الايمان بيوم القيامة கியாமத்து நாள் மீதான ஈமான்
ஜுமுஆ குத்பா
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி)
எல்லாப் புகழும் இந்த அண்ட சராசரங்களையெல்லாம் படைத்து, பரிபாலித்து, மனிதனை கண்ணியமான சிருஷ்டியாகவும் அமைத்து, அவனுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் காலத்துக்குக் காலம் கொடுத்து வந்த வல்ல அல்லாஹு தாஆலாவுக்கே சொந்தமானதாக. الحمد لله
ஸலாத்தும் ஸலாமும் உத்தமத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார்கள், அவர்களுடைய ஸஹாபாக்கள், அவர்களை மறுமை நாள் வரை பின்பற்றக் கூடிய நல்லடியார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
புனித ஜும்ஆவிற்கு சமுகம் தந்துள்ள அல்லாஹ்வின் நல்லடியார்களே! அருமை நண்பர்களே! அல்லாஹ் ஸுப்ஹானஹுவ்வ தஆலாவை எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா இடங்களிலும் அஞ்சி நடந்து கொள்ளும் படி முதலில் எனக்கும் அப்பால் உங்களுக்கும் வஸிய்யத்து செய்து கொள்கிறேன்.
அருமை சகோதரர்களே! சில விஷயங்களைக் கட்டாயமாக நாங்கள் ஈமான் கொண்டு தான் ஆக வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அந்தவகையில், கியாமத் நாளின் மீதும் நாங்கள் விசுவாசங் கொள்ள வேண்டும் என்று எமக்கு சொல்லி வைத்திருக்கின்றான். யாரிடத்திலே அல்லாஹ்வின் மீது விசுவாசம் இருந்து அவன் மறுமை நாளை ஈமான் கொள்ளவில்லையோ அப்படியானவனுக்கு விசுவாசம் இல்லை; ஈமான் இல்லை என்பதை நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம்.
அல்லாஹு தஆலாவுடைய நல்லடியார்களே!
நாங்கள் குறைஷிக் காபிர்களை எடுத்துப் பார்த்தால் அவர்கள் அல்லாஹுதஆலாவை விசுவாசம் கொண்டிருந்ததாக அவன் சொல்கின்றான். ஆனால், அவர்களிடம் இருந்த மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால் இந்த உலகவாழ்க்கை முடிவடைந்ததற்குப் பின்னர் ஒரு வாழ்க்கை இருக்கிறதா, அல்லாஹு தஆலா எங்களை விசாரிப்பானா, நாம் உக்கி மண்ணாகிப் போனதற்குப் பின்னாலும் கூட உயிர்ப்பிக்கின்ற ஆற்றல் அவனுக்கு இருக்கின்றதா என்ற விசயத்திலே தான் அவர்கள் சந்தேகம் கொண்டிருந்தார்கள். இதனை தமக்கு மத்தியிலே அவர்கள் பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள். கருத்து முரண்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதை குர்ஆனிலே அல்லாஹுத் தஆலா அடிக்கடி சொல்லிக் காட்டுகிறான்.
அருமை நண்பர்களே! சகோதரர்களே!
எவ்வளவு தூரம் நாங்கள் ஆழமாக அல்லாஹு தஆலாவைக் விசுவாசிக்கின்றோமோ அந்தளவு தூரம் அழமாக, மிகவும் அவசியமாக நாங்கள் கியாமத் நாளை விசுவாசிக்க வேண்டி இருக்கிறது. அது எங்களுடைய ஈமானின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. எப்போது இந்த கியாமத் நாளின் மீது இருக்கும் எங்களுடைய விசுவாசம் பலவீனமடைகின்றதோ அப்பொழுதுதான் எங்களுடைய வாழ்க்கையிலே நாங்கள் பல்வேறுபட்ட பாவங்களுக்கும் உள்ளாகின்றோம், பல்வேறுபட்ட சிக்கல்களுக்கும் உள்ளாகின்றோம் என்பதை நாங்கள் மறந்து விடக் கூடாது.
அருமை நண்பர்களே! சகோதரர்களே!
குறைஷிக் காபிர்கள் என்ன சொல்லி வந்தார்களென்றால்!
إِنْ هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِين
“நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்படப் போகிறவர்கள் அல்லர்.” என்று அவர்கள் உறுதியாக கூறிவந்தார்கள். அல்லாஹு தஆலா இந்த மறுமை நாளுடைய விசுவாசத்தைப் பற்றி சொல்லுகின்ற பொழுது அதனுடைய செய்தி சாதாரணமான செய்தியல்ல. النبأ العظيم அது மிகவும் ‘மகத்தான செய்தி’, அது ஒரு சாதாரண விஷயமல்ல, உங்களுடைய வாழ்க்கையிலே மிகவும் அடிப்படையான ஒரு இடத்தை வகிக்கவேண்டிய செய்தி அது என்று அல்லாஹுத் தஆலா சொல்லிக் காட்டுகின்றான்.
அருமை நண்பர்களே! சகோதரர்களே!
யாருக்கு கியாமத் நாளின் மீது விசுவாசம் இல்லையோ, அவன் இந்த உலக வாழ்க்கையிலே மூழ்கிப் போவான். இந்த உலகம் தான் தனக்குரிய கதி என்றும் தஞ்சம் என்றும் அவன் சொல்லிக் கொண்டிருப்பான். அவன் உலகத்திலே மிருகத்தைப் போல வாழ ஆரம்பிப்பான். அவனுக்கு பணத்தையும் உடல் இச்சையையும் தவிர வேறு எதுவும் பெரிய இலட்சியமாக தெரியமாட்டாது.ஆனால் அதற்கு நேர் எதிராக யார் கியாமத் நாள் மீது ஆழமாக விசுவாசங் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு இவ்வுலகம் என்பது அற்பமான ஒன்றாகத் தான் தெரியும். அவர்கள் இந்த உலகத்தை, கடந்து செல்லக் கூடிய ஒரு பாலமாகத் தான் எடுத்துக் கொள்வார்கள். இந்த உலகத்தில் வரக்கூடிய இலாபமோ, நஷ்ட்டமோ அவர்களுக்கு உண்மையான இலாபமாகவோ நஷ்டமாகவோ இருக்கமாட்டாது.
وَمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَهْوٌ وَّلَعِبٌ وَاِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِىَ الْحَـيَوَانُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை – இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் – இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.
என்று இவ்வுலக வாழ்வின் தன்மை பற்றி கூறுகிறான்.
அல்லாஹுதஆலா எங்களுக்கு இந்த வாழ்க்கைக்கு பின்னால் ஒரு அற்புதமான, புதிய வாழ்க்கையை வைத்திருக்கிறான். அது தான் உண்மையான வாழ்க்கை. அது தான் உண்மையான உயிரோட்டமுள்ள வாழ்க்கை. இந்த உலக வாழ்க்கை போலியானது.இது நீர் குமிழிக்கு ஒப்பானது என்ற கருத்துடன் இந்த உலகத்தில் உண்மை முஃமின்கள் வாழ்வார்கள். அவர்களுக்கு உள்ளத்திலே நிம்மதியிருக்கும்.ஒரு முஃமின் பின்வருமாறு தான் சிந்திப்பான்: இவ்வுலகத்திலே எதுதான் எனக்கு இல்லாமல் போனாலும் எந்தவொரு வெற்றி தான் எனக்குக் கிடைக்காமல் போனாலும், எந்த ஒரு நிஃமத் என்னை விட்டும் கைதவறிப் போனாலும் நிச்சயமாக அதற்காக நான் கவலைப்படமாட்டேன். நாளை மறுமையிலே அல்லாஹு தஆலா அதனை நிரந்தரமாக எனக்குத் தருவான். இந்த நம்பிக்கையோடும், நிம்மதியோடும் உண்மை விசுவாசிகள் இந்த உலகத்திலே வாழுவார்கள்.
