விவாக – விவாக ரத்து சட்டங்கள் தொடர்பான பரிந்துரைகள் சர்ச்சை – பின்னணி – விளைவு – தீர்வு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி)

இலங்கை முஸ்லிம்களது விவாக – விவாகரத்து சார் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அது நிறைவேறவில்லை. கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்னர் சீர்திருத்தங்களுடன் கூடிய முன்மொழிவொன்றை தயாரிக்கும்படி வேண்டி நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் ஒரு குழுவை அன்றைய நீதியமைச்சர் நியமித்தார்.

அந்தக் குழு தனது பணியை மேற்கொண்ட வண்ணம் இருக்கையில், அக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய அம்சங்கள் மற்றும் திருத்தங்கள் யாவை என்பதை தீர்மானிப்பதற்கு இரு விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முதலாவதாக,

நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டங்கள் அமுலாகிய காலப்பிரிவில் அச்சட்டத்தில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக பலர் பாதிக்கப்பட்டார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டதற்கான சான்றுகளையும் சம்பவங்களையும் உதாரணங்களுடன் சிலர் அக்குழுவுக்கு முன்வைத்தார்கள். முஸ்லிம் பெண் உரிமைகளுக்காகப் போராடும் சில தனிமனிதர்களும் அமைப்புகளும் இந்தவகையில் பல தகவல்களை வழங்கின. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குரலெழுப்பிய சிலரும் சலீம் மர்சூப் குழுவில் அங்கம் வகித்தார்கள். இந்த அறிக்கையை தயாரிக்க இத்தகவல்களும் கவனத்தில் எடுக்கப்பட்டன.

இரண்டாவதாக,

நடைமுறையில் உள்ள சட்டங்களில் குறைபாடுகள் நிலவுவதற்கான காரணங்களை ஆராய்ந்த குழுவினர்,பொருத்தமான புதிய சட்டங்கள் உள்வாங்கப்பட்டு பொருத்தமற்ற சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்று கருதினர்.எனவே, ‘ஷாபியீ மத்ஹப்’ என்ற வரையறைக்கு வெளியில் இருந்தும் வேற்று மத்ஹப்களது கருத்துக்களும், நவீன கால இஜ்திஹாதிய முடிவுகளும், நவீன இஸ்லாமிய அறிஞர்களது கருத்துக்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் சிபாரிசு செய்தனர். இலங்கை முஸ்லிம்களுக்கு மிகப் பொருத்தமான சட்ட ஒழுங்கு அங்க சம்பூரணமாவதற்கு இது அவசியம் என அவர்கள் கருதினர்.

சர்ச்சைகளின் மூலம்

இந்த இரு முடிவுகளும் சர்ச்சைகளைத் தோற்றுவித்தன. முஸ்லிம் திருமண – விவாகரத்து சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை பலமாக முன்வைத்தவர்கள் குறிப்பாக முஸ்லிம் மகளிர் முற்போக்கு அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அவர்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் மகளிர் உரிமைகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய சில நிலைப்பாடுகளை எடுத்தவர்கள் என்பதாலும் அந்த அமைப்புக்கள் தமது சில வேலைத்திட்டங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று இயங்குவதாலும் இந்தப் பெண்களது எண்ணத்தில் பலருக்கு சந்தேகம் வந்தது. இந்தப் பெண்களுக்குப் பின்னால் சர்வதேச அமைப்புக்கள் உள்ளன என்ற சந்தேகம் முன்வைக்கப்பட்டது. எனவே, சலீம் மர்சூபின் அறிக்கை மோசமான மூலங்களால் போஷிக்கப்பட்டது என விவாதிக்கப்பட்டது.

அதேவேளை பிக்ஹ் விடயத்தில் ஷாபியீ மத்ஹப்பையும் அகீதாவில் அஷ்அரீ மத்ஹப்பையும் பின்பற்றும் இலங்கையின் மத்ரஸாக்களிலிருந்து வெளியாகிய பெரும்பாலான உலமாக்கள் ஷாபியீ மத்ஹப்புகளில் இருந்து மட்டுமே முடிவுகள் பெறப்பட்டு சீர்திருத்தம் செய்வதாயின் செய்யப்பட வேண்டும், இல்லாத போது அது நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர்.

இலங்கையில் மட்டுமன்றி, உலகின் பல நாடுகளில் ஷாபியீ மத்ஹப் அமுலில் இருக்கிறது. வாழையடி வாழையாக அதனைப் பின்பற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு வேற்றுக் கருத்துக்களும் நவீன இஜ்திஹாத் என்ற பெயரிலும் வரும் ஏதும் ஏற்புடையதல்ல என்று இவர்கள் கூறியது மட்டுமல்ல, ஷாபியீ மத்ஹபுக்கு அப்பால் நின்று சலீம் மர்சூப் குழு முன்வைத்த கருத்துக்களை வழிகேடானவை, முற்றிலும் நிராகரிக்கப்பட்டவை, பெண்ணிலை வாத சக்திகளால் உரமூட்டப்பட்டவை என்றும் கூறினர்.

