விடுமுறையும் சீனாவில் விவாகரத்தும்
(வீட்டு சூழலை இஸ்லாமிய மயப்படுத்தலுக்கான சில வழிகாட்டல்கள்)
அஷ்ஷைக் பளீல் நளீமி
Divorce rate spikes across China after couples spend too much time together during corona virus home quarantine( Sunday Times paper 15.3.2020)
“கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக வீட்டில் தனிமைப்படுத்தலுக்காக கணவன் மனைவியான ஜோடிகள் அளவுக்கு அதிகமான நேரத்தை ஒன்றாக கடத்துவதால் சீனாவில் விவாகரத்து விகிதாசாரம் அதிகரித்துள்ளது”
என்ற தலைப்பில் மேற்படி பத்திரிகைச் செய்தி ஒரு ஆக்கத்தை வெளியிட்டிருக்கிறது.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் இவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடும் போது இது பெரிய அதிகரிப்பாகும் என்றும் அந்த தகவல் கூறுகிறது.
அப்படியாயின் கணவன் மனைவியாக ஒன்றிணைந்து வாழும் குடும்ப வாழ்வின் குறிக்கோள் தான் என்ன? கணவனும் மனைவியும் பிரிந்து வாழும் அளவுக்கு மனக்கவலை அதிகரித்திருக்க வேண்டும். சேர்ந்து ஒன்றித்து வாழும் அளவுக்கு அன்பும் பாசமும் பிணைப்பும் வலுவடைந்திருக்க வேண்டும். ஆனால் இது என்ன வேடிக்கை?
இஸ்லாத்தைப் பொருத்தவரை வீடும் அதன் சூழலும் அதனை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் குடும்பக் குவலயமும் மனதுக்கு சந்தோஷத்தை தரவேண்டும், உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அல்லாஹ் அமைத்திருக்கிறான்.
அல்குர்ஆனில் அவன் :-
“உங்களது வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு அமைதியுடன் வாழும் இடங்களாக ஆகியிருப்பது அவனது அருளின் பாற்பட்டதாகும்” என்று கூறுகிறான்.
அங்கு ‘ஸகன்’ அதாவது அமைதி எனப்படும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது. வீடு என்பது மானம், கற்பொழுக்கம்,சொத்து சுகங்கள் போன்றவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கும் உள்ளத்திற்கு அமைதியையும் சாந்தத்தையும் தருவதற்கான இடமாகும்.
எங்கு சென்றாலும் காணமுடியாத நிம்மதியையும் சந்தோசத்தையும் தரக்கூடிய இடமாக வீடு இருக்க வேண்டுமென்பதே அல்லாஹ்வுடைய நோக்கமாகும்.
வீடில்லாமல் அகதிமுகாம்களிலும் தெருவோரங்களிலும் வசிப்பவர்களுக்கு தான் வீட்டின் உண்மையான பெறுமதியை உணர்ந்து கொள்ள முடியும். கடும் குளிர்,சூடு, விஷஜந்துக்கள், கள்வர்கள் போன்ற சவால்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் படும்பாடு அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
பிரயாணம் சென்ற ஒருவனுக்குத் தான் வீட்டின் பெறுமதி சரியாகத் தெரியும் என்பதை பின்வரும் நபிமொழி காட்டுகிறது
“பயணம் என்பது வேதனையின் ஒரு பகுதியாகும். உங்களில் ஒருவரது உணவையும் பானத்தையும் தூக்கத்தையும் அது தடுக்கிறது. ஒருவர் பயணத்தில் தனது தேவையை முடித்துக் கொண்டவுடன் தனது குடும்பத்தாரிடம் சீக்கிரமாக வரட்டும்”
(السفر قطعة من العذاب، يمنع أحدكم طعامه وشرابه ونومه، فإذا قضى نهمته فليعجل إلى أهله)
رواه البخاري.١١٧
எனவே, அமைதி தரும் இடமாக வீட்டை ஒழுங்குபடுத்துவது அவசியமாகும். ஏனென்றால் அது சமூக வாழ்வின் அடித்தளமாகும்.அஸ்த்திவாரமாகும்.அது பலமாக இருக்கும் அளவுக்கு சமூகமும் பலமாக இருக்கும்.அது பலவீனப்படும் அளவுக்கு சமூகம் பலவீனப்படும். முதல் பள்ளிக்கூடம் வீடு தான். சமூகத்தின் கருவரை என்று கூட அதனைச் சொல்லலாம். இன்றைய நல்ல தலைவர்கள், அறிஞர்கள், மகான்கள், நல்ல தம்பதியர் அங்கிருந்து தான் உருவாகியிருக்கிறார்கள்.
