குடும்பம் என்பது மிகப் புனிதமான நிறுவனமாகும். சமூகத்தின் அஸ்திவாரம் அது தான். சிறிய தகராறுகளால் அது சிதறிப் போய்விட அனுமதிப்பது பல வகையான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
முதலில் பாதிக்கப்படுவது பச்சிளம் குழந்தைகள் தான்.
அடுத்ததாக தம்பதிகளது ஆன்மீகம், ஒழுக்கம், உளவியல், சுகாதாரம், பொருளாதாரம், சமூக அந்தஸ்த்து போன்ற அனைத்தையும் அது பயங்கரமாகப் பாதிக்கும்.
இபீலுஸுக்கு உலகத்தில் மிகவுமே விருப்பமான காரியங்கள் நடக்கின்றன. ஆனால் அவற்றுக்கு மத்தியில் அவன் அதிகம் விரும்புவது தம்பதிகளுக்கிடையிலான பிளவு தான்.
إنَّ إبليسَ يضعُ عرشَه على الماءِ ، ثم يبعثُ سراياه ، فأدناهم منه منزلةً أعظمَهم فتنةً ، يجيءُ أحدُهم فيقولُ : فعلتُ كذا وكذا ، فيقولُ ما صنعتَ شيئًا ، ويجيءُ أحدُهم فيقولُ : ما تركتُه حتى فرَّقتُ بينَه وبين أهلِه ، فيُدْنِيه منه ، ويقولُ : نعم أنتَ
أخرجه مسلم (2813)، وأحمد (14377)، وعبد بن حميد (1031)، والبيهقي في ((شعب الإيمان)) (8347) واللفظ
நபிகளார் (ஸல்) அவர்கள்:-
” இப்லீஸ் ஒவ்வொரு நாளும் தன் சிம்மாசனத்தை கடலில் அமைத்து, தன் படைகளை மக்களை வழிகெடுக்க அனுப்பி வைக்கிறான். அவனுக்கு மிகவும் நெருக்கமானவன் அவர்களுக்கு மத்தியில் இருக்கும் அதிகமான குழப்பத்தை விளைவிப்பவராவார்.
அவனின் படைகளில் ஒவ்வொருவரும் வந்து ‘நான் இதனைச் செய்தேன்’, ‘அதனைச் செய்தேன்’ என்று கூறுவார்கள். அப்போது இப்லீஸ் நீங்கள் ஒருவரும் நான் எதிர்பார்த்ததை செய்யவில்லை (என்று ஒவ்வொருவராக தட்டிக் கழித்துக் கொண்டே வருவான்). அவர்களில் ஒரு ஷைத்தான் வந்து, ‘நான் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினையை உண்டு பன்னிவிட்டேன்’ என்றதும், அவனை அழைத்து தன் பக்கத்தில் இப்லீஸ் வைத்துக்கொண்டு.’ நீ தான் நான் எதிர்பார்த்த அவன் ‘ என்று கூறுவான்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 2813)/
ஏனைய பாவங்கள், அட்டூழியங்களை மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவதில் அக்கறை காட்டுவதை விட இப்லீஸ் தம்பதிகளுக்கு மத்தியில் பிளவை உண்டுபண்ணும் விடயத்தில் மிகக் கவனமாக இருக்கிறான். காரணம் குடும்பம் பிரிந்தால் உலகத்தில் அனைத்து பாவங்களும் நிகழும் என்பது அவனுடைய மதிப்பீடாகும்.
இப்லீசுக்கு இடம் கொடுக்காமல் குடும்ப பிளவு கணவன் மனைவிக்கிடையே பிளவுகள் ஏற்படாதிருக்க திருமணத்துக்கு முன்னைய திட்டமிடலும் தயார்நிலையும் அவசியம் என்பது போலவே திருமணம் நடந்த பின்னரும் குடும்ப நிறுவனத்தை தாக்கி அழிக்கும் சவால்களிலிருந்து அதனை காக்கும் அறண்களையும் தற்காப்பு முயற்சிகளையும் சமூகம் மேற்கொள்ள வேண்டும்.
தம்பதிகளிடையே மனக்கசப்புக்கள் சிறுகச் சிறுக ஆரம்பிக்கும் போதே அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய அவர் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அது சற்று தீவிரமடைந்தால் அடுத்ததாக சர்ச்சைப்படும் தம்பதிகளது குடும்ப முக்கியஸ்தர்கள், சமூகத்தின் ‘ஸுல்ஹு’ சபைகள்,பள்ளி பரிபாலன சபை நிருவாகிகள், கவுன்ஸலர்கள் எனப்படும் உளவள ஆலோசகர்கள் போன்றோர் முன்வர வேண்டும்.
அப்படியும் முடியாத போது தான் காளி நீதிபதிகளை தம்பதிகள் அணுக வேண்டும்.
இந்த ஏற்பாடுகள் பற்றி சமூகம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
குறிப்பாக உலமாக்களுக்கு இதில் பாரிய பொறுப்புக்கள் உள்ளன.




