அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்(நளீமீ)
நல்லமல்கள் செய்ய ரமழான் நல்லதொரு பருவகாலமாகும். மற்றைய காலங்களை விட ரமழான் காலத்தில் பொதுமக்கள் மார்க்க விடயங்களில் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். உலமாக்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதிகபட்சம் அவர்களை நெறிப்படுத்தி அதிகம் அமல் செய்பவர்களாக அவர்களை மாற்ற திடசங்கட்பம் பூணவேண்டும்.
அதேபோல் பயான்கள் செய்ய ரமழானில் சந்தர்பங்கள் அதிகம் உள்ளன. தராவிஹுக்குப் பிறகு, இப்தார் வேளைகள், ளுஹருக்கு பிறகு என்று இவற்றைப் பட்டியல்படுத்தலாம். வழக்கமாக ரமழான் கால ஜும்ஆப் பிரசங்கங்களும் இதில் சேர்க்கப்படலாம்.
இருப்பினும், ரமழானில் மக்களுக்கு தேவையான அடிப்படையான அம்சங்களை போதிப்பதில் திட்டமிட்ட வழிமுறைகள் எதுவும் வழக்கமாக பின்பற்றபடாமல் பயான்கள் செய்யப்படுவது கவலைக்குரியதாகும்.
பல இடங்களில் குர்ஆன் மத்ரஸாக்களில் போதிக்கப்பட வேண்டிய சாதாரண பிக்ஹ் அம்சங்கள் கூட திரும்பத் திரும்ப மீட்டப்படுவதையும் இன்னும் பல பள்ளிவாயல்களில் பயான்கள் பண்ணப்படாமலேயே சந்தர்பங்கள் நழுவ விடப்படுவதையும் பார்க்க முடிகிறது.சிலபோது ஒரு சில விடயங்கள் மாத்திரம் திரும்பத் திரும்ப மீட்டப்படுகின்றன. இது இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கிலும் அவதானிக்கப்படும் குறைபாடாகும்.
நம் நாட்டிலும் ரமழான் காலம் வந்துவிடும் போது ரமழானின் முதலாவது பிறையையும், ஷவ்வாலின் முதலாம் பிறையையும் தீர்மானிப்பதில் எமக்கு மத்தியில் சர்ச்சை தோன்றும். சர்வதேச பிறை தான் சரியென சிலரும் தேசியப் பிறையின் படியே நோன்பு பிடிப்பதும் பெருநாள் கொண்டாடுவதும் அமைய வேண்டுமென்று வேறு சிலரும் காரசாரமாக விவாதிப்பர். வேறு சிலர் தாம் ‘நுஜூமீக்கள்’ என்று கூறி மூன்றாவது நிலைப்பாட்டையெடுப்பர்.
இவர்கள் இவ்வாறு வாதித்துக் கொண்டிருக்கையில் சமூகத்தில் உள்ள 90% ஆன பொதுமக்கள் மிகுந்த குழப்பத்தில் மூழ்கிவிடுவர். ரமழானின் வருகையை ஆவலாக எதிர்பார்த்து அமல் செய்ய காத்திருக்கும் அவர்கள் இந்த சர்ச்சைகளின் முன் திக்குப்பிரமையுடன் நிற்பார்கள். முஸ்லிம் அல்லாதவர்களோ இந்த சண்டைகளைப் பார்த்து எக்காளமிட்டு சிரிப்பதுடன் எமது போயாக்கள், திருவிழாக்களது திகதிகளை தீர்மானிப்பதில் இவ்வளவு பெரிய சண்டைகள் இடம்பெறுவதில்லையே எனக்கூறி அவர்களது மார்க்கமே சரியென்பதற்கு இதனையும் ஆதாரமாக காட்டுவார்கள்.
எனவே, ரமழானின் வருகை எமது சமூகத்துக்கு மத்தியில் சச்சரவுகளையும் பிறசமயத்தவரது மனங்களில் அதிருப்தியையும் வரவழைப்பதாயின் இதனைப் பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். முதல் பிறையை தீர்மானிப்பது சம்பந்தமாக வரலாறு நெடுகிலும் கருத்துவேறுபாடுகள் இருந்து வந்திருப்பதிலிருந்து எவரும் எவர் மீதும் தனது கருத்தை திணிக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. ஆனால், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கூறுவது போல் நடந்து கொள்வது தற்போதைய சூழலில் எல்லா வகையிலும் பாதுகாப்பானதாகும்.
