அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)
அண்மையில் இலங்கையில் புத்தரின் சிலைகள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த சிலைகளை யார் உடைத்தார்கள் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. சிலவேளை அதனை முஸ்லிம்களிற் சிலர் செய்திருக்கலாம் என்ற ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது.
இதற்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் சர்வதேச தீவிரவாத அமைப்பினர் சிரியாவிலும் ஈராக்கிலும் இருக்கும் மக்பராக்களையும் பழைய நாகரீக சின்னங்களையும் உடைத்திருக்கிறார்கள். அதேபோன்று ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பாமியான் புத்தர் சிலையை உருக்குலைத்திருக்கிறார்கள்.
இவற்றை பார்க்கும் போது முஸ்லிம்கள் ஏனைய மத கிரியைகளை சகித்துக் கொள்வதில்லை; மத சுதந்திரத்திற்கு வேட்டு வைக்கிறார்கள் என்ற கருத்துக்களை இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் பரவலாகப் பேசி வருகிறார்கள். முஸ்லிம்களில் சிலர் அவ்வாறு செய்திருந்தால் அதற்கு இஸ்லாத்தின் அங்கீகாரம் இருக்கிறதா என்பதனையும் அறிய வேண்டியிருக்கிறது.
வேதாகமும் சிலை உடைப்பும்
எல்லாவற்ருக்கும் முன்பாக குர்ஆனில் மட்டுமன்றி வேதாகமத்திலும் சிலைகள் உடைக்கப்படுவது பற்றி வந்திருப்பதை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும்.
- “எசேக்கியா மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயத்தை அழித்தான். அவர்களின் ஞாபகக் கற்களையும்கூட உடைத்தான். அசெரியாவின் உருவத் தூண்களை வெட்டிப்போட்டான். மோசே செய்த வெண்கல பாம்பை உடைத்துப் போட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். இவ்வெண்கலப் பாம்பானது “நிகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அன்றுவரை இஸ்ரவேலர்கள் இந்த வெண்கலப் பாம்பை தொழுதுவந்தனர். (2 இராஜாக்கள்-04)”
- நான் உங்களது அந்நிய தெய்வங்களின் உருவச் சிலைகளை உடைத்தெறிவேன். சிலைகளை அழிப்பேன். அந்நிய தெய்வங்களை நினைவுப்படுத்தும் கற்களை நான் உடைத்தெறிவேன். உங்கள் கைளால் செய்யப்பட்டவற்றை நீங்கள் வழிபடமாட்டீர்கள்.( மீகா 5:13) (மேலும் பார்க்க (Jasher, chapters 11, Zechariah 13:2, – Ezekiel 30:13, – Isaiah 21:9)
எனவே கிறிஸ்தவர்களது வேதங்களிலும் இது விடயமாக கூறப்பட்டிருப்பதால் அவர்களும் இதற்கான விளக்கங்களை வளங்குவார்கள் என எதிர்பார்க்க முடியும்.
இது பற்றி குர்ஆனும் சுன்னாவும் என்ன சொல்கின்றன என்பதை நாம் அறிய வேண்டும்.
- நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னுடைய காலத்தில் இருந்த சிலைகளை உடைத்து சுக்குநூறாக்கியது மட்டுமல்லாமல் பெரிய சிலையின் கழுத்தில் கோடரியை கொழுவிட்டார்கள் என்ற கருத்து குர்ஆனில் வந்திருக்கிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஸூராக்களான அல் அன்பியா, அஸ்ஸாப்பாத் ஆகியவற்றில் இது பற்றி அல்லாஹ் கூறியுள்ளான்.
- மூஸா (அலை)அவர்கள் ஸாமிரி என்பவனால் செய்யப்பட்ட காளை மாட்டின் சிலையை எரித்து அதன் சாம்பலை கடலில் கரைத்து விடுவதாக எச்சரித்தார்கள். “மேலும்: நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த ‘நாயனைப்’ பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி)அதைக் கடலில் பரத்திவிடுவோம்” என்றார். (20:97)
- நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி எட்டாம் வருடம் மக்கா வெற்றியின் போது 360 சிலைகளை தன்னுடைய தோழர்களோடு சேர்ந்து உடைத்தார்கள்.
