அல்குர்ஆனின் மகத்துவம்
அல்குர்ஆன் மகத்துவம் மிக்க அல்லாஹ்வின் வழிகாட்டல்களைத் தாங்கிய புனிதமான வேதமாகும்.மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான ஞானமிக்க வழிகாடல்களையும் சட்டங்களையும் அது கொண்டுள்ளது.
அதன் சிறப்புப் பண்புகளும் நோக்கங்களும் :
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنزَلَ عَلَىٰ عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَل لَّهُ عِوَجًا (1) قَيِّمًا لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا (2(مَّاكِثِينَ فِيهِ أَبَدًا (3) وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا (4(
‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனே தனது அடியார் மீது வேதத்தை இறக்கிவைத்தான்.
- அதற்கு எவ்விதக் கோணலையும் அவன் வைக்கவில்லை.
- அது நேரானதாக உள்ளது.
- அவன் தன்புறத்தில் இருந்து வரும் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும்,
- நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலிஉண்டு, அதில் என்றென்றும் தங்குவார்கள் என நற்செய்தி கூறுவதற்காகவும்,
- அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும்(அந்த வேதத்தை அவன் அருளினான்.)’ (18:1-4)
- اَیُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوْرِ وَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟
‘மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக
- ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது.
- (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது).
- மேலும்(அது)முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.'(10:57)
- وَنُنَزِّلُ مِنَ الْقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۙ وَلَا یَزِیْدُ الظّٰلِمِیْنَ اِلَّا خَسَارًا ۟
‘இன்னும், நாம் முஃமின்களுக்கு
- ரஹ்மத்தாகவும்
- அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்.
- (ஆனால்), அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இந்த வேதம்) அதிகமாக்குவதில்லை.’ (17:82)
اخْتَلَفَ الْعُلَمَاءُ فِي كَوْنِهِ شِفَاءً عَلَى قَوْلَيْنِ: أَحَدُهُمَا: أَنَّهُ شِفَاءٌ لِلْقُلُوبِ بِزَوَالِ الْجَهْلِ عَنْهَا وَإِزَالَةِ الرَّيْبِ، وَلِكَشْفِ غِطَاءِ الْقَلْبِ مِنْ مَرَضِ الْجَهْلِ لِفَهْمِ الْمُعْجِزَاتِ وَالْأُمُورِ الدَّالَّةِ عَلَى اللَّهِ تَعَالَى. الثَّانِي: شِفَاءٌ مِنَ الْأَمْرَاضِ الظَّاهِرَةِ بِالرُّقَى وَالتَّعَوُّذِ وَنَحْوِهِ.- ) تفسير القرطبي (10ஃ 316(
இந்த வசனத்தை விளக்கும் இமாம் குர்துபீ அவர்கள்: இது ‘அருமருந்து’ என்பதற்கு அறிஞர்கள் இரண்டு விதமான கருத்துக்களைத் தருகின்றனர்.
முதல் கருத்து: இது இதயங்களுக்கு ஒரு அருமருந்தாகும்; அதாவது, இதயங்களில் உள்ள அறியாமையை அது நீங்குகிறது, சந்தேகத்தை அகற்றுகிறது, அல்லாஹ் தஆலாவை சுட்டிக்காட்டும் அற்புதங்களை (முஃஜிஸாக்களை) புரிந்து கொள்வதற்கு தடையாக இருக்கும் இதயத்தை மூடியிருக்கும் அறியாமை என்ற திரையை நீங்குகிறது,
இரண்டாம் கருத்து: இது தன்னகத்தே கொண்டிருக்கும் ருக்யா (குர்ஆன் ஓதல்), பாதுகாப்பு வேண்டி ஓதப்படும் துஆக்கள் (தஅவ்வுத்) போன்றவற்றின் மூலம் வெளிப்படையான (உடல்)நோய்களுக்கு ஒரு அருமருந்தாகும். (தஃப்ஸீர் அல்-குர்துபி -10/316)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால், ‘அல்முஅவ்விதாத்’ (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதி, தம்மீது ஊதிக்கொள்வார்கள். அவர்களது (இறப்புக்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல்மீது) தடவிக்கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள்ள வளத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.’ (புகாரி-5016)
- وَكَذٰلِكَ اَوْحَیْنَاۤ اِلَیْكَ رُوْحًا مِّنْ اَمْرِنَا
‘(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்.'(52:42)
- جَعَلْنٰهُ نُوْرًا نَّهْدِیْ بِهٖ مَنْ نَّشَآءُ مِنْ عِبَادِنَا ؕ
‘நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியோருக்கு அதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம்.'(42:52)
- إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
‘நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல்வழியை நோக்கி வழிகாட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்துவரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.'(17:9)
- یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَیْكُمْ نُوْرًا مُّبِیْنًا
‘மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது.; தெளிவான பேரொளியையும் உங்களிடம் நாம் இறக்கி வைத்துள்ளோம்.'(4:174)
- خَيْرُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ صلي الله عليه وسلم ) مسلم -2042(
‘நபி(ஸல்) கூறினார்கள்: ‘சிறந்த பேச்சு அல்லாஹ்வின் வேதமாகும். சிறந்த நேர்வழி முஹம்மத்(ஸல்) அவர்களது நேர்வழியாகும்.'(முஸ்லிம்:2042)
எனவே, நாம் அல்குர்ஆனின் மகத்துவத்தையும் அது இறக்கப்பட்ட நோக்கங்களையும் மிகச்சரியாக உணர்ந்து, அதனுடன் நெருக்கமான உறவைப் பேணவேண்டும். அதன் மூலம் மகத்துவமிக்க அல்லாஹ்வின் திருப்தியைப் பெறலாம். ஈருலகிலும் மகிழ்ச்சியான வாழ்வும் நிரந்தர வெற்றியும் கிடைக்கும்.
அல்குர்ஆனுக்கான எமது கடமைகள்
புனிதமான அல்குர்ஆனுக்கும் எமக்கும் இடையிலான உறவு மிகவுமே பலமானதாக இருக்க வேண்டும்.அது எமக்காக, எமது நலன்களுக்காக இறக்கப்பட்டிருப்பதால் அதற்கு நாம் பலவகையான கடமைகளைச் செய்ய வேண்டும். அவற்றிற் சில வருமாறு:-
- அதனை ஆழமாக விசுவாசிப்பது
முதலில் அது பற்றி நாம் நல்லதொரு மனப்பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும். ‘அது மகத்துவமிக்க அல்லாஹ்விடமிருந்து இறங்கிய புனிதமான வேதமாகும். அதற்கு நிகராக உலகத்தில் எந்த நூலும் கிடையாது. அது கூறும் சட்டங்கள் மட்டுமே சிரேஷ்டமானவை. மனித இனத்தினது உலக மற்றும் மறுமை விமோசனங்கள் அதன் போதனைகளில் மாத்திரமே உள்ளன. அதில் எவ்வித பிழைகளோ சந்தேகங்களோ கிடையவே கிடையாது’ என நாம் ஆழமாக விசுவாசிக்க வேண்டும்.
