பொதுவாக ஸகாத் கொடுப்பவர்களில் அனேகமானவர்கள் தனிப்பட்ட முறையிலேயே ஸகாத் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதாவது தமது உறவினர்கள், அயல்வீட்டார் அறிமுகமானவர்களுக்கு இவ்வாறு நேரடியாக கொடுப்பதை இவர்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது இஸ்லாமிய முறையல்ல என்பதுடன் இதனால் ஸகாத் மூலம் எதிர்பார்க்கப்படும் முழுப் பலன்களையும் அடையவும் முடியாதுள்ளது.
கூட்டு ஸகாத்தை வலியுறுத்தும் இஸ்லாம்
ஸகாத் கடமையானவர்கள் தனித்தனியாக அதனை நிறைவேற்றாமல் நிறுவன ரீதியாக அதாவது, அந்த ஸகாத்தை கூட்டாக சேகரித்து விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு அதனை வழங்கி அதனை அவர்கள் ஸகாத் பெறத் தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தான் குர்ஆனும் ஹதீஸ்களும் நேரடியாக வலியுறுத்தியுள்ளன.
அதற்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கலாம்:-
- “(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுத்துக்கொண்டு, அதைக் கொண்டு அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவீராக! இன்னும், அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி அளிக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.”(9:103)
இந்த வசனத்தில் அல்லாஹ் ஸகாத்தை வசதியுள்ளவர்களிடமிருந்து ‘எடுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகிறான் .அதாவது தனவந்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று இந்த வசனம் கூறாமல் நபிகளார் (ஸல்) ஸகாத்தை தனவந்தர்களிடமிருந்து எடுத்து அவர்கள் தான் பொருத்தமானவர்களுக்கு பங்கீடு செய்ய வேண்டும் என்ற கருத்தைக் கூறுகிறது.
இமாம் இப்னு கதீர் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும் போது:- ‘(அபூபக்கர் ரலி) அவர்களது கிலாபத்தின் போது ஸகாத் வழங்க மறுத்த அரபுக் கோத்திரங்களைச் சேர்ந்த சிலர் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்த “அவர்களின் செல்வங்களில் இருந்து ஒரு பகுதியை ஸதகா(ஸகாத்) ஆக எடுங்கள்” என்ற வசனத்தை எடுத்துக்காட்டினர். அது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய கட்டளை என்றும் ஸகாத்தை இமாமுக்கு (நபியவர்களுக்கு பின்னர் வந்த கலீபாவுக்கு) வழங்குவது அவசியமில்லை என்றும் நம்பினர்.
ஆனால், அவர்களின் இந்த தவறான விளக்கம் மற்றும் புரிதலை அபூபக்கர்(ரலி) மற்றும் மற்ற சஹாபாக்கள் மறுத்தார்கள். அவர்கள் ஸகாத்தை இதற்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தது போலவே கலீபாவுக்கும் கொடுக்கும் வரை அவர்களுக்கு எதிராக போராடினார்கள்.
எனவே, அபூபக்கர் (ரலி) அவர்கள்:- ‘அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்கியிருந்த (ஒட்டகை கட்டும்) கயிற்றை அல்லது மற்றோர் அறிவிப்பில்: பெண் வெள்ளாட்டை வழங்க மறுத்தாலும், அதை அவர்கள் எனக்குத் தராமல் தவிர்ந்து கொண்டால் அவர்களுக்கு எதிராக கட்டாயமாக போராடுவேன்.’ என்றார்கள்.” (தப்ஸீர் இப்னு கதீர் – பாகம் 4, பக்கம் 207)
அந்தவகையில், ஸகாத்தை கலீபாவினூடாகவே சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்ற அபூபக்கர்(ரலி) அவர்களது கண்டிப்பான நிலைப்பாடானது நிறுவனமயப்படுத்தி ஸகாத்தை கூட்டாக திரட்டி விநியோகம் செய்வதன் அவசியத்தை உணர்த்தப் போதுமானதாகும்.
மேலும் இந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ் “இன்னும், அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக!” என்று தனது தூதருக்கு கூறுவதிலிருந்து மற்றொரு கருத்து கூட்டு ஸகாத்தின் ஆன்மீகப் பகுதியை துல்லியமாகப் புலப்படுத்துகிறது. ஸகாத்தை தனவந்தரிடமிருந்து பெறும் நபி(ஸல்) அவர்கள் அல்லது கலீபா அல்லது கூட்டு ஸகாத் பொறுப்பை ஏற்றிருப்போர் ஸக்காத்தை வழங்குபவருக்கு அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். இது ஒரு பெரிய பாக்கியமாகும். தனவந்தர் தனது ஸக்காத்தை நேரடியான ஏழைக்கு வழங்கும் போது இந்தப் பாக்கியம் கிடைக்கமாட்டாது.
