iran war

மத்திய கிழக்கு யுத்தம் – சிலரை சிலரால் தடுப்பது

அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல்

மத்திய கிழக்கு யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள ஈரான் ஷீஆ நாடாக இருப்பதினால் அதன் பக்கம் நாம் நிற்கக்கூடாது என சில முஸ்லிம்கள் கூறுவர். அப்படியாயின் அவர்கள் இஸ்ரேலின் பக்கத்தில் நிற்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில், உண்மை முஸ்லிம்கள் யாரும் இஸ்ரேலை அங்கீகரிக்கமாட்டார்கள். அப்படியாயின் என்ன நிலைப்பாடு சரியானது?

யார் ஷீஆக்கள்?

ஈரானில் மட்டுமல்ல உலகத்தின் பல பாகங்களிலும் வாழும் ஷீஆக்கள் நம்பிக்கை(அகீதா) மற்றும் சட்டதிட்டங்கள்(பிக்ஹ்) ரீதியாக சுன்னத் வல் ஜமாஅத்தினரோடு பல வித்தியாசமான கருத்துக்களை கொண்டருக்கின்றனர் என்பது உண்மைதான்.

அவர்களில் ‘றாபிழீ’க்கள் போன்ற குழுக்கள் இஸ்லாத்தின் எல்லையை தாண்டிய,தெளிவான வழிகேட்டில் இருப்பது போலவே ஷீஆக்களில் உள்ள ‘ஸைதீ’க்கள் போன்றோர் சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கு கொள்கை ரீதியில் மிகவும் நெருக்கமானவர்களாவர்.

ஷீஆக்களுக்குக்கும் சுன்னத் வல்ஜமாஅத்தினருக்கும் இடையிலான முரண்பாடுகளும் மோதல்களும் இன்று நேற்று தோன்றியவை அல்ல. உதுமான்(ரலி)அவர்களது காலத்தில் இருந்து இவற்றை அவதானிக்க முடிகிறது.

சிலபோது ஷீஆ முகாமானது யூதர்களோடு கைகோர்த்து சுன்னா முகாமுக்கு எதிராக செயல்பட்டதாகவும் தற்போதும் கூட சுன்னா முகாமை அழிப்பதற்கு உள்ளார்ந்த திட்டங்களை யூதர்களோடு சேர்ந்து ஷீஆக்கள் செய்து வருவதாகவும் சில அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். இக்கருத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் ஷீஆ என்ற பிரிவினர் உருவாகுவதற்கு உதுமான்(ரழி) அவர்களது காலத்தில் அப்துல்லாஹ் இப்னு சபாஃ எனும் யூதன் வித்திட்டான் என்பதனால் இந்த அறிஞர்கள் அந்தப் பின்புலத்தில் இருந்து இக்கருத்தை வெளியிட்டிருக்கலாம்.

தற்காலத்தில் ஷீஆக்கள்

இஸ்ரவேலுக்கு ‘அகன்ற ஸியோனிஸ சாம்ராஜ்ய கனவு’ இருப்பது போலவே ஈரானுக்கும் ‘அகன்ற பாரசீக சாம்ராஜ்ய கனவு’ ஒன்று இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. அதனை அடைந்து கொள்வதற்கான முயற்சிகளிலும் கடந்த காலங்களில் ஈரான் ஈடுபட்டு வந்திருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோல சிரியா,யமன் போன்ற நாடுகளில் சுன்னத் வல் ஜமாத்தினருக்கு எதிராக ஷீயாக்கள் அரச அதிகாரத்தை பயன்படுத்தி மிகக் கடுமையான நெருக்குவாரங்களைச் செய்து பேரழிவுகளை ஏற்படுத்தி இருப்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

குறிப்பாக சிரியாவில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஷீஆக்களது நுஸைரி பிரிவைச் சேர்ந்த பஷ்ஷாருல் அஸதின் காலத்தில் மில்லியன் கணக்கான ‘அஹ்லுஸ் சுன்னாக்கள்’ கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். பல லட்சக் கணக்கானோர் கொடுமைகள் தாங்க முடியாமல் பிறநாடுகளில் தஞ்சமடைந்தனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். அத்தகைய கொடூர சிறைக்கூடங்கள் பற்றிய தகவல்கள் அண்மை காலத்தில் வெளியாகியுள்ளன.

