இலட்சக்கணக்கான மாணவ மாணவியர் ஆசான்கள் ரமழான் விடுமுறையில்!
நாடுபூராவுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மாணவர்கள் ஆயிரக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகள்
ஆண்களுக்கான, பெண்களுக்கான கிதாபு,ஹிப்ள் மத்ரஸாக்கள் அவற்றின் முஅல்லிம்கள் முஅல்லிமாக்கள்
இவர்கள் எல்லோரும் பெரும்பாலும் 35 அல்லது 40 நாட்கள் ரமழான் விடுமுறையில் இருப்பார்கள்.
இவர்கள் ரமழான் விடுமுறையை பயன்மிக்க விதத்தில் கழிக்க என்ன திட்டத்தை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கிறது?
மிகவுமே அபத்தான காலத்தில் இருக்கிறோம்.
🔥 ஒரு பக்கத்தில் இளம் பரம்பரையை தம் பக்கம் வளைத்துக் கொள்ள தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் போதைவஸ்த்து வியாபாரிகளும் அவர்களது வலையில் சிக்கி இளமையில் கருகி உருகிக் கொண்டிருக்கும் இளம் பரம்பரையும்
📱மற்றொரு பக்கத்தில் இளம்பரம்பரையை குறிப்பாகவும் பொதுவாக எல்லோரையும் கவ்விக் கொண்டிருக்கும் ‘ஹேன் போன்’ ம் அது போன்ற ஊடகங்களும். திரைப்படங்கள், ஆபாசம், இசை, அனாவசியமான நேரத்தை வீணடிக்கும் Chat கள் என்று அந்த ஊடகங்களது பிடிக்குள் வசமாக மாட்டி தப்ப முடியாத போதை நிலையில் மாணாக்கரும் இளம் பரம்பரையும்.
பாவம் அந்த இளம்பரம்பரை. தம்மை அடக்கிக் கொண்டு வாழ மிகவுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
👫பிழையான நட்புக்களால் தமது இளமையைத் தொலைத்துக் கொண்டிருப்போர் இன்னொரு பக்கம்.
இந்த சிறார்களதும் இளைஞர்களதும் பெற்றோர் தமது பிள்ளைகள் தப்பான வழியில் சென்றுவிடுவார்களோ என்று அல்லும் பகலும் யோசித்து பயந்து கொண்டிருக்கிறார்கள். ரமழான் காலத்தில் மட்டுமல்ல ஏனைய காலங்களிலும் இது தான் நிலை. ஆனால் ரமழான் காலத்தில் நீண்ட விடுமுறை என்பதால் பயம் அதிகம் என்பது நியாயமானது.
ரமழானில் ஓய்வு அதிகம் மட்டுமல்ல பிறருடன் தொடர்புபடுவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகம்.
இப்படியான நிலையில் தான் இந்த சிறார்களை வழிநடாத்த நல்ல அணுகுமுறைகள் அவசியம். அவர்களது வயதுக்கு ஏற்ற கவர்ச்சியான திட்டங்கள் மட்டுமே பயனளிக்கும்.பாரம்பரியமான பயான்கள் அவர்களுக்கு சரிவராது.
பள்ளிவாயல்களில் இடம்பெறும் பயான்களில் கருத்து வேறுபாடான, சர்ச்சைக்குரிய அம்சங்கள் பற்றிய சண்டைகளும் வாக்குவாதங்களும் இளைஞர்களது ஆன்மீக, அறிவு, பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை என்பது கவலை தரும் விடயமாகும். இத்தகைய ‘சண்டை உபந்நியாசங்களை’ கேட்கும் அவர்கள் அவற்றில் சலிப்படைந்து மார்க்கத்திலேயே வெறுப்படைந்து தாம் இருக்கின்ற ஒழுக்கக் கேட்டிலேயே தொடர்ந்தும் இருக்கப் பார்ப்பார்கள். சமூகத்தினதும் பொதுவாக இளைஞர்களதும் அடிப்படைத் தேவைகளை விட்டுவிட்டு சர்ச்சைக்குரிய விடயங்களை மாத்திரம் பயான்களில் பேசும் உலமாக்கள் இந்த இளைஞர்களுக்கு பெரும் அநீதியிளைக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்.
தற்கால இளைஞர்களில் பெரும்பாலனவர்கள் சினிமா, விளையாட்டுக்கள், கவர்ச்சியான விரிவுரைகள்,நானா விதமான Physical activities களுக்கு பழக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்கு உகந்த போதனா முறைகள் மூலமே அவர்களை ஈர்க்க முடியும்.
ஆகக் குறைந்தது அவர்களுக்கான
குர்ஆன், ஹதீஸ், பொது அறிவு, போட்டி நிகழ்ச்சிகள்
பாடசாலை, மத்ரஸா பாடங்களை மீட்டுவதற்கான ஏற்பாடுகள்,
சமூகப் பணிகளில் பெரியவர்களோடு சேர்ந்து ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள்,
வீட்டு வேலைகள், அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களில் அவர்கள் தமது ஓய்வு நேரங்களை பயன்படுத்திக் கொள்வதற்கான ஊக்குவிப்புக்கள்
என பலவகையான திட்டங்களை அமுலாக்கலாம்.
உலமாக்கள்
பள்ளி நிர்வாகிகள்
சமூக பணி அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள்
இவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இல்லாத போது,
இந்த இளைஞர்களை சமூகம் இழக்க நேரிடும்
இளைஞர்களுக்கான திட்டங்களை வகுத்து அவர்களை பாதுகாக்க வில்லையே என்ற பெற்றோர்களது சாபத்திற்கு பொறுப்புதாரிகள் உள்ளாக நேரிடும்.
பொறுப்புதாரிகள் அல்லாஹ்வால் கடுமையாக மறுமையில் விசாரிக்கப்படுவார்கள்.
இந்த திட்டங்களை வகுத்து சமூகமயப்படுத்தும் தேசிய ரீதியான அமைப்புக்கள் எமது சமூகத்தில் இருக்க வேண்டும்.




