யாரோ ஒருவரால் எழுதப்பட்ட பின்வரும் கட்டுரை சிறப்பாக அமைந்திருக்கிறது. அவர் யாராக இருந்தாலும் அவர் பாராட்டுக்குரியவர் தான்.
” நாங்கள் எவ்வளவு செலவு செய்தோம் எங்களது மானமே போய்விட்டது.!
நாம் பெற்ற பிள்ளைகளின் மகிழ்வைவிட அந்த நாலு பேரின் நாவுக்கு தான் நாம் அதிக மரியாதை கொடுப்போம்! என்று நினைக்கிற பெற்றோர்கள் இதை. வாசிக்க வேண்டாம்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள சூழலில், எதிர்பார்த்த புள்ளிகளைப் பெறாத குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு கையாள வேண்டும்..??
உங்களுக்கு ஒரு தகவல் சொல்கிறேன்
“தோமஸ் அல்வா எடிசன் ஒரு மந்தபுத்தி கொண்ட குழந்தையாகத்தான் இருந்தான். ஆனால், ஒரு காவியத்தாயின் அரவணைப்பால், ஆதரவால், ஊட்டிய நம்பிக்கையால் அவன் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானியாக மாறினான்.”
ஆம் தன் மீது உலகம் நம்பிக்கை இழக்க நேரிட்டபோதும், தன் தாய் காட்டிய அளப்பரிய நம்பிக்கையும் அன்பும்தான் தன்னை மின்விளக்கு (Incandescent Light Bulb) உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்கத் தூண்டியது என்பதை எடிசன் குறிப்பிட்டிருக்கின்றார்.
மூளை விருத்தி குறைவான பிள்ளை என்றும் தம்மால் படிப்பிக்க முடியாது என்றும் பள்ளிக்கூடத்தில் இருந்து விரட்டப்பட்ட தோமஸ் அல்வா எடிசன் இருள் நிறைந்த இந்த உலகத்திற்கே ஒளியேற்றி இருக்கின்றான் என்றால் அதற்குக் காரணம் அவனுடைய அம்மா தான்.
மூளை விருத்தி குன்றிய பிள்ளையே அப்படி வரும்போது உங்கள் பிள்ளை பெரும் செல்வம்..!! வரட்டு கௌரவத்திற்காக அவர்களின் எதிர்காலத்தை அழித்து விடாதீர்கள்.
பெற்றோர்களே ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பது பத்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு குழந்தையின் கற்றல் பயணத்தில் வரும் மிகச்சிறிய ஒரு கட்டமே தவிர, அதுவே அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இறுதிப் புள்ளி அல்ல.
ஆனாலும் எதிர்பார்த்த புள்ளிகள் கிடைக்காத போது, குழந்தைகள் கடுமையான மன உளைச்சலுக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகிறார்கள்.
இத்தகைய சூழலில், பெற்றோரின் அணுகுமுறை மற்றும் உளவியல் ரீதியான ஆதரவு மட்டுமே அக்குழந்தையின் எதிர்கால நம்பிக்கையைத் தீர்மானிக்கிறது.
பெற்றோராகிய உங்களுக்கு ஏமாற்றமும் கவலையும் இருப்பது இயல்பே. ஆனால், அதை குழந்தைகளிடம் வெளிப்படுத்துவது அவர்களின் பிஞ்சு மனதை பலமாகப் பாதிக்கும். “நாங்கள் இவ்வளவு செலவு செய்தோமே”, “எங்கள் மானமே போய்விட்டது” போன்ற வார்த்தைகள் குழந்தைக்குள் தீவிரமான குற்றவுணர்ச்சியையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்துவிடும்.
“பக்கத்து வீட்டுப் பையன் சித்தியாகிவிட்டான், எங்கட சொந்தக்காரப் பெடியன் அதிக புள்ளி எடுத்திருக்கிறான்..” என்று ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான திறமைகளைக் கொண்டது. ஒப்பீடு குழந்தைகளிடத்தில் சுயமதிப்பைக் குறைத்து, கோபத்தையும் வெறுப்பையும் உருவாக்கும்.
குழந்தை அடைந்துள்ள ஏமாற்றத்தை முதலில் அங்கீகரியுங்கள். “பரவாயில்லை, நீ உன்னால் முடிந்தவரை நன்றாக முயற்சி செய்தாய். இந்த புள்ளி மட்டுமே உன்னுடைய திறமை அல்ல, நாங்கள் எப்போதும் உன்னோடு இருக்கிறோம்” என்ற நம்பிக்கையான வார்த்தைகளை உரக்கச் சொல்லுங்கள். அவர்களைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுவது அவர்களுக்குப் பெரும் பாதுகாப்பு உணர்வைத் தரும்.
உறவினர்களும் அயலவர்களும் புள்ளிகளைக் கேட்கும்போது, குழந்தையின் முன்னிலையிலேயே தைரியமாகவும் இயல்பாகவும் பேசுங்கள். “அவன்/அவள் நன்றாக முயற்சி செய்தான்/செய்தாள், இந்த புள்ளிகள் எங்களுக்குப் போதுமானது, அவனுடைய/அவளுடைய உண்மையான திறமை இனிமேல் தான் வெளிப்படும்” என்று கூறி குழந்தையின் சுயமரியாதையைக் காப்பாற்றுங்கள்.
புலமைப்பரிசில் பரீட்சை என்பது பாடப் புத்தக அறிவை மட்டுமே சோதிப்பதாகும். ஆனால், விளையாட்டுகள், ஓவியம், பேச்சுக்கலை, தலைமைத்துவப் பண்புகள், மனிதநேயம் போன்ற பல திறமைகள் உங்கள் குழந்தையிடம் இருக்கலாம். அவற்றை அடையாளம் கண்டு ஊக்குவியுங்கள்.
இப்பரீட்சை தவறியதால் எல்லாமே முடிந்துவிடவில்லை என்பதைப் புரியவையுங்கள். 6ஆம் ஆண்டிலிருந்து புதிய வகுப்புகள், புதிய பாடங்கள் தொடங்குகின்றன என்பதை நினைவூட்டி, அவர்களின் கவனத்தை அடுத்தகட்ட கற்றலை நோக்கி நகர்த்துங்கள்.
வாழ்க்கையில் வெற்றிகளை விட, சவால்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை (Psychological Resilience) குழந்தைப் பருவத்திலேயே வளர்ப்பதே ஒரு சிறந்த உளவியல் அணுகுமுறையாகும்.
புள்ளிகளை விட உங்கள் குழந்தையின் மனநலமும், அவர்களின் மீதான உங்கள் நிபந்தனையற்ற அன்பும் தான் மிகவும் முக்கியமானது.
வெற்றி பெறாத குழந்தைகளுக்கு இன்று தேவைப்படுவது கண்டிப்போ அல்லது பரிதாபமோ அல்ல; மாறாக அவர்களின் கைபிடித்து “உன்னால் முடியும்” என்று ஊக்கப்படுத்தும் பெற்றோரின் அரவணைப்பு மட்டுaaமே!