ذٰلِكَ الْكِتٰبُ لَا رَیْبَ فِیْهِ هُدًی لِّلْمُتَّقِیْنَ
‘இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.’ (2:2)
وَاِنَّهٗ لَكِتٰبٌ عَزِیْزٌ
‘அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும்.’ (41:41)
لَّا یَاْتِیْهِ الْبَاطِلُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَلَا مِنْ خَلْفِهٖ ؕ تَنْزِیْلٌ مِّنْ حَكِیْمٍ حَمِیْدٍ
‘அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ அசத்தியம் வராது. (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் – (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.’ (41:42)
وَلَمْ يَجْعَل لَّهُ عِوَجًا قَيِّمًا
‘அதற்கு எவ்வித கோணலையும் அவன் வைக்கவில்லை.அது நேரானதாக உள்ளது.’ (18:01)
2.அதனை மிகவும் மரியாதையுடன் கையாளுவது
رَسُولٌ مِنَ اللَّهِ يَتْلُو صُحُفاً مُطَهَّرَةً فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ ) البيِّنة: 2(
‘அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார்.அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.’ (98:2)
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ فِي كِتَابٍ مَكْنُونٍ .لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ )الواقعة(
‘நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமிக்க குர்ஆனாகும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது . தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) அதனைத் தொட மாட்டார்கள். அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.'( 5677-:80)
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (الْقَدْرِ -1(
‘நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.’ (97:01)
அல்குர்ஆன் இறக்கப்பட்டதனால் தான் லைலதுல் கத்ருக்கும் ரமழானுக்கும் மகத்துவம் ஏற்பட்டது.ரமழான் மாதம் குர்ஆனுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பதனால் தான் அதில் நோன்பு கடமையாக்கப்பட்டது.
شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ أُنزِلَ فِيهِ ٱلۡقُرۡءَانُ هُدٗى لِّلنَّاسِ وَبَيِّنَٰتٖ مِّنَ ٱلۡهُدَىٰ وَٱلۡفُرۡقَانِۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُ) سورة البقرة 183(
‘ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவேண்டும்'(2:185)
وَهَـٰذَا ذِكْرٌ مُّبَارَكٌ أَنزَلْنَاهُ ﴿ الأنبياء﴾
‘இன்னும் இது(குர்ஆன்) நாம் இறக்கிய பாக்கியம் மிக்க உபதேசமாகும்.'(21:50)
قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِن رَّبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ
‘(நபியே!) ‘ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூ{ஹல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்’ என்று(அவர்களிடம்)நீர் கூறுவீராக.(16:102)
எனவே, அந்த புனிதமிக்க வேதத்தை நாம் மிகவுமே மரியாதையாகக் கையாள வேண்டும்.
அதற்கு மரியாதை செய்யும் முறைகள்:
- உடல் தூய்மையாக இருக்கும் நிலையில், வுளுவுடன் அதனைத் தொடுவது
- அதற்கு சேதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாப்பது
- அதன் மேல் எதனையும் வைக்காதிருப்பது
- அதன் மீது கையை ஊன்றாமல்,சாயாமல் இருப்பது
- அதனை நோக்கி காலை நீட்டாதிருப்பது
- பக்கவாட்டில் அல்லாமல் நெஞ்சுக்கு நேராக சுமப்பது
- சற்று உயரமான, தூய்மையான இடத்தில் வைப்பது
- அதனை மெதுவாக திறப்பதும் மூடுவதும்
3. தஜ்வீத் சட்டங்களைக் கற்று அதனை ஓதுவது
அல்குர்ஆனை அதற்கேயுரிய, தனித்துவமான சட்டதிட்டங்களைப் பேணி நாம் ஓதவேண்டும். அல்லாஹ் தனது நபிக்கு وَرَتِّلِ ٱلْقُرْءَانَ تَرْتِيلًا ‘மேலும் குர்ஆனை ‘தர்தீலாக’ (தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும்) ஓதுவீராக’.(73:04) என கட்டளையிட்டான்.
‘தர்தீல்’ என்றால் ஒழுங்காக, முறையாக, திருத்தமாக, நிதானமாக ,அமைதியாக ஓதுவதைக் குறிக்கும். நபிﷺஅவர்கள் (தர்த்தீல்)தெளிவான ஒழுங்குடன் அதனை ஓதிவந்தார்கள். எனவே,அதனை முறையாகவும் திருத்தமாகவும் ஓதுவதற்காக ஒருவர் தஜ்வீத் சட்டங்களை தானாகவோ அல்லது ஓர் ஆசானிடமிருந்து நேரடியாகவோ கற்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் அல்குர்ஆனை நிதானமாக ஓதியிருக்கிறார்கள்.
سُئِلَ أنَسٌ: كيفَ كَانَتْ قِرَاءَةُ النَّبيِّ ﷺ ؟ فَقالَ: كَانَتْ مَدًّا، ثُمَّ قَرَأَ: {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} ஜالفاتحة: 1(؛ يَمُدُّ بـ{بِسْمِ اللَّهِ}، ويَمُدُّ بـ{الرَّحْمَنِ}، ويَمُدُّ بـ{الرَّحِيمِ}) صحيح البخاري 5046(
‘நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படியிருந்தது?’ என அனஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம்’ என்று கூறிவிட்டு, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதில் ‘பிஸ்மில்லா..ஹ்’ என நீட்டுவார்கள், ‘அர்ரஹ்மா..ன்’ என்றும் நீட்டுவார்கள்; ‘அர்ரஹீ…ம்’ என்றும் நீட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். (புகாரி:5046)
அதேபோல,அவர்கள் அதனை இராகமெடுத்து, இனிமையான குரலில் ஓதியிருக்கிறார்கள்.அவர்கள்:
لَمْ يَأْذَنِ اللَّهُ لِشَىْءٍ مَا أَذِنَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَتَغَنَّى بِالْقُرْآنِ
‘அல்லாஹ், தன் தூதர் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அதனைச் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை.’ எனக் கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஸலமா(ரஹ்) அவர்களின் தோழர் ஒருவர் (அப்துல் ஹமீத் இப்னு அப்திர் ரஹ்மான்) கூறுகிறார்: குரலெடுத்து (இனிமையாகக்) குர்ஆனை ஓதுவதே இங்கு நோக்கமாகும். (புகாரி: 5023)
ليسَ مِنَّا مَن لَمْ يَتَغَنَّ بالقُرْآنِ، وزادَ غَيْرُهُ: يَجْهَرُ بهِ. ) صحيح البخاري 7527 (
தூதர்(ஸல்) அவர்கள் ‘குர்ஆனை (முறைப்படி) இராகத்துடன் (இனிய குரலில்) ஓதாதவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.’ என்று கூறினார்கள். ‘உரத்த குரலில் ஓதாதவர்;’ (நம்மைச் சார்ந்தவர் அல்லர்) என்று அவர்கள் மேலும் கூறியிருப்பதாகவும் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது.(புகாரி: 7527)
இந்த ஹதீஸில் நபி(ஸல்)அவர்கள் குர்ஆனை இனிமையான குரலில் ஓதும்படி ஊக்குவிக்கின்றார்கள். குர்ஆன் பாராயனத்தின் போது தன் குரலை அழகுபடுத்தாமல், அதனை உரத்த குரலில் ஓதாதவர், நபியவர்களது சுன்னாவுக்கு மாற்றம் செய்பவர் என்றும் அவர்களைப் பின்பற்றாதவர் என்றும் இந்த ஹதீஸின் வாயிலாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில்,நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை அழகிய குரலுடன் ஓதுபவராக இருந்திருக்கிறார்கள்.
