ஷரீஆ கல்வியில் தெளிவு இல்லாத போது ஏற்படும் விபரீதங்கள்

அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)

இஸ்லாம் பொதுவாக கல்விக்கும் கல்வியாளர்களுக்கும் அதிகமான முக்கியத்துவமளித்த மார்க்கமாகும். சிந்திப்பது, ஆராய்ச்சி செய்வது, கற்பது, வாசிப்பது போன்ற செயற்பாடுகளை அது ஒரு வாஜிபாகவே கருதுகின்றது. குர்ஆனின் முதல் வசனம் ‘ஓதுவீராக’ , ‘வாசிப்பீராக’ என்ற பொருள்களைத் தரும் ‘இக்ரஃ’ எனும் சொல்லாகும். ‘பேனாவின் மீது சத்தியமாக’ என்று இன்னுமொரு மக்கீ சூரா ஆரம்பிப்பதிலிருந்தும் இந்த உண்மையைப் புரியமுடியும். ‘அறிவு தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதான கடமை’ (இப்னு மாஜா). ‘அறிவு (உலகிலிருந்து) உயர்த்தப்படுவது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்’ (புகாரீ,முஸ்லிம்) போன்ற ஹதீஸ்களும் அறிவின் முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகும்.

பயன்மிக்க அறிவு

ஆனால், அறிவு எனும்போது அதனை உலக அறிவு, மார்க்க அறிவு எனும் இரு கூறுகளாக இஸ்லாம் பிரிக்கவில்லை. எமது சமூகத்தவர்கள் ’உலமாக்கள் என்று ஷரீஆ அறிவுகளைக் கற்றவர்களையும், கல்விமான்கள் என்று உலக அறிவுகளை- பொதுக் கல்விகளைக் கற்றவர்களையும் அழைப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குர்ஆனிலோ, ஹதீஸிலோ இப்படியான பிரிவினையைக் காண முடிவதில்லை. நபி(ஸல்) அவர்கள், கல்வியை ’பயனுள்ள கல்வி’, ’பயனற்ற கல்வி’ என்று மட்டுமே பிரித்திருக்கிறார்கள். ’அல்லாஹ்வே உன்னிடம் நான் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.’’(முஸ்லிம்) என்று அவர்கள் பிரார்த்தித்திருக்கிறார்கள். மேலும் ஒருவர் மரணித்ததன் பின்னரும் அவருக்குத் தொடர்ந்தும் நன்மையைப் பெற்றுத்தரும் அம்சங்கள் உள்ளன என்றும் ‘’அவருக்காகப் பிரார்த்திக்கும் ஸாலிஹான பிள்ளை, சதகா ஜாரியா, பயனளிக்கும் அறிவு’’ ஆகிய மூன்றும் தான் அவை என்றும் கூறினார்கள்.(முஸ்லிம்)

இங்கும்கூட அவர்கள் மார்க்க அறிவு,உலகஅறிவு என்று பிரிக்காமல் ’பயனுள்ள அறிவு’ என்று பொதுவாகவே கூறியிருக்கிறார்கள்.

எனவே, மனித சமூகத்தின் ஈருலக விமோசனத்துக்குத் தேவையானது என கருதப்படும் எந்தவொரு அறிவும் பயனுள்ளதாகவே அமையும். அது மார்க்கத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகவோ உலக விவகாரங்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகவோ அமைந்திருந்தாலும் சரியே. அந்த அனைத்து கல்வி ஞானங்களிலும் ஈடுபடுவதும் கற்பதும் கற்பிப்பதும் தவிர்க்க முடியாத ‘பர்ளு கிபாயா’வாக அமையும்.

குர்ஆன், சுன்னா, பிக்ஹ், அகீதா, ஸீரா போன்ற மார்க்கத்துடன் நேரடியாகத் தொடர்பான துறைகளில் நிபுணத்துவம் மிக்க உலமாக்களை உருவாக்குவது போலவே, வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்ட அறிஞர்கள், தொழிநுட்பவியலாளர்கள், விஞ்ஞானிகள், ஊடகவியலாளர்கள் போன்ற உலக விவகாரங்களோடு தொடர்பான அறிவுகளில் ஆழமான அறிவு கொண்டவர்களை உருவாக்குவதும் ‘பர்ளு கிபாயா’வாகவே கருதப்படும்.

