அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)
இந்த தலைப்பைப் பார்க்கும் போது ஆச்சரியம் வரலாம். நபிமார் அரசியல்வாதிகளா? அரசியல் என்றாலே அது சாக்கடை தானே. லஞ்சம், ஊழல், அரசியல் பழிவாங்கல், பொய்யும் புரட்டும் தேர்தலில் மோசடி என்றெல்லாம் இருக்க மனிதப் புனிதர்களான நபிமாருக்கும் அரசியலுக்கும் எப்படி தொடர்பிருக்கலாம் என்று சிலர் வினவலாம். இது நியாயமான கேள்வி தான்.
ஆனால், நபிகளார் (ஸல்):“பனூ இஸ்ரவேலர்களை நபிமார்கள் ஆட்சி செய்து வந்தார்கள். ஒரு நபி இறந்த பின்னர் அவரது பிரதிநிதியாக மற்றுமொரு நபி வருவார்.” எனக் கூறினார்கள். (ஆதாரம்:-புகாரி-3455, முஸ்லிம்-1842)
இமாம் நவவி(ரஹ்) இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகையில் “பனூ இஸ்ரவேலர்களை நபிமார்கள் ஆட்சி செய்து வந்தார்கள் என்பதன் கருத்து, (தற்காலத்தில்) ஆட்சியாளர்களும் கவர்னர்களும் இருப்பது போல் குடிமக்களது காரியங்களுக்கு அந்த நபிமார்கள் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள் என்பதாகும். அரசியல்(ஸியாஸா) என்றால் ஒரு விவகாரத்தை சீராகக் கையாள்வதைக் குறிக்கும்” என்றார்கள். (ஷரஹு ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் 1842)
எனவே, மார்க்கதில் அரசியல் இல்லை என்பது பிழையான மனப் பதிவாகும். அந்தவகையில், நபிமார்கள் எப்படி அந்த அரசியலுடன் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பதைக் கண்டறிய அவர்களது வரலாற்றில் அரசியல் எப்படி இருந்தது என்று பார்ப்போம்:-
பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான ஷுஐப்(அலை) அவர்களது பிரகடனம்
மத்யன் எனும் பிரதேசத்தில் வாழ்ந்த ஷுஐப் (அலை) அவர்களது சமூகத்தினர் ஏக இறைவனுக்கு இணைவைத்தல் என்ற குற்றத்துக்கு மேலதிகமாக பின்வரும் பாரிய சமூகத் துரோகங்களிலும் ஈடுபட்டனர்:-
- தமது வியாபார மற்றும் விவசாய நடவடிக்கைகளில் அவர்கள் மோசடி , ஏமாற்று, சதி என்பவற்றை கையாண்டனர். பிறரிடமிருந்து அளந்து, நிறுத்து பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அளவுக்கு அதிகமாக அவர்கள் எடுத்துக் கொண்ட அதேநேரம் விற்கும் போது அளவுகளைக் குறைத்துக் கொடுத்தனர்.
- பொதுவாகவே நல்லடியார்கள் நற்பணிகளில் ஈடுபட்டு சீர்திருத்தப் பணிகள் நடந்து முடிந்த பின்னர் அவற்றை குப்பும் அல்லது அழித்துவிடும் வகையில் மத்யன் வாசிகள் விஷமத்தனமான காரியங்களில் ஈடுபட்டனர்.
- வழிப்பறிக் கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டதுடன் நன்மக்களது கொள்கைக் கெதிரான விஷமப் பிரசாரங்களிலும் ஈடுபட்டனர். எனவே,ஷுஐப்(அலை) தனது சமூகத்தை நோக்கி பின்வருமாறு பேசுகிறார்கள்:-
“என் சமூகத்தார்களே! … நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள்.மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார். “மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி,(அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். (ஸூரத்துல் அஃராஃப்: 85,86)
இத்தகைய சடவாத, சுரண்டல்வாத, சுயநலப் போக்கை விட்டும் ஷுஐப்(அலை) அவர்கள் அந்த மக்களைத் தடுத்தார்கள். ஏக இறைவனை ஏற்று வணங்கும் படி கூறிய அதேநேரத்தில் இந்த சமூக விரோதச் செயல்களில் இருந்து நீங்கியிக்கும் படியும் ஆணித்தரமாக வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்துடன் நிறுத்தவில்லை. சமூகத் தீமைகளுக் கெதிராகவும் போர்க்கொடி தூக்கினார்கள். இது அவர்கள் செய்த ஓர் அரசியல் நடவடிக்கையாகும்.
