நீங்கள் “தக்வாதாரிகளாக மாறலாம்” என்ற எதிர்பார்ப்புடன் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்ற அந்த ஒரே இலக்கு மறக்கப்பட்டு சமூகம் வேறு சிக்கல்களில் சிக்க வைக்கப்படுமோ என்ற பயமும் உருவாகிறது. ஒவ்வொரு முறை ரமழான் வருகின்ற பொழுதும் இந்த ‘பயம்’ வருவதுண்டு.
தற்போது ஷஃபான் மாதம் பற்றிய சர்ச்சை
இனி தலைப் பிறை விவகாரம்
அடுத்து தராவீஹ் தொழுகையின் ரக்அத்துக்கள் பற்றிய சர்ச்சை
என்று அவை தொடரும்
இந்த விவகாரங்களை அறிவு பூர்வமாக, ஆராய்ச்சி மனப்பாங்கோடு, பிறருக்கும் கருத்து சொல்வதற்கும் அபிப்பிராயம் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது என்ற பரந்த மனப்பாங்கோடு அணுகினால் எந்தத் தவறும் தப்பும் கிடையாது.
மாறாக பிடிவாதத்தோடு, பிறரது கருத்துக்களை மதிக்காமல், தனக்கு மாத்திரமே கருத்தைச் சொல்ல உரிமை உண்டு என்ற மனோ நிலையில் இருந்து கருத்து வெளியிடுகின்ற பொழுதுதான் சர்ச்சை வருகிறது.
வரலாறு நடுகிலும் எமது இமாம்கள் ‘எனது கருத்து சரியானது மற்றையவரின் கருத்து பிழையானது ஆனால் அந்த பிறரது கருத்தில் உண்மை இருக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறினார்கள்.
முடிந்த முடிவான, அடிப்படையான அம்சங்களில் கருத்து வேறுபாடு வருவதே கிடையாது. ஆனால் சில போது ஒரு பக்கத்திற்கு ஆதாரங்கள் இருப்பது போன்றே இன்னொரு பக்கத்துக்கும் ஆதாரங்கள் இருக்கும்.
அப்படியான விவகாரங்கள் கியாமத்து வரை இருந்து கொண்டே இருக்கும். அப்படியான விவகாரங்களில் அறுதியிட்டு உறுதியாக எதனையும் கூற முடியாது.
அல்லாஹ்வும் ரசூலும் நாடியிருந்தால் அதனை திட்டவட்டமாகவே கூறியிருப்பார்கள். அப்படி இருக்க இஜ்திஹாதிற்கு உட்பட்ட விவகாரங்களில் பரஸ்பரம் மோசமான சொற்களை பிரயோகித்து கடுமையான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு எமது பொன்னான கால நேரங்களை வீணடிப்பது தான் மிகப்பெரிய கவலை தருகின்றது.
உலகத்திலும் நமது நாட்டிலும் பல்லாயிரக்கணக்கான விவகாரங்கள் அதி முக்கியத்துவம் கொடுத்து நோக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. ஆனால் பலருக்கு அவை பற்றிய கரிசனை இருப்பதில்லை. அவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
தற்காலத்தில் மனிதர்களது ஈமானுக்கே வேட்டு வைக்கப்படுகிறது. இபாதத்துக்களில் பலவீனம் இருக்கிறது.
எமது தனித்துவங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. MMDA , Waqf, மத்ரஸாக்களதும் இஸ்லாம் பாடத்தினதும் பாடத்திட்ட சர்ச்சை என்று முடிவுறாத சர்ச்சைகள்.
போதை வஸ்து பாவனை உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது.
பல குடும்பங்கள் விவாகரத்தில் முடிகின்றன. வருடத்திற்கு முஸ்லிம் சமூகத்தில் 15000 திருமணங்கள் நடப்பதாகவும் 2,500 திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாகவும் ஒரு புள்ளி விவரம் சொல்லுகிறது. நீதி அமைச்சின் கருத்தின் படி பொதுவாக 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன.
2000 சிறுவர்கள் போதை வஸ்து பாவனை தொடர்பான குற்றங்களுக்காக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுவர் துஷ்பிரயோகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
வறுமை என்பது மக்களுக்கு மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இரண்டு வேளையும் இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் ஒரு வேளையும் சாப்பிட நேரிட்டிருக்கிறது.
இலங்கையில் 65 சதவீதமானவர்கள் தமது மாதாந்த வருமானத்தை மூன்று நேர உணவுக்காக மட்டுமே ஒதுக்குகிறார்கள் என்று திவய்ன பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு கூறுகிறது.
பாடசாலைகளில் கூட முறைகேடான நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன.
சர்வதே ரீதியாகவும் முஸ்லிம்கள் மிகப் பெரும் சோதனைகளை சந்தித்து வருகிறார்கள்.
இப்படியே தகவல்களை அடுக்கிக்கொண்டே போக முடியும்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு சமூகத்தை வழிநடத்த வேண்டிய, நீண்ட இலக்குகளோடு பயணிக்க வேண்டிய நாம் பிக்ஹ் ரீதியான சர்ச்சைகளில் சிக்கி காலத்தையும் நேரத்தையும் வீணாக்குவது என்பது மிகப்பெரிய கவலை தருகிறது.
எனவே புனிதமான ரமழானை சந்தோசமாக வரவேற்க தற்போதிருந்தே தயாராகும். அதற்காக திட்டமிடுவோம்.
சமூகம் உலமாக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் மிக அதிகமான எதிர்பார்க்கையை வைத்திருக்கிறது.அதனை அவர்கள் வீணடித்து விடக்கூடாது.
தக்வாவை, இறை நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் சமூக மேம்பாட்டு திட்டங்களை அதிகரிப்பதற்கும் நாம் முயற்சிகளை செய்வோம்.
அல்குர்ஆனை தஜ்வீத் சட்டங்களின் அடிப்படையில் ரமழானில் அதிகமாக ஓதுவதற்கும் அதனை படிப்பதற்கும் விளங்குவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.
இரவு நேர வணக்கங்களில் ஆர்வத்தோடு ஆசையோடு மக்கள் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை செய்வோம். மக்களுக்கு மார்க்கத்தின் பல அம்சங்களில் தெளிவின்மை காணப்படுகிறது. மிகப்பெரும் பாவங்களில் மக்கள் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.இவற்றில் இருந்து அவர்களை விடுவிக்க ஏற்பாடுகளை செய்வோம்.
இஸ்லாத்தின் மிக அடிப்படையான பண்பாடுகளை எனது சமூகத்தின் அணிகலன்களாக மாற்றுவதற்கு அதிக முயற்சிகள் செய்ய வேண்டி இருக்கிறது.
ஸகாத் ஸதகா பித்ரா போன்றவற்றை முறையாக மக்கள் கொடுப்பதற்கும் வழி வகைகள் செய்வோம்.
வல்லவன் அல்லாஹ் எம் அனைவரையும் புரிந்து கொள்வானா