எனவே, யாரிடத்திலே அல்லாஹு தஆலாவின் மீது விசுவாசம் இருக்கிறதோ மேலும், அவன் நீதியானவன், நியாயமானவன், சரியான தீர்ப்பை வழங்குவான் என்ற விசுவாசம் இருக்கின்றதோ அவர்கள் நிச்சயமாக, கட்டாயமாக இந்த மறுமை நாளை விசுவாசித்துத் தான் ஆக வேண்டும். அதிலே எந்த விதமான சந்தேகமும் கொள்ளக் கூடாது, எந்த அளவு சந்தேகம் அதிலே வருகிறதோ அந்தளவு தூரம் எங்களுடைய வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை நாங்கள் மறந்து விடக் கூடாது.
அல்லாஹு தஆலாவுடைய நல்லடியார்களே!
இது இப்படியிருக்க இந்த கியாமத் நாளொன்று இருக்கிறது, அது அவசியமாக வந்து தான் தீரும் என்பதை நிறுவுவதற்காக, அதனை உறுதிப்படுத்துவதற்காக அல்லாஹுத் தஆலா எப்படியான வழிமுறைகளை குர்ஆனிலே கையாளுகின்றான் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எங்களுடைய ஈமான் அதிகரிக்கும்.
கியாமத் ஒன்று இருக்கிறதே அது நிச்சயமாக வந்துதான் தீரும் என்ற சிந்தனை எங்களுடைய உள்ளத்தில் பதியுமாக இருந்தால் அல்லாஹு தஆலா கியாமத்து நாளைப் பற்றி என்ன சொல்கின்றான் என்பது பற்றி நாம் முதலில் குர்ஆனுடாக, அவனுடைய கலாமினூடாக தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். அல்லாஹ் அதனை எவ்வாறு நிறுவுகிறான் என்பதை நாங்கள் பார்ப்போம. குர்ஆனை நாங்கள் ஒதிப்பார்த்தால் அங்கே எத்தனையோ வகையான அணுகு முறைகளை அல்லாஹுத் தஆலா கையாளுகின்றான்.
மறுமை வாழ்வு சாத்தியமே
அல்லாஹ் சில கேள்விகளைக் கேட்கின்றான். சில வகையான தர்க்கங்களை முன்வைக்கின்றான். அந்தத் தர்க்கங்களை நாங்கள் சிந்தித்துப் பார்த்தால் நிச்சயமாக இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு ஒரு வாழ்க்கையிருக்கிறது. அது தான் நித்தியமான வாழ்க்கை. அப்படியான ஒரு வாழ்க்கையை உண்டுபண்ணுவதற்கான ஆற்றலும் திறமையும் அவனுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் தெரிந்து கொள்வோம்.
அல்லாஹு தஆலாவின் நல்லடியார்களே!
மறுமை வாழ்க்கை என்பது உருவாக்கப்படுவது சாத்தியம் தான் என்பதை நிறுவுவதற்காக அல்லாஹ் எப்படியான தர்க்கத்தை முன்வைக்கின்றான் என்பதைப் பார்ப்போம். ‘நீங்கள் இந்த உலகத்திலே இல்லாமையிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறீர்கள். அற்ப இந்திரியத் துளியிளிருந்து படைக்கப்பட்டிருக்கிறீர்கள், அப்படியாக இருந்தால் இந்திரியத் துளியிலிருந்து உங்களைப் படைத்து, உங்களை இரத்தக் கட்டியாக மாற்றி, அதற்குப் பிறகு எலும்புகளை உங்களுக்குத் தந்து, சிசுகளாக உங்களை கருவறையிலே படைத்து இந்த உலகத்திக்கு அனுப்பியிருக்கிறோமே இதனை நாங்கள் தான் செய்திருக்கிறோம். இப்படியான ஆற்றல் எங்களுக்கு இருக்குமாக இருந்தால் நீங்கள் மரணித்ததற்குப் பின்னர் மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பது எங்களுக்கு கஷ்டமான காரியம் என்று நினைக்கின்றீர்களா? அப்படியாக இருந்தால் இவ்வுலகத்திலே முதன் முதலாகப் படைப்பது தான் கஷ்டமான காரியம். மீளவும் படைப்பது கஷ்டமான காரியமல்ல. முதலாவது உங்களை படைத்திருக்கிறோம். எனவே, இரண்டாவது தடவையும் படைப்பதற்கான ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது என்று அல்லாஹுத் தஆலா சொல்லவருகிறான்.
وَهُوَ الَّذِىْ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُه وَهُوَ اَهْوَنُ عَلَيْهِ
“அவனே படைப்பைத் துவங்குகின்றான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும்.
اَفَعَيِيْنَا بِالْخَـلْقِ الْاَوَّلِ بَلْ هُمْ فِىْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيْدٍ
“எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.”
இந்த தர்க்கத்தை யாருக்கும் மறுக்க முடியாது. சகோதரர்களே! ஒரு தடவை ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களுடைய சபைக்கு ஒரு காபிர் வருகிறார்.உக்கி மண்ணாகிய ஓர் எலும்பை எடுத்து வந்து காட்டுகிறார். இந்த எலும்பை உங்களுடைய இரட்சகனுக்கு எப்படி உயிர்ப்பிக்க முடியும் என்று கேளுங்கள்? அது எப்படி சாத்தியம்? இது மண்ணோடு மண்ணாகிப் போகிவிட்டதே. இதனை எப்படி உங்களுடைய இரட்சகன் உயிர்ப்பிக்க முடியும் என்று கேட்டு அவர் தர்க்கம் புரிகிறார். அந்த சந்தர்ப்பத்திலே தான் அல்லாஹு தஆலா சூரா யாஸீனிலே கடைசியாக இருக்கின்ற வசனத்தை இறக்கி வைக்கிறான்.
وَضَرَبَ لَـنَا مَثَلًا وَّ نَسِىَ خَلْقَه قَالَ مَنْ يُّحْىِ الْعِظَامَ وَهِىَ رَمِيْمٌ
“மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
قُلْ يُحْيِيْهَا الَّذِىْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيْمُ ۙ
“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்’என்று (நபியே!) நீர் கூறுவீராக!”
அவன்:- ‘நபியே உங்களிடத்திலே வந்த அந்த மனிதன் ஒரு உதாரணத்தைச் சொல்லிக் காட்டுகிறான். அவன் எப்படி சொல்லுகின்றான் من يحي العظام وهي رميم இந்த எலும்புகளெல்லாம் உக்கி மண்ணாகிப் போனதற்குப் பின்னால் யார் தான் அந்த எலும்புகளை உயிர்ப்பிக்க முடியும்? என்று அவன் கேட்கிறான். நபியே! நீங்கள் பதில் சொல்லுங்கள்.
قل يحييها الذي أنشأها أول مرة الذي
‘யார் இந்த எலும்பை முதலாவதாக தோற்றுவித்தானோ அவன் மீண்டும் அந்த எலும்புக்கு உயிர் கொடுப்பதற்கு, அந்த எலும்பை மீண்டும் ஒரு மனிதனாக உருவாக்குவதற்கு அவனுக்கு முடியும்’ என்று நபியே சொல்லுங்கள் என்று அந்தத் தர்க்கத்தை அல்லாஹுத் தஆலா நிறைவு செய்கிறான்.
