ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஓர் இஸ்லாமியப் பார்வை

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நாட்டை நேசிப்பவர்களுக்கும் இஸ்லாத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டவர்களுக்கும் சந்தோஷத்தைத் தந்திருப்பதாகக் கருத முடியும்.அச்சம் நிறைந்த, ஊழல்கள் மலிந்த ஓர் இருண்ட யுகம் முடிவுக்கு வந்திருப்பது பற்றிய நற்செய்தியை இந்தத் தேர்தல் முடிவுகள் தந்தன.

ஆனால்,புதிதாக உருவாக்கப்பட்டடிருப்பது இஸ்லாமிய அரசோ அல்லது அங்குள்ள ஆட்சியாளர்கள் முற்றும் துறந்த முனிவர்களோ அல்லர். அவர்களும் அரசியல்வாதிகள் தான்.இருப்பினும்,கடந்த ஆட்சியோடு ஒப்பிடும் போது தற்போதைய ஆட்சியின் கோஷங்களும் தேர்தல் விஞ்ஞாபனமும் திட்டங்களும் ஓரளவு திருப்திகரமாக இருக்கின்றன.பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த நியாயமாகச் சிந்திக்கும் புத்திஜீவிகளும் கூட இதனை ஏற்றுக்கொள்கிறார்கள். அந்தவகையில் ஏற்படும் சந்தோஷமே அன்றி முழு சுபீட்சமும் இங்கு கிடைத்து விடும் என நம்புவது முஸ்லிமின் ஈமானைப் பாதித்து விடும்.

நபி(ஸல்) அவர்களது காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இன்றைய வெற்றியோடு ஒப்பிட முடியும். அல்குர்ஆனின் அர்ரூம் எனும் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களில் அச்சம்பவம் சுருக்கமாகக் கூறப்படுகிறது.ரோமாபுரிப் பேரரசு கிறிஸ்தவத்தை அரச மதமாக ஏற்றிருந்தது. அவ்வரசுக்கெதிராக நெருப்பு வணங்கிகளான பாரசீகர்கள் போர் தொடுத்து வெற்றியடைந்தனர். அப்போது அல்லாஹ்,ரோமாபுரி தற்போது வெற்றி கொள்ளப்பட்டுள்ளது என்றும் பின்னர் சில வருடங்களில் அப்பகுதி பாரசீகத்துக்கெதிராக வெற்றி வாகை சூடும் என்றும் கூறியதுடன் அவ்வாறு ரோமாபுரிக்கு வெற்றி வரும்போது மக்காவில் இருக்கும் முஃமின்கள் சந்தோஷப்படுவார்கள் என்றும் கூறினான். ரோமர்கள் வேதக்காரர்களாக இருந்ததனால் முஃமின்களுக்கு சந்தோஷம் வந்தது. நெருப்பு வணங்கிகளான பாரசீகர்களை விட உரோமர்கள் கொள்கை ரீதியாக முஃமின்களுக்கு நெருக்கமானவர்களாக இருப்பதே இதற்கான காரணமாகும். அதேபோல் மஹிந்த அரசை விட ஒப்பீட்டு ரீதியில் மைத்திரி அரசு நல்லதாகும் என எண்ண இடமுண்டு.

இலங்கை முஸ்லிமின் பார்வை

மஹிந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகம் பலவாறான நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. மஹியங்கனைப் பள்ளிவாயலுக்குள் பன்றியின் இறைச்சி போடப்பட்டது. குளியாப்பிட்டியில் அல்லாஹ்வின் பெயர் தாங்கிய வெண்ணிற கொடும்பாவி தெருக்களில் எடுத்துச் செல்லப்பட்டு இறுதியில் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. தர்கா நகர் கலவரத்தில் அல்குர்ஆன் பிரதிகளும் ஹதீஸ் கிரந்தங்களும் தீயில் எரிந்து சாம்பலாகின. இருவர் படுகொலை செய்யப்பட்டு மற்றும் இருவர் கால்களை இழந்தனர்.200 கோடி ரூபாய்களுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப் பட்டன. சுகததாச உள்ளக அரங்கில் சர்வதேச மியன்மார் கொலையாளி, பயங்கரவாதி பகிரங்கமாக பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். நாம் உயிரினும் மேலாக மதிக்கும் அல்குர்ஆனில் பிழைகள் பல இருப்பதாகவும் அது விடயமாக இலங்கை மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும் படியும் ஞானசார கூறி விவாதிக்க வரும்படி சூளுரைத்தார். இப்படி ஏராளமான நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. ஆனால்,ஒரு சிறுபான்மைச் சமூகம் இவ்வாறு படு மோசமாகப் பாதிக்கப்பட்ட போது அரசு வாய்மூடி நின்றது.

