நாளிர் சேரின் ஜனாஸா தொழுகையின் பின்னர் நிகழ்த்திய உரை

இன்று (07.09.2026ல்) உலகைப் பிரிந்த மதிப்பிற்குரிய நாளிர் சேரின் ஜனாஸா தொழுகையின் பின்னர் நிகழ்த்திய உரை.

எம் உள்ளத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாளிர் சேரின் ஆத்மா நிரந்தரமில்லாத இந்த உலகத்திலிருந்து விடை பெற்று நிரந்தரமான அல்லாஹ்வின் வீட்டை நோக்கிப் பயணமாகிவிட்டது.

அன்னார் மூலம் பயன்பெற்ற நான் முதற்கொண்டு அனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் அவருக்காக தொழுகை நடத்தி அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும் என்று துஆச் செய்வதற்காக இங்கு கூடியிருக்கின்றோம். அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்து, நல்லமல்களை ஏற்று உயர்தரமான சுவர்க்கத்தை வழங்குவானாக!

பல விடயங்களில் அன்னார் எமது கவனத்தை ஈர்த்து முன்மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டு எம்மை விட்டுப் போகிறார்கள்.

எவரையும் நாம் முழுமையானவர், தூய்மையானவர் என்று கூறுவதற்கு இல்லை. ஒவ்வொருவருடைய உள்ளங்களையும் அல்லாஹ் மாத்திரமே அறிவான். ஆனால், நாம் அறிந்த வகையில் அவர்கள் படைப்பாளன் அல்லாஹ்வுடன் ஆழமான தொடர்பைக் கொண்டு மிகவும் இக்லாஸோடு உழைத்து வந்தார்கள். அறிவு, பண்பாடு, சமூக சேவை, கல்விப் பணி போன்றவற்றிற்கு இலங்கையில் நாம் குறிப்பிட்டு கூற முடியுமான ஒரு சிகரமாக இருந்தவர் என்று தைரியமாக சொல்ல முடியுமான ஓர் ஆளுமை அவர்கள்.

வெலிகமையில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று அங்கேயே ஒரு ஆலிமின் குடும்பத்தில் திருமணம் முடித்த அவர்கள் கொழும்பில் தான் தனது வாழ்வின் பெரும் பகுதியை கழித்தார்கள்.

பல்கலைக்கழகத்தில் அவர்கள் தனது உயர்கல்வியை தொடர்ந்த போது அவர்களுக்கு பேராசிரியர் இமாம்,கலாநிதி சுக்ரி போன்ற அறிஞர்களது சகவாசமும் வழிகாட்டல்களும் கிடைத்தன.

முஸ்லிம் சமூகத்தின் அறிவு ஜீவிகளாக வாழ்ந்து பலவகையான பங்களிப்புக்களைச் செய்த கலாநிதி சுக்ரீ, மௌலவி இப்ராஹிம், ரியாழ் மௌலவி கலாநிதி எம்.ஐ.எம்.அமீன் சேர் போன்றோருடன் இணைந்தும் தனித்தும் இந்த நாட்டின் இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம், அரபு மொழி ஆகியவற்றின் கலைத் திட்டங்களை உருவாக்கி பாதுகாத்து வளர்ப்பதில், அவற்றை சமூக மயப்படுத்துவதில் நாளிர் சேருக்கும் பெரும் பங்குண்டு. அவர்கள் அரச நிறுவனங்களாகிய பல்கலைக்கழகங்கள்,தேசிய கல்வி நிறுவகம், கல்வி அமைச்சு, ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள், கல்விக் கல்லூரிகள் ஆகியவற்றோடு நெருக்கமான உறவு கொண்டு இப்பணிகளை மேற்கொண்டு இத்துறையில் தடம் பதித்திருக்கிறார்கள்.

இன்று பல அரச உயர் பதவிகளில் இருப்பவர்கள் இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகப் படங்களை தமது உயர்தர மற்றும் பல்கலைக்கழக பாடநெறிகளில் பயின்றிருக்கிறார்கள் என்றால் அத்தகையவர்கள் நாளிர் சேரின் நூல்களை, ஆக்கங்களை கட்டாயமாக வாசித்திருப்பார்கள் அல்லது அவர்களது விரிவுரைகளுக்கு சமூகம் தந்திருப்பார்கள் என்று உறுதியாக கூற முடியும்.