மேலும் சொல்லுகிறான் :-
وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا
(எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று.
اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا
“யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
எனவே மனிதன் சிந்திக்க வேண்டாமா? அவன் இதற்கு முன்னர் இந்த உலகத்திலே இருக்கவில்லை. அவனை அல்லாஹ் தான் ஒரு இந்திரியத் துளியிலிருந்து படைத்தான். அப்படிப்பட்ட அல்லாஹுத் தஆலாவிற்கு மீண்டும் அவனை இவ்வுலகத்திலே உயிர்ப்பிப்பதற்கு முடியாத காரியம் என மனிதன் சிந்திக்கின்றானா? அதற்கென்ன பதிலை சொல்லப் போகின்றான் என்று அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்.
எனவே, அருமை நண்பர்களே!
சகோதரர்களே! இந்த உலகத்திற்கு நாம் வந்திருக்கிறோம். எங்களை இங்கு கொண்டு வந்தது யார் என்பதை சிந்திக்க வேண்டும். எங்களுடைய முயற்சி என்ன இருக்கிறது? ஒரு அற்பமான இந்திரியத் துளியினால் நாங்கள் எல்லோரும் உருவாகியிருக்கிறோம். அப்படியாக இருந்தால் கோடான கோடி இரகசியங்களை அதற்குள் வைத்து ஒரு பெரிய திட்டமிடலை வைத்தானே அந்த ரஹ்மான், அவனுடைய சக்தியின் வெளிப்பாடு எவ்வளவு? அவனுக்கு அது முடியும் என்றால், அதாவது,ஒரு சீரான படைப்பாக இந்த உலகத்தில் எங்களைப் படைக்க முடியும் என்றால் காது, கண், இதயம், கைகள், கால்கள் இவற்றையெல்லாம் வைத்து சீராக இந்த உலகத்திலே எம்மைப் படைக்க முடியுமென்றால் ஏன் அவனுக்கு நாங்கள் இறந்ததற்கு பின்னால் மீண்டும் எங்களை உயிர்ப்பிக்க முடியாது? என்பது அந்த வாதமாக இருக்கிறது.
அது மாத்திரமல்ல, இன்னும் அல்லாஹுத் தஆலா கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகிறான். அவற்றின் சுருக்கம் என்னவென்றால், நீங்கள் இந்தப் பூமியைப் பாருங்கள் அது கட்டாந்தரையாக இருக்கிறது. அது இறந்த நிலையிலே காணப்படுகிறது. அப்படியான அந்தக் கட்டாந்தரையின் மீது நாங்கள் மழையைப் பொழிவிக்கிறோம். அவ்வாறு மழையை பொழிவித்ததன் பின்னர் இறந்திருக்கின்ற பூமியிலே வித்துக்கள் முளைக்கின்றன; விருட்சங்கள் வளருகின்றன. இவற்றை யார் செய்தான் என்று பாருங்கள். இறந்த பூமியின் மீது பசுமையான தாவரங்களை முளைப்பித்த அல்லாஹுத் தஆலாவுக்கு உங்களுடைய எலும்புகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு கஷ்டமா? என்று அல்லாஹுத் தஆலா கேட்கிறான்.
அல்லாஹுவுடைய நல்லடியார்களே! அருமை சகோதரர்களே!
படைத்த அல்லாஹு தஆலா இக்கேள்விகளைக் கேட்கிறான். அவனில்லாமல் நாங்களா இவற்றை உயிர்ப்பித்தோம்? நாங்கள் மழையை வருஷித்தோமா? நாங்கள் வித்துக்களை முளைப்பித்தோமா? எங்களுடைய ஆற்றல்களை எந்த அளவு நாங்கள் பிரயோகித்தோம்? எனவே நாம் செய்தோமா ? நான் இறந்த பின்னர் எம்மை மீண்டும் எம்மை உயிர்ப்பிக்க இப்படிப்பட்ட இரட்சகனுக்கு முடியுமா எமக்கு முடியுமா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இது அல்லாஹு தஆலா மறுமை நாள் இருக்கிறது என்பதை நிறுவுவதற்காக, அது சாத்தியம்தான், அதனைக் கொண்டு வருவதற்கு முடியும், மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு முடியும் என்று சொல்லுவதற்காக வேண்டி அவன் இவ்வாறு கேள்விகளை எம்மை நோக்கி தொடுக்கிறான். ஒரு சில தர்க்கங்களாக இருக்கின்றன.
மறுமை வாழ்வின் அவசியம்
குர்ஆனில் இன்னொரு வகையான தர்க்கம் இருக்கிறது. அல்லாஹு தஆலாவுடைய தர்க்கம் அவன் எங்களிடத்திலே கேட்கின்ற ஒரு கேள்வி. இந்த உலக வாழ்க்கையை நீங்கள் நோட்டமிட்டுப் பாருங்கள். இந்த உலக வாழ்க்கை அற்பமானது. இந்த உலக வாழ்க்கை ஒரு விளையாட்டானது. இதிலே நிரந்தரத்தைக் காண முடியாது. இது மிகவும் போலியானது. அப்படியாக இருந்தால் போலியில்லாத நிரந்தரமான, இன்பங்களுக்கு முடிவே இல்லாத ஒரு வாழ்க்கை தேவைப்படுகின்றது என்பதை நீங்கள் உங்களுடைய புத்தியைப் பாவித்தாலே தெரிந்து கொள்ள முடியுமல்லவா? என்று குர்ஆனுடைய பல வசனங்களிலே அல்லாஹ் கேட்கின்றான்.
அருமை நண்பர்களே! சகோதரர்களே!
அல்லாஹு தஆலாவுடைய நல்லடியார்களே! இந்த உலக வாழ்க்கையின் தன்மையைப் பற்றி நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் எங்களுக்கு கியாமத் ஒன்று தேவைதான் என்ற உண்மையை நாங்கள் விளங்கிக் கொள்வோம். இந்த உலக வாழ்க்கையை நோட்டமிட்டுப் பாருங்கள் சகோதரர்களே! இது நாங்கள் தேடுகின்ற முழுமையில்லாத வாழ்க்கை, அரைகுறையான வாழ்க்கை, பல்வேறுபட்ட குறைபாடுகளைக் கொண்டதாக இருக்கிறது. நாங்கள் தேடுகின்ற முழுமையான ஒரு நிம்மதியை இந்த உலகத்திலே காணமுடியாது. எங்கு பார்த்தாலும் பிரச்சினை. எங்கு பார்த்தாலும் சிக்கல், எங்கு பார்த்தாலும் அவலங்கள், எங்கு பார்த்தாலும் அநீதிகள், இது தான் இந்த உலக வாழ்க்கையின் தன்மையாக, நியதியாக இருக்கின்றது.
அல்லாஹு தஆலா அடிக்கடி சொல்லுகின்ற விஷயம் என்னவென்றால் இந்த உலக வாழ்க்கையோடு மனிதனுடைய வாழ்க்கை முடிவடையும் என்றிருந்தால் நிச்சயமாக அது போலியாகத்தான் இருக்க முடியும். நிச்சயமாக அல்லாஹு தஆலா உங்களுக்கு நிரந்தரமான ஒரு வாழ்க்கையை வைத்திருக்கிறான். அங்குதான் மனிதனுக்கு தேவையான முழுமையான நிம்மதியை நாம் தருவோம் என்ற கருத்த்தை அடிக்கடி சொல்லிக் காட்டுகின்றான். எனவே, தர்க்க அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலும் எங்களுடைய புத்தியைப் பாவித்துப் பார்த்தாலும் இந்த உலக வாழ்க்கைக்கு அப்பால் கட்டாயமாக ஒரு வாழ்க்கை தேவை என்பதை எங்களுடைய மனச்சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.
