“அஸ்ஸலாம்” என்றால் காணிக்கை, ஈடேற்றம், சாந்தி என்று பொருள்படும். அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களில் ‘அஸ்ஸலாம்’ என்பதும் ஒன்றாகும். “தாருஸ் ஸலாம்” (சாந்தியுடைய இல்லம்) என்று ஒரு சுவர்க்கம் உண்டு. لَهُمْ دَارُ السَّلَامِ عِندَ رَبِّهِمْ . அஸ்ஸலாமு அலைக்கும் السلام عليكم என்று ஒருவர் முகமன் கூறினால் ‘உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’ என்பது பொருளாகும். இது மற்றவருக்கான பாதுகாப்பு மற்றும் நிம்மதிக்கான பிரார்த்தனையாகும்.
உரையாடலை அல்லது சந்திப்பை ஸலாத்துடன் தொடங்குவது ஒரு சுன்னா என்பதுடன் அதற்கு பதில் கூறுவது வாஜிபாகும்.ஸலாம் கூறப்படுவதானது ஒருவருக்கொருவர் அன்புடனும் அக்கறையுடனும் இருப்பதற்கான அடையாளமாகும். ஸலாத்தின் மூலம் இதயங்களில் அமைதி ஏற்பட்டு அவை இணையும் வாய்ப்பு உருவாகிறது. சமூகத்தில் நட்பு பரவுவதற்கு அது உதவுகிறது; பரஸ்பர அன்பு உறுதியடைகிறது; நேச ஊற்றுகள் பொங்குகின்றன. அது தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மனத் தூய்மையையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
நபி(ஸல்)அவர்கள் ஸலாத்தின் முக்கியத்துவம் கருதி அதைக் கடைபிடிக்க வேண்டுமென ஆர்வமூட்டினார்கள்.
அல் குர்ஆன் வசனங்கள் ஸலாம் பற்றி பின்வருமாறு எடுத்தியம்புகின்றன:-
- வீடுகளில் பிரவேசிக்க முன்னர்
فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنْفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿٦١﴾
“நீங்கள் வீடுகளில் பிரவேசித்தால் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான – பாக்கியம் மிக்க – பரிசுத்தமான “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதை உங்கள் மீது கூறிக் கொள்ளுங்கள்.நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.” (அல்குர் ஆன் 24:61)
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
“ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லும் வரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).“ (அல்குர் ஆன் 24:27)
- நேசம் உண்டாக
عن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا. أَوَلاَ أَدُلُّكُمْ عَلَى شَىْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ. أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ )أخرجه مسلم (54)، وأبو داود (5193)، والترمذي (2688)، وابن ماجه (68) واللفظ له، وأحمد (9709(
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-“எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவனம் புகமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளும் வரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத் தரட்டுமா? அதை நீங்கள் செய்தால் உங்களிடையே நேசம் உண்டாகும். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்.’”(ஆதாரம்: முஸ்லிம்- 54)
- இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறம்
أن رجلًا سأل النبي صلى الله عليه وسلم: أي الإسلام خيرٌ؟ قال: تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ رواه البخاري «12» ومسلم «39)
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறம் எது?’ என்றுகேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘உணவளிப்பதும், உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்‘ என விடையளித்தார்கள். (நூல் : புகாரி 12, 28, 6236)
- பகை போக்க ஸலாம்
أن رسول الله صلى الله عليه وسلم قال:لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ.يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا.وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ (متفق عليه: رواه البخاري «6077» ومسلم «2560)
“ஒரு மனிதன் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இவர் இந்தப் பக்கமும் அவர் அந்தப் பக்கமும் திரும்பிக் கொள்ளக் கூடாது. யார் ஸலாமைக் கொண்டு ஆரம்பிக்கிறாரோ அவரே அவர்களில் சிறந்தவர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6077, 6237)
- வீட்டாருக்கும் எமக்கும் பாக்கியமாக
عن أنس بن مالك قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: يا بُنَيَّ إذا دَخَلْتَ على أهلِكَ فَسَلِّمْ. يَكُنْ بَركةً عليكَ وعلى أهلِ بَيتِكَ (حسن صحيح: رواه الترمذي 2698)