அப்போது அவர்களது சமூகம் அவர்களைப் பார்த்து அதிசயமான வினாவொன்றைத் தொடுத்தனர். இது தான்
அந்த வினா:-
“அவர்கள் ‘ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படி செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்’ என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.”(11:87)
எனவே, நீர் தொழும்படி எமக்கு ஏவுவது கூட எமக்கு அதிசயமாகப் படவில்லை. ஆனால், எமது சொத்து செல்வங்களை நாம் விரும்பிய விதத்தில் சேகரிக்கவும் செலவு செய்யவும் நீர் கட்டுப்பாடுகளைப் போடுவதற்கு நீர் கடைப்பிடிக்கும் தொழுகை தான் காரணமா என்ற தோரணையில் அவர்கள் வினாத் தொடுத்தனர்.
எனவே, சமூக விவகாரங்களில் மதம் தலையிடக் கூடாது என்பதில் அந்த சமூகத்தவர்கள் கவனமாக இருந்தனர். ஆனால், நபி ஷுஐப்(அலை) அவர்களோ அப்படியொரு பிரிவினையை அறிந்திருக்கவில்லை. வாழ்வு என்பது ஒட்டு மொத்தமானது. சமூகத்தில் ஏக இறைவனை ஏற்று அவனுக்கு மட்டுமே வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவோர் உருவாகினால் மட்டும் போதாது. அங்கிருந்து பொருளாதார சுரண்டல், சமூக அநீதி, அரசியல் அராஜகம், சமூக விரோதச் செயல்கள் என்பனவும் ஒழிக்கப்பட வேண்டும். ஆன்மீக விமோசனமும் சமூக மேம்பாடும் கைகோர்த்துப் பயணிக்க வேண்டும். ஆன்மீகமும் லெளகீகமும் சங்கமிக்கும் சமூக சூழலில் தான் மனித சமூகம் செளஜன்யத்தைக் காண முடியும்.
இது தான் நபி ஷுஐப்(அலை) அவர்கள் செய்த அரசியலாகும்.இதனை நவீன பரிபாஷையில் எப்படியும் நாம் பெயரிடலாம். சமூகம் அல்லல்படும் போது ஆசிரமத்துக்குள் புகுந்த வண்ணம் ஜெபம் செய்பவர்களாக நபிமார் இருக்கவில்லை. சமூகத்தை வாட்டி வதைத்த அராஜகக் கும்பல்களுடன் அவர்கள் முகத்துக்கு முகம் மோதிக் கொண்டார்கள். இதற்காக அவர்கள் பல்வேறு சோதனைகளைச் சந்தித்தார்கள்.
அடக்கு முறைகெதிரான மூஸா(அலை) அவர்களது எழுச்சி
குறிப்பித்தக்க அரசியல் பங்களிப்பைச் செய்த மற்றொரு நபியாக நபி மூஸா(அலை) விளங்கினார்கள்.
- ஃபிர்அவுனின் அடக்கு முறைக்கெதிராகப் போராடுவதற்காக அல்லாஹ்வால்
அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
- ஃபிர்அவுன் உலகில் அகந்தையோடு பிறரை மதிக்காமல் இருந்தான்.
- தனது இழிந்த நலன்களை அடைந்து கொள்வதற்காக சமூகத்தைப் பல கூறுகளாகப் பிரித்து பிளவுபடுத்தியிருந்தான்.
- சிலரை தலை தூக்க முடியாத அளவுக்கு ஒதுக்கி பலவீனப்படுத்தியிருந்தான்.
- சாஸ்திரக்காரர்களின்Nகருத்தை நம்பி தன்னைக் காக்க வேண்டும் என்பதற்காக ஆண் குழந்தைகளைக் கொலைசெய்தான்.
“நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.”(28:04)
- பனூஇஸ்ரவேலர்களை விடுவிப்பதற்காகன முயற்சி
மூஸா(அலை) அவர்களை பனூ இஸ்ரவேலர்களை விடுவிப்பதற்காகஅல்லாஹ் அனுப்பினான். இது அவர்கள் மீது சுமத்தப்பட்ட மற்றொரு பொறுப்பாக இருந்தது. இதனை அல்லாஹ் :-
“ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப்படுத்தப் பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கி விடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம். இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப் பற்றிஎ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).”(28:5,6)
எனவே, மூஸா(அலை)அவர்களது அரசியல் நடவடிக்கை இரு பரிமாணங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.
