பாரத்தைப் போட்டுவிட்டு வாளாதிருப்பவர்களுக்கும் இந்தப் பேறு கிடைக்கும் என்பதல்ல. மாறாக உலகின் வாழ்வாங்கு வாழ்வதற்கான தன்னாலான சகல ஏற்பாடுகளையும் செய்த போதிலும் அவை தோல்வி காணும் போது அதாவது, இறை சித்தம் யாவற்றையும் மிகைக்கும் போது மாத்திரமே இந்தப் பேறுக்கு அவர்கள் அறுகதையுடையவராவார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
உலக வாழ்வின் இத்தகைய தவிர்க்க முடியாததும் எதிர் பாராததுமான நிகழ்வுகள் மனித மனங்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்து மறுமையின் நிரந்தரத் தன்மையை சதாவும் மனதில் இருத்தி வாழ்பவர்கள் மறுமையில் பெறும் கூலிக்கு நிகரில்லை. ‘நிச்சயமாக பொறுமையாக இருப்பவர்கள் தமக்கான கூலியை எவ்வித வரையறைகளுமின்றி நிரப்பமாகப் பெறுவார்கள்’ (ஷுமர் 10) என அல்லாஹ் கூறுகிறான்.
குழந்தைகளது இறப்பு
சுனாமி அனர்த்தத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பாவமறியாத பச்சிளம் பாலகர்கள் என்பதை யாமறிவோம். ராட்சத அலைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் அவர்கள் இறந்து போனார்கள். இந்த வேளையில் இந்தப் பாலகர்களது பிரிவை தாங்கமுடியாமல் அழுதுபுலம்பும் பெற்றோரும் மற்றோரும் கவனிக்க வேண்டிய சில உண்மைகள் உள. பிள்ளைகள் பெறுமதி மதிக்க முடியாத சொத்துக்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களைப் பெற்று வளர்க்க அரும்பாடுபட்ட பெற்றோர்களுக்கு அவர்களை பாக்கியங்களாகத் தந்தவனும்
வல்லவனான அல்லாஹ்தான்.
அவர்களது ஆயுளை ஏன் அவ்வளவு அவன் சுருக்கினான் என்பது அவனுக்கு மட்டுமே புரிய முடியுமான புதிர் தான். முதலில் அந்த இறை சித்தத்தை நாம் திருப்தியோடு ஏற்க வேண்டும். அவன் இரவலாகத் தந்த அந்த செல்வத்தை எம்மிடமிருந்து எப்படியும், எந்த வேளையிலும் எடுத்துக் கொள்ளும் பூரண உரிமை அவனுக்குண்டு. ஏன் என எமக்கு
கேள்வி கேட்க முடியாது. சுனாமியை அனுப்பி அவன் தன்பால் தனது உயிர்களை எடுத்துக்கொண்டான். ‘அவன் செய்யும் எதுபற்றியும் அவன் எவராலும் விசாரிக்கப்பட மாட்டான். அவர்கள் (அவர்கள் செய்யும் கருமங்கள் பற்றி)
விசாரிக்கபடுவார்கள்.’ (அல் அன்பியா- 23)
அபூதல்ஹாவின் ஒரு குழந்தை நோயினால் இறந்த போது அது நிமித்தம் மனைவி உம்மு ஸுலைம் கணவனுக்கு ஆறதல் கூறிய வார்த்தைகள் வருமாறு:- ‘ஒரு சாரார் தமது பொருளொன்றை இன்னொரு வீட்டாருக்கு இரவலாகக் கொடுத்ததாக வைத்துக் கொள்வோம். இப்போது (கொடுத்தவர்கள் அந்த இரவல் பொருளை திருப்பித் தரும்படி வேண்டும் போது தரமாட்டோம். எனக் கூற முடியமா?” என உம்மு சுலைம் கேட்ட போது கணவர் ஆட்சேபனை தெரிவிக்க முடியதே என்றார். அப்போது உம்மு ஸுலைம் ‘உங்களது (இறந்த பிள்ளை பற்றிய) பொறுமை சாதித்து பொறுமையின் கூலியை அல்லாஹ்விடம் எதிர்பாருங்கள்’ என்றார்கள்.