ஆதரிக்கும், ஆதரிக்காத அணிகள்

எனவே, சலீம் மர்சூபின் அணியிலிருந்து பிரிந்து சென்று மற்றுமொரு குழு சுயாதீனமாக மற்றோர் அறிக்கையைத் தயாரித்தது. அந்த அறிக்கை மட்டும் சரியானது என்றும் சலீம் மர்சூபின் அறிக்கை ஷரீஆவுக்கு விரோதமானது என்றும் உலமாக்களிற் பலர் பகிரங்கமாகவே குத்பாக்களிலும் இதற்கென ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்குகளிலும் கூறி வருகின்றனர். சலீம் மர்சூபின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களிலும் பல பதிவுகள் ஏற்றப்பட்டு வருகின்றன.சலீம் மர்சூப் அணியில் எந்தவொரு ஆலிமும் இல்லாதிருப்பதாகவும் முஸ்லிம் அல்லாதவர்களும் பெண்ணிலைவாதிகளும் அங்கம் வகிப்பதாகவும் கூறி இவர்கள் தமது வாதத்தைப் பலப்படுத்துகின்றனர்.இது சலீம் மர்சூப் அறிக்கைக்கு எதிரான அணி.

ஆதரவான அணி பெரும்பாலும் ஆங்கில,சிங்கள மொழிப் புலமைமிக்கவர்கள். இணையத் தளங்களிலும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் இவர்கள் மிக வேகமாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். சலீம் மர்சூப் அறிக்கை தான் சரியானது, காலத்துக்குப் பொருத்தமானது, பழைய சட்டம் பிற்போக்கானது, பல அநீதிகளுக்கும் இஸ்லாம் பிறரால் தவறாகப் புரியப்படுவதற்கும் காரணமாக அது இருக்கின்றது. அதனை எதிர்ப்பவர்கள் கடும் போக்குக் கொண்டவர்கள், எனவே, சலீம் மர்சூப் இவர்களை பொருட்படுத்தாமல் தமது அறிக்கையை முன்வைக்க வேண்டும் என இவர்கள் கூறி வருகின்றார்கள்.

இது இப்படியிருக்க, இவ்விரு அணியினரும் இவ்வாறு தொடர்ந்தும் விவாதித்துக் கொண்டிருந்தால் பல மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எனவே,மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தின் அவசியம் உள்ளது என்றும் பேசப்படுகிறது. “முஃமீன்களில் இரு அணியினர் சண்டையிட்டால் அவர்கள் இருவருக்கிடையில் சமாதானம் செய்து வையுங்கள்.”என அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான். “இருவருக்கிடையில் பிணக்கு நிலவுவது மார்க்கத்தையே மொட்டையடித்துவிடும்” என்பது நபி மொழியாகும். எனவே, இந்த விவகாரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டிய தேவை இருப்பதாக நன்நோக்கத்தோடு சிலர் பேசுகிறார்கள். உண்மையும் அதுதான்.

