ஆசான்களது அமானிதங்கள்

வடமத்திய மாகாண பாடசாலை அதிபர்களுக்கான தேசிய ஷூரா சபையின் திறன்விருத்தி செயலமர்வு இன்று அனுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மொழி மூல பாடசாலை அதிபர்கள் சுமார் 75 பேர் கலந்துகொண்டனர்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, வடமத்திய மாகாணக் கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து தேசிய ஷூரா சபை இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தது.

கல்வி அமைச்சின் புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் தொடர்புடைய விடயங்களை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பாடசாலை நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதும் அதிபர்கள் என்ற வகையில் தமது பணிகளை இறைஅச்சத்துடனும் அமானித உணர்வுடனும் மேற்கொள்ளத் தூண்டுவதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.

தேசிய ஷூரா சபையின் பூரண அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்வி உயர்கல்வி அமைச்சினதும் வடமத்திய மாகாண தமிழ் பிரிவினதும் பூரணமான அங்கீகாரமும் வழிகாட்டல்களும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒருவரது ஆளுமை உருவாக்கத்தில் பல காரணங்களுக்குப் பங்குண்டு.

  1. பெற்றாரரும் வீட்டு சூழலும்
  2. ஆசான்களும் முஅல்லிம்களும் அவர்கள் கற்பிக்கும் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்
  3. கலாநிலையங்களது கலைத்திட்டங்கள்
  4. சமூகசூழலும் நண்பர்களும்
  5. ஊடகங்கள்

என்று அவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் ஏனைய எக்காரணியை விட பாடசாலை, மத்ரஸா, ஆசிரியர், முஅல்லிம், பாட விதானம், பாடத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தக் காரணிக்கு ஆளுமை உருவாக்கத்தில் முதற்தரப் பங்கிருப்பதை எவரும் மறுக்கமுடியாது. ஏனைய காரணிகள் எவ்வளவு மோசமாக அல்லது பலவீனமாக இருந்தாலும் இக் காரணி பலமாக ஆரோக்கியமாக வினைத்திறன் மிக்கதாக இருந்தால் அனைத்தையும் மிகைக்கவும் சீர்செய்யவும் முடியும்.

ஒரு மாணவன் பாடசாலை என்ற அற்புதமான பயிற்சிப் பாசறையில் 5 வயதில் வெண்மை உள்ளத்தோடு நுழைக்கப்பட்டு அங்கு 13 வருடங்கள் கற்கிறான். தொழிற்சாலைக்குள் மூலப் பொருள் நுழைக்கப்பட்டு 13 வருடங்களின் பின்னர் நல்லதொரு முடிவுப் பொருளாக வருகிறது போன்ற நடவடிக்கையாக அவனை முழுமையான ஆளுமை படைத்தவனாக உருவாக்கும் பணி அங்கு நடைபெற வேண்டும்.

  • அறிவு Knowledge
  • திறன்கள் Skills
  • மனப்பாங்கு Attitude
  • நடைமுறை Practice

ஆகிய நான்கும் ஏக காலத்தில் வளர்க்கப்பட வேண்டும் என்பது நவீன கல்வியாளர்களது எதிர்பார்ப்பாகும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது கல்வியின் இலக்குகளாக,

  • நல்ல ஈமான்
  • தூய இபாதத்கள்
  • நற்குணங்கள்
  • தெளிந்த ஆழமான அறிவு
  • திறன் விருத்தி

போன்றவற்றைக் கொண்டுள்ளது.

தற்கால கலாநிலையங்களில் இவ்விலக்குகள் அடையப் பெற்ற நிலையில் மாணவர்கள் வெளியாகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு சிறுபான்மை நாடாக இருந்தாலும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு கல்வி வாய்ப்புக்களும் அது தொடர்பான உரிமைகளும் அதிகம்.பொதுக் கல்வியைப் பெற்றுக் கொள்வதுடன் தமது தனிப்பட்ட கலாசார பண்பாட்டுத் தனித்துவங்களை பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்கான பல ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன.

