Juma

ஜும்ஆ பிரசங்கங்களை திட்டமிடுவோம்

வாரத்துக்கு ஒரு தடவை இடம்பெறும் ஜும்ஆப் பிரசங்கம் முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு செய்தியை முன்வைப்பதற்கான நல்லதொரு வாய்ப்பாகும். ஆனால், இந்த வாய்ப்பு பெரும்பாலான பள்ளிவாசல்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுவது கவலையைத் தருகிறது.  அந்தவகையில் இன்று  பெரும்பாலும் இடம்பெறுகின்ற  குத்பாவைப் பற்றி ஒரு மதிப்பீட்டை மேற்கொள்வோமாயின்  பின்வரும் முடிவுகளைப் மேலோட்டமாகப் பெறலாம். அதாவது,

01. குறிப்பிட்ட  ஒரு தலைப்பில் பேசாமல் பல்வேறு விடயங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் பேச முனைவதால்  கேட்போரின் சிந்தனை சிதறடிக்கப்படுகின்றன.

02. கதீபினால்  முன்வைக்கப்படுகின்ற  மொழிப்பிரயோகம் எந்தவித கவர்ச்சியுமின்றி , அதாவது  குறிப்பிட்ட  கதீபினால்     முன்வைக்கப்படுகின்ற  முன்வைப்பு  மக்களில் பலரை நித்திரையில் ஆழ்த்துகின்றன.

03. மக்களுக்கு விளங்காத மொழி நடையில் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்படியான சில விமர்சனங்களோடுதான் இன்றைய குத்பாக்கள் பெரும்பாலான இடங்களில் நிகழ்த்தப்படுகின்ற  ஒரு  நிலையை கவலையோடு  தெரிவித்தாக வேண்டும்.  இவற்றை கூறக் காரணம், வெள்ளி மேடைகளை கனகச்சிதமாகப் பயன்படுத்துவதற்கு எம் உலமாக்கள் இனிவரும் காலங்களிலாவது திட்டமிட வேண்டும்  என்ற நோக்கத்திலாகும்.

இதனை எழுதும் என்னிடமும் இது விடயமாக தவறுகள் இருந்தால் சுட்டிக்ககாட்டுவது எவரதும் கடமையாகும்.

ஜுமுஆ தொழுகையானது பர்ளு ஐன் எனப்படும் ஒவ்வொருவர் மீதான தனிப்பட்ட கடமையாகும் என்பது இஸ்லாமிய அறிஞர்களது ஏகோபித்த முடிவாகும். பெண்கள், சிறுவர்கள் ஜும்ஆவுக்கு சமுகம் தர முடியாத நோயாளிகள், பிரயாணிகள் போன்ற ஒரு சிலரைத் தவிர ஏனையோர் அனைவரும் கட்டாயமாக ஜும்ஆவுக்காக வர வேண்டும். அப்படி வராதபோது அது பெரும் பாவமாகக் கருதப்படும்.

எனவே, இஸ்லாம் ஜும்ஆவுக்காக அனைவரும் பள்ளிவாசலுக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவர்கள் பிரசங்கத்தை செவிமடுக்கட்டும் என்பதும் பிரதான காரணிகளில் ஒன்றாகும். அப்படியான குத்பா எதிர்பார்க்கப்படும் நல்ல பயன்களைத் தருவதற்குப் பதிலாக வெறுப்பையும் விமர்சனங்களையுமே தோற்றுவிக்குமாயின் அது பெரிய அநியாயமாகும்.

பிற மதத்தலங்களில் இடம்பெறும் உற்சவங்கள், வைபவங்களுக்கு அந்த அந்த மதங்களைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையினரே வருவதாகவும் அதுவும் வயோதிபர்கள் தான் அதிகம் வருகிறார்கள் என எம்மில் பலர் கூறுகிறார்கள்.

இளைஞர்களையும் யுவதிகளையும் கவர அலங்காரப் பந்தல்கள், இசை நிகழ்ச்சிகள், தெருவோரக் கடைகள், காணிவெல் என்பன பயன்படுத்தப்படுகின்றன என்றும் எம்மில் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் ஜும்ஆவுக்கு வயது வித்தியாசமின்றி, வெப்பம், கடுமையான பசி நேரத்தில் வியாபாரத் தலங்களை இழுத்து மூடிவிட்டு வருகை தருகிறார்கள். பள்ளிவாசலுக்குள் இடம் போதாதபோது ஹவுளின் ஓரங்களில், படிகளில் ஏன் நெற்றியில் கற்கள் தைத்தாலும் சுடும் பாறையில் தொழுகின்றவர்களை அதிகம் பார்க்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்;!

அல்லாஹ்வின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஏதோ நல்ல வார்த்தைகளைக் கேட்டுத் திருந்துவோமே என்ற எண்ணத்தில் பயபக்தியோடு மக்கள் மஸ்ஜிதுகளுக்கு வருகிறார்கள் எதிர்பார்க்கைகள் எந்தளவு பூர்த்தியாகின்றன?

