அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்
“உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது,…(33:10) என்ற வசனமும் இன்றைய நிலையும் ஓர் ஒப்பீட்டாய்வு.
தற்போதைய பாலஸ்தீனிய நெருக்கடியில் சூரத்துல் அஹ்ஸாபின் 11,12,13 ஆகிய வசனங்கள் எமது சிந்தனைக்குரியவை.
நபிகளார் (ஸல்) அவர்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் கூட இப்படியான ஒரு நிலை இருந்திருக்குமாயின் நாம் எம்மாத்திரம்?
கடும் எதிர்ப்புக்கள், பாரிய சவால்கள், திக்குத் தெரியாத கும்மிருட்டுக்கள் என்பன நபிகளாரதும் ஸஹாபாக்களது வாழ்விலும் இருந்துள்ளன.
சில போது எதிரிகளது கை ஓங்கும். முஸ்லிம்களது தரப்பில் அவநம்பிக்கையும் சந்தேகங்களும் நிலவும்.
அத்தகைய சந்தர்ப்பங்களில் எம்மை முழுமையாக நாம் தியாகம் செய்ய நேரிடும். பல இழப்புக்களை சந்திக்க வேண்டி வரும்.
பலத்த தியாகங்கள், இழப்புக்களின் பின்னர் நிச்சயம் அல்லாஹ்வுடைய வெற்றி வரும் என்பது நியதியாக இருந்து வந்திருக்கிறது.
அஹ்ஸாப் யுத்தத்தின் போது நிலவிய நெருக்கடியான சூழலை அல்லாஹ் பின்வருமாறு விளக்குகிறான்:-
اِذْ جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَـنَـاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا ؕ
33:10. உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூறுங்கள்.
هُنَالِكَ ابْتُلِىَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِيْدًا
33:11. அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள்.
وَاِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اِلَّا غُرُوْرًا
33:12. மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தையும் நினைவு கூறுங்கள்.
அஹ்ஸாப் யுத்தம் மிகப் பயங்கரமாக சூழலில் நடந்தது. இறுதியில் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைத்தது.
மதீனத்து யூதர்கள் வேதக்காரர்களாக இருந்தும் மக்கத்து குரைஷியர்களோடு கைகோர்த்து மதீனாவுக்கு எதிராக செய்த சூழ்ச்சியின் விளைவே அஹ்ஸாப் எனப்படும் கன்தக் யுத்தம்.
எதிரிப்படை மதீனாவை தாக்க வருகிறது என்று நபியவர்களுக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பொழுது மதீனாவின் வடபகுதியில் ஸல்மானுல் பாரிசீ (ரழி) அவர்களது ஆலோசனையின் பேரில் அகழி ஒன்றை நபிகளாரும் சஹாபாக்களும் தோண்டினார்கள்.நபியவர்கள் மண்சுமந்தார்கள்.
அந்த அகழி 5000 முழம் நீளம் கொண்டதாகவும் ஒன்பது முழம் அகலம் கொண்டதாகவும் பத்து முழம் ஆழம் கொண்டதாகவும் தோண்டப்பட்டது. அதற்காக ஆறு நாட்களில் மிக வேகமாக தோண்டி முடிக்கப்பட்டது.
மதீனா எதிரிகளால் முற்றுகையிடப்பட்ட பொழுது கடும் பசியும் பஞ்சமும் மதீனாவில் நிலவியது. எனவே நபி அவர்கள் கற்களை வயிற்றில் கட்டிக் கொண்டு தான் யுத்த களத்துக்குச் சென்றார்கள்.
மதீனாவில் இருந்த குழந்தைகளும் பெண்களும் எதிரிகளால் தாக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நபிகளார் (ஸல்) அவர்கள் ஒரு கோட்டையில் அவர்களை பாதுகாப்பாக வைத்து விட்டே போர்க்களம் சென்றார்கள்.
10000 எதிர்தரப்பினரோடு 3000 முஸ்லிம்கள் யுத்த களத்தில் சந்திக்க நேர்ந்தது.