கருத்து வேறுபாடுகளுக்கு உட்படும் அம்சங்களை பொதுமக்களது சபைகளிலும் குத்பாக்களிலும் பயான்களிலும் பேசுவது எவ்வகையிலும் பொருத்தமானதல்ல. அவை விடயமாக நல்ல அறிவுத் தெளிவுள்ள, துறை சார்ந்தவர்கள் மட்டும் ஓர் இடத்தில் ஒன்றுகூடி ஆதாரங்களுடனும் நிதானமாகவும் பரஸ்பர அன்புடனும் அல்லாஹ்வுக்கு பதில்கூற வேண்டுமே என்ற பயத்துடனும், யாருடைய வாயிலிருந்தேனும் உண்மை வெளிவந்தால் போதுமென்ற உணர்வுடனும் இதில் ஈடுபடும் போது மட்டுமே சுமுகமான முடிவுகளைப் பெறமுடியும்.
முதலாவது பிறையைத் தீர்மானிப்பது, தராவீஹின் ரக்அத்துக்களது எண்ணிக்கை, நோன்பின் நிய்யத்து போன்ற விடயங்களை நோன்பு காலத்தில் விவாதிப்பதும் பயான்களது பேசுபொருளாக கொள்வதும் முற்றுமுழுதாக தவிர்க்கப்பட வேண்டும். இவற்றை சிலர் விவாதித்துக் கொண்டிருக்கையில் பல இலட்சம் மக்கள் நோன்பின் கடமையை உணராமல் நோன்பு பிடிக்க வசதியிருந்தும் நோன்பு பிடிக்காதிருக்கின்றார்கள். வேறு சிலர் நோன்பு நோற்பதற்கான வசதிவாய்ப்புக்கள் இல்லாமல் வறுமையின் கொடூரத்தில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி கவலைப்படுவதற்கும் கரிசனை எடுப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும்.
அதிக கவனயீர்ப்பிக்கு உள்ளாக வேண்டியது சிறிய விடயமா? பெரிய விடயமா? என நாம் சிந்திக்க வேண்டும். தராவீஹின் ரக்அத்துக்கள் பற்றி நாம் சர்ச்சைப்படும் போது பல இலட்சம் பேர் ஐவேளை தொழுகையின்றி வாழ்கின்றார்கள். அத்தஹியாத்தில் விரல் அசைப்பது பற்றி வாதிப்பவர்கள் ‘அஸ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்’ எனப்படும் வாசகத்தை வாழ்கையில் ஒரு தடவையேனும் உச்சரிக்காமல் காபிர்களாக வாழ்ந்துவரும் கோடிக்கணக்கானோர் பற்றி சிந்திக்கலாம்.எமது கால நேரங்களை இரண்டாம்பட்ச அம்சங்களில் செலவிட்டு ரமழானின் பிரதான இலக்குகளில் மக்கள் தவறிவிடுவதற்கு காரண கர்த்தாக்களாக அமைந்துவிடலாகாது.
அதேபோல் சில தலைப்புக்களில் நாம் பேசும் போது அதனுள் அடங்கும் விடயங்கள் ஏற்படுத்தும் சாதகமான விளைவுகளையும் பாதகமான விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பாதகங்கள் அதிகம் விளையுமாயின் அத்தகைய தலைப்புக்களை தவிர்ப்பதே சாலச் சிறந்ததாகும்.
அலி(ரலி) அவர்கள், ‘மக்களொடு அவர்களது அறிவுத் தரங்களுக்கு ஏற்ப பேசுங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் பொய்ப்பிக்கப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?’ என்றார்கள்.