எனவே, முழுப்பிரபஞ்சத்திலுள்ள சடப்பொருட்கள், வாயுக்கள், உயிர்கள், மலக்குகள் போன்ற எல்லாப் படைப்பினங்களதும் உண்மையான சொந்தக்காரன் அல்லாஹ் மட்டும்தான். ‘வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானதாகும்.’ (பகரா 284) என அல்லாஹ் கூறுகிறான்.
எனவே இந்தக் கண்ணோக்கில் தான் மனிதன் தனக்குரியவை எனும் அனைத்தையும் பார்க்க வேண்டும். ஏதும் துன்பங்கள் பீடிக்கின்ற போது முஃமின் மொழிய வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கும் வாசகம் பற்றிக்கூறும் போதும்:
‘அவர்களுக்கு ஏதும் சோதனைகள் வந்தால், நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள், அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம் என்று கூறுபவர்கள்’ என்கிறான். (பகரா – 156)
இந்த உயர்ந்த மனோநிலைக்கும் அழகிய வார்த்தைக்குமான வெகுமதியாக ‘இவர்களுக்குத் தான் அவர்களது இரட்சகனிடமிருந்து புகழ்ச்சியும், பாவமன்னிப்பும் கிட்டும். இவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள்.’ (பகரா – 157) என்று கூறுகிறான்.
எனவே மனிதர்களுக்கு தரப்பட்டவை அவர்களுக்குரியவையல்ல என்ற ஆழமான நம்பிக்கை அவர்களது மனதில் வேரூன்றுகின்ற அளவுக்கு அவர்களது ஈமான் பலமடையும். கூலியும் கிட்டும்.
சிறுவர்களது இறப்பில் பொறுமை
பெற்றார் தமது குழந்தைகளை இழக்கும் நிலையில் அவர்கள் பொறுமை சாதிப்பது அளப்பரிய போறாக அது அமைந்துவிடும்:-
- ‘எனது அடியான் தனக்கு உலகில் மிக விருப்பத்துக்குரிய ஒருவரை இழக்கையில் பொறுமையாகவும் இருந்து பொறுமையின் கூலியை அல்லாஹ்விடமிருந்து எதிர்பார்த்தால், அவருக்கு என்னிடம் சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி எதுவுமில்லை.’என்று அல்லாஹ் கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
- ‘பெண்களே! உங்களில் எவருக்காவது மூன்று பிள்ளைகள் இறந்து அதற்காக பொறுமை சாதித்து அதன் கூலியை அல்லாஹ்விடமிருந்தும் எதிர்பார்த்தால் அவள் அதற்காக நிச்சயம் சுவர்க்கம்நுழைவாள்.’ (முஸ்லிம்)
- ‘நபியவர்களது காலத்தில் ஒரு பெண் மூன்று பிள்ளைகள் இறந்த போது நபியவர்கள் ‘அவள் நரகிலிருந்து தனக்கான பலமான பாதுகாப்பு அரணை அமைத்துக் கொண்டாள்’ என்றார்கள்.’ (முஸ்லிம்)
- நபி (ஸல்) ஒருதடவை யாருக்கு பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் இறக்கிறார்களோ, அல்லாஹ் மீது கொண்ட அருளின் காரணமாக அவரை சுவர்க்கத்தில் நுழைவிப்பான் எனக் கூறியபோது
இரண்டு பிள்ளைகள் இறந்தால் அப்பாக்கியம் கிட்டாதா?’ என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘ஆம் இரண்டு பேருக்கும் அப்படித்தான்’ என்றார்கள். (புகாரி, அஹ்மத்) - அடியானின் பிள்ளை இறந்துவிட்டால் (அப்பிள்ளையின் உயிரைக் கைப்பற்றிய மலக்குகளிடம்) ‘அல்லாஹ் எனது அடியானின் பிள்ளையின் உயிரை எடுத்து விட்டீர்களா?’ என்பான். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்பார்கள். மீண்டும் அல்லாஹ் அடியானின் இதயக் கொழுந்தை (மிக விருப்பத்துக்குறிய குழந்தையின்) உயிரையா பறித்தீர்கள்? என்பான். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்பர். அதற்கு அல்லாஹ் ‘உயிரைப்பறித்த போது எனது அடியான் என்ன சொன்னான்?’