மார்க்கக் கல்வி

மார்க்கக்கல்வி என்று மக்களால் அடையாளப்படுத்தப்படும் கலாஞானங்களைப் பொறுத்தவரையில் அவற்றைப் படிப்பதும் ’பர்ளு கிபாயா’ வாகும். உலகக் கல்வியை விட அது அந்தஸ்தில் கூடியது என்பதும் கவனிக்கத்தக்கதாகும். அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்த வஹியின் கல்வியையும் மனித மூளைகளால் தேடி அடையப்பெற்ற உலகக் கல்விகளையும் சமப்படுத்த முடியாது.

மார்க்கக் கல்வி மனித வாழ்வுக்கு இன்றியமையாததாகும். அதன் மூலம் ஒருவர்:
1. தான் யார்?
2. தன்னைப் படைத்தவன் யார்?
3. தன்னைச் சூழவுள்ள பிரபஞ்சம் ஏன் படைக்கப்பட்டது?
4. தனது வாழ்வின் இலட்சியம் யாது?
போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு விடையைப் பெற்றுக்கொள்கிறார். அவருக்கு உலகக் கல்விகளில் இவற்றுக்கான விடைகள் கிடைக்கமாட்டாது.

மனிதனின் உரிமைகள், கடமைகள் யாவை என்பதை மார்க்கக் கல்வியின் மூலமே அறிய முடியும். குப்ர், ஷிர்க், நிபாக், பெரும்பாவங்கள், நன்மை, தீமை, ஒழுக்க விழுமியங்கள் போன்றவற்றை அறிவதற்கும் மார்க்கக் கல்வியே துணை செய்கிறது. அந்தவகையில், மார்க்கக் கல்வியை கற்பது ஒரு வாஜிபாகவும் மாறுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய இமாம்களான தபரீ, குர்துபீ, புகாரி, முஸ்லிம், மாலிக், ஷாபியீ, அபூஹனீபா, அஹ்மத் போன்ற ஆயிரக்கணக்கான மேதைகள் சன்மார்க்கப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்து அறிவுப் பணியைத் தம் வாழ்வின் அச்சாணியாக அமைத்ததால் தான் நாம் இன்றும் கூட முஸ்லிம்களாக வாழ்ந்துவருகிறோம்.

இந்த மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக ஒரு குழுவினர் தம்மை அர்ப்பணிப்பது அவசியம் என்ற கருத்து பின்வரும் குர்ஆன் வசனத்திலிருந்து தெரியவருகிறது: ‘’விசுவாசிகள் அனைவருமே (மதீனாவிலிருந்து) யுத்தத்திற்காகச் செல்ல வேண்டியதில்லை. அவர்களது ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருசாரார் மார்க்கத்தில் ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வெளியேறிச் சென்றிருக்கக்கூடாதா? அவர்களது சமூகத்தவர்கள் (ஜிஹாதிலிருந்து) அவர்களிடம் திரும்பிவந்தவுடன் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக இவ்வாறு செய்திருக்கலாமல்லவா? (இதன் மூலம்) அவர்கள் (அந்த அவர்களது சமூகம்;) எச்சரிக்கையாக நடந்துகொள்ளலாம் ‘’(9:122)

மேற்படி வசனம் இறக்கப்பட்ட சந்தர்ப்பம் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். அறப்போரில் பங்கெடுப்பதன் சிறப்புக்கள் பற்றி அதிகமாக அறிந்த நபித்தோழர்கள் அதற்காகச் செல்வதற்கு போட்டி போட்டதுடன் நபி(ஸல்) அவர்களை மதீனாவில் தனியாக விட்டுவிட்டு அதற்குப் போகவும் முயற்சித்தனர். எனவே, யுத்தத்திற்காக ஒரு குழுவினர் செல்ல பிறிதொரு குழுவினர் மதினாவில் தங்கியிருந்து, நபி(ஸல்) அவர்கள் கூறும் ஹதீஸ்களை செவிமடுத்து, ஜிஹாதுக்காகச் சென்றவர்கள் திரும்பி வந்தவுடன் அவர்களுக்கு அவற்றை எத்திவைக்கும்படி கட்டளையிடும் மேற்படி வசனம் இறக்கப்பட்டது.