- ஆமில் பங்கு:- அல்குர்ஆனில் அல்லாஹ் ‘ஆமிலூன்’ எனப்படும் ஒரு கூட்டத்தாரும் ஸகாத் பெறத் தகுதியான எட்டுக் குழுவில் ஒரு சாரார் எனக் கூறியுள்ளான். ‘ஆமில்கள்’ பல பொறுப்புக்களை சுமந்திருப்பர். அவர்கள் ,சமூகத்தில் ஸகாத் யார் மீது கடமையாகும், அந்த ஒவ்வொருவர் மீதும் எவ்வளவு கடமையாகும், ஸகாத்தை பெறத் தகுதியானோர் யார், அவர்களுக்கு எவ்வளவு, எவற்றை ஸகாத்தாக வழங்குவது பொருத்தம் போன்ற ஆய்வுகளை துல்லியமாகச் செய்வதுடன் ஸகாத்தை திரட்டி, தேவைப்படின் களஞ்சியப்படுத்தி, பொருத்தமான நபர்களுக்கு, பொருத்தமான காலங்களில், பொருத்தமான அளவுகளில் விநியோகித்தல் போன்ற பாரிய பொறுப்பான பணிகளை நிறைவேற்றும் தகுதி படைத்த குழுவினராவர். இவர்கள் சமூகத்தின் எந்த மட்டத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்களுக்கு அவர்களது பணியின் மகத்துவத்தை கருதியும், ஸகாத் நிறுவனம் தொடர்ந்தும் அதனுடைய பணிகளை சீரும் சிறப்புமாக கனகச்சிதமாக தங்குதடையின்றி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடும், தேவைப்படும் அளவில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அப்படியானால் இதற்கென தனியான குழுவினர் இருக்க வேண்டும் என்பதிலிருந்து கூட்டு ஸகாத்தின் முக்கியத்துவத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
- நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு தூதுவராக அனுப்பிய வேளையில் அங்கிருந்த மக்களுக்கு சில விடயங்களைச் செய்யும் படி கட்டளையிடும் படி வேண்டிக் கொண்டார்கள். அவற்றில் ஒன்று ஸகாத் பற்றிய வழிகாட்டலாகும்.
فأعْلِمْهُمْ أنَّ اللَّهَ افْتَرَضَ عليهم صَدَقَةً تُؤْخَذُ مِن أغْنِيائِهِمْ فَتُرَدُّ في فُقَرائِهِمْ (أخرجه البخاري (7372)أخرجه مسلم (19)
“அல்லாஹ் அவர்கள் மீது ஸகாத்தை கடமையாக்கியுள்ளான். அது அவர்களுக்கு மத்தியில் உள்ள செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு அவர்களுக்கு மத்தியில் உள்ள ஏழைகளுக்கு வழங்கப்படும் என்பதை நீங்கள் அவர்களுக்கு அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
- ஐங்காலத் தொழுகைகள் இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். ஆனால், அவற்றை வீட்டிலோ வேறு இடங்களிலோ தனித்து நிறைவேற்றுவதை விட ஜமாஅத்தாக – கூட்டாக நிறைவேற்றுகின்ற பொழுது 27 மடங்கு நன்மை கிடைக்கிறது. அது மட்டுமன்றி ஐங்காலத் தொழுகைகளை வீடுகளில் தனியாக நிறைவேற்றுபவர்களுக்கு எதிராக நபியவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருப்பது மாத்திரமல்ல அத்தகையவர்களுடைய வீடுகளை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றும் விரும்பினார்கள். (புகாரி 2420)
தொழுகையினால் எதிர்பார்க்கப்படுகின்ற சமூகப் பலனை அடைந்து கொள்ள ஜமாஅத் தொழுகை இன்றியமையாத ஒன்றாகும் என்பதனால் அது அவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழுகையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ள ஸகாத் என்ற இபாதத் கூட்டாக செய்யப்படும் போது தான் அதனால் எதிர்பார்க்கப்படுகின்ற உச்சக்கட்டப் பலனை அடைந்து கொள்ள முடியும். எனவே தொழுகையும் ஸகாத்தும் கூட்டுக் கடமைகள் என்ற முடிவுக்கு வர முடியும்.
பயன்களும் அனுகூலங்களும்
இவ்வாறு ஸகாத்தை நிறுவன ரீதியாக சேகரித்து விநியோகிப்பதனால் பல பயன்கள் ஏற்பட எவாய்ப்புள்ளது.
1) அதிக மூலதனம்
ஒரு ஊரில் ஸகாத் வழங்கத் தகுதி யுள்ளவர்கள் ஐம்பது பேர் இருந்து, அவர்கள் அனைவரது ஸகாதும் ஒன்று திரட்டப்பட்டால் ஸகாத்தின் தொகை அதிகமாகின்றது. இதன் மூலம் குறைந்தது வருடத்திற்கு ஊரிலுள்ள பத்துப் பேருடைய பிரச்சினைகளாவது தீர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதற்கு மாற்றமாக, தனித் தனியாக நம்மிடம் வருபவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
2) திட்டமிட்ட பகிர்ந்தளிப்பு
கூட்டு முறையில் ஸகாத் சேகரிக்கப்படும் போது, அதனை தொழில் வாய்ப்பு, கடன் நிவாரணம் என பகுதி பகுதியாகப் பிரித்து, தேவையுடையோர் இனங்காணப்பட்டு,திட்ட மிட்டுப் பகிர்ந்தளிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
3) அனைவரையும் சென்றடையும்
கூட்டு முறையில் பகிர்ந்தளிக்கும் போது தேவையுடைய அனைவரையும் ஸகாத் சென்றடையும் வாய்ப்பு அதிகமுள்ளது. தனித் தனியாக வழங்கும் போது குறிப்பிட்ட சிலர் மட்டும் அதிக பயனடையும் வாய்ப்பு கூடுதலாகவுள்ளது.
