பிழையான மனப் பதிவுகள், தப்பபிப்ராயங்கள் என்பன தனி மனிதர்களுக்கு இடையிலான உறவுகளைப் பாதிப்பது போலவே சமூகங்களுக்கிடையிலான உறவுகளையும் பாதிக்கும்.
இது சமூகவியல் சார் உண்மையாகும். இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பாகவும் சர்வதேச முஸ்லிம் உம்மா பற்றி பொதுவாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் பிழையான கருத்துக்களையும் மனப் பதிவுகளையும் பெரும்பாலான சிங்கள பௌத்தர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவை திட்டமிடப்பட்டு அவர்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டும் வருகின்றன. நல்லபிப்பிராயங்கள் சகவாழ்வையும் தப்பபிப்ராயங்கள் துவேசத்தையும் உண்டு பண்ணும் என்பது உலக நியதியாகும். முஸ்லிம்கள் மீதும் பள்ளிவாயல்கள் வியாபாரத்தலங்கள் வீடுகள் போன்றவற்றின் மீதும் தீவிரவாத பௌத்தர்கள் தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள்.
எனின் அதற்கான பின்புலம், அடித்தளம் யாது என ஆராயப்பட வேண்டும். தப்பபிப்ராயங்கள் அதிகரிக்கும் அல்லது பலப்படும் அளவுக்கு உறவுகளில் விரிசல் ஏற்பட்டு வன்முறைகளாக அது பரிமாணம் எடுக்கும். வதந்திகளாலும் விஷமப் பிரசாரங்களாலும் அறிவீனத்தாலும் தப்பபிப்ராயங்கள் ஏற்படுகின்றன.
எனவே, முஸ்லிம்கள் மீதான தீவிரவாதிகளது தாக்குதல்களை எதிர்காலத்தில் தடுத்து நிறுத்துவதற்கு சிறந்த வழிமுறை இந்த தப்பபிப்ராயங்கள் யாவை என மிகச் சரியாக இனம் கண்டு அவற்றை நீக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகும். இப்பணி உடனடியாக செய்யப்பட வேண்டும்.
சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வைக் கட்டியெழுப்பும் நோக்கில் இப்பணி தொடரப்பட வேண்டும்.இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகத் துறை சார்ந்தவர்கள் போன்றோரது ஆலோசனைகளையும் காத்திரமான பங்களிப்புக்களும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் பொதுபலசேனா, ஜாதிக ஹெல உருமய, சிங்கள ராவய போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சிங்கள சமூகத்திலுள்ள வேறு சிலரும் முஸ்லிம் சமூகம் பற்றிய பல குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் மூளைச் சலவை செய்யப்படும் பௌத்தர்கள் முஸ்லிம்களை வெறியுணர்வோடு பார்ப்பதும் சிலபோது தாக்குதல்களாக அதனை வெளிக்கொணர்வதும் சகஜமாக மாறிவிட்டது.
அவர்கள் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டுக்கள் வருமாறு:
- முஸ்லிம்களது சனத்தொகை வெகுவாக அதிகரித்து வருகிறது. அவர்கள் எதிர்காலத்தில் பெரும்பான்மையாக மாறுவார்கள்.
2. சிங்களப் பெண்களை திருமணம் செய்யும் முஸ்லிம் ஆண்கள் அவர்களை மதம் மாறும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்.
3. உணவை இஸ்லாமிய மயப்படுத்தும் வேலையை முஸ்லிம்கள் செய்து ஹலாலை முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் திணிக்கிறார்கள்.
4. முஸ்லிம்கள் ஷரீஆச் சட்டத்தை இந்நாடிற்குள் திணித்து வருகிறார்கள்.ஆனால்இ இங்கு ஒரேயொரு சட்டம் தான் இருக்க வேண்டும்.
5. இலங்கையில் ஜிஹாதிய சிந்தனையும் அடிப்படைவாதமும் பரவி வருகிறது.
6. முஸ்லிம் அல்லாதவர்களுடன் கொடூரமாக நடக்கும்படி தான் குர்ஆன் கூறுகிறது.
7. இஸ்லாமிய குழுக்களது தொகை அதிகரித்து வெளிநாட்டுப் பணம் வந்து அவர்களைப் பலப்படுத்துகிறது.
8. ‘நிகாப்’ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.ஹிஜாப் முஸ்லிம் பெண்களைப் பிரித்துக் காட்டுகிறது.
9. முஸ்லிம்கள் தமது உடைஇநடைஇபாவனைகளில் அரபு நாட்டுக் கலாசாரத்தையே பின்பற்றுகிறார்கள்.
10. முஸ்லிம் அடிப்படை வாதத்தைப் பரப்பும் கேந்திர ஸ்தானங்களாக பள்ளிவாயில்களும் மத்ரஸாக்களும் மாறி வருகின்றன.
11. முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் சிங்களவர்களை மிகைத்து வருகிறார்கள்.
12. சம்பிரதாய முஸ்லிம்களுக்கு ஸலபிய-வஹ்ஹாபியர்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளார்கள்.