ஆயுதப் போரும் சிந்தனைப் போரும்

மார்க்கத்திற்கெதிரான இராணுவப்படையெடுப்பை தடுத்து நிறுத்த முயற்சிகள் செய்யப்படுவது அவசியம் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை. அதேபோல், சிந்தனா ரீதியான படையெடுப்பை தடுத்து நிறுத்த அறிவுபூர்வமான, சிந்தனா புரட்சிக்கான ஏற்பாடுகளும் செய்யப்படுவது அவசியமாகும். அதாவது, ‘ஜிஹாத்’உம் ‘இஜ்திஹாத்’உம் முஸ்லிம் சமுதாயத்தின் இரு முக்கிய காப்பறன்களாக அமைவதுடன் ஒன்று மற்றையதை பரிபூரணப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றது. ஆனால், ஜிஹாதுக்கு முன்னர் இஜ்திஹாதுக்கான ஏற்பாடுகளும் அதாவது, அறிவுத் தெளிவுடன் கூடிய மார்க்க விளக்கமும் ஆய்வும் ஆராய்ச்சியும் இடம்பெறுவது இன்றியமையாததாகும். இல்லாதபோது எதற்காக, யாருக்கெதிராக ஆயுதம் தூக்கப்பட வேண்டும் என்ற தெளிவின்றி, ஆயுதப் போராட்டத்தின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய இஸ்லாமிய யுத்த தர்மங்கள் விலக்கப்பட்டு, வெறித்தனம் தலைதூக்கி, உலகமே அழிவை நோக்கி நகரக்கூடும்.

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சில குழுக்கள் வழிகெட்டுப் போனமைக்கும் பல அழிவு வேலைகளில் ஈடுபட்டமைக்கும் ஒரு பிரதான காரணம் இருந்தது. அதுதான் அவர்களிடம் ஈமான் ஆழமாகவும் அல்லாஹ்வுக்காகச் செயல்பட வேண்டும் என்ற இக்லாஸ் தெளிவாகவும், மார்க்கத்தின் மீதான பற்று ஆழமாகவும் இருந்த அளவுக்கு ஷரீஆ பற்றிய அறிவுத் தெளிவு இருக்கவில்லை. இதனால், அவர்கள் மார்க்கத்திற்கே அவப்பெயரைத் தேடிக்கொடுத்து, அட்டகாசங்களில் ஈடுபட்டுவிட்டார்கள். கவாரிஜ்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

கவாரிஜ்களது தவறு

கவாரிஜ்கள் அலி(ரழி) அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இணக்க சபையான ‘மஜ்லிஸுத் தஹ்கீம்’ இன் தீர்ப்பை ஏற்க மறுத்ததுடன் அலி(றழி) அவர்களைக் கொலைசெய்த படுபாதகச் செயலிலும் ஈடுபட்டார்கள். அவர்களிடம் மார்க்கத்தின் மீதான பற்றும் ஈமானில் உறுதியும் இருந்த அளவுக்கு மார்க்கத்தின் போதனைகள் பற்றிய அறிவுத் தெளிவிருக்கவில்லை. எனவே, குர்ஆன் வசனங்களுக்குப் பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர். நண்பர்களை எதிரிகளாகவும் எதிரிகளை நண்பர்களாகவும் கருதினர். இஸ்லாத்தின் பகிரங்க எதிரிகளுக்கு எதிராகப் பிரயோகிக்க வேண்டிய ஆயுதங்களை சக முஸ்லிம்களுக்கெதிராகப் பிரயோகித்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் பெரும் வடுவொன்று அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. உமையா, அப்பாஸிய கிலாபத்தின் போது வேறு பல இரத்தக்களரிகளும் ஏற்படக் காரணமாகினார்கள்.