என்று வினவுவான். அதற்கு அவர்கள் ‘உன்னை அவன் புகழ்ந்தான் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் (நாம் அல்லாஹ்வுக்குறியவர்கள், அவனிடமே திரும்பிச் செல்வோம்) என்றான்’ என்பார்கள். அப்போது அல்லாஹ் ‘எனது அடியானுக்கு சுவனத்தில் ஒரு வீட்டை நீங்கள் நிர்மானித்து அதற்கு பைத்துல் ஹம்த் (புகழ்ச்சியின் வீடு) எனப்பெயரிடுங்கள்’ என்பான். (திர்மிதி)
ஆகவே, அனர்த்தத்தில் தமது குழந்தைகளை இழந்து மனம் கலங்கிப்போய் இருப்பவர்கள் தமது குழந்தைகள் தமக்கு முன்பே சென்று சுவர்க்கத்தைத் தயார் செய்வதாக எண்ணிக்கொள்ள வேண்டும்.
தமது வாழ்நாளின் போதே தமது அருமைச் செல்வங்களாக குழந்தைகளை இழந்து கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் பெற்றோருக்கு நபியவர்கள் கூறும் வார்த்தைகள் வருமாறு:
அந்தக் குழந்தைகளைப்பார்த்து ‘நீங்கள் சுவர்க்கத்தில் நுழையுங்கள்’ என்று கூறப்படும். அப்போது அவர்கள் எமது பெற்றோர்கள் நுழையும் வரை (நாம் நுழையமாட்டோம்) என்பார்கள். அப்போது நீங்களும் உங்களது பெற்றோரும் சேர்ந்து நுழையுங்கள் எனப்படும். (நஸாஈ)
ஆகவே, சிறுவயதிலேயே இறப்பைத்தழுவும் குழந்தைககள் பாவமறியாதவர்களாக இருப்பதாலும் பிரிவுத்துயரை பெற்றோரால் சகிப்பது கஷ்டமாக இருப்பதாலும் இத்தகைய பாக்கியத்தை அல்லாஹ் அந்த பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறான்.
எனவே தான் இமாம் இப்னுல் கையிம் அவர்கள் ‘பெற்றோர் இறந்ததற்குப் பின்னர் குழந்தை உயிர் வாழ்ந்தாலும் அவர்களுக்குப் பயனளிக்கும்; அவர்களுக்கு முன்னர் இறந்தாலும் அவர்களுக்குப் பயனளிக்கும்’ என்றார்கள்.
சுனாமி ஒரு தண்டனை!
சுனாமி என்ற இந்த பேரனர்த்தம் இவ்வாறு அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கும் அவர்களது பாவமறியாத பாலகர்களுக்கும் அருளாக அமைந்தது என்பது உண்மைதான். ஆனால், சிலபோது இது சில போது இது அவனது நல்லடியார்களுக்கான தண்டனையாகவும் அமைந்துள்ளது என யூகிக்க முடிகிறது. இறைவனது நல்லடியார்களும் கூட இறந்து அல்லது துன்பத்திற்குள்ளாக்கினார்களே என்று சிலர் கேட்கும்போது இப்பதிலையே தர முடியும். (அதாவது அந்த நல்லடியார்கள் தானும் தம்பாடும் என தமக்குள் பாவங்களைப் பற்றிய கரிசனையின்றி, நன்மையை ஏவி தீமையைத் தடுக்காது வாழ்ந்தால் தீயவர்களுக்கு இறங்கும் தண்டனை இந்த நல்லடியார்களையும் சேர்த்தே தாக்கும். எனவே அல்லாஹ்!
‘உங்களில் அநீதி இழைத்தவர்களை மட்டுமே பாதிக்காத தண்டனையை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ (அன்பால் – 25) என்று கூறுகிறான்.
ஆகவே உலகுக்கு இறங்கும் தண்டனை அநீதியை சகித்துக் கொண்டு வாய்மூடி இருந்தவர்களையும் சூழ்ந்து கொள்ளும் அபாயம் இருப்பதாக அல்லாஹ் எச்சரிக்கிறான்.