அனஸ்(ரழி) அவர்கள் ‘என்னிடம் நபி(ஸல்) அவர்கள் “மகனே, நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் நுழைந்தால், ஸலாம் சொல்லுங்கள்; அது உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பாக்கியமாக இருக்கும்.” எனக் கூறினார்கள்.’ (ஆதாரம் – அத்திர்மிதீ- 2698)
- அதிக நன்மைகள் கிடைக்க
عمران بن الحصين جاء رَجَلٌ إلى النَّبيِّ صَلَّى اللهُ عَليه وَسلَّم فَقَالَ السَّلامُ عَلَيْكُمْ فَرَدَّ عَلَيْهِ ثمَّ جَلَسَ فَقَالَ النَّبيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وسَلَّم عَشرٌ ثمَّ جَاءَ آخَرُ فَقَالَ اَلسَّلامُ عَلَيْكُمْ وَرَحْمةُ اللهِ فَرَدَّ فَجَلَسَ فقال عشرون ثمَّ جاء آخَرُ فَقَالَ السَّلامُ عليكم ورحمةُ اللهِ وبركاتُه فردَّ فَجَلَسَ فَقَالَ ثَلاثون (أخرجه أبو داود (5195)، والترمذي (2689) وأحمد (19962)
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூறினார். நபியவர்கள் அவருக்குப் பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி(ஸல்) அவர்கள் ‘(இவருக்கு) பத்து (நன்மைகள்)’ என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்’என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ‘(இவருக்கு) இருபது (நன்மைகள்)’ என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு’ என்று கூறினார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி(ஸல்) அவர்கள் ‘(இவருக்கு) முப்பது (நன்மைகள்)’ என்று கூறினார்கள். (நூல் : அபூதாவூத்- 5195)
- பதில் ஸலாம் கூறுவது கடமை
மேலும் பதில் ஸலாம் கூறுவதை நபி(ஸல்) அவர்கள் கடமை என்று கூறியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள்: “ஓரு முஸ்லிம் (இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. 1) ஸலாமிற்குப் பதில் சொல்லுதல். 2) நோயாளியை நலம் விசாரித்தல். 3) ஜனாசாவைப் பின்தொடர்ந்து செல்லுதல். 4) அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல். 5)தும்மியவருக்கு‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்று கூறுதல்” என்று கூறினார்கள் (நூல் : புகாரி 1240)
ஸலாம் கூறியவர் பூரணமாக ஸலாம் கூறி நாம் குறைவாக பதில் ஸலாம் கூறினால் நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமையில் குறைவு ஏற்பட்டதாக ஆகி விடுகின்றது.
وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا ﴿٨٦﴾
“(எவராலும்) உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பெற்றால் (அதற்குப் பிரதியாக) அதை விட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள் அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள்.” (அல்குர் ஆன் 4:86)
ஸலாம் கூறும் ஒழுங்குகள் آداب السلام
- ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது யார் வேண்டுமானாலும் ஸலாம் சொல்வதற்கு முந்தலாம். என்றாலும் யார் முந்திக் கொள்வது சரியான முறை என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
يُسَلِّمُ الصَّغِيرُ علَى الكَبِيرِ، والمارُّ علَى القاعِدِ، والقَلِيلُ علَى الكَثِير – أخرجه البخاري (6231)، ومسلم (2160) بنحوه يُسَلِّمُ الرَّاكِبُ علَى الماشِي، والماشِي علَى القاعِدِ) أخرجه البخاري (6233)، ومسلم (2160(
நபி(ஸல்) அவர்கள்,“சிறியவர் பெரியவருக்கும், ஓர் இடத்தை கடந்து செல்பவர் அங்கே அமர்ந்து இருப்பவருக்கும், குறைவான எண்ணிக்கையில் இருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் மீதும் ஸலாம் கூற வேண்டும்.” (நூல் புகாரி 6231).“வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்து இருப்பவருக்கும் ஸலாம் கூற வேண்டும்.”(நூல்: புகாரி 6232, 6234) என்று கூறினார்கள்.
- வயதில் சிறியவர்கள் பெரியவர்களுக்கு ஸலாம் கூறுவதே சிறந்தது. என்றாலும், சிறுவர்களுக்கு பெரியவர்கள் ஸலாம் கூறுவதும் நல்ல முன்மாதிரியாகும்.
அனஸ்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.
قال أنس بن مالك أنَّ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ مَرَّ علَى غِلْمَانٍ فَسَلَّمَ عليهم. أخرجه البخاري-6247
“சிறுவர்களுக்கு பக்கத்தால் நடந்து சென்ற நாயகம்(ஸல்) அவர்கள் அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள்”. (நூல்- புகாரி 6247)
குழந்தைகளை சந்திக்கும்போது ஸலாம் கூறுவது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதைக் குறிக்கிறது. இதன் மூலம் தாழ்மையும் இரக்கமுமாக இருப்பதைக் காட்டுகிறது, மேலும் இளம் தலைமுறைக்கு இஸ்லாமிய ஒழுக்கங்களை கற்பிப்பதற்கும் உதவுகிறது.
- ஒருவரை சிறிது நேரம் பிரிந்து மீண்டும் சந்திக்க நேரிட்டால் மீண்டும் ஸலாம் கூறுவது.