அமைதியான வீட்டு சூழலை உருவாக்குவது எப்படி?
ஒரு வீட்டை அழகான முறையில் கட்டுவதாலோ அதன் முன்னால் பூமரங்களை நாட்டுவதால் மாத்திரம் அமைதி தரும் இடமாக மாற்றியமைக்க முடியாது.
பின்வரும் நிபந்தனைகள் கவனிக்கப்பட வேண்டும்.
1.அந்த வீட்டில் வாழுவோர் நல்லவர்களாக இருக்க வேண்டும். அதாவது குடியிருக்கும் கணவனும் மனைவியும் மற்றோரும் பொருத்தமானவர்களாக நல்லவர்களாக இருக்கவேண்டும்.
எனவே, திருமணத்துக்கு முன்பிருந்தே இது பற்றி திட்டமிட்டிருக்க வேண்டும். கணவன்-மனைவி தெரிவில் மார்க்கமும் பண்பாடும் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். எனவேதான் நபியவர்கள் “மார்க்கபக்தியுள்ள பெண்ணை அடைந்து கொள்” என்று கூறினார்கள். கணவனாக வருபவரைப் பொறுத்தவரை மார்க்கமும் நம்பிக்கை நாணயமும் உள்ள ஒருவர் பெண் கேட்டு வரும் போது அத்தகையவருக்கே திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கருத்து வேறொரு ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கிறது. இது முதல் அடிப்படையாகும்.
2. வீடுகளிலே தொழுகை, குர்ஆன் ஓதல் போன்ற இபாதத்கள் இடம்பெறவேண்டும்.
“உங்களது தொழுகைகளில் ஒரு பகுதியை வீடுகளில் அமைத்துக் கொள்ளுங்கள். அவற்றை மண்ணறைகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.”
“அல்லாஹ் ஓர் அடியாருக்கு அருள் பாலிப்பானாக அவன் இரவில் எழும்பி தொழுது தனது மனைவியையும் எழுப்புவான்.அவள் மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீரைத் தெளிப்பான். அல்லாஹ் ஒரு பெண்ணுக்கு அருள் பாலிப்பானாக. அவள் எழுந்து தொழுது கணவனையும் எழுப்புவாள். அவன் மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீரைத் தெளிப்பாள்” என நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.”
رحم الله رجلاً قام من الليل فصلى وأيقظ امرأته ، فإن أبت نضح في وجهها الماء ، رحم الله امرأة قامت من الليـل فصلت وأيقظت زوجها فإن أبى نضحت في وجهه الماء “” رواه أبو داود والنسائي وابن ماجه وهـو في صحيح سنن أبي داود (1308
இங்கு கணவனும் மனைவியும் அல்லாஹ்வுடன் நெருங்கிய உறவைப் பேணுவதாகவும் இதற்காக பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
எந்த வீட்டில் அல்லாஹுத்தஆலா நினைவூட்டப்படுகின்றானோ அந்த வீட்டுக்கும் எந்த வீட்டில் அது இடம் பெறவில்லையோ அந்த வீட்டுக்கும் உதாரணம் உயிருள்ள உடம்புக்கும் மரித்த உடம்புக்குமான உதாரணமாகும்
என்றும் நபிகளார் கூறியிருக்கிறார்கள்.