- நபியவர்கள் தன்னுடைய சஹாபாக்களில் சிலருக்கு சிலைகளை உடைக்குமாறு கட்டளையிட்ட பல நபிமொழிகளை நாம் காணமுடியும். ஒரு தடவை ரசூல் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுக்கு “எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல்(உருக்குலைக்காமல்) விட்டு விடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!’ என்று கூறினார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்1764), “அல்லாஹ் என்னை இரத்த உறவுகளைப் பேணி வாழ வேண்டும், சிலைகளை ஒழிக்க வேண்டும், இறைவன் ஒருவனே அவனுக்கு இணையாக எதுவுமில்லை எனும் செய்திகளுடன் (நபியாக) அனுப்பி வைத்தான்.” (ஸஹீஹ் முஸ்லிம் 1512)
இந்த ஆதாரங்களை பார்க்கின்ற பொழுது சிலைகளை உடைக்கலாம்; உடைக்க வேண்டும் என்ற கருத்துக்கு எம்மால் வரமுடியும்.
ஆனால் சற்று நிதானமாக இந்த விடயத்தை நாம் அணுக வேண்டி இருக்கிறது.
சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறியமைக்கான காரணம் மிகத் தெளிவானது. படைப்புக்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ் மாத்திரமே வணங்கப்பட வேண்டும். அவனுக்கு இணை வைப்பதும் வேறு தெய்வங்களை சிலைகளது உருவத்தில் வைத்துப் பூஜிப்பதும் மிக் கடுமையான குற்றங்களாகும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை தத்துவமாகும். எனவே, வணங்கும் நோக்கில் வைக்கப்படும் சிலைகள் உடைக்கப்பட்டன.
ஆனால்,வரலாற்றில் எல்லா சந்தர்ப்பங்களிலும் சிலைகள் உடைக்கப்படவுமில்லை. எல்லோரும் உடைக்கவுமில்லை என்ற உண்மையும் கவனிக்கப்பட வேண்டும்.
1.நபியவர்கள் மக்காவில் 13 வருடங்கள் இஸ்லாமிய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பொழுது கஃபதுல்லாவுக்குள் 360 க்கும் மேற்பட்ட சிலைகள் இருந்தன. ஆனால்,அவற்றில் எதனையும் அவர்கள் உடைக்கவுமில்லை. உடைக்கும் படி மற்றவர்களுக்கு கட்டளையிடவுமில்லை.தவாப் போன்ற வணக்கங்களை அவர்கள் அச்சிலைகள் இருக்கும் நிலையிலேயே நிறைவேற்றினார்கள்.
2.மதீனாவுக்கு வந்த பின்னர் அங்கும் ஏற்கனவே இருந்தவர்களால் வணங்கப்பட்டு வந்த சிலைகளை அவர்கள் உடைக்கவில்லை.
3.ஹி.7ல் அவர்கள் மக்காவுக்கு உம்ரா செய்ய வந்த போதும் எந்த சிலைகளையும் அகற்றவில்லை என்பதுடன் 360 சிலைகள் கஃபதுல்லவுக்குள் இருந்த வேளை தான் தவாப் போன்ற வணக்கங்களிலும் ஈடுபட்டார்கள்.
ஆனால்,ஹி.8ல் மாக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது அதற்குள் இருந்த சிலைகளை நபிகளார்(ஸல்) தனது தோழர்களோடு சேர்ந்து உடைத்தமைக்கான காரணங்கள் இரண்டு:
அ. கஃபதுல்லாஹ் என்பது அடிப்படையில் ஏகத்துவத்துக்கென்றே இப்ராஹீம் (அலை)அவர்களால் கட்டப்பட்ட ஆலயமாகும். ஏகத்துவத்தின் சின்னங்களான, பள்ளிகளின் தாயான அதற்குள் சிலைகளிருப்பதை எப்படியுமே அங்கீகரிக்க முடியாது.பின்னர் வந்தவர்கள் அதன் தூய்மைக்கு களங்கம் ஏற்படுத்தி, அதற்குள் சிலைகளை நிறுவி, ஓலம் விட்ட நிலையில் அதனை நிர்வானமாக வலம் வந்தமை மிகப்பெரிய தவறாகும்.எனவே, நபியவர்கள் அதன் பழைய நிலைக்கு அதனைக் கொண்டு வந்தார்கள்.அதிகாரம் கிடைத்தவுடன் நபி(ஸல்)அவர்கள் சிலைகளை உடைக்க ஒரு கணமும் தயங்கவில்லை.அவற்றை உடைத்த பின்னரே கஃபதுல்லாஹ்வுக்குள் நுழைந்தார்கள்.