4) சுய கௌரவம் பாதுகாக்கப்படும்:-
தேவையுடையோர் தனித்தனி நபர்களை அணுகி ஸகாத் பெற முயற்சிக்கும் போது ஏழைகளின் சுய கௌரவம் பாதிக்கப்படுகின்றது. நிர்வாக ரீதியாக ஸகாத் விநியோகம் நடந்தால் ஏழைக்கும் தரவந்தருக்குமான நேரடித் தொடர்பு ஏற்படுவதில்லை.
5) தற்பெருமைக்கு இடமிருக்காது:-
தனித்தனியாக ஸகாத் வழங்குபவர்களிடம் தற்பெருமை எழ வாய்ப்புள்ளது. தன்னிடம் ஸகாத் வாங்கியவன் தன்னைக் கண்டால் ஸலாம் சொல்லவேண்டும்; பல்லிளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழ வாய்ப்புண்டு. கூட்டுமுறையில், அந்த வாய்ப்புக்கள் எடுபட்டு செல்வந்தர்கள் தற்பெருமையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.
6) ஸகாத்தின் நோக்கம் நிறைவேறும்:-
தனித் தனியாய் 100, 200 என வழங்குவதை விடவும் கூட்டாக இணைந்து பத்தாயிரம், இருபதாயிரம் என தொகையினை அதிகரித்து வழங்கும் போது அல்லது தொழில் செய்வதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கும் போது ஸகாத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.
7) சரியாக கணக்குப் பார்த்த ஸகாத்:-
ஸகாத் சரியாக கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். தனித்தனியாக வழங்குபவர்கள் ஏதோ சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு, ஸகாத்தை நிறைவேற்றி விட்டதாக எண்ணுகின்றனர். கூட்டு நடைமுறையூடாக இந்தத் தவறான நடைமுறையை நீக்க முடியும்.
பிச்சைக்கார சமூகம் உருவாகுவதை தடுத்தல்:-
தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறைப் பிச்சைக்காரக் கூட்டத்தை உருவாக்கியுள்ளது. ரமழான் காலங்களில் ஹதியா, பித்ரா என்ற பெயரில் படையெடுக்கும் பிச்சைக்காரக் கூட்டம் இதற்கு நிதர்சன சான்றாகும்.
9) சுய கௌரவமுள்ள ஏழைகள் பாதுகாக்கப்படல்:-
தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறையால் சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள ஏழை கள் பாதிக்கப்படுகின்றனர். அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும்; தாழ்ந்து செல்லும் துர்ப்பாக்கியம் நிகழ்கின்றது. கூட்டு முறையில் வழங்கும் போது இவர்களும் அப் பங்கைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
10) குறிப்பிட்ட சிலர் பயனடையும் நிலையை தவிர்த்தல்:-
கேட்டுப் பழகியவன் எல்லோரிடமும் கேட்பான். இந்த வகையில் தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறையில் சிலர் நாடு பூராகச் சுற்றி பணம் சேர்க்கின்றனர். இதனால், கேட்டுப் பழகியவர்கள் எல்லோரிடமும் பெற்று கொள்ளை லாபம் பெற, இப்பழக்கமற்ற நல்லோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
11) சொந்தப் பகுதிக்கு ஸகாத் செல்ல உதவுதல்:-
ஓர் ஊரிலுள்ள ஸகாத் நிதி, அவ்வூர் ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பொதுவாக ஒருவன் தனது ஊரில் தன்மானம் போய்விடக்கூடாது என எண்ணி அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்று ஸகாத் பெறுகின்றான். இது ஸகாத்தின் அடிப்படைக்கே மாற்றமாகும்.
12) பரஸ்பரம் புரிந்துணர்வு:-
கூட்டுமுறையில் பணம் சேகரிக்கப்பட்டு திட்டமிட்டுப் பகிரப்படும் போது, ஒரு ஊரிலுள்ள அத்தனை செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும், பரஸ்பரம் நெருக்கமும் ஏற்படுகின்றன. இந்நெருக்கம் ஊர் விவகாரங்களில் அவர் கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும். இவ்வடிப்படையில் ஸகாத்தை அவரவர் தனித் தனியாக அன்றி, ஒரு குழுவாக இணைந்து திட்டமிட்டு பகிர்ந்தளிக்கும் முயற்சியை ஒவ்வொரு மஸ்ஜித் நிர்வாகமும் தூய எண்ணத்துடன் முன்னெடுக்க வேண்டும்.
அல்லாஹ் அருள் புரிவானாக!