அல்லாஹ்வின் நல்லடியார்களே!
நாங்கள் உலகத்தில் ஏழ்மையைப் பார்க்கின்றோம். வறுமையைப் பார்க்கிறோம்; நோயைப் பார்க்கிறோம்; ஏற்றத்தாழ்வைப் பார்க்கிறோம்; மடத்தனத்தை பார்க்கிறோம்; அங்கவீனத்தைப் பார்க்கிறோம். இதுவெல்லாம் உலக வாழ்வில் சகஜமாக இருக்கின்றன. ஒரு மனிதன் மிகப் பெரிய உயர்ந்த அந்தஸ்தில் வாழ்கின்றான், அதிகாரத்தோடும் ஆட்சியோடும் வாழ்கின்றான். இன்னொரு மனிதனுக்கு அது எட்டாக் கனியாக இருக்கிறது. அவனால் அதனைப் பெற முடியாது. ஒருவன் ஏழ்மையிலேயேவாழ்ந்து, ஏழ்மையிலேயே மரணித்து விடுகின்றான். இன்னொரு மனிதனைப் பார்த்தால் அவன் பிறக்கின்ற பொழுதே மிகவும் சீமானாகப் பிறக்கின்றான். அவன் இறக்கும் வரைக்கும் அப்படியே வாழ்ந்து விட்டு இறக்கின்றான். இன்னொரு மனிதன் பிறக்கும் போதே குருடனாக, அங்கவீனனாக பிறக்கின்றான். இறக்கும் வரைக்கும் அவனுக்கு இந்த உலகை அனுபவிக்கக் கிடைப்பதில்லை. ஏழ்மை தாண்டவமாடுகின்றது. இப்படியே இருந்தால் இந்த மனிதனுக்கு இந்த உலகில் எங்கே நிம்மதி? எங்கே அவனுக்கு சுபீட்சம்? நிச்சயமாக இந்த உலகம் இடம்தரமாட்டாது. இந்த உலகத்திலே அல்லாஹ் ஏற்றத்தாழ்வுகளை வைத்து படைத்துள்ளான். நாங்கள் மறுமை நாளை சிந்திக்க வேண்டும் என்பதற்காக மன நிறைவான வாழ்க்கை ஒன்று உள்ளது என்பதை கற்பனை பண்ணிப் பார்க்க வேண்டும், நம்பவேண்டும் என்பதற்காக இப்படி அமைத்திருக்கிறான்.
ஏன் அல்லாஹ் மௌத்தையும், ஹயாத்தையும் படைத்தான் என்பதை குர்ஆன் தெளிவாகச் சொல்லிக் காட்டுகிறது.
خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
ஏன் ஹயாத்தையும், மௌத்தையும் படைத்தான்? ஏன் ஹயாத்தை மாத்திரம் படைக்கவில்லை? ஏன் மரணத்தைத் தந்தான்? ஏன் பிரிவைத் தந்தான்? ஏன் நெருக்கமானவர்களைப் பிரிகின்றோம்? இந்தக் கேள்விகளுக்கு பதில் இருக்கின்றது. أيكم أحسن عملا ليبلوكم உங்களில் யார் செயல்கள் விடயத்தில் அதிக பட்சம் சிறந்தவர் என்பவர் என்பதை சோதிப்பதற்காக என்கிறான்..
இந்த உலகம் அறைகுறையானது. நாளை மறுமையில்தான் நாங்கள் முழு நிறைவான நிம்மதியைக் காண்போம் என்பதை சிந்திப்பதற்காக வேண்டி உலக வாழ்வை அல்லாஹ் ஏற்றத்தாழ்வுடன் படைத்திருக்கிறான் .இந்தக் கருத்தை குர்ஆனிலே அல்லாஹு தஆலா பின்வருமாறு சொல்கின்றான்.
اُنْظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَلَـلْاٰخِرَةُ اَكْبَرُ دَرَجٰتٍ وَّاَكْبَرُ تَفْضِيْلًا
(நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே!
எனவே இந்த உலகத்தில் அரைகுறையை காண்கின்றோமா? ஏற்றத் தாழ்வுகளை காண்கின்றோமா? மனசுக்கு கவலை தரும் விடயங்களை காண்கின்றோமா ? நிம்மதியடைவதற்கு ஓரேயோரு வழி இருக்கிறது. அந்த ரஹ்மான் எங்களுக்கு வாக்களித்திருக்கின்ற அந்த மறுமை நாளிலே உறுதியான நம்பிக்கை வைப்போமாக அங்குதான் எங்களுக்கு அந்த சந்தோஷம், அந்த நிம்மதி முழுமையாக கிடைக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.
எங்களுக்கு அல்லாஹ் வாக்களித்திருக்கின்ற சுவர்க்கத்தைப் பற்றி அவன் சொல்லுகின்ற பொழுது خالدين فيها அவர்கள் அதிலே நிரந்தரமாகவே தங்கி விடுவார்கள் என்று கூறுகின்றான்.
அல்லாஹ்வுடைய நல்லடியார்களே!
எங்களில் எல்லோருக்கும் ஒரு முக்கியமான ஆசை இருக்கிறது.அது தான் இந்த உலகத்திலே நிரந்தரமாக வாழ வேண்டும் என்பதாகும். இறப்பு வரக் கூடாது நீடூழி காலம் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அதற்கு இந்த உலகம் இடம் தருமா? இடம் தரவே மாட்டாது. நாங்கள் இப்போது இந்த உலகம் என்ற நாடக மேடையிலே இருந்து கொண்டுடிருக்கிறோம். எங்களுக்குப் பின்னால் வரக்கூடியவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு நாங்கள் எல்லோரும் போய்ச்சேர வேண்டியிருக்கின்றது. எனவே, உலகத்திலே நிரந்தரமாக வாழ்வது என்ற ஆசைக்கு இடம் கிடையாது. அந்த ஆசைக்குரிய இடம் நாளை மறுமையிலே தான் இருக்கின்றது.அந்த சுவர்க்கங்களில் அவர்கள் خالدين فيها நிரந்தரமாக தங்கி விடுவார்கள் என்று குர்ஆனிலே அந்த ஆசைக்கான சரியான வழியை அல்லாஹ் எங்களுக்குச் சொல்லித் தருகின்றான். யார் எங்களை விட்டுப் பிரிந்தாலும் நாங்கள் என்ன சொல்லுகின்றோம்? நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானவர்கள்.நிச்சயமாக அவனிடமே நாம் மீள இருக்கிறோம் .
إنا لله وإنا إليه راجعون என்ற அடிப்படை உண்மையை ஏற்றுக் கொண்டு நிம்மதியடைகின்றோம்.
கப்ருகளை ஸியாரத் செய்யும் போது கூட பின்வரும் துஆவை ஓதும் படி நபிகளார்(ஸல்) எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்:
السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ يَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
“அடக்க தளங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே ! உங்கள் மீது இறை சாந்தி பொழியட்டும் .இறைவன் நாடினால் நாங்களும் உங்களுடன் வந்து சேருபவர்கள் தாம்”
எனவே, அளவுக்கு மீறிய கவலையோ விரக்தியோ எங்களுக்கு வருவதில்லை. தற்கொலை செய்து கொள்கின்ற அளவுக்கு உலக வாழ்க்கையின் கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் உலகத்திலே இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் பார்க்கின்றோம்.யாருடைய உள்ளத்திலே அந்த கியாமத்தைப் பற்றிய ஆழமான நம்பிக்கை இருக்கின்றதோ அவர்களுக்கு விரக்தி வருவதில்லை, அவருக்கு அளவுக்கு மீறிய கவலை வருவதில்லை, அவர்கள் நிம்மதியடைவார்கள். நாளை மறுமையிலே தான் எங்களுடைய ஆசைகளுக்கான முழுமையான இடம் இருக்கும் என்று அவர்கள் நிம்மதியடைவார்கள். இது தான் ஒரு முஃமினுக்கு இருக்கின்ற மிகப் பெரிய பாக்கியமாக இருக்கிறது.