இந்த கவாரிஜ்கள் மார்க்க பக்தியாளர்களாக இருந்த அளவுக்கு குர்ஆனின் விளக்கம் கொண்டவர்களாக இருக்கவில்லை என்ற கருத்தை நபி(ஸல்) பின்வருமாறு முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.
‘’(சஹாபாக்களே) அவர்களது தொழுகையைப் பார்த்து உங்களது தொழுகைகளையும் அவர்களது நோன்பைப் பார்த்து உங்களது நோன்பையும், அவர்களது நற்கருமங்களைப் பார்த்து உங்களது நற்கருமங்களையும் நீங்கள் அற்பமாகக் கருதுவீர்கள். (அதாவது உங்கள் செயல்களை விட அவர்களது செயல்களை அதிக தரமிக்கவையாகப் பார்ப்பீர்கள்.) ஆனால், குர்ஆனை அவர்கள் ஓதுவார்கள். அவர்களது தொண்டைக் குழிகளை அது தாண்டமாட்டாது. அம்பு அதன் வில்லிலிருந்து வேகமாக வெளியேறுவது போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறுவார்கள்’’ (புகாரீ, முஸ்லிம்) என்றார்கள்.

இந்த ஹதீஸிற்கு வியாக்கியானம் செய்யும் ஹதீஸ்கலை வல்லுனர்கள், கவாரிஜ்களை கொலை செய்யும்படியும் அவர்கள் விடயமாக ஜாக்கிரதையாக இருக்கும்படியும் வேறு சில ஹதீஸ்களில் நபி(ஸல்) குறிப்பிடுவதற்குக் காரணம் அவர்களது அறிவீனமும் மார்க்கம் பற்றிய குறைந்த அறிவுமேயாகும். அதனால் அவர்கள் தமக்கும் தமது சமூகத்திற்கும் பெரும் தீங்கை விளைவித்துவிட்டார்கள். அவர்களது நல்லெண்ணமும் தூய இலட்சியமும் அதிகமான இபாதத்களும் அவர்களுக்கு பயனளிக்கவில்லை.(1) எனக் கூறுகிறார்கள்.

இமாம் நவவி(ரஹ்) அவர்கள் இதனை விளக்கும்போது, குர்ஆனை அவர்கள் ஓதும்போது அவர்களது உள்ளத்தை அது அடைவது ஒருபுறமிருக்க அவர்களது தொண்டைக் குளிகளைக் கூட அடையமாட்டாது. ஏனெனில், குர்ஆனை எவராவது ஓதினால் அது உள்ளத்தில் பதியும் வகையில் அதுபற்றி ஆழமாக சிந்திப்பதும் ஆய்வு செய்வதும் அவசியமாகும்.(2) எனக் கூறினார்கள்.

எனவே, குர்ஆனை ஆழகாக ஓதிவந்த அவர்கள் அதன்படி நடக்குமளவு அதன் கருத்துக்களை ஆழமாக சிந்திருக்கவில்லை. இதன் விளைவுதான் இந்த சீர்கேடாகும்.

நவீன யுகத்தில் அறிவீனம்

இந்த உதாரணத்தை நவீன காலத்திற்கும் நாம் பொருத்திப் பார்க்கலாம். இஸ்லாத்திற்காக அரும்பாடுபட்டு உழைக்கும் சிலர் இஸ்லாமிய அறிவுத் தெளிவைப் பெற்றில்லாததன் காரணமாக பல தவறுகளில் விழுகிறார்கள். நண்பர்களாகப் பார்க்க வேண்டியவர்களை எதிரிகளாகக் கருதி கடும் சண்டாளர்களாக மாறிவிடுகிறார்கள். வேறுசிலரோ மிகச் சிறிய விடயங்களுக்கு பெரும் சண்டைகளில் சம்பந்தப்படுவதுடன் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய -இஸ்லாத்தின் அடிப்படையான அம்சங்களில் பாராமுகமாக இருக்கிறார்கள். அதனால், நாளுக்குநாள் சமூகத்தில் பிணக்குகளும் பிளவுகளும் அதிகரித்து சமூகம் பலவீனப்படுத்தப்பட்டு, அர்த்தமற்ற சர்ச்சைகளுக்காக, வாதப்பிரதிவாதங்களுக்காக அதிக கால நேரமும் பணமும், மனித வளங்களும் வீணடிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சீர்திருத்தவாதிகளால் சமூகம் பயனடைந்ததை விட அதிகமாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. இவர்கள் எதனையும்; பேசாது, செய்யாதிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என எண்ணத் தோன்றுகிறது.

