ஆசிரியரை நோக்கிய எமது கடமைகள்

ஆசான்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் கற்று பல பரீட்சைகளளுக்கு முகம்கொடுத்து சித்தியடைந்திருப்பர்.

பல நூறு நூல்களை,ஆக்கங்களை வாசித்திருப்பர்.

எமக்கு சிறப்பாகக் கற்பிக்க வேண்டும் என்பதற்காக பல கருத்தரங்குகளில் பங்கேற்றிருப்பர்.

பாடங்களுக்கு சிரமப்பட்டு தயாராகுவர்.

எமது பயிற்சிக் கொப்பிகளையும் ஒப்படைகளையும் இராப்பகல் பாராமல் திருத்தியிருப்பர்.

கற்பிப்பது என்றால் அது இலேசான காரியமல்ல.தாம் கற்ற அனைத்தையும் அவர்கள் கற்பிப்பதில்லை. சாறு பிழிந்து மாணவர்களது வயது அறிவுப் பிண்ணனி பார்த்தே அவர்கள் கற்பிப்பர்.

அருகருகே வகுப்புக்கள் இருந்தால் அயல் மாணவர்களது கூச்சல்களுக்கு மத்தியில் ஓர் அசாதாரண தைரியமெடுத்துத் தான் கற்பிக்க வேண்டும்.

மெல்லக் கற்போர், குறும்புத் தனம் கொண்டோர் என பல ரகங்களைக் கொண்ட வகுப்பில் கற்பிப்பது ஆசிரியருக்கு சவால்மிக்க பணிதான்.

பெரும்பாலும் ஆசிரியர் கதிரையில் அமர்ந்து கற்பிப்பதில்லை.நடமாட்டம், அங்க அசைவுகள் கேள்வி எழுப்பல்கள் எல்லாம் இருக்கும்.

எனவே ஆசானின் பணிக்கு நிகரில்லை.

ஆசிரியர் மற்றும் கல்வியாளரை நோக்கி கடமையான விஷயங்களில் சில:

1-அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது, அவரை கண்ணியப்படுத்துவது மற்றும் மதிப்பது. அவர் எமது தந்தையின் ஸ்தானத்தில் இருக்கிறார்.

2-அவரிடமிருந்து பயனடைய ஆர்வமாக இருப்பது. அவர் நாம் வைத்திருக்காத பல விஷயங்களை வைத்திருக்கிறார்,நம்மிடம் இல்லாதது அவரிடம் இருக்கிறது.

3- நல்ல மற்றும் சிறந்த செயல்களில் அவரை முன்மாதிரியாக பின்பற்ற ஆர்வமாக இருப்பது.

4- அவருடைய மானத்தை பாதுகாப்பது மற்றும் அவரைப் பற்றி புறம் பேசுவதை விட்டும் விலகி இருக்க ஆர்வமாக இருப்பது.

5- எமது துஆவில் அவருக்கும் ஒரு பங்கை வைப்பது. நிச்சயமாக மனிதன் தன் கப்ரில் அவனைச் சென்றடையும் அவனுடைய அமல்களில் ஸாலிஹான குழந்தையின் துஆவும் அடங்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மாணவன் ஸாலிஹான குழந்தையின் ஸ்தானத்தில் இருக்கிறான்.

6- அவர் தவறில்லாத மனிதர் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்வது. அவர் தவறிழைத்தால் அப்போது நாம்:

– தவறில் அவரை பின்பற்றாமல் அதை விட்டும் விலகி இருப்பது.

– அவருடைய தவறுகளையும் குறைகளையும் மறைப்பது, அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் இருப்பது, மற்றவர்கள் எமது முன்னிலையில் அவரை விமர்சிப்பதை விரும்பாமல் இருப்பது.

– அவர் தவறு செய்யும் விஷயத்தில் அவருக்காக சாக்குப்போக்கை தேடுவது.

– வயது மற்றும் அந்தஸ்தின் வேறுபாட்டை கவனத்தில் கொண்டு, அதற்கு நல்ல மற்றும் பொருத்தமான முறையை தேர்ந்தெடுக்க ஆர்வமாக இருந்து, அவருக்கு நஸீஹத் செய்து அதை சுட்டிக்காட்டுவது.

7-மனிதர் என்ற வகையில் அவருடைய ஆளுமையில் குறைபாட்டின் சில அம்சங்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்வது. எந்த மனிதனும் குறைகளில் இந்து விடுபடமாட்டார்.

அன்னப் பறவை தண்ணீரிலிருந்து பாலை பிரித்தெடுத்துப் பருகுவதுபோல் ஆசான்களது நல்ல பகுதிகளை மாத்திரம் எடுத்துக் கொள்வோம்.

நல்லவற்றில் அவர்களைப் பின்பற்றி அவர்களுக்காக துஆச் செய்வோம்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top