அந்த சிரிய உள்நாட்டுப் போர் (2011–2025) மனித இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மதிப்பீடுகளின்படி, உயிரிழப்புகள் 350,000 முதல் 656,000-க்கு மேல் வரை உள்ளன; இதில் 300,000-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களாவர். 100,000-க்கும் மேற்பட்டோர் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மோதலால் சுமார் 14 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்; இதில் 7.2 மில்லியன் பேர் அகதிகளாக உள்ளனர். இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனிலே மேற்கொண்ட தாக்குதல்களுக்கு ஒப்பான தாக்குதல்களை சிரியாவின் அரசு சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கு எதிராக மேற்கொண்டது என்று நம்பப்படுகிறது.

அக்காலப் பகுதியில் சிரிய அரசாங்கத்தின் பக்கம் நின்ற ஈரான் ஆயுதங்கள்,கடன், இராணுவ ஆலோசகர்கள் மற்றும் சில தகவலின்படி போர்தளப் படையினரையும் வழங்கியது. லெபனானைச் சேர்ந்த ஷீஆ இயக்கமான ஹிஸ்புல்லாஹ் ஆயிரக்கணக்கான போராளிகளை சிரியாவுக்கு அனுப்பியது. ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் யமனிலிருந்து ஷீஆ முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஈரான் மூலம் உள்வாங்கப்பட்டன.ஈரான் தனது Islamic Revolutionary Guard Corps (புரட்சிகர பாதுகாப்புப் படை)யை 2012 ஆம் ஆண்டிலேயே சிரியாவிற்கு அனுப்பி, பஷார் அல் அஸதுக்கு உதவத் தொடங்கியது. ஈரானுக்காக, அஸாத் ஒரு மிக முக்கிய கூட்டாளியாக இருந்தார். ரஷ்யாவும் வான்வழி தாக்குதல்கள் மேற்கொண்டு, பஷாருக்கு அரசியல் ஆதரவை வழங்கியது.

அதேபோன்று, யமனிலும் சுன்னத் வல் ஜமாத்தினர் ஷீஆக்களால் கடுமையாக ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவது பற்றிய தகவல்கள் யாவரும் அறிந்ததே.

அடுத்த பக்கத்தில் சிரிய அரசுக்கெதிரான கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி, வளைகுடா அரபு நாடுகள் , அமெரிக்கா,ஜோர்டான் என்பன பக்கபலமாக இருந்தன.அந்த சிரிய உள்நாட்டுப் போர் சர்வதேச இரு முகாம்களுக்கு இடையிலான பலப்பரீட்சையாக அமைந்ததனால் சாதாரண பொதுமக்கள் பந்தாடப்பட்டார்கள்.

இது இவ்வாறிருக்க, ஷீஆ ஆன்மீகத் தலைவர் அலீகாமேனி அண்மையில் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட போது சிரியாவில் உள்ள சிலர் சந்தோஷமடைந்ததாகவும் பஷ்ஷாருல் அஸதின் காலத்தில் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டமைக்கு பின்புலத்தில் அலீ காமேனி இருந்தமையே காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் இஸ்ரேலை ஈரான் தாக்குவது பற்றி அவர்கள் ‘அல்லாஹ் முஸ்லிம் சமூகத்தின் ஓர் எதிரியால் மற்றோர் எதிரியைத் தாக்குகிறான் ‘என்றும் கூறியிருந்தார்கள்.

ஈரானின் மறுபக்கம்

ஆனால், தற்போது இடம்பெறும் மத்திய கிழக்கு யுத்தத்தில் நாம் ஈரான் பக்கம் நிற்பதா அல்லது இஸ்ரேலின் பக்கம் நிற்பதா என்று கேள்வி எழுகின்ற பொழுது நாம் இஸ்ரேலின் பக்கம் நிற்க முடியாது என்பதற்கு பலமான பல நியாயங்கள் இருக்கின்றன. ஈரானுடன் ஒப்பிடுகின்ற பொழுது இஸ்ரேல் மிகவும் ஆபத்தானது என்பதில் சந்தேகம் கிடையாது. அதற்கு வரலாறு தக்க சான்றாகும்.