அந்த வகையில் வீட்டில் இபாதத்கள் இடம் பெற்றால் அது அமைதிக்குரிய இடமாக, அல்லாஹ்வின் அருள் வருஷிக்கப்படும் இடமாக மாற்றப்பட்டு விடும்.
3. மேலும் ஒருவரது காரியங்களுக்கு மற்றவர் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வதுடன் சோம்பலைத் தவிர்த்து தத்தமது வேலைகளைத் தாமே செய்து கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) வீட்டில் என்ன செய்வார்கள் என்று ஆயிஷா நாயகியிடத்திலே ஒரு தடவை வினவப்பட்டது “தனது வீட்டாருக்கு உதவியாக இருப்பார்கள். தொழுகை நேரம் வந்தவுடன் தொழுகைக்காக போய்விடுவார்கள்’ என்று கூறினார்கள்.
وروى البخاري (676) عَنِ الأَسْوَدِ ، قَالَ: ” سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ – تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ – فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ ” .
நபிகளார் (ஸல்)அவர்கள் தனது வீட்டில் என்ன செய்தார்கள் என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் ஆயிஷா நாயகி (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள்:-” மனிதர்களில் ஒரு மனிதராக அன்னார் இருந்தார்கள். தனது ஆடையில் ஏதாவது ஒட்டியிருக்குமோ என்று பரிசோதிப்பார்கள். தனது ஆட்டில் பால் கறப்பார்கள். தனது வேலையைத் தானே செய்வார்கள்” என்று கூறினார்கள்.
مَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ فقَالَتْ: كَانَ بَشَرًا مِنَ الْبَشَرِ يَفْلِي ثَوْبَهُ ، وَيَحْلُبُ شَاتَهُ ، وَيَخْدُمُ نَفْسَهُ ” رواه أحمد (26194) ، وصححه الألباني في “الصحيحة” (671)
மேலும் ஒரு அறிவிப்பில் “நபியவர்கள் தனது ஆடையை தைத்துக்கொள்வார்கள். செருப்பை ஒட்டுப் போடுவார்கள். ஆண்கள் தமது வீடுகளில் எவற்றில் ஈடுபடுவார்களோ அவற்றில் ஈடுபடுவார்கள்” என்றும் வந்திருக்கிறது.
” كَانَ يَخِيطُ ثَوْبَهُ ، وَيَخْصِفُ نَعْلَهُ، وَيَعْمَلُ مَا يَعْمَلُ الرِّجَالُ فِي بُيُوتِهِمْ ” وصححه الألباني في “صحيح الجامع” (4937).
4. கணவனும் மனைவியும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அபூஹுரைரா (ரலி)அறிவிக்கிறார்கள் “நபி (ஸல்) அவர்கள் எந்தவோர் உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. விரும்பினால் சாப்பிடுவார்கள். இல்லாதபோது விட்டுவிடுவார்கள்.”
فعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: ” مَا عَابَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ ، إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِلَّا تَرَكَهُ ” رواه البخاري (3563) ، ومسلم (2064)
5.வீட்டில் இருப்போர் ஒருவர் மற்றவரை மதிக்க வேண்டும்.