எமது முன்னோர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்ள அயராது பாடுபட்டுள்ளனர்.

  1. தனியான முஸ்லிம் பாடசாலைகள்
  2. முஸ்லிம் பாடசாலைகளுக்கான தனித்துவமான கலண்டர்
  3. முதலாம் வகுப்பில் இருந்து பல்கலைக்கழகம் வரை இஸ்லாம் இஸ்லாமிய நாகரிகம் அரபு போன்ற பாடங்கள்
  4. அஹதிய்யா அல்ஆலிம் பரீட்சைகள்
  5. இத்தா விடுமுறை
  6. பாடசாலையில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிய அனுமதி
  7. வெள்ளிக்கிழமைகளில் அரச பரீட்சைகள் 2 மணிக்கு ஆரம்பிப்பது.

ஆனால் அண்மைக் காலத்தில் சில விடயங்களில் சில இனவாதிகள் இடையூறுகளைச் செய்தாலும் பொதுவாக எமது நாட்டு நிலை எமக்கு மிகவுமே சாதமாக உள்ளதை எவரும் மறுக்க முடியாது. எமது மாணாக்கர்களை இஸ்லாமும் நாடும் எதிர்பார்க்கும் வகையில் உருவாக்கிக் கொள்ள சகல வாய்ப்புகளும் உள்ளன.

இந்த வாய்ப்புக்கள் அனைத்தும் நாம் பெற்றுள்ள அமானிதங்களாகும். அல்லாஹ்வின் அருள்களாகும். அவற்றை நாம் உரியமுறையில் பயன்படுத்தினோமா என நிச்சயமாக அல்லாஹ் மறுமையில் கேள்வி கணக்குக் கேட்பான் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

ஈமானுடன் வாழ்ந்தோமா, தொழுதோமா, நோன்பிருந்தாமா, எம்மில் உள்ள தனவந்தர்கள் ஸகாத் ஹஜ் கடமைகளை நிறைவேற்றினார்களா என்று விசாரிப்பது போலவே சமூகத்தின் பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றினார்களா? என்றும் கட்டாயமாக விசாரிப்பான்.

  • பணம்
  • உடற்பலம்
  • அதிகாரம்
  • அனுபவம்
  • திறமைகள்
  • அறிவு

போன்றவற்றை ஒருவர் பெற்றிருந்தால் அவற்றுக்காக அவர் உரிய முறையில் மறுமையில் கணக்குக் காட்ட வேண்டும்.

ஓர் ஆசிரியர் பெரும்பாலும்,

சாதாரண தர பரீட்சையில்,

உயர்தர பரீட்சையில்,

பட்டப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பார்.

இன்னும் பலர் டிப்ளோமாக்களை செய்திருப்பர்.

பலர் பயிற்சிக் கல்லூரியில் படித்திருப்பார்.பல பயிற்சிக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருப்பார்.

அரசாங்க பாடசாலையில் கற்பிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்புக்களை அல்லாஹ் சமூகத்திலுள்ள எல்லோருக்கும் வழங்குவதில்லை. இவர்கள் தமக்குக் கிடைத்த இந்த அமானிதங்களை மிகச் சிறப்பாகவும், சமூகத்தின் எழுச்சிக்காகவும் அடுத்த பரம்பரையை தயார்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான்.அவை துஷ்பிரயோகம் செய்யப் பட்டால் அல்லாஹ்வின் தண்டனை கிடைக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ما مِنْ عبدٍ يسترْعيه اللهُ رعيَّةً ، يموتُ يومَ يموتُ ، وهوَ غاشٌّ لرعِيَّتِهِ ، إلَّا حرّمَ اللهُ عليْهِ الجنَّةَ

“எந்தவொரு அடியாருக்கு அல்லாஹ் குடிமக்களின் பொறுப்பை வழங்கி, அவர் அவர்களை நன்மையை நாடி (அவர்களின் நலனில் அக்கறை கொண்டு) பாதுகாக்கவில்லையாயின், அவர் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்'”(7150)

இதற்கு ஒருபடி மேலே போய் பார்த்தால் இவர்கள் மாதாமாதம் அரச சம்பளம் பெறுகிறார்கள்.ஒய்வு பெற்ற பிறகு ஊதியமும் கிடைக்கிறது. ஆனால் அரசு எதிர்பார்க்கும் விதத்தில் ஆசிரியர்கள் செயல்படாத போது அரசுக்கு அவர்கள் துரோகம் செய்கிறார்கள். சம்பளம் ஹராமாகிறது.