இக்கருத்தையே நவீன கால இஸ்லாமிய அறிஞர் ஷைக் அல்கஸ்ஸாலி: ‘இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் பக்கமே நியாயமிருக்கிறது. ஆனால்,அது கையாலாகாத, தோல்விகண்ட வக்கீல்களது கைகளில் சிக்கியிருக்கிறது. அவர்கள் ஒரு வார்த்தையையாவது பேசாதிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ‘’ (3) எனக் கூறகிறார்.

உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) அவர்கள் ‘’அறிவின்றி செயல்படுபவன் சீர்திருத்துவதை விட அதிகமாக சீர்குலைப்பான்’’ (இப்னு ஸஅத்-தபகாத்) என்றார்கள்.

நல்லெண்ணத்துடன் அறிவும் தேவை. ஆகவே, இமாம் புளைல் இப்னு இயாள் அவர்கள் ’’உங்களில் அழகிய செயலில் ஈடுபடுபவர் (அஹ்ஸனு அமல்) யார் என்று சோதிப்பதற்காகவே (அல்லாஹ்) மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் ’’ (67:2) என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் ’அஹ்ஸனு அமல்’ என்ற ’சிறந்த செயல்’ இரண்டு நிபந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அதாவது,
1.அது அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு நிறைவேற்றப்பட வேண்டும்.
2.அடுத்ததாக அது மிகச் சரியாக- நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி செய்யப்பட வேண்டும்’ என்றார்கள்.(4)

தூய எண்ணம் இருந்தும் அது முறைப்படி, இஸ்லாம் கூறிய வகையில் நிறைவேற்றப்படாதவிடத்து அல்லாஹ்வால் ஏற்கப்படமாட்டாது என்பதே இதன் பொருளாகும். உரிய முறையில் அது நிறைவேற்றப்பட அது பற்றிய தெளிந்த, முழுமையான அறிவும் விளக்கமும் பெறப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, தொழுகையானது அழகிய செயலாக மாற அதன் நிபந்தனைகள் ,அதனை நிறைவேற்றும் முறைகள், அதன் பர்ளுகள் ஸுன்னத்கள், அதனை முறிப்பவை போன்றன பற்றிய அறிவு தேவைப்படும்.

ஒரு முஸ்லிம், இஸ்லாமிய பிரசாரம், வழிபாடுகள், அரசியல், பொருளாதாரம், சமூக உறவுகள் போன்றவற்றில் ஈடுபடமுன்னர் அவை ஒவ்வொன்றோடும் தொடர்பான சட்டதிட்டங்களை, நெறிமுறைகளை அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.எடுத்துக்காட்டாக,