பாத்திமா ரலி அவர்கள் நபியவர்களிடம் வந்தால் அவர்களை வரவேற்க நபியவர்கள் எழுந்து போவார்கள். அவர்களது கையைப் பிடித்து அவர்களை முத்தமிடுவார்கள். தானிருக்கும் சபையில் அவர்களை அமர வைப்பார்கள். பாத்திமா நாயகி இருக்குமிடத்திற்கு நபியவர்கள் வந்தால் பாத்திமா நாயகி எழுந்துவந்து அன்னாரது கையைப்பிடித்து அவர்களை முத்தமிடுவார்கள். தனது சபையில் அமர வைப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
فقد جاء الحديث عن عائشة يُبيّن كيفيّة تعامل النبيّ مع ابنته فاطمة، واحترامه لها، وإكرامه إيّاها، فقد قالت: (كانت إذا دخَلَتْ عليه قام إليها، فأخَذَ بيدِها وقبَّلَها وأَجْلَسَها في مجلسِه، وكان إذا دخَلَ عليها قامت إليه، فأَخَذَتْ بيدِه فقَبَّلَتْه وأَجَلَسَتْه في مجلسِها)
நபியவர்கள் தனது மனைவியாகிய ஆயிஷா(ரழி) அவர்களுடன் நடந்துகொண்ட விதம் பற்றி ஆயிஷா நாயகி பின்வருமாறு சொல்லுகிறார்கள்:-
“நான் ஹைளுடன் இருக்கும்போது நீர் பருகும் சந்தர்ப்பம் வந்தால் நான் பருகிய பாத்திரத்தை அவர்களுக்குக் கொடுப்பேன். எலும்பில் இருக்கும் இறைச்சியை எனது பற்களால் கடித்து எடுப்பேன்.என்னிடமிருந்து அதனை அவர்கள் எடுத்து நான் எனது வாயை வைத்த இடத்தில் அவர்கள் வாயை வைப்பார்கள்”
وقالت أيضاً (كنت أشرب وأنا حائض ،فأناوله النبي صلى الله عليه وسلم فيضع فاه على موضع فيَّ وأتعرق العَرَقَ فيتناوله ويضع فاهُ في موضع فيَّ ) رواه مسلم
ஆயிஷா நாயகி “நபியவர்கள் எந்த வேலைக்காரரையும் பெண்ணையும் அடித்தது கிடையாது” என்று கூறினார்கள்.
قالت عائشة رضي الله عنها (ما ضرب رسول خادماً ولا امرأة ) رواه مسلم.
.”வேலையாட்களை பற்றி அவர்கள் கூறியதாவது:- அவர்கள் உங்கள் சகோதரர்கள். உங்களது அதிகாரத்துக்குள் அவர்களை அல்லாஹ் தந்திருக்கிறான். நீங்கள் சாப்பிடுவதையே அவர்களுக்கும் சாப்பிடக் கொடுங்கள்.நீங்கள் உடுபதையே அவர்களுக்கும் உடுக்கக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களில் ஈடுபடும் படி அவர்களைப் பணிக்காதீர்கள். அவ்வாறு பணித்தால் அவர்களுக்கு உதவியாக இருங்கள்.”
هم إخوانكم ، جعلهم الله تحت أيديكم ، فأطمعوهم مما تأكلون وألبسوهم مما تلبسون ولا تكلفوهم ما يغلبهم فإن كلفتموهم فأعينوهم ” رواه مسلم .
“உங்களில் சிறந்தவர் உங்கள் குடும்பத்தாருக்கு சிறந்தவராவார். நான் உங்களுக்கு மத்தியில் எனது குடும்பத்தாருக்கு சிறந்தவனாக இருக்கிறேன்”
“خَيْرُكُمْ خَيْرُكُمْ لأهلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لأهلِي”.(سنن الترمذي)
ஆயிஷா நாயகி கூறுகிறார்கள்:- நபியவர்கள் எனக்கு எலும்பைத் தருவார்கள். அதில் எஞ்சியுள்ள இறைச்சியை நான் பற்களால் எடுத்து அதனை சூப்புவேன். பின்னர் அவர்கள் அதனை என்னிடமிருந்து எடுத்து மறுபக்கம் திரும்பி எனது வாய் பட்ட இடத்தில் அவர்களது வாயை வைப்பார்கள்” என்று கூறினார்கள்.
عائشة قالت: (كان رسول الله – صلى الله عليه وسلم- يعطيني العظم فأتعرّقه – أي: آكل ما بقي فيه من اللحم وأمصه – ، ثم يأخذه فيديره حتى يضع فاه على موضع فمي) رواه مسلم.