தெவிட்டல், சலிப்பு,பயம் இல்லாத வாழ்வு
அல்லாஹ்வுடைய நல்லடியார்களே!
இந்த உலக வாழ்க்கையிலே நாங்கள் ஏதாவதொரு இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற போது அலுப்புத் தட்டுகின்றது. கொஞ்ச நேரம் போகின்ற போது தெவிட்டல் வருகின்றது; போதும் என்ற நிலை வருகின்றது. ஒரு மனிதனுக்கு முன்னால் மிகவும் ருஷியான உணவை வைத்தால் என்ன செய்வான்?. வயிறு நிறைய சாப்பிடுவான், வயிறு நிறைந்து விட்டால் அது சமிபாடடைந்து அவனுக்கு மலமாக அது வெளியேறிய பின்னால் தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கும், கியாமத்து நாளில் அப்படியல்ல. கியாமத் நாளில் தெவிட்டல் என்பது கிடையாது. ஒரு மனிதனுடைய பசி உணர்வாக இருந்தாலும், அவனுடைய பாலுணர்வாக இருந்தாலும், அவனுடைய எந்த ஆசையாக இருந்தாலும் தொடர்ந்தும் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை அல்லாஹு தஆலா சுவர்கத்திலே கொடுப்பான். உலகத்திலே இருக்கின்ற அரைகுறை தன்மைகள், உலகத்திலே இருக்கின்ற பிரச்சினைகள் எதுவும் சுவர்க்கத்திலே இருக்க மாட்டாட்டாது. அந்த உணர்வுக்கு சரியான இடம் சுவர்க்கமாகத் தான் இருக்கின்றது. எங்களுக்கு அலுப்புத் தட்டுகின்றதா? எங்களுக்குத் தெவிட்டல் வருகின்றதா? அது எதனை ஞாபகப் படுத்துகிறது? கியாமத் ஒன்று இருக்கிறது மனிதனே இந்த கியாமத்தில் தான் உனக்கு நிரந்தரமான இன்பம் இருக்கிறது என்பதை இந்த தெவிட்டலும் இந்த அலுப்பும் எங்களுக்கு சொல்லிக் காட்டுகின்றது. நாங்கள் ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கின்ற போது களைப்பு வருகின்றது. சுவர்க்கத்திலே களைப்புக் கிடையாது.
அந்த சுவர்க்கத்தினுடைய தன்மை எப்படியென்றால் ,
لَا يَمَسُّهُمْ فِيْهَا نَـصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِيْنَ
“அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.” என்று கூறுகிறான்.
ஏன் அல்லாஹ் இப்படி சொன்னான்?. அந்த சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள் என்று ஏன் அவன் சொன்னான் என்றால் இந்த உலகத்தில் நாங்கள் ஏதாவது இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற போது எங்களுக்கு பல கவலைகள் இருக்கும், பல பிரச்சினைகள் இருக்கும். இதனைத் தொடர்ந்து அனுபவிக்க முடியுமா? இந்த பானத்தை தொடர்ந்து குடிக்க முடியுமா? இதிலே ஆபத்து இருக்குமா? இதனால் சீனி வியாதி வருமா? இதனால் இறப்பு வறுமா? இதற்குள் நஞ்சு இருக்க முடியுமா? இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்குமா? என்ற பயம்கள் எல்லாம் இருக்கும். இந்த உலகிலே தான் பயம்கள், அச்சங்கள். நாளை மறுமையிலே சுவர்க்கத்திலே நாங்கள் எதனை விரும்புகின்றோமோ அவை அனைத்தும் கிடைக்கும். அதற்கான இடமாக சுவர்க்கம் இருக்கும் என்பதை குர்ஆனிலே அல்லாஹ் பல இடங்களிலும் சொல்லிக் காட்டுகின்றான்.
எனவே எங்களது உடலிலே பலவீனம், உடலிலே நோய், உடலிலே களைப்பு உடலிலே ஏதாவது சோர்வு இருக்கிறதா? இவை எல்லாம் எங்களுக்கு ஞாபகப்படுத்துவது கியாமத் நாளைத் தான். மனிதனே! இது அற்பமான உலகம். இந்த உலகம் மிகவும் அற்பமானது. நீ தேடக் கூடிய கியாமத் இருக்கிறதே அதிலே தான் உனக்கு முழுமையான இன்பம் இருக்கிறது என்ற செய்தியே அந்த விஷயங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
ரஸுல்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அந்த கியாமத்திலே இருக்கின்ற இன்பங்கள் எப்படிப்பட்டவை? مالا عين رأت எந்தக் கண்களாலும் உலகத்திலே கண்டிராத காட்சிகளைப் பார்க்கலாம். உலகத்திலே காதுகளினால் கேட்டில்லாத இன்பங்களையெல்லாம் கேட்கலாம் .எந்த ஒரு மனிதனுடைய உள்ளத்திலும் உதயமாகாத இன்பங்களையெல்லாம் அங்கே தேடலாம் என்ற கருத்தை நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அல்லாஹுத் தஆலாவுடைய நல்லடியார்களே!
எனவே தான் கியாமத்துடைய நம்பிக்கை எங்களுக்கு அவசியப்படுகிறது. இதனை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சுவர்கத்திற்குள் நுழைகின்ற போது எங்களுக்கு அல்லாஹ்: أدخلواها بسلام آمنين நீங்கள் சுவர்க்கத்திற்குள் நுழைகின்ற பொழுது சாந்தியோடும் உள அமைதியோடும், அச்சம் தீந்தவர்களாகவும் நுழையுங்கள் என்று சொல்லுவான். உலகத்திலே இப்படி இன்பங்களை அச்சம் தீர்ந்த நிலையிலே எந்தப் பயமும் இல்லாமல் மன நிறைவோடு அனுபவிக்க முடியுமானதாக இருக்கின்றதா? சகோதரர்களே! ஒரு இன்பத்தை அனுபவிப்பதாக இருந்தால் பல தடவை யோசிக்க வேண்டும். இது எங்கே சென்று முடியும்? இது எங்கே கொண்டு போய் விடும்? இது பாவத்தைத் தருமா? சட்டம் என்னைக் கண்டுகொள்ளுமா? பொலிஸார் என்னைக் கண்டு கொள்வார்களா? உறவினர்கள் என்னைப் பார்த்து விடுவார்களா? என்ற பயம்கள் எல்லாம் இருக்கும். கியாமத் நாள் அப்படிப்பட்டதல்ல! بسلام آمنين பாதுகாப்பு பெற்றவர்களாக,ஷைத்தான் வந்து என்னைக் கடத்திக் கொண்டு போய்விடுவானோ, எதிரிகள் தாக்குவார்களோ ,பறித்துக் கொண்டு போய்விடுவார்களோ? என்று எந்த விதமான அச்சமும் இல்லாமல் அந்த சுவர்க்கத்திலே இருப்பதற்கான வாய்ப்பை அல்லாஹ் தருகின்றான், என்பதை தான் அல்குர்ஆன் சொல்லிக் காட்டுகின்றது.