திருக்குர்ஆனை ஓதுவதற்கு முன்பாக சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ள வேண்டும் என அல்லாஹ் கூறியுள்ளான்: ‘நீர் குர்ஆனை ஓதத் தொடங்குவீராயின் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!’ (16:98)
மேலும் நபி(ஸல்)அவர்கள் குர்ஆனில் ‘தஸ்பீஹ்’ உள்ள வசனங்களில் தஸ்பீஹ் செய்தார்கள். துஆ உள்ள வசனங்களில் துஆ கேட்டார்கள். பாதுகாப்பு வேண்டிய இடங்களில் பாதுகாப்புக் கேட்டார்கள்.
عَنْ حُذَيْفَةَ قَالَ إِذَا مَرَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ بِآيَةٍ فِيهَا تَسْبِيحٌ سَبَّحَ وَإِذَا مَرَّ بِسُؤَالٍ سَأَلَ وَإِذَا مَرَّ بِتَعَوُّذٍ تَعَوَّذَ. )مسلم -772(
‘நபி(ஸல்) அவர்கள்,தஸ்பீஹ் (அல்லாஹ்வை மகிமைப்படுத்துதல்) உள்ள வசனத்தை கடந்து சென்றால் தஸ்பீஹ் செய்வார்கள்;.வேண்டுதலை(துஆ) குறிக்கும் வசனத்தை கடந்து சென்றால் வேண்டுவார்கள்;. பாதுகாப்பு நாடுவதை(தஅவ்வுத்) குறிக்கும் வசனத்தை கடந்து சென்றால் பாதுகாப்பைத் தேடுவார்கள்.’ என ஹுதைஃபா(ரழி) கூறினார்கள்.(முஸ்லிம்:772)
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ لَا يَمُرُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ بِآيَةِ رَحْمَةٍ إِلَّا وَقَفَ فَسَأَلَ وَلَا يَمُرُّ بِآيَةِ عَذَابٍ إِلَّا وَقَفَ فَتَعَوَّذَ )أبو داود (873) والنسائي
‘அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், கருணையைப் பற்றிய வசனத்தை கடந்து செல்லும் போதெல்லாம் நிறுத்திவிட்டு அல்லாஹ்விடம் (கருணையை) வேண்டுவார்கள்; வேதனையைப் பற்றிய வசனத்தை கடந்து செல்லும் போதெல்லாம் நிறுத்திவிட்டு அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பை நாடுவார்கள்.’ என அவ்ஃப் இப்னு மாலிக்(ரழி) கூறினார்கள். (அபூதாவூத்:873,நஸாஈ)
இமாம் நவவி(ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ‘குர்ஆன் ஓதும் ஒருவர் தொழுகையில் இருந்தாலும் தொழுகைக்கு வெளியில் இருந்தாலும், கருணையைப் பற்றிய வசனத்தை கடந்து சென்றால் அல்லாஹ்விடத்தில் கருணையை வேண்டுவது, வேதனையைப் பற்றிய வசனத்தை கடந்து சென்றால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பை நாடுவது, தஸ்பீஹ்(அல்லாஹ்வை மகிமைப்படுத்துதல்) பற்றிய வசனத்தை கடந்து சென்றால் தஸ்பீஹ் செய்வது,உதாரணம் கூறும் வசனத்தை கடந்து சென்றால் அதைப் பற்றி ஆழமாக சிந்திப்பது(ததப்பூர் செய்வது) சுன்னத்தாகும் என இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்களும், எங்கள் மத்ஹபின் அறிஞர்களும் கூறியுள்ளார்கள்’.
‘எங்கள் (ஷாஃபிஈ மத்ஹபின்) அறிஞர்கள் கூறியதாவது: ‘இமாம், மஃமூம் மற்றும் தனியாகத் தொழுபவர் ஆகிய அனைவரும் இதைச் செய்வது விரும்பத்தக்கது (முஸ்தஹப்) ஆகும். மேலும், தொழுகையிலோ தொழுகைக்கு வெளியிலோ குர்ஆன் ஓதும் ஒவ்வொருவருக்கும் இவை அனைத்தும் முஸ்தஹப்பாகும். இது பர்ள் தொழுகையா அல்லது நஃபில் தொழுகையா, இமாமா, மஃமூமா, தனியாகத் தொழுபவரா என்பதில் வேறுபாடு இல்லை. ஏனெனில், இது ஒரு துஆ (இறைவனிடம் வேண்டுதல்) ஆகும். அதனால் ‘ஆமீன்’ கூறுவதுபோல் அனைவரும் இதில் சமமானவர்களாக உள்ளனர்.இந்த விடயத்திற்கு ஆதாரமாக ஹுதைஃபா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்(ஸஹீஹ் முஸ்லிம் :772)உள்ளது.'(அல்-மஜ்மூ-3ஃ562)
- அதனை அதிகமாக ஓதுவது
குர்ஆனுடன் தொடர்பான சட்ட திட்டங்களை சிறப்பாகக் கற்பதோடு அதனை கிரமமாக ஒதி வருவதும் சிறப்பான ஓர் இபாதத்தாகும்.
தனது நல்லடியார்களின் பண்புகளைப் பற்றிக் கூறும் அல்லாஹ் அவற்றில் முதலாவதாக குர்ஆன் ஓதுவதையே குறிப்பிடுகிறான்.
‘எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும் தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ, நாம் வழங்கியவற்றிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கொடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக என்றைக்கும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்தும் அவர்களுக்கு மிகுதப்படுத்துவான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும் நன்றியை ஏற்றுக் கொள்ளுபவனுமாவான்.’ (35:29-30)
குர்ஆனில் இருந்து முடிந்த அளவு ஓதுவது நல்லது.அல்லாஹ், ‘எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள்.’ (73:20) என்று கூறுகிறான்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்: ‘என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்: ‘ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘(அதை விடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது’ என்று கூறினேன். ‘அப்படியானால், ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய். அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே’ என்று கூறினார்கள். (புகாரீ :5054)
குர்ஆன் ஓதுபவருக்கான பலவகையான பயன்கள் கிட்டும்:-
ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மை:- நபி(ஸல்) கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதுவரானால், அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலீப், லாம், மீம் ஓர் எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக ‘அலிப்’ ஒர் எழுத்தாகும், ‘லாம்’ ஓர் எழுத்தாகும். ‘மீம்’ ஓர் எழுத்தாகும். (மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளைப் பெறுவார்). (திர்மிதி: 2910)
சிரமப்பட்டு ஓதிவது:- , சிரமப்பட்டு, திக்கித் திக்கியாவது ஓதுவதற்கு அதிக நன்மைகள் கிடைக்கும். நபியவர்கள் கூறினார்கள்:
الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ، وَهُوَ عَلَيْهِ شَاقٌّ، لَهُ أَجْرَانِ) أخرجه البخارى (4653)و مسلم(798)واللفظ له.