இனி தற்கால பாடசாலைகளது நிலவரத்தை நோக்கினால் மிகவுமே கவலைக்கிடமாக உள்ளது.

பல பாடசாலைகளில் தகுதியான அதிபர் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.

இருப்பவர்களை தமது பணிகளை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறார்கள் என்ன கேள்வி எழுகிறது

பாடசாலை அபிவருத்திச் சங்கங்களிலும் பழைய மாணவர் அமைப்புகளிலும் இருப்போரது கல்வித்தரமும் மனப்பாங்குகளும் எதிர்பார்க்கும் நிலையில் இருப்பதில்லை.இருந்தாலும் பாடசாலை நிருவாகத்துடன் சுமூகமான உறவு இருப்பதில்லை.

பாடசாலைக்குள் அரசியல் பொருளாதார நலக் குத்து வெட்டுக்கள் நிலவுவதுண்டு.

என்று கூறிக்கொண்டே போகலாம்.

அ. அல்லாஹ் ஆசான்களுக்கு பல அமானிதங்களை வழங்கியுள்ளான்.

ஆ. அரசு சம்பளம் வழங்குகிறது.

இ. பாடசாலையில் அரசாலும் தனவந்தர்களாலும் வழங்கப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டங்கள் உட்பட ஏகப்பட்ட உள்ளகக் கட்டமைப்புக்கள் இவர்களை நம்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த அதிபர்களும் ஆசிரிய ஆசிரியைகளும் மிகப் பெரிய பாரங்களை சுமத்துள்ளார்கள். என்பதனால் உலகில் இருப்பவர்களுக்கு உள்ளேயே அவர்கள் அதிகம் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவர் என்று கூறினால் மிகையல்ல.

அல்லாஹ் தான் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

ஆசான்கள் தம்மளவில் சிறந்தவர்களாகவும் மாணவர்களை சிறப்பாக நடாத்துபவராகளாகவும் இருக்க வேண்டும்.

ஏனெனில் ஆசான்களின் ஆசான் நபி (ஸல்) அவர்கள்:

إنَّ اللهَ لم يبعثْني مُعنِّتًا ، و لا مُتَعنِّتًا ، و لكن بعثني مُعلِّمًا مُيَسِّرًا

“நிச்சயமாக அல்லாஹ் என்னை கஷ்டம் கொடுப்பவனாகவோ, கடினமாக நடப்பவனாகவோ அனுப்பவில்லை, மாறாக என்னை கற்றுக்கொடுப்பவனாகவும், எளிதாக்குபவனாகவும் தான் அனுப்பியுள்ளான்.”(முஸ்லிம் 1478) எனக் கூறினார்கள்.

ஆனால் இந்த ஆசான்கள் தமது பணியை அல்லாஹ்வுக்காக என்ற நல்லெணத்துடன் சிறப்பாக மேற்கொண்டால் இவர்களை விடவும் பாக்கியசாலிகள் வேறு யாருமில்லை. இவர்கள் கற்பித்த அறிவு பரம்பரை பரம்பரையாக நகர்த்தப்படும். இவர்களால் பயனடைந்த அனைவருக்கும் கிடைக்கும் நன்மையும் இவர்களுக்கும் கிடைக்கும். இவர்கள் இறந்த பிறகும் இவர்களுக்கு நன்மைகள் வந்துகொண்டே இருக்கும். இவர்களால் பயனடைந்த அனைவரது துஆக்களும் இவர்களுக்குக் கிட்டும்.

கற்பித்தல் பணியை சீரும் சிறப்புமாக மேற்கொள்ளும் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top