தற்போதும் கூட இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம்,அரபு பாடத் திட்டங்களுடன் சம்பந்தப்பட்டுள்ள வளவாளர்கள் மற்றும் ஆசிரிய பெருந்தகைகள் அனைவரும் அவர்களால் அவர்களது அனுப்பவத்தால் அறிவால் பயன்பெற்றவர்கள் உருவாக்கப்பட்ட வர்கள் தான். அந்த வகையில் அவர்கள் பேராசான், பெரு மதிப்பிற்குரியவர்கள்.

தேசிய கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரைக்குமான இஸ்லாம் பாடத்துக்கான பாடத்திட்டம், ஆசிரியர் கைநூல், மதிப்பீடு கணிப்பு நூல்கள், தொலைக் கல்வி மொடியூல்கள் என்பவற்றை தயாரிப்பதில் அவர்கள் நேரடியாக முதன்மையானவராக சம்பந்தப்பட்டிருந்தமை அவர்களது குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். அஹதிய்யா பாடத் திட்டத்தையும் அவர்கள் வடிவமைத்து பரீட்சைகளுக்கான வினாப் பத்திரங்களையும் தயாரித்தார்கள்.நாட்டின் பல பாகங்களிலும் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட செயலரங்குகளில் அவர்கள் பங்கு கொண்டார்கள்.

எந்த ஒரு பாடநூலை எவர் எழுதினாலும் அதன் உள்ளடக்கத்தை சரி பார்ப்பதிலும் தமிழ் மொழியின் வழுக்களை சீர் செய்வதிலும் அவர்கள் பங்களித்திருக்கிறார்கள்.

உயர்தர சாதாரண தர பரீட்சைகளுக்கான பிரதான கட்டுப்பாட்டாளராக, மேலதிக கட்டுப்பாட்டாளராக நீண்ட காலம் சேவை செய்திருக்கிறார்கள்.

அவர்களது எழுத்துக்களில் தீவிரம் இருக்கவில்லை. நடுநிலையும் தெளிவும் காணப்பட்டன.ஆதாரங்களை உறுதிப்படுத்த வசதி இல்லாத காலத்தில், உஷார் துணைகள் உரிய முறையில் கிடைக்காத காலத்தில் போலி தகவல்கள் நூல்களில் நுழைந்து விடாமல் இருக்க அவர்கள் முழு முயற்சியாக இருந்தார்கள்.அதன் பின்னணி பற்றி அவர்களிடம் விசாரிக்கப்பட்ட போது இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்து தொழுவேன். அதற்கு பிறகு தெரிந்தவர்கள் மற்றும் நூல்களின் மூலம் அந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்துவேன். அல்லாஹுத்தஆலா எனக்கு தெரியப்படுத்துவான்.இது அல்லாஹ்வின் அருள் என்று கூறியிருக்கிறார்கள்.

நளீமிய்யா, ஹாதிய்யா, பாதிஹ், ஸஹாப்தீன் பெளன்டேஸன் போன்ற நிறுவனங்களில் வருகை தருவிரிவுரையாளராக அவர் இருந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கும் அப்பால் அவர்கள் அதிகமான ஆக்கங்களையும் எழுதியிருக்கிறார்கள். வாலிப முஸ்லிம், புதுமைக் குரல், தினபதி, சிந்தாமணி, தினகரன், தளிர், மீள்பார்வை போன்ற பத்திரிகைகளில் நூர் அரபா,அபூமுஸ்அப், இப்னு ஸபா, மண்ணூரி போன்ற பல புனைப் பெயர்களில் எழுதியிருப்பது இக்லாஸின் நிமித்தமாக இருக்கலாமோ என்று சிந்திக்கத் தூண்டுகிறது.

மீள்பார்வையில் ‘இதுகுறித்து’ என்ற தலைப்பில் அவர்கள் எழுதிய. ஆக்கங்கள் ஆழமான கருத்துக்களையும் சமூக விவகாரங்களுக்கான ஆழமான தீர்வுகளையும் தந்தன.

அவர்களது வாசிப்பு பழக்கமும் தேடலும் தாகமும் அல்லாஹ்வின் அருளும் இந்த அளவு அவர்கள் உயர்வதற்கு துணை செய்திருக்கலாம்.