போட்டி பொறாமை அற்ற உலகு
அல்லாஹுதஆலாவுடைய நல்லடியார்களே!
உலகத்திலே நாங்கள் வாழுகின்ற பொழுது போட்டி பொறாமையைப் பார்க்கிறோம். வஞ்சகத்தை, குரோதத்தைப் பார்கிறோம். ஓர் அழகான வீட்டை, ஒரு நிம்மதியான வீட்டை நாங்கள் கட்டி விட்டால் எத்தனையோ பேர் பொறாமைப்படுவார்கள். நாம் ஓர் இன்பத்தை அனுபவிக்கின்ற பொழுது பலருக்கு அது உள்ளத்திலே குத்திக் கொண்டே இருக்கும். இப்படியான எதிரிகளும் உலகத்திலே இருக்கிறார்கள். இது தான் உலகம். ஆனால், கியாமத் நாளையிலே அப்படியல்ல. அல்லாஹ் கியாமத் நாளில் இன்பத்தைப் பற்றி சொல்லுகின்ற பொழுது இப்படியான இன்பம் ونزعنا ما في صدورهم من غل فيها அதாவது அந்த சுவர்க்கவாதிகளினுடைய உள்ளங்களிலே இருக்கின்ற கசடு, வஞ்சகம் என்பவற்றையெல்லாம் நாங்கள் அகற்றி விடுவோம் என்று அல்லாஹ் சொல்கின்றான். சுவர்க்கத்திலே போட்டி கிடையாது. ஒருவர் ஒரு இன்பத்தை அனுபவிக்கிறாரே எனக்கு இல்லையே என்ற அந்த வஞ்சக எண்ணம் சுவர்க்கத்திலே கிடையாது. அது உலகத்தின் தன்மையாக இருக்கின்றது என்பதைத் தான் அல்குர்ஆன் சொல்லிக் காட்டுகின்றது.
அல்லாஹ்வுடைய நல்லடியார்களே!
எனவே சுவர்க்கம் ஒன்று தேவை. இந்த உலகம் அற்பமானது. அதன் இன்பங்கள் தற்காலியமானவை. இருக்கும் இன்பங்களையும் முழுமையாக அனுபவிக் கூடிய சந்தர்ப்பம் கிடையாது. எனவே முழுமையான இன்பத்தை அனுபவிக்க ஒரு உலகம் தேவை என்பதை எங்களுடைய அறிவு சொல்லிக் கொண்டிருக்கிறது. எங்களுடைய மனசாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது. அதற்கான சரியான இடமாக அல்லாஹ் எமக்கு மறுமையை தயார்படுத்தி வைத்திருக்கிறான். எனவே, மறுமை நம்பிக்கை அவசியம். நாங்கள் காபிர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது அவர்கள் உலகத்தில் எல்லாவற்றையும் அடைந்து கொள்ளப் பார்க்கிறார்கள். அது சாத்தியமானதல்ல. சகோதரர்களே! கியாமத்துடைய நம்பிக்கை எங்களைப் பாதுகாக்கிறது.
நீதி இல்லாத உலகும் நீதியான மறுமையும்
அல்லாஹ்வுடைய உதவியினால் நாங்கள் உலகத்திலே நிம்மதியாக வாழ முடியும். அல்குர்ஆனிலே அல்லாஹ் மறுமை நாள் இருக்கிறது என்பதை நிறுவுவதற்காக வேண்டி இன்னுமொறு விசயத்தையும் சொல்லிக் காட்டுகின்றான். அவன் சொல்லுகின்ற ஒரு அடிப்படையான உண்மை இந்த உலகத்தைப் பார்க்கின்ற பொழுது அது மிகவும் தெட்டத் தெளிவான விடயமாகத் தான் இருக்கிறது. அல்லாஹ் என்ன சொல்லுகின்றான்? எதை சொல்ல வருகின்றான் என்றால்? இந்த உலகத்தை நீங்கள் நோட்டமிட்டுப் பார்த்தால் அங்கே நல்லவர்களுக்கு காலம் கிடையாது. நல்லவர்களுக்கு வரவேற்பில்லை, ஸாலிஹான அடியார்களுக்கு வரவேற்பில்லை. அவர்கள் சிறைகளிலே வாடுகின்றார்கள் . ஏச்சுப் படுகின்றார்கள்; அவமானப்படுத்தப் படுகின்றார்கள்; விமர்சிக்கப் படுகின்றார்கள்; கொல்லப்படுகின்றார்கள்; ஓதுக்கப் படுகின்றார்கள்; வறுமையிலே வாடுகின்றார்கள்; பிரச்சினையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஸாலிஹான மனிதர்கள். ஆனால், உலகத்திலே அல்லாஹ்விற்கு விரோதமாக வாழக் கூடியவர்கள், இந்த உலகம் தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டுடிருப்பவர்கள்; பெரும் பெரும் அட்டூழியங்களுக்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்கள், உலகத்திலே பெரும் ஆட்சியாளர்களாக வாழுகிறார்கள். நிம்மதியோடு வாழுகிறார்கள் அவர்கள் செல்லக் கூடிய இடங்களிலே அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்படுகிறது. அவர்கள் தான் உத்தமர்கள், நீதியின் கனவான்கள் என்று புகழப்படுகின்றார்கள். அப்படியாக இருந்தால் இந்த உலகத்திலே நீதி எங்கே? நல்லவர்கள் கொல்லப்பட, மிகவும் அட்டூழியமானவர்கள் எல்லாம் நீடூழிகாலம் வாழுகிறார்களே. இது தான் இந்த உலகமா? அப்படியாக இருந்தால் இந்த உலகத்திலே நீதி கிடையாது. இந்த உலகத்தின் நீதி மன்றங்களை நீங்கள் எடுத்துப் பார்த்தால் எல்லாம் போலியான நீதி மன்றங்கள். அங்கு சொல்லப்படும் சாட்சிகள் போலியானவை. நீதி கொடுக்கப்படுவது வெளிரங்கங்களை வைத்துத் தான். பலர் சிறைகளிலே வாடுகிறார்கள், அவர்கள் வெளியே இருக்க வேண்டியவர்கள். இது தான் உலகத்தின் நீதி, உலகத்தின் சட்டமாக இருக்கிறது. கியாமத் என்பது தேவை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
கியாமத்து அப்படிப்பட்டதல்ல. அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். நாளை மறுமையிலே நாங்கள் ஏற்படுத்துகின்ற தராசு மிகவும் நீதியானது. ونضع الموازين القسط மிகவும் நீதியான தராசுகளை நாங்கள் நிறுவுவோம் என்று அல்லாஹ் சொல்லுகின்றான். எனவே நல்லவர்கள் இந்த உலகத்திலே வதைக்கப்படுகிறார்கள், கஷ்டப்படுகின்றார்கள், கெட்டவர்கள் எல்லோரும் நல்ல பெயர் வாங்குகிறார்கள் என்றால் இந்த உலகம் அற்பமானதல்லவா? எவ்வளவு கண்ணியமான சிருஷ்டியான மனிதன் நல்லவனாக வாழ்ந்தால் அவனுக்கு உலகில் களமில்லையா? இது எவ்வளவு பெரிய அநீதி என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். எனவே أحكم الحاكمين நீதிசெலுத்தக் கூடியவர்களுக் கெல்லாம் அதிகம் நீதி செலுத்தக் கூடிய அல்லாஹ்வுடைய நீதி மன்றம் தேவை என்பதை உலகம் காட்டுகின்றது.
அல்லாஹ் அல்குர்ஆனிலே இந்த உண்மையை கேட்கிறான்.