1979ல் கொமைனியின் வழிகாட்டலில் ஈரானிய புரட்சி வெடித்தது முதற்கொண்டு ஈரானியர்:

لا شرقية ولا غربية. ولكن اسلامية اسلامية

“மேற்கும் வேண்டாம்; கிழக்கும் வேண்டாம்; இஸ்லாம் வேண்டும்” என்று கோஷமிட்டுவந்தனர். ‘முதலாளித்துவமும் வேண்டாம்; கம்யூனிசமும் வேண்டாம்; இஸ்லாம் தான் வேண்டும்’ என்ற கொள்கையை அந்தக் கோஷம் கொண்டிருந்தது. அதேவேளை ஈரானின் புரட்சியை தொடர்ந்து வருடா வருடம் “சர்வதேச குத்ஸ்” தினத்தையும் ஈரான் அனுஷ்டித்து வருவது கண்கூடு. சர்வதேச குத்ஸ் நாள் (International Quds Day) 1979 ஆம் ஆண்டு, ஈரானில் நடைபெற்ற புரட்சிக்கு பின்னர் தொடங்கப்பட்டது. ஆயதுல்லாஹ் கொமெய்னி ஈரானின் முதல் உச்சத் தலைவராக இருந்தவர், 1979 ஆகஸ்ட் 7 அன்று ரமழானின் ஒவ்வொரு கடைசி வெள்ளிக்கிழமையையும் “குத்ஸ் நாள்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது பாலஸ்தீன மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தவும், ஜெருசலத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்க்கவும் உருவாக்கப்பட்டது. அன்றைய தினம் முதற்கொண்டு குத்ஸ் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் ஈரானில் நடைபெற்று வருகின்றன.

எனவே, மேற்குல சித்தாந்தங்களை ஒதுக்கி இஸ்லாத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; அதனை ஸ்தாபிக்க வேண்டும் ,குதுஸை விடுவிக்க வேண்டும், பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது போன்ற ஈரானின் நிலைப்பாடுகள் இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கவையாகும்.

பொதுப்படையாகப் பார்த்தால் ஈரானியர்கள் மார்க்கவிடயத்தில் கண்டிப்பாக இருப்பதைக் காணமுடியும்.பெண்கள் ஹிஜாப் அணிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இஸ்லாமிய ஆன்மீகப் பெறுமானங்களையும் மற்றும் விழுமியங்களையும் பகிரங்கமாகக் கடைப்பிடிக்க அவர்கள் பயப்படுவதில்லை. அங்கு ஆன்மீகத்திற்கும் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு.உலகத்தில் உண்டு, குடித்து, உடுத்து, அனுபவித்து வாழ வேண்டும் என்பதனை விடவும் ஈரானியர்கள் ஓர் இலட்சியத்திற்காக -கொள்கைக்காக வாழவும் அதற்காக உயிரைக் கூட கொடுப்பதற்கு தயாராகவும் இருக்கிறார்கள்.

பல இஸ்லாமிய நாடுகளது நிலை?

அடுத்த பக்கத்தில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை கொண்டிருப்பதாக அறியப்பட்டிருக்கும் சில அரபு, இஸ்லாமிய நாடுகளது ஆட்சியாளர்கள் பொருள் முதல்வாத, நுகர்வு மையக் கொள்கைகளுடன் சடவாதப் போக்கை ஊக்குவிக்கிறார்கள். அவை இஸ்லாத்தை முதன்மைப்படுத்துவதை காண முடியாது. பெரும்பாலான நாடுகளில் தேர்தல்கள் அற்ற சுகபோக மன்னராட்சி நிலவுகிறது. மன்னர் பரம்பரைக்காக கோடான கோடி பணம் செலவு செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பதுடன் தமது நாடுகளது வளங்களை சுரண்டுவதற்கு அனுமதித்திருக்கின்றார்கள். ஒருபடி மேல்சென்று தமது நாடுகளில் அமெரிக்காவின் இராணுவத் தளங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியவாதிகள் ஒடுக்கப்படுவதும் சிறையில் தள்ளப்பட்டிருப்பதும் யாவரும் அறிந்த உண்மையாகும்.

