- என் பெயர் மட்டுமே உச்சரிக்கப்பட வேண்டும்;பிறருக்கு எந்த நல்ல பெயரும் கிடைத்துவிடக் கூடாது.
- அதிகாரம் அல்லது பதவி தான் எனக்குத் தேவை. அதனை அடைய நான் எப்பாதகத்தையும் செய்வேன்.
- பிறர் என்ன பாடுபட்டாலும் எனக்கு அது பற்றிய கவலையே கிடையாது. நான் நன்றாக வாழுகின்றேனா என்பது தான் எனக்கு முக்கியம்.
- நான் பொதுக் காரியம் ஒன்றில் சம்பந்தப்படும் போது எனக்கு எவரது ஆலோசனையும் தேவையில்லை. பிறரது ஆலோசனைகள் இன்றி நான் தான் சாதித்தேன் என்ற மக்களது நன்மதிப்பு எனக்கு கிடைக்க வேண்டும்.
- என்னை மீறி எவராவது முன்னேற முற்பட்டால் அவரை எவ்வழியிலாவது கீழே போட வேண்டும் என்பதற்காக எதனையும் செய்வேன்.
- எவராவது சாதித்ததாக நான் கேள்விப்பட்டால் அது எனக்கு பெரும் கவலையைத் தரும். சிலபோது அவரது சாதனைக்கும் நான் தான் காரணம் என்றும் கூறுவேன். அவரது சாதனை காலத்துக்கு பொருத்தமற்றது என்றும் நான் துணிந்து கூறுவேன். பிறரது சாதனைகளை நான் விளம்பரப்படுத்த மாட்டேன். பிறரை உற்சாகப் படுத்துவது எனது பண்பே அல்ல.
——————————
மேற்கூறப்பட்ட இழி குணங்கள் என்னிடம் இருந்தால் நான் மிகவும் மோசமானவன். எனக்கு அல்லாஹ்வின் பாரிய தண்டனைகள் இருக்கும். என்னையும் யாவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
இந்த இழி குணங்கள் தான் சமூகம் அதளபாதாளத்தில் வீழ்ந்திருப்பதற்கான மிகப் பிரதான காரணங்களாகும்.
+++++++++++++++++++++++++
ஆனால் உண்மையான முஸ்லிம் இப்பண்புகளுக்கு முற்றிலும் மாற்றமான பண்புகளையே பெற்றிருப்பான்.
காரணம் தன்னை அல்லாஹ் உலகத்திற்கு பெரும் பணிக்காக அனுப்பி இருப்பதாக அவன் ஆழமாக நம்புவான்.
அல்லாஹ்வின் திருப்தியை அடையவேண்டும் என்பது மட்டுமே அவனது ஏக இலக்காக இருக்கும். அடிக்கடி இது விடயமாக அவன் தன்னையே முஹாஸபா – சுயவிசாரணை செய்து கொள்வான்.
பணத்தை, பெண்ணை,அதிகாரத்தை காட்டி அவனை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆயுதத்தைக் காட்டி அவனை மிரட்ட முடியாது. அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னால் முஃமினுக்கு இவை தூசுக்கும் மதிப்பற்றவை.
முழு உலகமும் அசத்தியத்தின், அக்கிரமத்தின் பக்கத்தில் இருந்தாலும் அவனுக்கு அல்லாஹ்வின் மார்க்கத்தின் தீர்ப்பே முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும்.
“யார் குற்றியும் அரிசியாகினால் போதும்” என்ற கருத்து அவனிடம் காணப்படும். மனித குலத்திற்கு நலவு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பக்கமே அவன் இருப்பான்.
தானும் சிறப்பாக வாழ வேண்டும்; அதேபோல் பிறரும் சிறப்பாக வாழ வேண்டும் என்று சிந்திப்பவன் ‘மனிதாபிமானம் உள்ளவன்’. ஆனால், தான் சிறப்பாக வாழ வேண்டும். பிறர் அதனை விடவும் சிறப்பாக வாழ வேண்டும் என்று சிந்திப்பவன் ‘உத்தமமான மனிதன்’. பிறரது உயர்சிக்காக தனது தனிப்பட்ட இலாபங்களையும் வரப்பிரசாதங்களையும் இறைவனின் திருப்திக்காக தியாகம் செய்ய அவன் தயாராக இருப்பான்.
தனது பணியில் – கொள்கையில் அவனுக்கு அதீத பற்று காணப்படும். அதற்காகவே அவன் வாழுவான்.
தான் செய்வதெல்லாம் சரியென்ற எண்ணம் அவனிடம் இருப்பதில்லை. எனவே ஒரு நாளைக்கு 100 விடுதத்த்துக்கு மேல் இஸ்திக்பார் செய்யும் பழக்கம் அவனிடம் இருக்கும். தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவன் இன்முகத்தோடு ஏற்று, திருத்திக்கொள்வான்.
மொத்தத்தில் அவனிடம் இக்லாஸ், தெளிவான சிந்தனை,கொள்கையில் பற்று, தியாகம்,தூர நோக்கு என்பன பிரிக்கமுடியாத பண்புகளாக இருக்கும்.
எழுதும் நானும் ஒவ்வொரு முஸ்லிமும் இப்பண்புகளை அணிகலன்களாகக் கொண்டு வாழ்தால் இன்ஷாஅல்லாஹ் உலகில் மனிதம் வாழும். இஸ்லாம் மக்களுக்கு அருளாக அமையும். சகல அமைப்புக்களும் சமூகத்திற்கு பயனுள்ளவையாக அமையும்.
ஒவ்வொரு மனிதனும் எக்காரியத்தைச் செய்கின்ற போதும், எந்தவொரு வார்த்தையை மொழிகின்ற வேளையிலும் ‘பின்னணியில் இருக்கும் எண்ணமே’ அல்லாஹ்வால் நுணுக்கமாக அவதானிக்கப்பட்டு, அதற்கேற்பவே கூலி தீர்மாணிக்கப்படும் என்பதை ஸஹீஹூல் புகாரியின் முதலாவது ஹதீஸ் கூறுகிறது. அல்லாஹ்வின் பார்வை உள்ளத்தை நோக்கியே பாய்கிறது என்ற ‘முராகபா’ சிந்தனை எம் அனைவருக்கும் வேண்டும்.
எம் அனைவரது எண்ணங்களையும் தூய்மையாக்கிக் கொள்ள எமக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!