அபூஹுரைரா (ரழி)அவர்கள்:- “நபிகளார் (ஸல்) அவர்கள் எம்மிடம் வந்தார்கள். அவர்களது ஒரு புஜத்தில் ஹஸனும் மறுபுறத்தில் ஹுஸைனும் இருந்தார்கள்.இருவரையும் அவர்கள் மாறி மாறி முத்தமிட்டார்கள் .அவ்வாறு முத்தமிட்டுக்கொண்டே நாம் இருந்த இடத்துக்கு அவர்கள் வந்தார்கள்” என்று கூறுகிறார்கள்.
عن أبي هريرة رضي الله عنه قال: (خرج علينا رسول الله صلى الله عليه وسلم ومعه الحسن والحسين، هذا على عاتقه (ما بينَ مَنْكِبه وعُنُقِه) وهذا على عاتقه، وهو يلثم (يُقَبِّل)هذا مرة وهذا مرة، حتى انتهى إلينا، رواه أحمد وصححه الألباني.
6. நாவைக் கவனமாகப் பேணிக் கொள்வது:- வீட்டில் இருக்கும் போதுமட்டுமன்றி எங்கு சென்றாலும் யாரோடு உரையாடுகின்ற பொழுதும் நாம் நாவைப் பேணிக் கொள்ள வேண்டும். நாவைப் பேணிக் கொண்டால் மனித உறவுகள் பலப்படும். இனிமையான, இங்கிதமான பேச்சு, தேவையான பேச்சு, அளவான பேச்சு என்பன மனித உறவுகளைப் பலப்படுத்தும். அனாவசியமான பேச்சு, புறம், கோள், பிறர் மனதை புண்படுத்தும்படியான பேச்சு, அளவு மீறிய சப்தத்துடன் கூடிய பேச்சு பெருமைத் தனமான பேச்சு, பொய் பேசுவது போன்றன நாவின் விபரீதங்களாகும்.
நபி (ஸல்) அவர்கள்: ‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்”என்று கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
மனித உறவுகள் உடைந்து சிதைந்து போவதற்கு இவை காரணங்களாக அமைவதுடன் நரகத்திலும் மனிதர்களைத் தள்ளிவிடும்.
முஆத் இப்னு ஜபல் (ரலி)அவர்கள் நபியவர்களிடம் “என்னை சுவர்க்கத்தில் நுழைக்கக்கூடிய, நரகத்தில் இருந்து தூரமாக்கக் கூடிய செயலொன்றைப் பற்றி எனக்கு கற்றுத் தாருங்கள்” என்று வேண்டிக் கொண்ட பொழுது நபியவர்கள்:- அல்லாஹ்வுக்கு இபாதத் செய்வது, அவனுக்கு எதனையும் இணை வைக்காமல் இருப்பது, ஸகாத்கொடுப்பது, நோன்பிருப்பது, ஜிஹாத் செய்வது போன்ற பல்வேறுபட்ட வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் படி கூறினார்கள். கடைசியாக, “இவை அனைத்தும் ஒழுங்காக சிறப்பாக நிறைவேற வேண்டுமாயின் ஒரு விடையத்தை கற்றுத்தரவா?” என்று கூறிவிட்டு, தனது நாவைப் பிடித்து “இதனை கட்டுப்படுத்திக் கொள்வாயாக” என்றார்கள்.அதற்கு முஆத் அவர்கள் “நாம் பேசுகின்ற அனைத்துக்குமாக நாம் குற்றம் பிடிக்கப்படுவோமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “மனிதர்களை நரகத்தில் முகம் குப்புறத் தள்ளுவது அவர்களுடைய நாவுகளின் அறுவடைகளைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? என்று கேட்டார்கள்.