- பிர் அவுனின் ஆணவத்துக்கும்அடக்கு முறை ஆட்சிக்கும் எதிராகப் போராடுவது
- பனூ இஸ்ரவேலர்களுக்கு சுதந்திரமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பது
அரசியலானது இஸ்லாத்தில் உள்ள ஒன்றாகும் என்பதை பொதுவாக நபிமார்களது வாழ்வும் போராட்டங்களும் குறிப்பாக மூஸா(அலை) அவர்களது வாழ்வும் நிரூபித்துள்ளன.
“பனூ இஸ்ரவேலர்களை நபிமார்கள் ஆட்சி செய்து வந்தார்கள். ஒரு நபி இறந்த பின்னர் அவரது பிரதிநிதியாக மற்றுமொரு நபி வருவார்.” என்ற ஹதீஸுக்கு விளக்கம் சொன்ன அஷ்ஷெய்க் இப்னு உசைமீன்(ரஹ்)அவர்கள்:‘அல்லாஹ்வின் மார்க்கம் தான் உண்மையான பயனுள்ள அரசியலாகும். இஸ்லாம் என்பது ஷரீஅத்தும் தான், அரசியலும் தான். யார் அரசியலையும் ஷரீஅத்தையும் பிரித்துப் பார்க்கிறாரோ அவர் வழிகெட்டு விட்டார். அப்படியானவர் இரண்டில் ஒரு காரணத்தால் தான் அப்படி நடந்து கொள்வார். ஒன்றில், அவருக்கு மார்க்கம் பற்றித் தெரியாது. மார்க்கம் என்றாலே மனிதனுக்கும் இறைவனுக்கும் இடைப்பட்ட இபாத்களும். தனிப்பட்ட உரிமைகள் தொடர்பானதும் மட்டும் தான் . இவை மட்டுமே மார்க்கமாகும் என்றும் அவர் அறியாமையால் நினைத்துக் கொண்டிருக்கலாம்.அல்லது இஸ்லாத்தை நிராகரித்த சடவாதத்தால் ஈர்க்கப்பட்ட காபிர்களால் கவரப்பட்ட வராக இருக்கலாம்.’ (ஷரஹு ரியாளிஸ் சாலிஹீன் -3/637)
ஒழுக்க வீழ்ச்சிக்கு எதிரான லூத் (அலை) அவர்களது போராட்டம்
ஷுஐப்(அலை) தனது சமூகத்தினரது பொருள் சம்பாதிக்கும் முறையை சீர்செய்யப் பாடுபட்ட போது, மூஸா(அலை)அவர்கள் பனூ இஸ்ரவேலர்களது சுதந்திரத்துக்காக கடும் முயற்சி எடுத்த போது, லூத் (அலை) அவர்களோ தனது சமூகத்தின் பாலியல் ரீதியான வழிபிரழ்வொன்றை எதிர்த்துப் போராடி ஒழுக்க விழுமியங்கள் கொண்ட சமூகத்தை உருவக்கப்பாடுபட்டார்கள். ஜோர்தனில் இருந்த ‘சதூம்’ எனும் பகுதியில் தான் அந்த சமூகம் வாழ்ந்து வந்தது.
லூத்(அலை)அவர்கள் தனது சமூகத்தவரது நிலை மீது கொண்ட மிகுந்த அதிருப்தியையும் ஆதங்கத்தையும் இப்படித் தான் வெளிப்படுத்தினார்கள்:-
- “நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.” (29:28)
- “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள்-நீங்கள் வரம்புமீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.” (7:81)
- “நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா?” (29:29)
என்று நபி (லூத் (அலை)கூறியது போலவே
- “வழிமறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்;உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்”
என்று கூறியதிலிருந்து அந்த சமூகம் ஒரு பாலுறவு என்ற குற்றத்தை மட்டுமன்றி வழிப்பறிக் கொள்ளையிலும், பொதுவாக மக்கள் சந்திக்கும் இடங்களில் பகிரங்கமான பாவங்களிலும் ஈடுபட்டு வந்தனர் என்பதைப் புரிய முடியும்.