ஆ.இஸ்லாமிய சாம்ராஜ்யதின் எல்லைக்குள் சிலைகள் இருந்து அவற்றை வணங்குவதற்காக எவரும் இல்லாத போதும் அவற்றை உடைப்பதனால் மிகப் பெரிய பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படாது என்ற நிலையும் இருந்தாலும் அவற்றை உடைக்கலாம்..
கலாநிதி ராகிப் அஸ்ஸர்ஜானி அவர்கள் கூறுவது போல் மக்காவில் நபி(ஸல்)அவர்கள் கழித்த 13 வருட காலத்தில் அந்த சிலைகளை உடைத்திருந்தால் முழு உலகமே அதற்கெதிராகக் கிளர்ந்து எழுந்திருக்கும்.முஸ்லிம்கள் வேரறுக்கப்பட்டிருப்பார்கள். சிலைகளை உடைக்க நபி(ஸல்) 21 வருடங்கள் பொறுமையாக இருக்க நேரிட்டது. அவர்கள் தனது தோழர்களை அனுப்பி லாத்,உஸ்ஸா சிலைகளை உடைத்தார்கள்.தாயிபில் இருந்த அரபிகளது பிரமாண்டமான ‘மனாத்’ எனும் சிலையை ஹி.9ல் தான் அதாவது அப்பிரதேசத்து மக்களான ஸகீப் கோத்திரத்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் தான் உடைத்தார்கள்.
‘ஸத்துத் தரீஆ’
இஸ்மாயில்(ஸலபி) அவர்கள் கூறும் போது, “நபித்துவத்திற்கு முன்னர் காபிர்கள் கஃபாவைப் புணர்நிர்மானம் செய்யும் போது சில குறைகளை விட்டனர். ஹலாலான பணம் இல்லாத காரணத்தினால் ஹிஜ்ர் இஸ்மாயில் பகுதியைக் கட்டாமல் விட்டனர். இப்றாஹீம் நபி கட்டிய அடிப்படையில் கஃபாவைக் கட்ட நபியவர்கள் விரும்பினார்கள்.கஃபாவை உடைத்து அவர்கள் பார்த்து வந்த அமைப்புக்கு மாற்றமாகக் கட்டினால் மக்கள் குழப்பம் அடைவார்கள் என்பதற்காக அந்த எண்ணத்தை நபியவர்கள் விட்டுவிட்டார்கள்.
‘உனது சமூகம் குப்ரில் இருந்து புதிதாக வந்தவர்கள் என்றில்லாவிட்டால் கஃபாவை உடைத்து இப்றாஹீம் நபியின் அத்திவாரத்தில்நான் கட்டியிருப்பேன். குறைஷிகள் கஃபாவை புணர்நிர்மானம் செய்யும் போது குறை விட்டுவிட்டனர் என நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்.(நூல்:
முஸ்லிம்- 398-1333, தாரமி- 1910, பார்க்க- புகாரி 126)
குறைஷிகள் குழப்பமடைவார்கள் என்பதற்காக நபி(ஸல்)) அவர்கள் தான் விரும்பிய ஒரு நலவை விட்டிருப்பதை அவதானிக்கலாம். இச்சம்பவம் விளைவுகள் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதேவேளை, கஃபாவில் இருந்த சிலைகளை மக்கா வெற்றியின் போது உடைக்கும் விடயத்தில் நபி(ஸல்) அவர்கள் விளைவுகள் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. அதிகாரம் வந்ததும் அடித்து நொருக்கினார்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
இஸ்லாமிய சட்டத்துறையில் ‘ஸத்துத் தரீஆ’ என்பது முக்கியமான ஒரு பகுதியாகும். ஒரு ஆகுமான, நல்ல விடயத்தைச் செய்தால் தீய விளைவு ஏற்படும் என்றிருந்தால் அந்தத் தீய விளைவைத் தவிர்ப்பதற்காக அந்த நல்ல,
ஆகுமான விடயத்தைத் தவிர்ப்பதையே ‘ஸத்துத் தரீஆ’ என்பார்கள்.” என அவர் எழுதுகிறார். ( http://www.ismailsalafi.com/alaippup-pani/)
