– பேராசிரியர் குர்ராதாகீ கருத்து
முஸ்லிம்களது அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் கலாநிதி குர்ராதாகி அவர்கள் ஸகாத்துல் பித்ரை பணப் பெறுமதியாகவும் கொடுக்கலாம் என்பதை பொருத்தமான கருத்து என்று குறிப்பிட்டுள்ளார்.
பித்ராவை குறித்த சில தானியங்களாகத் தான் வழங்க வேண்டுமா அல்லது தானியங்கள் கடமையாகும் அளவுக்கான பணப் பெறுமதியை வழங்க முடியுமா என்பது தொடர்பில் உலமாக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
சிலர் தானியங்களை மாத்திரம் தான் கொடுக்க வேண்டும், பெறுமதியை எப்படியும் கொடுக்க முடியாது என்றும், மற்றும் சிலர் எல்லா சந்தர்ப்பங்களிலும் பெறுமதியை கொடுக்கலாம் என்றும் மூன்றாம் சாரார் அடிப்படையில் உணவுப் பொருட்களை மாத்திரமே கொடுப்பது நல்லது என்றும் ஏதாவது நலன்கள் இருக்குமாக இருந்தால் தேவை கருதி பெறுமதியை கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு சாராரும் தமது நிலைப்பாடுகளுக்காக ஆதாரங்களை தம் பக்கம் வைத்திருக்கின்றனர்.
பேராசிரியர் குர்ராதாகி மேற்படி மூன்று சாராரது கருத்துக்களையும் முன்வைத்து விட்டு பணமாகக் கொடுக்கலாம் என்பதை பொருத்தமான கருத்து என்று தெரிவிக்கிறார். ஆனால் தானியங்களாக வழங்குவதில் தான் ஏழைகளுக்கு பயன் இருக்கும் என்றிருந்தால் அவ்வாறு வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பணப் பெறுமதியை கொடுப்பதானது கொடுப்பவருக்கும் எடுப்பவருக்கும் இலகுவாக அமையும் என்றும் எமது காலத்தை பொறுத்தவரையில் பெரிய நகரங்களில் தானியங்களை திரட்டுவது என்பது கஷ்டமாக இருக்கும் என்றும் தற்காலத்தில் நாம் ஏழைகளுக்கு தானியங்களை கொடுத்தால் அவர்கள் தமது தேவைகளை நிறைவு செய்ய குறைந்த விலைக்கு அவற்றை விற்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் நபி (ஸல்) அவர்களது ஸகாத் நடைமுறையைப் பொருத்தவரையில் அது இலகு தன்மையுடன் இருந்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் பேராசிரியர் அவர்கள், ஏழைகளது தேவையை பூர்த்தி செய்வது தான் ஸதகத்துல் பித்ரின் நோக்கமாக இருப்பதனால் பேரித்தம் பழம்,கோதுமை, அரிசி என்பன மட்டும் தான் தற்கால தேவைகள் அல்ல என்றும் பணமும் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும் குறிப்பிடுகிறார்.
ஸதகதுல் பித்ரை பணமாகக் கொடுக்க முடியும் என்பது ஹனபி மத்ஹபின் கருத்து மாத்திரம் அல்ல ஸஹாபாக்கள் தாபியீன்களில் ஒரு சாராரும் இக்கருத்தைக் கொண்டிருந்தார்கள். இது உமர், இப்னு அப்பாஸ், முஆவியா(ரழி) போன்றதும் கருத்தாக இருந்தது. உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் பெறுமதியை கொடுக்க முடியும் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஈராக், ஷாம், பாலஸ்தீனின் பெரும்பாலான உலமாக்களதும் கலாநிதி யூசுப் அல்கர்ளாவியினதும் கருத்துமாக இது இருக்கிறது. அதேபோன்று 1996 ஆம் ஆண்டு சாஜாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் வெளியிடப்பட்ட ஃபத்வாவில் ஸதகதுல் பித்ரை பெறுமதியாகவும் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று மேலும் பேராசிரியர் குர்ராதாகீ தெரிவிக்கிறார்.
ஆனால் இஸ்லாமிய பிக்ஹு பரப்பில் ஸகாத்துல் பித்ரை பெறுமதியாக கொடுக்க முடியுமா இல்லையா என்பது தொடர்பான கருத்து வேறுபாடு மிகவும் பலமான ஒன்று என்றும் அதனை மறுக்க முடியாது என்றும் பெறுமதியை கொடுக்க முடியும் என்ற கருத்தை எடுப்பவர்களை பிழையானவர்கள் என்று கூற முடியாது என்றும் இரண்டு கருத்துக்களில் ஒன்றை எடுப்பவர்களை கண்டிக்கவும் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தடுப்பவர்கள் அல்லது அனுமதிப்பவர்களது கருத்துக்களை எடுப்பவர்கள் தமது உள்ளத்தை தொட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக உலமாக்கள் மஸ்ஜிதுகளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இத்தலைப்பை பேசு பொருளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவிக்கிறார்.(அவரது கருத்துக்களை தழுவியதாக மேல் உள்ள பகுதி அமைந்துள்ளது)
https://iumsonline.org/ar/ContentDetails.aspx?ID=38782…
ஸதகத்துல் பித்ரை ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டது முதல் பெருநாள் தொழுகைக்காக போகும் வரை உள்ள இடைப்பட்ட காலப் பிரிவில் கொடுக்க முடியும் என்றிருந்தாலும் அதற்கு முன்னால் உள்ள ரமழான் காலப் பிரிவிலும் கொடுக்க முடியும் என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாகும். ஏனென்றால் கடைசி நேரம் வரை பித்ராவை பிற்படுத்துவதனால் சிலவேளை ஏழைகள் அதன் மூலமாக பயனடைய கூடிய வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்.
தற்காலத்தில் கூட்டு ஸகாத் நடைமுறையில் இருப்பது போன்று ஸகாத்துல் பித்ரை கூட்டாக ஒன்று சேர்த்து விநியோகிக்கும் நடைமுறை சில ஊர்களில் உள்ளது. அப்பணியில் ஈடுபடும் அமைப்புக்களுக்கு நாம் வழங்கினால் பொருத்தமான ஏழைகளுக்கு அது போய்ச் சேரலாம்.
நமது இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் இரண்டே கால் கிலோ சம்பா அரிசி ஒருவருக்கான ஸகாதுல் ஃபித்ராவாக அமையும். அதன் பெறுமதியையும் கொடுக்க முடியும்.
நமது நல்லமல்களை அருளாளன் அல்லாஹ் இந்த ரமழானில் ஏற்று எம் அனைவருக்கும் ரய்யான் எனப்படும் சுவர்க்கத்தை நல்குவானாக!