ஒரு கப்பலில் பிரயாணம் செய்யும் கூட்டத்தார் பற்றி வந்த ஒரு ஹதீஸில், கப்பலின் கீழ் மாடியில் இருப்போர் தமக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது கப்பலை துளை செய்து கடல் நீரைப் பெற முயற்சிக்கையில் மேல் மாடியில் இருப்பவர்கள் அது கீழ்மாடியில் உள்ளவர்களது செயல் தானே என வாய்மூடி இருந்ததால் கப்பலினுள் வரும் தண்ணீரினால் எல்லோரும் சேர்ந்து மூழ்கும் ஆபத்து ஏற்படும் என நபி (ஸல்) கூறியுள்ள ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது.
‘மக்கள் ஓர் அனியாக் காரனைக் கண்டும் அவனைத் தடுக்காவிட்டால் அல்லாஹ் தனது தண்டனையை அனைவருக்கும் பொதுவாகவே (நல்லவர் கெட்டவர்என்று பாராது) அனுப்புவான்’ (அபூதாவூத், திர்மிதி) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தூதை நிராகரித்தவர்கள்
மேலும் இறைவனின் தூது கிடைத்தும் கூட, அதனை ஏற்காத அல்லது நடைமுறைப்படுத்தாதவோர் இறை கோபத்துக்கு உள்ளாகுவர் என்பதும் குர்ஆன் கூறும் கருத்தாகும்.
‘மேலும், எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். அந்த ஊர் மக்கள் தங்களுடைய அதிகப்படியான வாழ்க்கை வசதிகள் குறித்து கர்வம் கொண்டிருந்தார்கள். (இதோ! பார்த்துக்கொள்ளுங்கள்) இவை அவர்கள் குடியிருந்த இல்லங்கள். இவற்றில் அவர்களுக்குப் பின்னர் யாருமே வசிக்கவில்லை ஒரு சிலரைத் தவிர! இறுதியில் நாமே வாரிசுகளாகிவிட்டோம். மேலும், உம் இறைவன் எந்த ஊர்களையும் அழிப்பவனாக இருந்ததில்லை, அவற்றின் மத்தியில் மக்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக்காட்டும் தூதர் ஒருவரை அனுப்பாதவரையில்! ஊரில் வாழ்பவர்கள் கொடுமை புரிபவர்களாய் இருந்தாலே தவிர,அந்த ஊர்களை நாம் அழிப்பவர்களல்லர்!(28;58’59)
அந்தவகையில் பார்க்கும் போது, சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவுபடுத்துவதற்கான ஏற்பாட்டை தூதுவர்கள் அல்லது பிரசாரகர்கள் செய்தும் கூட அவர்களது முயற்சிகள் பலனளிக்காத வகையில் மக்கள் முரண்பிடிக்கின்ற போதே இறைதண்டனை வரும் என்றும் இந்த வசனம் கூறுகிறது. ‘நாம் (அந்த மக்களிடம்) ஒரு தூதுவரை அனுப்பாமல் அவர்களைத் தண்டிக்க மாட்டோம். (இஸ்ரா-15) என்று வேறு ஒரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
எனவே, அனர்த்தத்திற்கு உள்ளானவர்கள் மீது இறை தண்டனை தான் இறக்கப்பட்டிருக்கிறது என நாம் தீர்மானமாகச் சொல்வதற்கு முன்னர் அவர்களுக்கு இஸ்லாத்தின் தூதை எத்திவைக்கப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது. எத்திவைப்பது என்று கூறும் போது அது தற்கால அறிவுத் தரத்திற்கேற்ப மக்களது சகல சந்தேகங்களையும் களையும் விதத்தில் எத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.
தற்காலத்தில் பஞ்சமா பாதங்களை இழைக்கும் பலர் இறை தண்டனைகளுக்கு உள்ளாகாதிருக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலைத்தேடும் போது மேற்கூறப்பட்ட விதத்திலான ஒரு பதிலை வழங்க நேரிடுகிறது. எனவே, அந்த பாதகங்களில் ஈடுபடுபவர்களை விடவும் அவர்களது பாவங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நன்மக்கள் முதலில் தண்டிக்கப்படலாம். என்றும் கூறமுடியும். தீமைகளை தடுக்க வேண்டிய விதத்தில் தடுக்காதவர்கள் மற்றும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டும் திருந்தாதவர்கள் ஆகிய இரு சாராரும் அல்லாஹ்வினால் தண்டிக்கப்படலாம்.