இன்னுமோர் அரபு நாடு இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிவருவதுடன் சில இஸ்லாமிய நாடுகளில் கிளர்ச்சிக் குழுக்களுக்கு உதவியும் வருகிறது. அதேவேளை விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரு நாடுகள் மாத்திரம் இஸ்லாமியவாதிகளுக்கு சுதந்திரம் கொடுத்திருப்பதையும் இங்கு கட்டாயமாகக் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த நிலையில் மேற்கத்திய உலகுக்கு தலை சாய்க்கமாட்டோம் என்ற கொள்கையோடு ஈரான் தொடர்ந்தும் இருந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் மேற்குலகின் பொருளாதாரத் தடைக்கு உள்ளாகி அது பொருளாதார ரீதியாக பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது.

இரு முகாம்களுக்கிடையிலான போர்?

தற்போது நடைபெறும் யுத்தத்தை நன்நோக்குக் கொண்ட முஸ்லிம்கள் கடும்போக்கு ஸியோனிஸத்துக்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான ஒரு யுத்தமாக பார்க்கிறார்கள். அப்படி அவர்கள் கருதினால் ஈரானை ஷீஆக் கண்ணோக்கில் பார்த்து ஒதுக்குவது நல்லதல்ல. துருக்கி அதிபர் அர்துகான் ‘எமக்கு இடையில் ஷீஆ-சுன்னா என்ற வேறுபாடு கிடையாது. எம்மிடத்தில் இருக்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்’ என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அரசியல் ஆய்வாளர்களது பார்வையில் இந்த யுத்தம் அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ முகாமுக்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை பின்புலமாகக் கொண்ட இடதுசாரி முகாமுக்கும் இடையில் நடைபெறும் பலப் பரீட்சையாகும். அதில் ஈரான் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். பொருளாதாரப் பரப்பில் உலகத்தில் டொலருக்கு இருக்கும் ஆதிக்கத்தை இல்லாமல் செய்து அந்த இடத்தில் வேறு நாணயங்களுக்கு மேலாதிக்கத்தை உண்டு பண்ணும் நோக்கம் கொண்ட சக்திகளும் யுத்தத்திற்கு பின்புலத்தில் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடலாகாது.

நியாயமாக நோக்குவோம்!

நீதி, நியாயம், தர்மம் போன்ற மனித விழுமியங்களுக்கு இஸ்லாம் முன்னுரிமை வழங்கியிருக்கிறது.அவை நாம் விரும்பாத ஒருவரது புறத்தில் அல்லது எதிரியின் பக்கத்தில் இருந்தாலும் அவற்றை முழுமையாக நாம் ஏற்றாக வேண்டும்.

அல்லாஹ் இக்கருத்தை ஆணித்தரமகக் கூறுகிறான்:- “முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (5:8)

“முஃமின்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்” (4:135)

அந்தவகையில், சுயநலமிகளான, அராஜக ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து உலகை விடுவிக்க முன்வருபவர்கள் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத யாராக இருப்பினும் அவர்கள் பக்கமாக நாம் நிற்பதில் தவறிருக்க முடியாது. அசத்தியவாதிகளது இரு குழுக்களுக்கு இடையே மோதல் நடைபெறும் போது அதில், முதல் குழு தாங்களே உண்மையில் உள்ளவர்கள் என்றும், மற்றவர்கள் அசத்தியத்தில் உள்ளவர்கள் என்றும் கருதுகிறது. இதன் போது உண்மைக்கு அருகில் உள்ளவர்களுடன் உள்ளார்ந்த ஆதரவை நாம் வெளிப்படுத்துவது ஈமானிய உணர்வாகும்.

இதை நாம் ரோமர் மற்றும் பாரசீகர் இடையேயான போரில் கவனித்தோம். அப்போது, ரோமர் “அஹ்லுல் கிதாப்” (வேதத்தினர்) என்பதால், அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்பினர். மேலும், அல்லாஹ் அதனை தனது வெற்றியாகவே குறிப்பிடுகிறான்:

“ரோமர் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் தோல்விக்குப் பிறகு சில ஆண்டுகளில் வெற்றி பெறுவார்கள். எல்லா காரியங்களும் முன்பும் பின்னும் அல்லாஹ்விற்கே உரியது. அந்நாளில், அல்லாஹ்வின் உதவியால் முஸ்லிம்கள் மகிழ்வார்கள். அவர் விரும்புவோருக்கு உதவி செய்கிறான். அவன் மிக வல்லமையுள்ளவனும்,மிக இரக்கமுள்ளவனும் ஆவான்.”