اَفَنَجْعَلُ الْمُسْلِمِيْنَ كَالْمُجْرِمِيْنَ مَا لَـكُمْ كَيْفَ تَحْكُمُوْنَۚ
“நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?(சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?”
அதாவது ‘நாங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழக் கூடிய முஸ்லிம்களையும் (இந்த உலகத்திலே பெரும் பெரும்) குற்றச் செயல்களிலே ஈடுபடக் கூடியவர்களையும் சமனாக்கி விடுவோம், என்று நினைக்கிறீர்களா?என்றும் ما لكم كيف تحكمون நீங்கள் ஏன் இப்படித் தீர்ப்பு சொல்கிறீர்கள்? இது அநியாயமான தீர்ப்பல்லவா? கேட்கிறான். அல்லாஹு தஆலா நல்லவர்களையும், கெட்டவர்களையும் சமனாக்கி விடுவான் என்று நினைக்கிறீர்களா? இல்லை, ஒருபோதும் இல்லை. அவன் அநீதியாளர்களுக்கு சரியான தண்டனையைக் கொடுப்பான். இந்த உலகத்திலே யாரெல்லாம் கஷ்டப்பட்டு, பெரும் பெரும் தியாகங்களைச் செய்து, தங்களுடைய உயிர்களை மற்றவர்களுக்காக் கொடுத்தார்களோ அவர்களுக்குரிய நன்மை பூரணமாக வழங்கப்படக் கூடிய உலகத்தை நாங்கள் உண்டு பண்ண வேண்டி இருக்கிறது. அது தான் சரியான தீர்ப்பு என்ற கருத்தை அல்லாஹ் சொல்லுகின்றான்.
மேலும் கேட்கிறான்:-
وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِىْٓءُ قَلِيْلًا مَّا تَتَذَكَّرُوْنَ
“குருடரும், பார்வையுடையோரும் சமமாகமாட்டார்கள். அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.”
اِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ
“(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் ஈமான் கொள்வதில்லை.”
என்று அல்லாஹ் எங்களைப் பார்த்துக் கூறுகின்றான்.
எனவே, மறுமை நாள் ஒன்று தேவை என்பதை இந்த வசனங்கள் மூலமாக நாங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்கிறோம். அல்லாஹுத் தஆலாவை رحمان என்று சொல்கின்றோம், அவனை رحيم என்று சொல்கின்றோம். அவன் மிகவும் இரக்கமுள்ளவன் என்று சொல்கின்றோம். அந்த இரக்கம் சரியாக வெளிப்பட வேண்டும் என்றால் கியாமத் நாள் உண்டு பண்ணப்பட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அந்த رحمة லே பிரயோசனம் கிடையாது. இந்த உலகத்திலே நல்ல மனிதர்கள் எல்லோரும் பாதையருகே பூச்சி, புழுக்கள் போன்று கொல்லப்படுவதாக இருந்தால், சிறைகளிலே 30 வருடம் 40 வருடம் வாழுவதாக இருந்தால் ஏச்சுப் பேச்சுகள் கேட்பதாக இருந்தால், பைத்தியக்காரன், சூனியக் காரன் என்று நல்லமனிதர்களுக்கு பெயர் சூட்டப்படுவதாக இருந்தால், பெரும் அநியாயக் காரர்கள் நோபல் பரிசிற்குரியவர்களாக மாறுவதாக இருந்தால் அதனை விடவும் பெரிய அநியாயமான உலகம் வேறு எங்கு இருக்க முடியும்?. எனவே சரியான கூலி கிடைப்பதற்கான ஒரு நீதி மன்றம் உண்டு பண்ணப்படுவது தவிர்க்க முடியாததாக மாறுகின்றது.
உலகத்திலே ஆயிரக் கணக்கான இலட்சக்கணக்கான மனிதர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலர்கள் இவ்வுலகத்திலே நிம்மதியாக மரணிப்பதைப் பார்க்கின்றோம். இவர்களைக் கூடினால் ஒரு தடவை கொலை செய்து அவர்களைத் தண்டிக்கலாம். இந்த உலகத்திலே தண்டனை வழங்க முடியவே முடியாது. கியாமத் நாளிலே அல்லாஹ் எழுப்புவான். இவர்களுக்குரிய சரியான தண்டனை மிகச் சரியாக அவர்களுக்கு வழங்கப்படும். அல்லாஹ் கேட்கின்றான் أيحسب الإنسان أن يترك سدى மனிதன் நினைக்கின்றானா? அவனை நாங்கள், எந்த விதமான கேள்வி கணக்கும் கேட்காமல் வீணே விட்டுவிடுவோம் என்று நினைக்கின்றானா?அதாவது, அவனுடைய வாழ்க்கை பூச்சி புழுவினுடைய வாழ்க்கையைப் போன்று இவ்வுலகிலே நிறைவு பெறுவதற்கு விட்டு விடுவோம் என்று மனிதன் நினைக்கிறானா? என்று தான் அந்தக் கேள்வி அமைந்து காணப்படுகின்றது.
சரியான நீதிமன்றம்
அல்லாஹுத் தஆலாவுடைய நல்லடியார்களே!
இந்த உலகத்து நீதி மன்றங்கள் போலியானவை. அங்கே சொல்லப்படுகின்ற சாட்சிகள் எல்லாம் பொய்யானவை. பெரும்பாலும் அங்கே நீதிபதிகளும் கூட சில நேரம் லஞ்சம் வாங்கக் கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. அரசின் அழுத்தங்களுக்கு உள்ளாகின்ற சந்தர்ப்பங்களைப் பார்க்கின்றோம். சொல்லப்படுகின்ற சாட்சிகள் எந்தளவு தூரம் நியாயமானவை என்பதை நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம். இலஞ்சத்துக்காக வாதாடுகின்ற பொய் வழக்கறிஞர்களைப் பார்கின்றோம். அப்படியாக இருந்தால் எப்படி சரியான தீர்ப்புக் கிடைக்கும்?.
அல்லாஹு தஆலா சொல்லுகின்றான்:-
اليوم تجزي كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب
அந்த மறுமை நாள் இருக்கிறதே அங்கு ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது சம்பாதித்துக் கொண்டதற்கான கூலி வழங்கப்படும். அதாவது,அது எதனை சம்பாதித்துக் கொண்டு வந்ததோ அதற்கான கூலி வழங்கப்படும். لا ظلم اليوم இன்றைய தினம் எந்த வித அநீதியும் கிடையாது. அநீதி என்ற பெயருக்கே நாளை மறுமையில் இடம் கிடையாது என்று குர்ஆனிலே செல்லிவிட்டு, அல்லாஹ் மிகவும் விரைவாக விசாரணை செய்யக் கூடியவன் سريع الحساب அவனுக்கு கால நேரம், அவகாசம் எல்லாம் தேவையில்லை அவசரமாக விசாரித்து முடிப்பான் என்ற கருத்தையும் அல்லாஹு தஆலா சொல்கின்றான்.
எனவே அல்லாஹ்வுடைய நல்லடியார்களே!
இந்த உலகத்திலே நாங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறோமா? கவலைப்பட தேவையில்லை. இந்த உலகம் நீதிக்குரிய இடமல்ல. இது உண்மையில் போலியான இடம் என்பதை மறந்து விடக் கூடாது. அல்லாஹு தஆலா சாட்சிகளைப் பற்றியும் சொல்லுகின்றான்.
وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْــٴًـــا وَّلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ
“இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.”
