இலங்கை முஸ்லிம்களது சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டம்

 அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல்

இலங்கை முஸ்லிம் சமூகம் முழு ஆளுமை படைத்ததாகத் திகழ வேண்டுமாயின் சகல துறைகளிலும் ஒட்டுமொத்தமான வளர்ச்சியை அடையவேண்டும்.

ஆத்மீகம், கல்வி, பொருளாதாரம், அரசியல், சுகாதாரம்,  குடும்பக்கட்டமைப்பு, பிறசமூகங்களுடனான உறவு போன்ற துறைகளில் வளர்ச்சியடைந்தால் தான் அதனை முழு வளர்ச்சியாகக் கருதமுடியும். அந்தவகையில்,அதன் சுகாதாரத் துறையும் எமது கவனத்தை ஈர்க்கவேண்டியது அவசியமாகும்.

இஸ்லாமும் சுகாதாரமும்

 இஸ்லாம் சுகாதாரமாகவும் உடல் ஆரோக்கியத்தோடும் இருக்கவேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது.

  1. ‘அல்லாஹ் பாவமன்னிப்புக் கேட்பவர்களையும், சுத்தமாக இருப்பவர்களையும் விரும்புகிறான்’ (அல்குர்ஆன் 2:222)
  2. ‘சுத்தம் ஈமானின் பாதி; (ஸஹீஹ் முஸ்லிம் )
  3. ‘பலவீனமான விசுவாசியை விடவும் பலசாலியான விசுவாசி அல்லாஹ்வுக்கு மிகவுமே விருப்பத்துக்குரியவன்.’ (ஸஹீஹ் முஸ்லிம் )
  4. ‘உங்களையே நீங்கள் அழிவுக்குள் தள்ளிவிடாதீர்கள்.’(அல்குர்ஆன் 2:195)
  5. ‘அல்லாஹ் எந்தவொரு நோயை இறக்கினாலும் அதற்கான நோய் நிவாரணியையும் இறக்காமல் இல்லை.’(ஸஹீஹுல் புஹாரி)

மேலுள்ள குர்ஆனிய மற்றும் ஹதீஸ் வசனகங்கள் சுத்தம், சுகாதாரம், தேகாரோக்கியம் என்பவற்றின் அவசியத்தை
வலியுறுத்துகின்றன. ஹராமாக்கப்பட்ட உணவுப் பண்டங்கள், விபச்சாரம், ஒருபாலுறவு, போதை வஸ்துக்கள் போன்றன பற்றிய இஸ்லாத்தின் தடைஉத்தரவுகள் வுழூ, குளிப்பு, நகம் வெட்டல், தொடர்பான சட்டங்கள், நிர்ப்பந்தமான சூழல்களில் ஹராமானவற்றைக் கூட சாப்பிடலாம் போன்ற விதிமுறைகள் என்பவற்றையெல்லாம்
எடுத்துநோக்கும் போது உடலாரோக்கியத்தை இஸ்லாம் எவ்வளவு கவனமாக ஒருவர் பேணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் மனிதனது அடிப்படையான ஆறு அம்சங்களைப் பாதுகாப்பதற்காகவே தரப்பட்டுள்ளன. அவையாவன:

  • சமய நம்பிக்கைகள் (தீன்)
  • பகுத்தறிவு (அக்ல்)
  • உயிர் (நப்ஸ்)
  • உடமைகள் (மால்)
  • பரம்பரை-குடும்பம் (நஸ்ல்)
  • சுய கௌரவம் (இர்ள்)

இவற்றில் உயிர், பரம்பரை (குடும்பம்)ஆகிய இரண்டையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளையே நாம் இஸ்லாம் கூறும் சுகாதார விதிகளினூடாக அடையப் பெறுகிறோம்.

இலங்கை நிலவரம்

இது இப்படியிருக்க இலங்கை முஸ்லிம்களது உடல் நிலை, சுகாதார நிலை, தேகாரோக்கியம் என்பன பற்றிய புள்ளிவிபரங்களையும் அண்மைக்காலத் தரவுகளையும் எடுத்துநோக்கினால் மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களில் அடங்கும் அவை மிக அதிகமாகப் பின்னடைவைக் கண்டிருப்பதைக் அவதானிக்க முடிகிறது.