எனவே, ஏகத்துவப் பிசாரமும் சமூக விரோதச் செயல்களுக்கெதிரான பிரசாரமும் லூத்(அலை) அவர்களால் சரி சமனாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.ஆன்மீக விமோசனமும் ஒழுக்க மேம்பாடும் ஒரு சேரக் கவனிக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறாக அந்த சமூகத்தின் நலனையும் அல்லாஹ்வின் திருப்தியையும் மட்டுமே இலக்காக் கொண்டு தார்மீகப்
போராட்டமொன்றை அந்த நபி தொடுத்த போதும் அந்த சமூகம் இப்படித் தான் அதனை எதிர்கொண்டு பரிகசித்தது.
“நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.” (7:82) என்று அல்லாஹ் கூறினான்.
அல்குர்ஆனில் லூத்(அலை) அவர்களதும் அவர்களது சமூகத்தினதும் சம்பவம் அல்அஃராப், ஹூத், அல்ஹிஜ்ர், அஷ்ஷுஅரா, அந்நம்ல் போன்ற ஷூரக்களில் சுமார் 27 இடங்களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து அல்லாஹ் ஒழுக்க வீழ்ச்சிக்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த விரும்புகிறான்.
நபி யூஸுப்(அலை) அவர்களது பொருளாதார சீச்திருத்தம்
யூசுஃப் (அலை)அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளையிலும் எகிப்து நாட்டில் ஏற்படவிருந்த பயங்கரமான பஞ்சத்தை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதற்கான ஆலோசனையை அரசனுக்கும் பிரதானிகளுக்கும் முன்வைத்தார்கள்.
- “நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த – (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத் தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.” (12:47)
- “பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடைய வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும். (12:48)
- “பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில்(விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து(சுகமாக) இருப்பார்கள்” என்று கூறினார்.” (12:49)
அத்துடன் இப்பணியை செவ்வனே நிறைவேற்ற வேண்டுமாயின் தனக்கு நிதி மந்திரிப் பதவி கிடைத்தால் நல்லது என்று கருதி அதைத் தரும்படி அரசனை வேண்டிக் கொண்டார்கள்.
(யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப் பாதுகாப்பதற்கான) நம்பிக்கை நாணயம் என்ற பண்பைக் கொண்டிருக்கிறேன்.(களஞ்சியப்படுத்தலோடுதொடர்பான) அறிவுள்ளவராகவும் இருக்கிறேன் என்றார்.”(12:55)
அரசன் ஏற்கனவே நபி யூசுப்(அலை) அவர்களது நம்பிக்கை நாணயத்திலும் அறிவிலும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.எனவே, அப்பதவியை அவருக்கு வழங்கினார்.
இன்னும், அரசர் கூறினார்:“அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய-(ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்”(12:54) என்று கூறினார்.
இவ்வாறு தான் எகிப்து நாட்டில் வரவிருந்த பஞ்சம் யூசுப்(அலை) அவர்களது ஆலோசனையின் பிரகாரம் மக்கள் நடந்து கொண்டதால் – அல்லாஹ்வின் நாட்டப்படி-தவிர்க்கப்பட்டது. இது நபி யூசுபின் அரசியல் பங்களிப்பு என்று கூறலாம்.
ஒரு நபி வெறுமனே ஏகத்துவத்தை நிலை நாட்டவும் வழிபாடுகளை ஏற்படுத்தவும் மட்டும் அனுப்பப்பட்டவர் அல்லர். சமூகம் அவரது சேவையை வேண்டி நிற்கும் போது தனது அறிவையும் திறமைகளையும் மூலதனமாக்கிக் கொண்டு உயர்ந்த பட்ச பங்களிப்பைச் செய்வார் என்பதை இது காட்டுகிறது, சில போது பதவியை அல்லது பொறுப்பைக் கேட்டு எடுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. இதற்குநபி யூஸுப்(அலை) அவர்களது வரலாறு சிறந்த சான்றாகும்.
இதே போன்று தான் சுலைமான்(அலை), துல்கர்னைன் ,தாலூத் போன்றவர்களது சமூக மற்றும் அரசியல் பணிகள் பற்றி மிகவும் சிறப்பாக அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். அது பற்றி விரிவாக எழுதப்பட வேண்டும்.
