மு.கா. தொடர் விரிவுரையில் அஷ்ஷெய்க் பழீல்
தற்காலத்தில் உடலை சுத்தமாக வைத்திருப்பதற்கும் அதற்கு நோய்கள் அணுகாதிருக்கவும் பல்வேறுபட்ட ஏற்பாடுகளை மனிதர்கள் செய்து வருகின்றார்கள். வைத்தியசாலைகள், போஷாக்குள்ள உணவுகள், தேகப்பியாசங்கள் போன்றன உடலை சுத்தமாகவும் பலமாகவும் வைத்திருப்பதற்கான முயற்சிகளாகும். இவை வரவேற்கத்தக்கவை. வேண்டத்தக்கவை. ஆனால் இதே அளவு கவனம் மனிதனின் மிகப் பிரதானமான கூறாகிய உள்ளத்துக்கு வழங்கப்படுவதில்லை. அது நோய்வாய்ப்பட்டு பலவீனமடைவதனால் மனித வாழ்வில் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் அபரிமிதமானவை. பெருமை, பொறாமை, வஞ்சகம் போன்ற நோய்களிலிருந்து உள்ளத்தைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் மனிதர்கள் கவனம் செலுத்துவது மிகக் குறைவாகும் என ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட விரிவுரைத் தொடரில் ‘உள நோய்களும் உளப் பரிசுத்தமும்’ எனும் தலைப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற விரிவுரையின் போதே அவர் இக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் உட்பட மேலும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
அஷ்ஷெய்க் பழீல் தொடர்ந்தும் இங்கு உரை நிகழ்த்துகையில்,
மனிதன் செய்யும் பாவங்களை உடலோடு சம்பந்தப்பட்டவை உள்ளத்தோடு சம்பந்தப்பட்டவை என இரண்டாகப் பிரிக்கலாம். களவு, கொலை, விபச்சாரம், பொய், புறம் போன்றன உடல் உறுப்புக்களால் வெளியாகும் பாவங்களாகும். ஆனால் இவற்றைவிட உள்ளத்தோடு சம்பந்தப்பட்ட குப்ர், ஷிர்க், நயவஞ்சகம், பெருமை, பொறாமை, கஞ்சத்தனம், உலக மோகம், பேராசை, வைராக்கியம் போன்ற பாவங்கள் உடல் உறுப்புக்களால் வெளியாகும் பாவங்களுக்கு அடிப்படையாக அமைவதுடன் அவற்றை விடவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகவும் காணப்படுகின்றன. எனவே உடலால் வெளியாகும் பாவங்களை ஒழிக்க முன்னர் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் பாவங்களை இல்லாதொழிக்க அல்லது அதிகபட்சம் கட்டுப்படுத்த முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வின் பார்வை படும் இடமாக உள்ளம் இருப்பதனை நபியவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய உடல்களையோ, தோற்றங்களையோ பார்ப்பதில்லை. என்றாலும் அவன் உங்களது உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்”
ஒரு மனிதனது வெற்றி உள்ளத்தின் பரிசுத்தத்திலேயே தங்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
” யார் (உள்ளத்தை) அதனை பரிசுத்தப்படுத்திக் கொண்டாரோ அவர் திட்டமாக வெற்றியடைந்து விட்டார். யார் (பாவங்களுக்குள்) அமிழ்த்திக் கொண்டாரோ அவர் தோல்வியடைந்துவிட்டார்.
மனிதன் படைக்கப்பட்டதற்கும் பிறகு இடம்பெற்ற முதல் பாவமே தலைக்கனம் அல்லது அகம்பாவமாகும். இந்த நோய் இப்லீஸைப் பீடித்ததனால் அவன் அல்லாஹ்வுக்கு எதிராக வாதிட்டு ஸுஜூது செய்ய மறுத்துவிட்டான்.
