mosque

ரமழானில் பள்ளிவாசல் நிர்வாகிகளும் உலமாக்களும்

வழமையை விட முஸ்லிம் சமூகத்தின் பள்ளிவாசலுக்கான தொடர்பு புனித ரமழான் மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆகவே, பள்ளிவாசல் நிர்வாகிகளும் அவற்றோடு சம்பந்தப்பட்ட உலமாக்களும் ஆத்மீகம், பண்பாடு, அறிவு போன்ற துறைகளில் சமூகத்தை நெறிப்படுத்துவதற்கான அருமையான சந்தர்ப்பமாக ரமழானைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தவகையில் பள்ளிவாசலை மையமாகக் கொண்டு பின்வரும் வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும்.

  1. குத்பாக்களும் ஏனைய பயான்களும்

மக்கள் உபன்னியாசங்களையும் வழிகாட்டல்களையும் ரமழான் மாதத்தில் மிகவும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் எதிர்பார்ப்பார்கள். ரமழானில் பயான் நிகழ்ச்சிகளுக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. அவை குத்பாக்கள் , லுஹர் பயான் , தராவீஹ் தொழுகை பின்னரான பயான், இப்தார் பயான் என பல வகைப்படும். இந்த ஒவ்வொரு உரையையும் மிகக் கவனமாகத் திட்டமிடவேண்டும். தலைப்புக்கள்,உரை நிகழ்த்தும் ஆலிம்கள்,நேரம்,உரையை கேட்போரின் தராதரங்களுக்கு ஏற்ப உரைகளை அமைத்துக் கொள்ளல் போன்ற விடயங்கள் அந்த திட்டமிடலில் அடங்க வேண்டும்.

மக்களது ஈமான் பலவீனமடைந்து, அமல்களில் ஆர்வம் குறைந்து தீமைகளுக்கான சந்தர்ப்பங்கள், வாய்ப்புக்கள் ஏராளமாக உள்ளன. மீடியாவின் தாக்கமும்,க்ஷ ஜாஹிலிய்யத்தின் கவர்ச்சியும் அதிகமாக உள்ள இந்தக் காலத்தில் இந்த உபன்னியாசங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

  1. பொருளாதார மேம்பாடு

நோன்பில் ஸகாத், ஸதகா, ஸதகதுல் பித்ர் ஆகியன பள்ளிவாசல் நிர்வாகத்தால் ஒன்று திரட்டப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

  1. அல்குர்ஆனுக்கு முன்னுரிமை

குர்ஆன் இறங்கிய மாதமாக ரமழான் இருப்பதால் அது தொடர்பான பிரத்தியேகமான ஏற்பாடுகள் தேவை. குர் ஆன் விளக்கம், தஜ்வீத், ஹிஃப்ழ் வகுப்புகளுடன் ஹிஸ்பு மஜ்லிஸுகளையும் ஏற்பாடு செய்யலாம்.

  1. போட்டி நிகழ்ச்சிகள்

அல்குர்ஆன்,ஹதீஸ் ,சந்தர்ப்ப துஆக்கள் என்பவற்றை மனனம் செய்வதற்கான போட்டி நிகழ்ச்சிகள், புத்தகங்களை அடிப்படையாக்க் கொண்ட கேள்வி பதில்கள் என்பவற்றை ளுஹர், இஷா தொழுகையைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யலாம். இவற்றை நேரடியாகவோ சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நடாத்தலாம்.

  1. ரமலான் மாதத்துக்கான சிறார் முஹாஸபா

முன் – பின் ஸுன்னத்கள்,திலாவதுல் குர் ஆன், மனனம், தாய் தகப்பனுடன் அன்பாகப் பழகுவது, ஸதகா, காலை மாலை அவ்ராதுகள், உடை, உடல், இடம் சுத்தம், தமது வேலைகளை தாமே செய்கொள்வது போன்றவற்றில் சிறார்களும் இளையவர்களும் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் ‘முஹாஸபா’ அட்டைகளை தயாரித்துக் கொடுத்து ரமழான் மாத இறுதியில் பரிசில்களை வழங்கி ஊக்குவிக்கலாம்.

  1. கலந்துரையாடல்கள்

சமூக சேவை வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல்கள், கூட்டுச் செயல்பாடுகள் போன்றவற்றுக்கு ரமழான் மிகப்பொருத்தமான காலமாகும்.பள்ளிக்கு வருவோரின் தொகை அதிகரிப்பதுடன் ஏனைய காலங்களுடன் ஒப்பிடுகையில் மக்கள் ரமழானில் சற்று ஓய்வாக இருப்பர். பாடசாலகள்,கிதாபு மத்ரஸாக்கள் என்பன விடுமுறைக்காக மூடப்பட்டிருப்பதால் உஸ்தாதுமார்கள்,ஆசிரியர்கள் ,மாணவர்கள் போன்றோரை நற்பணிகளுக்காக நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top