இமாம் புஹாரி அவர்கள், ‘நாம் தெரிவு செய்துள்ள சில தலைப்புக்கள் மக்களால் கிரகிக்க முடியாத அம்சங்களை கொண்டிருக்குமாயின் அவற்றை நாம் பேசு பொருளாகக் கொண்டால் அவர்கள் இருக்கும் நிலையை விட மோசமான ஓர் நிலைக்கு போய்விடுவார்கள் எனக் கருதினால் அப்பகுதிகளைத் தவிர்ப்பது’ என்று ஓர் தலைப்பை இட்டு சில ஹதீஸ்களை அதன் கீழ் இட்டிருக்கிறார்கள். இதற்கு விளக்கம் கூறும் இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி, ‘ஓரு தீமையை தடுக்கப் போய் அதனை விட மோசமான ஓரு தீங்கிற்குள் மக்கள் வீழ்ந்து விடுவார்களோ எனப் பயந்தால் அதனை தடுக்காது விடலாம் என்பதற்கு இதனை ஆதரமாகக் கொள்ளலாம்’ என எழுதுகிறார்கள்.
மேலும் இமாம் புஹாரி அவர்கள், ‘சிலர் சில விடயங்களை புரியமாட்டார்களாயின் அவற்றைத் தவிர்து அவற்றை புரிய முடியுமானவர்களுக்கு மட்டும் அவற்றைப் போதிப்பது’ என்று வேறு ஒரு தலைப்பை தனது ஸஹீஹுல் புகாரியில் இட்டு அதன் கீழ் சில ஹதீஸ்களை இட்டுக்கிறார்கள்.
எனவே மக்களது அறிவுத் தரம், வயது, பால் வித்தியாசம், பிரதேச வேறுபாடுகள், அவ்வப் பிரதேச தேவைகள்,கொள்கைப் பின்னணிகள், உடனடித் தேவைகள் போன்றவற்றை கவனத்தில் எடுத்து உபந்நியாசங்கள் அமைக்கப்பட வேண்டும். இருக்கும் பிரச்சினைகளது வீரியத்தை பேச்சாளர்கள் மேலும் அதிகரிக்காமலும் சிந்தனைச் சிக்கலையும் மார்க்கத்தில் அவநம்பிக்கையும் தோற்றுவிக்காமலும் இருக்க வேண்டும்.
தற்கால சூழலில் இளைஞர் சமுதாயம் கல்வியிலும் ஒழுக்கத்திலும் வீழ்ச்சியிலிருக்கிறது. குடும்ப உறவுகள் சீர்குலைந்திருக்கின்றன. அல்லாஹ், மறுமை, குர்ஆன், ஸுன்னா மீதான விசுவாசம் தளர்வடைந்துள்ளது. இதற்கெல்லாம் தொலைத் தொடர்பு சாதனங்கள் பெரிதும் பங்களித்துள்ளன. மக்கள் சடவாதம், நாஸ்தீகம், சுயநலம், அற்ப இன்பங்கள் என்பவற்றில் மூழ்கித் திழைக்கிறார்கள். அறிஞர்களுக்கும் அறிவுக்கும் சமூக சேவகர்களுக்குமுள்ள முக்கியத்துவம் குறைந்து, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், பணம்படைத்தவர்கள் தான் ‘ரோல் மொடல்களாக’ ஆக்கப்பட்டுவிட்டார்கள்.
இபாதத்களில் ஈடுபடுவோரது தொகை ஓரளவு அதிகரித்திருந்தாலும் அவற்றை அறிவுத் தெளிவோடும் பயபக்தியோடும் அவை தரப்பட்ட நோக்கத்தை புரிந்த நிலையிலும் மேற்கொள்பவர்களது தொகை குறைவாகும். நோன்பு, தொழுகை, ஹஜ், உம்ரா என்பன வெறும் சடங்குகளாகத் தான் நிறைவேற்றப்படுவதாகத் தெரிகிறது.
எனவே, ரமழான் காலத்து பயான்கள் விடயமாக நல்லதொரு திட்டமிடல் அவசியம் என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.
ரமழான் எம்மை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்காக தரப்பட்ட அருமையான சந்தர்ப்பம் என்பதால் இதுவிடயமாக உலமாக்கள், பள்ளி நிருவாகிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் அனைவரும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற உணர்வுடன் செயல்படுவது அவசியமாகும்.
ரமழான் காலத்தில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் குத்பாக்கள், பயான்களது தலைப்புக்களை தெரிவு செய்யும் போது அடிப்படையான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி ஈமான், இபாதத்கள், அக்லாக்குகள், அறிவுஞானம், குடும்ப உறவுகள் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்போமாக! வல்லவன் அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக!