இவை முன்னைய அரச தலைவரதும் பாதுகாப்புச் செயலாளரதும் பூரண அனுசரணையிலும் பாதுகாப்பிலும் நடந்தேறிய நாடகங்கள் என முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.அப்பாவி பௌத்த மக்களது உள்ளங்களில் முஸ்லிம்களுகெதிரான எதிர்ப்பு மனப்பாங்கைத் தோற்றுவித்து அவர்களது வாக்குகளைப் பெற வேண்டும் என்ற மிகக் கீழ்த்தரமான நோக்கத்தோடு இந்த நாட்டில் அரச இயந்திரம் மேற்கொண்ட அரச பயங்கரவாதம் அது என்றால் அது மிகையாகாது.

இப்படியான பக்க சார்பான ஒர் இனவாத அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம்கள் அதற்கு எதிராக வாக்களித்திருப்பது அப்படியொன்றும் அதிசயமான காரியமல்ல.

பொதுபல சேனாவை போஷிக்க இஸ்ரேலிய மொசாட்டானது நோர்வே ஊடாகப் பணம் கொடுத்து வருகிறது என நண்பர் எழுத்தாளர் லதீப் பாரூக் அடிக்கடி கூறுவார். இந்த பொதுபலசேனாவை உருவாக்கி போசிப்பது மஹிந்தவின் அரசு தான் என ராஜிதவும் அனுரகுமாரவும் கூறி வந்தார்கள். யதார்த்தத்தை விளங்கி தைரியமாகப் பேசிய இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

முஸ்லிம் சமூகம் மிகுந்த கவலையோடும் அச்சத்தோடுமே காலம் கடத்தி வந்தது. அவர்களது பொருளாதாரத்தை முடக்கவும் மார்க்கத்தைப் பற்றிய பிழையான மனப்பதிவை உருவாக்கவும் சர்வதேச பயங்கரவாதிகளோடு அவர்களை சம்பந்தப்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இலகுவில் மறந்துவிட முடியும். எனவே,முஸ்லிம் சமூகம் கடந்த தேர்தலில் முழுப் பலத்தைப் பிரயோகித்து இனவாதிகளை ஓரங்கட்டியது. அதற்காக பலவகையான பிரயத்தனங்கள் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டன.

ஆட்சி மாற்றத்திற்கான முன்னெடுப்புக்கள்

அந்தவகையில்,முஸ்லிம் சமூகத்திலுள்ள வாக்களிக்கும் வயதெல்லைக்கு உட்பட்ட அனைவரும் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவித்தலை தேசிய சூரா சபை நாடு பூராவும் அனுப்பி பதிவுகளுக்குத் தூண்டுதல் வழங்கியது. வேறு பல இஸ்லாமிய அமைப்புக்களும் இது விடயமாகக் கவனம் செலுத்தின.

தேர்தலில் வாக்களிப்பது அமானிதமாகும், சிபார்சு செய்வதாகும், சாட்சி கூறுவதாகும் போன்ற ஆன்மீகப் பெறுமானங்களை வாக்களிப்போடு சம்பந்தப்படுத்தி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் தேசிய சூரா சபையும் பலமாக வலியுறுத்தியதுடன் வாக்களிப்பது வாஜிப் என்றும் கூறி வந்தன. பல உலமாக்கள் தமது குத்பாப் பிரசங்கங்கள் வாயிலாகவும் பல எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களூடாகவும் இதனை வலியுறுத்தி வந்தார்கள்.முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிகளையும் அட்டூழியங்களையும் பலரும் தொடர்பு சாதனங்கள் வாயிலாக அதிகம் பரப்பி வந்தார்கள்.

முஸ்லிம்கள் அழுதார்கள், தொழுதார்கள், மனம் உருகிப் பிரார்த்தித்தார்கள், அநியாயம் இழைப்பவர்களை இல்லாதொழிக்க வேண்டும் என அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். பெரும்பாலானவர்கள் தேர்தல் தினத்தில் நோன்பிருந்த நிலையில் தான் மணிக்கணக்கில் வரிசைகளில் கால்கடுக்க நின்று வாக்களித்தார்கள். வரலாற்றில் என்றுமே காண முடியாத அளவுக்கு வாக்களிப்பு நிலையங்கள் முஸ்லிம் வாக்காளர்களால் நிரம்பி வழிந்தன.