‘குர்ஆன் விடயமாக திறமைசாலியாக இருப்பவர், நல்லவர்களான, கண்ணியமிக்க எழுத்தாளர் (மலக்கு)களுடன் இருப்பார். எவர் குர்ஆனை திக்கித் திக்கி ஓதுகின்றாரோ, மேலும் அவருக்கு அது கடினமாகவும் இருக்கின்றதோ அவருக்கு இரட்டைக் கூலி உண்டு’ (புகாரி:4653,முஸ்லிம்:798)
காழி இயாழ்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘அவர் மலக்குகளுடன் இருப்பார்’ என்பதன் பொருள், அல்லாஹ்வின் வேதத்தை சுமக்கும் விடயத்தில் ‘மலாயிக்கா அஸ்-ஸஃபரா’ (வேதத்தை ஏந்தும்,எழுதும்) மலக்குகளை ஒத்தவராக அவர் இருப்பதனால், ஆகிரத்தில் உயர்ந்த நிலைகளில் அத்தகையவர்களுடன் தோழராக இருப்பார் என்பதாக இருக்கலாம்.'(ஷர்ஹ் அந்நவவி அலாமுஸ்லிம்:3ஃ152)
اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ، اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ، وَسُورَةَ آلِ عِمْرَانَ، اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ
நபி(ஸல்) அவர்கள் ‘குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் தன்னை ஓதிவருபவர்களுக்கு மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான ‘அல்பகரா’ மற்றும் ‘ஆல இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதிவாருங்கள். ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் வீணர்கள் செயலிழந்து போவார்கள்.’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்:1470)
يقالُ لصاحِبِ القرآنِ اقرَأ وارقَ ورتِّل كما كُنتَ ترتِّلُ في الدُّنيا فإنَّ منزلتَكَ عندَ آخرِ آيةٍ تقرؤُها) أخرجه أبو داود (1464)، والترمذي (2914)، والنسائي في ((السنن الكبرى)) (8056
நபி(ஸல்) அவர்கள் ‘(கியாமத் நாளில்) குர்ஆனுக்கு உடையவரிடம், ‘நீர் குர்ஆனை ஓதுவீராக! அந்தஸ்த்தால் உயருவீராக, உலகில் எவ்வாறு அதனை நிறுத்தி, அழகாக (தஜ்வீதுடன்) ஓதினீரோ அது போன்றே இங்கும் ஓதுவீராக. நீர் ஓதும் கடைசி ஆயத்தின் இடத்தில் உம் அந்தஸ்து உள்ளது’ எனக் கூறப்படும். (எவ்வளவு ஆயத்துகள் ஓதுகிறாரோ அவ்வளவு தூரத்துக்கு அவரது அந்தஸ்துகள் சுவர்க்கத்தில் உயர்த்தப்படும்.’எனக் கூறினார்கள். (அபூதாவூது:1464,திர்மிதி:2914)
5 . பிறர் குர்ஆன் ஓதுவதை கவனமாக செவிமடுப்பது
அல்லாஹ் கூறுகிறான் : ‘குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள்;. அப்பொழுது நிசப்தமாக இருங்கள். (இதனால்) நீங்கள் அருள்பாலிக்கப்படலாம்.'(7:204) குர்ஆனுக்கு செவிமடுப்பதால் அல்லாஹ்வின் இரக்கம் கிடைக்கும்.அதனால் தான் அல்லாஹ் ‘நீங்கள் அருள்பாலிக்கபடலாம்’ எனக்குறிப்பிடுகிறான்.
அபூமூஸா(ரலி): ‘நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ‘அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என என்னிடம் கூறினார்கள்.(புகாரி: 5048)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்கள்: (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள்!’ என்று கூறினார்கள். நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். எனவே, நான் ‘அந்நிஸா’ எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஓதினேன். ‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில் கொண்டு வரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’ எனும் (திருக்குர்ஆன் 4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘இத்துடன் போதும்!’ என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களைப் பார்த்தேன்; அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.'(புகாரி: 5050)
குர்ஆன் ஓதப்படும் போது பணிவு மற்றும் ஆழ்ந்த சிந்தனையுடன் செவிமடுக்க வேண்டும். அதில் மனதை முழுமையாக லயிக்கச் செய்வதோடு கவனத்தைச் சிதறடிக்கச் செய்யும் செயல்களைத் தவிர்த்தல் அவசியமாகும்.
‘இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்களது கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் .’எங்கள் இறைவனே! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவுசெய்துகொள்வாயாக!’ என்றும் அவர்கள் கூறுவார்கள்.’ (5:83)
- அதனை மனனம் செய்வது
குர்ஆனை மனனம்(ஹிஃப்ழ்) செய்வது இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பின்பற்றப்பட்டுவந்த ஒரு வழிமுறையாகும். நபிﷺ அவர்கள் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிﷺ அவர்களைச் சந்தித்து அவர்களுடன் குர்ஆனை மறுபரிசீலனை செய்துவந்தார்கள். (புகாரி:3220,முஸ்லிம்:2308)
إنَّ الَّذِي لَيْسَ في جَوْفِهِ شَيْءٌ مِنَ القُرْآنِ كَالبَيْتِ الخَرِب) سنن الترمذي 2913(
‘குர்ஆனின் சிறு பகுதியேனும் யாரது உள்ளத்தில் மனனம் இல்லையோ அது பாழடைந்த வீட்டைப் போன்றது.’ (திர்மிதி :2913) என்றார்கள்.
இந்த உலகிலும் மறுமையிலும் குர்ஆனை மனனம் செய்தவருக்கு பலவகையான சிறப்புகள் உள்ளன. தொழுகையில் இமாமத் செய்வதில், குர்ஆனை மனனம் செய்த நபரே மற்றவர்களை விட முன்னுரிமை பெறுவார். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ وَأَقْدَمُهُمْ قِرَاءَةً ‘அல்லாஹ்வின் வேதத்தை மக்களில் நன்கு ஓதத் தெரிந்தவரும், ஓதுவதில் சிறந்தவருமே அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்த வேண்டும்.’ (முஸ்லிம்:673) என்றார்கள்.
குர்ஆனைச் சுமந்தவரது ஜனாஸா மண்ணறையில் அடக்கம் செயப்படும் போது அவருக்கு முன்னுரிமை வழக்கப்படும்.
كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِقَتْلَى أُحُدٍ ’ أَىُّ هَؤُلاَءِ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ ’. فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى رَجُلٍ قَدَّمَهُ فِي اللَّحْدِ قَبْلَ صَاحِبِهِ
ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உஹத் போரில் ஷஹீதான ஒவ்வொரு இரண்டு பேரையும் ஒரே துணியில் கஃபனிட்டார்கள், பின்னர் ‘அவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?’ என்று கேட்பார்கள். அவர்களில் ஒருவர் (அவ்வாறு) சுட்டிக்காட்டப்பட்டால், அவரை முதலில் கப்ரில் வைப்பார்கள். அவர்கள், ‘நான் இவர்களுக்கு சாட்சியாக இருக்கிறேன்’ என்று கூறினார்கள். (புகாரீ :1347)
குர்ஆனை மனனம் செய்வது, அல்லாஹ்வின் திருப்தியையும் மறுமையின் நன்மையையும் நாடி செய்யப்படும் ஒர் இபாதத்தாகும். எனவே, அதனை மனனம் செய்பவர், அதன் மூலம் உலகப் பயன்களைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு செய்யக் கூடாது. ஏனெனில், குர்ஆன் மனனம், உலகில் வியாபாரம் செய்யும் ஒரு பொருளல்ல. தூய நிய்யத்தின்றி அதனை மனனம்செய்தால், அதற்கு நன்மை கிடையாது. மாறாக, இந்த வழிபாட்டை அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காகச் செய்ததற்காக தண்டனைக்கும் உள்ளாகலாம்.
எனவே, குர்ஆனை ஓதுதல், அதை கற்றல் மற்றும் பிறருக்கு கற்பித்தல் ஆகிய அனைத்திலும் இக்லாஸ் (அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யும் தூய நோக்கம்) அவசியமாக இருக்க வேண்டும்.
இதற்கான ஆதாரமாக, நபி(ஸல்) அவர்கள், கியாமத் நாளில் முதலில் நரகத்தில் எரியவிடப்படுவோர் பற்றி கூறிய ஹதீஸ் வருகிறது.
