zakath

வறுமையை போக்கும் ரமழானியத் திட்டம்

  1. ஸகாத்
  2. ஸதகா
  3. பித்யா
  4. கப்பாரா
  5. ஸதகதுல் பித்ர்

இந்த ஐந்து வகையான பண அல்லது பொருள் பரிமாற்றமும் ரமழான் காலத்தில் நிகழ்வதனால் அல்லாஹ்வின் அருளால் வறுமையை நியாயமான அளவு கட்டுப்படுத்த முடியும். ஆனால் அவை உரிய முறையில் நிறைவேற்றப்படாமையினால் அல்லது நிர்வகிக்கப்படாமையினால் அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படும் பலன்கள் சமூகத்திற்குக் கிடைப்பதில்லை.

  1. ஸகாத்:- வறுமையை கட்டுப்படுத்துவதற்கான மிகப் பிரதானமான வழிமுறையாகும். ஆனால் அது உரிய பலனை அளிக்க வேண்டுமாக இருந்தால் பின்வரும் நிபந்தனைகள் முக்கியமானவை:-

அ. ஸகாத்தை தனவந்தர்கள் மிகச்சரியாக கணிக்கவும் வேண்டும்; உரிய அளவை முழுமையாக வெளிப்படுத்தவும் வேண்டும்.

(ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் போவதற்கு முன்னால் ஜக்காத் வெளிப்படுத்தப்படுகிறதா என்பது பார்க்கப்பட வேண்டும்)

ஆ. எட்டுக் கூட்டத்தாரில் இலங்கையில் உள்ள கூட்டத்தார் யாவர் என சரியாக இனம் கண்டு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இ. நுகர்வுத் தேவையை விட தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு ஸகாத் பணத்திலிருந்து வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

  1. ஸதகா:- ரமழானில் ஸகாத் மட்டுமன்றி ஸதகாவும் வரலாற்றில் ரமழான் காலத்தில் அதிகமாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. நபியவர்கள் ரமழானில் வேகமாக வீசும் காற்றை விடவும் அதிகமாக தர்மம் செய்தார்கள் என்பதிலிருந்து ஸகாத்தை வெளிப்படுத்தியதற்கு பின்னரும் தனவந்தர்கள் தமது பணத்திலிருந்து ஸதகாவை சமூகத்தின் தேவைகளுக்காக வெளிப்படுத்த வேண்டும் என்பதை காட்டுகிறது.
  2. கஃபாரா:- எனப்படுவது நோன்பை வேண்டுமென்றே முறித்தவர்கள் வழங்க வேண்டிய குற்றப் பணமாகும். அதில் அடிமையை விடுதலை செய்வது தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு இருப்பது என்பன சாத்தியப்படாத போது 60 மிஸ்கின்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பது முக்கியமான அம்சமாகும். நோன்பை மனமுரண்டாக முறித்தவர்கள் இந்த கஃப்பாராவை உரிய முறையில் கொடுத்து வந்தால் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் அதன் மூலம் பயனடைவார்கள்.
  3. பித்யா:- என்பது நோன்பு பிடிக்கவே முடியாத நிலையில் உள்ள நிரந்தர நோயாளிகள், அதிகம் வயது சென்ற உடல் பலவீனம் கொண்டவர்கள் நோன்பு பிடிக்காமல் அதற்கு பதிலாக ஒரு மிஸ்கினுக்கு ஒரு நாள் உணவை வழங்குவதாகும். நவீன கால இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி ஒரு மிஸ்கினுக்கான உணவு என்பது ‘இரண்டு’ வேளைக்கான முழுமையான உணவாகும். நமது நாட்டைப் பொறுத்தவரையில் ஒருவேளை உணவில் சோறும் ஆகக் குறைந்தது இரண்டு கறிகளும் உள்ளடங்கும். அந்த வகையில் இந்த ‘பித்யா’ வழங்கப்படுமாயின் ஏழ்மையை பெரிய அளவில் குறைக்கலாம்.
  4. ஸதகதுல் பித்ர்:- என்பது ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தனது பராமரிப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் அதாவது தலைக்கு ஆகக் குறைந்தது இரண்டரை கிலோ அரிசியை தர்மமாக வழங்குவதாகும். அவ்வாறு வழங்கும் போது வசதியே இல்லாத பரம ஏழைகள்(பகீர்) அல்லது தனது தேவையை முழுமையாக பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ள ஓரளவு ஏழை(மிஸ்கீன்) ஆகியோருக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

நமது நாட்டில் ஸதகதுல் பித்ரை உறவினர்களுக்கும் அயல் வீட்டாருக்கும் அறிமுகமானவர்களுக்கும் வழங்கும் வழக்கம் இருந்துவருகிறது. இது எந்த வகையிலும் அனுமதிக்கத்தக்கதல்ல. நபியவர்கள் ‘நோன்பாளியின் நோன்பை பரிசுத்தப்படுத்துவதற்கும் மிஸ்கினுக்கு உணவாகவும் ஸதகதுல் பித்ர் அமையும்’ என்று குறிப்பிட்டார்கள். எனவே ‘மிஸ்கினுக்கான உணவாக’ என்று குறிப்பிட்டதிலிருந்து பித்ரா என்பது ஏழைகளுக்கு மாத்திரமே போய்ச் சேர வேண்டும். சில இமாம்களது கருத்தின்படி ஸகாத் வழங்கப்படும் எட்டுக் கூட்டத்தாருக்கு அது வழங்கப்படலாம்.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் இரண்டரை கிலோ சம்பா அரிசியையோ (அதன் பெறுமதியை) பணமாகவோ கொடுக்க முடியும்.

வறுமை ஒழிப்புக்கான ரமழானிய காலத்து மேற்படி திட்டங்களை உரிய முறையில் அமுலாக்க முடியுமாயின் அல்லாஹ்வின் அருளால் இலங்கையில் வறுமையை நியாயமான அளவு கட்டுப்படுத்த முடியும்.

அஷ்ஷைக் பளீல் (நளீமி)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top