‘இஸ்லாம் வெப்’ இணையத் தளத்தின் பத்வாவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :
ஒருவர் ஒரு தீமையை கையினால் தடுக்க நாடினால் அதனை விட பாதகமான விளைவு ஏற்படாது என்பதை ஊர்ஜிதப் படுத்திக்கொள்வது அவசியமாகும்.இப்ராஹிம் (அலை)அவர்கள் சிலைகளை உடைக்க முன்னர் இதனைக் கவனத்தில் எடுத்தமை இதற்கான ஆதாரமாகும்.(பத்வா இலக்கம்109123) அதேபோல் தீமையை தடுக்க வேண்டுமா அல்லது தடுக்காதிருக்க வேண்டுமா என்பது இஜ்திஹாதுக்கு உட்பட்ட விடயமாகும். சிலபோது தீமையை தடுப்பது வரவேற்கத்தக்கதாவும் சிலபோது தடுப்பது ஹராமாகவும் அமையும்.உதாரணமாக தீமையை தடுக்காதவர்களுக்குக் கூட அது பாதகமாக அமையலாம்.(பத்வா இலக்கம்:211738)
தீமையை தடுக்கும் முறை, யார் தடுப்பது, எவ்வளவு தடுப்பது போன்ற விடயங்களை சமூகத்திலுள்ள சாதாரண மக்கள் தீர்மானிக்க முடியாது.குறிப்பாக தடுக்கப்படும் தீமை இந்த சிலை உடைப்பது போன்ற மாபெரும் விவகாரமாக இருந்தால் அது பற்றி ‘இஜ்திஹாத்’ செய்யும் தரத்தை அடைந்தவர்களே தீர்மானிக்க வேண்டும்.
“அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்” (4:83)
என்ற வசனத்துக்கு விளக்கம் கூறும் அல்லாமா ஸஅதீ(ரஹ்)அவர்கள்:
முக்கியமான ஏதாவது விடயத்தில் ஒருவர் ஆய்வொன்றைச் செய்யும் பட்சத்தில் தன்னை விட அதற்குத் தகுதியான
ஒருவரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும்.அவர்களை அவர் முந்தக் கூடாது.அவ்வாறு செய்வது மிகப் பொருத்தமான தீர்வு பெறப்படுவதற்கும் தவறுகள் அதிகமாக தவிர்கப்படுவதற்கும் வழிவகுக்கும்”என்கிறார்.
இமாம் இப்னுல் கையிம் தனது ‘இஃலமுல் முவக்கியீன்’ இல் ஒரு விடயத்தில் ஈடுபடுவது அனுமதிக்கத்தக்கதாயினும்
கூட அது ஒரு ஹராத்துக்கு இட்டுச் செல்லுமாயின் அதனைச் செய்வது தடுக்கப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களைத் தருகிறார். அவற்றில் ஒன்று தான் முஸ்லிம் அல்லாதவர்கள் வணங்கும் தெய்வங்களை ஏச வேண்டாம் என்று கூறும் சூரா அன்ஆமின் 108 ஆம் வசனமாகும். பிற தெய்வங்களை ஏசுவது அல்லாஹ்வின் மீதான அன்பின் வெளிப்பாடாக இருந்தும், அவர்களது தெய்வங்களை இழிவுபடுத்துவதாக இருந்தாலும் அந்த நடவடிக்கை
அல்லாஹ் ஏசப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதனால் அல்லாஹ் அதனை ஹராமாக்கியுள்ளான்.ஏசாமல் இருப்பதனால் ஈட்டப்படும் நலனானது ஏசுவதால் ஈட்டப்படும் நலனை விட அதிகமானதாகும் என்பது இமாமவர்களது கருத்தாகும்.
நபிகளார்(ஸல்)அவர்கள் 21 வருடங்களாக சிலைகளை உடைக்காமல் இருந்தமை அதற்குப் பிறகே உடைத்தமை என்ற இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் ஒப்பீட்டாய்வுகள் என்பன எம்மை சிந்திக்கத் தூண்ட வேண்டும். இதற்கு நாம் ‘பிக்ஹுல் முவாஸனாத்’,‘பிக்ஹுல் வாகிஃ’, (தப்உ அக்பருர் ளரரைன்) ‘இரண்டு தீங்குகளில் பெரியதைத் தவிர்க்கும் பிக்ஹ்’ என்று கூறுவோம்.