இரண்டு சாரார் மோதிக் கொள்கின்ற பொழுது அவர்களில் சத்தியத்திற்கு மிக அருகில் இருப்பவர் யார் என்று கண்டுபிடித்து அவருக்கு சார்பாக இருக்க வேண்டும் என்பதுதான் மேற்படி வசனத்தின் பொருளாகும்.

ரோமர்கள் பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அல்லாஹ் ‘ரோமம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தமது தோல்விக்கு பின்னர் மீண்டும் மேலாதிக்கும் பெறுவார்கள்; அந்த சந்தர்ப்பத்தில் முஃமின்கள் சந்தோஷம் அடைவார்கள்’ என்றும் குறிப்பிட்டான். ரோமர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தனர். அவர்களைத் தோற்கடித்த பாரசீகர்கள் நெருப்பு வணங்கிகளாக இருந்தனர். எனவே, நெருப்பு வணங்கிகளா? கிறிஸ்தவர்களா? என்று வருகின்ற பொழுது கிறிஸ்தவர்களே முஃமின்களது நெருக்கத்துக்குரியவர்கள். எனவே, அவர்களது வெற்றியை முஃமின்கள் சந்தோஷமாக எடுத்துக் கொள்வார்கள் என்று இந்த குர்ஆன் வசனம் எமக்கு சொல்லுகிறது.

அதேபோல இஸ்ரேலும் ஈரானும் மோதிக் கொள்கின்ற பொழுது கட்டாயமாக இரண்டு சாராரில் நாம் ஒரு பக்கம் நாம் நிற்க வேண்டும். அப்போது எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும் என்பது கண்கூடு.

இஸ்லாமிய உலகத்தில் நிகழ்கின்ற போராட்டங்களுக்கு பின்னணியில் மேற்குலகின் இஸ்லாத்தின் மீதான பயத்தை அடிப்படையாகக் கொண்ட ஆக்கிரமிப்பு உணர்வும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இஸ்லாமிய உலகை அடக்க வேண்டும் என்ற உணர்வும் காணப்படுகிறது. எனவே பூகோள அரசியல் எனப்படும் (Geopolitics) என்பதையும் இங்கு நாம் மறந்து விடலாகாது.

இவ்வாறு இஸ்லாமிய நாடுகள் பற்றிய நடுநிலையான, சரியான மதிப்பீடு எமக்கு அவசியமாகும். அவ்வாறில்லாமல்லாமல் பக்கசார்பான முடிவுகளுக்கு வருவது நல்லதல்ல.யார் செய்தாலும் பிழையாயின் அது பிழை தான்.எதிரி நல்லது செய்தால் அதனை மெச்சத் தான் வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் ஈரானின் சில பல கொள்கைகள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் உம்மாவிற்கும் முரணாக இருந்தாலும் முஸ்லிம்களது பொது எதிரி என்று வருகின்ற பொழுது இஸ்ரேலை தைரியமாக நின்று எதிர்கொள்ளும் நிலையில் அது இருப்பதனால் தற்போதைய யுத்தத்தில் உலக வாழ் முஸ்லிம்கள் ஈரானின் பக்கமாக நிற்கிறார்கள்.

ஷீஆ -ஸுன்னா முரண்பாடுகளை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு எமக்குள் ஒற்றுமையாக நின்று,முஸ்லிம் சமூகத்தின் பொது எதிரிகளை எதிர்கொள்வதற்கு நாம் முயற்சிப்போம்.

கண்டிக்க வேண்டிய தாக்குதல்கள்

இது இவ்வாறிருக்க ஈரான் இஸ்ரவேலின் மீது மட்டுமன்றி முஸ்லிம் நாடுகள் மீதும் கடுமையான தாக்குதல்களை நடாத்தி வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால்,அமெரிக்கா தனது படைத் தளங்களை அமைப்பதற்கு அந்த அயல்நாடுகள் இடம்கொடுத்திருப்பதும், ஈரானின் மீதான அண்மைக்கால தாக்குதல்களுக்கு அந்த படைத்தலங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் ஈரானின் கோபத்திற்கு காரணமாக அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுவர்.

எது எப்படிப் போனாலும் அரபு, இஸ்லாமிய நாடுகளில் உள்ள இராணுவ நோக்கங்கள் அற்ற இடங்கள் அழிக்கப்படுவது குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்களையும் பொதுவாக அல்லாஹ்வின் வளங்களையும் அழிப்பதாகவே அமையும்.ஈரான் இது விடயமாக மிகுந்த ஜாக்கிரதையோடு நடக்கவேண்டும்.

