(இந்த ஆக்கம் பல சந்தர்ப்பங்களில் பொது போக்குவரத்து சாதனங்களில் கண்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக எழுதப்படுகிறது. இதற்கு முன்னர் இது போன்ற பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதிலும் இந்த ஆக்கம் எழுதப்படும் போது பின் ஆசனத்தில் இருக்கும் ஒருவரது ‘வியாபார கொடுக்கல் வாங்கல்’ தொடர்பாக அடிக்கடி இடம் பெற்றுக் கொண்டிருக்கும் உச்ச தொனியில் அமையும் உரையாடல் பேச்சு மனதை குடைகிறது.)
இஸ்லாம், பிறரை குறிப்பாக நம் அண்டைவர்களை மரியாதையுடன் நடத்தும் படியும் அவர்களுக்கு தொந்தரவு செய்யாதிருக்கும் படியும் அதிகமதிகம் வலியுறுத்தியது.
நபி (ஸல்) கூறினார்: “அல்லாஹ்விலும் இறுதி நாளிலும் நம்பிக்கை கொள்பவன் தனது அண்டைவருக்கு தொந்தரவு செய்யக் கூடாது.” (சஹீஹ் அல்புகாரி)
பிறருக்கு தொந்தரவு செய்பவருக்கு ஈமான் என்ற விசுவாசமே கிடையாது என்ற கருத்தை நபியவர்கள் மூன்று தடவை அழுத்தமாக கூறியிருக்கிறார்கள்.
واللهِ لا يؤمِنُ واللهِ لا يؤمِنُ واللهِ لا يؤمِنُ قالوا وما ذاكَ يا رسولَ اللهِ قال جارٌ لا يؤمنُ جارُهُ بوائقَهُ قالوا يا رسولَ اللهِ وما بوائقُهُ قال شرُّهُ (أخرجه البخاري معلقاً بصيغة الجزم بعد حديث (6016) باختلاف يسير، وأخرجه موصولاً مسلم (46) مختصراً بنحوه)
“அல்லாஹ் மீது சத்தியமாக அவன் விசுவாசம் கொண்டவனாக இருக்கமாட்டான், அல்லாஹ் மீது சத்தியமாக அவன் விசுவாசம் கொண்டவனாக இருக்கமாட்டான், அல்லாஹ் மீது சத்தியமாக அவன் விசுவாசம் கொண்டவனாக இருக்கமாட்டான் (என்று மூன்று தடவை கூறினார்கள்) அப்போது ‘அவன் யார்’ என்று அருகில் இருந்தவர்கள் விசாரித்த போது “ஒர் அயல்வீட்டான் இருக்கிறான். அவனது (பவாஇக்) தொந்தரவுகளில் இருந்து அவனது அயல் விட்டான் பாதுகாப்பு பெறாமல் இருக்கிறான்” என்றார்கள்.’பவாஇக் (தொந்தரவுகள்) என்றால் என்ன என்று வினவினவப்பட்டதற்கு “அவருடைய தீங்குகள்” என்று சொன்னார்கள்(புகாரி, முஸ்லிம்)
இது எமது வீட்டின் அருகிலுள்ள அண்டைவர்களுக்கு மட்டுமல்ல, பொது இடங்களிலும், பொது போக்குவரத்திலும் நாம் சந்திக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
நாம் பல இனங்களை கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம், மேலும் சிறுபான்மையாக இருப்பதால், நம்முடைய நடத்தையே பிறர் எங்களைப் பற்றியும் நம் மார்க்கத்தைப் பற்றியும் மனப்பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ளக் காரணமாக இருக்கும்.
எனவே, நாங்கள் எப்போதும் நற்பண்புகளை கடைப்பிடித்து, பிறருக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் பேருந்துகள் மற்றும் ரயில்களில் அருகில் இருப்போருடன் சத்தமாகவும் அதிகமாகவும் பேசுவதும், மிக அதிக ஒலியில் கையடக்கத் தொலைபேசியில் உரையாடுவதும் மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
முஸ்லிம்களாக நாம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்:
- தாழ்ந்த குரலில் பேசுவது:
லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்கு தாழ்ந்த குரலில் பேசுமாறு கட்டளையிட்டார்கள் “உனது குரலை தாழ்த்திக் கொள்; நிச்சயமாக, ஒவ்வொரு குரலிலும் மிகவும் கேவலமானது கழுதையின் குரலாகும்.” என்றார்கள். (குர்ஆன் 31:19).