முல்க், தம்கீன், இஸ்திக்லாப், ஹுக்ம், அமானத் போன்ற குர் ஆனிய சொற்பிரயோகங்கள் அல்லாஹ் மனிதனை உலகில் படைத்த நோக்கங்களான கிலாபத், இமாரத் பணிகளுக்கான வழிகாட்டல்களைத் தருகின்றன. அரச அதிகாரமோ அல்லது தலைமைத்துவமோ ஒரு தனி மனிதனுக்கு அல்லது ஒரு சமூகத்துக்குக் கிடைப்பது பெரும் பாக்கியம் என்றும் அது அல்லாஹ்வின் அருள்களில் ஒன்று என்றும் தெரிவிக்கும் பல குர்ஆன் வசனங்களைக் காண முடியும்.
“இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.” (4:54)
சுலைமான்(அலை) அவர்கள் தனக்கு ஆட்சியைத் தரும்படி அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
“என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய் ” எனக் கூறினார்.(38:35)
நபி யூசுப் (அலை)அவர்கள் தனக்கு நிதிப் பொறுப்பை தரும் படி அரசனிடம் கேட்தைப் பற்றி ஏற்கனவே பிரஸ்தாபிக்கப்பட்டது. யூசுப்(அலை) அவர்களுக்கு எகிப்து நாட்டின் அதிகாரங்களை எவ்வித தங்குதடையுமில்லாமல் கொடுத்தாகவும் அல்லாஹ் நாடியவர்களுக்கே அந்த அரசாட்சிப் பாக்கியம் கிடைக்கும் என்றும் பின்வருமாறு கூறுகிறான்.
“யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்கமாட்டோம்.” (12:56)
அடுத்த தரப்பில் ஆட்சி அதிகாரத்தையும் அறிவையும் மோசமாகப் பிரயோகித்த பிர்அவ்ன், ஜாலூத், காரூன், வலீத் இப்னு மூகீரா, அபூ லஹப், அபூஜஹ்ல் போன்றவர்கள் பற்றியும் குறிப்பிட்டு அவர்களது பிழையான முன்மாதிகள் பற்றி எச்சரித்துள்ளான்.
எனவே, மனிதன் கலீபா என்ற தனது பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற அவனுக்கு ஆட்சியும் அதிகாரமும் அறிவும் தேவைப்படும். அவை அடிப்படையில் அசுத்தமானவையோ புறந்தள்ளத்தக்கவையோ அல்ல. அவற்றைக் கையில் எடுப்பவர்களைப் பொறுத்து அவற்றின் பிரயோகம் வித்தியாசப்படும். அல்லாஹ் பற்றிய அச்சமும் மறுமையில் பதில் சொல்ல வேண்டுமே என்ற அமானித உணர்வும் உலக வாழ்வின் தன்மைமை, அதன் குறிக்கோள் என்பன பற்றிய தெளிவுகொண்டவர்கள் அவற்றைக் கையாளும் போது அது உலக மாந்தர்களுக்கு அருளாகவும் நல்லாட்சியாகவும் மாறும்.
வாழ்வின் குறிக்கோளை அறியாத, உலக வாழ்வோடு மனித வாழ்வு முடியும் என்று நினைக்கும், அல்லாஹ் பற்றிய அச்சம் இல்லாதவர்களது கையில் ஆட்சி கிடைத்தால் பைத்தியகாரனது கையில் கிடைத்த கூரிய ஆயுதத்துக்கு அதனை ஒப்பிட முடியும்.
ஆட்சியும் பணிவுடன் கூடிய அடக்கமும்
வரலாற்றில் ஆட்சி செய்த நபிமார்களும் மற்றும் சான்றோரும் தமக்குக் கிடைத்த அறிவையும் ஆதிகாரத்தையும் திறமைகளையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்த ‘அமானத்’ களாகவும் சோதனைகளாகவுமே கருதினார்கள்.முதலில் அவர்களிடம் அல்லாஹ் பற்றிய மிகுந்த அச்சம் இருந்தது.அடுத்ததாக தமக்கு அந்த பாக்கியங்களைத் தந்த வல்லவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.