சர்ச்சைகள் தொடர்ந்தால் ……

ஆனால், இந்த சர்ச்சைகள் முடிவின்றி தொடருமாயின்:-

  1. முஸ்லிம்களில் கணிசமான தொகையினர் புதிய சீர்திருத்தத்தை விரும்பவில்லை எனக்காரணம் காட்டி அதனை அமுலுக்குக் கொண்டுவரும் பட்சத்தில் அடுத்த தேர்தலில் அவர்களது வாக்குகளை இழக்கவரும் எனப் பயந்து அரசு சீர்திருத்த அறிக்கையை மூலையில் போட்டுவிடும். மீண்டும் அதனை ஆராயவோ அமுலாக்கவோ எந்த ஓர் அரசும் விரும்பாது. எனவே, சீர்திருத்தமில்லாமல் திருமணம் விவாகரத்து சார் பழைய முறைமையே தொடர்ந்தும் அமுலில் இருக்கும். எனவே, தொடர்ந்து பாதிப்புக்கள் இருக்கும்.பல குடும்பங்களும் தனி மனிதர்களும் இஸ்லாமிய தனியார் சட்டம் என்ற பெயரில் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்.
  2. முஸ்லிம் சமூகம் சண்டையிடும் சமூகம் என்றும் அதனது மார்க்கமே அதற்குக் காரணம் என்றும் பிறசமூகத்தவர்கள் நினைப்பார்கள். ஏலவே நினைத்துவிட்டார்கள்.
  3. முஸ்லிம் சமூகத்திலுள்ள உடனடியாக கவனமெடுக்க வேண்டிய பல விவகாரங்கள் ஏற்கனவே மறக்கடிக்கப்பட்டு விட்டன. புரையோடிப் போன பல பிரச்சினைகள் தீர்வின்றி கவனிப்பாரின்றி மூட்டை கட்டப்பட்டு மூலையில் உள்ளன. பிறை பற்றியும், தடுப்பூசி பற்றியும் பேசிப் பேசியே காலம் கடத்திக் கொண்டிருப்போம்.
  4. புறம் பேசுவது, அறிவில்லாமல் பேசுவது,‘ஈகோ’ எனப்படும் வரட்டு கெளரவம்,சம்பந்தமில்லாததில் தலையிடுவது, உலமாக்களையும், துறைசார் நிபுணர்களையும் மீடியாக்களில் கீறிக் கிழிப்பது, பிறரிடமிருந்து உண்மை வெளிப்பட்டாலும் அதனை ஏற்காமலிருப்பது, கண் மூடித்தனமாகப் பின்பற்றுவது போன்ற கடுமையான பாவங்களில் சமூகம் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலை இன்னும் உக்கிரமடைந்து துருவமயமாதல் தீவிரமாகும். சமூக வலைத்தளங்களில் அதிகமான நேரம் இந்தப் பாவங்களில் கழிகின்றன. பலரது நேரம், திறமைகள், பணம் என்பன தொடர்ந்தும் வீணடிக்கப்படுகின்றன.Net connection ன் Data வுக்கே பெரும் கணக்கு பணத்தை செலவு செய்கிறோம்.

எனவே, இந்த விவகாரத்துக்கு உடனடியான தீர்வுகளை நோக்கி அவசரமாக நகருவது மிகமிக இன்றியமையாத தேவையாகும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமாகவும் இருக்கலாம் அல்லது வேறு விதமான அணுகுமுறையாகவும் அது இருக்கலாம்.

பணிவான சில அபிப்பிராயங்கள்

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அந்த சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுப்பவர்கள் எந்தப் பின்னணியைக் கொண்டவர்களாக இருப்பினும் அவர்களை ஆராய்வதிலும் அவர்களது எண்ணங்களை எடை போடுவதிலும் காலம் கடத்தாமல் அவர்கள் கூறுவது சரியானது தானா? என்று பார்க்க வேண்டும்.

உதாரணமாக காழி நீதிமன்ற முறைமை பல இடங்களில் படுமோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது. இதற்கு காழிமார் தொடர்பான ஒழுங்குகளில் உள்ள ஓட்டைகள் தான் காரணமாகும். அந்த குறைபாட்டை ஒருவர் சுட்டிக் காட்டும் போது அவரை பெண்ணிலைவாதி என்றோ அல்லது வேறு பெயர்களிலோ முத்திரை குத்த முடியாது.

அலி(ரலி) அவர்கள் “யார் கூறினார் என்று பார்க்காதே! கூறியதைப் பார்” என்று கூறியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் “அல்ஹக்கு லாயுஃரபு பிர்ரிஜாலி வ இன்னமா யுஃரபுர் ரிஜாலு பில்ஹக். ஃபஃரிபில் ஹக்க, தஃரிப் அஹ்லஹு” என்று கூறினார்கள். தல்ஹா, சுபைர்(ரலி) ஆகிய இருவரும் தனக்கு எதிரான தரப்பிலிருந்து கொல்லப்பட்ட வேளையில் அவ்விருவரும் சுவர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்டவர்களாக இருந்தும் இப்படியான நிலையில் இருந்தனர். அவர்கள் பிழையானவர்களா? என்று வினவப்பட்ட போது அலி(ரலி) அவர்கள் இக்கருத்தைக் கூறினார்கள்.‘சத்தியம் மனிதர்களினூடாக அறியப்படுவதில்லை. மாறாக, மனிதர்கள் சத்தியத்தினூடாகவே அறியப்படுவர்.சத்தியத்தை அறிந்து கொள்.அது சார்பானவர்களை அறிந்து கொள்வாய்’ என்பதே அதன் பொருளாகும்.

சலீம் மர்சூப் குழுவினரும் அவரது அறிக்கையை ஆதரிப்போரும் பிழையான வழியில் இருக்கிறார்கள் என்று சிலர் சொல்வது சரியென ஏற்றுக் கொண்டாலும் “நிச்சயமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை பாவியான மனிதன் மூலமும் பலப்படுத்துவான்.”(புஹாரி 4/34 –முஸ்லிம் 1/105) என்ற ஹதீஸை வைத்து நோக்கும் போது அவர்களது சிந்தனையிலும் பொருத்தமான கருத்துக்கள் உதிக்கலாம் என்று கூறமுடியுமல்லவா?