ஒருதடவை நபி (ஸல்) அவர்களிடம் ‘எமக்கு மத்தியில் ஸாலிஹானவர்கள் (நன்மக்கள்) இருந்தாலும் நாம் அழிக்கப்படுவோமா?’ என வினவப்படுவதற்கு’ஆம்’ பாவச்செயல்கள் அதிகரிக்கும் போது’ என அன்னார் பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே, பாரிய அனர்த்தங்கள் அல்லது சமூக அழிவுகளுக்கான காரணங்களுக்காக கரணங்களை மட்டிடும் போது இப்படியான குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் எமது ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இயற்கை அனர்த்தமொன்று ஒரு சாராருக்கு அருளாகவும், பாவங்களுக்கு பரிகாரமாகவும் அமையும் அதேவேளை, மற்றும் சிலருக்கு இறை சாபமாகவும், தண்டனையாகவும் அமைந்து விடுகிறது. அனர்த்தத்திற்கு உள்ளாகும் ஒவ்வொரு தனிநபரும் தனது மனச்சாட்சியில் கையை வைத்து, இஸ்லாமிய அறிவுத் தெளிவுடன் தான் எதற்காக இந்த அனர்தத்திற்கு உள்ளாகினேன் என ஓரளவுக்கு முடிவு செய்யமுடியம்.
நபிகளார் (ஸல்) அவர்கள் பிளேக் நோய் பற்றிக் கூறும் போது, அது சிலருக்கு அருளாகவும் வேறு சிலருக்கு தண்டனையாகவும் அமைகிறது எனக் கூறிய ஹதீஸிலிருந்தும் இக்கருத்தைப் பலப்படுத்த முடியும்.
குர்ஆனின் கருத்து
ஒரு சமூகம் அது வாழ்ந்து முடிவதெற்கென்று பொதுவாக எதிர்பார்க்கப்படும் கால எல்லைக்கு முன்னர் ஏதோ ஒரு வகையில் அழிக்கப்படுவதாயின் அதற்குப் பல நியாயங்கள் இருப்பதை குர்ஆனிய ஆய்வைச் செய்யும் போது புரிய முடியும். ஒரு சில உதாரணங்கள் வருமாறு.
1.ஆடம்பரம் அதிகரித்தல் : ‘நாம் ஒரு நகரத்தை அழிக்க நாட்டினால் அதில் படாடோபமாக வாழ்வோரது தொகையை அதிகரித்து விடுவோம். அவர்கள் அங்கே பாவச் செயல்களில் ஈடுபடுவர். அப்போது அவ்வூர்மீது
தண்டனை விதியாகும். உடனடியாக மிகக் கொடூரமாக அவர்களை நாம் தரைமட்டமாக்குவோம்’. (இஸ்ரா – 17)
2.ஆடம்பரத்துடனான மமதை:- காரூன் தனக்கு அல்லாஹ் வழங்கிய செல்வ பாக்கியத்தை வைத்து தலைகால் தெரியாது நடக்க ஆரம்பித்தான். அதனால் அவனுக்கு நடந்த கதி, அவனையும் அவனது வீட்டையும் சேர்த்து அல்லாஹ் பூமிக்குள் இழுத்துவிட்டான். இக்கருத்து சூரா கஸஸில் தெரிவிக்கப்படுகின்றது.
3.ஒழுக்க வீழ்ச்சி : ஆணும் பெண்ணும் சட்டபூர்வமாக குடும்ப வாழ்க்கையில் இணைந்து தத்தமது ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள அல்லாஹ் கட்டளையிட்டிருக்க துர் நடத்தைகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர். நபி லூத் (அலை) அவர்களது சமூகம் தண்டிக்கப்பட்ட விதம் பற்றி குர்ஆன் ‘அவர்கள் வாழ்ந்த அந்தக்கிராமத்தின் மேல் பகுதியை கீழ்ப்பகுதியாக (தலைகீழாகப் புரட்டி) விட்டோம். தொடர்ந்தும் அவர்கள் மீது நாம் சுடும் களிக்கற்களை மழையாகப் பெய்வித்தோம்’ (ஹுத் – 83) எனத் தெரிவிக்கின்றது.