“إذا لقي أحدكم أخاه فليسلم عليه، فإن حالت بينهما شجرة أو جدار أو حجر ثم لقيه فليسلم عليه”.)أبو داود في سننه 5200(
“உங்களில் ஒருவர் தனது சகோதரனை சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லட்டும். ஒரு மரம் அல்லது சுவர் அல்லது கல் இடையில் தடையாக வந்து மீண்டும் சந்திக்கும் போது மறுபடியும் அவருக்கு ஸலாம் சொல்லட்டும்.” (அபூதாவூத்-5200)
- கேட்கக்கூடிய வகையில் ஸலாம் சொல்ல வேண்டும்:
ஸலாம் கூறும் போது, விழித்துக் கொண்டிருப்பவர்கள் உரிய முறையில் அதனைக் கேட்கும் வகையில்,ஆனால், உறங்குகிறவரை குழப்பாத அளவிலான சப்தத்துடன் சொல்ல வேண்டும்.
قالَ المقداد بن عمرو بن الأسود… فَكُنَّا نَحْتَلِبُ فَيَشْرَبُ كُلُّ إنْسَانٍ مِنَّا نَصِيبَهُ، وَنَرْفَعُ للنَّبيِّ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ نَصِيبَهُ، فَيَجِيءُ مِنَ اللَّيْلِ فيُسَلِّمُ تَسْلِيمًا لا يُوقِظُ نَائِمًا وَيُسْمِعُ اليَقْظَانَ،“. ) صحيح مسلم (2055-
மிக்தாத்(ரழி) கூறினார்: “நாங்கள் நாம் பால் கறந்து எம்மில் ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைக் குடித்த பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குரிய பங்கை அன்னாருக்கு எடுத்துக் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம். அவர் இரவில் வந்து ஸலாம் சொல்வார். அது உறங்கியவரை விழிக்கச் செய்யாத வகையிலும் விழிப்புள்ளவர் கேட்கும் படியாகவும் இருக்கும்.” (முஸ்லிம் -2055)
- சபைக்கு வரும் போதும் பிரியும் போதும் சலாம்:
إذا انتهَى أحدُكم إلى مَجْلِسٍ فَلْيُسَلِّم، فإنَّ بَدا لَهُ أنْ يَجْلِسَ فَلْيجلِس، ثمَّ إذا قامَ فَليسلِّم فلَيسَتِ الأولَى بأحقَّ مِنَ الآخرةِ أخرجه أبو داود (5208)، والترمذي (2706) واللفظ له
நபி(ஸல்) கூறினார்கள். “உங்களிலுள்ள ஒருவர் ஒரு சபைக்கு வந்து சேர்ந்தால் ஸலாம் சொல்லட்டும், அமர்ந்திருப்பது நல்லது என அவருக்கு தோன்றினால் அவர் அமர்ந்திருக்கட்டும். பின்னர் அவர் போக எழுந்தால் ஸலாம் சொல்லட்டும். கடைசியாகக் கூறியது முதலில் கூறியதை விட மேலானதல்ல”. (அபூதாவூத் – 5208)
- முகத்தில் மகிழ்ச்சி மற்றும் கைபிடித்தல்: மகிழ்ச்சியுடன் முகத்தை காண்பித்து, கைபிடித்த வண்ணம் ஸலாம் கூறுவது நல்லது.
- சுன்னாவில் கூறப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு ஸலாம் கூற வேண்டும்.அவற்றில் எதையும் குறைக்கவோ அதிகரிக்கவோ கூடாது. (காலை வணக்கம் அல்லது நல்ல ஆரோக்கியம் உண்டாகட்டும் என்ற வார்த்தைகளை மாற்றாக உபயோகிக்கலாகாது). சுன்னாவில் கூறப்பட்ட ஸலாத்தைக் கூறிய பிறகு தேவையான பிரார்த்தனைளைச் சொல்வது பரவாயில்லை.
- ஓர் ஆண் ஓர் அந்நிய பெண்ணுக்கு ஸலாம் கூறவோ ஸலாத்துக்கு பதில் கூறவோ மேலும் ஒரு பெண் ஓர் அந்நிய ஆணுக்கு ஸலாம் கூறவோ முடியும் என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள், ஆனால், பெண் பேச்சில் குழைவை காட்டலாகாது.ஸலாம் கூறுவதனால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படமாட்டாது என்பதை இருவரும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் தவிர்க்க வேண்டும்.
எனவே, அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க, நபிகளார்(ஸல்) அவர்களைப் பின்பற்றி, எமக்கு மத்தியில் நேசம் உண்டாக, இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறத்தைப் பெற்றுக்கொள்ள, பகை போக்க,அதிக நன்மைகள் கிடைக்க, முகத்தில் மகிழ்ச்சி ததும்ப ஸலாம் கூறி, உலக மறுமைப் பாக்கியங்களைப் பெற்றுக் கொள்வோமாக!