எனவே, அவர்கள் கூறும் கருத்துக்களை ஆராய்வோம். அவர்களை ஆராயத்தேவையில்லை. ‘மோசமானவர்களது எல்லா செயல்களும் மோசமானவையே’ என்றோ ‘நல்லவர்களது எல்லாச் செயல்களும் நல்லவையே’ என்றோ எவருக்கும் கூறமுடியாது. சலீம் மர்சூபின் அறிக்கையை எதிர்க்கும் எல்லோரும் மலக்குகள் என்றும் தவறு செய்யாதவர்கள் என்றும் கருத்துக் கொள்ளவும் முடியாது.

தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் போது ஷாபியீ மத்ஹப் அல்லாத மத்ஹப்களிலிருந்தோ அல்லது வேறு இஜ்திஹாத்களிலிருந்தோ தேவையான போது சட்டங்களை இணைத்துக் கொள்வது தவறல்ல. சிலபோது அது அவசியமானதாகவும் அமையலாம். ஏனெனில், சட்டங்களிற் சில கால சூழ்நிலைக்கேற்ப மாறுபடாதவை; நிலையானவை. அவற்றில் எவ்வித மாற்றங்களையும் செய்யமுடியாது. அவை ஷரீஆவின் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகின்றன. மற்றும் சில மாறுபடும் தன்மை கொண்டவை அவற்றைப் பற்றியே இங்கு நாம் பேசுகிறோம். மாறாத்தன்மை கொண்ட திட்டவட்டமான பலமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட- பல்வேறு வியாக்கியானங்களுக்கு உட்படாத சட்டவிதிகளில் எவர் கைவைத்தாலும் அவர் கடுமையாகக்கண்டிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல அவர் மார்க்கத்தை விட்டே விலகியவராகவும் கருதப்படுவார்.