ثم قال : ” ألا أخبرك بملاك ذلك كله ؟ ” قلت : بلى يا نبي الله ، فأخذ بلسانه فقال : ” كف عليك هذا . فقلت : يا نبي الله ، وإنا لمؤاخذون بما نتكلم به ؟ قال : ثكلتك أمك يا معاذ ! وهل يكب الناس في النار على وجوههم أو على مناخرهم – إلا حصائد ألسنتهم ؟ ” رواه أحمد ، والترمذي ، وابن ماجه
எனவே, நாவின் விபரீதங்கள் மேற்கூறப்பட்ட நல்லமல்களைப் பாதிக்கும் என்ற கருத்தும் நாவைப் பேணிக் கொண்டால் இந்த அமல்கள் அனைத்தும் சீரும் சிறப்புமாக நிறைவேறும் என்ற கருத்தும் இந்த ஹதீஸின் மூலமாக வலியுறுத்தப்பட்டிக்கிறது.
“ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்ப தில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே, வீட்டிலிருக்கின்றவர்களுடன் உரையாடுகின்ற பொழுதும் நாவை பேணிக் கொள்வது மிக முக்கியமான கடமையாகும்.
வீட்டு சூழலை அமைதி பொருந்தியதாக மாற்றிக்கொள்வது எமது கையிலுள்ள பொறுப்பாகும். வீட்டில் இருப்பவர்களுடன் நல்லுறவைப் பேணி புன்முறுவலோடு இங்கிதமாக நடந்து கொண்டும் பொறுமையோடு நடந்து கொள்வதன் மூலமாக இதனை அடைந்து கொள்ள முடியும்.
அல்லாஹ்வைப் பயந்து எமது வீட்டு சூழ்நிலை ஆன்மிக மணம் கமழும் சூழலாக மாற்ற வேண்டும் என்ற திடசங்கற்பத்தோடு செயல்படுவதும், ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளை மிக அழகாக நிறைவேற்றுவதும் இதற்கு உறுதுணையாக அமையும்.
சுருக்கம்
- வீட்டில் இருக்கின்ற ஒவ்வொருவரும் அடிப்படையான ஆன்மிகப் பக்குவத்தோடு இருக்க வேண்டும்.
- மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பதோடு அன்போடும் இரக்கமாகவும் அவர்களை நடத்த வேண்டும்.
- வீட்டில் சுயநலமாக இருந்து விடாமல் வீட்டுக்குரிய பொறுப்புக்களையும் மற்றவர்களுக்குரிய பொறுப்புகளையும் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.
- குறிப்பாக நாவை பேணிக்கொள்ள உயர்ந்தபட்சமாக முயற்சிக்க வேண்டும்.
- இதுதவிர வீட்டை, தோட்டத்தை, சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கும் வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் வாசிப்பதற்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
- ஐவேளைத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுது கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
- இப்படி இருந்தால் அந்த வீடு அல்லாஹ்வின் அருளால் மனோரம்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சீனாவினது வீடுகளைப் போன்று இக்கட்டான சூழ்நிலைக்கு இஸ்லாமிய வீடுகள் ஒருபொழுதும் தள்ளப் படமாட்டாது.
இலங்கையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படப்போகிறது என்ற தகவலை கேட்ட மாத்திரத்தில் பலர் மதுபான சாலைகளுக்கு முன்னால் கூட்டம் கூட்டமாக நின்று மதுவைக் கொள்வனவு செய்த காட்சியை நாங்கள் மீடியாக்களில் பார்த்தோம். இப்படிப்பட்டவர்கள் வீடுகளில் தங்கி இருந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறோம்.
நாஸ்திகம், சடவாதம், சுயநலம், ஒழுக்க வீழ்ச்சி என்பவற்றில் சிக்கியிருக்கின்ற சமூகங்களுக்கு அது பொருத்தமாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு அது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல.
“ஸகன்’ எனும் உள் அமைதியைத் தரும் வீடுகளாக எமது வீடுகளை அமைத்துக் கொள்வோம்! அல்லாஹ் எமக்கு அருள்பாலிப்பானாக!