கல்வியைக் கற்று, அதைப் (பிறருக்குக்) கற்பித்து, குர்ஆனை ஓதிய ஒரு மனிதர் (மறுமை நாளில்) கொண்டுவரப்படுவார். அல்லாஹ் அவருக்குத் தன் அருட்கொடைகளை நினைவுபடுத்துவான்;. அவரும் அவற்றை அறிந்துகொள்வார். பிறகு (இறைவன்), ‘இதற்குப் பகரமாக நீ என்ன செய்தாய்?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘நான் கல்வியைக் கற்றேன்; அதைக் கற்பித்தேன்;. உனக்காக குர்ஆனை ஓதினேன்’ என்று கூறுவார். இறைவன், ‘நீ பொய் சொல்கிறாய். எனினும், ‘அறிஞர்’ என்று சொல்லப்படவே நீ கல்வியைக் கற்றாய்; ‘காரீ’ (குர்ஆனை ஓதுபவர்) என்று சொல்லப்படவே குர்ஆனை ஓதினாய்; அவ்வாறே சொல்லப்பட்டது’ என்று கூறுவான். பிறகு அவரைக் குறித்துக் கட்டளையிடப்பட்டு, அவர் முகம்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசப்படுவார்.’ (முஸ்லிம்: 1905)
எனவே, அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு மாத்திரமே குர்ஆனை அணுக வேண்டும். இல்லாத போது அது மறுமையில் தோல்வியையே ஏற்படுத்தும்.
அல்குர்ஆனை மனனம் செய்து பாதுகாப்பது போலவே எழுத்துருவிலும் அதனை பாதுகாப்பது அவசியமாகும்.அதனை பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்குறுதியளித்திருக்கிறான். இருப்பினும் மனிதர்கள் என்றவகையில் எமக்கும் கடப்பாடுகள் உள்ளன. அபூபக்கர்(ரலி),உஸ்மான்(ரலி),ஸைத் பின் தாபித்(ரலி), ஹப்ஸா(ரலி) ஆகியோர் அல்குர்ஆனை தொகுப்பதற்கு எடுத்த முயற்சிகள் இங்கு குறிப்பிடத்தக்க முன்மாதிரிகளாகும்.
மற்றொரு வகையான பாதுகாப்பையும் நாம் அல்குர்ஆனுக்கு வழங்க வேண்டும். அதாவது, அல்குர்ஆனுக்கு எதிரான விமர்சனங்களை முறியடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும். அல்குர்ஆனுக்கும் அதன் கருத்துக்களுக்கும் எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற பொழுது அவற்றுக்கு பதிலடி கொடுப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் கடமைப்பட்டிருக்கின்றான். அதன் புனிதத் தன்மையை நிறுவும் வகையில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வது, நூல்களை எழுதுவது போன்றன இந்தவகையில் அடங்கும்.
- அதன் வசனங்களது கருத்துக்களைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பது
அல்குர்ஆன் வெறுமனே ஓதுவதற்காக மட்டும் வந்த வேதமல்ல.அதனை ஆழமான ஆய்வுக்கு உட்படுத்துவதும் அதன் கருத்துக்களைப் பற்றி சிந்திப்பதும் அவசியமாகும்.
كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ) ص: 29(
‘(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் ஆழமாக ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.’
وَلَقَدْ صَرَّفْنَا فِیْ هٰذَا الْقُرْاٰنِ لِیَذَّكَّرُوْا
‘இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்.’ (17:41)
اَفَلَا یَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰی قُلُوْبٍ اَقْفَالُهَا
‘அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களுடைய இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டுவிட்டனவா?’ (47:24)
எனவே, நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் .. அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டுவிட்டனவா? அவர்கள் ஏன் அதைப்படித்து இருக்கின்றார்கள் செயல்படாமல்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான்.
‘நிச்சயமாக, இக்குர்ஆனை (அவர்கள்) நன்கு நினைவுபடுத்திக்கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்;.எனவே,(இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?’ (54:22)என்றும் வினவுகிறான்.
8.அதன்படி வாழுவது
நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்குர்ஆனுக்கு கட்டுப்பட்டதாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே அல்குர்ஆன் இறக்கி அருளப்பட்டதன் முக்கியமான நோக்கமாகும். நடமாடும் அல்குர்ஆன்களை உருவாக்கும் நோக்குடன் வாழ்ந்த நபியவர்கள் அதனை ஓதியதுடன் முழுக்க முழுக்க அதன்படியே வாழ்ந்தார்கள். எனவே, ஆயிஷா நாயகி(ரழி) அவர்கள் كان خُلُقُه القُرآنَ ‘அவர்களது பண்பாடுகள் குர்ஆனாக இருந்தன’ (அஹ்மத் 25303, நஸாஈ:1601) எனக் கூறினார்கள்.
இங்கு வந்துள்ள அல்-குலுக் என்பது நல்லொழுக்கத்தையும் இயல்பையும் குறிக்கும்.; சிலர் அதனை ‘தீன்'(மார்க்கம்) என்றும் கூறியுள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், குர்ஆன் எடுத்துரைத்த முழுமை வாய்ந்த அனைத்து நற்பண்புகளையும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வு கொண்டிருந்தது. அல்லாஹ் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் பின்பற்றினார்கள்;. அல்லாஹ் தடைசெய்த அனைத்திலிருந்தும் வாக்கிலும் செய்கையிலும், வாக்குறுதிகளிலும் எச்சரிக்கைகளிலும் விலகியிருந்தார்கள். குர்ஆனில் அழகாகக் கருதப்பட்டு, புகழப்பட்டு, அழைப்பு விடுக்கப்பட்ட அனைத்து நற்பண்புகளையும் அவர்கள் தனது அணிகலன்களாகக் கொண்டிருந்ததுடன் குர்ஆன் வெறுத்து, தடைசெய்த அனைத்திலிருந்தும் தன்னைத் தூரப்படுத்திக் கொண்டார்கள். அன்னார் மாபெரும் ஒழுக்கத்தின் சொந்தக்காரராகத் திகழ்ந்து ஆழ்ந்த அறிவுள்ள, உள்ளத்தையும், அதிகமான இறை வழிபாட்டையும், பூரண ஈமானையும், உண்மைத் தன்மையையும், துணிச்சலையும், பொறுமையையும், தூய்மையையும், பொறுமையுடன் கூடிய நிதானத்தையும் (ஹில்ம்) மற்றும் இதர நற்பண்புகளையும் உடையவராக இருந்தார்கள். அதனால், நபி(ஸல்) அவர்களில் குர்ஆன் மனித உருவம் எடுத்ததைப் போல அவர்களைக் காண முடிந்தது.
அதேபோல அன்னாரது தோழர்களும் தோழியர்களும் அல்குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன.
குறிப்பாக அந்த குர்ஆனை ஓதித் தொழும் வழக்கம் தோழர்களிம் காணப்பட்டது. எனவே,நபி(ஸல்) அவர்கள் ‘இரண்டு (பேரின்) விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமைகொள்ளக்கூடாது.’ என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதிவழிபடுகிறார்.’ (புகாரி:5025) என்றார்கள்.
மற்றொரு ஹதீஸில் நபியவர்கள் ‘இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமைகொள்ளக்கூடாது.’ என்று கூறிவிட்டு அதில் ஒன்றாக, ‘ஒருவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத் தந்தான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் ஓதிவருகிறார். இதைக் கேள்விப்பட்டு அவரின் அண்டைவீட்டுக்காரர், ‘இன்னாருக்குக் வழங்கப்பட்டது போல் எனக்கும் வழங்கப்பட்டிருந்தால் நானும் அவர் செயல்படுவது (ஓதுவது) போல் செயல்பட்டிருப்பேனே (ஓதியிருப்பேனே)!’என்று கூறுகிறார்’ என்றும் குறிப்பிட்டார்கள்.