ஷரீஆ சட்டமானது நான்கு வகையில் அமையும்

  1. தெட்டத்தெளிவான கருத்துக்களைத் தரும், எவ்வித கருத்து முரண்பாடுகளுக்கும் உட்படாத, உறுதியான சட்ட வசனங்கள் பல குர்ஆனிலும் சுன்னாவிலும் இருக்கின்றன. இவை ‘கத்இய்யுத் துபூத்’, ‘கத்யிய்யுத் தலாலா’ என இஸ்லாமிய பரிபாஷையில் குறிக்கப்படும். இவற்றால் உருவாக்கப்படும் சட்டங்கள் .நிலையானவை;மாறாதவை.
  2. குர்ஆனிலும் சுன்னாவிலும் உறுதியான பல சட்ட வசனங்கள் இருக்கின்றன. ஆனால், அவை பல வியாக்கியானங்களுக்கு உட்படும் நிலையில் இருக்கும். இவற்றுக்கு ‘கத்இய்யுத் துபூத்’, ‘ளன்னிய்யுத் தலாலா’ என இஸ்லாமிய பரிபாஷையில் குறிக்கப்படும்.எனவே, இத்தகைய வசனங்கள் வித்தியாசமான தீர்ப்புக்கள் முன்வைக்கப்படக் காரணமாக அமையும்.அந்த ஒவ்வொரு தீர்ப்பும் மிகச்சரியானவையாக இருக்கலாம். அல்லது ஒன்றை விட மற்றொன்று பலமாக அல்லது மிகப் பொருத்தமாக இருக்கலாம். இந்நேரத்தில் இந்த கருத்துக்களில் ஒன்றை ஒருவர் அல்லது இமாம் தெரிவு செய்து தனது மத்ஹபில் இணைத்துக்கொண்டால் அதுவும் ஷரீஆ விதியாகவே கொள்ளப்படும். அத்தகைய பல கருத்துக்களில் ஒன்றைத் தெரிவு செய்தவரை வழிகெட்டவர் என்று கூறமுடியாது. “ஒருவர் ஆட்சி செய்யும் போது சட்டத் தீர்ப்பொன்றைப் பெற இஜ்திஹாத்(கடுமையான முயற்சி)யைச் செய்து அவர் சரியான முடிவை எடுத்தால் அவருக்கு இரண்டு கூலிகளும் அவர் தவறான முடிவுக்கு வந்தால் ஒரு கூலியும் கிட்டும்”(புஹாரி-3240) என நபியவர்கள் கூறியுள்ளார்கள். அந்த சட்ட அறிஞனின் மொழிப்புலமை, இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகள் பற்றிய ஆழமான அறிவு, சட்டவியல் சூட்சுமங்களில் உள்ள ஞானம் என்பவற்றைப் பொறுத்து அந்த சட்ட வசனத்தை அவர் பார்க்கும் விதம் வித்தியாசப்பட்டு வித்தியாசமான தீர்வை அவர் முன்வைக்கலாம்.
  3. மூன்றாவது நிலை: குர்ஆனிலும்,சுன்னாவிலும் வந்த சட்ட வசனங்கள் தெளிவான கருத்தைக் கொடுத்த போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சூழ்நிலை இல்லாத போது அவற்றிலிருந்து எடுக்கப்படும் சட்டங்களை இஸ்லாமிய அரசு தற்காலிகமாக இடைநிறுத்துவதுடன் அதற்குப் பதிலாக வேறு சட்டமொன்றை அமுலாக்கும். களவெடுத்தால் கை வெட்டப்பட வேண்டும் என்ற குர்ஆனிய சட்டத்தை (அல்மாஇதா-38) நாட்டில் பஞ்சம் நிலவுவதைக் காரணம் காட்டி உமர் (ரழி)அவர்கள் இடை நிறுத்தினார்கள். திருமணம் முடிவத்தவர் விபசாரம் செய்தால் கொலை செய்யப்பட வேண்டும் என்ற மிகப் பலமான இஸ்லாமிய சட்டத்தை இலங்கை போன்ற ஒரு சிறுபான்மை நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது. அப்படியாயின் பள்ளிவாசல் நிருவாகங்கள் வேற்று நடவடிக்கைகளை எடுக்கின்றன. எனவே, இது சட்டத்தை பிரயோகிப்பதில் சூழல் கவனிக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டும். இதுவும் இஜ்திஹாதிய ஷரீஆ சட்டமாகும்.
  4. குர்ஆன் ஹதீஸில் வந்தில்லாத புதிதாகத் தோன்றியுள்ள ஒரு விவகாரத்துக்கு சட்ட வல்லுனர்கள் வழங்கும் தீர்ப்புக்களும் ஷரீஆ விதியாகவே கணிக்கப்படும். நபி(ஸல்) அவர்களது காலத்தில் இல்லாத கால மாற்றங்களால் உருவாகும் புதிய விவகாரங்களுக்கு மக்கள் தீர்ப்புக்களை எதிர்பார்க்கும் போது கியாஸ், மஸ்லஹா, உர்பு,தரீஆ, இஸ்திஹ்ஸான் போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி சட்டத்துறை விற்பன்னர்கள் தீர்வுகளை வெளியிட்டால் அதுவும் ஷரீஆ சட்டமாகவே கருதப்படும். ஆனால், இந்தத் தீர்ப்புக்கள் ஒன்றுக்கொன்று முரணானவையாகவோ, சிலபோது ஒன்றைவிட மற்றொன்று பலமானதாகவே அமையலாம்.மத்ஹபுகள் இப்படித்தான் தோன்றின. ஆனால், எவரும் தனது கருத்து மட்டுமே பலமானது மிகச்சரியானது என்று வலியூறுத்தி கூறவோ அதனை ஏற்கும் படி பிறரை பலாத்காரப்படுத்தவோ முடியாது. மக்கள் தாம் விரும்பிய இமாமையோ மத்ஹபையோ பின்பற்றுவார்கள். சிலபோது சில அரசுகள் சில மத்ஹபுகளின் அடிப்படையில் தமக்கென தனியார் சிவில் குற்றவியல் அரசியல்,பொருளியல் சட்டங்களை யாத்துக் கொள்வார்கள்.உதுமானிய கிலாஃபத்தில் ‘மஜல்லதுல் அஹ்காம் அல்அத்லிய்யா’ எனப்படும் சட்டத் தொகுப்பொன்று தயாரிக்கப்பட்டு சாம்ராஜ்யத்திலிருந்த அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பணிக்கப்பட்டனர்.அது ஹனஃபீ மத்ஹபை அடிப்படையாக் கொண்டிருந்தமை குறிப்பித்தக்கதாகும்.

அந்தவகையில் தான் இலங்கையில் நிலவும் MMDA தொடர்பான வாதப்பிரதிவாதங்களை நாம் பின்வருமாறு நோக்க வேண்டும்:-

  1. முதலில் இந்நாட்டு முஸ்லிம்களிற் பெரும்பாலானவர்கள் ஷாபியி மத்ஹபை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றார்கள் என்பதால் அந்த மத்ஹபுக்குள் மட்டுமே இருக்க விரும்புபவர்களுக்கு அதற்குள் மட்டுமிருந்து தீர்ப்புக்களைப் பெறலாம். அவர்கள் மீது வேற்றுக் கருத்துக்கள் திணிக்கப்படலாகாது என்பதையும் நாம் ஏற்க வேண்டும்.
  2. மேலுள்ள அணியினர் தவிர இந்த நாட்டில் இன்னும் நான்கு வகையினர் உள்ளனர்.