பாரம்பரிய மத்ரஸாக்களில் ஓதிய பல உலமாக்கள், இஸ்லாமிய துறைப் பேராசிரியர்கள் கூட இஸ்லாமிய கல்விக்கும் இஸ்லாமிய சிந்தனைக்கும் ஆற்றாத பல பணிகளை அவர் மேற்கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அவர்கள் சிறந்த பண்பாடுகளின் உறைவிடம். புன்னகைத்த வண்ணமே பேசுவார்கள்.தாழ்ந்த குரலில் பணிவாக அடக்கமாக உரையாடுவார்கள். அவர்களிடம் புகழ் ஆசையிருந்ததாகத் தெரியவில்லை.

நான்கு தசாப்தங்களாக நடமாடும் கலைக்கூடமாக வாழ்ந்த அவர்களை ஆழமான, அகலமான, நீளமான ஆனால் அமைதியாக ஓடும் நைல் நதிக்கு ஒப்பிட முடியும். அது 6650 கிலோமீட்டர் நீளமானது.11 நாடுகளை ஊடறுத்து ஓடுகிறது.குடிநீர், மின்சார உற்பத்தி, விவசாயம், போக்குவரத்து போன்ற பயன்களை மக்களுக்குத் தந்து மத்திய தரைக் கடலில் அது கலக்கிறது.

நபி(ஸல்) ஒரு விசுவாசியை ஒரு தேனீக்கு ஒப்பிட்டார்கள்.

والذي نفس ‏ ‏محمد ‏ ‏بيده إن مثل المؤمن ‏ ‏لكمثل النحلة أكلت طيبا ووضعت طيبا ووقعت فلم تكسر ولم تفسد”.

(صححه الشيخ أحمد شاكر والشيخ الألباني)

அது நல்லதை உண்ணும், நல்லதை உற்பத்தி செய்யும், எந்த இடத்தில் அமர்ந்தாலும் உடைக்காது, கெடுக்காது.”என்றார்கள்.இது எமது தன்னலம் கருதாமல் சேவையாற்றிய நாளிர் சேர் போன்றோருக்குப் பொருந்தும்.

நாளிர் சேர் அவர்கள் அறிவுத் தடயங்களையும் பெரும் அறிவுப் பாரம்பரியமொன்றையும் விட்டுவிட்டு அல்லாஹ்விடம் போய்விட்டார்கள்.

ஒருவர் மரணித்த பின்னரும் அவரது மண்ணறைக்கு நன்மையைக் கொண்டு சேர்க்கும் ‘இல்முன் முன்பு பிஹீ’ எனப்படும் பயனளிக்கும் அறிவை விட்டுச்செல்வதன் மூலம்

அவர்கள் புத்திசாலித்தனமான முதலீட்டைச் செய்து விட்டதாகக் கூற முடியும்.

82 வருடங்கள் வாழ்ந்து நான்கு தசாப்தத்திற்கு மேல் அமைதியாக, ஆரவாரமின்றி அறிவுப் பங்களிப்புச் செய்து வாழ்ந்து விட்டு அமைதியாக விடைபெறும் இந்த அறிவாளியை நீ ரப்பே பொருந்திக் கொள்வாயாக! அவர்களது நன்மைத் தராசை கனமாக்கி உயர் சுவர்க்கத்தை நஸீபாக்குவாயாக!

—-++++——

மேற்படி உரையை நிகழ்த்தி விட்டு பள்ளியை விட்டு வெளியே வருகின்ற பொழுது என்னை சந்தித்த ஒருவர் இவ்வளவு பணிகளை மேற்கொண்ட நாளிர் சேர் அவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இருக்கவில்லை என்ற கவலையை வெளியிட்டார்.

நாளிர் சேர் எவரிடமும் எதனையும் தனக்காக கேட்டதில்லை என்பதுடன் உலகத்தில் எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்பதையும் அது காட்டுகிறது .

ஆனால்,இவ்வளவு முக்கியமான மனிதர்களை சமூகம் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகப் பெரிய கவலைக்குரிய விடயமாகும்.

அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் உலகத்து பாக்கியங்களை விடவும் சிறந்த பாக்கியங்களை கொடுப்பானாக!

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top