எனவே தான் உலக முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியம்(IUMS) இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஒன்றியம் வெளிநாடுகளின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் பாதிக்கும் அனைத்து வகையான தாக்குதல்களையும் கடுமையாக கண்டிக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஈரான் மேற்கொண்டு வரும் பதற்றத்தை அதிகரிக்கும் கொள்கைகள், மேலும் பொருளாதார மற்றும் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், நெருக்கடிகளை தீவிரப்படுத்தி, மேலும் குழப்பத்தையும் நிலையற்றதன்மையையும் உருவாக்கும். இது அந்தப் பிராந்தியத்தை தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றச் சுற்றுவட்டத்தில் தள்ளுகிறது. அது இது மக்களின் நலன்களுக்கு உதவாததாகும்.

பொருளாதார ரீதியாக முக்கியமான கட்டமைப்புகளை தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது—குறிப்பாக கட்டார், சவுதி அரேபியா போன்ற நாடுகளில்—உலக பொருளாதாரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும். இது உலகம் ஏற்கனவே எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும். இதனைத் தடுக்க சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மோதலின் பரப்பை விரிவுபடுத்துதல் அல்லது அதை சர்வதேச மயமாக்குதல், மேலும் புதிய சர்வதேச தரப்புகளை இதில் ஈடுபடுத்துதல் ஆகியவற்றின் ஆபத்துகளை ஒன்றியம் கடுமையாக எச்சரிக்கிறது. இத்தகைய செயல்கள், அந்தப் பிராந்தியத்தை பெரிய சக்திகளுக்கிடையிலான மோதல் பிராந்தியமாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தும்; இது உலகப் பாதுகாப்பிற்கும் சர்வதேச பொருளாதாரத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடும். அமைதியான தீர்வுகளைத் தேர்ந்தெடுக்கவும், இராணுவ பதற்றத்தை நிறுத்தவும், உரையாடல் மற்றும் ராஜதந்திர வழிமுறைகளைப் பின்பற்றவும் ஒன்றியம் மீண்டும் அழைக்கிறது. இது பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்யும்; மக்களின் உரிமைகளையும் நாடுகளின் இறையாண்மையையும் பாதுகாக்கும்.

இந்தப் பிராந்தியத்தில் உண்மையான பாதுகாப்பு, பலம் மற்றும் தாக்குதல் என்ற கொள்கையால் உருவாகாது; மாறாக நீதி, சர்வதேச சட்டத்திற்கு மரியாதை, நல்ல அண்டை உறவு, மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் மட்டுமே கிடைக்கும். அனைத்து தரப்புகளும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து, போர்களின் பேரழிவிலிருந்து பிராந்தியத்தை காக்கவும், பதற்ற மையங்களை அடக்குவதற்காக தீவிரமாக செயல்படவும், மக்களின் நலன்களையும் நிலைத்தன்மையையும் பாதுகாக்கவும் ஒன்றியம் அழைக்கிறது”என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலை

மத்திய கிழக்கு சர்ச்சையில் இலங்கை அரசின் நிலைப்பாடு நடுநிலையானது. ஈரானின் கப்பலை குறிவைத்து அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்திய போது இலங்கை விமானப்படையினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 32 பேரை உயிருடன் மீட்டதுடன் காயப்பட்டவர்களுக்கு தேவையான சிக்ச்சைகளை வழங்கினர். அத்தாக்குதலில் உயிரிழந்தவர்களது ஜனாஸாக்களை இலங்கை அரசு மிக மரியாதையாகக் கையாண்டு ஈரானுக்கு அனுப்பிவைத்தது.