எனவே,குர்ஆனை இரவு பகலாக ஒதிவருவதுடன் அதனை ஓதித் தொழும் வழக்கத்தையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு ஓதித் தொழுவது அதன்படி அமல் செய்யும் பிரிவில் அடங்கும்.
وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَٰذَا الْقُرْآنَ مَهْجُورًا )الفرقان:30(
‘என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்’ என்று (நம்)தூதர் கூறுவார்.’ (அல்புர்கான் :30)
இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும் இமாம் ஷன்கீதீ (ரஹ்): ‘இது மிகவும் பயங்கரமான ஒரு முறையீடு (புகார்)ஆகும். இந்த மாபெரும் குர்ஆனை புறக்கணிப்பவர்களுக்கு இதில் மிகக்கடும் எச்சரிக்கை உள்ளது. அவர்கள் இதில் கூறப்பட்ட ஹலால்–ஹராம்களை நடைமுறைப்படுத்தாமல்,அதிலுள்ள ஒழுக்கங்களையும் நற்பண்புகளையும் பின்பற்றாமல்,அதில் விளக்கப்பட்ட அகீதா(நம்பிக்கைகள்) மீது உறுதியான ஈமான் கொள்ளாமல், மேலும் அதிலுள்ள கடும் எச்சரிக்கைகள், நிகழ்ச்சிகள் (கதைகள்), உவமைகள் ஆகியவற்றில் இருந்து பாடம்பெறாமல் இருந்தால் இவ்வாறான அனைவரையும் இந்த வசனம் கடுமையாக எச்சரிக்கிறது.’ (அள்வாஉல்பயான் -6:48) எனக் கூறுகிறார்.
இந்த வசனத்தில் கூறப்பட்ட ‘குர்ஆனை புறக்கணித்தல்’என்ற விடயம் பலவகைப்படும்.
இமாம் இப்னுல் கய்யிம்(ரஹ்) :குர்ஆனைப் புறக்கணிப்பது (هجر القرآن) என்றால் அது பின்வரும் வகைகளில் அமையலாம் என்கிறார்:-
- அதை செவிமடுக்காமலும் அதனை ஈமான் கொள்ளாமலும் இருப்பது.
- அதன்படி செயல்படாமல், அதில் உள்ள ஹலால்–ஹராம் எல்லைகளில் நின்று நடக்காமல் இருப்பது.
- அதனை சட்டமாக்கி தீர்ப்பு வழங்காமல், அதனிடம் தீர்வு தேடாமல் இருப்பது.
- அதனை ஆழமாக சிந்தித்து (ததப்புர்) புரிந்து கொள்ளாமல் இருப்பது.
- இதய நோய்கள் மற்றும் அவற்றின் குறைகளுக்கு குர்ஆனை மருந்தாகவும் சிகிச்சையாகவும் பயன்படுத்தாமல் இருப்பது.'(அல்-பவாயித்,இப்னுல் கய்யிம்,பக்கம் 82)
وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَاتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
‘(மனிதர்களே!) இதுவும் வேதமாகும்;.இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம்.(இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது. ஆகவே, இதனைப் பின்பற்றுங்கள். இன்னும்(அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.’ (6:155) என அல்லாஹ் கூறுகிறான்.
يُؤْتَى بالقُرْآنِ يَومَ القِيامَةِ وأَهْلِهِ الَّذِينَ كانُوا يَعْمَلُونَ به، تَقْدُمُهُ سُورَةُ البَقَرَةِ وآلُ عِمْرانَ، وضَرَبَ لهما رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ ثَلاثَةَ أمْثالٍ ما نَسِيتُهُنَّ بَعْدُ؛ قالَ: كَأنَّهُما غَمامَتانِ، أوْ ظُلَّتانِ سَوْداوانِ، بيْنَهُما شَرْقٌ، أوْ كَأنَّهُما حِزْقانِ مِن طَيْرٍ صَوافَّ، تُحاجَّانِ عن صاحِبِهِما.
அன்-நவ்வாஸ் இப்னு சம்ஆன்(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:’அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: ‘மறுமை நாளில் குர்ஆனும், அதன்படி அமல் செய்தவர்களும் கொண்டுவரப்படுவார்கள்;. சூரத்துல் பகராவும் ஆலஇம்ரானும் அவர்களுக்கு முன்னே செல்லும்.’ அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அந்த இரண்டு சூராக்களையும் மூன்று விஷயங்களுக்கு ஒப்பிட்டார்கள்.அந்த ஒப்பீட்டை நான் அதன்பின் மறக்கவில்லை. நபி(ஸல்)அவர்கள் அவற்றை இரண்டு மேகங்கள் என்றோ, அல்லது அவற்றுக்கு இடையில் ஒளி உள்ள இரண்டு கரிய பந்தல்கள் என்றோ, அல்லது அவற்றை ஓதியவருக்காகப் பரிந்து பேசும் விதத்தில் அணிவகுத்து நிற்கும் இரண்டு பறவைக் கூட்டங்களைப் போன்றது என்றோ ஒப்பிட்டார்கள்.(முஸ்லிம்:805)
‘அதன்படி செயலாற்றியவர்கள்’ என்ற சொல்லானது குர்ஆனை வாசித்து அதன்படி செயல்படாதவர், ‘அஹ்லுல் குர்ஆன்'(குர்ஆனின் மக்களுள்) ஒருவராக இருக்கமாட்டார் என்பதைக் காட்டுகிறது.மேலும், குர்ஆன் அவர்களுக்காக பரிந்துரை செய்யவும்மாட்டாது. மாறாக, குர்ஆன் அவர்களுக்கு எதிரான சாட்சியாகவே இருக்கும்.’ (மிர்காதுல் மஃபாத்தீஹ்,ஷரஹு மிஷ்காத்தில் மஸாபீஹ்- 4ஃ1461)
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ‘குர்ஆனை ஓதி அதன்படி செயலாற்றும் இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்;. அதன் சுவையும் நன்று. வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர் பேரீச்சம்(பழம்) போன்றவர்.அதன் சுவை நன்று.(ஆனால்,)அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலை துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது.அதன் வாசனை நன்று. அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் கசப்பானது.அல்லது அருவருப்பானது. அதன் வாடையும் வெறுப்பானது.’ (புகாரி: 5059, முஸ்லிம்: 799)
குர்ஆனில் விளக்கமில்லாமல் வெறுமனே ஒதிக்கொண்டிருந்த கவாரிஜ்கள் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,’இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச்சிறந்த சொல்லை(திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள்.அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உட)லிருந்து (வேடன் எறிந்த)அம்பு(அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது.அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள்.ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்.’ என்று கூறினார்கள்.(புஹாரி :3611)
குர்ஆனின் சட்டங்களை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஆணித்தரமான கட்டளையாகும்.
وَأَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ ) المائدة:48).
‘மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே,அல்லாஹ் அருள்செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச்செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மனஇச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம்.’ (மாயிதா:48)
அவ்வாறு அதனை நாம் பின்பற்றாத போது அது இறை நிராகரிப்பகவே கருதப்படும்.
وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ ۟
‘என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள் தாம்.’ (5:44)
குர்ஆனின் போதனைகளை வாழ்வில் எடுத்து நடப்பது மிகப்பெரிய பாக்கியமாகும்.
من قرأ القرآنَ وتعلَّم وعمِل به أُلْبِس والداه يومَ القيامةِ تاجًا من نورٍ ضوءُه مثلُ الشَّمسِ ويُكسَى والداه حُلَّتَيْن لا يقومُ لهما الدُّنيا فيقولان بمَ كُسينا هذا فيُقالُ بأخذِ ولدِكما القرآنَ )أخرجه الحاكم 2086(
நபிﷺ அவர்கள் கூறினார்கள்: ‘குர்ஆனை வாசித்து, கற்றுக் கொண்டு, அதன்படி அமல்செய்பவரின் பெற்றோருக்கு, மறுமை நாளில் ஒளியால் ஆன ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அதன் ஒளி சூரியனைப் போன்றதாக இருக்கும். மேலும், இரண்டு ஆடைகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். இவ்விரண்டிற்கும் இவ்வுலகமும் ஈடாகமாட்டாது.அவர்கள், ‘எதற்காக எங்களுக்கு இவை அணிவிக்கப்பட்டன?’ என்று கேட்பார்கள். அதற்கு,’உங்கள் மகன் குர்ஆனைப் பெற்றுக் கொண்டதற்காக (கற்று அமல் செய்ததற்காக)’ என்று கூறப்படும்.'(அல்-ஹாக்கிம் -2086)
குர்ஆனுடனான தொடர்பு என்பது அறிவும் செயல்பாடும் இணைந்ததாக இருக்கவேண்டும்.நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் கூறியதாவது: ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து பத்து ஆயத்துக்களை கற்றுக்கொள்வோம்.அதில் உள்ள அறிவையும் செயல்பாடையும் முழுமையாக கற்றுக்கொள்ளும் வரை அடுத்த பத்து ஆயத்துகளுக்குச் செல்லமாட்டோம். இவ்விதமாகவே நாங்கள் அறிவையும் செயலையும் ஒன்றாகக் கற்றோம்.’ (அஹ்மத்: 23482,இப்னு அபீஷைபா: 29929)
அதேபோல்,இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘எங்களில் ஒருவர் பத்து ஆயத்துகளை கற்றுக்கொண்டால்,அவற்றின் அர்த்தங்களை அறிந்து, அதன்படி செயல்படும் வரை அதைத் தாண்டிச் செல்லமாட்டார்.’ (அஹ்மத்:23482)
குர்ஆனுடன் சம்பந்தப்பட்டிருப்பபவரது வாழ்வில் அது பிரதிபலிக்க வேண்டும்.
وعن عبدِ اللهِ بنِ مسعودٍ رَضِيَ اللهُ عنه قال: (ينبغي لحامِلِ القرآنِ أن يُعرَفَ بليلِه إذا النَّاسُ نائِمون، وبنهارِه إذا النَّاسُ يُفطِرون، وبحُزنِه إذا النَّاسُ يَفرَحون، وببُكائِه إذا النَّاسُ يَضحَكون، وبصَمتِه إذا النَّاسُ يخوضون، وبخُشوعِه إذا النَّاسُ يختالون، وينبغي لحامِلِ القرآنِ أن يكونَ باكيًا محزونًا حليمًا سكيتًا لَيِّنًا، ولا ينبغي لحامِلِ القرآنِ أن يكونَ جافيًا ولا غافلًا، ولا سخَّابًا ولا صيَّاحًا، ولا حديدًا) (الزهد لأبي داود -ص: 170(
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்கள்: ‘குர்ஆனை சுமப்பவர் (ஹாமிலுல் குர்ஆன்), மக்கள் உறங்கும் இரவில் அவருடைய இரவால் அவர் அறியப்பட வேண்டும்;. மக்கள் நோன்புபிடிக்காது இருக்கும் போது அவருடைய பகலால் அவர் அறியப்பட வேண்டும்;. மக்கள் மகிழும் போது, அவருடைய சோகத்தால் (அச்சத்தாலும் பணிவாலும்) அவர் அறியப்பட வேண்டும்;. மக்கள் சிரிக்கும் போது, அவருடைய அழுகையால் அவர் அறியப்பட வேண்டும். மக்கள் வீண் பேச்சில் ஈடுபடும் போது, அவருடைய மௌனத்தால் அவர் அறியப்பட வேண்டும்;. மக்கள் அகந்தை காட்டும் போது, அவருடைய பணிவால் அவர் அறியப்பட வேண்டும். குர்ஆனை சுமப்பவர் அழுபவராகவும், சோகமானவராகவும், பொறுமையுடையவராகவும், அமைதியானவராகவும், மென்மையானவராகவும் இருக்க வேண்டும்.அவர் கடினமானவராகவும், கவனக்குறைவானவராகவும், சத்தமிடுபவராகவும், கூச்சலிடுபவராகவும், கடுமையானவராகவும் இருக்கக் கூடாது.’ (அஸ்ஸுஹ்த்,அபூதாவூத்:பக்.170)
அல்குர்ஆனுடன் மிகச் சரியான உறவைப் பேணும் ஒருவருக்கு மரியாதை செய்வது அல்லாஹ்வுக்கு மரியாதை செய்வதற்குச் சமனாகும்.
إنَّ من إجلالِ اللَّهِ إِكْرامَ ذي الشَّيبةِ المسلِمِ ، وحاملِ القرآنِ غيرِ الغالي فيهِ والجافي عنهُ ، وإِكْرامَ ذي السُّلطانِ المقسِطِ أخرجه أبو داود (4843)، وابن المبارك في ((الزهد والرقائق)) (388)، وابن أبي شيبة (32561 وحسنه النووي في ‘رياض الصالحين’ (رقمஃ358(
நபிﷺ அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வை மதிப்பதிலான ஒரு பகுதி என்னவெனில், முஸ்லிமான வயோதிபருக்கு மரியாதை செய்வதும், குர்ஆனில் அளவுக்கு மீறிச் செல்லாமலும் அதனை அலட்சியம் செய்யாமலும் இருக்கும் குர்ஆனைச் சுமப்பவருக்கு மரியாதை செய்வதும், நீதியுடன் ஆட்சி செய்யும் அதிகாரம் கொண்டவருக்கு மரியாதை செய்வதும் ஆகும்.’ (அபூதாவூத்:4843,இப்னு முபாரக்,அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக் :388), இப்னு அபீஷைபா:32561)
ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَتْلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُوْلَٰٓئِكَ يُؤْمِنُونَ بِهِۦ ۗ وَمَن يَكْفُرْ بِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ (البقرة:121)
‘யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதிஒழுகிட வேண்டுமோ அவ்வாறு ஓதுகிறார்கள்;.அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே’. (பகரா: 121)
இந்த வசனத்தில் வரும் (حق التلاوة) ‘உண்மையான ஓதல்’ என்பதன் பொருள்:அதை உண்மையாகப் பின்பற்றுதல், அதன்படி வாழ்தல் என்பதாகும்.
இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறியதாவது: ‘என் உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! குர்ஆனை அதன் ‘உண்மையான ஓதுதலுடன் ஓதுவது’ என்றால், அதில் ஹலால் என அனுமதிக்கப்பட்டவற்றை ஹலாலாக ஏற்றுக்கொள்வதும், ஹராம் எனத் தடைசெய்யப்பட்டவற்றை ஹராமாகக் கருதுவதும், அல்லாஹ் எவ்வாறு இறக்கினானோ அதேபோல அதனை ஓதுவதுமாகும். வார்த்தைகளை அவற்றின் இடங்களிலிருந்து மாற்றிவிடக்கூடாது. அதில் உள்ள எந்த ஒன்றையும் அதன் சரியான விளக்கத்துக்கு மாறாக தவறான விளக்கமாக எடுத்துக்கொள்ளவும் கூடாது.’ (தஃப்ஸீர் இப்னு கஸீர், தொகுதி 1, பக்கம் 404)
குர்ஆனைச் செயல்படுத்துதல் இரண்டு நிலைகளைக் கொண்டதாகும்:-
அ) தனிநபர் நிலை:
ஈமான், தொழுகை நிறைவேற்றுதல், ஸகாத் வழங்குதல், நல்ல குணநலன், நல்ல நடத்தை, இனிய மனித உறவுகள் போன்றவை. இவை, ஒரு மனிதன் இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாட்டிலோ, முஸ்லிம்கள் அல்லாத சமுதாயத்திலோ வாழ்ந்தாலும், தனிப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்த முடியும்.
ஆ) சமூக (உம்மா) நிலை:
குர்ஆனை அரசின் அரசியலமைப்பாக (துஸ்தூர்) ஏற்று, அதன் நீதியையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துதல்; அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கை, கல்வி, நீதித்துறை என வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும், கடுமையோ அலட்சியமோ இன்றி, முழுமையாக அதன் இரக்கத்தையும் ஆசீர்வாதத்தையும் பரப்புதல்.
இதற்காக அல்லாஹ் தம் நபிக்கு கட்டளையிடுகிறான்: ‘இன்னும் அல்லாஹ் அருள்செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மனேஇச்சைகளைப் பின்பற்றாதீர். அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக!’ (மாயிதா: 49)
- அதனை கற்பதும் கற்றுக் கொடுப்பதும்
قَالَ النَّبِيِّ -صلي الله عليه وسلم ( خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ). أخرجه البخاري (4739).
நபிﷺ அவர்கள் ‘குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர்’ (புகாரி:4739) என்றார்கள்.
இப்னு ஹஜர்(ரஹ்): ‘குர்ஆன் எல்லா அறிவுகளிலும் மிக உயர்ந்தது. ஆகையால், குர்ஆனை கற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கு கற்பிப்பவர், குர்ஆன் அல்லாத பிற அறிவுகளை மட்டும் கற்றுக் கொண்டு அவற்றைக் கற்பிப்பவரை விட மிகச்சிறந்தவர். சந்தேகமின்றி, குர்ஆனை கற்பது, கற்பிப்பது அகிய இரண்டையும் ஒன்றாக இணைப்பவர், தன்னையும் பிறரையும் பரிபூரணமாக்குபவராக இருப்பார். அவர் தனக்கே உண்டாகும் நன்மையும் (நஃப்உல் காஸிர்), பிறருக்கும் பரவும் நன்மையும் (நஃப்உல் முத அத்தி) ஒன்றாகச் சேர்த்தவராவார். இதனால் தான் அவர் மிகச் சிறந்தவராக இருக்கிறார்.’ எனக் கூறினார்கள். (பத்{ஹல் பாரி, இப்னுபாஸ்(ரஹ்) அவர்களின் குறிப்புரை (9/76)
இமாம் ஷர்கஷீ தனது ‘அல்புர்ஹான்’ எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:- ‘குர்ஆனை கற்பிப்பது பர்ளு கிஃபாயாவாகும். அதனை மனனமிடுவது உம்மத்தின் மீதான கடமை. குர்ஆனை ஓதும் எவரும் ஓர் ஊரில் இல்லாத போது அனைவரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என எனது தோழர்கள் கூறினார்கள்.’ (அல்புர்ஹான் :1/ 456)
குர்ஆனை கற்றல், கற்பித்தல் என்பதன் மூலம் குர்ஆனிய சொற்களையோ அதன் எழுத்துக்களையோ மனனமிடுவதை மாத்திரம் குறிக்கமாட்டாது. அதனை கற்பது, கற்பிப்பது என்ற விடயம் ஹதீஸ்களில் ‘ததாருஸ்’ என்ற சொல்லால் குறிக்கப்பட்டிருக்கிறது.
‘அல்லாஹ்வின் வீடுகளில் ஒன்றில் ஏதாவது ஒரு குழுவினர் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, தமக்கு மத்தியில் அதனை ‘ததாருஸ்’ செய்தால் அவர்கள்மீது சாந்தி இறங்கும். அவர்களை அருள் மூடிக்கொள்ளும். மலக்குகள் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தன்னிடத்தில் இருப்பவர்களிடம் அவர்களைப் பற்றி பிரஸ்தாபிப்பான்.’ (முஸ்லிம்: 2699)
இங்கு வந்துள்ள ‘ததாருஸ்’ என்பது அல்குர்ஆனின் சொற்கள், அதன் கட்டமைப்பு, அதனது கருத்துக்கள், அது காட்டித் தரும் படிப்பினைகளைகள், அது சொல்லும் சட்டங்கள், ஒழுங்குகள் என்பவற்றை கண்டறிவதற்கு முயற்சிப்பதைக் குறிக்கும்.
அரபில் ‘ததாரஸ’ என்றால் பரஸ்பரம் கற்பதை குறிக்கும். அங்கு ஒருவர் கேள்வி கேட்க அடுத்தவர் பதிலளிப்பார். மற்றொருவர் விடுபட்டதை கேட்பார். இன்னொருவர் திருத்திக் கொடுப்பார். அல்லது முழுமைப்படுத்துவார். இதுதான் ‘ததாருஸ்’ என்பதன் பொருளாகும்.
வருடத்தில் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் நபியவர்கள் ஜிப்ரயீல்(அலை) அவர்களோடு இப்பணியில் தான் ஈடுபட்டார்கள். நபியவர்களிடத்தில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வருகின்றபொழுது அவருக்கு குர்ஆனை ‘முதாரஸா’ பண்ணுவார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிட்டார்கள்.
குர்ஆனை கற்பது என்பதன் மூலம் அதன் வரிகளை மனனமிட்டுவிட்டு அதன் கருத்துக்களை தெரியாமல் இருப்பதல்ல. வெறுமனே மனனமிடுவதற்கு நன்மை இருக்கிறது. ஆனால், ஒருவர் தன்னால் முடிந்த அளவு அதனை ஆராய்ச்சி பண்ணுவதற்கு முயற்சிக்க வேண்டும்.(கர்ளாவி:கைப நதஆமலு மஅல்குர்ஆன் பக்: 170)
அல்குர்ஆனின் கருத்துக்களை சமூகமயப்படுத்தாமல் அவற்றை மறைத்து வைத்திருப்பதும் அற்பமான உலக இலாபங்களுக்காக அவற்றைத் தாரைவார்ப்பதும் பாரிய பாவங்களாகும்.
إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا ۙ أُولَٰئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
‘எவர்கள், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகையைப் பெற்றுக்கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்;. அவர்களைப் பரிசுத்தமாக்கவும்மாட்டான்;.அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.’ (2:174)
ஆகவே,எமது ஈருலக விமோசனத்திற்காக அருளாளன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அல்குர்அனுக்கான கடமைகளைச் செவ்வனே நிறைவெற்றி அவனது திருப்தியையும் அவன் தயார்செய்து வைத்துள்ள மகத்தான கூலிகளையும் அடைந்து கொள்வோமாக! அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!!
அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் (17.01.2026)




