தலைப்பு அதிசயமாக உள்ளதா?
பாலஸ்தீன மக்களில் ஷஹீதானவர்கள் உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார்கள். ஆனால் அவர்கள் பெரும் சாதனைகளை ஈட்டிவிட்டார்கள்.
அது எப்படி?
அதனை ஹுதைபியா உடன்படிக்கைக்கு கிடைத்த வெற்றிக்கு ஒப்பிட முடியும்.
75 வருடமாக பாலஸ்தீனர்கள் மீது யூதர்கள் பலவிதமான அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டு வந்தார்கள். உலக மக்களுக்கு இந்த அராஜகங்களை தெரிந்து கொள்ள வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்தன. இந்தத் தடவை பாலஸ்தீனர்கள் ஆயிரக் கணக்கில் ஷஹீதாகியதன் பின்னர் தான் பல மாற்றங்கள் உலக அளவில் ஏற்பட்டு வருகின்றன.
- பெரும்பாலும் பாலஸ்தீன விவகாரம் உலகின் முதல் தரத்திலான விவகாரமாகியது.
- அதுவும் யூதர்கள் பெருந்தொகையான பச்சிளம் பாலகர்களையும் அவர்களது தாய்மார்களையும் அதிக அளவில் கொலை செய்த பின்னர் தான் உலகத்தின் கண்கள் அகலத் திறந்து கொண்டன.
- கூகுள் தேடலில் ஃபலஸ்தீன் விவகாரம் தான் முதல் இடத்தைப் பிடித்தது.
- இஸ்ரேலை கண்டித்து உலகமெங்கும் ஆர்பாட்டங்கள் வெடித்தன.
- இஸ்ரேலை போஷிக்கும் உற்பத்திகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் உரக்க எழுப்பப்பட்டு அவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என்றும் இல்லாத வகையில் பில்லியன் கணக்கான டாலர்கள் நஷ்டமடைந்தமை இந்த ஷஹீதுகள் இட்டுச் சென்ற சுவடுகளாகும்.
- சட்டபூர்வமற்ற வகையில் பாலஸ்தீன பூமியில் ஊன்றப்பட்ட அந்த நச்சுமரத்தின் போலி வேஷம் தோலுரிக்கப்பட்டது.
- Public Opinion எனும் உலக மக்களது பொதுக் கருத்து இன்று அல்ஹம்துலில்லாஹ் பாலஸ்தீன மக்களுக்கு சார்பாகவே உள்ளது.அதாவது காற்று ஃபலஸ்தீன் பக்கமே வீசுகிறது.
- யூத மத போதகர்களில் கணிசமான தொகையினரும் நல்லுள்ளம் படைத்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் கூட இஸ்ரேலை கண்டித்திருப்பது மட்டுமன்றி பாலஸ்தீன மக்களது பக்கத்தில் தான் நியாயமிருப்பதாக பகிரங்கமாகவே கூறிவருகின்றனர்.
- ஈஸா(அலை) அவர்கள் பிறந்த பூமியான பாலஸ்தீனின் பெத்லஹேமில் உள்ள பிரதான கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்தவ சகோதரர்கள் பாலஸ்தீன மக்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இம்முறை நத்தார் விழாவை ரத்துச் செய்திருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய மாற்றங்கள் உலகில் ஏற்பட்டிருப்பது பாலஸ்தீன விவகாரத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். ஆயிரக்கணக்கான உயிர்களை கொடுத்தும் பல கட்டடங்களை இழந்தும் இன்னும் பலவற்றை மிக மோசமாக இழந்தும் தான் இந்த இமாலய வெற்றியை பாலஸ்தீன மக்கள் பெற்றிருக்கிறார்கள். எனவே வபாத்தாகியும் அவர்கள் வாழுகிறார்கள்.
இந்த பாக்கியத்தை பெற்றவர்கள் அவர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக,
“அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்டவர்களைஇறந்தவர்கள் என்று கூறவேண்டாம். அவர்கள் அல்லாஹ்விடத்தில் உயிர்வாழ்கிறார்கள் அவர்களுக்கு ரிஸ்க் வழங்கப்படுகிறது” என்று அல்லாஹ் கூறுகிறான்.
எனவே இந்த மக்களது நிலையை ஹுதைபியா உடன்படிக்கைக்கு கிடைத்த வெற்றிக்கு ஒப்பிட முடியும். வெளிப்படையில் பார்த்தல் அது பாரிய பின்னடைவு போன்றும் சரணாகதி போன்றும் தோன்றும்.
ஆனால் முஸ்லிம்கள் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் தான் குறைஷி முகாமின் தோல்வி ஆரம்பித்தது.யுத்தமற்ற சூழல் உருவாகி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். முஸ்லிம்களை ஒரு கெளரவத்துக்குரிய தரப்பாக குறைஷிகள் ஏற்றுக்கொண்டமையை விட பெரிய சாதனை எதுவுமில்லை. ஒழிந்து ஒழிந்து இருந்த முஸ்லிம்கள் தமது நடவடிக்கைகளை பகிரங்கமாக அமைத்துக் கொண்டனர். பல்லாயிரம் பேர் இஸ்லாத்துக்கு வந்தனர். அரபு தீபகற்பத்தில் இஸ்லாத்திற்கு பெரிய வரவேற்பும் மதிப்பும் வந்தது.
இது போன்ற இன்னும் பல சாதகங்களை ஹுதைபியா உடன்படிக்கை தந்தது. எனவே வெளிப்படையாகத் தெரியும் தோல்விகள் பல வெற்றிகளுக்கு கட்டியம் கூறுவதாக நாம் கருத வேண்டும்.
“நீங்கள் வெறுக்கும் ஏதாவது ஒன்று உங்களுக்கு நலவாக இருக்கலாம்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
தியாகங்கள் மற்றும் இழப்புக்களின் முடிவில் தான் உலகில் அல்லாஹ் வாக்களிக்கும் வெற்றியும் மறுமையில் சுவர்க்கமும் கிட்டும் என்பது அல்லாஹ்வின் நியதியாகும்.
“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
எனவே கடந்த காலங்களில் கண்ணீர், வியர்வை,இரத்தம், பேனா மை ஆகிய நான்கு திரவங்களும் இஸ்லாமிய சமுதாயம் என்ற பெருவிருட்சத்துக்கான நீராகப் பாய்ச்சப்பட்டதனால் தான் அது உலகத்தில் ஒரு சக்தியாக மாறியது.தியாகம் இன்றி வெற்றிகள் வருவதில்லை.
அல்லாஹ் ஃபலஸ்தீன ஷஹீதுகளையும் மற்றும் தியாகிகளையும் பொருந்திக் கொள்வானாக! உலகில் அராஜகம் ஒழிந்து சாந்தி சமாதானம் மலரச் செய்வானாக!