நபி சுலைமான் (அலை) அவர்கள் உலகில் மிகப்பெரிய பரப்பை ஆட்சி செய்தார்கள். அவர்களுக்கு ஜின்கள், மனிதர்கள், பறவைகளை உள்ளடக்கிய ஒரு சேவகப் பட்டாளத்தையே அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்திருந்தான். அவர்களது கட்டளையின் பேரில் பல்கீஸ் அரசியின் சிம்மாசனத்தை அவர்களுக்கு எதிரே ஒரு ஜின் கண் சிமிட்டி முடிக்க முன்னர் கொண்டு வந்து நிறுத்திய போது அதனைப் பார்த்து சுலைமான் (அலை) கர்ஜிக்கவில்லை, ஆணவத்தால் குதிக்கவில்லை.மாறாக:
“(அந்த ஜின் சொன்னவாறே)அது (பல்கீஸின் சிம்மாசனம்) தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்:‘இது என்னுடைய இறைவனின் அருட்கொடையாகும். நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்;எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ(அது அவனுக்கே இழப்பாகும்;ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப்படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்’ என்று (ஸுலைமான்) கூறினார்.” (27:40)
உலகின் மிகப் பெரிய ஒரு பகுதியை ஆட்சி செய்தவர் தான் துல்கர்னைன் ஆவார். அவருக்கு அல்லாஹ் ஆட்சி செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தான்.
“நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.” (18:84)
தனது பரந்து விரிந்த சம்ராஜ்யத்தில் இருந்த மக்களது தேவைகளைக் கண்டறியும் நோக்கில் அவர் பயணம் மேற்கொண்டிருந்த போது அவரிடம் வந்த ஒரு சாரார் யஃஜூஜு மஃஜூஜ்கள் எனும் கூட்ட த்தாரால் தாம் பெரும் தொல்லைகளுக்கு உள்ளாவதாகவும் தாம் பலவீனமான ஒரு கூட்டத்தினராக இருப்பதாகவும் தமது பாதுகாக்காக
அணையொன்றை நிர்மாணித்துத் தரும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். அல்லாஹ் அவருக்குக் கொடுத்த அதிகாரம், அறிவு, ஆற்றல்கள் என்பவற்றைப் பிரயோகித்து அந்த மக்களது உடல் உழைப்பையும் பயன்படுத்தி அதனை நிறுவிய அவர் , நிர்மாணப் பணிகள் முடிந்த பின்னர் அதனைப் பார்த்து பெருமிதம் கொள்ளவில்லை. தனது கெட்டித் தனத்தால் தான் அது சாத்தியப்பட்டது என்று மக்களிடம் கூறவில்லை. எவ்வளவு பிரமாண்டமாகவும் பலமாகவும் அது நிறுவட்டிருந்தாலும் மறுமை நாள் வரும் போது அதனை அல்லாஹ் அழித்து விடும் வல்லமையைக் கொண்டிருப்பதாக பின்வருமாறு கூறுகிறார்.
“இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.” (8:98)
காரூன் எனும் பெருமைக்காரன்
காரூனுக்கு அல்லாஹ் ஏராளமான சொத்து செல்வங்களைக் கொடுத்திருந்தான். ஆனால் அவனிடம் ஈமானோ பணிவோ இருக்கவில்லை.எல்லாம் தனது கெட்டித்தனத்தால் தான் கிடைத்ததாக அவன் பெருமை பாராட்டினான்.
“அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.(28:76)
“(அதற்கு அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” (28:78)
அவனுடைய கூட்டத்தார் அவனிடம்:
“இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).(28:77)
காரூன் மட்டுமன்றி அவன் போன்ற நிலையில் உள்ள எவராயினும் தமக்குக் கிடைத்த அருட்கொடைகளை துஷ்பிரயோகம் செய்யாதிருந்தால் மட்டுமே மறுமையில் விமோசனமடையலாம் என்பதைப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்:
“அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.”(28:83)
எனவே, ஆட்சி அதிகாரத்தை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் இருப்பவர்கள் கையில் எடுக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தியிருப்பதுடன் வரலாற்றில் நபிமார்களும் நல்லடியார்களும் இதற்கு முன்மாதிரியாக இருந்திருப்பதாகவும் கூறியிருக்கிறான்.அரசியலில் இருந்து நல்லவர்களும் வல்லவர்களும் ஒதுங்குவது பேராபத்தையே உலகுக்குக் கொண்டுவரும்.ஹிட்லர்கள், முசோலினிக்கள் தவிர்க்கப்பட்டு உமர்கள்,சலாஹுத்தீன் அய்யூபீக்கள்,முஹம்மத் பின் பாதிஹ்கள் ஆட்சி நடாத்துவது தான் பொருத்தமாக அமையும்.
அல்லாஹ் உலகை அநியாயக் கார ஆட்சிகளில் இருந்து பாதுகாப்பானாக!