13. முஸ்லிம்கள் மிருகவதையில் ஈடுபடுகிறார்கள்.
14. ஜம்இய்யதுல் உலமாவும் ஷூரா கவுன்சிலும் வெளிநாட்டுத் தொடர்புள்ள, அடிப்படைவாத, தீவிரவாத அமைப்புக்களாகும்.
15. முஸ்லிம்கள் பெளத்த பிக்குகளை அவமதித்து வருவதோடு பெளத்த மதத்தையும் விமர்சிக்கிறார்கள்.
16. இந்த நாட்டின் ஏனைய இனங்களில் இருந்து முஸ்லிம்கள் படிப்படியாக தம்மைத் தனிமைப்படுத்தி, அந்நியப்படுத்தி வருகிறார்கள்.
17. இந்த நாட்டின் மத்ஸாக்களது பாடத்திட்டம் முஸ்லிம் தீவிரவாதத்தைப் போதித்து வருகிறது.
மேலுள்ள குற்றச்சாட்டுக்கள் ஒரு சில உதாரணங்கள் மட்டுமேயாகும். எனவே, நாம் முஸ்லிம் சமூகத்திடம் பின்வரும் வேண்டுகோள்களை விடுக்கின்றோம்:-
- இப்படியான குற்றச்ச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்ற விழிப்புணர்வை சமூகத்தில் பரவலாக ஏற்படுத்துவது.மக்களை பயமுறுத்துவதற்காக அன்றி பிறர் எம்மைப் பற்றி கொண்டுள்ள மனப்பதிவுகளை அறியாத நிலையில் அவர்களோடு உறவாடுவது விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்பதனால் இந்த ஏற்பாடு அவசியமாகும்.
- மேற்கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையாகவே முன்வைக்கப்படுகின்றனவா என்பதை ஆராய்வதும் இவற்றில் அடங்காத வேறு சில குற்றச்சாட்டுக்களும் உள்ளனவா என்பதைத் தேடுவதும் அவற்றைத் தொகுப்பதும்.
- இவற்றுக்கான பதில்களை அல்லது தெளிவுகளை ஏற்கனவே எவராவது வழங்கியிருந்தால் அவற்றைத் தொகுப்பது.
- இந்த விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்குமான பதில்களைத் தாயாரிப்பது.பதில்கள் அறிவு பூர்வமானவையாகவும் ஆதாரங்களோடு கூடியவையாகவும் பிறர் மனங்களைப் புண்படுத்தாதவையாகவும் அமைவது அவசியமாகும். புள்ளிவிபரங்கள், ஆய்வுகளது மேற்கோள்களை துணையாகக் கொள்வது பொருத்தமாகும்.
குற்றச்சாட்டுக்களை இனம்காண்கின்ற தொகுக்கின்ற வேலை பரவலாக இடம்பெற்றாலும் இந்தப் பணி-அதாவது-பதில்களைத் தயாரிக்கும் பணி மிகவும் குறைவாகவே இடம்பெற்று வருவது யாவரும் அறிந்த உண்மையாகும். உணர்சிகளுக்கு இடம் கொடுக்காமல், அவசரப்படாமல்இஅறிவை அறிவால் எதிர்கொள்கின்றஇகருத்தை கருத்தால் அணுகுகின்ற கலாசாரத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் தமக்கு சவால்கள் வந்த போதும் அவர்களுக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் அல்லாஹ்வின் உதவியை நாடினார்கள். அத்துடன் நிறுத்தாது சவால்களை எதிர்கொள்வதற்கான அரிய பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள். ஆயிஷா (ரழி) அவர்களுக்கு எதிரான அவதூறுக் குற்றச்சாட்டு, குர்ஆன் நபி (ஸல்)அவர்களது சொந்த ஆக்கம் என்ற குற்றச்சாட்டு, யூதர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட விஷமப் பிரசாரங்கள் போன்றவற்றின் போது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க அல்லாஹ்வும் அவனது தூதரும் மேற்கொண்ட முயற்சிகள் எமக்கு முன்மாதிரிகளாக உள்ளன.
நபி(ஸல்)அவர்களுக்கு எதிராக கஃப் இப்னு அஷ்ரக் வசைக்கவி பாடிய போது நபியவர்கள் ஹஸ்ஸான்(ரழி) போன்ற கவிர்களைப் பயன்படுத்தி பதிலடி கொடுத்தமை வரலாற்று உண்மையாகும். எனவே, மேற்சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கான பதில்களை tolerableislam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் இன்ஷா அல்லாஹ் அவற்றை ஆய்வுக்குற்படுத்தி நூல் வடிவில் தொகுத்து சிங்கள, ஆங்கில மொழிகளில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.
இதற்காக சில சகோதரர்கள் தயாராக உள்ளார்கள். சாந்தியும் சமாதானமும் இன நல்லிணக்கமும் நிலவும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காக எம்மைத் தயார்படுத்துவோமாக!அல்லாஹ்வுக்காக இந்தப் பணியில் ஈடுபட அவன் எமக்குத் துணை புரிவானாக
http://vidiyal.lk