பிரபலமான முஸ்லிம் கட்சிகளின் முடிவுகளுக்காகக் கூடக் காத்திருக்காமல் ஏற்கனவே முஸ்லிம்கள் முடிவுகளை எடுத்து விட்டார்கள். முஸ்லிம்களது தனித்துவங்கள் மீதும் சுதந்திரங்கள் மீதும் கைவைத்தவர்களை முஸ்லிம்கள் ஆன்மீகப் பலத்தாலும் ஒற்றுமையாலும் தோற்கடித்தது போல் வாக்குகள் என்ற பிரபலமான ஜனநாயக ஆயுதத்தாலும் தோற்கடித்தார்கள்.

முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தபடியான வெற்றியை அல்லாஹ்தான் கொடுத்தான். ஆனால் மக்கள் அல்லாஹ்வின் பால் மீண்டு வரும் போதும், ஒற்றுமைப்படும் போதும் அவர்களுக்கு அவன் கை கொடுப்பான் என்பதற்கு தேர்தல் முடிவுகள் நல்ல சான்றாகும். ”தேர்தலில் மஹிந்த தோற்கவில்லை. பௌத்த மதம் தோற்றது” என்ற ஞானசாரவின் கூற்று சிந்தனைக்குரியது. அகிம்சையையும் அன்பையும் மட்டுமே போதிக்கும் பௌத்த மதத்தை தனது கோஷமாகக் காட்டி பௌத்தத்துக்கே இழுக்கைத் தேடித் தந்த இந்த பயங்கரவாதியுடன் சேர்ந்து அவருடன் ஒட்டிக் கொண்டிருந்தவர்களும் தேர்தல் முடிந்த பின்னரும் திட்டமிட்ட வகையில் இந்நாட்டில் இனவாதத்தை தொடர்ந்தும் பரப்ப முயற்சியெடுத்து வருகிறார்கள்.

குர்ஆன், ஹலால், ஹிஜாப் என முஸ்லிம்களது பிரதானமான தனித்துவ அம்சங்களின் மீது கைவைத்தவர்கள் தற்போது தோற்கடிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் தேர்தலுக்குப் பின்னரான எமது நடவடிக்கைகள் மிகவும் கவனமாகத் தீர்மானிக்கப்பட வேண்டும். அவற்றை பின்வருமாறு நோக்கலாம்.

  1. தோற்றவர்கள் மீண்டும் தலைதூக்கலாம்:-

ஆட்சி கைமாறியது சம்பந்தமாக 51% ஆனவர்கள் சந்தோஷப்பட்டாலும் 47% ஆனவர்கள் ஆட்சி மாறக் கூடாது என்று தான் விரும்பினார்கள். அவர்களில் கணிசமான பிரிவினர் மஹிந்தவின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள இறுதிக் கட்டம் வரை முயற்சித்தார்கள். துவேஷ உணர்வை வளர்த்தவர்களும் போதைவஸ்துக் கடத்தல்காரர்களும் மெகா கொந்தராத்துக்காரர்களும் நீறு பூத்த நெருப்பாக இந்நாட்டில் தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள். பலரது வயிற்றுப் பிழைப்பு இல்லாமல் போயிருக்கிறது.சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகள் கடந்த அரசுடன் பலவகையான தொடர்புகளை வைத்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளன. அவற்றின் நீண்ட கால அபிலாஷைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்,இவர்கள் அனைவரும் இந்த புதிய ஆட்சியாளர்களை அழித்தொழிக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை..எனவே புதிய ஆட்சியாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட நேரமில்லை. மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.

2.பெருமை அடிப்பது ஆபத்தானது

நடந்து முடிந்த தேர்தலில் சிறுபான்மையினரது குறிப்பாக முஸ்லிம்களது வாக்குப்பலம் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருப்பது யாவரும் அறிந்த உண்மையாகும். இதனை அரசியல் ஆய்வாளர்கள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள்.இதனை முஸ்லிம்கள் சொல்லிக்காட்டி பெருமையடிக்கக் கூடாது.மிகவும் பொறுப்புணர்வோடும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே தூண்டப்பட்டுள்ள இன உணர்வு சம்பந்தமாக முஸ்லிம்கள் தொடர்ந்தும் விழிப்போடு இருப்பது அவசியமாகும். அவ்வுணர்வை இல்லாமலாக்குவதற்கான முயற்சிகளில் நாம் கூடிய கவனமெடுக்க வேண்டும்.குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் வாழுபவர்கள் வெற்றிக் களிப்பைக் கொண்டாடும் போது நாட்டின் பிற பகுதிகளில் சிங்கள சகோதரர்களுடன் இரண்டறக் கலந்து வாழும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி நன்கு சிந்திக்க வேண்டும்.பட்டாசு கொழுத்தி, பால்சோறு சமைத்து கூத்தாடியதால் சில பிரதேசங்களில் பல விபரீதங்களைத் தோற்றுவித்துள்ளது. இப்படியான இக்கட்டான கால கட்டத்தில் முஸ்லிம்கள் தூர நோக்கோடு நடந்து கொண்டால் தான் நாட்டில் ஐக்கியப்பட்டு வாழ முடியும். பெரும்பான்மை இனத்தவர்களது ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் தூண்டும் வகையிலான வாசகங்களையோ செயற்பாடுகளையோ முஸ்லிம்கள் முற்றாக தவிர்க்க வேண்டும். இது வீராப்புப் பேசும் நேரம் அல்ல.

