Crescent

பிறைச் சர்ச்சையும் ரமழானிய நந்தவனமும்

இன்று பள்ளியில் குத்பா ஓதிய கதீப் பிறை விவகாரம் தொடர்பாக உள்ள கருத்து பேதங்களை அலசி தான் ஏற்காத கருத்தை கொண்டிருப்போரை சாடியமை கவலையையும் மன அழுத்தத்தையும் தந்தது.

வந்திருந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தாம் எதிர்பார்த்து வந்த தமக்கான ஆன்மீக உணவு கிடைக்காததால் கதீப் எதனையாவது ஓதி முடித்து தம்மை அனுப்பிவிட்டால் போதும் என்ற நிலையில் இருந்ததை அனுமானிக்க முந்தது.

குத்பாவை கூர்மையாக அவதானித்த ஒருசாரார் கதீப் தாம் எதிர்பார்த்து போல் எதிராளிகளை வெளுத்துக் கட்டினார் என திருப்தி கண்டு அவரது ‘துணிச்சலுக்காக’ அவருக்கு உளமார துஆ செய்திருப்பர்.

கதீபின் கருத்தை முற்றாக மறுக்கும் கொள்கையில் இருப்போர் கதீபை நிச்சயமாக சபித்திருப்பர். அவரை சந்தித்து நாலு கேள்வி கேட்டு அவரை ஒரு கை பார்க்க வேண்டும் என நினைத்திருப்பர்.

இன்னும் சிலர் அந்த கதீபிடம் முக்கியமான விஷயங்களை எதிர்பார்த்து அவர் அவற்றை முன் வைக்காததனால் கவலையடைந்திருப்பர்.

மக்கள் ரமழானை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் காலம் இது. அதன் மகிமைகள், சிறப்புக்கள், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய அமல்கள், அந்த பொன்னான காலப் பிரிவை துஷ்பிரயோகம் செய்வதனால் ஏற்படும் நஷ்டங்கள் என்பவற்றை கல்பு குளிரச் செய்யும் ஆன்மீக பரவசத்தில் நின்று கதீப் முன் வைத்திருக்க வேண்டும். மாறாக குத்பாவுக்கு வந்தவர்களது மனங்களில் வைராக்கியத்தையும் குதர்க்கத்தையும் ஏற்படுத்தியிருக்கலாகாது.

நாளையோ அல்லது மறுதினமோ நோன்பு ஆரம்பமாகலாம். முழு உலக முஸ்லிம்களும் ஆன்மீக நந்தவனத்தில் நுழைய ஆவலோடு அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கு நன்மாராயம் கூறி சுபசோபனப் பூக்களைத் தூவி துஆச் செய்வது அவசியம்.

தயவுசெய்து ரமழானில்,

  1. முதல் பிறை தீர்மானம்
  2. தராவீஹ் தொழுகையின் ரக்அத்துகளது எண்ணிக்கை
  3. தஸ்பீஹ் தொழுகை உண்டா இல்லையா
  4. ‘நவைத்து ஸவ்ம கதின்’ உண்டா இல்லையா

இது போன்ற கருத்து முரண்பாடான சர்ச்சைகளை முற்றுமுழுதாகத் தவிர்ப்போம். பொதுமக்களுக்கு இன்று அவற்றை விடவும் பல தலைப்புகளில் பேசப்பட வேண்டியிருக்கிறது.

பலர் ஈமானின் பலவீனத்தின் காரணமாக நோன்பு பிடிப்பதற்கு விருப்பமற்ற நிலையில் இருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் நோன்பு இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு.

இன்னும் பலர் நோன்பை பிடித்தாலும் வேண்டாவெறுப்போடு, அதன் தத்துவங்கள், தாத்பரியங்களை புரியாமல் அதனை சடங்காக, சம்பிரதாயமாக நோற்பார்கள்.

இன்னும் ஒரு சாரார் வெறுமனே பசித்தும் தாகித்தும் மட்டும் இருப்பார்கள்.ஏனைய அமல்களான திலாவதுல் குர்ஆன், திக்ர், இரவு நேர வணக்கங்கள் என்பவற்றில் ஈடுபடாமல் நாவு, கண்கள், ஏனைய உறுப்புக்கள் மூலமும் பாவங்களை செய்து கொண்டிருப்பார்கள்.

இவர்களை அன்பாக நல்வழிப்படுத்துவதும் அமல்களின் பால் உற்சாகப்படுத்துவதும் நன்மாராயம் கூறுவதும் தான் உலமாக்களது தற்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மகத்தான பொறுப்பாகும்.

நாம் முதலாம் பிறையை தீர்மானிப்பதற்கு எமக்கிடையே சர்ச்சைப்பட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது முதலாவது பிறை மட்டுமல்ல இரண்டாம் பிறை, பத்தாம் பிறை வந்தாலும் நோன்பு பிடிக்காமலேயே இருப்போரை பற்றியும் வறுமையோடும் கஷ்டங்களோடும் தமது பிள்ளைகளுக்கு எவற்றை உண்ணக் கொடுக்கலாம் எப்படி நோன்பு பிடிக்கலாம் என்ற கவலையோடு இருப்போரை பற்றியும் யோசிக்க வேண்டும்.

தராவீஹ் தொழுகையின் ரக்அத்துகளது எண்ணிக்கை பற்றி விவாதிக்கிறோம்.மிக மிக அடிப்படையான கடமையான ஐவேளைத் தொழுகையை முஸ்லிம் சமூகத்தின் மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே நிறைவேற்றுவதாக உத்தியோகப் பற்றற்ற ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. அவ்ரத்தை திறந்து கொண்டு தொப்பி அணிவது பற்றி பேசுவது போன்ற ஒரு நிலை.முதலில் அவ்ரத்தை மறைத்துவிட்டு தொப்பி பற்றி சிந்திப்போம்.

கூபாவைச் சேர்ந்த சிலர் நுளம்பின் இரத்தம் நஜீஸா இல்லையா என விவாதித்துக் கொண்டிருந்த போது ஓர் அறிஞர் நீங்கள் இமாம் ஹுஸைனக் கொலை செய்துவிட்டிருக்கிறீர்கள். நுளம்பின் இரத்தத்தை விட இமாம் ஹுஸைனின் இரத்தம் எவ்வளவோ மேல் அல்லவா என ஆட்சேபனை தெரிவித்ததாக ஒரு சம்பவத்தை எங்கோ வாசித்தது நினைவுக்கு வருகிறது.

எனவே, கதீபுகள் தமது போதனைகளின் போது எப்படியான தலைப்புக்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை உலமாக்களது சங்கங்களும் பள்ளி நிருவாகிகளும் வழங்க வேண்டும்.அதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவது அவசியமாகும்.உரைகள் முடிவுற்ற பின்னர் அவை எத்தகைய மாற்றங்களை அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்று பொதுமக்களுக்கு மத்தியில் ‘மதிப்பீடுகள்’ செய்யப்பட வேண்டும்.

ரமழானில் எமது ஈமானையும் நல் அமல்களையும் அதிகரித்துக் கொள்ளவும் நற்பண்புகளை எமது அணிகலன்களாக புனைந்து கொள்ளவும் பாவங்கள் மன்னிக்கப்படவும் நாளை மறுமையிலே எம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்டு ரய்யான் எனப்படும் சொர்க்கத்தில் நுழைவிக்கவும் அனைவரும் முயற்சிப்போமாக!

யா அல்லாஹ் எமது பாவங்கள் அனைத்தையும் மன்னித்து எம்மை உனது நல்லடியார்களது கூட்டத்தில் சேர்ப்பாயாக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top