4.வியாபார மோசடி : குறிப்பாக சுஐப் (அலை) அவர்களது சமூகம் அளவை நிறுவையில் மோசடி வாழ்ந்த போது அவ்வாறு செய்வது கடும் பாவச்செயல் எனக்கூறி அந்த நபி தடுத்தார்கள். ஆனால் தனது சொத்து செல்வங்களை எப்படி சேகரிப்பது, பாதுகாப்பது, செலவழிப்பது ஆகிய விடயங்களில் நபி தலையீடு செய்யக்கூடாது என்பதில் அந்த சமூகத்தினர் பிடிவாதமாக இருந்தனர். நபியை அற்பராகக் கருதி ஏளனம் செய்தனர்.
அதுபற்றி கவலைப்படாத நபியவர்கள் ‘நீங்கள் அல்லாஹ்வை உங்களது முதுகுக்கு பின்தூக்கி எறிந்தது போல்
ஆக்கிவிட்டீர்களா? நீங்கள் செய்பவற்றை எனது இரட்சகன் நன்கு சூழ்ந்திருக்கிறான்’ என்றார்கள் அவர்களது அட்டூழியம் தொடர்ந்த போது ‘அநியாயம் செய்தவர்களை (வானுலகிலிருந்து வந்த) கடும் சத்தம் தாக்கியது.
அவர்கள் தமது வீடுகளில் முகப்புற உயிரற்று விழுந்து கிடந்தார்கள்’ (ஹுத் – 94) என்றான்.
- அரச அராஜகம் : சத்தியவாதிகளது குரலை ஒழிப்பதற்கு முயற்சி செய்து, பலவீனர்களை அடக்கி ஒடுக்கும், ஆட்சிக்கட்டிலில் உள்ள கும்பல்கள் அழிக்கப்பட்டன. அந்த வகையில் பிர்அவ்னும் அவனது பிரதானிகளும் படைகளும் மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் சொல்லனாத் துயரங்களுக்கு உள்ளாக்கினர். எனவே அல்லாஹ் கடலைப் பிளந்து, நபியையும் அவர் சமூகத்தையும் காப்பாற்றி கரை சேர்த்தான். அவர்கள் கரைசேரும் வரை பிளந்திருந்த கடல் இராட்சத மலைபோல் இருமருங்கிலும் எழுந்து நின்று வழிவிட்டது. இதே கடலுக்குள்ளால் நடந்து சென்ற பிர்அவ்னின் படைகள் மூழ்கடிக்கப்பட்டதாக குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. (அஷ்ஷுஅரா – 10-68)
- உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது : ‘உலக வாழ்வு ஒரு சோதனைக் கூடம் என்பதனையோ தமக்குத் தரப்பட்டுள்ள ஆற்றல்கள் அல்லாஹ்வின் அமானிதங்கள் என்பதையோ மறந்து பரஸ்பர போட்டி போட்டு மாடமாளிகைகளைக் காட்டி தம்பட்டமடிப்பதில் மூழ்கியிருந்த, அட்டூழியங்கள் புரிந்து வாழ்ந்த ஆத் சமூகத்தினர் ஹுத் (அலை) அவர்களது போதனைகளை முற்று முழுதாக நிராகரித்து வாழ்ந்தனர்.
‘எனவே எமது அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தவர்களை பூண்டோடு நாம் அழித்தோம்’ (அஃராப் – 72) என அல்லாஹ் கூறுகிறான். அதேபோல் ஸாலிஹ் (அலை) அவர்களது தமூத் கூட்டத்தார் மலைகளைக்குடைந்து மமதையுடன் வாழ்ந்து வந்தனர். தமக்குக் கிடைத்த தோட்டம் துறவுகள் தமக்கு நிரந்தரமாக இருக்கும்
என அவர்கள் நினைத்தனர். நபியைப் பொய்ப்பித்தும் வாழ்ந்தனர். ‘எனவே, அவர்கள் அளவுமீறிய
சத்தத்தின் மூலம் அழிக்கப்பட்டனர்.’ (அல்ஹாக்கா – 5) என குர்ஆன் தெரிவிக்கிறது.