மேலும் பாணதுறைக்கு அருகில் உள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடற்பரப்பில் (EEZ) ஐ.ஆர்.ஐ.என்.எஸ் புஷெர் (IRINS Bushehr) என்ற மற்றோர் ஈரானியக் கப்பல் அவசர உதவி கோரி நின்ற போது திரிகோணமலை துறைமுகத்தில் அக்கப்பலை நிறுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்தது. இந்த கப்பலில், 53 அதிகாரிகள், 84 கேடட்கள், 48 மூத்த மாலுமிகள் மற்றும் 23 கடற்படை வீரர்கள் என 208 பணியாளர்கள் இருந்தனர். எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக அவர்கள் இந்த உதவிக்கான காரணம் பற்றிக் கூறும் போது “மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை. நாங்கள் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம். எங்கள் நடுநிலைமையை எப்போதும் பேணுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை இலங்கையின் விமான நிலையங்களை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கேட்டபோது இலங்கை அரசு அனுமதி வழங்க மறுத்தமை அதன் தைரியமான போக்கைக் காட்டுகிறது.

இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான உறவு ஏலவே பலமாக இருந்து வருவதாலும் இலங்கைக்கு பல இக்கட்டான சூழ்நிலைகளில் ஈரான் நிபந்தனையற்ற உதவிகளை வழங்கி இருப்பதாலும் இந்த வகையான நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுத்திருக்கிறது என்று கூறலாம்.

இருப்பினும் இலங்கை வளர்முக, பின்தங்கிய நாடாக இருப்பதனால் முதலாளித்துவ முகாமைச் சேர்ந்த பலமிக்க நாடுகளை பகைத்துக் கொள்ள முடியாத நிலையிலும் இலங்கை அரசு இருந்து வருவதை அதன் சங்கட நிலைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வெற்றியின் நிபந்தனைகள்

முஸ்லிம் சமூகம் சர்வதேச சதிகளுக்கு முன்னால் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின் முதலில் அல்லாஹ்வுடனான தொடர்பை ஆழமாக வலுப்படுத்தி ஈமானை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக எல்லா வேறுபாடுகளையும் மறந்து தனக்குள் பலமான ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். இதனையே நாம் ‘இஸ்லாத்திற்கான – முஸ்லிம் சமூகத்துக்கான விசுவாசம்’ என்று வேறு வார்த்தையில் கூற முடியும்.

பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எமக்கு மத்தியில் வலுவான கூட்டமைப்புகள் உருவாக வேண்டும்.

மேலும், மிக முக்கியமாக நவீன விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முஸ்லிம் சமூகம் அதிகமாக ஈடுபாடு காட்ட வேண்டும். நவீன உலகத்தில் ‘சக்தி உள்ளவன் சரியானவன்’ Might is Right என்ற கொள்கை நடைமுறையில் இருப்பதனால் அந்த சக்தியை வலுவை நாம் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

உலகில் முஸ்லிமல்லாத நாடுகளாக இருப்பினும் அவை சத்தியத்திற்கு துணை போகின்ற நாடுகளாக இருந்தால் அவற்றோடு நல்ல உறவுகளை பேணிக் கொள்வதும் அவசியமாகும். முஸ்லிம் அல்லாத சமூகங்களோடு ஐக்கியமாக நல்லுறவை பேணுவது மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.

முழு உலகிலும் முஸ்லிம் சமூகம் பலவீனப்பட்டு இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஈமான், ஐக்கியம், அறிவியல் மேம்பாடு இல்லாமல் இருப்பது தான். ஹுர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதன் மூலம் முழு உலகத்தையும் தனது பக்கம் திசை திருப்பியுள்ளது. ஈரானுக்கு அவ்வாறு செய்ய முடியுமாக இருந்தால் உலகத்தின் பெரும்பாலான எண்ணெய் வளத்தையும் இயற்கை எரிவாயு வளத்தையும் கொண்டிருக்கின்ற அரபு நாடுகள் ஒற்றுமைப்பட்டால் உலகத்தில் பெரிய செல்வாக்கை செலுத்த முடியும். முழு உலகையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும். ஆனால் அவை தம்மை மேற்கத்திய சக்திகளுக்கு முன்னால் மண்டியிடச் செய்து, சுயத்தை இழந்து இருப்பது தான் இங்கு கவலைக்குரிய விடயமாகும்.

எனவே அல்லாஹ்வின் அருளும் உலகத்தில் சுய கௌரவமும் தேவையானவர்கள் பிறருக்கு அடிமைப்பட்டு வாழாமல் ஈமானோடும் அறிவோடும் சுதந்திரமாகவும் வாழவேண்டியிருக்கிறது.

அல்லாஹ் முழு உலகத்திலும் சாந்தி சமாதானத்தை ஏற்படுத்த எமக்கு அருள்பாலிப்பானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top