ஆப்கானிய தாலிபான்களும் பாமியான் சிலையும்
ஆப்கானிஸ்தனில் இருந்த பாமியன் புத்தர் சிலையை தாலிபான்கள் உருக்குலைத்த போது அவர்களது நடவடிக்கையை சிலர் ஆதரித்தார்கள். ஆனால், கலாநிதி ஸலீமுல் உவா அவர்கள் இது பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் பின்வருமாறு தெரிவித்தார்:-
தாலிபான்களில் ஒருவரிடம் நான் ‘நீங்கள் அங்குள்ள புத்தர் சிலையை உடைக்கக் காரணம் என்ன என்று வினவிய போது சிலைகளை உருக்குலைக்கும் படி நபியவர்கள் அலீ(ரழி)அவர்களுக்கு கூறியிருந்தார்கள். எனவே, நாமும் உடைத்தோம் என்று கூறினார். அப்போது நான் அந்த ஹதீஸின் இரண்டாம் பகுதியில் நபியவர்கள் உயரமாக உள்ள மண்ணறைகளை தரை மட்டமாக்கும் படி கூறியதை ஏன் நீங்கள் அமுலாக்குவதில்லை என்று வினவிய போது ஆப்கானில் அவ்வாறு செய்தால் ஒரு குளப்பத்தை நாம் தோற்றுவித்தவர்களாவோம். அதன் விளைவுகள் எப்படியெல்லாம் அமையும் என்று அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். ஏனெனில், பொதுமக்கள் எமக்கெதிராக கிளர்ந்தெழுவார்கள். பித்அத்களுக்குத் தலைமை தாங்குபவர்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவார்கள். இந்த வகையான குழப்பம் ஏற்பட்டுவிடும் எனப் பயந்து தான் அந்த கப்றுகளை உடைக்காமல் விட்டு விட்டோம்’ என்றார்.
அதற்கு நான் உங்களது பதிலே உங்களுக்கு எதிரான ஆதாரமாக உள்ளது. உள்நாட்டில் குழப்பம் வரும் எனப் பயந்து இதனைச் செய்யாமல் விட்டீர்கள். அவ்வாறு தவிர்ப்பதற்கு ஷரீஅத்தின் கண்ணோட்த்தில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், நீங்கள் இந்த சிலைகளை சேதமாக்கியதால் சர்வதேச ரீதியான ஒரு குழப்பம் ஏற்படுமே என்றும் உங்களுக்கு எதிராக முழு உலகமும் கிளர்ந்தெழும் என்றும் உங்களை விசாரிப்பதற்கும் உங்களுக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டுவருவதற்கும் அவர்கள் முனைவார்கள் என்றும் நீங்கள் யோசித்திருக்க வேண்டும் இந்த தீங்குகளும் ஆபத்துக்களும் ஷரீஅத்தின் அடிப்படையில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நீங்கள் விளங்கியிருக்க வேண்டும். ‘அள்ளரு யுத்பஉ பிகத்ரில் இம்கான்’- ‘தீங்கு முடியுமானவரை தவிர்க்கப்பட வேண்டும்’ என்ற இஸ்லாமிய சட்ட விதி இங்கு கவனத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என சலீமுல் உவா தெரிவித்தார்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சிலைகளை உடைத்தார்கள் என்பதற்காக நாமும் உடைக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. அது அவர்களுடைய ஷரீஅத்தில் இருந்த இறைவனது கட்டளையும் அங்கீகாரத்துக்கு உட்பட்ட ஓரு விவகாரமுமாகும். முஹம்மத் (ஸல்) அவர்களும் சிலைகளை உடைத்தார்கள் என்பதற்காக நாமும் உடைக்க வேண்டும் என்பதுமல்ல. அவர்கள் தனது தோழர்களில் சிலருக்கு உடைக்கும் படி கட்டளையிட்டார்கள் என்பதற்காக நாமும் அதே கட்டளையை எமது காலத்திலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் அல்ல. அப்படிப் பார்த்தால் அவர்கள் இட்ட கட்டளைகள் பல எம்மால் அமுல் படுத்தப்படாமல் இருக்கின்றன. களவு எடுத்தவரது கையை இலங்கையில் நாம் ஏன் வெட்டுவதில்லை? சிலைகளை உடைக்கும்படி வந்த கட்டளையை நடைமுறைப்படுத்துகின்ற பொழுது அதற்கான சந்தர்ப்பம்- சூழ்நிலை இருக்கிறதா என்பதனை முழுமையாகக் கவனிக்க வேண்டும்.