அ. ஹனஃபீக்கள்,

ஆ. மத்ஹபுகளுக்குள் தம்மை வரையறுத்துக் கொள்ள விரும்பாத (அல்லாமத்ஹபீக்கள்)

இ. ஷாபியீ மத்ஹபை அடிப்படையாகக் கொண்டு தமது நடிவடிக்கைகளை அமைத்துக் கொண்டாலும். பிக்ஹுல் முகாஸித், மஆலாத்,அகல்லிய்யாத், மஸாலிஹ் போன்ற பழைய மற்றும் நவீன கால இமாம்களால் கூட அழமாகப் பேசப்படும் பிக்ஹுத்துறை மரபுகளது வெளிச்சத்தில் தமது விவகாரங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள விரும்புகின்றவர்கள். என அவர்களை வகைப்படுத்தலாம். எனவே ஷாபியீ மத்ஹபுக்குள் மட்டும் தம்மைக் குறுக்கிக் கொண்டவர்கள் இவர்களை கட்டுப்படுத்த முனையும் போதும் பிரச்சினை தலைதூக்குகிறது.

ஈ. மற்றொரு தரப்பினர் பெண்னிலைவாதக் கருத்துக்களைக் கொண்டவர்கள். இவர்கள் தமக்குப் பின்புலமாக உள்ள மேற்குலக சிந்தனைகளுக்கு ஏற்ப இஸ்லாமிய ஷரீஆவை வளைத்துப் போட மிகுந்த பிரயத்தனம் எடுப்பவர்கள். இவர்கள் பால்சமத்துவம், பெண் தலைமைத்துவம், பெண் சுதந்திரம் என்ற கோஷங்களை எழுப்பி தலையில் முக்காடு போடுவது கூட பிற்போக்குவாதம் என்று நினைப்பவர்கள். இஸ்லாத்தில் ஒரு குற்ற உணர்வோடு காலம் கடத்துபவர்கள்.

இப்படியான நிலையில் MMDA சீர்திருத்தங்கள் எப்படி வெற்றி காணும் என்பது கேள்விக் குறியாகும்.

கருத்து வேறுபாடுகள் இருப்பதை ஏற்க வேண்டும்

கருத்து வேறுபாடுள்ள விவகாரங்களில் ஒரு கருத்து மட்டுமே உள்ளது என்று வாதிப்பது மிகத் தவறாகும். ‘தமக்குத் தெரியாதவற்றுக்கு மக்கள் எதிரிகளாக இருப்பர்’ என்ற அரபுப் பழமொழிக்கு இணங்க இவ்வாறு எவரும் இறுகிப் போகலாகாது.

உதாணமாக திருமணத்தின் போது வலியாக ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் பலமான பல வித்தியாசமான கருத்துக்கள் நிலவுவதை எவரும் மறுக்கலாகாது.உதாரணத்திற்கு அதனை மட்டும் நோக்குவோம்.

  1. பெரும்பாலான புகஹாக்கள் (ஜும்ஹூர்) வலீ ஒரு நிபந்தனையாகும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
  2. இமாம் அபூஹனீபா, ஷுபர் ஆகியோர் வலீ நிபந்தனை இல்லை என்று கூறியுள்ளார்கள். ஆனால், ஒரு பெண் தனக்கு பொருத்தமில்லாத ஒரு துணையைக் தேடிக்கொண்டால் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து, தலையீடு செய்யும் உரிமை ‘வலீ’ களுக்குண்டு என்கின்றனர்.(பதாயிஉஸ் ஸனாஇயி 2/247, ஹாஷியது இப்ன் ஆபிதீன் 2/296)
  3. முஹம்மத் இப்னுல் ஹஸன், அபூயூசுப் ஆகியோர் வலீயின் அனுமதியின் பேரில் ஒரு பெண் தனக்கான திருமண ஒப்பந்தத்தைச் செயலாம் என்கின்றனர். (பதாயிஇ 2/247,அல்மப்சூத் 5/10)
  4. ஹஸன், அபூயூசுஃபின் (மற்றொரு) கருத்தின் படி மணவாளன் பொருத்தமாக இருப்பின்,நிகாஹ் ஒப்பந்தம் செல்லுபடியாகும்; அவர் பொருத்தமாநவராக இல்லாத போது செல்லுபடியாகாது.(அடிப்படையில்)வலி அவசியமில்லை. (பத்ஹுல் கதீர் 3/255, ஸரஹு மஆனில் ஆதார் 3/13)
  5. இமாம் மாலிக் – பெண் சமூக அந்தஸ்த்துள்ளவளாக இருப்பின் வலியில்லாத அவளது நிகாஹ் உடன்படிக்கை செல்லுபடியாகும். ஆனால், அவள் சமூக அந்தஸ்துள்ளவளாக இருப்பின் சமூகத்திலுள்ள முஸ்லிம்களில் நல்ல ஒரு முஸ்லிமுக்கு அவள் தனது பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அவளது உடன்படிக்கை செல்லுபடியாகும். (ஹாஷியதுத் தஷூகீ 2/226, அல்முகத்திமாத் 1/473)
  6. இமாம் தாவூத் அள்ளாஹிரீ – கன்னிப் பெண்ணாயின் வலியின்றி அவளது திருமண ஒப்பந்தம் செல்லுபடியாகாது.கன்னியில்லாதபோது உடன்படிக்கையைச் செய்ய அவள் முஸ்லிம்களில் ஒருவரை நியமிக்க வேண்டும். (அஸ்முஹல்லா 9/455, அல்ஹாவீ 9/44)
  7. இமாம் அபூதவ்ர் – ஒரு பெண்ணுக்கு திருமண ஒப்பந்தத்தை தானாக மேற்கொள்ள அவளது வலி அனுமதித்தாலே மட்டுமே அது செல்லுபடியாகும்.