ஆத் சமூகத்தினர் அழிக்கப்பட்ட விதம் பற்றி கூறும் அல்குர்ஆன் ‘கடும் குளிர்ச்சியான கடும் காற்றின் மூலம் ஆத் கூட்டத்தார் அழிக்கப்பட்டனர். தொடர்ந்தும் ஏழு இரவுகளும் எட்டுப் பகல்களுமாக அதனை அவர்கள் மீது அல்லாஹ் வீசச் செய்தான். அவர்கள் ஈச்ச மரங்களது வெறுமையான அடிக்குற்றிகள் விழுந்துகிடந்தததைப் போல் இருந்தததை நீங்கள் பார்க்கலாம்.’ (அல்ஹாக்கா – 6,7) என விபரித்தது.
இவ்வாறு முன்னைய சமூகங்களது அழிவுபற்றியும் அழிக்கப்பட்டதற்கான காரணங்களையும் விளக்கும் அல்லாஹ் ஒரு சந்தர்ப்பத்தில் ‘நகரங்களில் வாழ்பவர்கள் தமது தண்டணை அவர்களுக்கு அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில், முற்பகல் வேளையில் வரமாட்டாது என அச்சமற்றவர்காக இருக்கிறார்களா? என்ன, இம்மக்கள் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருக்கின்றார்களா? உண்மையில் அழிந்து போகக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றிருப்பார்கள். (அஃராப் – 97-99)
எனவே, பண்டைய சமூகங்களது எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய சம்பவங்கள் பிற்காலத்தவர்களுக்கான படிப்பினைக்காகவே எடுத்துக் காட்டப்படுகின்றன.
ஆனால் இவ்வாறு கூறும் போது முன்னைய சமூகங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களில் தற்கால சமூகங்கள் பல ஈடுபட்டும் கூட அவை இன்னும் ஏன் தண்டிக்கப்படாதிருக்கின்றன என்ற கேள்வி எழுவது நியாயமானதே. ‘நாம் அழித்த எந்த நகரமாயினும் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட, அல்லாஹ்வால் அறியப்பட்ட ஒரு காலக்கெடு உண்டு. எந்த சமூகமும் தனது காலக்கெடுவை முந்தவோ பிந்தவோ மாட்டாது’ (15:4,5) எனவே, ஒரு சமூகம் அழிவதற்கான நியாயங்கள் யாவும் பூர்த்தி செய்யப்படும் வரை அது அழியப்போவதில்லை.
மேலும் சில சமூகங்கள் உடனுக்குடன் தண்டிக்கப்படாதிருப்பதற்கு அவை படிப்படியாக, கட்டம் கட்டமாக அழிவை நோக்கிச் செல்வதும் காரணமாக இருக்கலாம். ‘எமது அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தவர்களை அவர்கள் உணராத விதத்திலே நாம் படிப்படியாக (அழிவை நோக்கிக்) கொண்டுவருவோம். அவர்களை நாம் (தண்டிப்பதை) தாமதப்படுத்துகிறோம். எனது சூழ்ச்சி (தண்டனை) மிகப் பலமானதாகும்’ (அஃராப் – 183-184)
‘எத்தனையோ நகரங்கள் இருந்தன. அங்கு வாழ்ந்தவர்கள் அநியாயம் இழைத்துக் கொண்டிருக்கையில் நான் அவர்களை தண்டிக்காமல் தாமதப்படுத்தினேன். பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். (அவர்கள்) என்னிடமே மீண்டு வர வேண்டும்’. (ஹஜ் – 48)
வேறு ஒரு வகையில் நோக்கும் போது ஒரு சமூகத்தின் அழிவுக்காக அல்லாஹ் நீண்ட அவகாசம் எடுத்துக் கொள்வது போலவே அழிப்பதற்காக அவன் விதம் விதமான படைகளைப் பயன்படுத்தலாம். பல வடிவங்களில் அந்த சோதனைகள் ஒரு சமூகத்தைத் தாக்கலாம். எனவே அல்லாஹ் : ‘வானங்களினதும் பூமியினதும் அல்லாஹ்வுக்கே சொந்தமான’ அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் இருக்கிறான். (பத்ஹ்07) எனக் கூறுகிறான்.