  1. இஸ்லாமிய பிரசாரத்தில் சம்பந்தப்படும் ஒருவர் ’அலாபஸீரதீன்’ (நல்ல அறிவுத்தெளிவுடன்) அதில் ஈடுபட வேண்டும் என்பது யாமறிந்த உண்மையாகும். நபி(ஸல்) அவர்களும் அவரது தோழர்களதும் இந்த ’பஸீரா’ வுடன்தான் அல்லாஹ்வின்பால் மக்களை அழைப்பதாகவும் அதுபற்றி பிறருக்குக் கூறும்படியும் அல்லாஹ் 12:108 ஆம் வசனத்தில் குறிப்பிடுகிறான். ’’உமது இரட்சகனின் பாதையின்பால் அறிவு ஞானத்துடனும்; அழகிய உபதேசத்துடனும் அழைப்பு விடுப்பீராக’’ (16:125) என அல்லாஹ் தனது தூதருக்குக் கட்டளையிட்டிருப்பதிலிருந்தும் இஸ்லாமிய பிரசாரத்துக்கு முன்னர் அறிவின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.
  2. வியாபாரம் செய்ய சந்தைக்குப் போக முன்னர் வர்த்தகத்துடன் சம்பந்தமான சட்டங்களை ஒருவர் அறிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவந்த உமர்(ரழி) அவர்கள் ’எமது சந்தையில் வியாபாரம் பற்றிய விளக்கமில்லாதவர்கள் விற்கக்கூடாது. அப்படியில்லாதபோது, அவர் விரும்பியோ விரும்பாமலோ வட்டியை உண்பார்’’ என்றார்கள்.
  3. நபி மூஸா(அலை) அவர்கள் ’ரப்பிஷ்ரஹ் லீ சத்ரீ வ யஸ்சிர் லீ அம்ரீ வஹ்லுல் உக்ததம் மின் லிஸானீ. யஃப்கஹூ கவ்லீ. (‘ரப்பே எனது உள்ளத்தை விரிவாக்கித் தருவாயாக (அதாவது-அறிவு தருவாயாக) எனது விவகாரங்களை இலகுபடுத்தித் தருவாயாக.எனது நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக.அப்போது தான் அவர்கள் எனது பேச்சை ஆழமாக விளங்கிக் கொள்வார்கள்” என்று பிராத்திதார்கள். தஃவா செய்ய முன்னர் இந்தப் பிரார்தனையும் முயற்சிமும் தேவை என்பதை இது உணர்த்துகிறது.

எனவே, ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் உதயமாகும் சிந்தனைகள், அவன் பேசும் வார்த்தைகள், அவனது செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமாயின் அவற்றில் அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதவை பற்றிய அறிவுத் தெளிவு அவசியமாகும். இல்லாதபோது அவனது வாழ்வு குளிக்கப்போய் சேறுபூசியதாக மாறிவிடக்கூடும். இது பெரும் துரதிஷ்டமாகும். சுவர்க்கத்துக்குச் செல்வதாக நினைத்துக்கொண்டு நரகில் நுழைய நேரிடலாம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

எனவே, ஒவ்வொரு முஸ்லிமும் இந்தவகை அறிவைப் பெற்றிருப்பது இன்றியமையாத் தேவையாகும். இதன் பொருள் ஒவ்வொருவரும் சகல துறைகளிலும் நிபுணத்துவம் பெறவேண்டுமென்பதல்ல. அவரவர் நேரடியாக சம்பந்தப்படும் துறைகளில் மட்டுமாவது இந்த அறிவுத் தெளிவு அவசியமாகும்.

மார்க்க அறிவு பெரும் பாக்கியமாகும்

இன்னொருவகையில் பார்க்கும்போது மார்க்க ஞானங்களில் தேர்ச்சியடையக் கிடைப்பது பெரும் பாக்கியமாகும். ஏனெனில், ’’யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் ஆழமான விளக்கத்தை வழங்குவான் ’’ (புகாரீ) என நபி(ஸல்) கூறினார்கள். எனவே அல்லாஹ் ஒருவரை நேசிப்பதன் அடையாளமாகவும் அது இருக்கிறது. ’’யாருக்கு அறிவு ஞானம் வழங்கப்படுகிறதோ அவர் அதிகமான பாக்கியங்கள் வழங்கப்பட்டவராகிறார்.’’ (2:269) என்று அல்லாஹ் கூறுகிறான்.