வலீ தேவையா இல்லையா என்பது பற்றி இவ்வாறு வித்தியாசமான பல கருத்துக்கள் நிலவுவதை தாம் கவனத்தில் எடுக்கவேண்டும். எனவே,‘வலீ பற்றிய மற்றொரு நிலைப்பாட்டை எடுப்பவர்கள் ஹராமான பிள்ளைகள் பிறக்கத் துணை போகிறார்கள்’ என்று பிரசாரம் செய்வது மேற்சொன்ன இமாம்கள் அனைவரையும் சாடும் முயற்சியென்பதையும் மறந்துவிடலாகாது.

அதனைவிட மிக முக்கியமான ஒரு விடயம் உள்ளது. அதுதான் வலீ அவசியமில்லை என்று சொன்ன பெரும்பாலானவர்கள் வலீ யின் தலையீட்டைப் பற்றி ஏதோ ஒருவகையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு பெண் பொருத்தமற்ற துணையைத் தெரிவு செய்யும் பட்சத்தில் தலையீடு செய்யலாம் என்பதை அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.இலங்கையைப் பொறுத்தவரை வலீ யுடன் கூடிய திருமண ஒப்பந்தம் தான் பொருத்தமானதாகும்.ஆனால், வலீ யின்றி திருமணம் செய்ய சிலர் அழைப்புவிடுக்கிறார்கள் என மொட்டையாகச் சொல்லாமல் நிபந்தனைகளை நாம் முழுமையாக நோட்டமிடவேண்டும்.

வலீ விடயத்தில் ஏன் இந்த கருத்துவேறுபாடு

வலீ சம்பந்தமாக புகஹாக்களிடையே இந்தவகையான கருத்துபேதங்கள் ஏன் நிலவுகின்றன என்பதற்கு இமாம் இப்னு ருஷ்த் அல்குர்துபீ(அல்ஹஃபீத்) அவர்கள் தனது பிரபலமான நூலாகிய ‘பிதாயதுல் முஜ்தஹித்’ இல் விளக்கம் கூறுகிறார்கள்.(அந்த நூல் ஒப்பிட்டு பிக்ஹிற்கு பிரபலமானது.ஒவ்வொரு விவகாரத்திலும் ஃபிக்ஹ் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து பேதங்கள் நிலவுவதற்கான காரணங்களை விரிவாக ஆராய்கிறது)

இமாமவர்கள்: “வலி ஒரு நிபந்தனை என்பதைக் காட்டும் ஒரு குர்ஆனிய வசனமோ தெளிவான சுன்னாவோ வரவில்லை. ஆனால், அது ஒரு நிபந்தனை என்பதற்கு ஆதாரமாகக் காட்டுபவர்கள் கையாளும் வசனங்கள் பல வியாக்கியானங்களுக்கு(முஹ்தமலா) இடம்பாடானவை. வலீ நிபந்தனையில்லை என்பதை நிறுவ காட்டப்படும் வசனங்களும் அப்படியானவையே. ஹதீஸ்களைப் பொறுத்தவரையிலும் அவையும் பல கருத்துக்களுக்கு இடம்பாடக இருப்பது ஒரு புறமிருக்க இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸைத் தவிர ஏனைய அனைத்து ஹதீஸ்களது நம்பகத்தன்மை(ஸஹீஹ் ஆனதா) என்பது பற்றி வித்தியாசமான அபிப்பிராயங்கள் உள்ளன.”என்கிறார்கள்.

