இன்ஷா அல்லாஹ் இன்று இரவுடன் புனித, மகத்தான ரமழான் ஆரம்பமாகிறது.
இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வீட்டையும் நல்லமல்களால் அலங்கரித்துக் கொள்வதற்கும் நேரத்தை ஒழுங்குப்படுத்தி பயனுள்ள விதத்தில் கழிப்பதற்கும் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் உயர்ந்த பட்சமாக முயற்சி எடுக்க முடியும்.
இதில் பெற்றாருக்கு குறிப்பாக பெண்களுக்கு பெரும் பங்குள்ளது. அவர்கள் தொழுகை குர்ஆன் ஓதுதல் திக்ர் போன்ற நல்லமல்களில் முன்மாதிரியாக வீட்டில் ஈடுபட்டால் பிள்ளைகளையும் அதே ஒழுங்கில் கொண்டுவர முடியும்.
குறிப்பாக பெண்களுக்கான சில ஆலோசனைகள்
- பாங்கு சொல்ல முன்னரே வுளு செய்து பாங்குடன் சுன்னத்தை தொழுது வீட்டில் உள்ள யாராவது ஒருவரை இமாமாக்கி ஜமாஅத்தாக தொழுவது.பின்னர் பின் சுன்னத்து.
- ஒரு நாளில் குர்ஆனில் குறைந்தது ஒரு ஜுஸ்உ ஓதுவது.(ஒவ்வொரு தொழுகைக்கு பிறகு 4 பக்கங்கள் ஓதினால் ஒரு ஜுஸ்உ முடிக்கலாம்)
- காலை திக்ரை பஜ்ரு தொழுகைக்குப் பிறகும் மாலை திக்ரை மஃரிபுக்கு முன்னரும் ஓதிக் கொள்வது.
- தராவீஹ் தொழுகையை பள்ளியில் சென்று தொழுவது. அதற்கான வாய்ப்பில்லாதவர்கள் வீட்டில் உள்ள ஒருவரை இமாமாக வைத்து தொழலாம்.
- ஒரு நாளைக்கு குறைந்தது இஸ்லாமிய நூலொன்றில் இருந்து 6 பக்கங்களையாவது வாசிப்பதுடன் ஒரு குர்ஆன் வசனத்தினதும் ஒரு ஹதீஸினதும் பொருளை விளங்குவது.
- சமையல் விவகாரங்களில் வீட்டில் பரஸ்பரம் ஒதுதுழைத்துக் கொள்வது.
- வீடு, படுக்கை என்பவற்றை எப்போதும் நேர்த்தியாக, சுத்தமாக வைத்துக் கொள்வது.
- எக்காரணம் கொண்டும் குறிப்பாக நாவு, கண்கள், உள்ளம் இந்த மூன்றாலும் பாவங்கள் செய்வதில்லை என்றும் பிறர் அவ்வாறு செய்கின்ற பொழுது அவற்றை நளினமாக தடுத்து நிறுத்தவும் முயற்சிப்பது.
- அயல்வீட்டார் , உறவினர்கள் , ஏழைகளை அழைத்து நோன்பு திறக்க வைப்பது.
- உணவு ஆடைகள் விடயமாக வீண்விரயம் செய்வதை முற்று முழுதாக தவிர்ப்பது.
- பயனுள்ள, ஆன்மீகத்தை, பண்பாடுகளை வளர்க்கும் உபதேசங்களை செவிமடுப்பது.
- சமையல் மற்றும் ஏனைய வீட்டு வேலைகளின் போது திக்ர் உடன் இருப்பது
இன்ஷா அல்லாஹ் ரமழானில் இருந்து வெளியாவதற்கு முன்னால் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட, உள்ளம் ஆன்மீக ஒளியினால் நிரம்பிய, நற்பண்பாடுகளால் தன்னை அலங்கரித்துக் கொண்ட ஒரு மனிதனாக வெளியாக வேண்டும் என்று திட உறுதி பூண்டு அதற்காக திட்டமிட்டு செயற்படுவது.
ரமழானை மிகவும் சந்தோஷமாகவும் பயனுள்ள விதத்திலும் கழிக்க அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக!
(இவை பெண்களுக்கானவை.ஆண்களது பொறுப்புக்கள் இவற்றுடன் சேர்த்து வித்தியாசமாக அமையும்)