- குறுஞ் செய்திகளை (SMS, Whatsapp) அனுப்புவது:-
வாய்ப்பிருந்தால், அழைப்பதற்குப் பதிலாக குறுஞ்செய்தி அனுப்பலாம்.
- சுருக்கமாக பதிலளிப்பது:
வருகின்றன அழைப்புகளுக்கு கட்டாயமாக பதிலளிக்கவே வேண்டும் என்ற நிலை இருந்தால் அவற்றிற்கு சுருக்கமாகவும் முடிந்த வரை தாழ்ந்த தொனியிலும் பதிலளிப்பது.விரிவாக பதிலளிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் பயணத்தை அன்னளவாக முடிக்கும் நேரத்தை அடுத்த தரப்பில் இருப்பவருக்கு கூறி பயணம் முந்த பின்னர் விரிவாக பேசலாம் என்று கூறலாம்.
- அருகில் இருப்பவரை நினைவில் கொள்வது:-
பயணத்தின் போது நமது அருகில் வயதானவர்கள், உடல் நலக்குறைவுள்ளவர்கள்,வேலைக் களைப்புடன் வீடு திரும்புவோர், ஓய்வெடுக்க விரும்புவோர்,பல வகையான மனத் தாங்கல்களோடு வாழ்வோர்,தூங்குவோர் இருக்கலாம். அவர்களுக்கு எமது உரத்த தொனியிலான பேச்சு பலத்த அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அதற்கும் ஒரு படி சென்று பார்த்தால் எமது மொழியில் நாம் உரையாடுவதை விரும்பாத, இன உணர்வு கொண்ட, ஏற்கனவே முஸ்லிம்களைப் பற்றிய தப்பபிப்பிராயம் கொண்டவர்கள் இருக்கலாம். அது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் இருக்கும்.
- முன்மாதிரி மனிதர்களாக இருப்போம்:-
பொதுவாக பொது இடங்களில் தான் எமது இஸ்லாமிய விழுமியங்களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. எவ்வளவும் எழுதவும் பேசவும் முடியும். ஆனால் நடத்தைகளுக்கே தாக்கம் அதிகம். நம் பண்புகளை வைத்தே மற்றவர்களுக்கு இஸ்லாத்தின் ஒளியை பரப்ப முடியும்.
நற்பண்புகள் நமது மார்க்கத்தின் பிரிக்க முடியாத ஒர் அங்கமாகும். நற்பண்புகளற்ற மார்க்க உணர்வினால் எந்தப் பயனும் கிடையாது. பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரம் செய்யாமலாவது இருக்க வேண்டும்.நாம் பிறருக்கு சிரமம் தராமல், எப்போதும் மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும்.
أي المؤمنين أفضل إيمانا ؟ قال صلى الله عليه وسلم : “أحسنهم أخلاقا ” [رواه الطبراني في الأوسط ] .
‘ஈமான் விடயமாக மிகவுமே சிறந்தவர் யார்?’ என நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது “அவர்களுக்கு மத்தியில் பண்பாடுகளில் மிகவும் அழகானவராவார்” என்று பதிலளித்தார்கள். (தபரானி)
إن أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحسنكم أخلاقا” [ رواه الترمذي ] .
நபி (ஸல்) அவர்கள்:- “உங்களுக்கு மத்தியில் எனக்கு மிகவும் விருப்பமானவரும் மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமாக இருப்பவரும் உங்களுக்கு மத்தியில் அழகான பண்பாடுகளை கொண்டவராவார்” (திர்மிதீ) எனக் குறிப்பிட்டார்கள்.
எனவே, பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் உதவி உபகாரங்கள் செய்து வாழ்ந்து அல்லாஹ்வின் அன்பையும் மனித சமுதாயத்தின் நெருக்கத்தையும் பெற்றுக் கொள்வோமாக!
அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)
15.02.2025