மனிதன் உலகத்துக்கு வந்ததற்குப் பின்னால் இடம்பெற்ற முதல் பாவம் பொறாமையாகும். ஆதம் (அலை) அவர்களுடைய புதல்வர்களில் இருவரும் குர்பான் கொடுக்க அல்லாஹ்வால் அவர்களில் ஒருவரது குர்பான் மட்டுமே ஏற்கப்பட்டு மற்றவரது குர்பான் நிராகரிக்கப்படவே அவர்களில் ஒருவர் மற்றவரை பொறாமையின் காரணமாக கொலை செய்தார். இந்தப் பொறாமை மிகவும் ஆபத்தானது. நெருப்பானது விறகை எரித்து விடுவது போல பொறாமை நற்காரியங்களை அழித்து ஒழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேற்குலகம் அறிவியல் துறையில் கொடிகட்டிப் பறந்து உடலைப் பேணிப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக அக்கறை காட்டுகிறது. ஆனால் அங்கிருக்கும் மக்களது ஆன்மீகப் பகுதி படுமோசமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
மனித உள்ளங்கள் மாசடைந்து ஈவிரக்கம், அன்பு, கருணை என்பன இல்லாமல் போய்விட்டன. அமெரிக்காவில் சுமாராக 5000 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. ஆனால் இதே அமெரிக்கா உலகில் பேராசையோடும் ஆதிக்க வெறியோடும் தான் மாத்திரமே உலகை அனுபவிக்க வேண்டுமென்ற கீழ்த்தரமான உணர்வோடும் தாண்டவமாடுகின்றது.
ஹிரோஷிமாவிலும் நாகஸாகியிலும் அமெரிக்கா போட்ட குண்டினால் 175000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். எண்ணெய் வளத்தை சுரண்ட வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடுதான் ஈராக்கில் நுழைந்த அமெரிக்கா 1 ½ மில்லியன் பேருக்கும் அதிகமானோரை கொலை செய்திருக்கின்றது. வெளித்தோற்றத்திலே அழகாக ஆடையணிந்திருந்தாலும் உள்ளம் மாசுபட்டிருக்கின்றது என்பதனுடைய விளைவே இது.
உள்ளத்தில் கபடம்,வைராக்கியம், வஞ்சகம் என்பன இருந்தால் சுவனத்தில் கூட நுழைய முடியாது.
ஒரு தடவை நபியவர்கள் ஒரு மனிதனைப்பார்த்து சுவர்க்கவாதி என்று சொன்னார்கள். அதற்கான காரணத்தைக் கண்டறிய அவரது வீட்டுக்குச் சென்ற ஒரு நபித் தோழர் அவருடன் மூன்று நாட்கள் தங்கிவிட்டு அவரிடம் விஷேடமான நற்செயல்கள் எதனையும் காணாத போது அவரிடமே சுவனத்துக்கு அருகதையானவராக உங்களை மாற்றிய அம்சம் எது என வினாவினார். அதற்கு அவர் நான் எவரைப்பற்றிய கபட எண்ணத்தையும் உள்ளத்தில் வைத்திருப்பதில்லை. எவருக்காவது அல்லாஹ் வழங்கிய ஓர் அருட்கொடைக்காக வேண்டி அவரைப் பார்த்துப் பொறாமைப்படுவதுமில்லை என்று அவர் கூறினார்.
எனவே பிறரது முன்னேற்றத்தைக் கண்டு சந்தோசப்படுவது என்றால் எமது உள்ளம் ஆரோக்கியமாக இருக்கிறது என்ற அடையாளங்களில் ஒன்றாக அது இருக்க முடியும். எமது உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்த நாம் விரும்பினால் தொழுகை, திக்ர், இஸ்திஃபார் போன்ற ஆன்மீகக் காரியங்களில் நாம் அதிகம் ஈடுபட வேண்டும்.
புற்று நோய் மற்றும் ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை சென்று பார்வையிட வேண்டும். மனநலம் குன்றிய நிலையில் சிகிச்சை பெற்று வருவோரைச் சென்று பார்க்க வேண்டும். அநாதை இல்லங்களுக்கு போக வேண்டும்.
இவை எமது உள்ளத்தை இளகச் செய்து உயர் ஸ்தானங்களை நோக்கி அதனை அடையச் செய்து அதனை பரிசுத்தப்படுத்தும் என்றும் அஷ்ஷெய்க் பழீல் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி மாதமும் 1 ஆம், 3ஆம் வியாழக்கிழமைகளில் இது போன்ற விரிவுரைகளை அதன் தலைமையகமான கொழும்பில் அமைந்துள்ள தாருஸ் ஸலாமில் ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறது.
அஷ்ஷெய்க் பழீல் இதற்கு முன்னர் ‘பொறுப்புக்கள் அனைத்தும் அமானிதங்கள்’ என்ற தலைப்பில் மற்றுமொரு விரிவுரையை அங்கு நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.