அண்மைக் காலங்களில் கதீப்மார்களது குத்பாக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் இன்னும் முயற்சித்தால் சமூகத்தின் போக்கை மாற்றியமைக்க அல்லாஹ்வின் அருளால் குத்பாக்களை முதன்தரமான ஊடகங்களாகப் பயன்படுத்த முடியும்.

அல்குர்ஆனும் அல் ஹதீஸிலும் முக்கியத்துவம் கொடுத்துள்ள அம்சங்களுக்கு மாத்திரமே கதீப்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அற்பமான அம்சங்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பது, கருத்து முரண்பாடான அம்சங்களில் தனது கருத்து மாத்திரமே சரியானது என அக்கருத்தை திணிக்க முயற்சிப்பது என்பன தவிர்க்கப்பட வேண்டும். காலம், நேரம், நபர்கள் வயது வித்தியாசங்கள், அறிவுத்தர வேறுபாடுகள் என்பன பயான்களின்போது கவனிக்கப்பட வேண்டும்.

நேர முகாமைத்துவம் மிகவுமே பிரதானமானதாகும். குத்பாக்களுக்கு வருவோரில் காரியாலயங்களிலிருந்து குறுகிய லீவில் வருவோர், வுழுவை நீண்ட நேரம் தக்க வைக்க முடியாத நோயாளிகள், நீண்ட நேரம் ஒரே இருப்பில் அமர்ந்திருக்க முடியாதவர்கள், வியாபாரத் தலங்களை மூடிவிட்டு வரும் வியாபாரிகள், நீண்ட பயணங்களை மேற்கொண்டுவிட்டு இடைநடுவே ஜும்ஆவில் கலந்துகொள்ள வந்தவர்கள், பரீட்சைகளுக்கு சமுகம் தரவேண்டிய மாணவர்கள் என பல தரப்பட்ட இடர்பாடுகள் கொண்டவர்களுமே இருப்பார்கள். அவர்களது நிலைகள் பற்றி கதீப்மார் சிந்திக்காத போது குத்பாக்களது நோக்கங்கள் பிழைத்துவிட வாய்ப்புண்டு.

குத்பாக்களை உரிய முறை பயன்தரும் விதத்தில் அமைத்துக்கொள்வதில் கதீப் மார்களுக்கு மட்டுமன்றி அவர்களை உருவாக்கிய மத்ரஸாக்கள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோருக்கும் கூட்டுப் பொறுப்பிருக்கின்றது.

கதீப் மார்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடாத்தப்பட வேண்டும். பொருத்தமானவர்கள் குத்பாக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படல் அவசியமாகும். குத்பாவை முடித்துக்கொண்ட பின்னர் நிருவாகிகளும் பொது மக்களும் குத்பாவைப் பற்றி தெரிவிக்கும் கருத்துக்களைக் கருத்திற்கொள்வதும் கதீப்மார்களது கடமையாகும்.

குத்பாக்கள் நிகழ்த்தப்படும் கால அளவு நீளமாக இருக்க வேண்டுமே என சிந்திப்பதை விட அவை குறுகிய நேரத்தில் முடிக்கப்பட்டாலும் சொல்லப்படும் விடயங்கள் மனதில் ஆழப்பதிவதை உறுதிப்படுத்தவது முக்கியமாகும். தலைப்பு வரையறுக்கப்பட்டதாக அமைவது, குர்ஆனிய, வசனங்களையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுவது, ஆதாரபூர்வமான கூற்றுக்களையும் சம்பவங்களையும் உதாரணங்களையும் துணையாகக் கொள்வது, இனிமையான இங்கிதமான சொற்பிரயோகங்கள், இலகுவான மொழிநடை, வந்திருப்போருக்குப் பொருத்தமான சமூகத்தின் கட்டுக்கோப்பைப் பலப்படுத்தும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைப்புக்களைத் தெரிவுசெய்வது போன்றன பற்றி கதீப்மார் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

குத்பாக்களினூடாக கருத்துத் திணிப்பு இடம்பெறலாகாது. மாறாக பொதுமக்களை மென்மேலும் சிந்திக்கத் தூண்டுபவையாக செயலூக்கத்தை வளர்ப்பவையாக குத்பாக்கள் அமைய வேண்டும்.

பல கதீப்கள் பற்றிய குறைபாடுகளில் ஒன்றாக அமைவது: இவர்கள் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்கிறார்கள் என்பதாகும். பேசவும் பகிரவும் ஆயிரக்கணக்கான தலைப்புக்கள் இருக்க ஓரிரு அம்சங்களை மாத்திரம் தொடர்ந்தும் பேசுவது அலுப்புத் தட்டச் செய்கிறது.

அந்த வகையில் இனிவரும் காலங்களிலாவது  குத்பாக்கள்   சமூகத்துக்கு பிரயோசமான முறையில் அமைத்துக்ெகாள்ள  உலமாக்களாகிய நாம் திட்டமிட்டு செயற்படுவோமாக.

அஷ்ஷெய்க்
எஸ்.எச்.எம். பளீல் (நளீமி, எம்.ஏ)
(சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமியா நளீமிய்யா)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top