எது எப்படிப் போனாலும் எமது நாட்டின் சூழல் மற்றும் கடந்த கால அனுபவங்கள் என்பவற்றின் வாயிலாக நோக்கும் போது வலீ இருப்பது ஒரு நிபந்தனையாகக் கொள்ளப்படுவது எல்லாவகையிலும் பாதுகாப்பானதும் பொருத்தமானதுமாகும். ஆனால், அந்த வலீ க்கு இருக்கவேண்டிய நிபந்தனைகளையும் திருமண ஒப்பந்தத்தை முழுமைப்படுத்துவதில் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஏனைய நெறிமுறைகளையும் கவனத்திலெடுப்பது சாலச் சிறந்ததாகும்.

வலீ விடயத்தில் மட்டுமல்ல கெளரவத்துக்குரிய சலீம் மர்சூப்,ஃபாயிஸ் முஸ்தஃபா ஆகிய இரு தரப்புக்கும் இடையில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள சுமார் ஏழு விவகரங்களிலும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதே பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கான நல்லதொரு வழி என்பது எமது பணிவான அபிப்பிராயமாகும்.

1.ஒரு விவகாரதில் இமாம்களுக்கு மத்தியில் பல அபிப்பிராயங்கள் நிலவும் போது அவ்வாறான ஒரு நிலை இருக்கிறது என்பதை முதலில் அனைவரும் ஏற்க வேண்டும்.தனது கருத்தை விட வித்தியாசமன கருத்தொன்றை முன்வைப்பவரை பெண்ணிலைவாதி என்றோ வழி கெட்டவர் என்றோ பட்டம் சூட்டக்கூடாது.

2.ஒரு விவகாரத்தில் பல தீர்ப்புக்கள் அல்லது ஃபத்வாக்கள் நிலவுமாயின் அவற்றுக்கு மத்தியில் இலங்கை சூழலுக்கு மிகப் பொருத்தமனது எது என்பதை மிகவுமே ஆழமாகவும் தூர நோக்கோடும் ஆராய்ச்சி செய்து முடிவெடுப்பது அவசியமாகும். இதற்காக பலரது அபிப்பிராயங்களையும் எவ்வித பாரபட்சமுமின்றி கேட்டறிய வேண்டும். அது ஒரு மஷூராவாகவும் கூட்டான இஜ்மாவாகவும் மாற்றப்பட வேண்டும்.பல பக்க நியாயங்களும் கேட்டறியப்பட வேண்டும்.

சுருங்கக் கூறின் தற்போதுள்ள சூழலில் ‘பிடிவாதம்’ – ‘கட்டுடைப்பு’ ஆகிய இரு துருவங்களையும் தவிர்த்து நெகிழ்ச்சித்தன்மையுள்ள தீர்வுகளை நோக்கி அவசரமாக MMDA நகரவேண்டும். ஷாபியீ மத்ஹபுக்குள் நின்ற வண்ணம் அடிப்படையில் தீர்வுகளை முன்வைக்கலாம். தேவையான போது மனித நலன்கள், காலத்தின் தேவைகள், கடந்த கால கசப்பான அனுபவங்கள் என்பனவற்றை கவனத்திலெடுத்து உயிரோட்டமும் உறுதியுமான குடும்பம் என்ற புனிதமான ஒரு சட்ட ஒழுங்கை நோக்கி நகர வேண்டும்.

மேற்குலக நாகரீகத்தின் நச்சுக் கனிகள் குடும்ப நிறுவனத்தின் வேர்களையே அரித்துக் கொண்டிருப்பதாலும் ஒழுக்க வீழ்ச்சி தலைவிரித்தாடுவதாலும் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற இஸ்லாமிய குடும்ப நிறுவனத்தைப் பாதுகாக்க சகல முயற்சிகளையும் மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்.

மீறமுடியாத சட்ட ஒழுங்குகளைப் பேணும் அதுபோல் கால சூழலுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும் ஷரீஆ சட்டங்களாலேயே இஸ்லாம் மனித வாழ்வுக்காகத் தந்த புனிதமான குடும்ப கட்டமைப்பு பாதுகாக்கப்பட முடியும். எய்ட்ஸ், மனநோய், தற்கொலை, வீதியோரச் சிறார்கள், விதவைகள், அநாதைகள், விபச்சாரம், ஒருபாலுறவு போன்ற நவீன நாகரீகத்தின் படுமோசமான வெளியீடுகளிலிருந்து தூரமாகி அன்பும், அரவணைப்பும், மனநிறைவும் கொண்ட கட்டுக்கோப்பான குடும்பக் குவலயத்தில் வாழ அல்லாஹ் எமக்கு அருள்பாலிப்பானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top