நீரிழிவு வியாதி, உயர், தாழ் இரத்த அழுத்தங்கள், கொலஸ்ரோல், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களால் பீடிக்கப்படும் முஸ்லிம்களது தொகை முஸ்லிம் அல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும் என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் சக்கரை வியாதிக்காரர்கள் அதிகமாகிக் கொண்டுவருவது அவதாகிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை சனத்தொகையில் பத்து வீதமானவர்கள் இந்த வியாதியால் அவஸ்தைப்படும் போது முஸ்லிம் சமூகத்துக்குள் 25 வீதமானவர்கள் அந்த நோயின் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இலங்கையின் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளில் முஸ்லிம்களது தொகை அதிகமாகும். இலங்கையில் 9.7 வீதமாக முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் சிகிச்சைக்காகவரும் மொத்த நோயாளிகளில் முஸ்லிம் நோயாளிகளது விகிதாசாரம் சுமார் 30 வீதத்தைத் தாண்டியதாக இருக்கலாம்.

சக்கரைவியாதியால் பாதிக்கப்படுவதால் உடலில் நிரந்தரமான உபாதைகள் ஏற்படுகின்றன. கால்கள் துண்டிக்கப்படுவது, கண்பார்வை இழப்பது, பாலியல் பலவீனங்களுக்கு உள்ளாகுவது போன்ற விளைவுகளை சந்திப்போரது தொகை அதிகமாகும். இருதய நோய்களால் பாரிசவியாதி, மாரடைப்பு, வால்வுகளில் கொலஸ்ரோல் படிவதால் ஏற்;படும் அடைப்புக்கள் போன்றவற்றுக்காக கோடிக்ககணக்கான ரூபாய்களை முஸ்லிம்கள் செலவிடுகிறார்கள். செலவு ஒருபுறமிருக்க நோய்கள் வருவதால் தொழில் செய்யமுடியாது போவது, சமூகநலப் பணிகள் தடைப்படுவது, உறனவினர்களுக்குப் பாரமாக அமைவது போன்ற வேறுபல பிரச்சினைகளும் உருவாகின்றன.

நோயைத் தருபவன் அல்லாஹ் தான். நோயில்லாமல் உலகமில்லை. என்றாலும் நோயாளிகளது தொகை வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாயின் பிறசமூகங்களோடு ஒப்பிடுகையில் முஸ்லிம் நோயாளிகளது தொகைமிக அதிகமாயின் அதுபற்றி தீவிரமாக சிந்திப்பது அவசியமாகும். இப்படியான ஒருநிலை ஏற்படக் காரணங்கள் யாவை? இந்நிலையிலிருந்து ஓரளவாவது மீட்சிபெற எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் யாவை? இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியவர்கள் யார் ? போன்ற அம்சங்கள் பற்றி ஆராயப்படவேண்டும். இது காலத்தின் தேவையும் மார்க்க மற்றும் சமூகக் கடமையுமாகும்.

ஆய்வு முயற்சிகள்

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உள்ள சுகாதாரத் துறையோடு தொடர்பான பின்வரும் பிரச்சினைகள் பற்றி விஞ்ஞான பூர்வமான, ஆதாரபூர்வமான புள்ளிவிபரங்கள் திரட்டப்படவேண்டும்.

  1. முஸ்லிம்சமூகத்தின் அவதானிக்கப்படும் பிரதானமான நோய்கள் யாவை?
  2. பிரதேசம், வயது, பால், அடிப்படையில் அதிகமாக நோய்களால் பீடிக்கப்படுபவர்கள் யார்?
  3. நோய்களுக்கான பிரமதானமான காரணங்கள் யாவை
  4. உணவுப் பழக்க வழக்கம் எப்படியிருக்கிறது? சுத்தம், சுகாதார
  5. விதிகளைக் கடைபிடிப்பதில் காட்டப்படும் அக்கறை எப்படி?
  6. தேகாரோக்கியம், நோய்கள் பற்றிய அறிவும் தெளிவும் எப்படி இருக்கிறது?
  7. வாழும் இடம், செய்யும் தொழில், அணியும்  ஆடைகள் என்பன தேகாரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன?
  8. வைத்தியர்களை, வைத்தியசாலைகளைத் தெரிவுசெய்வதில் உள்ள அறிவுநிலை எப்படி?
  9. சுகாதார விதிகளைத் தெரிந்துகொள்வதற்கு அவர்களுக்குள்ள வாய்ப்புக்கள் யாவை? அவற்றை அவர்கள் பயன்படுத்தும் விதம் யாது?
  10. முஸ்லிம்கள் சிகிச்சைக்காகச் செய்யும் பணம் எவ்வளவு?
  11. சிகிச்சைக்கான பணத்தை எவ்வாறு பெறுகிறார்கள்?