  1. நாட்டைக் கட்டியெழுப்புவதே இன்றைய பணி

தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் சார் விடயங்கள் பற்றிய அதிகமான வாதப்பிரதிவாதங்களிலும் விமர்சனங்களிலும் ஈடுபட்டு வந்தார்கள். அன்றாடம் இடம்பெற வேண்டிய பல நிகழ்ச்சிகள் கூட பிற்போடப்பட்டன. அல்லது மந்தகதியில் தான் இடம்பெற்றன. ஆனால், தற்போது ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஆட்சியாளர்கள் தமது பொறுப்புக்களைச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே,சென்ற ஆட்சியாளர்களைப் பற்றியே இன்னும் பேசிக்கொண்டிருக்காமல் முஸ்லிம் சமூகத்தையும் நாட்டையும் காட்டியெழுப்பும் பாரிய பணியில் முஸ்லிம்கள் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய விசுவாசக் கோட்பாட்டை, கல்வித் துறையை, பண்பாட்டு விழுமியங்களை பலமான அடிப்படைகளின் மீது கட்டியெழுப்பும் தேவை இருக்கிறது. இதற்காக யாவரும் பேதங்களை மறந்து செயல்பட வேண்டும்.

3 நாட்டு நலனும் முஸ்லிம் சமூக நலனும்

மைத்திரியுடன் இணைந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைக்கப்பட்டுள்ள அரசில் தமது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி செயல்படலாகாது.அப்படி நடந்துகொண்டால் அவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதில் சந்தேகமில்லை. அமைச்சுப் பொறுப்புக்கள், செயலாளர் பதவிகள் மற்றும் இன்னோரன்ன வரப்பிரசாதங்களை விட சமூகத்தின் அபிலாசைகளுக்கே அவர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். நல்லாட்சிக்காக உழைத்த ஜே.வி.பி. யினரிடம் இதற்கு நல்ல முன்மாதிரியுண்டு. அராஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாக இருந்தது. எவ்வித பதவிகளையோ அமைச்சுக்களையோ ஏற்கப் போவதில்லை என அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அத்துடன் ஆட்சி மாறுவதால் மட்டும் பிரச்சினை தீரப்போவதில்லையென்றும் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலை அதனை விட மிக முக்கியமானது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் முதலில் நாட்டு நலனையும் பின்னர் முஸ்லிம் சமூக நலனையும் முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

நாட்டு நலன் என்று வரும்போது அராஜகம், இனவாதம், லஞ்சம், ஊழல், வறுமை என்பவற்றை ஒழித்து சுபீட்சமிக்க ஒரு நாட்டை ஸ்தாபிப்பதற்கும் நல்லாட்சியை உருவாக்கவும் பெரும்பான்மை சமூகம் இடும் திட்டங்களுக்கு முஸ்லிம் சமூகம் பூரணமாக ஒத்துழைப்பு நல்க வேண்டும். பல்வேறுபட்ட ஆணைக்குழுக்களை அமைக்கும் திட்டத்தை புதிய அரசு கொண்டுள்ளது. இது போன்ற யாவருக்கும் பொதுவான அம்சங்களில் கூடிய கரிசனை காட்ட வேண்டும். ’எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்று கருதி முஸ்லிம் சமூக நலன்கள் பற்றி மட்டுமோ தனிப்பட்ட நலன்கள் பற்றி மட்டுமோ பேசலாகாது.

அடுத்ததாக முஸ்லிம் சமூகத்திற்கென்று அரசியல் ரீதியான தனியான தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன.