‘உமது ரட்சகனுடைய படைகளை அவனன்றி வேறு எவரும் அறியமாட்டார்கள்’ (முத்ததிர் – 31)
அந்தவகையில் கடல் அலை, வெள்ள நீர், நெருப்பு, காற்று, சூரிய ஒளி, மலக்குகள், கிருமிகள், விஷ ஜந்துக்கள், மிருகங்கள் வெட்டுக்கிளிகள், பேன், தவளை இரத்தம் போன்ற இன்னோரன்ன படைப்புக்களும் இந்த சோதனைக்காக அல்லாஹ்வால் படைகளாகப் பயன்படுத்தப்படலாம்.
சில சமூகங்கள் பயங்கரமான சில பலவீனங்களைப் பெற்றிருந்தும் கூட அவை உலக இயக்கத்துக்கு அவசியப்படும் சில சிறப்புப் பண்புகளைப் பெற்றிருக்குமாயின் அவற்றிற்கான அழிவு காலம் தாமதப்படுத்தப்படலாம். உலக இயக்கத்தை அல்லாஹ் சமநிலையில் வைத்திருக்க இந்நிலை வேண்டப்படலாம்.
உதாரணமாக விஞ்ஞான தொழிநுட்பத்துறையில் ஆய்வுகளையும் தியாகங்களையும் செய்து உலகுக்கு உயரிய கண்டுபிடிப்பக்களை வழங்கும் அதேவேளை ஒழுக்க வீழ்ச்சியில் சிக்கி அராஜகத்தில் உழலும் மேற்குலகு சமூகங்கள் உடனுக்குடன் அழிக்கப்படுமாயின் பாரிய சனத்தொகை வளர்ச்சி கண்டுள்ள உலகின் பௌதீக, சுகாதார, போக்குவரத்து, தொலைதொடர்புத்துறை தேவைகளை ஈடு செய்வதற்கு இன்று இஸ்லாமிய உலகு தயாராக இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
மேற்குலகின் இந்த விஞ்ஞான, தொழிநுட்பத்துறை தலைமைகளை இஸ்லாமிய உலகையேற்கும் காலம் வரும்வரை
அல்லாஹ் அந்த அழிவைத் தாமதப்படுத்துவதாக கருத இடமுண்டு. மனிதன் உலகில் தனது ‘இமாரத்’ என்ற ‘உலகை வளப்படுத்தும்’ பணியிலும் ஈடுபட்டாக வேண்டுமல்லவா? அந்தவகையில் ஈமான் ஒழுக்கம், நீதி என்பவற்றிலிருந்து
தூரமாகியுள்ள மேற்குலகு அழிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடில்லை. என்றாலும் அந்த இடத்தை நிரப்பவுள்ளவர்கள் அதற்காக தயாராக வேண்டியிருக்கிறது.
இறுதியாக சுனாமி என்ற அல்லாஹ்வின் படை கடலில் மட்டுமல்ல மனங்களிலும் பாரிய உணர்வலைகளையும் ஆய்வுகளையும் தோற்றுவித்திருக்கிறது. சுனாமி சிலருக்கு அல்லாஹ்வின் அருளாக அமைந்த அதேவேளை வேறுசிலருக்கு அவர்களது பாவச்செயல்களுக்கு தண்டனையாகவும் மற்றும் சிலருக்கு வாழ்வை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த உதவும் பெரும்படிப்பினையாகவும் அமைந்துவிட்டது. ஆனால் சுனாமியால் தாக்கப்பட்டவர்கள் அனைவரும் பாவிகள் என்று முடிவுசெய்வதும் முஸ்லிமுக்கு அழகல்ல. எனினும் யாவற்றிற்குமான மிகச்சரியான காரணங்களை அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே.