அகழி யுத்தத்தில் முஸ்லிம்களது நிலை தொடர்பாக இறட்டப்பட்ட மற்றுமொரு வசனம் விசுவாசிகள் சோதனைகளை எதிர்கொள்ளாமல் சுவர்கம் நுழைய ஆசைவைக்க கூடாது என்று கூறுவதுடன், மிக நெருக்கடியான சூழ்நிலையை அவர்கள் அந்த யுத்தத்தின் போது சந்தித்ததாகவும் அது தான் இறை நியதி என்றும் பின்வரும் வசனம் கூறுகிறது:-
أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُواْ ٱلْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوْاْ مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ ٱلْبَأْسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلْزِلُواْ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ مَتَىٰ نَصْرُ ٱللَّهِ ۗ أَلَآ إِنَّ نَصْرَ ٱللَّهِ قَرِيبٌ
“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. ‘அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்?’ என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். ‘நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது’ (என்று நாம் ஆறுதல் கூறினோம்).” (2:214)
இவை அனைத்தும் எமக்கு சிறந்த முன்மாதிரிகள்.
கடும் எதிர்ப்புகள், பலத்த முட்டுக்கட்டைகள் வந்தே தீரும். முஸ்லிம்களது தரப்பிலும் சந்தேகங்கள் பலவீனங்கள் இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் முழுமையான தியாகமும் ஆழமான ஈமானும் இருந்தால் அல்லாஹ்வின் உதவி நிச்சயம் இறங்கும் என்பதற்கு அஹ்ஸாப் யுத்தம் சிறந்த சான்றாகும்.
யுத்தத்தில் காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதீனாவிலே மஸ்ஜிதுன் நபவிக்கு பக்கத்தில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு ரபீதா அல்அஸ்லமிய்யா என்ற பெண்மணி அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார் என்பதும் வரலாற்றுத் தகவலாகும். அதிலே காயப்பட்ட சஹாபாக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
யுத்த சந்தர்ப்பத்தின் பொழுது நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்:-
اللهم منزل الكتاب، سريع الحساب، اهزم الأحزاب، اللهم اهزمهم وزلزلهم ) ( البخاري ).
“வேதத்தை இறக்கியவனே, தீவிரமாக விசாரணை செய்பவனே, கூட்டுப் படைகளை நீ தோல்வியடைய செய்வாயாக! அவர்களை தோல்வியடைய செய்வாயாக!! அவர்களை குலுக்கத்துக்கு உள்ளாக்குவாயாக” (ஸஹீஹுல் புகாரி)
அகழி தோண்டிக் கொண்டிருக்கின்ற பொழுது அல்லாஹ்வும் அல்குர்ஆன் வசனங்களை இறக்கி சஹாபாக்களை தைரியப்படுத்தினான். நபியவர்கள் எதிர்காலத்தில் ஷாம், பாரசீகம், மதாயின், ஸன்ஆ போன்ற பகுதிகளில் இஸ்லாத்திற்கு கிடைக்க இருக்கின்ற பாரிய வெற்றிகளைப் பற்றி எதிர்வு கூறி சஹாபாக்களை உற்சாகப்படுத்தினார்கள்.
மேற்படி சம்பவங்கள் எல்லாம் எமக்கு தற்கால சூழ்நிலையில் முன்மாதிரியாக அமைய வேண்டும்.
படிப்பினைகள்:-
- எதிரிகள் இஸ்லாத்தை தாக்குவதற்கு தமது மதம் மற்றும் பிரிவினைகளை மறந்து கூட்டுச் சேருவார்கள்.
- முக்கியமான சந்தர்ப்பங்களில் துறை சார்ந்தவர்களது ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
- தலைவர் தன்னைப் பின்பற்றுவோரோடு சேர்ந்து கூட்டுப் பொறுப்பாக பல வேலைகளை செய்ய வேண்டும்.
- எதிரிகளது சூழ்ச்சிகள், சவால்கள் என்பவற்றோடு முஸ்லிம் தரப்பின் பலவீனம் என்பன இருக்கவே செய்யும்.
- தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும் (அகழி, சிகிச்சை, பெண்கள் சிறார்களது பாதுகாப்பு ஏற்பாடுகள்)
இஸ்லாத்திற்கு வெற்றி கிடைக்க வேண்டுமாயின் அதற்கென்று பல நிபந்தனைகள் காணப்படுகின்றன. அவற்றை முஸ்லிம்கள் பூர்த்தி செய்யும் பட்சத்தில் மாத்திரமே அந்த வெற்றியை அல்லாஹ் கொடுப்பான் என்பதை நாம் ஆழமாக நம்ப வேண்டும்.
யா அல்லாஹ்!
உண்மையான ஈமானோடும் தியாகங்களோடும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக உழைக்கின்ற மனித சமுதாயத்தின் நலன்களுக்காக பாடுகின்ற அனைவருக்கும் பக்கபலமாகவும் உதவியாகவும் இருப்பானாக!