நபித்தோழர்களும் இமாம்களும்
நபித்தோழர்களும் இமாம்களும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபு தீபகற்பத்திற்கு வெளியே விரிவடைந்த பொழுது அங்கிருந்த சிலைகளும் நாகரீக சின்னங்களும் சஹாபாக்களாலோ அல்லது இமாம்களாலோ அகற்றப்படவில்லை. இதற்கு பல ஆதாரங்களை நாம் முன்வைக்க முடியும்.
முஸ்லிம்கள் பிற நாடுகளை வெற்றி கொண்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் அவ்வப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்களது மத உரிமைகளுக்கு பூரண உத்தரவாதங்களை வழங்கியுள்ளார்கள். அதற்கான பல சான்றுகள் இருப்பினும் அவற்றில் ஒன்றை குறிப்பிடலாம்.
உமர்(ரலி)அவர்களது கிலாபத்தின் போது ஜெரூஸலம் கைப்பற்றப்பட்ட போது அங்கு வாழ்ந்த கிறிஸ்த்தவர்களுக்கு அவர்கள் வழங்கிய உத்தரவாதம் வருமாறு:-
‘இது விசுவாசிகளின் தலைவர் உமர், ஈலியா மக்களுக்கு வழங்கும் பாதுகாப்பாகும். அவர்களுக்கும் அவர்களது சொத்துக்களுக்கும் தேவாலயங்களுக்கும் சிலுவைகளுக்கும் அவர்களது மார்கத்தின் ஏனையவற்றுக்கும் அவர் பாதுகாப்பு வழங்கியுள்ளார்.அவர்களது தேவாலயங்களில் எவரும் குடியிருக்கலாகாது. அவை இடிக்கப்படலாகாது. கட்டங்களின் பகுதிகள் குறைக்கப்படலாகாது. அவற்றிற்குரிய காணிகளோ சிலுவைகளோ அவர்களது செல்வங்களோ குறைக்கப்படலாகாது. அவர்களது மார்க்கத்திலிருந்து வெளியேறும் படி அவர்கள் பலாத்காரப்படுத்தப்பட மாட்டார்கள்.’ (இப்னு ஹிஷாம்-சீரத்துன் நபி 4:181)
முஸ்லிம்கள் புதிதாக வெற்றிகொண்டு ஆட்சி நடத்திய எகிப்து, லிபியா உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளாக இருக்கட்டும், இந்தியா, ஸ்பெய்ன், இந்தியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளாக இருக்கட்டும்
அவற்றில் அன்று முதல் இன்று வரை முஸ்லிம் அல்லாதவர்கள் வாழ்ந்து வருவதாயின் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் இன்றும் பாதுகாப்பாக இருப்பதுடன் அவற்றில் வழிபாடுகளும் நடந்து வருவதாயின் அது இஸ்லாத்தின் மத சகிப்புத் தன்மைக்கான (Religious Tolerance)ஆதாரங்களாகும்.
ஆனால், வரலாற்றில் ஒரு சில முஸ்லிம் ஆட்சியாளர்கள் அல்லது தளபதிகள், தனிமனிதர்கள் பிற மத ஆலயங்களுக்கு ஊறு விளைவித்திருந்தால் அதனை வைத்து இஸ்லாத்தை எவரும் மதிப்பீடு செய்வது முறையல்ல.பாமியான் புத்தர் சிலை விவகாரமும் அப்படித்தான் நோக்கப்படவேண்டும் அது அவரவரது தனிப்பட்ட முடிவுகளாகவே பார்க்கப்பட வேண்டும். தலதா மாளிகையை சிலர் தாக்கினார்கள் என்றால் அவ்வாறு தாக்கியவர்கள் சார்ந்திருக்கும் அவர்களது மதம்தான் அவர்களை அதற்காகத் தூண்டியது என எவரும் பார்க்கலாகாது. அந்த மதங்களது வேதங்கள் அப்படிச் செய்யும்படி கூறியுள்ளனவா என்பதையே பார்க்க வேண்டும்.
ஹிஜ்ரி ஏழாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் அபூஜஃபர் முஹம்மத் இப்னு அப்துல் அஸீஸ் என்பவர் எழுதிய ‘அன்வார் உல்விய்யுல் அஜ்ராம் பீ கஷ்பி அஸ்ராரில் அஹ்ராம்’ எனப்படுகின்ற புத்தகத்தின் முன்னுரையில் ஸஹாபாக்களும் தாபியீன்களும் எகிப்தில் நுழைந்த பொழுது பழைய நாகரீகச் சின்னங்களை அவர்கள் கண்டதாகவும் ஆனால், அவற்றை அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்றும் எடுத்துச் சொல்கிறார்.