மார்க்க ஞானத்தைக் கற்பது கடமை என்பது போலவே, அதில் ஈடுபடக் கிடைப்பது ஒரு பெரும் பேறாகும். குர்ஆனிலிருந்து மார்க்க அறிவைப் பெற ஒருவர் முயற்சிக்கையில் அவர் மக்களிலேயே சிரேஷ்டமானவராக மாறிவிடுகிறார். ’’உங்களில் சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று அதனை (பிறருக்கும்) கற்பிப்பவராவார்.’’ (புகாரீ) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்தவகையில் நோக்கும்போது, மார்க்க அறிஞர்கள் அல்லாஹ்வின் சந்நிதியில் சிரேஷ்டமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் உலக மாமறையான குர்ஆனையும் அதன் ஞானங்களையும் நபி பெருமானின் சுன்னாக்களையும் சுமந்திருக்கும் கண்ணியமானவர்களாவர். மனித சமூதாயத்திற்கு உயிரூட்ட வந்த உபதேசப் பேழையான, உள்ளங்களிலுள்ள சகல நோய்களுக்கும் நிவாரணியாக வந்த குர்ஆனுடன் நெருங்கிய உறவுபூண்டு வாழும் மேதைகளான இந்த உலமாக்களுக்கு அல்லாஹ்விடம் உயர் அந்தஸ்த்து இருப்பதில் அதிசயம் எதுவுமில்லை.

குர்ஆனிய ஆலிமுக்கான வெகுமதி

ஓர் ஆலிம் , சன்மார்க்க அறிவைச் சுமந்து பிறருக்கும் அதனைக் கற்பிக்கும் போது உலகில் மிக உன்னதமான ஒரு பணியில் ஈடுபடுவதனால் அவரை சமூகம் கௌரவமாக நடாத்துவது அவசியமாகும். அவர் பேசும் பேச்சுத்தான் உலகில் அழகிய சிறந்த பேச்சு என்பது அல்லாஹ்வின் கருத்தாகும். ’’அல்லாஹ்வின்பால் அழைத்து, நற்காரியங்களில் ஈடுபட்டு, நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக் கூறுபவரை விட அழகிய பேச்சைப் பேசுபவர் யாராக இருக்க முடியும்?’ (41:33) என அல்லாஹ் கேட்கிறான்.

அத்தகைய உலமாக்களை உருவாக்கும் இடங்களை நிறுவுவதும் அதற்காகச் செலவு செய்வதும் கடமையாகும். தப்ஸீர், ஹதீஸ், அகீதா, பிக்ஹ், அக்லாக் போன்ற மார்க்கத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்ட கலாஞானங்களில் புலமையும் தேர்ச்சியும் மிக்க உலமாக்கள் தேவையான அளவில் உருவாக்கப்படுவது ’பர்ளு கிபாயா’ வாகும். அந்த எண்ணிக்கையிலான உலமாக்களை உருவாக்கும் வரை முழு சமூகமும் குற்றவாளியாகக் கொள்ளப்படும்.

எனவே, ஷரீஆத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள், முஜ்தஹிதுகள், துறைசார் வல்லுனர்கள் உருவாக்கப்படுவது மார்க்கக் கடமையும் காலத்தின் தேவையுமாகும். தற்கால சூழலில் முஸ்லிம் சமூகத்தைப் பாதித்துள்ள பல பிரச்சினைகளிலிருந்து அதனை விடுவிக்கவும் எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்கவும் இந்த ஷரீஆத்துறை சார்ந்த அறிவுஜீவிகளை தேவையான அளவு உருவாக்க முழு முஸ்லிம் சமூகமும் பரஸ்பரம் ஒத்துழைக்கவேண்டும். அதேவேளை ஷரீஆ அறிவும், உலக அறிவு எனப்படும் பொதுக் கல்விகள் பற்றிய ஞானமும் ஒன்றுசேர வேண்டும். ஒரு வண்டியின் இரு சக்கரங்களாக அவை இருக்க வேண்டும். இந்தவகையில் சிந்தித்து செயல்பட அல்லாஹ் அருள்புரிவானாக!

உசாத்துணைகள்:
1. அதருல் இல்மிஸ் ஷரஈ பீ முவாஜஹதில் உன்பி வல் உத்வான், அப்துல் அஸீஸ் இப்னு பவ்ஸான் இப்னு ஸாலிஹில் பவ்ஸான்.
2. பத்ஹுல் பாரி, இமாம் இப்னு ஹஜர் 19: 389
3. முஹம்மத் அல்கஸ்ஸாலி, ஹாதா தீனுனா
4. இப்னுதைமியா, மஜ்மூஉல் பதாவா- 1:333-334

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top