1.கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களில் நிலவும் ஓரவஞ்சனை 2.முஸ்லிம்களது தனித்துவங்களைப் பாதுகாப்பதில் நிலவும் இடர்பாடுகள்

3.முஸ்லிம் சமூகத்தை ஒழித்துக்கட்டுவதை இலக்காகக் கொண்ட பௌத்த தீவிரவாதிகளது கெடுபிடிகள்

4.அகதிகள் விவகாரம்

5.மீள்குடியேற்றம் உரிய விதத்தில் இடம்பெறாமை

6.முஸ்லிம்களது காணிகள் அபகரிக்கப்படுவது

7.சிறுபான்மையினராக வாழும் போது பிற சமூகங்களுடனான உறவுகளில் முஸ்லிம்கள் பலபோது இஸ்லாமிய ஒழுங்கு விதிகளைப் பேணத் தவறியிருப்பது.

போன்றன இன்றுள்ள மிகப் பிரதான பிரச்சினைகளாகும்.

இந்நாட்டில் வாழும் தமிழ் சகோதரர்களுக்கும் முஸ்லிம்களைப் போன்றே பிரச்சினைகள் இருக்கின்றன என்றும் நாம் ஏற்றுகொள்வதும் அவற்றை அவர்கள் தீர்ப்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதும் எமது கடமையாகும்.

எனவே, நாட்டின் பொது நலனோடு தொடர்பான பிரச்சினைகளும் முஸ்லிம் சமூகத்தோடு தொடர்பான பிரச்சினைகளும் இருக்கின்றன என்பதை மனதிற் கொண்டு முதலில் அவற்றைச் சரியாக இனம்காண வேண்டும். அடுத்ததாக, அவற்றைத் தீர்ப்பதற்கான அணுகுமுறைகள் யாவை என விரிவாகச் சிந்திக்க வேண்டும். இது விடயமாக ஆலோசனை வழங்க தேசிய சூரா சபை போன்ற அமைப்புக்கள் கூட தயாராகவே இருக்கிறன. கலந்தாலோசனையின்றி மேற்கொள்ளப்படும் காரியங்களில் அபிவிருத்தி-பரகத் இருக்காது என்பதுடன் சமூகத்தின் பல்துறைசார் தேவைகள் புறக்கணிக்கப்படும் நிலையும் உருவாகும்.

முடிவுரை

எனவே, ஏற்பட்டிருக்கும் புதிய ஆட்சி மாற்றம் பல சவால்களைக் கொண்டிருக்கிறது. தோல்வி கண்டவர்கள் விடயமாக எப்போதும் அவதானத்தோடு தான் இருக்க வேண்டும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை வெற்றியை எல்லை மீறிக் கொண்டாடுவதன் மூலம் பிற சமூகத்தினரது ஆவேசத்தை தூண்டி விட முயற்சிக்கலாகாது. முஸ்லிம் சமூகம் அரசிடமிருந்து மாத்திரம் சலுகைகளையும் உரிமைகளையும் எதிர்பார்த்திருக்காமல் தாமாகவே ஆற்ற வேண்டிய பணிகளை திறம்பட நிறைவேற்றுவதில் முனைப்பாக இருக்க வேண்டும். ’உரிமைகளுக்கு முன் கடமைகள்’ என்பதே முஸ்லிமின் தாரக மந்திரமாகும்.முஸ்லிம் அரசியல் வாதிகள் தமது தனிப்பட்ட அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தமக்குக் கிடைத்த வெற்றியைப் பாவிக்காமல் நாட்டு, மற்றும் சமூக நலன்களுக்காக மட்டுமே செயலாற்ற வேண்டும். முஸ்லிம் சமூகம் அதிகம் நொந்து போயிருக்கிறது. அத்துடன் அரசின் மீது பொதுவாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உலமாக்கள் மற்றும் துறைசார் நிபுனர்கள் போன்றோர் மீது குறிப்பாகவும் முஸ்லிம் சமூகம் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. ஆழமான ஈமான்,சமாதான சகவாழ்வு,ஒற்றுமை,தைரியம் பொது நலன்,இதயசுத்தி, ஒழுக்க விழுமியங்கள், தொடர்ச்சியான செயல்பாடுகள், திட்டமிடல், ஆலோசனை என்பனவே முஸ்லிம் சமூகத்தின் மீட்சிக்கான வழிகளாகும்.

கடந்த கால செயல்களிலிருந்து படிப்பினை பெற்று அல்லாஹ்வின் அச்சத்தை முன்னிறுத்தி செயல்படும் காலமெல்லாம் இன்ஷா அல்லாஹ் சமூகம் முன்னேற்றம் காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top