மிகப்பெரும் சஹாபாக்களும் தாபியீன்களும் மற்றும் சட்டத்துறை வல்லுனர்களும் இராக்,எகிப்து போன்ற பிரதேசங்களில் வாழ்ந்தார்கள். குறிப்பாக இமாம் ஷாபி , அபூஹனிபா போன்ற இமாம்கள் இந்த நாடுகளில் வாழ்ந்தும் கூட அந்த பழைய நாகரிக சின்னங்களை அகற்றும்படி தீர்ப்புக் கொடுக்கவில்லை.
முஸ்லிம்கள் அதிகாரம் கிடைக்கும் வரை தான் பொறுமையாக இருப்பார்கள் அதிகாரம் கிடைத்தவுடன் சிலைகளை உடைப்பார்கள் என்பது பிழையான கருத்தாகும்.இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்த பின்னரும் இஸ்லாமிய அரசுக்கு சகல அதிகாரங்களும் கிடைத்த பின்னரும் இஸ்லாமிய சேனை பல வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருந்த போதிலும் சிலைகள் மீது முஸ்லிம்கள் கை வைக்கவில்லையாயின் அது முஸ்லிம்களது மத சகிப்புத் தன்மையையே காட்டுகிறது.
ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் ஹனபி மத்ஹபை பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டாலும் பழைய நாகரீகச் சின்னங்களை அகற்றுவதில்லை என்ற அவர்களுடைய மத்ஹபின் இமாம் அபூஹனீபாவின் நிலைப்பாட்டை இவர்கள் எடுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என்று கலாநிதி ஸலீம் உவா மேலும் தெரிவிக்கிறார். அந்த இமாம்களை விட நாம் அறிவில் கூடியவர்களா என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
இஸ்லாமிய சட்ட முறைமை
இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தில் இருக்கும் ‘அல்இஸ்திஹ்ஸான் பிள்ளரூரா’,‘அல்இஸ்திஹ்சான் பில்மஸ்லஹா’ போன்ற சட்ட மூலாதாரங்களை நாம் எடுத்து நோக்கினால் , ‘ரப்உல் ஹரஜ்’ எனப்படுகின்ற சட்ட விதியை நாம் அமுல்படுத்தினால் இந்த விக்கிரகங்களை அகற்றக்கூடாது- உடைக்கக் கூடாது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.
எமது அயலவர்களாக வாழக்கூடியவர்கள் பௌத்தர்களாக இருக்கின்ற பொழுது அவர்களோடு நல்லுறவையே பெற வேண்டி இருக்கிறது. இஸ்லாம் என்பது வேற்று நாகரிகங்கள் மற்றும் மதங்களது எதிரி என்ற கருத்து நிலவுகின்ற சூழலில் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.ஒரு காரியம் ஒரு சங்கடத்தை ஏற்படுத்துமாயின் அல்லது ஒரு நலனுக்கு பதிலாக ஒரு தீங்கு ஏற்படுமாயின் அதனைத் தவிர்ப்பது நல்லதாகும்.
எனவே, சிறுபான்மையாகவோ பெரும்பான்மையாகவோ முஸ்லிம்கள் வாழும் சூழலில் அவர்கள் எந்த ஒரு சட்ட வசனத்தை நடைமுறைப்படுத்த முன்னாலும் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே தீர ஆலோசித்துக் கொள்ள வேண்டும். இதற்குத் தான் ‘ஃபிக்ஹுல் மஆலாத்’ என்று சொல்வார்கள்.
சம காலத்தில் வாழும் மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர்கள் இது பற்றி தரும் விளக்கங்களை வாசிக்க வேண்டும். இஸ்லாமிய உணர்விருந்தால் மட்டும் போதாது. இஸ்லாமிய அறிவுத் தெளிவும் அவசியமாகும்.இளைஞர் சமுதாயம் விட்டில் பூச்சிகள் போல் தீவிரவாத சிந்தனைகளில் சிக்குவதைத் தவிர்ப்பதற்கான நீண்டகாலத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இல்லாத போது ஒரு சிலர் செய்யும் தப்புக்களால் முழு சமூகமும் பலியாக நேரிடும்.
அல்லாஹ் அனைவரையும் நேரான பாதையில் செலுத்துவானாக!
01.01.2019