வேலைத் திட்டங்கள்

1.மருத்துவத் துறையில் உள்ள சகல பிரிவுகளிலும் முஸ்லிம் மாணவர்கள் கல்வியைத் தொடருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது

2.சிறப்புத் தேர்ச்சித் துறைகளை இனம் கண்டு அவற்றில் மேற்படிப்பை மேற்கொள்வதற்கான  ஊக்குவிப்புக்களையும் வழிகாட்டல்களையும் வழங்குவது

3.மருத்துவத் துறையில் கல்வியைத் தொடர்வது ‘பர்ளுகிபாயா’ என்ற கருத்தை சமூகத்தில் பரவலாக ஏற்படுத்துவது

4.இலங்கையில் உள்ள உயர்தர விஞ்ஞானத் துறைக்கான பாடசாலைகள்,தனியார் கலாநிலையங்கள்,பிரத்தியே கவகுப்புக்கள் என்வபற்றில் நிலவும் பற்றாக்குறைகளை நிவர்த்திசெய்யவும் நெறிப்படுத்தவும் ஏற்பாடுகளைச் செய்வது.

5.சிறுவர் முதல் முதியோர் வரையுள்ள சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் தேகாரோக்கியத்துடன் தொடர்பான வழிகாட்டல்களை வழங்குவதற்கு கிரமமான வேலைத்திட்டமொன்றை ஏற்பாடுசெய்வது,

அவற்றில் அடங்க வேண்டியவை

சிறிய கையேடுகளையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிடுவது, நூல்களை எழுதுவது  கிராமங்கள் நகரங்கள் தோறும் விழிப்பூட்டல் கருத்தரங்குகளை நடாத்துவது பதாதைகள், வீதி நாடகங்கள், வீடியோக்கள் என்பற்றை உள்ளடக்கிய  கண்காட்சிகளை ஏற்பாடுசெய்வது

6.மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கும் முஸ்லிம் வைத்தியர்களுக்கும் பின்வரும் அம்சங்கள் தொடர்பான வழிகாட்ட்டல் கருத்தரங்குகளும் செயலமர்வுகளும் திட்டமிட்ட வகையில் நடாத்தப்பட வேண்டும்: சுகாதாரத் துறை மற்றும் மருத்துவம் தொடர்பான இஸ்லாமிய நோக்கு மருத்துவத் துறையில் கல்வி பயில்வது ஓர் இபாதத் அதேவேளை ஒரு பர்ளு கிபாயா. மருத்துவர்களிடம் இருக்க வேண்டிய இஸ்லாமியப் பண்புகள் மருத்துவத் துறையில் ஈடுபடும் போது ஷரீஆ தொடர்பாக எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் யாவை? (உதாரணமாக கருச்சிதைவு, அல்கஹோல் உள்ளடக்கிய மருந்துகள்)

7.அரபு மதரசாக்களது பாடத்திட்டத்தில் சுகாதாரத் துறையோடு தொடர்பான பகுதியை இணைத்தல்.

ஈடுபட வேண்டியவர்கள்

 1.முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

2.பல்கலைக்கழங்களில் வைத்திய,விஞ்ஞானத் துறைகளில் கல்விபயிலும் மாணவர்கள்

  1. முஸ்லிம் அல்லாத வைத்தியர்களதும் மாணர்களதும் உதவியும் இதற்காகப் பெறப்படலாம்.
  2. வைத்தியசாலைகளில் ஆண், பெண் தாதிகளாக மற்றும் ஊழியர்களாகப் பணிபுரிவோரும் இப்பணிக்காக உள்வாங்கப்படலாம்.
  3. உலமாக்கள், ஆசிரியர்கள், பணக்காரர்கள், சமூகஆர்வலர்கள், இளைஞர்கள், யுவதிகள் அனைவரதும் ஒத்துழைப்பும் இதற்காகப் பெறப்படலாம்.
  4. குத்பாக்கள், கருத்தரங்குகள், பாடசாலைக் கூட்டங்கள் மாணவ மன்றங்கள் என்பவற்றையும் இதற்காக விசேடமாக ஒழுங்குசெய்யலாம்.
  1. \இஸ்லாமிய இயக்கங்களது வேலைத்திட்டங்களில் சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சி நிரல்களையும் இணைத்துக் கொள்ளலாம்.

நிருவாக ஒழுங்கு

கொழும்பில் ஒரு தலைமையகமும் மாவட்ட ரீதியாக கிளைகளும் அமையப் பெறவேண்டும். மத்திய செயற்குழுவும் செயலகக் குழுவும் இயங்கவேண்டும் ஆலோசனை சபையொன்று தேவையான வழிகாட்டலை வழங்க வேண்டும்
வேலைத் திட்டங்களை அமுலாக்குவதற்காக சமுதாயத்திலுள்ள தனவந்தர்களிடம் மாதாந்த சந்தா பெறப்படலாம்.

அல்லாஹ்வின் திருப்தியையும் கூலியையும் மட்டுமே அடைவதை இலக்காகக் கொண்டு சமூகத்தின் அடிப்படையான சுகாதாரத் தேவையை பூர்த்திசெய்வதற்காக இவ்வேலைத்திட்டம் அமைய வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top