இந்த வசனத்தில் அல்லாஹ் என்ன சொல்ல வருகிறான் என்றால், ‘நாளை மறுமை நாள் எப்படிப் பட்டதென்றால் அந்த நாளை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். அந்த நாளையிலே எந்த ஒரு ஆத்மாவும், எந்த ஒரு ஆத்மாவுக்கும் பகரமாக இன்னொரு ஆத்மாவை நாங்கள் எடுக்கமாட்டோம். யார் குற்றத்திலே ஈடுபடுகின்றார்களோ அத்தகையவர்களை மாத்திரம் தான் நாங்கள் தண்டிப்போம் அவர்களுக்கு எந்த விதமான உதவியும் செய்யப்படமாட்டாது. யாருடைய சிபாரிசுகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.’ என்று அந்த நீதிமன்றத்தின் மிகவும் சிறப்பான தன்மையை அல்லாஹுத் தஆலா விளங்கப்படுத்துகிறான்.
எனவே அங்கு இலஞ்சத்துக்கு இடம் கிடையாது. பொய் சாட்சிக்கு இடம் கிடையாது, தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடையாது என்பதை அந்த இடத்திலே அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான்.
لِيَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً يَّوْمَ الْقِيٰمَةِۙ وَمِنْ اَوْزَارِ الَّذِيْنَ يُضِلُّوْنَهُمْ بِغَيْرِ عِلْمٍ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ
“கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்); இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?.”
அந்த மறுமை நாள் எப்படிப் பட்டதென்றால் பாவிகள் தங்களுடைய பாவங்களை சுமப்பார்கள். மாத்திரமல்ல இவர்கள் யாரையெல்லாம் வழிகெடுத்தார்களோ அவர்களுடைய பாவங்களையும் அவர்கள் சுமப்பார்கள். பாருங்கள் எவ்வளவு தூரம் அழகானதொரு நீதிமன்றம். எவ்வளவு நியாயமான நீதிமன்றம். இந்த உலகத்திலே ஒருவர் குற்றம் செய்து விட்டால் அவரது குற்றத்தை மாத்திரம் தான் நாங்கள் பார்த்து அவரை தண்டிப்போம். ஆனால் அவர் செய்கின்ற அந்த தவறைப் பார்த்து யாரெல்லாம் கெட்டுப் போனார்களோ அவர்களை அவர்களை பற்றி நாம் யோசிப்பதில்லை. பாருங்கள் ,ஒருவன் ஒரு திரைப்பட மாளிகையை நடாத்துகின்றான் .மற்றொருவன் கிளப் ஒன்றை நடாத்துகிறான் என்றால் அவனை சில நேரங்களிலே சட்டத்தின் முன் நிறுத்தலாம். ஆனால் அந்த கிளப்பின் மூலமாக யாரெல்லாம் கெட்டுப் போகிறார்களோ அவர்களுடைய தீமைகள் எல்லாம் பாவத்திற்கான ஆரம்ப கருத்தாக்களாக இருந்தவர்கள் மீது சுமத்தப் படுவது உலகத்து சட்டமல்லவே. ஆனால், நாளை மறுமை அப்படியல்ல. ஒருவன் கெட்டுப்போவது மட்டுமல்ல, அவன் கெட்டுப்போனதனால் யாரெல்லாம் கெட்டார்களோ, அவர்களுடைய தீமையும் அவன் மீது சுமத்தப்படும். அவ்வளவு தூரம் நியாயமான நீதி மன்றமாக அது இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
அருமை நண்பர்களே! சகோதரர்களே!
எங்களுடைய இரண்டு தோள் புயங்களிலும் இருந்து அந்த இரண்டு மலக்குகளும் வினாடிக்கு வினாடி பதிவு செய்து கொண்டிருப்பது வீணுக்கா? தேவையில்லாமலா?
اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ
“(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ
“கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.”
அந்த மனிதன் எந்த ஒரு வார்த்தையை உதிர்த்தாலும் அதனைப் பதிந்து கொள்வதற்காக மலக்குகள் இருக்கிறார்கள் என்று குர்ஆன் சொல்லிக் காட்டுகின்றது.
அல்லாஹ்வுடைய நல்லடியார்களே! அந்த மலக்குகள் இருவரும் தகவல்களை சேகரிப்பது வீணுக்காக அல்ல. இந்த உலகத்து நீதிமன்றங்களுக்கு கொடுப்பதற்காக அல்ல أحكم الحاكمين ஆகிய அல்லாஹ்வுடைய நீதி மன்றத்திலே சமர்ப்பிப்பதற்கு. அந்த நேரத்திலே எங்களுடைய பட்டோலைகளை அல்லாஹு தஆலா விரித்துக் காட்டுவான். நாங்கள் சொல்வோம்:-
وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَى الْمُجْرِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا فِيْهِ وَ يَقُوْلُوْنَ يٰوَيْلَـتَـنَا مَالِ هٰذَا الْـكِتٰبِ لَا يُغَادِرُ صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً اِلَّاۤ اَحْصٰٮهَا ۚ وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا
“இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.”
எனவே, குற்றவாளிகள் அங்கலாய்கின்ற ஒரு காலம் வரும் என்பதை அல்லாஹ்த் தஆலா சொல்லிக் காட்டுகின்றான்.
எனவே சகோதரர்களே!
இந்த கியாமத் நாள் எங்களுடைய அடிப்படையான நம்பிக்கைகளில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது. அதனை நாம் நம்ப வேண்டும். அது வருவது சாத்தியம் தான். அது கொண்டுவரப்படுவது எம்முடைய அடிப்படைத் தேவையாகவும் இருக்கிறது. அதனை நாம் ஆழமாக விசுவாசிக்கின்ற அளவுக்கு நாங்கள் தியாகிகளாக இருப்போம், பாவங்களை விட்டும் தூரமாகுவோம், மன நிறைவுள்ளவர்களாக இருப்போம். அதுதான் எங்களுக்கும் காபிர்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.
எனவே யா அல்லாஹ்! எங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவாயாக! கியாமத் நாள் மீதான நம்பிக்கையை ஆழமாக எங்களுடைய உள்ளத்திலே பதித்து விடுவாயாக, நாங்கள் யாருக்கெல்லாம் அநியாயம் செய்திருக்கிறோமோ அவர்களிடத்திலே சென்று மன்னிப்பு கேட்டு எங்களுடைய பாவங்களுக்கு நிவாரணம் தேடிக் கொள்ளக் கூடிய மனோபாவத்தை எங்களுக்குத் தந்தருள் புரிவாயாக.
யா அல்லாஹ், எங்களுடைய தொழில் துறவுகளிலே பரகத் செய்வாயாக. கியாமத் மீது ஆழமாக விசுவாசம் கொண்டு அதன் அடிப்படையிலே حلال – حرام ஐ பேணக் கூடியவர்களாக எங்களை மாற்றிவிடுவாயாக. பாவங்களிலிருந்து பூரணமாகத் தூரமாகி, விலகிக் கொள்ளக் கூடிய பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக.
யா அல்லாஹ், எங்களுடைய உற்றார் உறவினர்களுடைய பாவங்களை மன்னித்து விடுவாயாக. வபாத்தாகின்ற சந்தர்ப்பத்திலே
لاإله إلا الله محمد رسول الله என்ற கலிமாவோடு மரணிக்கக் கூடிய பாக்கியத்தை தந்தருள்புரிவாயாக, உயர்தரமான பிர்தௌஸ் என்ற அந்த சுவர்க்கத்தை எங்களுக்கு நஸீபாக்கி வைப்பாயாக ரஸுலுல்லாஹ்(ஸல்) அவர்களுடைய ஷபாஅத்தை எமக்கு நஸீபாக்கி விடுவாயாக آمين آمين யாரப்பல் ஆலமீன்.




